Monday, June 6, 2016

பசுமை சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 2016, ஏப்ரல் 9.

“1972- ம் ஆண்டு முதன்முறையாகச் சென்னைக்கு வந்தேன். அதற்குப் பிறகு அவ்வப்போது இந்தியாவுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறேன். 90-களில் உலகமய மாக்கலுக்குப் பிறகு பொருளாதார ரீதியாக இந்தியா பெரும் மாற்றத்துக்கு உள்ளாகத் தொடங்கியிருந்தது. இன்றைக்கு இந்தியா சந்திக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எல்லாமே, அதற்குப் பிறகு உருவானவைதான். இங்கே நாம் சந்திக்கும் பிரச்சினைகள் மற்ற நாடுகளிலும் இருக்கவே செய்கின்றன. ஆனால், பிரச்சினைகளை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதில்தான் மற்ற நாடுகளிடமிருந்து வேறுபடுகிறோம்!” என்கிறார் மீரா சுப்பிரமணியன்.

பூர்வீகம் தமிழ்நாடு, வசிப்பது அமெரிக்காவில். பத்திரிகையாளர் - ‘நியூயார்க் டைம்ஸ்', ‘நேச்சர்' உள்ளிட்ட சர்வதேச இதழ்களில் சுற்றுச்சூழல் தொடர்பாக எழுதிவருபவர். அந்தக் கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை தொகுக்கப்பட்டு ‘எலிமென்டல் இந்தியா' எனும் தலைப்பில் சமீபத்தில் புத்தகமாக வெளியாகியுள்ளது. இது இவருடைய முதல் புத்தகம்.

இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதற்காகச் சமீபத்தில் சென்னை வந்திருந்த மீராவை சந்தித்துப் பேசியதிலிருந்து...
 
உங்கள் புத்தகத்தில் கேரளாவும் சிக்கிம் மாநிலமும் இயற்கை விவசாயம் நோக்கிப் பயணிக்கின்றன என்று எழுதியிருந்தீர்கள். சமீபத்தில் 'முற்றிலும் இயற்கை விவசாய மாநிலம்' ஆக சிக்கிம் அறிவித்துக்கொண்டிருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அந்தத் தகவலைக் கேட்டு ரொம்பவே உற்சாகமாக உணர்ந்தேன். இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு இது பெரும் ஊக்கம் அளிக்கும். இதனால், மேலும் பலர் இயற்கை விவசாயத்தை நோக்கி வருவார்கள். இயற்கை விவசாயம் மூலம் அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியும் என்பதும் நிரூபணமாகியுள்ளது.

ஆனால், ‘இந்தப் பொருள் இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்டதுதானா' என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும் வெளிப்படையான ‘சர்டிஃபிகேஷன்' (சான்றிதழ் நடைமுறைகள்) எப்போது வரும் என்பது பெரிய கேள்வி. அது பற்றிய விவாதங்கள்கூட இங்கு நடப்பதில்லை என்பதுதான் வருத்தம்.
 
நீங்கள் கலந்துரையாடிய பலரும் இயற்கை விவசாயம் அதிக விளைச்சலைத் தருமா என்பது குறித்துச் சந்தேகத்துடனேயே எதிர்காலத்தை நோக்கியிருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இயற்கை விவசாயத்தைப் பல விவசாயிகள் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இன்னும் சிலர் ‘இயற்கை விவசாயத்தை வேறு எந்த வகைகளில் கொண்டுசெல்லலாம்' எனப் பரிசோதனைகளையும் செய்துவருகிறார்கள். பிரச்சினை என்னவென்றால், இயற்கை விவசாயத்தில் உடனடியாகப் பலனை எதிர்பார்க்க முடியாது. ரசாயனத்துக்குப் பழகிய மண், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும். அதன் பிறகுதான் இயற்கை விவசாயத்தின் பலன் தெரியவரும். எனினும், இன்று விவசாயம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு இயற்கை விவசாயம் ஒரு பகுதி விடை மட்டுமே. அதுவே முழுமையான விடை அல்ல!
 

காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணங்களுள் ஒன்றான பாரம்பரிய அடுப்புகள் குறித்து எழுதியிருக்கிறீர்கள். இந்த அடுப்புகளுக்கு மாற்றாக 'உன்னத் சூலா அபியான்' என்ற பெயரில் மரபுசாரா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் புகையைக் கட்டுப்படுத்தும் புதிய அடுப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

நான் பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு முன்பு சில காலம் அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிவந்தேன். பாரம்பரிய அடுப்புகளுக்கு மாற்றான அடுப்புகளை உருவாக்குவதுதான் அங்கே முக்கியப் பணி. அங்கே நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம், மாசுபாட்டைக் குறைக்க வழி செய்தால், மக்கள் ருசியை இழக்க வேண்டியிருக்கும். பாரம்பரிய அடுப்பில் செய்வது போன்ற ருசியும் வேண்டும், வெளியாகும் புகையின் அளவும் குறைய வேண்டும் என்றால், அதற்கு மின்சாரம், எரிவாயு போன்ற விலை உயர்ந்த ஆற்றல் தேவைப்படும். அதோடு உணவு செய்யும் நேரம் குறைய வேண்டும். இப்படிப் பல முனைகளில் இருந்து பிரச்சினைகள் தோன்றிக்கொண்டே யிருக்கின்றன. இப்படி எல்லாப் பிரச்சினைகளையும் அணுகும் அடுப்பு இன்றுவரை உருவாக்கப்படவில்லை.

ஆக, இன்று இருக்கும் மாற்று அடுப்புகள் சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் முழு உத்தரவாதம் அளிப்பதில்லை. இந்த மாற்று அடுப்புகள் எல்லாம் தீர்வை நோக்கிச் செல்லும் பயணம்தான். அவையே இறுதி இலக்கு அல்ல.
 
சென்ற ஆண்டு ‘மல்டி டோஸ் டைக்ளோஃபினாக்' இந்தியாவில் தடை செய்யப்பட்டது. ஆனால், இனி அது ‘சிங்கிள் டோஸ் குப்பியாக 3 மில்லி லிட்டர்' மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், உங்கள் புத்தகத்தின் ஓரிடத்தில் 0.0004 மைக்ரோகிராம் டைக்ளோஃபினாக்கூட பாறுகளை (பிணந்தின்னிக் கழுகு) கொல்லும் ஆபத்து உள்ளவை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த மருந்தை முற்றிலும் ஒழிப்பது சாத்தியமில்லையா?

மத்திய அரசு விதித்த தடை வரவேற்கத்தக்கது. ஆனால், அதற்கு எதிராக இப்போது மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். கால்நடைகளுக்கு 'டைக்ளோஃபினாக்' மருந்து பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டாலும், அது மனிதப் பயன்பாட்டுக்காகத் தொடர்ந்து விற்பனை செய்யப்படத்தான் போகிறது.

பாறுகள் இறந்த உயிரினங்களின் சடலங்களையே உணவாகக் கொள்ளக்கூடியவை. பார்ஸி மக்கள், இறந்தவர்களின் சடலங்களைப் புதைக்காமலும் எரிக்காமலும் பாறுகளுக்கு ஒப்படைத்துவிடுவார்கள். அவை அந்தச் சடலங்களைத் தின்கின்றன.

கால்நடைகளுக்கு 'டைக்ளோஃபினாக்' பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதால், இறந்த கால்நடைகளை உணவாகக் கொண்டு, பாறுகள் இறந்துபோகாமல் இருக்கலாம். ஆனால், பார்ஸிக்களின் வழக்கப்படி சடலங்களைப் பாறுகள் தின்னும்போது, அவை இறப்பதற்கான வாய்ப்பு அதிகம். காரணம், இறப்பதற்கு முன்பு ‘டைக்ளோஃபினாக்'கைக் கொண்ட வலிநிவாரணிகளை ஒருவர் எடுத்துக்கொண்டிருக்கலாம். அவருடைய சடலத்தைத் தின்னும் பாறுகளுக்கு, அந்த ‘டைக்ளோஃபினாக்' பரவி அவை உயிரிழக்க நேரிடலாம்.

இப்படிப் பல பிரச்சினைகள் இதில் அடங்கியிருக்கின்றன. அவற்றை எப்படிக் கையாளப் போகிறோம்?
 
உங்களுடைய புத்தகத்தில் ‘இந்தியா, சூழலியல் விடுதலை அடைய வேண்டும்' என்று எழுதியிருக்கிறீர்கள். நாடு இன்றிருக்கும் நிலையில் அது சாத்தியம்தானா?

காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு 200 ஆண்டுகள் போராடியிருக்கிறோம். அதன் மூலம் எப்படிப் போராட வேண்டும் என்ற பயிற்சி நமக்குக் கிடைத்திருக்கிறது. அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு, மீண்டும் போராட வேண்டியதுதான். பசுமை சுதந்திரம் நம் காலத்தின் கட்டாயம்! 

 

பெட்டிச் செய்தி:

 

 ‘எலிமென்டல் இந்தியா’ என்ன சொல்கிறது?


