ந.வினோத் குமார்
முதன்முதலாக நான் சிகரெட் பிடித்தபோது… மன்னிக்க… பிடிக்கப் பழகியபோது, என்
வயது ஏழோ, எட்டோ இருக்குமென்று நினைக்கிறேன். முதல் இழுப்பு இழுத்தபோது, பத்து
பன்னிரெண்டு முறை இருமினேன். இரண்டாவது இழுப்பு இழுத்தபோது, கூடுதலாக இரண்டு,
மூன்று ‘லொக்… லொக்…!’. நல்லவேளையாக நான் மூன்றாவது இழுப்பு இழுக்கவில்லை.
இழுத்திருந்தால், புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு நான் அடிமையாகியிருக்க அனேக
சாத்தியங்கள் உண்டு!
அதற்குப் பிறகு, கல்லூரிக் காலத்தில் புகைப்பிடிக்கும் ‘டெம்ப்டேஷன்’
வரவேயில்லை. ஆனால், வேலைக்குச் சேர்ந்து, இரண்டு, மூன்று காதல் தோல்விகளைச்
சந்தித்த பிறகு, ‘நாமளும் சிகரெட் பிடிச்சிக்கிட்டு சுத்திக்கிட்டிருந்தா,
நம்மையும் நாலு பொண்ணுங்க திரும்பிப் பார்த்திருப்பாங்கள்ல..’ என்று
முட்டாள்த்தனமாகச் சிந்தித்துப் பார்த்ததுண்டு.
ஆம்… ஒரு ஆண், சிகரெட் பிடிக்கப் பழகுவதற்கான முதல் காரணம்… ‘ஹீரோயிஸம்!’.
சிலர், ‘அதெல்லாம் இல்லை… ஏகப்பட்ட டென்ஷன்.. அதான்..’ என்று சாக்குப் போக்குச்
சொல்லலாம். எதுவுமே உண்மை அல்ல. சிகரெட் பிடிக்கும்போது, தங்களுக்குப் பிடித்த
கதாநாயகன் போலவே தாங்களும் இருப்பதாகக் கருதிக் கொள்ளும் மனோபாவம்தான், ஒருவரை
சிகரெட் பிடிக்கப் பழகுவதை நோக்கித் தள்ளுகிறது.
சமரேந்திர நாத் சந்தா எனும் பத்திரிகையாளர், தான் எழுதிய ‘தி டொபேக்கோ
ஸ்டோரி’ எனும் புத்தகத்தில், மக்கள், சிகரெட் பிடிக்கப் பழகுவதற்கான மூன்று
காரணங்களைச் சொல்கிறார். அதில் ஒன்று, சினிமாவின் தாக்கம்! இதர இரண்டு காரணங்கள்…
போர், விளம்பரம்!
சிகரெட்டின் முக்கிய மூலப் பொருளாக இருக்கும் புகையிலையின் வரலாற்றைச்
சொல்கிறது அவர் எழுதிய அந்தப் புத்தகம். ப்ளூம்ஸ்பரி பதிப்பக வெளியீடாக 2017-ம்
ஆண்டின் இறுதியில் வெளிவந்தது.
புகையிலை தரும் மயக்கம் போலவே, அதன் வரலாற்றுச் செய்திகளும் நம்மை
‘கிறுகிறு’க்க வைக்கின்றன. முதன்முதலாகப் புகையிலை எப்போது தோன்றியது என்று
பார்த்தால், அதற்குச் சரியான தேதிகள் இல்லை. 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத்
தோன்றியிருக்கலாம் என்று படிமவியலாளர்கள் உத்தேசமாகக் கணித்திருக்கிறார்கள்.
அதாவது, மனிதர்கள் தோன்றிய காலம்தொட்டே, இந்த ‘மர்ம மூலிகை’யும் இருந்து வருகிறது
என்று புரிந்துகொள்ளலாம்.
அதேபோல, இது உலகின் எந்தப் பகுதியில் தோன்றியது என்ற தகவலையும் சரியாகக்
கணிக்க முடியாது. கொலம்பஸ் வந்து இறங்கிய தீவில், அதாவது இப்போதைய வட, தென்
அமெரிக்காவில் தென்பட்ட தாவரம் இந்தப் புகையிலை என்று மேற்கத்திய
வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், கொலம்பஸுக்கு முன்பே, கீழைத்தேய
நாடுகளான இந்தியா மற்றும் அரபு நாடுகளிடையே கடல் மார்க்கமாக பண்டப் பரிவர்த்தனை
நடைபெற்று வந்திருக்கிறது. அப்போது, இந்தப் புகையிலை இந்தியர்களிடமிருந்து
அரேபியர்களுக்குக் கைமாறியிருக்கிறது என்றும், அவர்களிடமிருந்து
ஆப்பிரிக்கர்களுக்கும் கைமாறியிருக்கிறது என்றும் ஒரு தகவல் இருப்பதாக இந்த
நூலாசிரியர் சொல்கிறார்.
