Friday, March 15, 2019

ராணுவத்தினருக்கு ‘தியாகி' பட்டம் தேவையில்லை!

ந.வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 22 ஜனவரி 2016
“கற்பனையா எழுதுற ஃபிக்ஷனை எல்லோரும் நம்புறாங்க. உண்மைத் தரவுகளின் அடிப்படையில எழுதுற நான்-ஃபிக்ஷனை எல்லோரும் சந்தேகமா பார்க்குறாங்க!" என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் ரகு கர்னாட்.
'தி வயர்' எனும் இணைய இதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார். தனது முதல் புத்தகத்தின் மூலம் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த 'டெப்யூடன்ட்'டின் தந்தை புகழ்பெற்ற நாடகக் கலைஞர், எழுத்தாளர், நடிகர் கிரீஷ் கர்னாட்.
இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் பங்கு என்ன என்பதைப் பற்றி ஆங்கிலத்தில் 'ஃபார்தெஸ்ட் ஃபீல்ட்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார் ரகு. இந்தப் புத்தகம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. புத்தகத்துக்கு வரலாற்றாசிரியர்களிடமும், முன்னாள் - இந்நாள் ராணுவத்தினரிடமும் நல்ல‌ வரவேற்பு.
1939-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரையிலான இரண்டாம் உலகப் போரை, மெட்ராஸ் முதல் பர்மா வரையிலான நிலப்பரப்பில் ஒரு குடும்பத்தின் பின்னணியோடு அலசுகிறது இந்தப் புத்தகம். 20 அத்தியாயங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் 5 அத்தியாயங்கள் அன்றைய மெட்ராஸ் நகரத்தைப் பற்றியதாக மட்டுமே இருக்கின்றன.