இயற்கை விவசாயம், தண்ணீர் பிரச்சினை, காற்று மாசுபாடு, பாறுகளின் (பிணந்தின்னிக் கழுகு) அழிவு மற்றும் பெண் குழந்தைகளின் பிரச்சினைகள் என ஐந்து தலைப்புகளில் இவருடைய கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் எனப் பஞ்ச பூதங்களால் ஆனது இந்த உலகம். மற்ற நாடுகள் இதை ஏற்றுக்கொள்கின்றனவோ இல்லையோ, இந்தியா இதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. எனவே, ஒவ்வொரு பூதத்துக்கும் பொருத்தமாக ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினையை எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கி ஆய்வு செய்திருக்கிறார் மீரா சுப்ரமணியன்.

சுமார் 2,500 ஆண்டுகளாகப் பதிவு செய்யப்பட்ட இந்திய வரலாற்றில், இதுவரை 90 முறை பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது; மண்ணில் இருக்கும் ஆக்டினோபாக்டீரியா, காசநோய்க்கான முதல் ‘ஆன்டிபயாடிக்' ஆக இருந்தது; ‘பிரஷர் குக்கர்' அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் முதல் பத்து லட்சம் குக்கர்களை இந்தியாவில் விற்பதற்கே 15 வருடங்கள் ஆனது என்பன போன்ற வரலாற்று, மருத்துவ, கலாசாரத் தகவல்கள் புத்தகமெங்கும் நிறைந்திருக்கின்றன.

புத்தகத்தின் ஓரிடத்தில் மீரா இப்படி எழுதுகிறார்: “இந்தியா மிகவும் இரைச்சலான தேசமாக மாறிவருகிறது. ஆனால் அதன் காடுகளை அமைதியாக நிறைத்துவருகிறது”. அந்தக் கூற்று முற்றிலும் உண்மைதான். 

நன்றி: தி இந்து (உயிர் மூச்சு)

Saturday, May 14, 2016

DR. B.R. AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - II

ராயின் கட்டுரை வாங்கினால் அம்பேத்கர் இலவசமா?


 ந. வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 2016, ஏப்ரல் 17

 ஒரு சின்னத் தேடல். கூகுளில் ஆங்கிலத்தில் 'அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்' (Annihilation of Caste) என்று தேடிப் பாருங்கள். அம்பேத்கர் எழுதிய புத்தகத்தின் அட்டைப்படம் வரும் என்று நினைத்தால் தவறு. மாறாக, அருந்ததி ராய் எழுதிய அறிமுகத்துடன் 'நவயானா' பதிப்பகம் வெளியிட்ட 'அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்: தி அன்னோடேடட் க்ரிட்டிக்கல் எடிஷன்' புத்தகம்தான் வரும். அமேசான் முதற்கொண்டு அனைத்து இணைய விற்பனை தளங்களிலும் இந்தப் புத்தகம் கிடைக்கும் என்று கூகுள் அறிவிக்கும்.

இந்தப் புத்தகம் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அம்பேத்கர் எழுதிய புத்தகத்துக்கு அருந்ததி ராய் 'தி டாக்டர் அண்ட் தி செய்ன்ட்' என்று ஒரு முன்னுரை எழுதியுள்ளார். 'பேப்பர்பேக்' (மெல்லிய அட்டை) வடிவத்தில் 415 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் சுமார் 180 பக்கங்களுக்கு அருந்ததி ராயின் முன்னுரையே விரிகிறது. அம்பேத்கரின் அந்தப் புத்தகம் முதன்முதலில் வெளியானபோது சற்றேறக்குறைய 70 பக்கங்களுக்குத்தான் இருந்தது. அப்போது அதன் விலை வெறும் எட்டு அணா.

இன்று வரையிலும் அம்பேத்கரின் எழுத்துகளை வெளியிடும் பதிப்பகங்கள், தலித் எழுத்துகளை வெளியிடும் பதிப்பகங்கள் போன்றவை அந்தப் புத்தகத்தை எளியவர்களும் வாங்கும் வகையில் மலிவு விலையில் விற்பனை செய்துவருகின்றன. ஆனால், 'நவயானா'வின் புத்தகம் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டபோது அதன் விலை 525 ரூபாய்.

'ஹேட்ரட் இன் தி பெல்லி' எனும் புத்தகம் 'நவயானா'வின் 'அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்' புத்தகத்துக்குப் பின் உள்ள அரசியலை ஆராய்கிறது. 'தி ஷேர்டு மிரர்' பதிப்பகம் கடந்த ஆண்டு இறுதியில் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 


அம்பேத்கர் அந்தப் புத்தகத்தில் காந்தியைப் பற்றிப் பின் இணைப்பில் மட்டும் குறிப்பிடுகிறார். ஆனால் அருந்ததி ராயோ, இந்த முன்னுரையில் அம்பேத்கரையும் காந்தியையும் ஒப்பிட்டு எழுதுகிறார் என்று இப்புத்தகம் குறிப்பிடுகிறது. அருந்ததி ராய், தனது சித்தாந்தம் சார்ந்து காந்தியை விமர்சிப்பதற்கு அம்பேத்கரின் இந்நூலைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் விமர்சிக்கிறது இந்நூல்.
 
குடி அரசில் வெளியான அம்பேத்கரின் எழுத்து

1936-ம் ஆண்டு இந்து மத சீர்திருத்தக் குழு என்று கூறிக்கொண்ட 'ஜாத் பட் தோடக் மண்டல்' என்ற அமைப்பின் மாநாட்டில் இந்து சமூக அமைப்பில் நிலவும் சாதியத்தின் கொடுமை பற்றிப் பேச அம்பேத்கர் அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக அவர் உரை ஒன்றைத் தயாரித்திருந்தார். ஆனால் அந்த மாநாட்டுக்கு அவர் அழைக்கப்பட்டதைப் பலரும் எதிர்த்தனர். அதனால் அம்பேத்கர் தன்னுடைய உரையை வழங்க முடியாமல் போனது. பின்னர், அதனை ஒரு புத்தகமாக்கி விநியோகம் செய்தார்.

அந்தப் புத்தகத்தின் முதல் மொழி பெயர்ப்பு, தமிழில் பெரியார் நடத்திய 'குடிஅரசு' இதழில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது!

1936-ம் ஆண்டிலிருந்து இன்று வரையிலும் பல பதிப்புகள் கண்டது அந்த நூல். பல கோடிக்கணக்கானவர்களிடையே 'சாதி ஒழிப்பு' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய புத்தகம் இது. இந்நிலையில்தான் 'நவயானா' அந்தப் புத்தகத்தை மீண்டும் பதிப்பித்தது. அம்பேத்கரின் மூலப் புத்தகத்துக்கு, அடிக்குறிப்புகள் கொடுத்து, அருந்ததி ராயின் முன்னுரையையும் கொடுத்து அந்தப் புத்தகத்தை ‘நவயானா’ பதிப்பித்தது. அம்பேத்கரையும் காந்தியையும் ஒப்பிட்டு எழுதியிருந்த அருந்ததி ராயின் முன்னுரை பல்வேறு தரப்பு மக்களிடையே கண்டனத்துக்கு உள்ளாகியது. அதைத் தொடர்ந்து எழுந்த விவாதங்கள், முகநூல் பதிவுகள், பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள் ஆகியவற்றில் முக்கியமான சில படைப்புகளைத் தேர்வு செய்து தொகுக்கப்பட்டு 'ஹேட்ரட் இன் தி பெல்லி' என உருவாகியுள்ளது. தலித் அறிவியக்க ஆளுமைகள் இது குறித்து அருந்ததி ராயிடம் எழுப்பிய கேள்விகளுக்கு ராய் கொடுத்த பதிலும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
 
அருந்ததி ராய்க்கு எதிர்ப்பு

'ஹேட்ரட் இன் தி பெல்லி' எனும் இந்தப் புத்தகத்துக்கான தலைப்பு, ஜுபாகா சுபத்ரா எனும் தெலுங்குக் கவிஞர் 'நவயானா'வின் புத்தகத்துக்கு எதிராக நடைபெற்ற விவாதம் ஒன்றில் பயன்படுத்திய 'கடுப்புலோ கசி' எனும் வார்த்தைகளின் ஆங்கில வடிவமாகும். தமிழில் அதனை 'வயிற்றெரிச்சல்' என்று சொல்லலாம்.

'உங்களுக்கு இன்னும் அறிவு போதாது. நாங்கள் எடுத்துச் சொல்கிறோம்' என்கிற ரீதியில், அம்பேத்கரின் புத்தகத்துக்கு அறிமுகம் கொடுப்பது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று வாதிடுகிறது இந்தப் புத்தகம். 'நவயானா'வின் இந்தப் புத்தகம் வெளியான சில மாதங்களில் அமெரிக்காவின் கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் பேசுவதற்கு அருந்ததி ராய்க்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அங்கு, 'நான் காந்தியைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். ஆனால், அது எங்கே மக்களிடம் எதிர்ப்பைச் சந்திக்குமோ என்று எண்ணியதால், அதைத் தனிப் புத்தகமாக வெளியிட வில்லை. எனவே, அதனை அம்பேத்கரின் புத்தகத்தில் முன்னுரையாக இணைத்துவிட்டேன்' என்று வெளிப்படை யாகக் கூறிய தகவலையும் இந்தப் புத்தகம் பதிவு செய்கிறது.