அதற்கு அவர் குறிப்பிடும் ஆதாரம்… புகையிலைக்கான பெயர்! ஆயுர்வேதத்தில்
சரகர், சுஸ்ருதர் ஆகியோர் எழுதிய நூல்களில் புகையிலை ‘தம்ரகுட்டா’,
‘தம்ரபத்ரிக்கா’, ‘தமக்கூ’ ஆகிய பெயர்களில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த
சமஸ்கிருதச் சொற்களின் அடிப்படையில், அரேபியர்கள் இதை ‘துப்பாக்’, ‘தும்பக்’ என்ற
பெயர்களில் அழைத்திருக்கிறார்கள். இந்த வேர்ச் சொற்களில் இருந்தே புகையிலைக்கான
ஆங்கிலச் சொல் ‘டொபேக்கோ’ வந்திருக்கலாம் என்கிறார் சந்தா.
இந்த ‘தோற்ற மயக்கங்கள்’ ஒரு புறமிருக்க, ஓக்லாலா லகோட்டா உள்ளிட்ட
பூர்வகுடி அமெரிந்தியர்களின் தொன்மங்களில் பெண்களால்தான் புகையிலை என்ற தாவரம்
இந்தப் பூமியில் தோன்றியதாகச் சொல்லப்படுவது ‘புரியாத புதிர்!’ தவிர, இந்தத்
தாவரத்தை கடவுளிடமிருந்து வந்த பரிசு என்று கருதி, பூர்வகுடிகள்
கொண்டாடியிருக்கிறார்கள். எனவே, சில வரலாற்றாசிரியர்கள் புகையிலையை, ‘இதுவரை
உலகில் கண்டுபிடிக்கப்பட்ட தனித்துவமான சமய கலைப்பொருள் (religious artefact)
இதுதான்’ என்கிறார்கள். இன்றைக்கும் கிராமங்களில் முனீஸ்வரன், முனியாண்டி போன்ற
சிறுதெய்வங்களுக்குப் படைக்கும் படையலில் ‘சுருட்டு’ வைக்கப்படுவதைப்
பார்க்கும்போது, அது உண்மையென்றே தோன்றுகிறது.
பழைய இந்தியத் திரைப்படங்களில் ‘ரேப்’ ஸீன் முடித்தவுடன், சிகரெட்
பிடிப்பது போன்ற காட்சிகள் இருக்கும். ஆனால், பூர்வகுடி அமெரிந்தியர்கள்,
பெண்களுடன் ‘மேட்டர்’ செய்வதற்கு முன்பு, புகையிலை எரித்து, அதன் புகையை
உள்ளிழுத்து, பெண்களின் முகத்துக்கு நேராக விடுவார்களாம். அப்போதெல்லாம் பெண்கள்
உள்ளுக்குள் எப்படிப் புகைந்தார்களோ தெரியவில்லை. அந்தப் புகைச்சலைப்
போக்குவதற்கென்றே பிற்காலத்தில் பிலிப் மோரிஸ் எனும் சிகரெட் தயாரிப்பு நிறுவனம்
பெண்களுக்கென்றே ‘மார்ல்ப்ரோ’ எனும் சிகரெட் ‘பிராண்டை’ கொண்டு வந்தது!
‘அப்படியா…’ என்று இதற்கெல்லாம் நீங்கள் ஆச்சரியப்படக் கூடாது. உண்மையிலேயே
ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்… சிகரெட்டில் உள்ள ‘நிகோட்டின்’ எனும் பெயரின்
பின்பாதியைத் தந்தவள் ஒரு பெண் என்பதுதான்!
புகையிலையை முதன்முதலில் இனங்கண்டது அமெரிக்கா. அந்தப் புகையிலையைப் புகைப்பதை
‘நாகரிகமடைந்த ஒரு மனிதனின் வாழ்க்கையில், உணவுக்கு அடுத்த இடம் புகைப்பிடிப்பது’
என்று புகைப்பிடிப்பதை சமூக வழக்கமாக்கியது, இங்கிலாந்து. ழான் நிக்கோ (Jean
Nicot) எனும் பிரெஞ்சு நாட்டுத் தூதர், போர்ச்சுகல் நாட்டிலிருந்து திரும்பிய
போது, பிரெஞ்சு நாட்டு ராணி கேத்தரின் த மெடிஸிக்குப் (Catherin de Medici) பரிசாக
வழங்க புகையிலையை எடுத்து வந்தார். புகையிலையின் மணத்தில் மயங்கிய ராணி,
புகையிலைக்கு அடிமையானாள். இந்த விஷயத்தில் ‘ராணி எவ்வழியோ அவ்வழியே மக்களும்!’.
