Sunday, November 20, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES -VIII

இந்து தேசிய வியாபாரிகளின் அபகரிப்பு!


ந.வினோத் குமார்

அம்பேத்கரின் சிந்தனைகளை ஏற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை இன்றைய காலத்தில் அதிகரித்து வருகிறது. அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனால் அரசியல் சுயலாபத்துக்காக அம்பேத்கரையே உரிமை கொண்டாடும் அபகரிப்பாளர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருவதுதான் ஆச்சரியம். அதில் முதன்மையான அபகரிப்பாளர்கள் யாரென்றால்... இந்து தேசிய வியாபாரிகள்!

அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், 'அம்பேத்கரும் எங்கள் செட்டுதான்' என்று கூவ ஆரம்பித்திருக்கின்றன இந்துத்துவ குழுக்கள்.

'அம்பேத்கர் ஒருபோதும் பிராமணியத்துக்கு எதிராக இருந்தவர் அல்ல' என்று இந்துத்துவவாதிகள் சொல்வது எவ்வளவு பெரிய புரட்டு, என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது, 'அம்பேத்கர் அண்ட் இந்துத்துவா பாலிட்டிக்ஸ்' எனும் புத்தகம். மும்பை ஐ.ஐ.டி.யின் முன்னாள் பேராசிரியரும் தற்சமயம் சமூக நல்லிணக்கத்துக்காகத் தொடர்ந்து எழுதியும், களப்பணியாற்றியும் வரும் ராம் புனியானி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். பாரோஸ் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.


அம்பேத்கரின் 124-வது பிறந்த ஆண்டிலிருந்தே அவருக்குக் காவிச் சாயம் பூச முயற்சித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு. அந்த அமைப்பைச் சேர்ந்த பிரச்சார் ப்ரமுக் மன்மோகன் வைத்யா, சர்சங்சலக் மோகன் பாகவத் போன்றோர் அம்பேத்கரின் கருத்தியலுக்கு இந்துத்துவப் பார்வையை வழங்க முற்படுகின்றனர். அதில் ஒன்றுதான் 'அம்பேத்கர் ஒருபோதும் பிராமணியத்துக்கு எதிராக இருந்தவர் அல்ல' எனும் கூற்று. அது உண்மைதானா?

நிச்சயமாக இல்லை. ஏனென்றால், அம்பேத்கர் 'பிராமணிய இந்து மதவாத'த்துக்கு எதிராகவும், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்கு ஆதரவானவராகவும் இருந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்போ பிராமணிய இந்து மதவாதம் மற்றும் இந்து தேசியம் ஆகிய இரண்டு தளங்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பேச்சுக்கு, அம்பேத்கரின் சிந்தனைகளைத்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், 2015-ம் ஆண்டு குடியரசு தின விழா தொடர்பான ஊடக விளம்பரங்களில் 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' எனும் வார்த்தைகள் எப்படி விடுபட்டுப் போயின?

அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியத் தலைவராகக் கருதப்பட்ட தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் நூற்றாண்டை இந்துத்துவவாதிகள் கொண்டாடி வருகின்றனர்.

மகாத்மா காந்திக்கு இணையாக தீனதயாள் உபாத்யாயாவை சமூக‌ மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஏனென்றால், அவர்தான் இந்து மதத்தின்படி வழி நடத்தப்படும் 'அகண்ட பாரதம்' எனும் கருத்தைப் பரப்பிவிட்டுச் சென்றார்.

அவருக்கு முன்பு சாவர்க்கர் 'இந்து தேசியம்' எனும் கருத்தை விட்டுச் சென்றார். ஆனால் அம்பேத்கர் அந்த 'இந்து தேசியம்' என்ற கருத்துக்கு எதிராக இருந்தவர். தன்னுடைய 'தாட்ஸ் ஆன் பாகிஸ்தான்' எனும் நூலில் அம்பேத்கர் இப்படிக் குறிப்பிடுகிறார்:

"சாவர்க்கரும் முகமது அலி ஜின்னாவும் 'இரண்டு தேசங்கள்' என்ற கருத்துக்கு உடன்படுபவர்களாகவே உள்ளனர். பாகிஸ்தான் என்றும், இந்துஸ்தான் என்றும் இரண்டு தேசங்கள் இருக்க வேண்டும். முன்னதில் இஸ்லாமியர்களும் பின்னதில் இந்துக்களும் இருந்துகொள்ளலாம் என்கிறார். சாவர்க்கரோ, இந்தியாவில் இந்துக்களும் இருக்கலாம். இஸ்லாமியர்களும் இருக்கலாம். ஆனால் இஸ்லாமியர்கள் 'இந்து தேசிய'த்தின் கீழ்தான் இருக்க வேண்டும். இந்து மத அரசியலமைப்புக்கு அவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்கிறார்.

அவர் சொல்வது போல 'இந்து தேசியம்' ஏற்பட்டால், அது நாட்டுக்குக் கேடு விளைவிக்கும். இந்து மதம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானதாக இருக்கும். அது ஜனநாயகத்தை நமக்கு வழங்காது. எனவே, இந்து ராஜ்ஜியம் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்".

அப்படியான இந்து தேசியம்தான், சாதி ஒழிக்கப்படுவதற்குத் தடையாகவும் இருக்கிறது என்கிறார், அம்பேத்கர். ஆனால் தீனதயாள் உபாத்யாயாவோ, "நம் சமூகத்திலிருக்கும் நான்கு வர்ணாசிரமங்கள் என்பது கடவுளுக்கு இருக்கும் நான்கு கைகளைப் போன்றது. அது ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இதைப் புரிந்துகொண்டால், சாதி நமக்கு நல்லது செய்யும். இல்லையென்றால், அது அழிவைக் கொண்டு வரும்" என்று சாதியத்தைப் போற்றுகிறார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் மேம்பட்ட நிலைக்கு வந்துவிடக் கூடாது என்ற கடுப்புதான் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தொடக்கமாக இருக்கிறது என்கிறார் ராம் புனியானி. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மத அடையாளத்தை முன்னுக்குக் கொண்டு வருகிறதென்றால், மதக் கலவரங்களின் மூலம் சாதிய அடையாளம் மறைக்கப்பட்டு விடுகிறது. அப்படிப் பார்த்தால், சிறுபான்மையினருக்கு எதிரான‌ ஒவ்வொரு வன்முறைக்குப் பிறகும், இந்து மத அடையாளம்தான் தலித்துகளுக்கு முக்கியமாகிறது என்கிறார் அவர்.