காந்தியைப் பற்றிய ராயின் கட்டுரையை வாங்கினால் அம்பேத்கர் இலவசமா? என்ற கேள்வியை இப்புத்தகம் எழுப்புகிறது.
 
அருந்ததி ராயின் முன்னுரைக்கு எதிராக ‘ஹேட்ரட் இன் தி பெல்லி' முன் வைக்கும் சில வாதங்கள்...

* அம்பேத்கரின் ‘சாதி ஒழிப்பு' எனும் எண்ணத்தை, கற்பனாவாத யோசனை என்கிறார் அருந்ததி ராய். இந்தியாவில் சாதி ஒழிப்பு என்ற செயல்திட்டம் சாத்தியமானது அல்ல என்கிறார்.

* இந்தப் புத்தகத்துக்கு அருந்ததி ராய் கொடுத்த முன்னுரையின் தலைப்பு ‘தி டாக்டர் அண்ட் தி செய்ன்ட்'. அதாவது ‘மருத்துவரும் துறவியும்' என்பதாகும். ‘துறவி' என்கிற வார்த்தையை அம்பேத்கரிடமிருந்துதான் கடன் வாங்குகிறார் அருந்ததி ராய். ஆனால் அம்பேத்கர், காந்தியை வெறும் துறவி என்று மட்டும் சொல்லவில்லை. ‘அரசியல் துறவி' என்கிறார். ‘அரசியல்' எனும் சொல்லை வெட்டிவிட்டு ‘துறவி' என்ற சொல்லை மட்டும் ராய் பயன்படுத்தியது ஏன் என்று இப்புத்தகம் கேள்வி கேட்கிறது. அம்பேத்கர் எதிர்மறையாக காந்தியை ‘அரசியல் துறவி’ என்று குறிப்பிட்டதை வெறுமனே ‘துறவி’ என்று குறிப்பிட்டதன் மூலம் வேறு அர்த்தத்தை, அருந்ததி ராய் தந்துவிட்டதாக இப்புத்தகம் விமர்சிக்கிறது.

* அம்பேத்கர் தனது இறுதிக் காலத்தில் ஊரைச் சுற்றி கடன் வைத்துவிட்டு இறந்தார் என்று இந்த முன்னுரையில் குறிப்பிடுகிறார் அருந்ததி ராய். அது உண்மையல்ல. நிலங்கள், கட்டிடங்கள் எனப் பல சொத்துகள் அம்பேத்கரிடம் இருந்தன. அவற்றைப் பல அறக்கட்டளைகளுக்குத் தன்னுடைய பெயரைக் குறிப்பிடாமல் வழங்கினார் என்பதே உண்மை என்று இப்புத்தகம் குறிப்பிடுகிறது. 

நன்றி: தி இந்து

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் இரண்டாவது பதிவு இது)

Friday, May 6, 2016

அறிவியலின் ஷேக்ஸ்பியர்!

ந.வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 6 மே, 2016

ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் மறைந்த 400-வது ஆண்டு இது. அதனையொட்டி உலகம் முழுக்க அவரைப் போற்றும் விதத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அறிவியல் துறையில் ஒரு ஷேக்ஸ்பியர் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் வேறு யாருமல்ல. அலெக்சாண்டர் வான் ஹும்போல்ட்! அவர் மறைந்த 157-வது ஆண்டு இது! 


அன்றைய ப்ருஷ்ய ராஜ்ஜியத்தில் (இன்று அது ஜெர்மனி மற்றும் போலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஒரு பகுதி) 1769-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி பிறந்த அவர், 1859-ம் ஆண்டு மே 6-ம் தேதி மறைந்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர் செய்த சாதனைகள்தான், இன்று நாம் இயற்கை, அறிவியல், பயணம் உள்ளிட்டவற்றை எப்படிப் பார்க்கிறோம் என்கிற புரிதலை உருவாக்கியவை.


‘அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?' என்ற கேள்விக்குப் பதிலாக 'அவர் என்ன செய்யவில்லை?' என்ற கேள்வி மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், அவர் வாழ்ந்த காலத்தில் அவரின் கைபடாத துறைகளே இல்லை எனலாம். வானியல், புவியியல், சூழலியல், விலங்கியல், தாவரவியல், நீரியல், சுரங்க ஆய்வுகள் என அவர் ஆராயாத துறைகளே இல்லை. அவரின் ஆய்வுகள் சர்வதேச அளவில் புகழடையச் செய்தன.


அவர் செய்த ஆய்வுகளைப் பாராட்டி உலகில் பல விஷயங்களுக்கு அவரது பெயர் சூட்டப் பட்டுள்ளது. மெக்சிகோவில் உள்ள சியர்ரா ஹும்போல்ட் மற்றும் வெனிசுவேலாவில் உள்ள பிகோ ஹும்போல்ட் ஆகிய பூங்காக்கள், அர்ஜென்டினாவில் உள்ள ஒரு நகரம், பிரேஸில் நாட்டில் உள்ள ஒரு நதி, கிரீன்லாந்து, சீனா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து மற்றும் அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் உள்ள மலைத் தொடர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தாவரங்கள், 100-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் ஆகியவை அவரின் பெயர் தாங்கியுள்ளன.


இந்தக் காரணங்களால் ‘மாவீரன் நெப்போலியனுக்கு அடுத்து உலகில் மிகவும் பிரபலமான மனிதர்' என்று தான் வாழ்ந்த காலத்திலேயே புகழ்பெற்றவர் வான் ஹும்போல்ட்.


அவரின் நினைவு தினமான இன்று, அவரைப் பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள ‘தி இன்வென்ஷன் ஆஃப் நேச்சர்' எனும் வாழ்க்கைச் சரிதப் புத்தகத்தை நாம் அறிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். சமீபத்தில் வெளியான இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஆண்ட்ரியா வுல்ஃப். இதனை ஹாஷெட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


இன்றைக்கு உள்ளதுபோல போக்குவரத்து வசதிகளோ, அறிவியல் வசதிகளோ, தொலைத்தொடர்பு சாதனங்களோ அன்றைக்கு இல்லாத நிலையில் கப்பல் மூலமாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் சென்று பல ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை இதர நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 28!


சுமார் 5 ஆண்டுகளாக மேற்கொண்ட பயணத்தின் பலனாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் அவர் பெற்ற அனுபவங்களை 'வாயேஜ் டு தி ஈக்விநாக்டிக்கல் ரீஜியன்ஸ் ஆஃப் தி நியு கான்டினென்ட்' எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாகவும், ‘பெர்சனல் நரேட்டிவ்' எனும் தலைப்பில் 7 தொகுதிகளாகவும் வெளியிட்டார்.


வான் ஹும்போல்ட் தன் அறிவியல் கட்டுரைகளுக்காகவும், கண்டுபிடிப்புகளுக்காகவும் எவ்வளவு தூரம் பாராட்டப்பட்டாரோ, அதே அளவுக்கு காலனியாதிக்கத்தின் கொடுமைகள், அடிமைத்தனம், ஒற்றைப் பணப் பயிர் விவசாயம் ஆகியவற்றை எதிர்த்ததற்காகவும் அவர் போற்றப்பட்டார். ‘காலம் ஆக, ஆக முதலீட்டை அதிகரிக்கும் பொருட்கள் விவசாயத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன' என்று உலகுக்குப் புரிய வைத்தார். 
 


‘இந்த உலகத்தில் ஒவ்வொரு உயிரினமும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கின்றன' என்று எழுதிய அவர் கொலம்பஸைப்போல, புதிய கண்டத்தையோ அல்லது நியூட்டனைப் போல புதிய அறிவியல் விதியையோ கண்டுபிடிக்கவில்லைதான். ஆனால் அவர்கள் செய்த சாதனைகளுக்குச் சமமாக, இன்னும் சொல்லப்போனால் அவர்கள் செய்த‌ சாதனைகளைவிட ஒரு படி மேலே சென்று ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார். அது வேறொன்றுமல்ல இந்த உலகத்தையும், இயற்கையையும் நாம் எப்படிப் பார்க்க வேண்டும் என்று நமக்குச் சொல்லிச் சென்ற பாடம்தான்!


‘மனிதனின் ஆன்மாவுக்குப் பழக்கமான ஒரு குரலுடன், இயற்கை ஒவ்வொருவரிடத்திலும் பேசுகிறது' என்று அவர் சொன்னது உண்மை என்பது நீங்கள் இயற்கையை உற்றுப் பார்க்கும்போது புரியும். அதன் முதல்படி, இந்தப் புத்தகத்தை வாசிப்பது! 

நன்றி: தி இந்து (இளமை புதுமை) 

ஹும்போல்ட் படம் உதவி: விக்கிப்பீடியா

Friday, April 22, 2016

இது திருடர் பாதை அல்ல!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 22 ஏப்ரல், 2016

குழந்தைக்கு வாயில்
சொட்டு மருந்து!
வாக்காளருக்குக் கையில்
சொட்டு மருந்து!
இரண்டுமே போலியோ? 

