ந.வினோத் குமார்
அவளுக்கு வயது 18. பத்துக் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஏழாவதாகப்
பிறந்தவள். அதனால் அவள் ‘மிடில் சிஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறாள். பிரெஞ்சு மொழி
வகுப்பில் படிக்கும் அவள், எப்போதும் சாலையில் நடந்து செல்லும்போது, 19-ம்
நூற்றாண்டைச் சேர்ந்த புத்தகங்களைப் படித்துக்கொண்டே செல்வாள். அது ஏன் 19-ம்
நூற்றாண்டு? ஏனென்றால் அவளுக்கு 20-ம் நூற்றாண்டு, விரும்பத்தக்கதாக இல்லை.
அன்றும் அப்படித்தான். பிரெஞ்சு வகுப்பை முடித்துவிட்டு, வீடு திரும்பிக்
கொண்டிருந்தபோது, சர் வால்டர் ஸ்காட் எழுதிய ‘இவான்ஹோ’ நாவலைப் படித்துக்கொண்டே
நடந்து போகிறாள். அப்போது, ஒரு வெள்ளை நிற வேன், அவள் அருகில் வந்து நிற்கிறது.
‘லிஃப்ட் வேண்டுமா?’ என்று கேட்கிறார் வேனுக்குள் இருந்தவர். கேட்டவர், 41 வயது
ஆண். அவள் மறுக்கிறாள்.
வெள்ளை நிற வேனில் வந்ததால் அவருக்கு ‘மில்க்மேன்’ என்று பெயரிடுகிறாள்
அவள். அடுத்த சில நாட்களில், அவள் ‘ஜாகிங்’ சென்றுகொண்டிருக்கும்போது, இரண்டாவது
முறையாக அவளைச் சந்திக்கிறார் ‘மில்க்மேன்’. அவர்கள் இருவரும் சாலையில்
பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த சிலர், அவர்கள் இருவரும் காதலர்கள் என்று முடிவு
கட்டுகிறார்கள்.
இதனால் அவளது வீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. உண்மையில், அவள்,
‘மில்க்மேனை’ காதலிக்கவில்லை. மாறாக, தனக்கு அறிமுகமாகி ஒரு வருடமேயான ‘இவனை நாம்
‘பாய் ஃபிரெண்ட்’ ஆக வைத்துக்கொள்ளலாமா..?’ என்று யோசிக்கச் செய்கிற ‘மேபீ – பாய்
ஃபிரெண்ட்’டை காதலிக்கிறாள். அது காதல்கூட இல்லை. சும்மா ஒரு ‘டேட்டிங்’.
அவ்வளவுதான்.
அவள் வேறொருவனைக் காதலிப்பது ‘மில்க்மேனு’க்குத் தெரிந்துவிடுகிறது.
‘என்னுடைய ஆசைக்கு அடிபணிந்து விடு’ என்று அவளைத் திரும்பத் திரும்ப ‘ஸ்டாக்கிங்’
செய்கிறார் அவர். அவள் மறுத்துவிடுகிறாள். ‘இதற்கு நீ சம்மதம் தெரிவிக்கவில்லை
என்றால், உன் ‘மேபீ – பாய் ஃபிரெண்ட்’டைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டுகிறார்.
அவருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? ஏனென்றால், அவர் அந்த தேசத்தின் அரசை
எதிர்க்கும் மிக முக்கியமான தீவிரவாதக் கூட்டத்தில் மிக முக்கியப் பொறுப்பில்
இருப்பவர். அந்த மாவட்டத்தில் அவர்தான் பெரிய ஆள்!
அவரின் அந்தப் பயமுறுத்தலுக்கு ‘மிடில் சிஸ்டர்’ ஆற்றிய எதிர்வினை என்ன?
அவளது ‘மேபீ – பாய் ஃபிரெண்ட்’ காப்பாற்றப்பட்டானா? இந்தக் கேள்விகளுக்குப் பதில்
சொல்கிறது அன்னா பர்ன்ஸ் எழுதிய ‘மில்க்மேன்’ நாவல். 2018-ம் ஆண்டுக்கான புக்கர்
பரிசை, இந்த நாவல் கடந்த 16-ம் தேதி பெற்றது!
***
இந்த நாவலில் எந்தக் கதாப்பாத்திரத்துக்கும் பெயர்கள் இல்லை. அவர்களின்
உறவு முறை, அவர்கள் செய்யும் வேலை போன்றவற்றின் அடிப்படையில், அந்த உறவு முறையும்,
செய்யும் வேலையுமே பெயர்களாக வழங்கப்பட்டுள்ளன. இதனால், நாவலைப் படிக்கும்போது,
யார், எதைச் சொல்கிறார்கள் என்ற குழப்பமும் அயற்சியும் ஏற்படுகிறது. எனவே
விமர்சகர்கள் இதை, ‘உங்களைச் சோதிக்கும் நாவல்’ என்று சொல்கிறார்கள். ஆம்… நம்
பொறுமையை ஏகத்துக்கும் சோதிக்கிறது!
நாவல் முழுவதும், ‘மிடில் சிஸ்டர்’ எனும் நாயகி, தன் கதையைச் சொல்வது போல
அமைந்திருக்கிறது. கதையில், வடக்கு ஐயர்லாந்து சிவில் போர், சர்வதேச அளவிலான
பெண்ணியக் குழு உருவாதல், தலிபான்களின் அடக்குமுறை, ஸ்டாலின் கால ரஷ்யாவில் இருந்த
நிலை, இன்றைப் பெரும் பரபரப்பைக் கிளப்பி வரும் ‘மீ டூ’ போன்ற பல அரசியல்
நிகழ்வுகளின் சாயல் ஆங்காங்கே தென்படுகின்றன.
