Tuesday, August 30, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - V

நீங்கள் எந்த 'வெர்ஷன்' பிராமணர்..?


ந.வினோத் குமார்
 
அம்பேத்கரியல் வரலாற்றில் இந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு. அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு. அம்பேத்கர் எழுதிய 'இந்தியாவில் சாதிகள்' எனும் நூலுக்கு இந்த ஆண்டு 100 வயது. இவை எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமான ஒரு விஷயம்... 'பட்டியலின வகுப்பினர்' எனும் பிரிவு ஏற்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் ஒரு நூற்றாண்டு ஆகிறது!

1909-ம் ஆண்டு ஆகா கான் குழுவின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, 'தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் உண்மையில் இந்துக்கள் அல்ல' என்ற தகவலை முன் வைத்து, அம்பேத்கர் ஓர் அறிக்கையை பிரிட்டிஷ் வைஸ்ராயிடம் சமர்ப்பிக்கிறார். அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜே.ஹெச்.ஹட்டன் எனும் அதிகாரியின் தலைமையில் 1911-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அப்போது 'இந்துக்கள்' என்ற பிரிவிலிருந்து 'தீண்டத்தகாதவர்கள்' நீக்கப்பட்டு, அவர்களைத் தனியே கணக்கெடுப்புச் செய்தனர். பின்னர் 1916-ம் ஆண்டு 'ஒடுக்கப்பட்ட வகுப்பு' (Depressed Class) எனும் பிரிவு உருவாக்கப்படுகிறது. அதுதான் பின்னாளில், அதாவது 1935-ம் ஆண்டில் 'பட்டியலின வகுப்பு' என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி பார்த்தால், இந்த ஆண்டு 'பட்டியலின வகுப்பு'க்கு நூறு வயது!

இந்நிலையில், அம்பேத்கர் எழுதிய, அவரின் மறைவுக்குப் பின் வெளியான 'ரிட்டில்ஸ் இன் ஹிந்துயிஸம்' (இந்து மதத்தின் புதிர்கள்) எனும் நூலைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகிறது.

மதம், சமூகம் மற்றும் அரசியல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்து மதம் கொண்டிருக்கும் புதிர்கள் என்று 24 விஷயங்களை 8 பின்னிணைப்புகளுடன் அம்பேத்கர் எழுதுகிறார். அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து 'பாபாசாகேப் அம்பேத்கர் எழுத்தும் பேச்சும்' என்ற தலைப்பின் கீழ்  மகாராஷ்டிர மாநில அரசின் கல்வித் துறை வெளியிட்டது. அப்போது, 'இதிலிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் நிறைவடையாததாக உள்ளன' என்ற குறிப்புடன் அந்தப் புத்தகம் வெளியானது.

அந்த 24 புதிர்களிலிருந்து 10 புதிர்கள் மற்றும் ஒரு பின்னிணைப்பு ஆகியவற்றைத் தேர்வு செய்து, அடிக்குறிப்புகள் கொடுத்து 'நவயானா' பதிப்பகம் சமீபத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்துக்கு காஞ்சா ஐலையா முன்னுரை எழுதியிருக்கிறார்.


இந்தப் புத்தகத்திலிருக்கும் முதல் புதிரே மிகவும் அதிர்ச்சியான ஒன்றாக இருக்கிறது. 'ஒருவர் ஏன் இந்துவாக இருக்கிறார் என்பதை அறிவது கடினம்' என்பதாக உள்ளது அந்தப் புதிர்.

"ஒரு இஸ்லாமியரிடம் 'நீங்கள் ஏன் இஸ்லாமியராக இருக்கிறீர்கள்?' என்று கேட்டால், அவர் 'நான் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறேன். அதனால் இஸ்லாமியராக இருக்கிறேன்' என்று சொல்வார். ஒரு கிறித்துவரிடம் 'நீங்கள் ஏன் கிறித்துவராக இருக்கிறீர்கள்?' என்று கேட்டால், அவர் 'நான் கிறித்துவைப் பின்பற்றுகிறேன். அதனால் கிறித்துவனாக இருக்கிறேன்' என்று சொல்வார். ஆனால் ஒரு இந்துவிடம் 'நீங்கள் ஏன் இந்துவாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால், 'இந்து' என்று ஒரு மதம் இல்லவே இல்லை" என்கிறார் அம்பேத்கர்.