என்ற ஒரு புதுக்கவிதை உண்டு. இந்தியா போன்ற ஒரு ஜனநாயகத்தின் அச்சாணி தேர்தல்தான். அதை வைத்துக்கொண்டு வாரிச் சுருட்டுபவரும் உண்டு. அதில் போட்டியிட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு. வெற்றிபெற்று பலரை வாழ வைத்தவர்களும் உண்டு.

இந்தத் தேர்தல் ஜனநாயகத்தால்தான் இந்தியர்களின் சராசரி வாழ்நாள் 31.4 ஆண்டுகள் என்பதிலிருந்து 67 ஆண்டுகளாக உயர்ந்தது. மக்களின் கல்வி அறிவு 16 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்ந்தது. சுமார் 94 சதவீதப் பெண் குழந்தைகள் பள்ளிக் கல்வியையாவது பெற முடிந்தது.

அப்படிப்பட்ட தேர்தல் இதோ அடுத்த மாதம் 16-ம் தேதி நமக்கு வருகிறது. ஜனநாயகத் திருவிழா என்று கொண்டாடப்படுகிற இந்தத் தேர்தலுக்கு இந்தியாவில் வளமான வரலாறு உண்டு. பண்டைய இந்தியா முதல் தற்போதைய ஃபேஸ்புக் கால இந்தியா வரை, தேர்தலின் தோற்றம், வளர்ச்சி, தேர்தல் ஆணையம் உருவான விதம், அது சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள், எதிர்பார்க்கும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றிப் பேசுகிறது ‘அன் அன்டாக்குமென்டெட் வொண்டர்: தி மேக்கிங் ஆஃப் தி கிரேட் இந்தியன் எலக்ஷன்' எனும் புத்தகம்.

ஏப்ரல் 23-ம் தேதி 'உலகப் புத்தக நாள்' கொண்டாடப்படும் இந்தச் சமயத்தில், இந்தப் புத்தகம் குறித்து அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷிதான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். கடந்த 2014-ம் ஆண்டு ரூபா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

தேர்தல் ஆணையராகவும், தலைமைத் தேர்தல் ஆணையராகவும் 2006-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை இவர் பணியாற்றிய காலம் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. அரசியல் கட்சிகள் வாக்குக்குப் பணம் கொடுக்கும் நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போட்டது, கட்சிகளின் தேர்தல் செலவுகளைக் கண்காணிக்கத் தனிப்பிரிவு அமைத்தது, இதர நாடுகளுக்கு தேர்தல் குறித்த பயிற்சிகளை அளிக்க ‘ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேசப் பயிற்சி நிலையம்' ஏற்படுத்தியது, ‘தேசிய வாக்காளர் தினம்' கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியது என இவரின் சாதனைகள் பல. தன்னுடைய கறாரான நடவடிக்கைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் ஆகியோரிடம் எதிர்ப்புகளைச் சம்பாதித்தவர். 

அப்படிப்பட்ட ஒருவர் இந்தியத் தேர்தல் வரலாறு குறித்து எழுதும்போது அது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகிறது. 


ஐரோப்பா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் மொத்த மக்கள் தொகையைவிட இந்தியாவில் தேர்தலின்போது வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்கிறார். 

கெளடில்யரின் ‘அர்த்தசாஸ்திர'த்திலும், உத்திரமேரூர் கல்வெட்டுகளிலும் ‘குடவோலை' உள்ளிட்ட தேர்தல் முறைகள் பற்றிக் குறிப்புகள் உள்ளதைச் சுட்டிக்காட்டும் அவர், இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த சில ஆண்டுகளிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருப்பதைக் கவனப்படுத்துகிறார். 

கல்வி அறிவில் முதன்மையாக இருக்கும் கேரளத்தில்கூட‌ 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள‌ 140 தொகுதிகளில், 127 தொகுதிகளில் ஆண்களைவிடப் பெண்களின் வாக்குப்பதிவு அதிகமாக இருந்தது. எனினும், அங்கு 7 பெண்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர், என்று அவர் சொல்லும் செய்தியின் மூலம், அரசியலில் இன்னும் பெண்களின் பங்களிப்பு பெருமளவில் இல்லாததை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். 

1951-52-ம் ஆண்டுகளில்தான் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அன்று தொடங்கி இதுவரை 15 பொதுத்தேர்தல்கள், எண்ணற்ற சட்டமன்றத் தேர்தல்கள், இடைத் தேர்தல்கள் என அனைத்துத் தேர்தல்களிலும் கடைக்கோடியில் இருக்கும் வாக்குரிமை பெற்ற எந்த ஒரு மனிதரையும் உள்ளடக்கவே தேர்தல் ஆணையம் முயன்று வருகிறது. உதாரணமாக, கேரளத்தில் சரங்காட்டு தாசன் என்ற ஒருவருக்காக மட்டுமே 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனியாக ஒரு வாக்குச் சாவடி அமைத்து, மூன்று தேர்தல் அலுவலர்கள், இரண்டு போலீஸார் மற்றும் ஒரு ஓட்டுநர் என 6 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

ஆனால் இவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொண்டும் இன்றுவரை நூறு சதவீத வாக்குப்பதிவு என்பது கனவாகவே இருந்து வருகிறது. 

‘ஒரு ஓட்டுதானேப்பா. அதுக்காக இவ்வளவு கஷ்டமா?' என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால், அந்த ஒரு ஓட்டு எப்படியெல்லாம் மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதை கடந்த கால தேர்தல்களிலிருந்து எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர். 

1998-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தது. பதவியில் அமர்ந்து 13 மாதங்களுக்குப் பிறகு பா.ஜ.க. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க., தன்னுடைய ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டியிருந்தது. 1999-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற அந்த வாக்கெடுப்பில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. எதிர்க்கட்சியாலும் மாற்று அரசு அமைக்க முடியவில்லை. எனவே, அடுத்த சில மாதங்களில் மீண்டும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஒரு ஓட்டு மதிப்பு இப்போது புரிந்திருக்குமே? 

1989-ம் ஆண்டுக்கு முன்பு வரை ‘அரசியல் கட்சிகள்' என்கிற பதமே எந்த ஒரு சட்டத்திலும் பயன்படுத்தப்படவில்லை. எல்லாம் இயக்கம், அமைப்பு என்பதாகத்தான் இருந்தது என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அப்படிப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகள், விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறை, தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவரைப் பதவியிலிருந்து நீக்கும் உரிமை, ‘நோட்டா'வின் தேவை, ‘நோட்டா'வைத் தேர்வு செய்யும் வாக்காளரின் ரகசியத்தன்மையைக் காப்பதன் முக்கியத்துவம், ‘பெய்ட் நியூஸ்' மூலம் சீரழியும் அரசியல் மற்றும் ஊடகக் கலாசாரம் என தேர்தல் தொடர்பான அனைத்துப் பக்கங்களையும் ஆழமாக விவாதிக்கிறார் ஆசிரியர். 

இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது, தேர்தல் பாதை திருடர் பாதை அல்ல என்பது உங்களுக்குப் புரிய வரும். 

இந்தியாவில் ஒருவர் 18 வயது அடைந்துவிட்டவர் என்பதற்கான முதல் அத்தாட்சியே வாக்குரிமை பெறுவதுதான். ஆனால் இன்று அது ‘ஓட்டுப் போடுறதுன்னா என்னா? அது ஒண்ணுமில்லப்பா... ‘லைக்' பண்றது' என்கிற அளவில் சுருங்கிவிட்டது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம்தான்.
‘ஒரு நாடு ஜனநாயக முறைக்குத் தகுதியில்லாமல் இருக்கலாம். ஆனால் ஜனநாயக முறை மூலம் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளலாம்' என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்திய சென். அவ்வாறு ஒரு நாடு தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வதற்கான முதல் படிதான் தேர்தல்!
அந்தத் தேர்தலில் உங்கள் வாக்கைச் செலுத்தத் தயாரா நீங்கள்? உங்களின் ஒரு ஓட்டு, நூறு சதவீத வாக்குப்பதிவுக்கு உதவட்டுமே! 

தேர்தல் வரலாறு: சில தகவல்கள்... 

* சுதந்திரம் அடைந்து மூன்றே ஆண்டுகளில் அதாவது, 1950-ம் ஆண்டே பெண்களுக்கு வாக்குரிமையைத் தந்துவிட்டது இந்தியா. ஆனால் அமெரிக்கா தன் நாட்டுப் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க 144 ஆண்டுகள் (1920) எடுத்துக்கொண்டது. சுவிட்சர்லாந்தோ 1971-ம் ஆண்டில்தான்!

* ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. 1919-ம் ஆண்டு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் மாகாணம் நமது சென்னை மாகாணம்! 

 * முதல் தேர்தல் 1951-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி இமாசலப் பிரதேசத்தில் தொடங்கி 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் முடிந்தது. சுமார் 68 நாட்களுக்கு இந்தத் தேர்தல் நடைபெற்றது.