இந்தியாவில் பொறியியலாளர்களை உருவாக்க ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரி நாட்டிலேயே மிகவும் பழமையான பொறியியல் கல்லூரி. இங்கு 1940-ம் ஆண்டு ஏ.லலிதா மற்றும் லீலா ஜார்ஜ் ஆகிய இரண்டு பெண்கள் கல்வி கற்பதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். இந்தக் கல்லூரியில் பயின்ற முதல் மாணவிகள் இந்த இருவர்தான். இது வரலாறு.
'அன்றைய காலத்தில் ஆண்கள் எல்லாம் போரில் கலந்துகொள்ளச் சென்றனர். அப்போது போருக்குத் தேவையான கருவிகளை உருவாக்குவதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனைப் போக்குவதற்கே பெண்கள் பொறியியல் படிக்க அனுமதிக்கப்பட்டார்கள்' என அந்த வரலாற்றுக்குள் இருக்கும் உண்மையையும் தன் புத்தகத்தில் எழுதுகிறார் ரகு.
அந்தக் காலத்தில் ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்துக் கையெழுத்திடும் இறுதியாண்டு மாணவர்களுக்கு நூறு ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது, போர்க் காலத்தின்போது மெட்ராஸைச் சுற்றி 22 மைல் தூரத்துக்கு பதுங்கு குழி வெட்டப்பட்டது, 'நிலம், நீர் மற்றும் ஆகாய மார்க்கமாக எதிரிகள் தாக்கும்போது அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படும்' என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தன, 'ஜப்பான்காரன் குண்டு போட வருகிறான்' என்று பரவிய வதந்தியில் ஒரே வாரத்தில் 12 லட்சம் பேர் மெட்ராஸை விட்டு வெளியேறியது உள்ளிட்ட பல அரிய தகவல்களைப் புத்தகம் முழுக்கத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
பாரதியாரின் நண்பர் வ.ரா. 1943-ம் ஆண்டு எழுதிய 'ஜப்பான் வருவானா?' என்ற பாடலைப் பற்றிய குறிப்பும் இந்தப் புத்தகத்தில் வருகிறது. இப்படிப் பல தகவல்களைச் சுமந்திருக்கும் புத்தகத்தை எழுதிய ரகு கர்னாட், கடந்த வாரம் சென்னையில் 'தி இந்து' நடத்திய 'லிட் ஃபார் லைஃப்' இலக்கிய விழாவுக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...
இந்தப் புத்தகம் எழுத எண்ணம் ஏற்பட்டது இப்படி?
'மிலிட்டரி அஃபையர்ஸ்' பற்றி ஒரு புத்தகம் எழுதுவேன் என்று நான் கனவு கூட கண்டதில்லை. என் வீட்டில் செல்லரித்த சில கருப்பு வெள்ளை ஒளிப்படங்கள் இருந்தன. அதில் சில மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் யாரென்று எம் அம்மாவிடம் கேட்டேன். அவர் சொன்ன தகவல்கள் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. பாபி, மானெக், கணபதி என்ற பெயருடைய அந்த மூன்று பேரும் என் தாத்தாக்கள். அவர்கள் மூன்று பேருமே இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டவர்கள். அவர்களின் கதைதான் என்னை இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியது.
நீங்கள் நினைத்திருந்தால் இந்தப் புத்தகத்தை ஒரு புனைவாக எழுதியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. ஏன்?
ஏனென்றால், எனக்குக் கிடைத்த தகவல்கள் எல்லாம் உண்மையாக இருந்தன. அவற்றை அப்படியே சொல்ல விரும்பினேன். மேலும், கற்பனையை விடவும் உண்மை மிகவும் சுவாரஸ்யமானதாகவும் இருந்தது.
அன்றைய பிரிட்டிஷ் இந்திய ராணுவம் என்பது சாதியப் படிநிலைகளோடு இருந்தது என்று கூறப்படுகிறதே?
ஆம். அப்படித்தான் இருந்தது. மேலும், இந்துக்கள் ஒரு யூனிட் ஆகவும், முஸ்லிம்கள் ஒரு யூனிட் ஆகவும் என ஒவ்வொரு மதத்தினரையும் பிரித்து வைத்திருந்தார்கள். அதனால் அவர்கள் வேறு வேறு இடங்களில் பணியாற்ற வேண்டியிருந்தது. ‘எங்கே இவர்களை எல்லாம் ஒன்றாக வைத்தால், இவர்கள் ஒருங்கிணைந்து நம்மை எதிர்க்க ஆரம்பித்துவிடுவார்களோ' என்ற ஆங்கிலேயரின் அச்சம்தான் இந்தப் பிரிவினைக்குக் காரணம்.
அதேபோல அன்றைய இந்திய‌ ராணுவத்தினர் பிரிட்டிஷாரின் அடிமைகளாகவும் இருந்தார்கள் என்ற ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறதே?
அது மிகவும் தவறான வாதம். ஆம், பணத்துக்காகவும்தான் இந்தியர்கள் பலர் அன்று, ராணுவத்தில் சேர்ந்தார்கள். ‘அதற்காக மட்டுமே தான் அவர்கள் ராணுவத்தில் சேர்ந்தார்கள்' என்பது தவறு. நமது நாடு, கலாச்சாரம், ‘இஸாத்' எனப்படும் சுய மரியாதை ஆகியவற்றைக் காப்பாற்றவும் ராணுவத்தில் இணைந்தார்கள்.
மேலும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு இருக்கும் இந்திய ராணுவம் பிரிட்டிஷாரின் ராணுவ அமைப்பை அடிப்படையாக வைத்துத்தான் உருவாக்கப்பட்டது. அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி நமது ராணுவம் ‘சிவிலியன் கவர்ன்மென்ட்'டால் நிர்வகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட பல காலனியாதிக்கத்துக்குப் பின் உருவான நாடுகளில் இதுபோன்ற ஒரு ராணுவ அமைப்பை நீங்கள் பார்க்க முடியாது!

