ந.வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 23 செப்டம்பர், 2016
‘மேனுஃபேக்சரிங் கன்சென்ட்' எனும் நோம் சாம்ஸ்கியின் சொற்றொடர் மிகவும்
பிரபலமானது. அதாவது, பொதுப்புத்தியில் பல ஊடகங்கள் ஒன்றுசேர்ந்து உண்மைக்கு
மாறான ஒரு கருத்தை உருவாக்குவது என்பது இதன் பொருள்.
கிட்டத்தட்ட அதே சொற்றொடருக்குச் சமமான ஆனால் முற்றிலும் எதிரான ஒரு
சொற்றொடர் உண்டு. அது 'மேனுஃபேக்சரிங் ஆங்கர்'. அதாவது, குறிப்பிட்ட
குழுக்கள் ஒன்றுசேர்ந்து, ஏற்கெனவே பல காலம் வழக்கில் உள்ள ஒரு கருத்துக்கு
எதிராக விஷமப் பிரச்சாரம் செய்வது.
அப்படி ஒரு விஷயம், விஷமம் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடந்தது. அது பகத் சிங்கை முன்வைத்து!
அதிகாரப்பூர்வ ஆவணம்
பகத் சிங் பிறந்த 110-வது ஆண்டு இது. பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள்
ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட 85-வது ஆண்டும் இது. அவர்கள்
உருவாக்கிய ‘இந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி'க்கு இந்த
செப்டம்பர் 9-ம் தேதி, 88 வயது.
இப்படி ஒரு முக்கியமான காலகட்டத்தில்தான் ‘பகத் சிங் தீவிரவாதியா?' என்ற
கேள்வியும் எழுந்துள்ளது. அவர் புரட்சியாளரா அல்லது தீவிரவாதியா அல்லது
புரட்சித் தீவிரவாதியா என்று பார்ப்பதற்கு முன்னால், இது குறித்த
அடிப்படையான சில உண்மைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
இந்திய விடுதலைப் போராட்டம் தொடர்பாக இன்று வரையிலும் எத்தனையோ புத்தகங்கள்
வெளிவந்துள்ளன. ஆனால் இன்றளவும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியாளர்கள்,
வரலாற்றாசிரியர்கள், சமூகவியலாளர்கள் எனப் பலதரப்பட்ட துறைசார் நிபுணர்கள்
மத்தியில் ஒரே ஒரு புத்தகம்தான் ‘இந்திய விடுதலைப் போராட்டம் பற்றிய
அதிகாரபூர்வமான ஆவணம்' என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. அந்தப் புத்தகம்
‘இண்டியாஸ் ஸ்ட்ரகிள் ஃபார் இண்டிபெண்டன்ஸ்'.
மார்க்கிய அறிஞரும் பேராசிரியருமான பிபன் சந்திராதான் இந்தப் புத்தகத்தின்
முதன்மை ஆசிரியர். அவருடன் சேர்ந்து மிருதுளா முகர்ஜி, ஆதித்ய முகர்ஜி,
சுசேதா மகாஜன் மற்றும் கே.என்.பணிக்கர் ஆகியோர் இணையாசிரியர்களாக இருந்து
இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளனர். மொத்தம் 39 அத்தியாயங்கள் கொண்ட
இந்தப் புத்தகத்தில் பிபன் சந்திரா மட்டுமே 22 அத்தியாயங்களை
எழுதியுள்ளார்.
அதில் பகத் சிங் தொடர்பான அத்தியாயம்தான் இப்போதைய சர்ச்சைக்குக் காரணம்.
அந்த அத்தியாயம் இந்தப் புத்தகத்தில் 20-வது அத்தியாயமாக இடம்பெற்றுள்ளது.
அதன் தலைப்பு ஆங்கிலத்தில் ‘பகத் சிங், சூரிய சென் அண்ட் தி ரெவல்யூஷனரி
டெரரிஸ்ட்' (பகத் சிங், சூரிய சென் மற்றும் புரட்சிகரத் தீவிரவாதிகள்) என
உள்ளது.
‘அதெப்படி, பகத் சிங்கை ‘தீவிரவாதி' என்று பிபன் சந்திரா
அடையாளப்படுத்தலாம்?' என்று நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 27-ம் தேதி பாரதிய
ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தக்கூர் கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து இந்துத்துவக் குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கின.
முன்னாள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஒரு படி மேலே
போய் இதனை ‘அகாடமிக் மர்டர்' என்று கூச்சலிட்டார்.
பகத் சிங் தீவிரவாதியா?
'உண்மையில் பகத் சிங் தீவிரவாதியா?' என்று கேட்டால், 'ஆம்' என்று தைரியமாகச் சொல்லலாம். ஏன்?
அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவர் செய்த தீவிரவாதச் செயலை முதலில்
நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பில் சில மாற்றங்களைச்
செய்வதற்காக சைமன் கமிஷன் எனும் குழு ஒன்று ஆங்கிலேயர்களால்
நியமிக்கப்பட்டது. அதில் இந்தியர் ஒருவர்கூட இடம்பெறவில்லை. இதனை எதிர்த்து
லாலா லஜபதி ராய் போராட்டம் நடத்த, அதில் அவர் ஆங்கிலேயர்களால்
தாக்கப்பட்டு மரணமடைகிறார்.
இதனால் கோபமடைந்த பகத் சிங் உள்ளிட்ட இந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிபப்ளிகன்
ஆர்மி உறுப்பினர்கள் ஆங்கிலேயே காவல் துறை அதிகாரி சாண்டர்ஸ் என்பவரைக்
கொல்கிறார்கள். அதனைத் தொடர்ந்து, லாகூர் மத்திய சட்டமன்றத்தில் குண்டு
வீசி கைதாகிறார்கள். இந்தக் குற்றங்களுக்காக பகத் சிங் மற்றும் அவரது
தோழர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.
அகிம்சை வழியில் நம்பிக்கை இழந்ததால் பகத் சிங் உள்ளிட்டோர் இத்தகைய
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ‘கேட்கும் திறனிருந்தும் செவிடாக
இருப்பவர்களைக் கேட்கச் செய்யவே' இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர்கள்
அறிவித்தனர்.
இந்தக் காரணங்களுக்காக ஆங்கிலேயே அரசு அவர்களை ‘தீவிரவாதி' என்று முத்திரை
குத்தியது. ‘புரட்சி என்பது மக்களுக்காக மக்களால் முயன்றால் மட்டுமே தோன்ற
முடியும்' என்று நம்பிக்கை கொண்டிருந்ததால் பகத் சிங் உள்ளிட்டோர் இத்தகைய
தனிப்பட்ட சாகஸ நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தான் சிறையில்
இருக்கும்போது பகத் சிங்கேகூட ‘புரட்சி மனநிலை மக்களைச் சென்றடையவில்லை
என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமே தீவிரவாதம். ஆகவே, அது எங்களின்
தோல்வியின் வாக்குமூலமும் ஆகும்' என்று எழுதினார்.
ஆக, இதிலிருந்து நமக்குத் தெரிய வருவது பிபன் சந்திராவுக்கு முன்பே பகத்
சிங்கே தனது செயல்களை ‘தீவிரவாதச் செயல்கள்' என்று ஒப்புக்கொண்டார்
என்பதுதான்.
காவிமயமாகும் வார்த்தைகள்
இந்த வரலாற்றை பிபன் சந்திரா எழுதும்போது, வெறும் ‘தீவிரவாதி' என்ற சொல்லை
மட்டும் பயன்படுத்தாமல், ‘புரட்சிகரத் தீவிரவாதி' என்றே குறிப்பிடுகிறார்.
இப்போதைய சர்ச்சைக்கு மேற்கண்ட இரண்டு வார்த்தைகளில், ‘தீவிரவாதி' என்ற
சொல் மட்டுமே காரணமாகியிருக்கிறது. இந்துத்துவ குழுக்கள் அந்தச் சொல்லுக்கு
முன்புள்ள ‘புரட்சிகர' என்ற சொல்லுடன் தீவிரவாதி என்ற சொல்லை இணைத்துப்
பார்க்காமல் போனது துர்பாக்கியம்.
ஆங்கிலத்தில் ‘பெஜொரேட்டிவ்' என்ற ஒரு சொல் உண்டு. தமிழில் அதற்கு
‘அவமதிப்பு' என்று பொருள்கொள்ளலாம். நல்ல பொருளில் வழங்கப்படும் சில
சொற்கள் காலப்போக்கில் அவமதிப்பான சொல்லாக, ஆபாசமான சொல்லாக மாறிவிடும்
போக்கு எல்லா மொழியிலும் உண்டு. உதாரணத்துக்கு ‘லவ்' என்ற சொல்லுக்கு
‘அன்பு' என்ற அர்த்தமும் உண்டு. ஆனால் அது ‘காதல்' என்பதாக மட்டுமே
பெரும்பாலானோர் இன்றைய தினத்தில் பொருள் கொள்கின்றனர். அதேபோலத் பட்டா
இல்லாத நிலத்தை ‘புறம்போக்கு' நிலம் என்று சொல்வதுண்டு. ஆனால் அது இன்று
பெரும்பாலும் ஒருவரைத் திட்டுவதற்கான சொல்லாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
இதெல்லாமே இன்று ‘பெஜொரேட்டிவ்' சொற்கள்தான்.
இந்த நிலைதான் ‘தீவிரவாதி' என்ற சொல்லுக்கும் ஏற்பட்டுவிட்டது. ‘சிப்பாய்க்
கலகம்' என்பதை இன்று எப்படி ‘சிப்பாய்ப் புரட்சி' என்று எழுதுகிறோமோ,
அதுபோல எதிர்காலத் தலைமுறையினர் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்ற
காரணத்துக்காகவே பிபன் சந்திரா ‘தீவிரவாதி' என்ற சொல்லை மட்டும்
பயன்படுத்தாமல் ‘புரட்சிகரத் தீவிரவாதி' என்றே பயன்படுத்துகிறார்.
