ந.வினோத் குமார்
இந்தியாவுக்கும் ஊழலுக்கும் கிழக்கிந்திய கம்பெனி இங்கு கால்பதிக்கத்
தொடங்கியதிலிருந்தே உறவு இருக்கிறது. உயர் பதவிகளில் இருப்பவர்களிடையே மட்டுமல்ல.
சாமானியர்களின் அன்றாட பேச்சு வழக்கு, கிசுகிசு, வாழ்க்கை முறை ஆகியவற்றில்கூட
ஊழல் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதைத்தான் குன்னார் மிர்தால் எனும் ஸ்வீடன்
நாட்டுப் பொருளாதார அறிஞர், ‘ஃபோக்லோர் ஆஃப் கரப்ஷன்’ என்றார்.
வரலாற்றாசிரியர் ஏ.கே.ராமானுஜன் தன்னுடைய ‘முந்நூறு ராமாயனங்கள்’ எனும்
கட்டுரையின் இறுதியில் இப்படிச் சொல்லியிருப்பார்: “இந்தியாவில் எவர் ஒருவரும்,
‘இப்போதுதான் ராமாயனத்தை முதன்முதலாகக் கேட்கிறேன்’ என்று சொல்லிவிட முடியாது.
ஏனென்றால், இது காலம் காலமாக இருந்து வருகிறது”. இது ஊழலுக்கும் பொருந்தும்.
‘இப்போதான்யா இப்படி ஒரு ஊழலைக் கேள்விப்படுறேன்’ என்று எந்த இந்தியரும் சொல்ல
முடியாது. காரணம், பிறப்பு முதல் இறப்பு வரை இந்தியர் ஒருவர், பல்வேறு தளங்களில்
ஊழலைப் பற்றி கேட்டு, பேசி, படித்து, சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், ‘ஊழலை ஒழிக்க முடியாதா?’ என்று உங்களுக்குள் கேள்வி எழுந்தால்
என்ன செய்வீர்? ‘தி இந்து’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் எழுதிய ‘ஒய்
ஸ்கேம்ஸ் ஆர் ஹியர் டு ஸ்டே’ எனும் புத்தகத்தைப் படியுங்கள். ‘இந்தியாவில் நிகழும்
அரசியல் ஊழலைப் புரிந்துகொள்ளுதல்’ எனும் உபதலைப்புடன் வந்திருக்கும் இந்தப்
புத்தகத்தை ‘ஆலெஃப்’ பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அரசியல் ஊழல்
ஊழலின் வகைகள், ஊழலின் வரலாறு, அதை வரையறுக்கும் முறை, இந்தியாவில் அதைப்
பற்றிய புரிதல், தமிழகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஊழலுக்குப் பின்னுள்ள
அறிவியல் என்று பரந்த தளங்களில் பேசும் இந்தப் புத்தகம் ‘அரசியல் ஊழல்’ என்பதை
மையமாக வைத்துச் சுழல்கிறது.
எது அரசியல் ஊழல்? தன்னுடைய சுயலாபத்துக்காகவோ அல்லது தன்னைச்
சார்ந்தவர்களின் நலனுக்காகவோ, தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி
காரியங்களைச் சாதித்துக் கொள்வது. இருக்கும் ஊழல்களிலேயே இதுதான் மிகவும் ஆபத்தான
ஊழல். காரணம், இதில் பகடையாடப்படுவது நாட்டு மக்களும் அவர்களின் நலனும் அல்லவா!
போஃபர்ஸ் ஊழல்தான் இந்தியாவில் நடந்த முதல் பெரிய ஊழல். அதைத் தொடர்ந்து
சிமெண்ட் ஊழல், தீவன ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், வியாபம் ஊழல் எனப் பல ஊழல்களை
இந்த தேசம் சந்தித்திருக்கிறது. சரி, அந்த ஊழல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
என்ன என்று பார்த்தால்… உதட்டைப் பிதுக்குவதைத் தவிர வேறெதுவும் பதிலில்லை.
இந்தப் புத்தகத்தில், போஃபர்ஸ் ஊழலை ‘தி இந்து’ எப்படி வெளிக்கொணர்ந்தது,
அப்போது அது சந்தித்த சவால்கள் என்ன, அந்த ‘ரிப்போர்டேஜ்’களினால் இந்திய
பத்திரிகைத் துறையில் விளைந்த மாற்றங்கள் என்ன, அந்த ஊழல் மீது நீதித்துறை எடுத்த
நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர்.
