ந.வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 24 டிசம்பர் 2016
நன்றி: தி இந்து (நலம் வாழ இணைப்பிதழ்)
பதிப்பிக்கப்பட்ட தேதி: 24 டிசம்பர் 2016
ஆங்கிலத்தில் 'To say it is to call it' என்றொரு வாக்கியம் உண்டு. அதாவது, 'ஒன்றைச் சொல்வது அதை அழைப்பதற்குச் சமமானது' என்று பொருள். உதாரணத்துக்கு, 'பாம்பு' என்று சொல்லிவிட்டால் அது உடனே நமக்கு முன்பு படமெடுத்து நிற்பது போன்ற பிரமை அது.
பாம்புக்கு மட்டும்தான் இப்படி ஒரு நிலை என்று நினைத்தால் அது தவறு. மனிதர்களைப் படுத்தியெடுக்கும் நோய்களுக்கும் இதே நிலைதான். ‘தொழுநோய்' என்று சொல்லிவிட்டால், உடனே தனக்கே அந்த நோய் வந்துவிட்டதைப்போல உடலை நெளிப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? ‘டெங்கு' என்று சொன்னவுடன், இல்லாத கொசு ஒன்று தன் கையில் உட்கார்ந்திருப்பதாக நினைத்துக் கைகளைத் தடவிப் பார்ப்பவர்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ‘கொஞ்சம் டிஸன்ட்ரி' என்று சொன்னவுடன், ஓர் அடி தள்ளி நின்று அடிமூக்கைச் சொறிபவர்களை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?
அப்படியென்றால், ‘இல்னெஸ் ஆஸ் மெட்டஃபர்' எனும் புத்தகம், நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகமாக இருக்கும்! முக்கியமான அமெரிக்கப் பெண் எழுத்தாளர்களில் ஒருவரான சூசன் சோன்டாக் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். 1978-ம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியானது. சுமார் பத்து ஆண்டுகள் கழித்து 1989-ம் ஆண்டு ‘எய்ட்ஸ் அண்ட் இட்ஸ் மெட்டஃபர்ஸ்' எனும் புத்தகத்தையும் அவர் எழுதினார். இந்த இரண்டு புத்தகங்களும் ‘ஃபர்ரார், ஸ்ட்ராஸ் அண்ட் கிரோ' எனும் பதிப்பகத்தால் முதன்முதலாகத் தனித்தனியாகப் பதிப்பிக்கப்பட்டன. 1991-ம் ஆண்டு இந்த இரண்டு புத்தகங்களையும் ஒன்றாகச் சேர்த்து வெளியிட்டது பெங்குவின் பதிப்பகம்.
வேண்டாம் சோகம்
பிரபல மருத்துவர்கள் சித்தார்த்த முகர்ஜியின் ‘தி எம்பரர் ஆஃப் ஆல் மலாடீஸ்', அதுல் கவாண்டேயின் ‘பீயிங் மார்ட்டல்' ஆகிய புத்தகங்களின் வழியாகத்தான் இந்தப் புத்தகம் எனக்கு அறிமுகமானது. மனித வாழ்க்கையில் நோயை ஒரு உருவகமாகப் பயன்படுத்துவதைக் குறித்து ஆழமான பார்வைகளை இந்த நூலில் சூசன் முன்வைத்திருக்கிறார்.
மார்பகப் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்ட பிறகு, இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கினார் சூசன். புற்றுநோயை மனிதர்கள் எப்படி எல்லாம் உருவகப்படுத்துகிறார்கள் என்பதை ஆராயத் தொடங்கிய இவரின் பயணம், நோய் என்பது மனிதர்களிடையே எப்படியெல்லாம் உருவகமாகிறது எனும் இடத்தைத் தொடுகிறது. அவர் கண்டடைகிற விஷயங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. ‘உங்களுக்கு இருக்கும் நோயை அங்கீகரியுங்கள். அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். ‘ஏன் எனக்கு மட்டும் இப்படி?' என்று சோகத்தில் மூழ்காதீர்கள். யார் மீதும், எதன் மீதும் குற்றம் சுமத்தாதீர்கள்' என்பதுதான் இந்தப் புத்தகத்தின் சாராம்சம்.