புகைப்பிடிப்பதற்குத் தேவையான பொடியை ‘ராணியின் பொடி’ என்று அழைத்தார்கள் மக்கள்.
பிற்காலத்தில் நிக்கோவின் பெயரையும் கேத்தரின் பெயரையும் இணைத்து ‘நிக்கோட்டினா’
(Nicot + Catherin, ‘in’ = Nicotin, Nicotiana) என்று அழைத்தார்கள்
தாவரவியலாளர்கள். ‘நிக்கோட்டியானா டபேக்கம்’ (Nicotiana Tabacum) என்ற பெயரை
நீங்கள் எங்கேனும் கடந்து வந்தால், ஆச்சரியப்பட வேண்டாம். அதுதான், புகையிலையின்
தாவரவியல் பெயர்!
இன்றைக்கெல்லாம் பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் அது தண்டனைக்குரிய
குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இப்படி, பொது இடத்தில் புகைப்பிடித்ததற்காக தண்டனை
கொடுத்த நாடு எது என்று பார்த்தால், அது ஸ்பெயின். தண்டனை பெற்ற மனிதர்,
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிரிஸ்டோபர் கொலம்பஸின் உதவியாளர் ரோட்ரிகோ த ஜெரேஸ்.
ஆனால், இதில் உள்ள விசித்திரம் என்ன தெரியுமா..? புகைப்பிடிக்கும் வழக்கத்தை இந்த
உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதே ஸ்பெயின் நாடுதான். அது, ‘சூரியன் மறையாத
சாம்ராஜ்யமாக’ ஸ்பெயின் இருந்த காலம். கடல் வழியாகப் பயணம் செய்து, உலகின் பல
பகுதிகளைத் தங்கள் காலனியாதிக்கத்துக்குள் கொண்டு வந்தது ஸ்பெயின். அந்தச்
சமயத்தில் மயன், ஆஸ்டெக் போன்ற பூர்வகுடி மக்களிடமிருந்து ஸ்பானியர்கள்
புகைப்பிடிக்கக் கற்றுக்கொண்டார்கள். அதுமட்டுமல்ல சிகரெட் எனும் வார்த்தையின்
சுருக்கமான ‘சிகார்’ (Cigar) எனும் வார்த்தையே ஸ்பானிஷ் மொழியிலிருந்து
வந்ததுதான். அது ‘சிகாரா’ (Cigarra) எனும் பூச்சியின் பெயரிலிருந்து வந்தது.
காரணம், அந்தப் பூச்சியின் உடலமைப்பு, புகையிலையைப் போன்றே சுருண்டிருக்குமாம்.
பிறகு ஒரு கட்டத்தில், இங்கிலாந்து, அமெரிக்காவில் தனது காலனியாதிக்கத்தைப்
பரவலாக்கியது. அதற்குத் துணை நின்றது புகையிலை. ஜேம்ஸ்டவுன் என்கிற இடத்தில்தான்
புகையிலை முதன்முதலாகப் பயிர் செய்யப்பட்டது. அதை வளர்த்துப் பராமரிப்பதற்கென்றே
ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகள் கொண்டு வரப்பட்டார்கள். உள்ளூர் பூர்வகுடி
அமெரிந்தியர்களும் அடிமைகளாக்கப்பட்டார்கள். ஆங்கிலேயர்களின் அதிகாரத்துக்கு
எதிராக இந்த அடிமைகள் ஒரு சமயம் கொதித்தெழுந்தார்கள். பிற்காலத்தில் அமெரிக்காவில்
சிவில் உரிமைப் போராட்டங்கள் தோன்ற, அதுவே அடிப்படையாக அமைந்தது.
‘கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’
என்று பாரதி பாடியதுபோல, அப்போதெல்லாம், புகையிலையைப் பெறுவதற்காக மாதுக்களை
‘மாறு’ கொண்ட நிகழ்வுகள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன.
நாளுக்கு நாள் அடிமைகளின் போராட்டம் வளர்ந்து வர, ஜேம்ஸ்டவுனைவிட்டு வெளியேறிவிடலாம்
என்று ஆங்கிலேயர்கள் கருதினார்கள். அப்படி அவர்கள் வெளியேறியிருந்தால், அந்தப்
பகுதியில் பிரெஞ்சு அல்லது ஸ்பெயின் அல்லது வேறு ஏதேனும் ஐரோப்பிய நாட்டின் வேர்
ஊன்றப்பட்டிருக்கும். அமெரிக்கா எனும் தேசம் பிறந்திருக்காது. இதில் இன்னொரு
சுவாரஸ்யம், அடிமைகளின் போராட்டத்துக்கு ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன்
போன்றவர்கள் தலைமையேற்றார்கள். புகையிலை பெருவியாபாரிகளாக இருந்த இவர்கள்தான்
பிற்காலத்தில், அமெரிக்க அதிபர் பதவிகளையும் அலங்கரித்தார்கள்!