புகழ்பெற்ற ஐயர்லாந்து நாடகாசிரியர் சாமுவேல் பெக்கெட்டின் எழுத்துச்
சாயல், இந்த நாவலில் தெரிவதால், இதை ‘பெக்கெட்டியன்’ நாவல் என்றும் கருதுகிறார்கள்
விமர்சகர்கள். ஆனால், அன்னாவோ, ‘இந்த நாவலை எழுதி முடிக்கும் வரை, நான்
பெக்கெட்டைப் படித்ததே இல்லை’ என்கிறார்.
***
அன்னா பர்ன்ஸ், ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட வடக்கு ஐயர்லாந்து நாட்டைச்
சேர்ந்த பெண் எழுத்தாளர். இதுவரை இரண்டு நாவல்களும், ஒரு குறுநாவலும்
எழுதியிருக்கிறார். ‘மில்க்மேன்’, இவரது நான்காவது படைப்பாகும்.
இந்த நாவல், வடக்கு ஐயர்லாந்தின் தலைநகரமான பெல்ஃபாஸ்ட் நகரத்தில்,
1970-களில் நடப்பதாகச் சித்தரித்துள்ளார் அன்னா. அந்தக் காலகட்டம் வடக்கு
ஐயர்லாந்துக்கு மிகவும் சோதனையான காலகட்டம். ‘தி ட்ரபிள்ஸ்’ என்று அழைக்கப்பட்ட
வடக்கு ஐலர்லாந்து சிவில் போர், அப்போதுதான் உச்சத்தில் இருந்தது.
புரொட்டெஸ்டண்ட் மதப் பிரிவினரைப் பெரும்பான்மையினராகவும்,
கத்தோலிக்கர்களைச் சிறுபான்மையினராகவும் கொண்ட நாடு, வடக்கு ஐயர்லாந்து.
சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து பல அநீதிகள் நடைபெற்று வந்தன. அதற்கு
எதிராக, 1969-களின் மத்தியில், கத்தோலிக்கர்கள் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தனர்.
புரொட்டெஸ்டண்ட்கள் அதை ஒடுக்க ஆரம்பிக்க, தொடங்கியது ‘தி ட்ரபிள்ஸ்’ சிவில்
யுத்தம்.
நாட்டின் அரசியலமைப்பு, இந்த யுத்தத்தின் மிக முக்கியமான அம்சமாக இருந்தது.
புரொட்டெஸ்டண்ட்களோ, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய
ஐக்கிய ராஜ்ஜியத்துடனேயே, வடக்கு ஐயர்லாந்து இணைந்திருக்க வேண்டுமென்று
கூக்குரலிட்டார்கள். கத்தோலிக்கர்களோ, ஒருங்கிணைந்த ஐயர்லாந்துக் குடியரசுடன்,
வடக்கு ஐயர்லாந்து இணைய வேண்டும் என்றனர்.
இந்த யுத்தம் அடுத்த சுமார் 30 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இறுதியாக
1998-ம் ஆண்டு, ‘புனித வெள்ளி உடன்படிக்கை’ மூலம், அந்தப் போர் முடிவுக்கு வந்தது.
அந்த உடன்படிக்கையின்படி, ஐக்கிய ராஜ்ஜியத்தின் நாடாளுமன்றத்தின் பொறுப்புகள்,
வடக்கு ஐயர்லாந்துக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்று வரையில், அந்த
உடன்படிக்கையின் அடிப்படையிலேயே வடக்கு ஐயர்லாந்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இப்படி ஒரு யுத்தப் பின்னணியைக் கொண்ட தேசத்திலிருந்து வந்த நாவலாசிரியர்
அன்னா பர்ன்ஸ், புக்கர் பரிசை வென்ற முதல் ஐயர்லாந்து நாட்டு எழுத்தாளர் எனும்
பெருமையைப் பெற்றிருக்கிறார்.
புக்கர் பரிசு, அடிப்படையில், இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும்
காமென்வெல்த் நாடுகளைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர்களுக்குத்தான் என்று இருந்தது.
பிறகு, விதிகள் தளர்த்தப்பட்டு, 2014-ல்தான் அமெரிக்க எழுத்தாளர்களையே இதில்
சேர்க்க ஆரம்பித்தார்கள். இந்த ஆண்டு, இந்த விருது தொடங்கப்பட்ட 50-வது ஆண்டு.
ஆனால், கடந்த 49 வருடங்களில் வடக்கு ஐயர்லாந்தில் இருந்து, ஒரு
எழுத்தாளருக்குக்கூட இந்த விருது போய்ச் சேரவில்லை. அந்த விருது, முதன்முதலில்
அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குப் போய்ச் சேர்ந்திருப்பது மட்டுமல்லாமல்,
இதுவரையில் இந்தப் பரிசுக்கான போட்டியில் இங்கிலாந்து எழுத்தாளர்கள் செலுத்தி வந்த
ஆதிக்கமும் முடிவுக்கு வந்திருப்பதால், அன்னா பர்ன்ஸ் பெற்ற வெற்றி கொண்டாடப்பட
வேண்டியதாகிறது!
ஆ… சொல்ல மறந்துவிட்டோமே…. அன்னா பர்ன்ஸ், ஒரு கத்தோலிக்கர்!
நன்றி: காமதேனு (29/10/2018 - 05/11/2018)