அன்றைய இந்திய ராணுவத்தினருக்கு நல்ல வகையான ஆயுதங்கள் தரப்படவில்லை என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இன்றுமே கூட நம்மிடம் மேம்பட்ட ஆயுதங்கள் இல்லை அல்லவா?
அன்றைக்கு நமது ராணுவத்தினருக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்படாததற்குக் காரணம் சர்ச்சில் போன்றவர்கள், ‘இவர்களிடம் ஆயுதங்களைக் கொடுத்தால் அவற்றை நம்மை நோக்கியே திருப்புவார்கள்' என்று அஞ்சினார்கள். ஆனால் இன்றைக்கு ராணுவத்திடம் இருக்கும் பலவீனம்... நவீன ஆயுதங்கள் இல்லாமல் இருப்பது அல்ல. நிலப்பிரபுத்துவம்தான்!
ராணுவம் பற்றி நீங்கள் எழுதியதால் கேட்கிறேன். இன்றைக்கு ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' எனும் திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவத்தினர் படும் இன்னல்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' நல்ல திட்டம்தான். ஆனால் அதை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதுதான் பிரச்சினை. நமது ராணுவத்தினரை உயர்த்திப் பேசுகிறது பாரதிய ஜனதா கட்சி அரசு. ஆனால் பேசுகிற அளவுக்குச் செயலில் காண்பிக்கவில்லை. மேலும் ராணுவத்தினரை தியாகிகள் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அவர்களுக்குத் ‘தியாகி' பட்டம் எல்லாம் தேவையில்லை. உயர் அதிகாரிகள் தரும் அழுத்தம், பணிச் சிக்கல்கள் என ராணுவத்திலும் நிறைய பிரச்சினைகள் உள்ளன. அவற்றை எல்லாம் களைந்துவிட்டு, நமது ராணுவத்தினரை ‘புரொஃபெஷனலாக' நடத்தினாலே போதும்!
இந்தப் புத்தகத்துக்கான தரவுகளை எப்படிச் சேகரித்தீர்கள்?
இந்தப் புத்தகம் எழுத எண்ணம் ஏற்பட்டவுடன் சென்னைக்கு வந்து சில நாட்கள் சுற்றினேன். பிறகு எக்மோரில் உள்ள ஆவணக் காப்பகம் போன்ற இடங்களில் தேடினேன். ‘ஜப்பான் வருவானா?' எனும் வ.ரா.வின் பாடல் உள்ளிட்ட பல தகவல்கள் எனக்குக் கிடைக்க‌ ‘காலச்சுவடு' கண்ணன் நிறைய உதவிகள் செய்தார்.
உங்கள் தந்தையே சிறந்த எழுத்தாளர். அவர் உங்கள் புத்தகத்தைப் படித்தாரா?
அவர் படித்துவிட்டு, சில ‘ரைட்டிங் டிப்ஸ்' கொடுத்தார். அவ்வளவுதான்!
நன்றி: இந்து தமிழ் திசை (இளமை புதுமை)

Saturday, March 9, 2019

பெண்ணியத்துக்கு ‘பென்’ பரிசு!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: ஜூலை 1, 2018

இன்று ஆங்கிலத்தில் எழுதும் மிக முக்கியமான கறுப்பின எழுத்தாளர்களில் சிமாமாண்டா எங்கோஸி அடீச்சியும் ஒருவர். நைஜீரியாவைச் சேர்ந்த இவர், இதுவரை ஆறு புத்தகங்களை எழுதியிருக்கிறார். பெண்ணியம் குறித்த சரியான புரிதலை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது இவரது எழுத்து.

இவருக்குக் கடந்த ஜூன் 12-ல் ‘பென்’ (PEN) பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற நாடக ஆசிரியர் ஹரால்ட் பிண்ட்டரின் நினைவாக இந்தப் பரிசு ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டன், காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இந்த உலகத்தின் மீது துணிச்சலான, தடுமாற்றம் இல்லாத பார்வையைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் விதமாக இந்தப் பரிசு ஒன்பது ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அடீச்சிக்கு இந்தப் பரிசு வழங்கப்பட உள்ளது.

ஏன் பெண்ணியவாதியாக இருக்க வேண்டும்?

பாலினம், நிறம், உலக அளவிலான சமத்துவமின்மை ஆகியவற்றின் மீது இவர் கொண்டிருக்கும் நவீன அணுகுமுறையே இந்தப் பரிசுக்காக இவர் தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணம் என்று தேர்வு செய்த நடுவர்கள் கூறியிருக்கிறார்கள்.

முக்கியமாக, பாலினம் குறித்து இவர் கொண்டிருக்கும் பார்வை, நாம் கவனத்தில் கொள்ளவும் பின்பற்றவும் வேண்டியது. ‘அப்படி என்னவிதமான பார்வையைக் கொண்டிருக்கிறார்?’ என்று கேட்பவர்கள், அவர் எழுதிய ‘வீ ஷுட் ஆல் பி ஃபெமினிஸ்ட்ஸ்’ எனும் புத்தகத்தை வாசித்தால் போதும்.

ஆப்பிரிக்காவை மையப்படுத்தி லண்டனில் ‘டெட்எக்ஸ் யூஸ்டன்’ எனும் அமைப்பு, 2012-ல் சொற்பொழிவு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் பெண்ணியம் குறித்துப் பேசினார் சிமமண்டா. அந்த உரையின் சற்றே விரிவுபடுத்தப்பட்ட வடிவம்தான் இந்தப் புத்தகம். 2014-ல் வெளியானது.


‘நாம் அனைவரும் ஏன் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்?’ என்ற கேள்விதான், இந்தப் புத்தகத்தின் அடிநாதமாக ஒலிக்கிறது. ‘நாம் அனைவரும் வேறொரு உலகைக் கனவு காண வேண்டும். அந்த உலகத்தில் ஆண்களும் பெண்களும் தங்களுக்குத் தாங்களே உண்மையாக நடந்துகொள்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி நடந்துகொள்வதில் மகிழ வேண்டும். அப்படியொரு உலகைப் படைக்க, நம் மகள்களை வித்தியாசமாக வளர்க்க வேண்டும். மகன்களையும் வித்தியாசமாக வளர்க்க வேண்டும்’ என்று அந்தப் புத்தகத்தில் அவரே பதிலும் தருகிறார்.