காசம் உருவாக்கிய பொய்கள்
ஆரம்பக் காலத்தில், காசநோயை நெருப்பாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு மனிதரின் உடலுக்குள் தோன்றும் அந்த நெருப்பு, அவரை ‘எரித்துவிடும்' என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டது. வெளிப்படுத்தப்பட முடியாத அன்பால், விருப்பத்தால், காமத்தால்தான் ஒருவருக்குக் காசநோய் ஏற்படுவதாக மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலம் அது. எனவே, இந்த நோய் தாக்கியவர்களை ஒருவிதமான மென்சோக அன்புடன் பார்க்கும் பார்வை அன்று இருந்தது.
அதேபோல ஓவியர்கள், கவிஞர்கள் போன்ற படைப்புத் திறன் மிக்க மனிதர்களைத்தான் இந்த நோய் அதிகமாகத் தாக்குகிறது என்றும், இந்த நோய்த் தாக்கம் கொண்டவர்களிடமிருந்து கற்பனா சக்தி மிகுந்த படைப்புகள் வெளிவரும் என்றும்கூட நம்பப்பட்ட காலம் அது.
பலவீனப்படுத்தும் பார்வை
பின்னாட்களில் காசநோய்க்கான காரணங்கள் கண்டறியப்பட்டவுடன், அந்த நோய் மிகவும் கீழ்மையான உருவகப்படுத்தலுக்கு உள்ளானது. ஹிட்லரின் காலத்தில் யூதர்களைக் காசநோய்க்கு ஒப்பாகக் கருதினார்கள். பின்னர், காசநோயை விடவும் கொடியதான புற்றுநோய் மக்களிடத்தில் பரவலாகக் காணப்பட்டது.
காசநோய்க்கு வழங்கப்பட்ட அதே ‘ரொமான்டிசைஸ்' உருவகங்கள் புற்றுநோய்க்கும் வழங்கப்பட்டன. பிறகு, ‘சோம்பி இருப்பதுதான் புற்றுநோய்', ‘பாவம் செய்த மனிதனுக்கு வழங்கப்பட்ட தண்டனை', ‘புற்றுநோய் என்பது மனிதன் தனக்குத் தானே வழங்கிக் கொண்ட நியாயம்', ‘புற்றுநோய் ஒரு சுய பழிவாங்கல்' என்று கீழ்மையாக உருவகப்படுத்தப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்தாளர் டி.ஹெச்.லாரன்ஸ், சுயஇன்பப் பழக்கத்தை ‘மனித நாகரிகத்தின் ஆபத்தான புற்றுநோய்' என்று குறிப்பிட்டார்.
இப்படியான பார்வைகள், நோய் பீடித்த ஒருவர் மீது ‘இந்த நோய் ஏற்படுவதற்கு நீதான் முழுமுதல் காரணம்' என்று குற்றம் சுமத்துகின்றன. அவை, நோய் பாதிப்புக்கு உள்ளானவரை மேலும் பலவீனப்படுத்துவது மட்டுமல்லாமல், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் பலனற்றதாக மாற்றிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
தேவையற்ற வெறுப்பு
இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் மாரடைப்பால் ஒருவர் இறந்தால் அதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள். பின்னர், இந்த நிலை காசநோய், புற்றுநோய் ஆகியவற்றுக்கும் ஏற்பட்டன. அதில் திரைப்படங்களும் (தமிழ் சினிமாவில் மாரடைப்பு (இதயம்), ரத்தப் புற்றுநோய் (வாழ்வே மாயம்), நுரையீரல் புற்றுநோய் (பவித்ரா), இன்னும் பல...) முக்கியப் பங்காற்றின. ஆனால், இப்படிப் பெருமையாகச் சொல்லும் நிலை, ‘எய்ட்ஸ்' உள்ளிட்ட இதர நோய்களால் பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்கிறதா என்றால், இல்லை. ஏன்?
காரணம், காசநோயோ அல்லது புற்றுநோயோ ஏற்படுவதற்குச் சுற்றுச்சூழல்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது (அதில் உண்மையும் உண்டு என்றாலும்) என்று பொத்தாம்பொதுவாகக் கூறப்படுவதுதான். ஆனால், பாலியல் ஒழுக்கமின்மையுடன் இணைந்தே எய்ட்ஸ் புரிந்துகொள்ளப்படுவதால் அது வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது. ‘எய்ட்ஸ்' நோய் நாமாகப் பெற்றுக்கொள்வது என்று புரிந்துகொள்ளப்பட்டிருப்பதுதான், அந்த நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களை அருவருப்புடன் பார்க்க வைக்கிறது.