இவ்வாறு மதக் கலவரங்கள் மூலம் 'இந்து தேசியம்' காண விரும்புகின்றன இந்துத்துவக் குழுக்கள். அப்படி ஒன்று ஏற்பட்டால், சாதி ஒழியாது. சாதி ஒழியாமல் சமத்துவம் இல்லை. ஆக, நாம் புரிந்துகொள்ள வேண்டியது... சனாதன தர்மம் ஒருபோதும் சமாதானத்தைக் கொண்டு வராது!

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் எட்டாவது பதிவு இது.)

Saturday, October 29, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - VII

விடுதலையின் 60 ஆண்டுகள்!


ந.வினோத் குமார்
 
இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகின்றன‌. 'ஒரு மனிதன் ஒரு வாக்கு' எனும் நிலையை நாம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் 'ஒரு மனிதன் ஒரே மதிப்பு' எனும் நிலையை நாம் அடைந்திருக்கிறோமா என்றால், அது இன்றளவும் ஒரு கேள்வியாகவே மிஞ்சுகிறது.

அந்த நிலையை வழங்க மறுக்கும் இந்து மதத்தின் நால்வர்ண அமைப்பிலிருந்து ஒடுக்கப்பட்டவர்களை விடுவிக்க, 1956-ம் ஆண்டு அம்பேத்கர் பல்லாயிரக்கணக்கானவர்களோடு தானும் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினார். இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான அம்பேத்கர் மேற்கொண்ட அந்த விடுதலை முயற்சிக்கு இந்த ஆண்டு, இந்த மாதம் 60 வயது ஆகிறது!

முந்தைய நாள் முடிவு செய்து, மறுநாள் காலையில் மதம் மாறிவிடவில்லை அம்பேத்கர். சுமார் 35 ஆண்டு காலம் அனைத்து மதங்களையும் ஆய்வுக்குட்படுத்திய பிறகே புத்த மதத்தைத் தேர்வு செய்தார் அவர். அப்போது பலர் அவரிடம் 'நீங்கள் ஏன் புத்த மதத்தைத் தேர்வு செய்தீர்கள்?' என்ற கேள்விக்கு அவர் தந்த பதிலின் வடிவமாகவே அவர் எழுதிய 'தி புத்தா அண்ட் ஹிஸ் தம்மா' எனும் நூலை நாம் காண முடியும்.

1956-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தப் புத்தகம், அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு 1957-ம் ஆண்டுதான் வெளியானது. எளியவர்கள் படிக்கக் கடினமாக இருக்கலாம் என்றும், இந்த நூலில் அவர் எடுத்தாளும் பெளத்த மத விஷயங்களைப் பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள், விளக்கங்கள் கொடுக்கலாம் என்றும் பேராசிரியர்கள் ஆகாஷ் சிங் ரத்தோர் மற்றும் அஜய் வர்மா ஆகியோர் நினைத்ததன் விளைவு, இந்தப் புத்தகத்துக்கு செம்பதிப்பு (க்ரிட்டிக்கல் எடிஷன்) ஒன்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் மூலம் கிடைத்தது.


மூலப் பிரதியின் முதல் பதிப்பு (1957) வெளியானபோது பல்வேறு தளங்களிலிருந்தும் கடுமையான எதிர்வினைகள் வந்தன. அதில் குறிப்பாக ஒன்று: 'புத்தரின் போதனைகளை அம்பேதகர் அரசியலாக்குகிறார். புத்தரின் தம்மத்தை அவர் அரசியல் பிரகடனமாக மாற்றுகிறார்' என்பது! விட்டு விடுதலையாகும்போது சிலருக்கு வயிற்றெரிச்சல் வரத்தானே செய்யும்?

இந்தப் புத்தகம் புத்தரின் தம்மத்தைப் பற்றி மட்டும் எடுத்துச் சொல்லவில்லை. மாறாக, புத்தரின் வாழ்க்கையையே வேறொரு கோணத்திலிருந்து அணுகுகிறது. 'புத்தர் வீட்டை விட்டு வெளியே வந்தார், நோயாளியைப் பார்த்தார், ஏழைகளைப் பார்த்தார், மரணத்தைப் பார்த்தார், அதனால் சாமியார் ஆனார்' என்கிற கதையெல்லாம் இல்லை.

புத்தனின் துறவற வாழ்க்கையே, சாக்கிய முனிகளின் சங்கத்தை எதிர்ப்பதிலிருந்துதான் தொடங்குகிறது. சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையிலான ரோகிணி நதிநீர்ப் பங்கீடு குறித்து விவாதம் எழுகிறது. அப்போது சாக்கியர்கள் 'இந்தப் பிரச்சினைக்குப் போர்தான் தீர்வு' என்று பிடிவாதம் பிடிக்க, கெளதம சித்தார்த்தன் 'போர் கூடாது' என்கிறான். மனித குல வரலாற்றில் அதிகாரம், பெரும்பாண்மை வாதம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுவதன் முதல்படி, இப்படியான எதிர்ப்புகளிலிருந்தே தொடங்கியிருக்கின்றன.

புத்தனின் வாழ்க்கையைச் சொல்லிச் செல்வதன் வழியே அவர் போதனைகளையும் சொல்லிச் செல்கிறார் அம்பேத்கர். அதில் முக்கியமான ஒரு போதனை, மனிதர்களை இனங்காணுவது எப்படி என்பது.