'இந்து மதம்' என்ற சொல்வழக்கே மிகவும் சமீபத்தில்தான் உருவாகியிருக்கிறது. 1816-17-ம் ஆண்டுவாக்கில் ராஜா ராம்மோகன் ராய் என்பவர்தான் இந்த வார்த்தையை முதன்முதலாகப் பயன்படுத்துகிறார். அதன்படி பார்த்தால், மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரையிலும் 'இந்து மதம்' என்று தனியாக ஒரு மதம் இருப்பதாகத் தெரியவில்லை.

11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அல் பிரூனி எனும் பயணி 1017-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவுக்கு வருகிறார். 'சிந்து' எனும் ஆற்றுக்குப் பக்கத்தில் வாழ்ந்து வந்த காரணத்தால் அப்பகுதி மக்களை அவர் 'ஹிந்த்' எனக் குறிப்பிட்டார். ஒரு நிலப்பரப்பைக் குறிக்கவே 'ஹிந்த்' எனும் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் இஸ்லாமியர்கள் படையெடுத்து வர, அந்த மக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக்கொள்ள இந்த வார்த்தையைப் பயன்படுத்த, பின்னாளில் 'ஹிந்து' எனும் சொல் மதரீதியான புழக்கத்துக்கு வந்தது.

ஆக, இந்து மதத்தின் ஆரம்பமே ஆட்டம் காணும் நிலையில், 'நான்கு வர்ணங்கள்: பிராமணர்களுக்குத் தாங்கள் தோன்றிய வரலாறு உண்மையானதுதான் என்பது தெரியுமா?' என்ற கேள்வியை எழுப்புகிறார் அம்பேத்கர். இதனை இந்து மதத்தின் 16-வது புதிராக வைக்கிறார் அவர்.

"பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு வர்ணங்கள் பிரஜாபதி என்பவரால் உருவாக்கப்பட்டது என்கிறது ரிக் வேதம். இன்னொரு வேதம், இவற்றை உருவாக்கியது காஸ்யபர் என்கிறது. மற்றுமொரு வேதம், இவற்றை மனு உருவாக்கினார் என்கிறது. வேதங்கள் தவிர்த்து, நம்மிடையே இருக்கும் இதர உபநிடதங்கள், ராமாயணம், மகாபாரதம் மற்றும் இதர புராணங்கள் போன்றவை இந்த வர்ணாஸ்ரமத்தைப் பற்றி ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையைக் கூறுகின்றன. இவற்றில் எதை நம்புவது?" என்ற கேள்வியை முன் வைக்கிறார் அம்பேத்கர்.

அடுத்த முறை யாராவது நம்மிடம் 'நான் பிராமணன் தெரியுமா' என்று எகத்தாளம் பேசினால், 'வேதங்கள், காவியங்கள், புராணங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் எந்த 'வெர்ஷன்' பிராமணர் நீங்கள்?' என்று கேள்வி கேட்க வேண்டும்!

இந்து மதத்தின் 22-வது புதிராக 'பிரம்மம் என்பது தர்மம் அல்ல: பிரம்மத்தால் என்ன நன்மை?' என்ற கேள்வியை எழுப்புகிறார் அம்பேத்கர்.

இதுகுறித்து அலசும்போது அவர் இப்படி எழுதுகிறார்: "ஜனநாயகம் என்பது அரசியல் இயந்திரத்துக்கும் மேலானது. ஒரு சமூகக் கட்டமைப்பு என்பதை விடவும் மேலானது. அது ஒரு மனநிலை அல்லது வாழ்க்கையின் தத்துவம்.

சிலர் ஜனநாயகத்தை சமத்துவத்துடனும் சுதந்திரத்துடனும் ஒப்பிடுவார்கள். சமத்துவமும் சுதந்திரமும் ஜனநாயகத்தின் ஆழமான கரிசனங்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எது சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் பேணிக் காக்கிறது? சிலர் 'சட்டம்' என்று பதில் சொல்லலாம். அது சரியான விடை அல்ல. அவற்றைக் காப்பது 'இன்னொருவரைத் தன்னைப் போல நினைக்கும் மனப்பான்மை'தான். இதைத்தான் பிரெஞ்சுக்காரர்கள் 'சகோதரத்துவம்' என்கின்றனர். ஆக சகோதரத்துவம்தான் ஜனநாயகத்தின் வேர்.

