Thursday, May 16, 2019

இதற்குத்தானே ஆசைப்பட்டோம் பாலகுமாரா..!

ந.வினோத் குமார்

தமிழ் இலக்கிய உலகில் சுஜாதாவுக்கு அடுத்து ’எழுத்துச் சித்தர்’ பாலகுமாரனின் வரவு, ஒரு புதுவெள்ளமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. ஆனால் இன்றுள்ள இலக்கியவியாதியர் பலரும், அந்த இருவரை இலக்கியவாதிகளாக என்றுமே ஏற்றுக்கொண்டது கிடையாது. 

இன்றுள்ள இலக்கியவியாதியர் அன்றைக்கெல்லாம் வெகுஜன பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்களைக் கண்டால் பத்தடி தூரம் நின்று கொள்வார்களாம். வெகுஜன எழுத்தாளர்கள் மீது அப்படி ஒரு தீண்டாமை..! ‘நமக்கெல்லாம் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுகிற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது’ என்று அவர்கள் எல்லோரும் நினைத்திருப்பார்கள் போல. அப்படி எழுதிவிட்டால் தங்கள் மீது அழுக்கு போலப் படிந்திருக்கும் ‘தீவிர இலக்கியவாதி’ என்ற இமேஜ் போய்விடும் என்று பயந்தார்கள்.

இன்று அவர்களில் பலர் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுத முன் வந்துவிட்டார்கள். அதுதான் அந்தப் பத்திரிகைகளின் பலம். ஆனால் சுஜாதாவைப் போல, பாலகுமாரனைப் போல அவர்களால் இந்த ஊடகத்தில் வெற்றி பெற முடிந்ததா என்றால், இல்லை..!

காரணம், தீவிர இலக்கியவியாதியர் பலரின் எழுத்துகளில் நெகிழ்வுத் தன்மை இல்லை. அவர்களது எழுத்து நடை கரடு முரடாக இருக்கிறது. எண்ண ஓட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிய்ந்து தொங்குகின்றன.
சுஜாதா வாரப் பத்திரிகைகளிலும், பாலகுமாரன் வாரப் பத்திரிகைகளுடன் சேர்த்து மாதாந்திர ‘பாக்கெட்’ நாவல்களிலும் வெற்றிக்கொடி கட்ட முடிந்தது என்றால் அதற்குக் காரணம், அவர்கள் எழுத்தில் இருந்த நெகிழ்வுத் தன்மைதான்.
இந்த நெகிழ்வுத் தனமைதான் என்னை இவர்கள் இருவரின் எழுத்துகளை நோக்கி என்னை ஈர்த்தது. அதிலும் பாலகுமாரனின் எழுத்துகள் ‘ஐஸிங் ஆன் தி கேக்’ என்று சொல்வார்களே, அப்படியான ஒரு குதூகலத்தை, குளுமையை அளித்தன.

அவரது எழுத்துகளை ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதிலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன். அவர் எழுதியதில் நான் வாசித்த முதல் நாவல் ‘பனிவிழும் மலர்வனம்’. பாக்கெட் நாவல்தான். அதற்குப் பிறகு பத்திரிகைகள் தொங்குகிற எல்லா கடைகளிலும் நான் முதலில் விசாரிப்பது பாலகுமாரனைத்தான். அதற்குப் பிறகுதான் ராஜேஷ் குமார்.

பாலகுமாரனின் படைப்புகளைப் பற்றி யாரேனும் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது. அப்படி ஆய்வு செய்திருந்தால் நிச்சயம் இந்த உண்மை அவர்களுக்கு விளங்கியிருக்கும். அது இதுதான்: தான் ஒரு படைப்பில் எடுத்துக்கொள்கிற களம், அது பெயிண்ட் விற்கிற ஹார்டுவேர் கடையாக இருக்கலாம், கல்யாணத்தை கவர் செய்யும் ஸ்டூடியோவாக இருக்கலாம், புத்தகங்கள் பதிப்பிக்கும் பதிப்பகமாக இருக்கலாம், ’ஜரிகைக் கனவுகளை’ நெய்யும் ‘கனவுத் தொழிற்சாலை’யாக இருக்கலாம்… அந்தத் துறையின் ஆதி முதல் அந்தம் வரை பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி, அந்தத் துறையைப் பற்றிய ஒரு சாமானியனும் சுவீகரித்துக் கொள்ளும் வகையில் அந்தப் படைப்பை நிலைநிறுத்திவிடுவார்.

