ந.வினோத்
குமார்
எதற்கும்
தலைப்பை இன்னொரு முறை படித்துவிடுங்கள். ‘நகரக் காதல்’தான்… ‘நரகக் காதல்’ இல்லை..!
’இரண்டு இதயங்கள் மட்டும் போதும் காதலுக்கு’ என்பது
இளைஞர்களின் இயல்பு. இடங்களும் முக்கியம் என்பது பலருக்கும் புரிவதில்லை. சொல்லப் போனால்,
ஒருவர் வாழ்கிற அல்லது வசிக்கிற இடத்தைப் பொறுத்துத்தான் அவரது காதலின் விஸ்தீரனமும்
இருக்கிறது. கிராமம் என்றால் அதற்குரிய சுபாவங்களோடும் கட்டுப்பாடுகளோடும், நகரம் என்றால்
அதற்குரிய நவீனத்தோடும் எல்லை மீறுதல்களோடும் என காதல், நிகழும்.
ஆல
மரத்தின் மறைவில் நின்று கொஞ்சிக் கொள்கிற
காதலர்களை ஊராரின் கண்கள் சாதி, உறவு முறை போன்ற கண்ணாடிகளைக் கொண்டு பார்த்தால், மேம்பாலத்தின் தூண் மறைவில் களிப்புறுகிற
காதலர்களை நகரவாசிகளின் ‘எக்ஸ்-ரே’ மனங்கள் ‘கருமம் கருமம்… எங்க பார்த்தாலும் இதுங்க
‘அது’க்குன்னே சுத்துதுங்க...’ என்று அங்கலாய்க்கின்றன.
பலரும்
கிராமத்தில் காதல் செய்வதைவிட, நகரத்தில் செய்வதுதான் அதிக சுதந்திரத்தோடு இருக்கிறது
என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லை… கிராமங்களில் கோயில், குளம், அரச
மரத்தடி, திருவிழாக்கள், உறவினர் வீட்டு விசேஷங்கள், பேருந்துப் பயணங்கள் என காதலர்கள்
சந்தித்துக் கொள்ளவும், விரல்கள் பிணைத்துக் கொள்ளவும் போதுமான இடங்கள் உள்ளன.
ஆனால்
நகரத்தில், திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரை என எங்கு சென்றாலும், ‘பெர்வெர்ட்’களின்
கண்கள் மொய்த்துக்கொண்டே இருக்கின்றன. ‘எவன்
எங்கே கேமரா வெச்சிருக்கானோ’ என்ற பயத்துடனேயே உரசிக் கொள்ள வேண்டியிருக்கிறது. கொஞ்சம்
கவனம் பிசகினால், ‘எக்ஸ் வீடியோஸ்’ தளத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தில் ‘தேசி செக்ஸ்’
என்ற தலைப்புடன் அந்தத் தருணங்கள் இணையத்தில் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
நகரக்
காதல்களின் இன்னொரு முக்கியமான அம்சம்… நீங்கள் ஒருவரின் மீது காதல் கொள்வதற்கு முன்,
அந்த நகரத்தின் மீதே காதல் கொள்ள வேண்டும். அதன் அழுக்குகளை ‘அடடா… என்ன அழகு’ என்று
ஏற்றுக்கொள்கிற பக்குவம் வேண்டும். கூட்ட நெரிசலிலும் ‘க்யூ’ வரிசையிலும் தொங்கப்போட்ட
தலை நிமிராது செல்போனில் மூழ்கிக் கிடக்கத் தெரிய வேண்டும். வெயிலையும் மழையையும் ஒன்று
போல் கருதுகிற ஞானியின் திடம் வேண்டும். காதலரின் தாமதமான வருகையை, அவர் வரும் ரயில்,
பேருந்து ஆகியவற்றின் தாமதத்துடன் இணைத்துக் காத்திருக்கும் ரசனை பழக வேண்டும்.