எனில், சகோதரத்துவத்தின் வேர் எது என்று பார்த்தால், அது மதம்தான். ஒருவரின் மதம் சகோதரத்துவத்தை வளர்த்தால், அந்தச் சமுதாயத்தில் ஜனநாயகம் சிறப்பாக உள்ளது என்று பொருள். சகோதரத்துவத்துக்கு இடமளிக்கவில்லை என்றால், அங்கு ஜனநாயகத்துக்கு வேலை இல்லை.

இந்தியாவில் ஏன் ஜனநாயகம் தழைக்கவில்லை? காரணம், இந்து மதம் சகோதரத்துவத்தை வளர்க்கவில்லை".

அப்புறமென்ன... புத்தரைத் தேடிப் போவோம் வாருங்கள்! 

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் ஐந்தாவது பதிவு இது.)

Friday, August 12, 2016

ஒலிம்பிக் பார்ப்பதற்கு ஒரு கைடு!

ந. வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 12 ஆகஸ்ட், 2016
 
பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன ஒலிம்பிக் போட்டிகள். எந்த ஸ்போர்ட்ஸ் சேனலைத் திறந்தாலும், ஒவ்வொரு சேனலிலும் ஒவ்வொரு விளையாட்டை ஒளிபரப்புகிறார்கள். எதைப் பார்க்க, எதை விட என்று பலரும் குழம்பலாம். அந்தப் பலரில் சிலர், ஒலிம்பிக் போட்டிகளைப் பார்ப்பது இது முதன்முறையாகக்கூட இருக்கலாம். 

கவலையை விடுங்கள். உங்களுக்காகவே வந்திருக்கிறது 'ஹவ் டு வாட்ச் தி ஒலிம்பிக்ஸ்' எனும் புத்தகம். பிரபல விளையாட்டுச் செய்தியாளர்கள் டேவிட் கோல்ட்ப்ளாட், ஜானி ஆக்டன் மற்றும் பால் சிம்ப்ஸன் ஆகியோர் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள். 'ப்ரொஃபைல் புக்ஸ்' பதிப்பக வெளியீடான இது, சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் தோற்றம், தொடக்க நிகழ்ச்சிகளின் வரலாறு, பதக்க விழாவின் பாரம்பரியம், போட்டி முடிவு நிகழ்ச்சிகளின் ‘ஹைலைட்' போன்ற விஷயங்களுடன், ஒலிம்பிக் போட்டியில் விளையாடப்படும் 31 வகை விளையாட்டுக்களின் தோற்றம், அவற்றின் முக்கியத்துவம், அவை ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்ட கதை, அந்தப் போட்டிகளின் விதிமுறைகள், போட்டியின்போது கடைப்பிடிக்கப்படும் சில நுணுக்கங்கள் என இந்தப் புத்தகம், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும் ஒரு ‘ரெடி ரெஃபரன்ஸ்' ஆக அமைந்திருக்கிறது என்று சொன்னால், அது மிகையில்லை. 

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள், ‘நாம் எப்படி ஒலிம்பிக்ஸ் போட்டிகளைப் பார்க்க வேண்டும்?' என்ற கேள்விக்கு ஐந்து விஷயங்களைப் பட்டியலிடுகிறார்கள்.

அதில் முதலாவது, ‘எந்த விளையாட்டை எதற்காகப் பார்க்க வேண்டும்?' என்ற புரிதல் நமக்கு அவசியம் என்கின்றனர். அதாவது, உங்களுக்குத் தடகளப் போட்டிகளைப் பார்ப்பதில் ஆர்வம் உண்டா? அப்படியென்றால், ஜெஸ்ஸி ஓவென்ஸ் பற்றித் தெரியுமா? உசைன் போல்ட் செய்த சாதனை குறித்து நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 1968-ம் ஆண்டு மெக்ஸிகோ ஒலிம்பிக்கில் நிகழ்ந்த ‘ப்ளாக் பவர் சல்யூட்' ஏற்படுத்திய விளைவுகள் என்ன என்பன போன்ற விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது அந்தப் போட்டிகளை நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கும்போது, நல்ல புரிதலுடன் விளையாட்டைப் பார்ப்பீர்கள். 