புத்தரின் பார்வையில் மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். துன்மார்க்கன், சிறந்த மனித‌ன், ஞானமடைந்தவன் ஆகியோர்தான் அவர்கள்.

துன்மார்க்கன் யார்?

மற்றவர்களின் தவறுகளை நாம் கேட்காமலேயே சொல்பவன். ஆனால் நாம் கேட்கும்போது சொல்லாதவன். கொஞ்சம் அழுத்திக் கேட்டால், மற்றவர்களின் தவறுகளை எந்த வித ஒளிவு மறைவுமின்றி விளக்கமாகக் கூறுபவன்.

மற்றவர்களின் நல்ல குணங்களைப் பற்றிக் கேட்டால், சொல்லாதவன். நாம் கேட்காதபோதும் சொல்லாதவன். கொஞ்சம் அழுத்திக் கேட்டால், மற்றவர்களின் நல்ல குணங்களைப் பேசுபவன்.

தன்னுடைய தீய குணங்களைப் பற்றிக் கேட்டால் சொல்லாதவன். நாம் கேட்காதபோதும் சொல்லாதவன். கொஞ்சம் அழுத்திக் கேட்டால், மேலோட்டமாகத் தன் தீய குணங்களைப் பற்றிச் சொல்பவன்.

தன்னுடைய நல்ல குணங்களைப் பற்றித் தானாகவே சொல்பவன். நாம் கேட்காதபோதும் சொல்பவன். கொஞ்சம் அழுத்திக் கேட்டால், எந்த வித ஒளிவு மறைவுமின்றி தன்னுடைய நல்ல குணங்களைப் பற்றி விளக்கமாகக் கூறுபவன்.

இவர்கள் எல்லோரும் துன்மார்க்கர்கள்.

சிறந்த மனித‌ன் யார்?

தன்னுடைய நலனுக்காகவோ அல்லது பிறரின் நலனுக்காகவோ உழைக்காதவர்கள்; தன்னுடைய நலனுக்காக மட்டுமே உழைத்து, பிறரின் நலனுக்காக உழைக்காதவர்கள்; பிறரின் நலனுக்காக மட்டுமே உழைத்து, தன்னுடைய நலனுக்காக உழைக்காதவர்கள்;  தன்னுடைய நலனுக்காகவும், பிறரின் நலனுக்காகவும் உழைப்பவர்கள் என்று நான்கு பிரிவுகளில் மனிதர்கள் அடங்குவர்.

இதில் முதல் வகையினர், சடலத்தின் இரு முனைகளிலும் கொளுத்தப்பட்ட தீ போன்றவர்கள். எதற்கும் பயன்படமாட்டார்கள். முதலிரண்டு வகையினரை விட மூன்றாம் வகை மக்கள் நல்லவர்கள். ஆனால் நான்காம் வகையினரே மூவரை விடவும் சிறந்தவர்கள் ஆவர்.

ஞானமடைந்தவன் யார்?


ஒரு முறை புத்தன் தன் வழியே சென்றுகொண்டிருக்கும்போது, எதிரே வந்த முனிவர் ஒருவர், "ஐயா நான் வணங்கத் தகுந்தவராக இருக்கிறீர்கள். நீங்கள் தேவரோ, கந்தர்வரோ, அசுரரோ அல்லது உயர்ந்த மனிதரோ?" என்று கேட்கிறார்.

அதற்கு புத்தன், "என்னுடைய அறியாமையிலிருந்து நான் வெளிவராதிருந்தால், நீங்கள் சொல்லும் அத்தனையாகவும் நான் இருந்திருப்பேன். ஆனால் தற்போது நான் தெளிவடைந்துவிட்டேன். நீரிலேயே பிறந்து, நீரிலேயே வளர்ந்தாலும் எவ்வாறு தாமரையில் தண்ணீர் ஒட்டாமல் இருக்கிறதோ அப்படியே நான் இந்த உலகத்தில் பிறந்திருந்தாலும், வாழ்ந்திருந்தாலும் இந்த உலகத்தினால் கறைபடாதவனாக இருக்கிறேன். எனவே, என்னை ஞானியென்று நீங்கள் அறிவீர்களாக!" என்றான்.

இந்த மூவரில் நீங்கள் யார்?

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் ஏழாவது பதிவு இது.)

Sunday, October 9, 2016

மனம் திறக்கும் சொற்கள்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 9 அக்டோபர், 2016
 
ஒவ்வொரு மனித‌ மனமும் எவ்வளவு பைத்தியக்காரச் சிந்தனைகளுடன் இருக்கிறது என்பது விலகவே விலகாத மர்மம். ஒவ்வொரு மனதிலும் அந்தச் சிந்தனைகளின் சதவீதத்தில் வேண்டுமானால் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், யாரிடமும் பைத்தியக்காரத்தனம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. 

எது பைத்தியக்காரத்தனம்? அதை யார் முடிவு செய்வது? அதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது? 'நிர்வாணமாக இருக்கும் ஒரு மனிதனை நீங்கள் ‘நாகரிகமற்றவன்’ என்று வேண்டுமானால் சொல்லுங்கள். அவனைப் பைத்தியக்காரன் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்கிற ரீதியில் ஜெயகாந்தன் தன் கதை ஒன்றில் கேள்வி எழுப்பியிருப்பார்.

‘பைத்தியக்காரத்தனம்’ என்பதை எப்போதும் நாம் மற்றவர்களுக்கே அடையாளப்படுத்துகிறோம். அதை ஒருபோதும் நம் அடையாளமாக மாற்றிக்கொள்வதில்லை. நாம் செய்வது பைத்தியக்காரத்தனம் என்பது தெரிந்தாலும், அதை அங்கீகரிக்கத் தயங்குகிறோம்.

நம் வீட்டில், நம் குடும்பத்தில் ஒருவருக்குப் பைத்திய நிலை ஏற்பட்டால் அதை நாம் என்ன செய்வோம்? அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவோம்? அவர்களை நாம் எப்படி அணுகுவோம்?

