ந.வினோத் குமார்
விமர்சனக்
கலையில் மிகவும் கடினமானது, கவிதைத் தொகுப்பை விமர்சனம் செய்வது. உரைநடை, வாசகர்களின் மனங்களில் பெருமளவு ஒரே மாதிரியான அதிர்வலைகளை
ஏற்படுத்திவிடக் கூடிய சாத்தியங்களைக் கொண்டது. ஆனால் கவிதை அப்படியல்ல. ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு வகையான சிலிர்ப்புகளை ஏற்றி வைக்கும் குணம் கொண்டது. எழுதியவனே எடுத்துப் படித்தாலும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான அர்த்தங்களைக் கற்றுக் கொடுக்கும் திறன் படைத்தது.
எந்த
ஒரு கவிதைக்குமான 'ஆன்மா' இது என்றாலும், காதல்
கவிதைகளுக்குத் தனிச் சிறப்பு இருக்கிறது. பொதுவாக, காதல் கவிதைகள் கிறக்கம் தருபவை என்ற ஒரு பார்வை
உண்டு. அந்தக் கவிதையை முதன்முறையாக வாசிக்கும்போது ஒரு கிறக்கம் ஏற்படலாம்.
ஆனால் அதே கவிதையை வேறு
வேறு சூழல்களில் வாசிக்கும்போது ஒரு சிலருக்கு அதே
கிறக்கம் இருக்கலாம். சிலருக்குச் சிரிப்பை வரவைக்கலாம். சிலர் அழலாம். சிலருக்கு வாழ்க்கை கசக்கலாம். ஆனாலும், ரொம்ப வருடங்களுக்குப் பிறகு பார்க்க நேர்கிற நம் முதல் காதலர்
மீது நமக்கு ஏற்படும் சொல்லவொனாத தவிப்பு நமக்குள் நிகழ்த்தும் மாயம் இருக்கிறதல்லவா... அப்படியான ஒரு தவிப்பை அனுபவிக்கச்
செய்பவை காதல் கவிதைகள்!
அப்படியான
தவிப்பைக் கடந்த சில நாட்களாக அனுபவிக்க
நேர்ந்தது, மனுஷ்ய புத்திரனின் 'சிநேகிதியின் காதலர்கள்' வழியாக நிகழ்ந்தது. வெறும் 'காதலர்கள்' அல்லது வேறு ஏதோ 'காதலர்கள்'
என்று தலைப்பிட்டிருந்தால் நடந்து முடிந்த சென்னைப் புத்தகக் காட்சியில் இந்தப் புத்தகத்தை வாங்காமல் விட்டிருப்பேன். ஆனால் 'சிநேகிதியின்' காதலர்கள் என்பதால் ஒரு பரிதவிப்புடன் என்
கரங்கள் இதைப் பற்றின.
மனுஷ்ய
புத்திரனின் கவிதைகள் எதார்த்தங்களைச் சுமப்பவை. அந்த எதார்த்தங்களை ஒளிவு
மறைவின்றி எடுத்து வைப்பதில் ஒரு அழகு இருக்கிறது.
அந்தக் கவிதையை மனதுக்குள் காட்சியாக நிகழ்த்திப் பார்ப்பதில் மனதுக்கு ஒரு துள்ளல். உதாரணத்துக்கு
இந்தக் கவிதையைப் பாருங்கள். ஆம் பாருங்கள் என்றுதான்
சொல்கிறேன்...
பெண்மைக்குத்தான்
எத்தனை நடனங்கள்
நீராடிச்
சென்று நெடுநேரமாகியும்
குளியலறையில்
நடனமாடுகிறது
உன்
சோப்பின் வாசனை
இரவு
11.59 மணிக்கு எழுதப்பட்ட இந்தக் கவிதையை, உச்சி வேளை 12.30 மணிக்குப் படித்தாலும் உங்கள் கண்ணில் உங்கள் காதலி, குளியலறையிலிருந்து நளினமாக வெளிவரும் காட்சி உங்கள் மேனியைச் சிலிர்க்க வைக்கிறதல்லவா..? (ஆணால் எழுதப்பட்டதால் காதலி... பெண்கள் உங்கள் காதலரை நினைத்துக்கொள்ளவும்)
போதும்,
அந்தக் குளியலறைக் கதவைக் கொஞ்சம் அடைத்துவிட்டு இந்தக் கவிதையை வாசியுங்கள். ஒரு காதல் எப்போது
கனக்கும், எப்போது இலகுவாகும்?
நான்
ஒரு அன்பை
ஒரு
காதலை
கொண்டு
வரும்போது
அது
ஒரு ரோஜா தோட்டமாக இருக்கிறது
என்
கையில் அதை வைத்திருக்க முடியாதபடி
அப்படி
கனத்துவிடுகிறது
யார்
கையிலோ அதைத் தந்த மறுகணம்
ஒரு
உதிர்ந்த மலர்போல
அத்தனை
சிறியதாக
அத்தனை
தனிமையுடையதாக
அது
எப்படி மாறிவிடுகிறது?