இரண்டாவது, ‘நீங்கள் விரும்பும் விளையாட்டு தோன்றிய கதையைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்'. ஏன்? உதாரணத்துக்கு உங்களுக்கு ‘ரக்பி' விளையாட்டு மிகவும் பிடிக்கும் என வைத்துக்கொள்வோம். அந்த விளையாட்டு இந்த ரியோ ஒலிம்பிக்ஸில் ‘ரக்பி 7' என்ற பெயரில் ஏன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால், அந்த விளையாட்டின் போக்கு உங்களுக்குப் பிடிபடும். இங்கிலாந்தில் உள்ள ‘ரக்பி' எனும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த வில்லியம் வெப் எல்லிஸ் என்ற 16 வயதுச் சிறுவன், கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மைதானத்திலிருந்து அந்தப் பந்தைத் தூக்கிச் சென்றுவிட்டான். அப்படி உருவானதுதான் ‘ரக்பி' விளையாட்டு. பின்னாளில் அந்தச் சிறுவனின் பெயரிலே ‘ரக்பி உலகக் கோப்பை' போட்டிகள் நடைபெற ஆரம்பித்தன. இப்படியான வரலாற்றைத் தெரிந்து வைத்துக்கொண்டு ஒரு விளையாட்டை நீங்கள் அணுகினால், அந்த விளையாட்டை நீங்கள் பார்க்கும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

மூன்றாவதாக, 'ஒரு விளையாட்டின் அடிப்படை விதிகளையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்'. எதற்காக? உதாரணத்துக்கு உங்களுக்கு வில் வித்தைப் போட்டியைக் காண்பதில் ஆர்வம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் ‘ஃபாஸ்ட்' எனும் வார்த்தை அவ்வப்போது பயன்படுத்தப்படும். அப்படி என்றால் என்ன? ‘ராபின் ஹுட் ஷாட்' என்றால் என்ன? அதற்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் எத்தனை? இப்படியான சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டால், அந்த விளையாட்டின் சூட்சுமம் உங்களுக்கு விளங்கிவிடும். 

நான்காவதாக, ‘ஒரு விளையாட்டின் நெளிவு சுளிவுகளை நாம் அறிந்திருக்க வேண்டும்' என்கிறார்கள் ஆசிரியர்கள். அது ஏன்? உதாரணத்துக்கு பாட்மின்டன் போட்டியை எடுத்துக்கொள்வோம். டென்னிஸ் விளையாட்டில் ஒரு வீரர் செய்யும் ‘சர்வ்'தான் அந்த விளையாட்டு வீரருக்கான புள்ளிகளைப் பெற்றுத் தருவதில் முக்கியமானதாக இருக்கும். ஆனால் இறகுப்பந்துப் போட்டியில் ‘சர்வ் இஸ் நாட் கிங்', அதாவது ‘சர்வ்' அவ்வளவு முக்கியமானதல்ல என்று சொல்லப்படுகிறது. எதனால் அப்படி என்று நீங்கள் தெரிந்துகொண்டால், அந்தப் போட்டியை நீங்கள் இன்னும் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.

ஐந்தாவதாக, ‘ஒரு விளையாட்டு, எப்படி ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டது' என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, துப்பாக்கிச் சுடுதல் போட்டி முன்பு எவ்வாறு விளையாடப்பட்டது? ஒலிம்பிக் போட்டியில் அது சேர்க்கப்பட்டவுடன், அந்த விளையாட்டு விதிகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் என்ன என்பன போன்ற விஷயங்களைத் தெரிந்துகொண்டால், நீங்கள் பார்க்கும் அந்த விளையாட்டு நிச்சயம் அர்த்தமுள்ள பொழுதுபோக்காக இருக்கும். 

இந்தப் புத்தகம் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒரு கையேடாக மட்டுமல்லாமல், விளையாட்டுத்துறை தொடர்பான ஒரு பொது அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கிறது என்று சொன்னால், அது முற்றிலும் உண்மை. ஹேப்பி ஒலிம்பிக்ஸ்! 

நன்றி: தி இந்து (இளமை புதுமை)