இதற்கான பதில்களை அளிப்பதாக இருக்கிறது ‘எ புக் ஆஃப் லைட்’ எனும் புத்தகம். நாவலாசிரியர் ஜெர்ரி பின்டோ தொகுத்த இந்தப் புத்தகத்தை ‘ஸ்பீக்கிங் டைகர்’ பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

 
பைபோலார் டிஸார்டர், மனச்சிதைவு, மன அழுத்தம், ஆட்டிஸம், தற்கொலை எண்ணம் என மனப் பிறழ்வு நிலைகள் பலவற்றைப் பேசுகிறது இந்தத் தொகுப்பு. சிறுகதை, நினைவுக் குறிப்பு, வாக்குமூலம் எனப் பல வடிவங்களில் மேற்கண்ட பிரச்சினைகள் ஆராயப்படுகின்றன. மொத்தம் 13 கதைகள். அவற்றில் கையாளப்பட்டிருக்கும் பிரச்சினைகள் எல்லாமே அந்தக் கதைகளை எழுதியவர்களின் நிஜ வாழ்க்கையில், அவர்கள் குடும்பத்தினருக்கு ஏற்பட்டவை. அந்த அனுபவங்களைச் சொற்களின் மூலம் நமக்குக் கடத்துவதன் மூலம் வாசகர்களுக்கு மனப் பிறழ்வுகளைக் கையாள்வதற்கான சில முக்கியமான பாடங்களை விட்டுச் செல்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தைத் தொகுத்த ஜெர்ரி பின்டோவே, இதற்கான ஒரு வாழும் சாட்சியமாக இருக்கிறார். அவருடைய அம்மாவுக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் இருந்தது. அதை அவர் எப்படிக் கையாண்டார் என்பதைத்தான் தனது முதல் நாவலான ‘எம் அண்ட் தி பிக் ஹூம்’ என்ற புத்தகத்தில் சொல்லியிருந்தார்.

பொதுவாகவே, நம் வீடுகளில் யாரேனும் நோயுற்றால், அவர்களுக்குச் சேவை செய்து சோர்வடையும் நேரத்தில் அவர்கள் மீது ஏன் என்று புரியாத ஒரு கோபம் ஏற்படும். அந்தக் கோபம் எத்தகையதாக இருக்கும் என்பதை இந்தத் தொகுப்பில் அமன்தீப் சந்து என்பவர், தன்னுடைய கதையில் இப்படிச் சொல்கிறார்: “கோபம் ஒரு அழிவு சக்தி. அதுவும் நம் நாக்கிலிருந்து புறப்படும்போது, பேரழிவை உண்டாக்கக்கூடியது”.

இன்னொரு கதையில் ‘ஆட்டிஸம்’ பாதிப்பு கொண்ட தன் மகனைத் தான் நடத்தும் விதம் குறித்து மதுசூதன் ஸ்ரீநிவாஸ் என்பவர் எழுதிய பதிவில் இப்படிச் சொல்கிறார்: “எங்கள் குழந்தைகள் எதையும் எப்போதும் எங்களிடம் கேட்டுப் பிடிவாதம் பிடிக்கவில்லை. மாறாக, இந்தச் சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்பதற்காக நாங்கள்தான் அவர்களிடம் நிறைய விஷயங்களுக்காகப் பிடிவாதம் பிடிக்கிறோம்”.

சாதாரண உடல்நிலைக் கோளாறுகளுக்கே பொறுமை இழந்து கோபப்படும் நாம், மனநலக் கோளாறு உடையவர்களை எப்படி நடத்துவோம்?

உலக மனநல நாளின் (அக்டோபர் 10) இந்த ஆண்டு கருப்பொருள் ‘மனநல கண்ணியமும் மனநல முதலுதவியும்’ என்பது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்பதும், மனக் குழப்பங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன் நாமே முதலுதவியும் செய்யலாம் என்பதும்தான் இதன் பொருள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவது சமூகத்தின் கைகளில் உள்ளது. ஆனால், முதலுதவியை நம் ஒவ்வொருவராலும் செய்ய முடியும். எப்படி? 

இந்தத் தொகுப்பில் உள்ள கதையொன்றில் வரும் வரிதான் இதற்குப் பதில்: ‘குழம்பிய மனதுக்குக் கொஞ்சம் காது கொடுங்கள்!’ 

நன்றி: தி இந்து (கலை இலக்கியம்)

Friday, September 30, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - VI

மனுவின் 'மத'த்துக்கு எதிராக...


ந.வினோத் குமார்

இன்றைய தினத்தில் யாரிடமாவது 'பெண் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களின் பெயர்களைச் சொல்லுங்கள்?' என்று கேட்டால், 'காந்தி, பாரதியார், பெரியார்' என இப்படிச் சிலரின் பெயர்களை அவர்கள் பரிந்துரைக்கக்கூடும்.

'ஏன், அம்பேத்கர் உங்கள் நினைவுக்கு வரவில்லை?' என்று ஒரு கேள்வியைக் கேட்டால், 'அம்பேத்கர்... ம்ம்ம்... அவர் என்ன செய்தார்?' என்று அவர்கள் நம்மிடம் இன்னொரு எதிர்க் கேள்வியைக் கேட்கக்கூடும்.

அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகள், பெண்ணியவாதிகளுக்கே தெரியாமல் இருக்கும் அளவுக்குத்தான் இன்றைய 'பெண்ணியம்' இங்கு இருக்கிறது. பெண்ணியவாதிகளுக்கே அம்பேத்கரின் பெண்ணியச் செயல்பாடுகள் பற்றித் தெரியாமல் இருக்கும்போது, மற்றவர்களை நாம் நொந்துகொள்வது நம் தவறுதான்.

'மகாத்மா பூலே, தன் மனைவிக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது போன்று, அம்பேத்கர் தன் மனைவிக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை' என்பது சில பெண்ணியவாதிகளின் கருத்தாக இருக்கிறது. அப்படியே சிலர், அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகளை ஏற்றுக்கொண்டாலும், அவற்றை 'தலித் அல்லது மஹர் இனப் பெண்களுக்கானச் செயல்பாடுகளாக' மட்டுமே பார்க்கும் குறுகிய மனப்போக்கும் இருக்கிறது.

