தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 'இரண்டாவது முறையாக' இறந்துவிட்டார் என்று
அதிகாரபூர்வமான செய்திகள் வரத் தொடங்கியிருக்கும் இந்தச் சமயத்தில் இந்தப்
பதிவை எழுதுகிறேன். ஏனென்றால், 'முதல் முறையாக' அவரைக் கொலை செய்தன சில
தொலைக்காட்சி சேனல்கள்!
ரத்தத்தின் ரத்தங்களுக்கு 'புரட்சித் தலைவி'. அந்தத் தலைவியின் அம்மாவுக்கு
'அம்மு'. ஊடகங்களுக்கு 'ஜெ'. சாமான்ய மக்களுக்கு 'அம்மா!'
68 வயது. 16 வயதில் திரைப் பிரவேசம். 1982-ம் ஆண்டு ஒரு ரூபாய் செலுத்தி
எம்.ஜி.ஆர்., தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
அவரின் சுமார் 34 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள்
இருந்தாலும், அவை அனைத்துமே இந்திய அரசியலில் மிக முக்கியமானப் பக்கங்களாக
இருக்கின்றன.
தென்னிந்திய சினிமாவில் தனக்கெனத் தனியாக, சம்பளம் கொடுத்து மக்கள் தொடர்பு
அலுவலரை வைத்துக்கொண்ட முதல் நடிகர், நாட்டிலேயே முதன்முதலாக மகளிர் காவல்
நிலையங்கள் அமைத்தவர், சொத்துக் குவிப்பு வழக்கினால் மக்கள்
பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நாட்டில், முதல்வர் பதவியை இழந்த முதல்
முதல்வர்... இப்படிப் பல 'முதல்'களுக்கு இவர் முன்னோடி!
திரையில் பிரகாசித்த நட்சத்திர அந்தஸ்த்திலிருந்து ஆறாவது முறையாக
முதல்வராகப் பதவியேற்றது வரையிலான ஜெ.வின் பயணத்தைப் புத்தகமாக
எழுதியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் வாஸந்தி. 'அம்மா' என்ற தலைப்பில்,
ஆங்கிலத்தில் அவர் எழுதிய அந்தப் புத்தகத்தை ஜக்கர்நாட் பதிப்பகம் மிகச்
சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசியலில் ஜெயலலிதா என்ற ஒருவர் இருந்தார் என்பதற்கான ஆவணமாக இன்று
நம்மிடையே இருக்கும் ஒரே புத்தகம் இதுமட்டும்தான் என்பது, ஒரே நேரத்தில்
ஆறுதலாகவும் துர்பாக்கியமாகவும் இருப்பது நம் காலத்தின் சாபம்!
ஜெ., குறித்து இப்படி ஒரு புத்தக முயற்சி இப்போதுதான் நடந்திருக்கிறது
என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. குமுதத்தில் ஜெயாவே தன் சுயசரிதையை
எழுதிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், அது எம்.ஜி.ஆரின் புகழுக்கு
இழுக்கு ஏற்படுத்துவது போலச் சென்றதால், ஜெ.விடம் எந்தவொரு காரணமும்
சொல்லாமல் 'டக்'கென்று அந்தச் சுயசரிதைத் தொடர் நிறுத்தப்பட்டது. அது இன்று
வரையிலும் புத்தகமாக வரவில்லை.
அதற்குப் பிறகு வாஸந்தி, 'ஜெயலலிதா - எ போர்ட்ரைட்' என்ற தலைப்பில்
ஆங்கிலத்தில் ஜெ.வின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதனை பெங்குயின்
பதிப்பகம் 2011-ம் ஆண்டு வெளியிடுவதாக இருந்தது. ஆனால், அந்தப் புத்தகத்தை
வெளியிடக் கூடாது என்று சொல்லி ஜெ., நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, அந்தப்
புத்தகம் இதுவரை வெளியிடப்படவே இல்லை.
விகடன் பதிப்பக வெளியீடாக வந்த, 'புரட்சித் தலைவி - புகைப்பட ஆல்பம்', புகைப்பட ஆல்பம் என்ற வகையில் மட்டுமே நின்றுவிட்டது.
இந்த ஒரு பின்னணியில்தான் தற்போது வெளியாகியிருக்கும் 'அம்மா' என்ற
புத்தகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இந்தப் புத்தகத்தில்
ஜெ.வின் ஆரம்ப காலம், ஜெ.வுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையிலிருந்த உறவு,
ஜெ.வுக்கும் சசிகலாவுக்கும் இடையிலிருந்த உறவு உள்ளிட்ட ஜெ.வின் அந்தரங்க
விஷயங்களை ஆழமாக அலசவில்லை என்றாலும் அங்கங்கே தொட்டுச் செல்கிறார்
வாஸந்தி.
அந்தத் தகவல்களை ஒன்றிணைத்தால் இரண்டு பக்கங்களுக்குள் முடிந்துவிடும்.
ஜெ.வின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துச் சொல்வதற்கான விஷயங்கள் அவ்வளவுதானா?
நிச்சயமாக இல்லை.
மற்றபடி, இந்தப் புத்தகத்தில் ஜெ.வின் அரசியல் பயணம், 'ரோலர் கோஸ்டர் ரைட்'
போல சுவாரஸ்யமான நடையில் மிக விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் என்ன, அதில் பெரும்பாலான விஷயங்கள் ஜெ., வாழ்ந்த தலைமுறையினருக்குத்
தெரிந்த தகவல்கள்தான்.
இந்தப் புத்தகம் ஜெயலலிதாவைப் பற்றிய ஆழமானப் பதிவு என்று சொல்லிவிட
முடியாது. ஆனால், ஜெயலலிதா யார் என்றே தெரியாத வெளி மாநிலத்தவருக்கு, வெளி
நாட்டினருக்கு இந்தப் புத்தகம் ஒரு அறிமுகமாக இருக்கும் என்பதில்
சந்தேகமில்லை.
சிறு வயதில் ஜெ.வுக்குக் கிடைக்க வேண்டிய தாய் அன்பு முறையாகக்
கிடைக்கவில்லை. எனினும் அந்தத் துயரத்தைத் தாங்கிக் கொண்டு, அவர் பள்ளியில்
படிக்கும்போது 'மை மதர்: வாட் ஷீ மீன்ஸ் டு மீ' என்ற தலைப்பில் கட்டுரை
ஒன்றை எழுதியதாகவும், அந்தக் கட்டுரைக்குப் பரிசு கிடைத்ததாகவும் வாஸந்தி
இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்தக் கட்டுரையில் ஜெ.,
அப்படி என்ன எழுதியிருந்தார் என்பது நமக்குத் தெரியாது.
ஜெ.வைப் பற்றி, ஓரளவு அரசியல் அறிவு கொண்டவர்களிடம் 'அம்மா: வாட் ஷீ மீன்ஸ்
டு அஸ்' என்று எழுதச் சொன்னால் அவர்களின் பதில் என்னவாக இருக்கும்..? ஒரு
அதிகாரத்தின் முடிவு..?
நன்றி: தி இந்து டாட் காம் (தமிழ்)