இருந்தாலும் அமெரிக்கர்களுக்கு ரொம்பவும் நக்கல் அதிகம்தான். ஒருமுறை
இங்கிலாந்தைச் சார்ந்த எழுத்தாளர் சார்லஸ் டிக்கென்ஸ், அமெரிக்காவுக்குப் பயணம்
மேற்கொண்டார். அங்கே அவர் கண்ட காட்சி, அவருக்கு அமெரிக்காவின் மீதிருந்த
மரியாதையைக் குலைப்பதாக இருந்தது. எங்கே பார்த்தாலும், புகையிலையை மென்று ‘பொளிச்
பொளிச்’ என்று அமெரிக்கர்கள் துப்பிக்கொண்டேயிருந்தார்கள். அதில் வயது, பாலின
வித்தியாசம் எல்லாம் இல்லை. இத்தனைக்கும், டிக்கென்ஸே, ‘இரவு உணவுக்குப் பின், அதுவும் நான் தனியாக
இருந்தால் புகைப்பிடிப்பேன்’ என்று சொன்னவர்தான். அவர், அமெரிக்கர்களின் புகையிலை
மெல்லும் வழக்கத்தைப் பற்றி இப்படி எழுதினார்: ‘இப்படி ஒரு வெறுக்கத்தக்கப்
பழக்கத்தை எந்த நாகரிகமடைந்த நாட்டிலும் காண முடியாது!’
அவர் அப்படி எழுதிய சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘பீட் தி டிக்கென்ஸ்’ (Beat
the Dickens) என்ற பெயரில் சிகரெட் பிராண்ட் ஒன்றைக் கொண்டு வந்து, தங்கள்
‘புண்பட்ட பண்பாட்டை புகைவிட்டு’ ஆற்றிக்கொண்டார்கள் அமெரிக்கர்கள்.
ஒரு பக்கம், மக்களுக்குப் புகையிலையின் மீது மோகம் அதிகரித்து வர, இன்னொரு
பக்கம், அந்த மோகத்தைக் கட்டுப்படுத்த பல நாடுகளில் பல மன்னர்கள் ‘புகையிலை வரி’
எல்லாம் போட்டுப் பார்த்தார்கள். ம்ஹூம்… மோகம்தான் குறைந்தபாடில்லை. இன்று
மட்டும் என்ன வாழ்கிறதாம்…? என்னதான் விலையை உயர்த்தினாலும், சிகரெட் விற்பனை
குறைந்திருக்கிறதா என்ன?
புகையிலையால் ஏற்படும் தீமைகள் 19-ம் நூற்றாண்டில் கொஞ்சம் கொஞ்சமாகத்
தெரிய வர, புகையிலைக்கு எதிராக, முதன்முதலில் குரல் எழுப்பியவர் லூசி பேஜ் காஸ்டன்
எனும் பெண்மணிதான். அவருக்கு ஆதரவாக அச்சு ஊடகங்களும், சிகரெட் தொடர்பான
விளம்பரங்களை வெளியிடாமல் புரட்சி செய்தன. எனக்குத் தெரிந்து, சமீபகால நினைவில்,
‘இனி சிகரெட் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதில்லை’ என்று முடிவெடுத்த
பத்திரிகை… விகடன் என்று நினைக்கிறேன்!
ராணி எலிசபெத்தின் அரசவையில் ஒருவராக இருந்த சர் வால்டர் ரலீக்,
முதன்முதலாகப் புகையிலையை ராணியிடம் அறிமுகப்படுத்தியபோது, ராணி இப்படிச்
சொன்னார்: ‘இதுவரை தங்கத்தைப் புகையாக்கியவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால்
ரலீக்தான் முதன்முதலில் புகையைத் தங்கமாக்கியிருக்கிறான்!’ ஆம்… புகையிலைக்கு
இன்னொரு பெயர் ‘பழுப்புத் தங்கம்!’
எலிசபெத் ராணியே சொல்லிவிட்டார் என்பதற்காக, அந்த ‘பழுப்புத் தங்கத்தை’
பயன்படுத்தாதீர்கள் தங்கங்களே… ஏனென்றால், ஆஷ் ட்ரேயில் நிறைந்திருப்பது சிகரெட்
சாம்பல் அல்ல… உங்கள் அஸ்தி. நீங்கள் விடும் புகை, உங்கள் சிதையிலிருந்து
வெளியாகும் புகை!
நன்றி (படங்கள்): புத்தக அட்டை amazon.in, புகையிலை, புகையிலைப் பெண்,
சிகரெட் படங்கள் thehindu.com, ஆஷ் ட்ரே படம் colourbox.com