போஃபர்ஸ் ஊழலின் போது ‘தி இந்து’ தவிர, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘இந்தியா
டுடே’ ஆகியவற்றின் பங்களிப்புகள் குறித்தும் தொட்டுச் செல்லும் அவர், ‘வியாபம்’
ஊழல் இவ்வளவு காலம் வெளிவராமல் இருந்ததற்கு இந்தி மொழி பத்திரிகைகளும்
பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
முதலாளித்துவத்தின் அங்கம்
ஊழலைப் பற்றிய புரிந்துகொள்ளல் இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதைக்
குறித்து விவரிக்கும்போது, ‘ஊழல் என்பது முதலாளித்துவத்தின் அங்கம்’ என்பதாகவே
மார்க்சிஸம் கருதி வந்திருப்பதாக ராம் கூறுகிறார்.
அதனால்தான் என்னவோ, ஊழலின் வகைகள் குறித்துப் பேசும்போது, பன்னாட்டு
கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ‘ஃப்ராடு’ தனங்களையும் ஊழலாகக் கருதுகிறார்
அவர். அதற்கு உதாரணமாகப் பல ஆய்வுகளைக் காட்டுகிறார். அதில் சுவாரஸ்யமான ஒரு ஆய்வு
2017-ம் ஆண்டு எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்துக்காக இப்சாஸ் எம்.ஓ.ஆர்.ஐ. எனும்
நிறுவனம் மேற்கொண்டது. அதில் தங்களுடைய கரியரையும் ஊதியத்தையும் உயர்த்திக்
கொள்வதற்காக சுமார் 41 சதவீத இந்திய ஊழியர்கள், எந்த விதமான அதர்மமான வழிகளையும்
பின்பற்றத் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்ததாம். அந்த ‘அதர்மமான
வழிகளில்’ உயரதிகாரிகளுக்கு ‘சோப்பு’ போடுவதும் அடங்குமா என்பது தெரியவில்லை!
‘லைசன்ஸ் ராஜ்’ இருந்த காரணத்தினால்தான் இந்திய அரசியல் பொருளாதாரப் பரப்பில்
ஊழல் என்பதே தோன்றியது என்று சொன்னவர்கள், எல்லாவற்றையும் தாராளமயமாக்கினால் ஊழல்
ஒழிந்துவிடும் என்றும் சொன்னார்கள். ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகும் ஊழல்
தொடர்வதை என்னவென்று சொல்ல?
சாராயச் சாப்பாடு
இப்படியான ஊழல் தமிழகத்தில் எப்படி தலைவிரித்தாடுகிறது என்பதைச் சில
வரலாற்றுத் தகவல்களுடன் நிரூபிக்கிறார் ராம். 1967-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு
வரும் வரை தமிழகம் ஊழலில்லாமல் ஓரளவு சுத்தமாகவே இருந்தது. அண்ணாவின் இரண்டு வருட
ஆட்சியிலும் அந்தச் சுத்தம் தொடரவே செய்தது. ஆனால் 1972-ம் ஆண்டு
தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து வந்த பிறகு, தமிழகத்தில் மு.கருணாநிதி
தலைமையிலான ஆட்சியில் எவ்வாறெல்லாம் ஊழல் நடந்திருக்கிறது என்பது தெரிய வந்தது.
அதற்குப் பிறகு முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர்., ஓரளவு
சுத்தமான ஆட்சியை வழங்கவே செய்தார். ஆனால் அவரின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில்
(ஜூன் 1980 – டிசம்பர் 1984) இனி வரும் எல்லாக் காலத்துக்கும் தமிழகம்
சந்திக்கவிருக்கிற அவமானத்துக்கு ‘டாஸ்மாக்’ மூலமாக அடிக்கல் நாட்டினார்
எம்.ஜி.ஆர். டாஸ்மாக் தொடங்கப்பட்ட 1983-ம் ஆண்டு மே 23-ம் தேதி, ‘தமிழ்நாட்டில்
அறிவியல்பூர்வமான அரசியல் ஊழல் தோன்றிய நாள்’ என்று குறிப்பிடுகிறார் ராம்.
டாஸ்மாக்கில் வந்த வருமானத்தை வைத்துத்தான் 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.,
தொடங்கிய மதிய உணவுத் திட்டம் தொடரப்பட்டதாகக் கருதப்படுகிறது. அந்த நிலை இன்றும்
தொடர்கிறதா? அப்படியெனில், நம் குழந்தைகள் சாப்பிடுவது சாராயத்தில் வந்த
சம்பாத்தியத்தில்தானா?
இதையெல்லாம் படித்து உங்கள் மனம் குமுறுகிறதா? ஊழலை ஒழிக்க என்ன செய்வது
என்ற கேள்வி எழுகிறதா? அதற்கு நூலாசிரியர் தரும் தீர்வு, ‘இந்திய அரசியல்
பொருளாதாரத்தில் ஆழமான மாற்றங்கள் உருவாக வேண்டும்!’ என்பதே!
படங்கள் உதவி: (இந்தியா டுடே அட்டைப் படம் - dailyo.in, என்.ராம் படம் - thehindu.com)