இந்தக் கருத்திலிருந்து அவர்கள் வெளியே வர, முதலில் அம்பேத்கரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தன்னுடைய 'பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை' என்ற நூலை தனது மனைவி ரமாபாய்க்கு அர்ப்பணித்ததிலேயே அம்பேத்கர் எவ்வளவு முற்போக்காக இருந்தார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்து அவர்கள், ரமாபாயின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 1927-ம் ஆண்டு நடைபெற்ற 'மஹர் சத்தியாகிரக'த்தில் சமையல் ஆளாகப் பணியாற்றியது முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்றும் ரமாபாயின் வாழ்க்கை குறித்த பாடல் கேசட்டுகள் வெளிவந்து கொண்டிருப்பது வரையிலான விஷயங்களை ஆராய்ந்தால், அவர் எவ்வாறு அம்பேத்கரின் அரசியல் செயல்பாடுகளில் பங்குகொண்டிருந்தார் என்பது தெரிய வரும்.

அது மட்டுமல்ல. பிராமண ஆணாதிக்கத்தை வேரறுக்க அம்பேத்கர் என்ன மாதிரியான விஷயங்களை முன்னெடுத்தார் என்பதையும் அந்தப் பெண்ணியவாதிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விஷயங்களை எல்லாம் உள்ளடக்கித்தான் சமூகவியலாளர் ஷர்மிளா ரேகே 'அகைன்ஸ்ட் தி மேட்னஸ் ஆஃப் மனு' என்ற புத்தகத்தைத் தொகுத்தார். பூனே பல்கலைக்கழகத்தில் கிரந்திஜோதி சாவித்ரிபாய் பூலே மகளிர் ஆய்வு மைய இருக்கையின் தலைவராக இருந்த ஷர்மிளா தனது 48 வயதில் பெருங்குடல் புற்றுநோய் காரணமாக 2013-ம் ஆண்டு காலமானார். அவரின் மறைவுக்குப் பிறகு இந்தத் தொகுப்பை 'நவயானா' வெளியிட்டது.


பெளத்தம் பெண்களுக்கு எந்த விடுதலையும் தரவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த காலத்தில், புத்தர் எவ்வாறு பெண் விடுதலைக்கு ஆதரவாக இருந்தார் என்பது குறித்தும், இந்துப் பெண்கள் தாழ்ந்துபோனதற்கு யார் காரணம் என்பது குறித்தும் அம்பேத்கர் எழுதிய கட்டுரைகளோடு, அம்பேத்கர் கொண்டு வரத் துடித்த 'இந்து சட்ட மசோதா' எவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டது என்பது பற்றிய வரலாற்றையும் தகுந்த ஆவணங்களுடன் இந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் ஷர்மிளா ரேகே.

1950-ம் ஆண்டு 'ஈவ்ஸ் வீக்லி' எனும் இதழில் இந்தியப் பெண்கள் தாழ்ந்துபோனதற்கு புத்தரே காரணம் என்கிற ரீதியில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அதற்கு எதிர்வினையாக அம்பேத்கர் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில் புத்தரின் சீடரான ஆனந்தன் மீது வைக்கப்படும் ஐந்து குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடுகிறார்.

அதில் மூன்றாவதாக இருக்கும் குற்றச்சாட்டு: "புத்தர் இறந்துபோன பிறகு அவரது உடலுக்கு முதலில் பெண் சீடர்களை அஞ்சலி செலுத்த வைத்தார் ஆனந்தன். அப்போது அவர்களின் கண்ணீரால் புத்தரின் புனிதம் தீட்டுப்பட்டது". (இந்தக் குற்றச்சாட்டு, சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதை நினைவூட்டுகிறது).

இந்தக் குற்றச்சாட்டை மறுதலிக்கும் அம்பேத்கர் அதற்கு விளக்கமும் தருகிறார். புத்தர் 'பெண்களை நெருங்கவிடாதே' என்று ஆனந்தனுக்குச் சொல்லியிருந்தால், அவர் நிச்சயம் பெண்களை அனுமதித்திருக்கமாட்டார். ஆனால், விதவைகளையும், பாலியல் தொழிலாளர்களையும்கூட தன் சீடர்களாக ஏற்றுக்கொண்ட புத்தர் எவ்வாறு பெண்களுக்கு எதிரானவராக இருந்திருக்க முடியும், என்று கேள்வி எழுப்புகிறார்.

புத்தர் மீதே வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு: "பெண் சீடர்களை ஆண் சீடர்களின் கீழ் வைத்திருந்தார்". அதற்கும் காரணம் உண்டு. ஆண் சீடர்கள் முதலில் புத்தரிடம் சேர்ந்த காரணத்தால், அவர் அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத் தந்திருந்தார். அதனால், அவர்களைக் கொண்டே பெண் சீடர்களுக்குக் கற்பித்தார். இதுபோன்ற 'ஆசிரிய--மாணவ' நடைமுறையை கிறிஸ்த்தவ மடாலயங்களிலும் உண்டு என்று நிறுவுகிறார் அம்பேத்கர்.

பெண்களுக்குத் துறவறத்தை அனுமதித்த மதம், பெளத்தம். அதனால், பெண்களும் சூத்திரர்களும் இந்த மதத்தில் இணைந்து துறவறத்தை அடைந்தனர். ஆனால், பெளத்தம் தோன்றி சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மனு, இந்து மதத்தைச் சேர்ந்த பல பெண்களும் சூத்திரர்களும் பெளத்த மதத்துக்கு மாறுவதைப் பார்த்துக் குமுறுகிறான். இதைத் தடுக்கவே, பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் அறிவைப் பெறுவதற்குத் தடை விதித்தான். இப்படி இந்து மதத்திலிருந்து விலகிப் போகிற பெண்ணை மற்றவர்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். ஆக, இந்துப் பெண்கள் தாழ்ந்து போனதற்கு மனுவே காரணம், மனுவின் 'மதமே' காரணம் என்று அம்பேத்கர் தெளிவுபடுத்துகிறார்.