அந்தக் களத்துக்குள் காதலை எப்படி அணுக வேண்டும், பெண்களை எப்படிக் கையாள வேண்டும், உள்நோக்கிப் பார்ப்பது எப்படி, குருவை எப்படித் தேடிக் கண்டடைவது என்று பல விஷயங்களைச் சொல்லிச் செல்வார். வாழ்க்கையில் வெற்றி பெற வேறெந்த தன்னம்பிக்கைப் புத்தகங்களைப் படிப்பதைவிடவும் பாலகுமாரனின் நாவல்களைப் படிக்கலாம் என்று நான் பரிந்துரைப்பேன். அதை என் அனுபவத்திலிருந்தே சொல்கிறேன்.

நிற்க, தன் படைப்புகளின் மூலம் எண்ணற்ற விஷயங்களை பாலகுமாரன், தன் வாசகர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தாலும், அவர் கற்றுக்கொடுத்த மிக முக்கியப் பாடம் என்பது ‘செக்ஸ்’ என்பது என் எண்ணம்.

ஆம்… காமம் என்ற பொருள் குறித்து பாலகுமாரனுக்கு நிகராக இன்னும் அழகாக, இன்னும் ஆழமாக, இன்னும் தெளிவாக யாரும் எடுத்துரைக்கவில்லை என்றே சொல்வேன்.

சொல்லப் போனால், அவரது முதல் நாவலே ‘செக்ஸ்’ புத்தகங்கள் விற்கும் ஒருவனின் வாழ்க்கையைச் சொல்வதுதான். ‘ஏதோ ஒரு நதியில்’ என்று தலைப்பிடப்பட்ட அந்த நாவல், பல காலத்துக்குப் பிறகு பதிப்பாளர் ஜி.அசோகனின் முயற்சியால் 2019 மே மாத குடும்ப நாவலில் மறுபிரசுரம் கண்டுள்ளது. ’அதை வாசித்து அனைவரும் பயனடைக’ என்று சொல்வதற்கு முன், பாலகுமாரன் தன் படைப்புகளில் காமத்தை எப்படிக் கையாண்டார் என்று சொல்லிவிடுகிறேன்.


‘ஒரு பெண்ணின் உடலை நீங்கள் காகிதத்தைத் தொடுவதுபோல அணுக வேண்டும்’ என்றார் காந்தி. ஆம்… ஒரு பெண்ணின் நிர்வாணத்தை படபடப்புடனோ, ஆவேசமாகவோ அணுகாமல், நிதானமாகக் கையாள வேண்டும். அவளது உடைகளைக் களைவதற்கு முன்பு அவளது கைகளை உங்கள் கைகளுக்குள் வைத்து அவளைச் சாந்தப்படுத்துங்கள். முதுகு தடவுங்கள். நெற்றியில் முத்தமிடுங்கள். அன்பாக நாலு வார்த்தை பேசுங்கள். ‘நான் உன்னைக் கைவிட மாட்டேன்’ என்று தைரியம் சொல்லுங்கள். அந்த அன்பில், அந்த நம்பிக்கையில் அவள் குளிர்ந்து போவாள். உருகிப் போவாள்.

பாலகுமாரனின் நாவல்களில் இரு பாத்திரங்களுக்கு இடையில் நிகழும் உறவுக்கு முன்பு நடைபெறுகிற ‘ஃபோர் பிளே’ இப்படியாகத்தான் இருக்கும். இதை பிளாட்பாரத்தில் விற்கும் எந்த செக்ஸ் புத்தகங்களும் கற்றுத் தராது.