நான்
அப்படித்தான் ‘நகரக் காதல்’ பழகினேன். அதற்கு உதவியாக இருந்தவை ’இதயம்’, ‘ஆசை’, ‘பூவே
உனக்காக’, ‘காதல் தேசம்’, ‘சொல்லாமலே’ போன்ற 90-களின் தமிழ் சினிமாக்கள். இன்றும் எம்.எம்.சி
பக்கம் போனால், ஏதேனும் மரத்தடியில் முரளி உட்கார்ந்திருப்பாரோ என்று தோன்றும். ‘போனி
டெய்ல்’ போட்ட, கையில் ‘ஸ்டெத்’ உடனும் மார்போடு அணைத்த புத்தகங்களுடனும் காட்டன் புடவை
கட்டிய எனக்கான ‘ஹீரா’ எந்த மாடிப்படிகளிலேனும் இறங்கிக் கொண்டிருக்கக் கூடும் என மனம்
கனவு காணும். எதிர்த்திசையில் வரும் பேருந்தில் ஜன்னலோரமாய் அமர்ந்திருக்கும் இளம்பெண்ணைப்
பார்த்தால், இந்தப் பேருந்தில் ஜன்னலோரமாய் உட்கார்ந்திருக்கும் என்னை அஜீத் ஆகக் கற்பனை
செய்து பார்க்கத் தூண்டும் விதி. மாடிகளின் மேல் இருக்கும் குடிசைகளைப் பார்க்கும்போது,
‘ஆனந்தம் ஆனந்தம் பாடும்’ விஜய் துணி துவைத்துக் கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் வரும்.
கூடவே இலவச இணைப்பாக எஸ்.ஏ.ராஜ்குமாரின் ‘லாலலா... லாலலா…’
நகரத்துக்கு
வந்த 10 ஆண்டுகளில் நான்கு காதல்கள் பார்த்துவிட்டேன். காதலும் காதலிகளும்தான் என்னைப்
பார்க்கவில்லை. அவர்களுக்கெல்லாம் நான் ‘அனானிமஸ்’ ஆகப் போய்விட்டதில் எனக்குக் கொஞ்சம்
வருத்தம்தான்.
நிற்க…
நகரத்தின் மீது காதல் கொள்வது குறித்தும், அந்தக் காதலினூடே தனக்கான காதலியைக் கண்டடைவது
குறித்தும் அருமையானதொரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஊடகவியலாளர் ரவீஷ் குமார். என்.டி.டி.வி.யில்
பணியாற்றும் அவர், ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்று பலருக்கும் தெரியும். தெரியாத ஒன்று,
அவர் சிறந்த எழுத்தாளரும்கூட..!
பிஹாரில்
பிறந்து, வளர்ந்து, உயர்கல்விக்காக முதன்முறையாக அவர் டெல்லிக்கு வரும்போது, அங்கே
காணப்பட்ட கலாச்சார வித்தியாசங்கள் அவரை அச்சுறுத்துகின்றன. கூச்சப்பட வைக்கின்றன.
அந்தக் காலத்தில்தான், தனக்கானத் துணையை அவர் காண்கிறார். 7 ஆண்டு காதலுக்குப் பிறகு,
நயனா தாஸ்குப்தாவைக் கரம் பிடித்தார் ரவீஷ்.
அவர்கள்
காதலித்த காலத்தில், தனது கையில் பணம் இல்லாததாலும், கல்வியும் ஆய்வும் நிறைய நேரங்களை
எடுத்துக்கொண்டு காதலியைப் பார்க்க முடியாத தவிப்பாலும் கடும் வலிக்கும் வேதனைக்கும்
உள்ளானார் ரவீஷ். அப்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பத்து வரிகளுக்குள் முடிந்துவிடுகிற
‘மைக்ரோ’ கதைகளை எழுத ஆரம்பித்தார். ‘லகு பிரேம் கதா’ (சுருக்கமாக, லப்ரேக்) எனும்
வகைமையைச் சேர்ந்த அந்த எழுத்துகள் தொகுக்கப்பட்டு ‘இஷ்க் மெய்ன் ஷஹர் ஹோனா’ என்ற தலைப்பில்
புத்தகமாக 2015-ல் ‘ராஜ்கமல் பிரகாஷன்’ பதிப்பக வெளியீடாக வந்தது. அது அகில் கத்யால்
என்பவரால் ’எ சிட்டி ஹேப்பன்ஸ் இன் லவ்’ என்ற தலைப்பில் இந்தியிலிருந்து ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்டு, ‘ஸ்பீக்கிங் டைகர்’ வெளியீடாக 2018-ல் வெளியானது. விக்ரம் நாயக்கின் ஓவியங்கள் கதைகளுக்குக் கூடுதல் பொலிவைத் தருகின்றன.