* அரசியல் கட்சி சின்னங்கள் வரைய தேர்தல் ஆணையத்தால் கடைசி பணியாளராக நியமிக்கப்பட்டவர் எம்.எஸ்.சேத்தி. அவர் வரைந்த நூற்றுக்கணக்கான சின்னங்கள்தான் இன்று 'ஃப்ரீ சிம்பல்' பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. கட்சிகளுக்கு இந்தப் பட்டியலில் இருந்துதான் சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன.

* தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1950 எனும் 24 மணி நேரமும் செயல்படும் டோல் ஃப்ரீ எண்ணை தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. சரி. அது ஏன் 1950? அந்த ஆண்டில்தான் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது.

* வாக்குச்சாவடியில் குடியரசுத் தலைவர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள் தவிர வேறு யாருடைய படங்களும் இருக்கக் கூடாது என்பது விதி.

* ஒளிப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்திய முதல் மாநிலம் கேரளம். 

நன்றி: தி இந்து (இளமை புதுமை)

Wednesday, April 13, 2016

DR. B.R. AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - I

சாதியை ஒழிக்கும் வழி என்ன?

ந. வினோத் குமார்

தமிழகம் மே மாதம் எதிர்கொள்ள இருக்கிற தேர்தல் முந்தைய தேர்தல்களைக் காட்டிலும் கொஞ்சம் விசேஷமானது. காரணம், பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் 'சாதி வெறிக் கொலைகளைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்கிற ரீதியிலான வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கின்றன.

இந்தத் தேர்தலில் யார் சாதிக்கப் போகிறார்களோ இல்லையோ, 234 தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் 'சாதி'தான் ஜெயிக்கப் போகிறது என்பது நிச்சயம்!

சாதி குறித்து எழுதும் போதெல்லாம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. அவர் இப்படிச் சொன்னார்: 'நீங்கள் எந்தத் திசையில் திரும்பினாலும் சரி. உங்களின் பாதையில் சாதி எனும் பூதம் குறுக்கிடும். அந்த பூதத்தை நீங்கள் அழிக்கும் வரையில் உங்களால் அரசியல் சீர்திருத்தமோ, பொருளாதார சீர்திருத்தமோ மேற்கொள்ள முடியாது'. யெஸ்... Caste is the monster!

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் ஆகியோர் படுகொலைக்கு உள்ளானது, பெருமாள் முருகன் உள்ளிட்ட படைப்பாளிகளுக்கு ஏற்பட்ட துர்பாக்கியங்கள் போன்ற தமிழகத்தின் சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோருக்கு நேர்ந்த மரணங்கள் உள்ளிட்ட தேசிய அளவிலான நிகழ்வுகள் எதை உணர்த்துகின்றன?

இந்து மதத்தின் மீது கட்டப்பட்ட சாதி அமைப்பு இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன என்பதைத்தானே?

இந்தச் சூழ்நிலையில்தான் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றன. காரணம், தலித்துகள் மட்டுமல்லாது, வலதுசாரி அமைப்புகளும் அம்பேத்கரைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்படியான நிலையில், அம்பேத்கரை நாம் வாசிப்பது, மறுவாசிப்புச் செய்வது மிகவும் அவசியமாகி இருக்கிறது. சாதியம் முன்னெப்போதையும் விட மிகவும் வீர்யத்துடன் இயங்கி வரும் இந்தச் சூழலில், அம்பேத்கரின் 'அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்' (Annihilation of Caste) புத்தகத்தைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் பொருத்தமானது.

1936ம் ஆண்டு 'ஜாத் பட் தோடக் மண்டல்' எனும் இந்து மத சீர்திருத்த‌ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில், இந்து மதத்தில் நிலவும் சாதியக் கொடுமைகள் பற்றிப் பேசுவதற்காக அம்பேத்கர் ஓர் உரையைத் தயார் செய்திருந்தார் (அம்பேத்கர் இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பு பற்றி முனைவர் பட்ட ஆய்வைச் செய்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்க!). ஆனால், கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக, அவர் எதைப் பற்றிப் பேசப் போகிறார் என்பது குறித்து அறிய அந்த அமைப்பினர் மும்முரமாக இருந்தனர்.

அம்பேத்கர் தன்னுடைய உரையில், வேத சாஸ்திரங்களைப் பற்றி விமர்சிக்கப் போகிறார் என்று தெரிய வந்ததும், அந்த அமைப்பினர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டனர். இதனால் அம்பேத்கர் அந்த உரையை ஆற்ற முடியாமல் போனது. பின்னர் அதனைத் தன் சொந்தச் செலவில் புத்தகமாக்கி 8 அன்னாக்களுக்கு விற்பனை செய்தார்.

அதே ஆண்டில் முதல் பதிப்பு முழுவதும் விற்றுத் தீர்ந்தது. அடுத்த ஆண்டே (1937) இரண்டாவது பதிப்பு வெளியாகி பரபரப்பாக விற்பனை ஆனது. முதல் பதிப்பு வெளியானபோது காந்தி தன்னுடைய 'ஹரிஜன்' இதழில் இந்தப் புத்தகத்துக்கு எதிராக நீண்ட விளக்கங்களை எழுதினார். அந்தச் சமயம் காந்தியை விட அம்பேத்கர் அவ்வளவு ஒன்றும் பெரிய 'செலிப்ரிட்டி'யாக இல்லை என்பதை கவனத்தில் கொள்க! (இரண்டாவது பதிப்பில் காந்தி எழுதிய விளக்கத்தையும், அதற்கு தான் அளித்த பதிலையும் சேர்த்துப் பதிப்பித்தார் அம்பேத்கர். அந்தப் புத்தகம்தான் தற்போது வரையிலும் பதிப்பிக்கப்படுகிறது).

ஆக, காந்தியே வரிந்துகட்டிக் கொண்டு பதில் எழுதும் அளவுக்கு, அம்பேத்கர் அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?


இந்தியாவில் நிலவும் சாதிப் பாகுபாட்டை 'தொழில் பிரிவு முறை' (டிவிஷன் ஆஃப் லேபர்) என்று சிலர் கருதுவதுண்டு. அதாவது, ஒவ்வொருவரும் அவர்கள் செய்யும் வேலையின் அடிப்படையில் சமூகத்தில் அவர்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுதான் இதன் சாராம்சம்.

ஆனால் இது 'தொழில் பிரிவு முறை' அல்ல. மாறாக, 'தொழிலாளர்களைப் பிரிக்கும் முறை' (டிவிஷன் ஆஃப் லேபரர்ஸ்) என்கிறார் அம்பேத்கர். அதாவது, ஒவ்வொரு மனிதரையும் அவர்கள் செய்யும் வேலைக்கேற்ப அவர்களைச் சமூகத்தின் மேல் மற்றும் கீழ்ப் படிகளில் வைப்பதுதான் சாதி செய்கிற சதி என்கிறார்.

சாதி எனும் கட்டமைப்பு இந்து மதத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது. உண்மையில், இந்து மதம் என்கிற மதமே இந்தியாவில் இல்லை. 'இந்து' என்கிற பெயர் கூட அந்நியப் பெயர்தான். 'இந்து' என்பது பல சாதிகளின் ஒன்றிணைவுதான் என்கிறார் அம்பேத்கர்.

இப்படிச் சொல்லும் அவர் இன்னொரு உண்மையையும் எடுத்துக்காட்டுகிறார். இந்து மதம் என்பது ஒரு 'பரப்புரை மதமாக' (மிஷனரி ரிலீஜியன்) இருந்தது. இந்த மதத்தில் சாதி அமைப்பு வளர்ந்த காரணத்தால்தான் அதனால், பரப்புரை மதமாக நீடிக்க முடியவில்லை என்கிறார்.

26 அத்தியாயங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் முதல் 13 அத்தியாயங்களில் சாதி குறித்த பின்னணித் தகவல்களைத் தரும் அம்பேத்கர், 14வது அத்தியாயத்தில் இருந்து சாதியை ஒழிப்பதற்கான வழிகளைச் சொல்கிறார். அதில் முதலாவது, ஒரு சிறந்த சமூகம் என்பது எவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்கான சிந்தனையை அவர் பிரெஞ்சுக் குடியரசில் இருந்து எடுக்கிறார். ஆம், ஒரு சிறந்த சமூகம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கொண்டதாக‌ இருக்க வேண்டும் என்கிறார்.


ஐரோப்பாவில் ஒருவர் தன்னுடைய பவுதீக ஆயுதத்தை ராணுவப் பணியில் ஈடுபடும் உரிமையின் மூலமும், போராட்டங்களின் மூலம் தனது அரசியல் ஆயுதத்தையும், கல்வியின் மூலம் தார்மீக ஆயுதத்தையும் பெற்றார்கள். ஆனால் இந்தியாவில் இந்த ஆயுதங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் பெற முடியாதபடிக்கு 'மேல் சாதியினர்' பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு
'ஆர்ய சமாஜம்' போதிக்கிற 'நால்வர்ணம்' இந்த ஆயுதங்களைப் பெற்றுத்தராது என்கிறார்.

பகுத்தறிவும், ஒழுக்கமும் சீர்திருத்தவாதியின் இரண்டு முக்கிய ஆயுதங்கள் என்று கூறும் அம்பேத்கர், உண்மையிலேயே சாதி அமைப்பை உடைக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி சாதி மறுப்புத் திருமணமே என்கிறார்!