இந்தக் கட்டுரையை எழுதிய அடுத்த வருடமே, 'இந்து சட்ட மசோதா'வுக்கானப் போராட்டத்தில் இறங்குகிறார் அம்பேத்கர். அவர் கொண்டு வர நினைத்த மிகப்பெரிய சமூகச் சீர்திருத்தங்களில் ஒன்று, 'இந்து சட்ட மசோதா'. 1947-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 1951-ம் ஆண்டு செப்டம்பரில்தான் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்பே சில முறை விவாதம் நடந்திருந்தாலும், அது வெறும் பெயரளவுக்கே இருந்தன. ஆனால் இந்த முறை, விவாதம் நடந்ததோடு, அந்த மசோதாவுக்கும் முடிவு கட்டப்பட்டது. அதன் காரணமாகவே தனது சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து செப்டம்பர் 27-ம் தேதி அம்பேத்கர் ராஜினாமா செய்தார். அப்படிப் பார்த்தால், அந்தச் சட்ட மசோதாவுக்கு இந்த ஆண்டு 65 வயது!

அப்படி அந்த மசோதாவில் என்ன இருக்கிறது? அதுவும் பெண்களுக்கு? உண்டு! மகளுக்குச் சொத்துரிமை, ஜீவனாம்ச உரிமை, பலதார மணமுறைக்குத் தடை கோரும் உரிமை, விவாகரத்துப் பெறும் உரிமை எனப் பல உரிமைகளைப் பற்றிப் பேசியது அந்த மசோதா. அவை குறித்தெல்லாம் அறிய, இந்தத் தொகுப்பைப் படிப்பது அவசியம்.

பெண்களின் விடுதலைக்காக அம்பேத்கர் இப்படியெல்லாம் பாடுபட்டதன் நினைவாகத்தான் பின்னாளில் அம்பேத்கரிய பெண் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ம் தேதியை 'இந்தியப் பெண் விடுதலைக்கான நாளாக' கடைப்பிடித்து வருகின்றன, என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? முக்கியமாக அம்பேத்கரை மறுதலிக்கிற பெண்ணியவாதிகளுக்கு?

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் ஆறாவது பதிவு இது.)
 

Thursday, September 15, 2016

அகதா கொடுத்த விஷம்

ந.வினோத் குமார் 

பதிப்பிக்கப்பட்ட தேதி: 11 செப்டம்பர் 2016

பொதுவாக மனிதர்கள், கதை அல்லது நாவல் சார்ந்த தங்களின் வாசிப்பை சுவாரஸ்யத்தின் அடிப்படையிலேயே அமைத்துக்கொள்கிறார்கள். பிறகு வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட, சுவாரஸ்யம் என்ற அடிப்படையிலிருந்து ஆழமான வாசிப்புக்கு நகர்கிறார்கள். பெரும்பாலும் அந்த சுவாரஸ்யமான வாசிப்பை, ‘க்ரைம்’ கதைகளே தருகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. அப்படியான க்ரைம் நாவல்கள்தான் பெருந்திரளான மக்களை வாசிப்பை நோக்கி இழுத்து வந்தன. 

'க்ரைம்' நாவல் தளத்திலும்கூட ஆரம்பத்தில், ஆண் எழுத்தாளர்களே அதிகம் எழுதிவந்தார்கள். ஆனால், இந்தத் தளத்தில் இன்றைய காலத்தில் இந்தியா உட்பட பல நாட்டுப் பெண் எழுத்தாளர்கள் எழுதி வந்தாலும், அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் அகதா கிறிஸ்டி. 1890-ம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று இங்கிலாந்தில் பிறந்த இவர், தன் வாழ்நாளில் மொத்தம் 66 நாவல்கள், 14 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்.

அவர் ஒவ்வொரு கதையிலும் ஒரு குற்றத்தைத் தோற்றுவிக்கிறார். அந்தக் குற்றத்தை யார் செய்தது என்று நாம் அறிவதற்குப் பல இடங்களில் பல குறிப்புகளைக் கொடுத்துச் செல்வார். ‘இவர்தான் குற்றவாளி’ என்று வாசகர்கள் ஒரு கதாபாத்திரத்தைக் கட்டம்கட்டும்போது, வாசகர்கள் எதிர்பார்க்கவே செய்யாத ஒரு கதாபாத்திரத்தை ‘இவரே குற்றவாளி' என்று சொல்லி நம் முன் நிறுத்துவார். அந்த ஆச்சரியத்துடன் நாம் மீண்டும் அந்தக் கதையைப் படிக்கும்போது, அவர் தந்து சென்ற குறிப்புகள் எல்லாம் உண்மையில், அந்த உண்மையான குற்றவாளியை நோக்கியே இருப்பது நமக்குப் புரியும்.

இன்னும் சில கதைகளில் குற்றவாளி இவர்தான் என்று நேரடியாகவே சொல்லிவிடுவார். ஆனால் அவர் அந்தக் குற்றத்தை எப்படிச் செய்தார் எனும் புதிரை அவரே அவிழ்க்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

இந்தச் சிறப்புகள் எல்லாம் ஒரு புறமிருக்க, இன்னொரு முக்கியச் சிறப்பம்சம், ஒரு குற்றத்தைச் செய்வதற்கு அவர் படைத்த‌ கதாபாத்திரங்கள் என்ன மாதிரியான ஆயுதத்தைத் தேர்வு செய்கின்றன என்பது. இவரின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தேர்வுசெய்தது விஷம்!

விஷம் தோய்ந்த அந்தக் கதைகள் மற்றும் அந்தக் கதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் விஷம் குறித்து நமக்கு அறிமுகம் செய்கிறது ‘ஏ இஸ் ஃபார் ஆர்செனிக்’ எனும் புத்தகம். அகதா கிறிஸ்டியின் ரசிகரும் வேதியியலாளருமான காத்ரின் ஹர்குப் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ப்ளூம்ஸ்பெர்ரி பதிப்பகம் வெளியிட்ட இந்தப் புத்தகம் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது.