இதில்
உள்ள பெரும்பாலான கதைகள் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்தவை. கதைகளில் காதலைவிட, காதலர்களைவிட,
டெல்லி நகரம் நிறைந்திருக்கிறது. பல இடங்களில் கவித்துவம் தெறிக்கிறது. பெரும்பாலான
கதைகளின் சாரம், அந்தத் தெறிப்புகளில் அடங்கிக் கிடக்கிறது. அந்தத் தெறிப்புகளை தமிழ்ப்படுத்தாமல்
ஆங்கிலத்தில் வாசிப்பது இன்னும் அழகாகவே இருக்கிறது. உதாரணத்துக்குச் சில:
‘…what
kind of a city is this? Always chasing the body!’ (நிஜம்தான்..!)
‘It
was this electricity of touch that was making them into city folks’.
‘When
in love you don’t just see, you learn to unsee too’. (’லவ் இஸ் ப்ளைண்ட்’ என்பதை
நம்பாதவர்களுக்கு!)
‘We’ve
become so unemployed in love’.
‘Love
stories in the city are always like this. They start in traffic and then, in traffic,
they are lost’.
‘Why
do you always seek me out in the dark? This one question turned the cinema hall
into a police station’. (கார்னர் சீட் தேடும் ஆண்களுக்கு..!)
‘As
she got down, she was right when she said --- you worry less about me and more
about the world. You could have at least held my hand under the bag. Coward!’ (நீங்கள்
புன்னகைப்பது தெரிகிறது..!)
‘Not
every fight over status has to be fought with English!’ (பீட்டர் விடுபவர்களுக்கு..!)
‘The
most dangerous is the dying of our dreams’.
‘Touch
was like that blessing in whose search they’d roam in temples…’
‘…our
shoulders brushing against each other’s brush against the lines of a poet’.
புத்தகத்தைப்
படிக்கும்போது, ‘இதை தமிழில் மொழிபெயர்க்கலாமே’ என்கிற ஆவலை அடக்க முடியவில்லை. எனவே
ஒரே ஒரு கதையை மட்டும் இங்கே மொழிபெயர்க்கிறேன்.
“ஒபாமாவைப்
போன்ற ஒருவர் நம் மாவட்டத்தின் ஆட்சியராக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எல்லா கட்டப்பஞ்சாயத்துகளையும்
ஒரே நாளில் ஒழித்துவிடுவார்.
ஆமாம்.
நீ இப்படி ஆசைப்படுவது, ஒரு இனிய கனவைப் போல
இருக்கிறது. ஆனால் ஒன்றை மறந்துவிடாதே. தன் கையில் துப்பாக்கி இருந்தால், ஒபாமாவும்
தீவிரவாதியைப் போலத்தான் பேசுவார். அப்போது, எங்கே போய் ஒளிய முடியும்?
இரவில்
கூட, ஒளியின் துணையின்றி அவரால் பார்க்க முடியும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அடடா…
சரி வா, நாளை காலையில் இருந்து ஜனநாயகப்பூர்வமாக ஒரு விஷயத்தைச் செய்வோம். இன்னும்
எத்தனை நாள் நாம் மாமரத்தின் மறைவிலும் அரச மரத்தின் அடியிலும் சந்திப்பது? ஒரு நாவல்
பழம் விழுந்தால்கூட, அது ஏதோ ஒரு கட்டப்பஞ்சாயத்துக்காரனின் தோட்டா தாக்கியதைப் போல
உணர்கிறேன் நான்”
எல்லாம்
சரி..? ஒரு நகரத்தின் மீது எப்படி காதல் கொள்வது? அதற்கு ரவீஷ் தரும் பதில்… ’தெரிந்த
இடத்திலிருந்து தெரியாத இடங்களுக்குச் செல்லும்போது!’
‘அமெரிக்கா
செல்வதற்குக் கொடுக்கும் மறைமுகமான விலை ஒன்று உண்டு. அதைப் புரிந்துகொண்டு செல்லுங்கள்.
அது, திரும்ப வரமாட்டீர்கள்’ என்று வெளிநாட்டு
மோகத்தைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பார். அது படிப்பு,
வேலை ஆகிய காரணங்களுக்காக நாம் செல்லும் வெளியூர், வெளி மாநில நகரங்களுக்கும் பொருந்தும்.
ஆனாலும் இன்னமும் நம்மில் பலர், ‘பெர்மனன்ட் அட்ரஸ்’ என்பதன் கீழ், நம் கிராமத்தின்
முகவரியைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம். இந்த முரணை என்னவென்பது..?