சாதி என்பது ஒரு விதமான மனநிலை. அந்த மனநிலை கொண்டவர்களை நான் 'மனப்பிறழ்வுக்கு உண்டானவர்கள்' என்பேன். அந்த நிலை சரியாக, சாதி மறுப்புத் திருமணமே அருமருந்து!

'இந்துக்களின் மூச்சே சாதிதான். அதை அவர்கள் வெளியேற்றியதால் காற்றை மாசுபடுத்தி மற்றவர்களையும் பாதிப்படையச் செய்துவிட்டார்கள்' என்று புத்தகத்தின் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் அம்பேத்கர். அந்தக் காற்றைச் சுத்தப்படுத்த காதலும், கலப்புத் திருமணமும்தான் கைகொடுக்கும் என்றால், அவற்றைப் பரிந்துரைக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்!

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும்)

Monday, March 7, 2016

மத்தவங்களுக்கு பயப்பட்டா எதையுமே எழுத முடியாது!

ந.வினோத் குமார்  
பதிப்பிக்கப்பட்ட தேதி: 4 மார்ச், 2016
 
‘‘இந்தப் புத்தகத்துல நான் விவரிச்சிருக்கிற சம்பவங்கள் எல்லாமே உண்மை. என் வாழ்க்கையில் நடந்தது. என் வாழ்க்கையில் நடந்ததை வெளி உலகத்துக்குச் சொல்றதுக்கு நான் எதுக்கு வெட்கப்படணும். நான் நேர்மையானவள்!"

தடாலடியாக ஆரம்பிக்கிறார் ரோஸலின் டி'மெல்லோ. ‘வோக்', ‘ஓப்பன்', ‘ஆர்ட் ரிவ்யூ' போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளில் கலை தொடர்பான விஷயங்களை எழுதிவருபவர். தன் எழுத்துக்காக ஓவியர்கள், ஒளிப்படக்காரர்கள் மத்தியில் பரவலாகக் கவனிக்கப்பட்டவர் தற்போது ஒரு புத்தகத்தின் ஆசிரியர்.

‘எ ஹேண்ட்புக் ஃபார் மை லவ்வர்' இவரின் முதல் புத்தகம். ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பித்த இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியாகி ஆங்கில இலக்கிய வட்டாரத்தில் மெல்லிய அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது. காரணம், இந்தப் புத்தகம் ‘எரோட்டிக் மெம்வா'. ஒரு பெண்ணின் பாலுணர்வுகளை, பாலுணர்வு நடவடிக்கைகளை வெளிப்படையாக, முகத்தில் அடித்தாற்போலப் பட்டவர்த்தனமாகப் பேசும் புத்தகம் இது.

‘கதையில் வரும் எந்த ஒரு கதாபாத்திரமும் உண்மை மனிதர்களுடன் ஒத்துப்போனால் அது தற்செயலானது அல்ல. இந்தப் புத்தக உருவாக்கத்தில் எந்த ஆண்களும் பாதிக்கப்படவில்லை' என்ற அறிமுக வாசகங்களுடன் இந்தப் புத்தகம் தொடங்குகிறது. அதற்குப் பிறகு புத்தகத்துக்குள் நுழைந்தால் காதலும் காமமும், ஒரு புத்தகம் உருவாவதைப் பற்றியதான கதையாடலும்தான் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

கதை ரொம்பவும் ‘சிம்பிள்'. 23 வயது கொண்ட இளம் பெண். அவள் ஒரு நாள் உலகளவில் பிரபலமான ஒளிப்படக் கலைஞனைச் சந்திக்கிறாள். அவருக்கு வயது 52. நள்ளிரவுக்குப் பின் ஒயினும், பேச்சுமாக அவர்கள் சந்திப்பு நீள்கிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் காமத்தில் ஒன்றிணைகிறார்கள். ‘இது ஒரு நாள் கூத்துதான்' என்று அவள் நினைக்கிறாள். அவரும் அப்படியே. ஆனால் அது ஒரு நாளில் மட்டுமே முடிந்துவிடுகிற உறவாக இருக்கவில்லை. எட்டு வருடங்கள். திருமணம் செய்துகொள்ளாமல், ‘லிவ் இன்' உறவாகவும் இல்லாமல்... வெவ்வேறு பாதையில் பயணிக்கிற இருவரை இணைக்கும் பாலமாகக் காமம் இருக்கிறது.


இது ரோஸலின் வாழ்க்கையில் நடந்தது. அந்தப் பிரபல ஒளிப்படக் கலைஞர் யார், அந்த உறவு என்னவானது என்பதைப் பற்றியெல்லாம் நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இப்போது ரோஸலினுடன் கொஞ்ச நேரம் பேசுவோம்...

உங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க. இந்தப் புத்தகத்தை கற்பனைன்னு சொல்லி நீங்க தப்பிச்சிருக்கலாம். ஆனா, ஏன் இந்த ரிஸ்க்?

உங்க முதல் கேள்விக்குப் பதில் சொல்லிடுறேன். பிறந்தது, படிச்சது, வளர்ந்தது எல்லாமே மும்பை. ரைட்டர் ஆகணும்னுதான் கனவு கண்டேன். ஆனா, நான் எதைப் பத்தி எழுதப்போறேங்கிறது தெரியாது. சின்ன வயசுல கவிதைகள் எழுதிப் பார்த்தேன். செட் ஆகலை. சரி, நாம ஏன் நம்ம வாழ்க்கையில நடந்த, நடக்கிற விஷயங்களை எழுதி ஒரு ‘எக்ஸ்பெரிமென்ட்' பண்ணிப் பார்க்கக் கூடாதுன்னு தோணுச்சு.

அந்த டைம்ல கமலா தாஸ் புத்தகங்கள்தான் எனக்கான போதை. அவை தந்த ஊக்கத்துலதான், ஒரு பெண் தன் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய ‘செக்ஷுவல் என்கவுன்ட்டர்ஸ்' பத்தி எழுத முடிவு செஞ்சேன். அதுக்கு கற்பனை கதாபாத்திரம் எல்லாம் தேவைப்படலை. அந்த ‘ஒரு பெண்' நானேதான்! ஸோ, இந்தப் புத்தகத்தை ‘நான் ஃபிக்ஷன் எரோட்டிக் மெம்வா'னு சொல்வேன்.

பாலுணர்வு நடவடிக்கைகள் பத்தியெல்லாம் ‘கிராஃபிக் டீட்டெய்லா' கொடுத்திருக்கீங்க. அதுவும் இந்தியாவுல இன்னைக்கு கலாச்சாரக் காவலர்கள் அதிகமா இருக்கிற நேரத்துல...

‘தைரியத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் இடையில ஒரு மெல்லிய கோடு இருக்கு'ன்னு சொல்வாங்க. இந்தப் புத்தகத்தைப் படிச்ச பலரும் ‘நீ தைரியமா பல விஷயங்களைச் சொல்லியிருக்க'ன்னு பாராட்டுறாங்க. ‘கிராஃபிக் டீட்டெய்லா இருக்கு'ன்னு நீங்க சொல்றீங்க. ஆனா நான் அதை ‘டிஸ்கிரிப்டிவ்'னு (விளக்கமானது) சொல்வேன். தன்னோட பாலியல் வேட்கைகளைப் பத்தி எந்த ஒரு வெட்கமும் இல்லாம ஒரு பெண் பேசுறது அப்படித்தான் இருக்கும். மத்தவங்களுக்காகப் பயப்பட்டா எதையுமே எழுத முடியாதே!

உங்க புத்தகத்தைப் படிச்ச பிறகு, அந்த 'போட்டோகிராஃபர்' யார்னு 'கெஸ்' பண்ண முடியுது. (அவரின் பெயரைச் சொன்னதும் ரோஸலின் புன்னகைத்துக்கொண்டே ஆமோதிக்கிறார்). அவர் பெயரை எழுதலாமா...?

நோ வே! உங்களை மாதிரி சில பேர்தான் கண்டுபிடிக்க முடியும். அவர் யார்னு தெரியணும்னா, வாசகர்கள் அந்தப் புத்தகத்தைப் படிச்சு தெரிஞ்சுக்கட்டும். ஆனா, மீடியாவுல வேண்டாமே!

உங்க புத்தகத்தை அவர் படிச்சாரா?

நான் எழுதிக்கிட்டிருந்தபோது சில ‘சேப்டர்ஸ்' படிச்சார். முழுசா படிக்கலை. ‘இதையெல்லாம் எழுதாதே'ன்னு எந்த ஒரு கட்டுப்பாட்டையும் அவர் விதிக்கலை. அவரோட ஃப்ரெண்ட்ஸ் சில பேர் புத்தகத்தைப் படிச்சிட்டு அவரை சும்மா ‘டீஸ்' பண்ணியிருக்காங்க. அவ்ளோதான்!

புத்தகத்துல ஒரு இடத்துல உங்க அப்பாவின் கோபம் பத்தி சொல்றீங்க. அந்த சம்பவங்களைப் படிக்கும்போது உங்கள் குழந்தைப் பருவம் ரொம்பவும் போராட்டமானதா இருந்திருக்குமோன்னு படுது...