'மருந்து'
என்ற தலைப்பில் ஒரு கவிதை. இந்தத்
தொகுப்பில் எனக்குப் பிடித்த மிகச் சில கவிதைகளில் ஒன்று. ஏனென்றால்,
நான் நலமற்றுப் போன ஒரு நாளில்தான்
என் காதலி என்னை விட்டுப் பிரிந்தாள்.
நான்
நலமற்றுப் போகையில்
உன்
அன்பை
ஒரு
துளி கூடுதலாக வேண்டுவேன்
நான்
உன் அன்பற்றிருக்கும் காலங்களில்
நலமற்றுப்
போய்
உன்னை
மீட்டுக்கொள்வேன்
சில
கவிதைகளில் குறும்பு கொப்பளிக்கிறது. வாசகரை 'பிளேபாய்' அல்லது 'பிளேகேர்ள்' ஆக்கிவிடுகிறது. அப்படியான ஒரு கவிதை:
தூக்கத்தில்
எழுப்பி
உன்
கலைந்த குரல் கேட்க
எனக்கு
மிகவும் பிடிக்கும்
உன்
குரல் அப்போது
ஆடையில்லாமல்
பிறந்தமேனியாய்
இருக்கும்
எத்தனை
பேர் உங்கள் விருப்பத்துக்குரியவர் உங்களுடன் தொலைபேசும்போது அவரை உங்கள் மனதில்
நிர்வாணப்படுத்தியிருக்கிறீர்கள்?
சில
கவிதைகளில், ஒற்றை வரி மட்டும் காமத்தை
அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. தூக்கிவாரிப் போடுகின்றன. 'உன் யோனியின் மீன்
வாசனை' என்ற வரியைப் படித்துவிட்டு,
மூன்று நாட்களாக கனவில் மீன் பிடித்திருக்கிறேன். அதற்கு அடுத்த
பக்கத்திலேயே இன்னொரு கவிதை வரி இப்படி மீட்டுகிறது:
உன்
யோனியை
என்னிரு
கைகளால் ஏந்திக்கொள்கையில்
நீ
ஒரு பறவையின்
இறகைக்
கோதுவதுபோல
கிறங்கிய
கண்களுடன் என் தலையை வருடுகிறாய்...
காதலின்
மகத்துவம் இது. இல்லையென்றால் யோனியை
எப்படிச் சிறகாகப் பார்க்க முடியும்?
சில
இடங்களில் கவிஞர், சார்லி சாப்ளின் ஆகிவிடுகிறார். உதாரணத்துக்கு இது:
எதை
எதையோ நினைக்கிறேன்
இந்த
இரவுகள் உறங்க அல்ல
நான்
கண்ணீர் சிந்துவதை
யாரும்
காணக்கூடாது
இன்னொரு
இடத்தில் அவர், வரலாற்றாசிரியராகி விடுகிறார்.
புஷ்கின்
எழுதிய எந்தக் கவிதையிலும் சிறந்தது
ஒரு
பெண்ணிற்கான துப்பாக்கிச் சண்டையில்
அவன்
கொல்லப்பட்டான் என்பது
இதன்படி
பார்த்தால், தன் காதை வெட்டிக்
கொடுத்த தருணம்தான், வான்காவின் மிகச் சிறந்த ஓவியம் என்ற ஒப்பீட்டுக்கு வந்துவிட
முடியும்.
அவரே
வேறொரு இடத்தில் சித்தர் ஆகி விடுகிறார். 'உடல்
ஒரு கூடு' என்பார்கள் சித்தர்கள். கவிஞரோ, தனது இருப்பை ஒரு
வீட்டுக்கு இணையாக உவமப்படுத்துகிறார்.
செளகர்யங்கள்
குறைவெனினும்
நீ
பயமின்றி புழங்கும்
அவ்வளவு
பழகிய வீடு
போலிருக்கிறேன்
என்று
அவர் எழுதுகையில், நமது இருத்தலும் ஒரு
வீடாகிவிடுகிறது. தங்களின் வாழ்க்கையிலிருந்து தங்களின் காதலர் விலகிப்போகும்போது, சிலர் தன் வீட்டில் ஒட்டடை
படிந்திருப்பதாக உணர்கிறார்கள். சிலருக்கு யாரோ உள்ளே வந்தவுடன்,
துடைத்து வைத்தாற் போன்று துலக்கமாகிவிடுகிறது.
அப்புறம்...
மிகவும் முக்கியமான ஒரு 'கலாச்சார அல்லது
சீரழிவுப் போக்கு' குறித்துக் கவலைப்படுகிறார் மனுஷ்.