காம இச்சைகள் என் வயதைப் பதம் பார்க்கத் தொடங்கியிருந்த பருவத்தில் செக்ஸ் புத்தகங்களைத் தேடி அலைந்திருக்கிறேன். சென்னையில், பழைய புத்தகக் கடைகள், அண்ணா சாலை பிளாட்பாரம் எனத் திரிந்திருக்கிறேன். நியூஸ்பிரிண்ட் பேப்பரில் அனுபவக் கதைகளாலும் கோட்டோவியங்களாலும் ஒளிப்படங்களாலும் நிரம்பிய அந்தப் புத்தகங்களைப் படித்துக் கிறங்கிப் போயிருக்கிறேன்.

ஆனால் அவை காமத்தை வன்முறையாகச் சித்தரித்ததுதான் அதிகம். ‘அவள் பிராவைக் கிழித்தான். முலைக் காம்புகளைக் கடித்தான். அவள் பு….யில் ஈட்டியாகச் சொருகினான்’ என்று உடல்களுக்கு இடையே நிகழும் கூடலை, உலகப் போர் கணக்காக ஊதிப் பெருக்கியிருப்பார்கள். இதனாலேயே நான்கைந்து புத்தகங்கள் வாங்கிப் படித்த பிறகு, அவற்றின் மீதிருந்த ஈர்ப்பு போனது.

பாலகுமாரன் இந்த இடத்தில்தான் வித்தியாசப்படுகிறார். அவரது ‘வெள்ளைத் தாமரை’ நாவல் ஒரு சிறந்த உதாரணம். புதிதாகத் திருமணமான தம்பதிகள் அனைவரும் படிக்க வேண்டிய நாவல் அது. அதில் ஆண் பெண் இருவருக்கும் ஒரு முழுமையான, திருப்திகரமான உடலுறவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கியிருப்பார். முதலிரவு அன்றே அனைத்தையும் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணாமல், நான்கைந்து இரவுகளில் படிப்படியாகப் பரஸ்பரம் அடுத்தவரின் நிர்வாணத்தைப் பதட்டமில்லாமல் அணுகுவது எப்படி என்பதைக் கற்றுத் தந்திருப்பார். 

இந்த விஷயங்களை எல்லாம் ‘பிளே பாய்’ பத்திரிகையிலோ, ‘பென்ட்ஹவுஸ்’ புத்தகங்களிலோ காணமுடியாது. ஆகவேதான் சொல்கிறேன், பாலகுமாரன் நாவல்களைப் படிப்பவன் ஸ்திரிலோலனாக இருக்கமாட்டான். பெண்ணின் நிர்வாணத்தைப் பார்த்தால் பாய்ந்து பிடுங்குபவனாக இருக்கமாட்டான். எந்நேரமும் காமத்தில் திளைப்பவனாகவோ அல்லது ‘காமமா.. கருமம் கருமம்’ என்று ஓடுபவனாகவோ இருக்கமாட்டான்.

செல்போனில் செக்ஸ் வீடியோ பார்க்கும் காலத்திலும் ‘சரோஜாதேவி’யைத் தேடி அலைபவர்களைப் பார்க்கிறேன். இன்னொரு புறம்  ‘எக்ஸ் வீடியோ’ தளங்களிலேயே மூழ்கிக் கிடப்பவர்களையும் பார்க்கிறேன். இந்த ‘அடிக்‌ஷனிலிருந்து’ மீளவாவது பாலகுமாரனின் புத்தகங்களைப் பரவலாகக் கொண்டு சேர்க்கும் கடமை என்னைப் போன்ற வாசகர்களுக்கு இருக்கிறதென நினைக்கிறேன். உண்மைதானே இனிய ஸ்நேகிதங்களே..?