அப்படி முழுமையா சொல்லிட முடியாது. அப்பாவின் கோபம் எப்படிப்பட்டதுன்னா, என்னோட குரலை நான் உயர்த்த முடியாது. எனக்குன்னு தனியான‌ கருத்துகள் இருக்க முடியாது. மத்தபடி, எனக்கு இந்த அளவு சுதந்திரம் கிடைக்கக் காரணமே என் அப்பாதான்!

உங்க அப்பாவுக்கு உங்க‌ ‘ரிலேஷன்ஷிப்' தெரியுமா? உங்க புத்தகத்தை படிச்சாரா?

யெஸ்! அவருக்குத் தெரியும். ஆனா, இன்னும் புத்தகத்தைப் படிக்கலை! 


புத்தகத்தோட ‘டைட்டிலே' வித்தியாசமா இருக்கே. இது விற்பனைக்காகத்தானே?

இல்லை. ‘இந்தப் புத்தகம் லவ் பண்றவங்களுக்கு ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவலா' இருக்குமோ'ன்னு பலர் எதிர்பார்ப்போட வாங்குவாங்க. அப்புறம் படிச்சதுக்கப்புறம்தான் தெரியும், ‘அட இது நம்மோட வாழ்க்கையில, நமக்குத் தெரிஞ்சவங்களோட வாழ்க்கையில நடக்கிற சம்பவமாச்சே'ன்னு. என்னை மாதிரி வாழ்க்கை வாழுறவங்க இந்தப் புத்தகத்தைப் படிச்சு தங்களோட வாழ்க்கையை ‘கனெக்ட்' பண்ணி பார்க்க முடியும். மத்தபடி ‘டைட்டில்' எல்லாம் மக்களை ‘டீஸ்' பண்றதுக்காகத்தான்!

புத்தகத்துல நிறைய இடங்கள்ல ரோலன் பார்த், ஆன் கார்ஸன், ஹென்றி மில்லர்னு நிறைய எழுத்தாளர்களோட வாசக‌ங்களை ‘கோட்' பண்ணியிருக்கீங்க...

இந்தப் புத்தகத்தை ஒரு ‘ரொமான்டிக் டிஸ்கஷனா' மட்டுமே எடுத்துட்டுப்போக நான் விரும்பலை. ரைட்டிங், லிட்டரேச்சர் பத்தியும் பேசணும்னு நினைச்சேன். அதனால என்னை பாதிச்ச ரைட்டர்ஸோட சிந்தனைகளை எல்லாம் ஒரு நேர்கோட்ல இணைக்க நினைச்சேன். அதான்!

இவ்ளோ வெளிப்படையா பேசுறீங்க. இந்தப் புத்தகத்தை ‘ஃபெமினிஸ்ட்' புத்தகம்னு சொல்லலாமா?

இது ஒரு விதத்துல ‘ஃபெமினிஸ்ட்' புத்தகம்னுதான் நான் நம்புறேன். கமலா தாஸ் மாதிரியான நபர்களுடைய புத்தகங்கள் ‘ஃபெமினிஸ்ட்' புத்தகங்கள்னு சொல்லப்படுறபோது, என்னோட புத்தகமும் அப்படி இருந்துட்டுப் போகட்டுமே!

சரி சொல்லுங்க... இப்ப உங்க ‘ரிலேஷன்ஷிப்' என்ன நிலைமையில இருக்கு?

நான் அவரை என்னோட ‘பாய் ஃப்ரெண்ட்'னு சொல்ல மாட்டேன். அவர் என்னோட ‘பார்ட்னர்'. ரிலேஷன்ஷிப் நல்லா போய்க்கிட்டிருக்கு. அவருமே ஒரு ஆர்டிஸ்ட்தானே. அதனால எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு.

அடுத்து என்ன புத்தகங்கள்?

ஆணோ, பெண்ணோ... யாரையும் சார்ந்து நிற்காமல், தனியா வாழுறவங்களுக்காக ‘ஃபுட் புக்' ஒண்ணு எழுதிக்கிட்டிருக்கேன். அப்புறம் உலக இலக்கியங்கள்ல வர்ற கற்பனைக் கதாபாத்திரங்களுக்குக் கடிதம் எழுதற மாதிரியான ஒரு புத்தகம்! 

நன்றி: தி இந்து (தமிழ்)
ரோஸலின் ஒளிப்படம்: ந.வினோத் குமார்

Saturday, February 27, 2016

எட்டித் தொடுவோம் விண்ணை!

ந.வினோத் குமார் 

பதிப்பிக்கப்பட்ட தேதி: 26 பிப்ரவரி 2016

‘அது ஒண்ணும் பெரிய ‘ராக்கெட் சயின்ஸ்' இல்ல!' என்று சொல்லும் பலரை நாம் கண்டிருக்கிறோம். ‘ராக்கெட் சயின்ஸ்' அவ்வளவு கடினமானதா?

‘இந்திய விண்வெளி ஆய்வு மைய'த்தின் (இஸ்ரோ) வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் ‘ஆம்' என்றே சொல்லத் தோன்றும். ஆனால் அந்த மையம் தன் பாதையில் வந்த தடைகள், பள்ளங்கள், மேடுகள், சுழல்கள் எனப் பலவற்றைச் சமாளித்து இன்று உலகளவில் ‘செவ்வாயைத்' தொட்டதுதான் இமாலய சாதனை!

‘இந்த நாட்டுக்கு ‘இஸ்ரோ' என்ன செய்துவிட்டது?' என்று கேட்பவர்களுக்கு ஒரு தகவல். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி ‘தேசிய அறிவியல் தினம்' என்று கொண்டாடப்படுகிறதே அதற்குக் காரணமாக இருந்தவரே இஸ்ரோவைச் சார்ந்த டாக்டர் வி.ஆர்.கோவாரிகர் என்பவர்தான்.

இஸ்ரோவின் அங்கமாக இயங்கி வரும் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி மைய'த்தின் இயக்குநராக இருந்த கோவாரிகர் பின்னாளில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் செயலராக இருந்தார். 1988-ல் அன்றைய பிரதமரின் ஒப்புதலோடு, நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் சர்.சி.வி. ராமனின் பிறந்தநாளான‌ பிப்ரவரி 28-ம் தேதியை ‘தேசிய அறிவியல் தின'மாக அறிவிக்கச் செய்தார்.

அப்படியான இந்த ‘தேசிய அறிவியல் தின'த்தில் ‘இஸ்ரோ'வின் 50 ஆண்டு கால வரலாற்றை சுமார் 700 பக்கங்களில், விவரித்துச் செல்லும் ‘ஃப்ரம் ஃபிஷிங் ஹாம்லெட் டு ரெட் ப்ளானெட்' எனும் புத்தகத்தைப் பற்றித் தெரிந்துகொள்வது பொருத்தமானதாக இருக்கும்.

இஸ்ரோவைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் விஞ்ஞானிகள் 50 பேர் இந்திய விண்வெளிப் பயணத்தில் தாங்கள் எதிர்கொண்ட சவால்கள், சாதனைகள், படிப்பினைகள் ஆகியவற்றை கட்டுரைகளாக்கித் தந்துள்ளனர். அவற்றை இஸ்ரோவைச் சேர்ந்த முன்னாள் விஞ்ஞானிகள் பி.வி.மனோரஞ்சன் ராவ், பி.என்.சுரேஷ் மற்றும் வி.பி.பாலகங்காதரன் ஆகியோர் தொகுத்துப் புத்தகமாக்கியுள்ளனர். 


இஸ்ரோவைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் விஞ்ஞானிகள் 50 பேர் இந்திய விண்வெளிப் பயணத்தில் தாங்கள் எதிர்கொண்ட சவால்கள், சாதனைகள், படிப்பினைகள் ஆகியவற்றை கட்டுரைகளாக்கித் தந்துள்ளனர். அவற்றை இஸ்ரோவைச் சேர்ந்த முன்னாள் விஞ்ஞானிகள் பி.வி.மனோரஞ்சன் ராவ், பி.என்.சுரேஷ் மற்றும் வி.பி.பாலகங்காதரன் ஆகியோர் தொகுத்துப் புத்தகமாக்கியுள்ளனர்.

1961-ல் ராக்கெட் ஏவுவதற்குத் தகுந்த ஏவுதளத்தைக் கண்டுபிடிக்க‌ கேரளாவில் உள்ள ஒரு மீனவக் கிராமமான தும்பாவில் அலைந்து திரிந்ததில் தொடங்கி 2014-ல் ‘மங்கள்யான்' செவ்வாய்க் கோளைத் தொட்டது வரையில் இஸ்ரோவின் ஒவ்வொரு கட்டமும் ஆச்சர்யங்களால் நிறைந்திருக்கிறது.