இவர் எழுதிய அந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1987-ம் ஆண்டு வெளிவந்தது.
வெளிவந்த அந்த வருடமே அனைத்துப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்து சாதனை
படைத்தது. அதனால் 1988 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டாம்
மற்றும் மூன்றாம் பதிப்புகள் வெளிவந்தன. கடைசியாக 1989-ம் ஆண்டு வெளிவந்த
பதிப்புதான், இந்த ஆண்டு மத்தி வரை விற்பனைக்கு இருந்துள்ளது. 1987-ம்
ஆண்டு முதல் இப்போது வரை இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல்
விற்றுள்ளது.
பின்னாளில், பிபன் சந்திராவே ‘புரட்சிகர தீவிரவாதி' என்ற சொற்களில்,
‘தீவிரவாதி' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது, அது திருத்தப்பட
வேண்டும் என்று கூறிவந்தார். ஆனால் துரதிர்ஷ்டம், 1989-ம் ஆண்டுக்குப்
பிறகு நான்காம் பதிப்பு வெளிவரவில்லை. 2014-ம் ஆண்டில் அவர்
காலமாகிவிடுகிறார். அதனால் அந்தத் திருத்தத்தை அவரால் செய்ய முடியாமல்
போனது.
இந்த வாய்ப்பை இந்துத்துவக் குழுக்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக்
கொண்டன. ‘மேரே ரங் தே பசந்தி சோலா' (என் உடைகளைக் காவி நிறம் கொண்டு பூசு)
என்ற பாடலை பகத் சிங்கும் அவரது தோழர்களும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம்
வரும்போது பாடுவார்களாம். இங்கே ‘காவி நிறம்' என்பது துணிச்சல் மற்றும்
தியாகத்துக்கான நிறம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
இதனால் எங்கே தங்களையும் ‘தீவிரவாதி' என்று அழைத்துவிடுவார்களோ என்ற
பயத்தினால்கூட ‘புரட்சிகரத் தீவிரவாதி' என்ற சொற்களில் இருக்கும்
‘தீவிரவாதி' எனும் சொல்லை நீக்க வேண்டும் என்று இந்துத்துவக் குழுக்கள்
அழுத்தம் தந்திருக்கலாம்.
அந்த அழுத்தத்தின் காரணமாக, இப்போது கடைகளில் இந்தப் புத்தகத்தின் நான்காம்
பதிப்பு கிடைக்கிறது. அதில் குறிப்பிட்ட இந்த அத்தியாயத்தில் எங்கெல்லாம்
‘தீவிரவாதி' என்ற சொல் உண்டோ அங்கெல்லாம் ‘தேசியவாதி' என்ற சொல்
இடம்பெற்றுள்ளது. ‘புரட்சிகரத் தீவிரவாதி' ‘புரட்சிகர தேசியவாதி' ஆனது
இப்படித்தான்!
சில இந்துத்துவக் குழுக்களின் மிரட்டுலுக்குப் பதிப்பகங்கள் எப்படிப்
பணிந்துபோகின்றன என்பதற்கான ஒரு சான்று இது. ஆனால் வேடிக்கை,
அத்தியாயத்தின் தலைப்பை ‘பகத் சிங், சூரிய சென் மற்றும் புரட்சிகரத்
தேசியவாதிகள்' என்று மாற்றியவர்கள், ‘குறிப்புகள்' எனும் பின்னிணைப்பில்
பழைய தலைப்பையே வைத்துவிட்டார்கள் (பார்க்கப் படம்).
யார் தீவிரவாதி?
சிறையில் இருந்த பகத் சிங் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு
இப்படி எழுதினார்: "நான் தீவிரவாதியைப் போலச் செயல்பட்டிருக்கிறேன். ஆனால்
நான் தீவிரவாதி அல்ல. என்னிடம் உள்ள அத்தனை சக்திகளையும் ஒன்றுதிரட்டிச்
சொல்கிறேன், நான் ஒருபோதும் தீவிரவாதி அல்ல. அப்படியான செயல்கள் மூலம் நாம்
சாதித்துவிடப் போவதும் ஒன்றுமில்லை".
இன்று மக்களின் நலனுக்காகப் போராடுபவர்கள் மீது தேசத் துரோக வழக்குகள்
போட்டு, தீவிரவாதி என்று அடையாளம் காட்டப்படும் வேளையில், கால்
நூற்றாண்டுகூட வாழாமல் தன் இன்னுயிரை இந்த நாட்டுக்காகத் தியாகம் செய்து
நூற்றாண்டுகள் கடந்தும் நினைவுகூரப்படும் பகத் சிங், புரட்சிகரத்
தீவிரவாதியாகத்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே, என்ன இப்போது?
நன்றி: தி இந்து (இளமை புதுமை)