பதிப்பிக்கப்பட்ட தேதி: 2015 ஏப்ரல் 11.
உணவு, உடை, உறைவிடம்...
இந்த மூன்றும்
மனிதர்க்கு அடிப்படைத் தேவைகள். நம்மைப் போலவே,
பறவைகளுக்கும் அடிப்படைத் தேவைகள் உண்டு!
பருவங்கள் மாறும்போது, உணவுப்
பற்றாக்குறை ஏற்படும். அத்துடன் இருப்பதற்கும் பாதுகாப்பான
ஓர் இடம்
தேவை. இவற்றைத்
தேடி பறவைகள்
செல்லும் பயணம்தான்
‘வலசை' (Migration).
வெயில் காலத்தில் மனிதர்கள்
கோடை வாசஸ்தலங்களை
நோக்கிச் செல்வதுபோல,
குளிர்காலத்தில் மேற்கத்திய நாடுகளில் இருந்து அடிப்படைத்
தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள
இந்தியா உள்ளிட்ட
வெப்ப மண்டல
நாடுகளுக்குப் பறவைகள் இடம்பெயர்கின்றன. தாயகத்தில் உகந்த
சூழ்நிலை உருவான
பிறகு திரும்பிச்
செல்கின்றன. குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் இந்த
இடம்பெயர்தல்தான் ‘வலசை'.
முதல் புத்தகம்
வெளிநாடுகளில் இருந்தும், இந்தியத்
துணைக்கண்டத்தில் இருந்தும் தமிழகத்துக்கு வந்து செல்லும்
வலசைப் பறவைகள்
(Migratory birds) குறித்து, தமிழில் விரிவாக
வெளியாகியுள்ள முதல் புத்தகம் ‘வலசைப் பறவைகளின்
வாழ்விடச் சிக்கல்கள்'.
‘பூவுலகின் நண்பர்கள்' வெளியீடாக வந்துள்ள இந்தப்
புத்தகத்தை எழுதியிருப்பவர் ஒளிப்படக்காரரும்
சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஏ. சண்முகானந்தம்.
பறவைகள் ஏன் வலசை
செல்கின்றன, வலசை செல்லும்போது பறவையின் உடலில்
ஏற்படும் மாற்றங்கள்
உள்ளிட்ட அடிப்படைத்
தகவல்கள் முதல்
பறவைகள் வலசை
வரும் இடங்களில்
ஏற்பட்டுவரும் சுற்றுச்சூழல் சீரழிவு, பருவநிலை மாற்றம்,
அவற்றால் பறவைகளின்
வலசை எப்படிப்
பாதிக்கப்படுகிறது என்பதுவரை பல
விஷயங்களைப் புத்தகத்தில் கவனப்படுத்தியுள்ளார்.
வாசக கவனம்
சங்கத் தமிழ் இலக்கியங்களில்
வலசைப் பறவைகளை
‘புலம்பெயர் புள்', 'வம்பப் புள்' எனக்
குறிப்பிட்டுள்ளது போன்ற செய்திகள்,
அழகிய ஒளிப்படங்கள்
மூலம் வெகுஜன
வாசகர்களையும் கவரும் வண்ணம் இந்தப் புத்தகம்
அமைந்துள்ளது.
அதேநேரம் குஜராத்தை ‘குசராத்'
என்றும், ‘டிகிரி’
என்கிற ஆங்கிலச்
சொல்லை ‘பாகை'
என்றும் பல
இடங்களில் தனித்தமிழ்ச்
சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது போன்ற
புதிய துறைகளைப்
பற்றி விளக்கும்போது,
முழுமையும் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி எழுதுவது
இவ்வாறான படைப்புகளில்
இருந்து வாசகர்களைத்
தள்ளி வைக்கக்கூடும்.
தொடக்கப் புள்ளி
பருவநிலை மாற்றத்தால் வலசை
செல்லும் பறவைகள்,
உரிய காலம்
வருவதற்கு முன்பே
வலசைப் பயணத்தைத்
தொடங்கிவிடுகின்றன. அவ்வாறு முன்பே
வலசையைத் தொடங்காத
பறவை இனங்கள்
வேகமாக அழிந்துவருகின்றன
என்று சமீபத்திய
ஆய்வுகள் கூறுகின்றன.
அதைவிடவும் பறவைகளுக்கு மனிதன்
ஏற்படுத்தும் கெடுதல்களே அதிகம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு,
இந்தப் புத்தகம்
ஒரு தொடக்கப்
புள்ளியாக இருக்கும்.
நன்றி: தி இந்து
(சில மாற்றங்களுடன்)