ஒரு
அன்பின் தருணத்தை
ஒரு
செல்ஃபியாக்குகிறீர்கள்
ஒரு
நேசத்தின் வாக்கியத்தை
ஸ்க்ரீன்
ஷாட் ஆக்குகிறீர்கள்
ஒரு
காதலின் உரையாடலை
ஒலிப்பதிவு
செய்துகொள்கிறீர்கள்
எல்லாமே
ஆவணங்களாக மாறும் எனில்
எதுதான்
நம் இதயத்தில் தங்கும்?
இந்த
அன்பு இல்லாமல்போகும்போது
இதையெல்லாம்
நீங்கள்
ஒரு சாட்சியமாக்கக்கூடும்
அந்த
அன்பு இல்லாமல் போய்விட்டது
என்பதைத்
தவிர
வேறு
எதை நீங்கள் நிரூபிக்க முடியும்?
காதலை,
காதலினால் முகிழும் கூடலை 'ஸ்கிரீன்ஷாட்' ஆக்குகிற காலத்தில் எந்தக் காதல்தான் புனிதமானதாக இருந்துவிடக் கூடும்?
சந்தேகமே
இல்லாமல் இது 'பாய் பெஸ்டி'க்களின் காலம். நட்பாகவும் இல்லாது, காதலாகவும் இல்லாது... ஆனால் சிநேகிதியின் காதலன் முன்பு அவள் தோள் மீது
கைபோடுகிற பழக்கத்தை எப்படிப் புரிந்துகொள்வது? இந்தச் சிக்கல்தான் பல காதல்கள் சிதறக்
காரணமாக இருக்கின்றன. அந்தக் காதலர்களைக் கதறவிடுவதுதான் இந்த 'பெஸ்டி'களின் வேலை. சிநேகிதியின் காதலர்களை மட்டம்தட்டுவதில் அவர்களுக்கு ஒரு அல்பத்தனமான சந்தோஷம்.
சிநேகிதிகளின்
காதலர்கள்
வாழ்க்கையில்
ஒரு புத்தகம்கூடப் படித்திராதவர்கள் என்பது
என்
சிநேகிதிகளுக்கு
ஏன்
ஒரு புகாராகவே இல்லை
என்று
வருந்தும் அதே நேரத்தில்,
என்
சிநேகிதியின் காதலனுக்குத் தெரியாத
என்
சிநேகிதிக்குப் பிடித்த ஒன்றை
அவனிடம்
கூறும்போது
அவன்
அசட்டுத்தனமாய்ப் புன்னகைப்பது
எனக்கு
மிகவும் உற்சாகமாக இருக்கிறது
என்று
எழுதுகிறார் கவிஞர். சிநேகிதி என்பதால் உரிமை எடுத்துக்கொள்ளவும் முடியாது. ஆனால் அவள் அணுக்கமும் ஆதரவும்
வேண்டும். அவளைப் படுக்கைக்கு அழைக்க முடியாது. ஆனால் அதற்காக அவளுடன் 'ஏ' ஜோக்குகளைப் பகிராமலும்
இல்லை. அவள் காதல் 'பிரேக்
அப்' ஆகும்போது சந்தோஷமடையவும் முடிகிறது. ஆனால் 'நீ ஏன் என்னைக்
காதலிக்கலை/காதலிக்கக் கூடாது?' என்று கேட்கும் துணிச்சலும் இல்லை. 'பிரேக் அப்' ஆனவுடன், தன்
நண்பன் மேல் காதல்கொள்வதற்கு வாழ்க்கை
சினிமா இல்லை அல்லவா..?
ஒரு
நல்ல கவிதை என்ன செய்துவிட முடியும்?
அதைப் போன்ற இன்னொரு கவிதையைப் படைக்கத் தூண்டும். இந்தத் தொகுப்பிலிருக்கும் சில கவிதைகள், அதைப்
போன்ற கவிதைகளை அல்ல... மாறாக, அந்தக் கவிஞனாகவே மாறி வாழ்ந்து பார்க்க,
ஆசை கொள்ள வைக்கிறது.
அன்பின்
காதலன்களே... அடுத்த முறை நாங்கள் உங்கள்
காதலிகளைப் பார்க்க நேர்ந்தால் ஒரு ஐந்து நிமிடம்
எங்களைத் தனிமையில்விடுங்கள். ஏனென்றால், கட்டங்கடைசியாக அவர்களிடம் நாங்கள் ஒன்றைச் சொல்ல வேண்டும். அதையும் கவிஞரே எழுதிக்கொடுத்திருக்கிறார்.
இன்றாவது
என் காதலை உன்னிடம்
சொல்லிவிடலாம்
என்றுதான் விரும்பினேன்
உன்
காதலனை அருகில் வைத்துக்கொண்டு
எப்படிச்
சொல்வது என்றுதான்
மிகவும்
கூச்சமாக இருக்கிறது.