 
அகதா தன் கதைகளில் 14 விதமான விஷங்களைப் பயன்படுத்துகிறார். அவர் காலத்தில் சமூகத்தில் புழக்கத்திலிருந்த பெருமளவு விஷ வகைகள், மருத்துவப் பயன்பாட்டுக்கு உதவின. அப்படியான விஷ வகைகள் மற்றும் மருத்துவப் பயன்பாடிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்ட விஷ வகைகள் ஆகியவற்றைக் கொண்டு அவர் தன் நாவல்களைப் படைத்திருந்தார்.

தன் கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் விஷம், அது மனித உடலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அறிவியல்பூர்வமான விவரங்களைத் தன் கதைகளில் விளக்கமாகச் சொல்லியிருப்பார் அகதா. இந்த அம்சம், அவரின் நாவல் ஒன்று ‘பார்மாசூட்டிக்கல் ஜர்னல் அண்ட் பார்மாசிஸ்ட்’ எனும் மருந்தியல் இதழ் ஒன்றால் மதிப்பீடு செய்யப்படும் அளவுக்கு அகதாவை உயர்த்தியது. ஆச்சரியப்படும் வகையில் அந்த நாவல், ‘தி மிஸ்டீரியஸ் அஃபயர்ஸ் அட் ஸ்டைல்ஸ்’ எனும் அவரின் முதல் நாவலாகும். அவரால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது?

ஏனென்றால், அவர் அடிப்படையில் ஒரு செவிலியர். முதலாம் உலகப் போரில் செவிலித் தொண்டு புரிந்தவர். அப்போது அவர் மருந்துகளைக் கையாள வேண்டியிருந்தது. அந்த ஆர்வம், மருந்தியல் நிபுணர் ஒருவரிடம் தனிப்பட்ட முறையில் அவரை மாணவியாகச் சேர உந்தித் தள்ளியது. அந்த நாட்களில் அவர் பல விதமான விஷ மருந்துகளைப் பற்றி அறிந்துகொள்கிறார். அந்த அனுபவங்கள்தான் அவர் கதைகள் எழுதுவதற்குக் கைகொடுத்தன.

இவரின் நாவல்களைப் படித்துவிட்டு, பலர் அந்த நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷத்தை வாங்கிக் குற்றங்களைப் புரிந்தனர் என்பது இவர் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் அது உண்மையல்ல. மாறாக இவரின் ‘தி பேல் ஹார்ஸ்’ என்ற நாவலைப் படித்ததன் காரணமாக, மருத்துவமனை செவிலியர்கள் சிலர் ‘தாலியம்’ எனும் விஷத்தின் தாக்கத்தை உணர்ந்து, அந்த விஷத்தை உட்கொண்டவர்கள் பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

இப்படிப் பல விஷயங்களை அலசும் இந்தப் புத்தகத்தில், ஒரு குறிப்பிட்ட வகை விஷம் எப்படித் தோன்றியது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது, அதன் மருத்துவக் குணங்கள் என்ன, அந்த விஷத்துக்கான விஷமுறி மருந்து என்ன, அந்த விஷம் தொடர்பான குற்ற வழக்குகள் என்ன, அந்த வழக்குகள் எப்படி அகதாவைக் கதை எழுதத் தூண்டின என்பது உள்ளிட்ட தகவல்களையும் தருகிறார் நூலாசிரியர்.

நச்சுயியல் துறையை அறிமுகப்படுத்தியவர் என்று அறியப்படும் பாராசெல்சஸ், ‘எல்லாவற்றிலும் விஷம் இருக்கிறது. விஷம் இல்லாத ஒரு விஷயமும் இல்லை. நாம் எடுத்துக்கொள்ளும் அளவுதான், ஒரு விஷயத்தை விஷமாகவோ அல்லது நிவாரணமாகவோ மாற்றுகிறது’ என்கிறார். அதைப் புரிந்துகொண்ட அகதா, தன் படைப்புகளின் வழியே நம் முன் வைப்பது ரசாயன விஷத்தை மட்டுமல்ல. மனித மனத்தின் விஷத்தையும் சேர்த்துத்தான். அதுவே அவரது எழுத்துக்களை வெறும் சுவாரஸ்யம் என்பதாகச் சுருக்கிவிடாமல் படைப்பின் தளத்துக்கு உயர்த்துகிறது. 

நன்றி: தி இந்து (கலை ஞாயிறு)

Tuesday, August 30, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - V

நீங்கள் எந்த 'வெர்ஷன்' பிராமணர்..?


ந.வினோத் குமார்
 
அம்பேத்கரியல் வரலாற்றில் இந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு. அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு. அம்பேத்கர் எழுதிய 'இந்தியாவில் சாதிகள்' எனும் நூலுக்கு இந்த ஆண்டு 100 வயது. இவை எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமான ஒரு விஷயம்... 'பட்டியலின வகுப்பினர்' எனும் பிரிவு ஏற்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் ஒரு நூற்றாண்டு ஆகிறது!

1909-ம் ஆண்டு ஆகா கான் குழுவின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, 'தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் உண்மையில் இந்துக்கள் அல்ல' என்ற தகவலை முன் வைத்து, அம்பேத்கர் ஓர் அறிக்கையை பிரிட்டிஷ் வைஸ்ராயிடம் சமர்ப்பிக்கிறார். அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜே.ஹெச்.ஹட்டன் எனும் அதிகாரியின் தலைமையில் 1911-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அப்போது 'இந்துக்கள்' என்ற பிரிவிலிருந்து 'தீண்டத்தகாதவர்கள்' நீக்கப்பட்டு, அவர்களைத் தனியே கணக்கெடுப்புச் செய்தனர். பின்னர் 1916-ம் ஆண்டு 'ஒடுக்கப்பட்ட வகுப்பு' (Depressed Class) எனும் பிரிவு உருவாக்கப்படுகிறது. அதுதான் பின்னாளில், அதாவது 1935-ம் ஆண்டில் 'பட்டியலின வகுப்பு' என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி பார்த்தால், இந்த ஆண்டு 'பட்டியலின வகுப்பு'க்கு நூறு வயது!