யாரெல்லாம் பெண்ணியவாதி?

பெண்ணியத்தை மக்கள் எப்படியெல்லாம் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட, தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை இப்படி நகைச்சுவையாகச் சொல்கிறார் அடீச்சி:

“நான் ‘பெண்ணியவாதி’ என்று சொன்னபோது, ஆண் பத்திரிகையாளர் ஒருவர், ‘பெண்ணியவாதிகள் எல்லாம் கவலையுடன் இருப்பவர்கள்’ என்றார். அன்றிலிருந்து நான் ‘மகிழ்ச்சியான பெண்ணியவாதி’ என்று என்னை அழைத்துக்கொண்டேன். பிறகு, ‘பெண்ணியம் என்பது ஆப்பிரிக்கர்களுக்கு ஒத்து வராது’ என்றார்கள். அதனால் என்னை ‘மகிழ்ச்சியான ஆப்பிரிக்கப் பெண்ணியவாதி’ என்று அழைத்துக்கொண்டேன்.

பிறகு, ‘பெண்ணியவாதி என்றால் ஆண்களை வெறுப்பவர்கள்’ என்றார்கள். எனவே, நான் என்னை ‘ஆண்களை வெறுக்காத மகிழ்ச்சியான ஆப்பிரிக்கப் பெண்ணியவாதி’ என்று கருதிக்கொண்டேன்.

இப்படியே செல்லச் செல்ல ஒரு கட்டத்தில் நான் ‘ஆண்களுக்காக இல்லாமல் தனக்காக ஹை ஹீல்ஸ் அணிந்துகொள்கிற ஆனால் ஆண்களை வெறுக்காத மகிழ்ச்சியான ஆப்பிரிக்கப் பெண்ணியவாதி’ என்னும் அளவுக்கு வளர்ந்துவிட்டேன்.

ஆம். ‘பெண்ணியவாதி’ என்ற சொல் எவ்வளவு எதிர்மறையான அடையாளங்களுடன் வருகிறது? ஆண்களை வெறுப்பவராக, பிரா அணிய விரும்பாதவராக, பெண்கள் மட்டுமே எப்போதும் மேலோங்கி இருக்க வேண்டும் என்று நினைப்பவராக, மேக்அப் போட்டுக்கொள்ள விரும்பாதவராக, எப்போதும் கோபம் கொண்டவராக, நகைச்சுவை உணர்வு இல்லாதவராக, டியோடரண்ட் பயன்படுத்தாதவராக…”


ஏன் மாற வேண்டும்?

புத்தகத்தின் ஓரிடத்தில் ‘ஓட்டலுக்குச் சென்றால், ஆண்கள்தாம் பணம் கொடுக்க வேண்டும் என்ற வழக்கம் எப்படி வந்தது? அப்படிப் பணம் கொடுப்பதை ஏன் ஆண்மைக்குரிய விஷயமாகப் பார்க்க வேண்டும்? ஒரு பெண், சர்வருக்கு ‘டிப்ஸ்’ கொடுத்தால், அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஆணுக்கு ஏன் சர்வர் நன்றி சொல்கிறார்? அதாவது, பெண்ணிடம் பணமே இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அவள் கீழ்த்தரமானவள் என்ற சிந்தனை எங்கிருந்து வந்தது? ஒரு பெண் ஏன் மற்றவர்களின் மனதுக்குப் பிடித்தவளாக நடந்துகொள்ள வேண்டும்?’ என்று பல கேள்விகளை அவர் எழுப்புகிறார்.

அந்தக் கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் விவாதம் பிறக்கும். தீர்வுகள் கிடைக்க வழி ஏற்படும். வழி கிடைத்தால் கலாச்சாரமும் மாறும். ஏன் கலாச்சாரம் மாற வேண்டும்? அடீச்சியின் சொற்களிலேயே சொல்ல வேண்டுமென்றால், ‘கலாச்சாரம் மனிதர்களை உருவாக்குவதில்லை. மனிதர்கள்தாம் கலாச்சாரங்களை உருவாக்குகிறார்கள்!’

நன்றி: இந்து தமிழ் திசை (பெண் இன்று), சிமாமாண்டா படம்: chimamanda.com