நோயல்ல, நோய்மை
சொல்லப்போனால், ‘எய்ட்ஸ்' என்பது ஒரு நோயே அல்ல. ‘நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போவதற்கான ஒரு விஷயத்தை நாம் பெற்றிருக்கிறோம்' என்பதைத்தான் ஆங்கிலத்தில் ‘Acquired Immuno Deficiency Syndrome' என்று
குறிப்பிடப்படுகிறது. இந்த வாக்கியத்தின் முதல் எழுத்துகளை வைத்துத்தான் இந்த நோய்க்கான பெயரே உருவானது. இது நோய் இல்லை. மாறாக, பல நோய்கள் கூட்டாகச் சேர்ந்து தாக்கும் ஒரு நோய்மை நிலை.
ஆண் தன்பாலின உறவாளர்களிடையேதான் இந்த நோய் முதன்முதலில் தென்பட்டது. எனவே, அன்றிருந்த மதபோதகர்கள் இந்த நோயை ‘இயற்கையின் பழிவாங்கல்' என்று அழைத்தார்கள்.
தவறான உருவகம்
பல மருத்துவ ஆய்வுகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணமாக, இன்று அந்தப் பார்வைகள் மாறியிருக்கின்றன. அதற்காக சந்தோஷப்பட முடியாது. ஏனென்றால், அதைவிட ஆபத்தான உருவகங்கள் இன்று தோன்றியிருக்கின்றன. ‘எ வார் ஆன் கேன்சர்', ‘எ வார் ஆன் எய்ட்ஸ்' என்று புற்றுநோய், எய்ட்ஸ் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தை ‘யுத்தம்' என்பதாக உருவகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
இப்படி ஒரு நோயை ‘யுத்தம்' என்கிற நிலையுடன் அணுகுவது, சர்வாதிகாரப் போக்கு என்கிறார் சூசன். எவ்வளவுக்கு எவ்வளவு, அந்த நோயை எதிர்க்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகத்திலிருந்து விலக்கி வைப்பதும் நடக்கிறது. யுத்தங்களால் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் புலம்பெயரும் அகதிகளை, ‘நோயைக் கடத்தி வருபவர்கள்' என்று பார்க்கும் ‘இனவெறுப்பு' மனநிலை பல நாட்டு மக்களிடம் இருப்பதை, இங்கு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் நிச்சயமற்ற எதிர்காலம்
உலகச் சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஹல்ஃப்தான் மஹ்லர், “எல்லா நாடுகளிலும் எய்ட்ஸ் அழிக்கப்படாதவரை, எந்த ஒரு நாட்டிலும் அதைத் தனியாக அழித்துவிட முடியாது” என்றார். ஜெர்மன் நாட்டின் எய்ட்ஸ் நோய் நிபுணர் டாக்டர் எய் பிரிக்கெட் ஹெல்ம்-மோ, “ஏதேனும் ஒரு வகையிலாவது எய்ட்ஸ் பரவுவதைத் தடுத்து நிறுத்த முடியாத சமூகத்துக்கு நிச்சயமான எதிர்காலம் என்ற ஒன்று இல்லை” என்கிறார்.
அந்த எதிர்காலம் இந்தியாவுக்கு இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. காரணம், மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ‘ஹெச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்ட மசோதா'வின் 14-ம் பிரிவின் கீழ், ‘மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களால் முடிந்த அளவுக்கு (as far as possible) ‘ஆன்டி ரெட்ரோவைரல் தெரபி' (ஏ.ஆர்.டி) மருந்துகளை வழங்க வேண்டும்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, அந்த மருந்துகள் வழங்குவதைக் கட்டாயமாக்காமல், அந்தக் கடமையிலிருந்து அரசை விடுவிப்பதாக இந்தப் பிரிவு இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இதனால் எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இலவசமாக மருந்துகள் கிடைப்பது நின்றுபோகும். சந்தையில் அவற்றின் விலை அதிகமாக இருக்கும். எத்தனை பேரால் அவற்றை வாங்க முடியும்?
‘நமது
உடல் யாராலும் ஊடுருவப்படவில்லை. நமது உடல் போர்க்களம் அல்ல. எனவே, நோயை யுத்தமாகக் கருத வேண்டாம்' என்கிறார் சூசன் சோன்டாக். எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தை இந்தியாவே ஒருவேளை ‘யுத்தமாக'க் கருதினால், போர்க்கால அடிப்படையில் ஏ.ஆர்.டி. மருந்துகள் இலவசமாக வழங்க அரசு முயற்சிக்க வேண்டும். அதற்கு அரசை முதலில் நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்!
நன்றி: தி இந்து (நலம் வாழ இணைப்பிதழ்)