1963-ல் நவம்பர் 21-ம் தேதி தும்பாவிலிருந்து முதல் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. அன்றுதான் அதிகாரப்பூர்வமாக இந்திய விண்வெளிப் பயணம் தொடங்குகிறது. 1963 முதல் 2013-ம் ஆண்டு வரை ‘இஸ்ரோ'வின் ஐம்பது ஆண்டு காலச் சாதனையைப் போற்றும் விதமாகத்தான் ஆரம்பத்தில் இந்தப் புத்தகம் உருக்கொண்டது. ஆனால் இடையில் சில நடைமுறைச் சிக்கல்களால் இந்தப் புத்தகம் வெளியாவது தாமதமாகி, சென்ற ஆண்டின் இறுதியில் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வமாகப் பார்த்தால் இந்திய விண்வெளிப் பயண வரலாறு 1963-லிருந்துதான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பே இந்திய விண்வெளித் துறையின் ‘கவுன்ட் டவுன்' தொடங்கிவிட்டது.

ஆம். 1959-ல் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ‘விண்வெளியை அமைதிப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கான குழு'வைத் தொடங்கிய நிறுவன உறுப்பினராக இந்தியா இருந்துள்ளது. எனில், இந்தத் துறையில் இந்தியாவுக்கு இருந்த, இருக்கும் ஆர்வத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

அடிப்படையான ‘செயற்கைக்கோள் ஏவுகலம்' (எஸ்.எல்.வி. - சேட்டிலைட் லாஞ்ச் வெஹிகில்) தொடங்கி, ஏ.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., என்று ஏவுகலங்கள் படிப்படியாக உயர, இன்னொரு பக்கம் ஆர்யபட்டா, ஆப்பிள், பாஸ்கரா, இன்சாட் என செயற்கைக்கோள்கள், சந்திரயான், மங்கள்யான் என விண்கலங்கள்... இவை உலகைத் திரும்பிப் பார்க்க வைக்கும் இந்திய விண்வெளியின் சாதனைகள்.

இந்தியா, விண்வெளித் துறையில் அடியெடுத்து வைத்த அதே நேரத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் விண்வெளிப் பயணத்தில் பல படிகளைத் தாண்டியிருந்தன. அவை அனைத்தும் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள். அவை விண்வெளித் துறையில் சாதித்ததில் ஆச்சர்யம் எதுவுமில்லை. ஆனால் சுமார் இருநூறு ஆண்டுகள் காலனியாதிக்கத்தின் பிடியில் இருந்த, பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டிராத ஒரு தேசம் எந்த தைரியத்தில் விண்வெளித் துறையில் நுழைந்து, சாதனை படைத்தது என்பதுதான் இன்றுவரை உலகம் யோசிக்கும் விஷயமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட விண்வெளித் துறையில் தமிழகத்தின் பங்கும், தமிழர்களின் பங்கும் அதிகம். இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளமாக தும்பா அடையாளம் காணப்படுவதற்கு முன்பு கன்னியாகுமரிதான் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அது காந்தக் கோட்டிலிருந்து வெகுதூரத்தில் இருந்ததால், ஏவுதளம் தும்பாவில் அமைந்தது.

60களில் தும்பாவிலிருந்து பறக்கவிடப்பட்ட ராக்கெட்டிலிருந்து வெளியாகும் 'சோடியம் வேப்பர்' வெளியேற்றத்தைப் படம்பிடிக்க கன்னியாகுமரி, பாளையம்கோட்டை, கொடைக்கானல் மற்றும் கோட்டயம் ஆகிய நான்கு இடங்களில் ஒளிப்படக் கருவிகள் வைக்கப்பட்டன. கொடைக்கானல் மற்றும் கோட்டயத்தில் அந்தச் சமயம் மேகமூட்டமாக இருந்ததால் தமிழகத்தின் இதர இரண்டு இடங்களில் வைக்கப்பட்ட கேமராக்கள்தான் படம்பிடித்தன.
 
அதேபோல, ராக்கெட் ஏவுவதற்குத் தேவைப்படும் ‘ஸ்பேஸ் குரூட்' எனும் எரிபொருள் சென்னையிலிருந்துதான் 70-களில் பெறப்பட்டது. பி.எஸ்.எல்.வி. ஏவுகலத்துக்கான‌ முக்கிய உதிரி பாகம் தயாரிக்கும் இடம் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கிடையில் உள்ள மகேந்திரகிரியில் 
உள்ளது.

1972-ல் இஸ்ரோவுக்கும் அன்றைய சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் விண்வெளி ஆய்வு தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இடப்பட்டது. அதன் விளைவாக வேலூருக்கு அருகில் உள்ள காவலூரில் ‘போட்டோகிராபிக் மற்றும் லேசர் ரேஞ்சிங் ஸ்டேஷன்' நிறுவப்பட்டது.

மேலும், விண்வெளியில் பறக்க விடப்படும் 'கேப்ஸ்யூல்'களைப் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதற்கு 2007ம் ஆண்டு விண்கலம் ஒன்றைப் பறக்கவிடப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அந்த விண்கலம் வெற்றிகரமாகப் பறந்துவிட்டு, சென்னை கடல் பகுதியில் வீழ்ந்தது. அதனை எண்ணூர் துறைமுகத்திலிருந்துதான்   எடுத்தார்கள்.
 
அதேபோல, அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, அருணன், வளர்மதி போன்ற தமிழர்களின் பங்களிப்புகளும் இருக்கின்றன. 


இஸ்ரோ எத்தனைதான் சாதனைகள் செய்தாலும் இன்றும், ‘ஆமா... புதுசா ராக்கெட் விடுறதால இந்தியாவுல எல்லாருக்கும் சோறு கிடைச்சிருச்சா?' என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு, 1783-ல் பாரிஸ் நகரத்தில் மனிதனை ஏற்றிக்கொண்டு முதல் பாராசூட் வானில் பறந்தபோது ‘அதனால் என்ன பயன்?' என்று கேட்ட மக்களிடம் அறிவியலாளர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் எழுப்பிய‌ கேள்விதான் பதில்: ‘புதிதாகப் பிறக்கும் குழந்தையால் என்ன பயன்?'
 
இந்திய விண்வெளிப் பயணம் சில தகவல்கள்...

* இஸ்ரோவின் ஓர் அங்கமான ‘ப்ரொபெல்லன்ட் இன்ஜினியரிங் டிவிஷன்' ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் தேதியை ‘இயற்கை பாலிமர் தின'மாகக் கொண்டாடுகிறது.

* பிரான்ஸ் நாட்டிலிருந்து பெற்ற ‘வைக்கிங்' எனும் இன்ஜின் தொழில்நுட்பத்தை ‘விகாஸ்' என்று பெயர் மாற்றம் செய்தவர் அன்றைய விண்வெளித் துறையின் கூடுதல் செயலராக இருந்த டி.என்.சேஷன். அந்தப் பெயரின் ஆங்கில வடிவத்தில் ‘இந்திய விண்வெளித் தந்தை' என்று போற்றப்படும் விக்ரம் சாராபாயின் பெயரும் இடம்பெற்றிருக்கும். எப்படியென்றால் இப்படி: VIKAS - VIKram A. Sarabhai.

* இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான 'ஆர்யபட்டா' விண்ணில் ஏவப்பட்ட நாள் 19 ஏப்ரல் 1975. அப்போது தபால் துறையின் பொறுப்பாளராக இருந்த சங்கர் தயாள் சர்மா (முன்னாள் குடியரசுத் தலைவர்) செயற்கைக்கோள் ஏவப்பட்ட நாளையொட்டி நினைவு தபால் தலைகளை வெளியிட்டார். ஆனால் செயற்கைக்கோள் ஏவப்படுவது 20-ம் தேதிக்குத் தள்ளிப் போகலாம் என்று கூறப்பட்டதால் 20-ம் தேதிக்கும் சேர்த்து தபால் தலையை அச்சிட்டு வைத்திருந்தார். எனினும், நிர்ணயித்தபடி 19-ம் தேதியே செயற்கைக்கோள் ஏவப்பட்டுவிட்டதால், 20-ம் தேதிக்குறிய நினைவு தபால் தலைகள் அழிக்கப்பட்டன.

* ‘ஆர்யபட்டா' ஏவப்பட்டபோது, அதனை மாட்டு வண்டியில் ஏற்றி, ஏவுதளத்துக்குக் கொண்டு வரப்பட்டதாக வெளிநாட்டுப் பத்திரிகைகள் ஒளிப்படம் எடுத்து கிண்டலடித்தன. ஆனால் அப்படிக் கொண்டு வந்ததற்குக் காரணம் உண்டு. காந்தப்புலம் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து அந்த செயற்கைக்கோளைப் பாதுகாக்கவும், 'டெலிமெட்ரி, ட்ராக்கிங் மற்றும் கமாண்ட்' தொடர்பான தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்யவுமே இப்படிக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

* விண்வெளித் துறையில் 'ரிமோட் சென்ஸிங்' முக்கியப் பகுதி. இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு விவசாயத்துக்கு ஏதாவது உதவ முடியுமா என்று விக்ரம் சாராபாய் யோசித்தார். அதன் விளைவுதான் 60-களின் இறுதியில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'க்ரிஷி தர்ஷன்' நிகழ்ச்சி. 

* 'லூனார் ஆர்பிட்டல் மிஷன் டிசைன்' எனும் துறையில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் ஆர்.வி.ரமணன்.

நன்றி: தி இந்து (தமிழ்)-(கூடுதல் தகவல்களுடன்)

ராக்கெட் ஒளிப்பட உதவி: இஸ்ரோ இணையதளம்