இந்நிலையில், அம்பேத்கர் எழுதிய, அவரின் மறைவுக்குப் பின் வெளியான 'ரிட்டில்ஸ் இன் ஹிந்துயிஸம்' (இந்து மதத்தின் புதிர்கள்) எனும் நூலைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகிறது.

மதம், சமூகம் மற்றும் அரசியல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்து மதம் கொண்டிருக்கும் புதிர்கள் என்று 24 விஷயங்களை 8 பின்னிணைப்புகளுடன் அம்பேத்கர் எழுதுகிறார். அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து 'பாபாசாகேப் அம்பேத்கர் எழுத்தும் பேச்சும்' என்ற தலைப்பின் கீழ்  மகாராஷ்டிர மாநில அரசின் கல்வித் துறை வெளியிட்டது. அப்போது, 'இதிலிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் நிறைவடையாததாக உள்ளன' என்ற குறிப்புடன் அந்தப் புத்தகம் வெளியானது.

அந்த 24 புதிர்களிலிருந்து 10 புதிர்கள் மற்றும் ஒரு பின்னிணைப்பு ஆகியவற்றைத் தேர்வு செய்து, அடிக்குறிப்புகள் கொடுத்து 'நவயானா' பதிப்பகம் சமீபத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்துக்கு காஞ்சா ஐலையா முன்னுரை எழுதியிருக்கிறார்.


இந்தப் புத்தகத்திலிருக்கும் முதல் புதிரே மிகவும் அதிர்ச்சியான ஒன்றாக இருக்கிறது. 'ஒருவர் ஏன் இந்துவாக இருக்கிறார் என்பதை அறிவது கடினம்' என்பதாக உள்ளது அந்தப் புதிர்.

"ஒரு இஸ்லாமியரிடம் 'நீங்கள் ஏன் இஸ்லாமியராக இருக்கிறீர்கள்?' என்று கேட்டால், அவர் 'நான் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறேன். அதனால் இஸ்லாமியராக இருக்கிறேன்' என்று சொல்வார். ஒரு கிறித்துவரிடம் 'நீங்கள் ஏன் கிறித்துவராக இருக்கிறீர்கள்?' என்று கேட்டால், அவர் 'நான் கிறித்துவைப் பின்பற்றுகிறேன். அதனால் கிறித்துவனாக இருக்கிறேன்' என்று சொல்வார். ஆனால் ஒரு இந்துவிடம் 'நீங்கள் ஏன் இந்துவாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால், 'இந்து' என்று ஒரு மதம் இல்லவே இல்லை" என்கிறார் அம்பேத்கர்.

'இந்து மதம்' என்ற சொல்வழக்கே மிகவும் சமீபத்தில்தான் உருவாகியிருக்கிறது. 1816-17-ம் ஆண்டுவாக்கில் ராஜா ராம்மோகன் ராய் என்பவர்தான் இந்த வார்த்தையை முதன்முதலாகப் பயன்படுத்துகிறார். அதன்படி பார்த்தால், மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரையிலும் 'இந்து மதம்' என்று தனியாக ஒரு மதம் இருப்பதாகத் தெரியவில்லை.

11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அல் பிரூனி எனும் பயணி 1017-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவுக்கு வருகிறார். 'சிந்து' எனும் ஆற்றுக்குப் பக்கத்தில் வாழ்ந்து வந்த காரணத்தால் அப்பகுதி மக்களை அவர் 'ஹிந்த்' எனக் குறிப்பிட்டார். ஒரு நிலப்பரப்பைக் குறிக்கவே 'ஹிந்த்' எனும் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் இஸ்லாமியர்கள் படையெடுத்து வர, அந்த மக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக்கொள்ள இந்த வார்த்தையைப் பயன்படுத்த, பின்னாளில் 'ஹிந்து' எனும் சொல் மதரீதியான புழக்கத்துக்கு வந்தது.

ஆக, இந்து மதத்தின் ஆரம்பமே ஆட்டம் காணும் நிலையில், 'நான்கு வர்ணங்கள்: பிராமணர்களுக்குத் தாங்கள் தோன்றிய வரலாறு உண்மையானதுதான் என்பது தெரியுமா?' என்ற கேள்வியை எழுப்புகிறார் அம்பேத்கர். இதனை இந்து மதத்தின் 16-வது புதிராக வைக்கிறார் அவர்.

"பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு வர்ணங்கள் பிரஜாபதி என்பவரால் உருவாக்கப்பட்டது என்கிறது ரிக் வேதம். இன்னொரு வேதம், இவற்றை உருவாக்கியது காஸ்யபர் என்கிறது. மற்றுமொரு வேதம், இவற்றை மனு உருவாக்கினார் என்கிறது. வேதங்கள் தவிர்த்து, நம்மிடையே இருக்கும் இதர உபநிடதங்கள், ராமாயணம், மகாபாரதம் மற்றும் இதர புராணங்கள் போன்றவை இந்த வர்ணாஸ்ரமத்தைப் பற்றி ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையைக் கூறுகின்றன. இவற்றில் எதை நம்புவது?" என்ற கேள்வியை முன் வைக்கிறார் அம்பேத்கர்.

அடுத்த முறை யாராவது நம்மிடம் 'நான் பிராமணன் தெரியுமா' என்று எகத்தாளம் பேசினால், 'வேதங்கள், காவியங்கள், புராணங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் எந்த 'வெர்ஷன்' பிராமணர் நீங்கள்?' என்று கேள்வி கேட்க வேண்டும்!

இந்து மதத்தின் 22-வது புதிராக 'பிரம்மம் என்பது தர்மம் அல்ல: பிரம்மத்தால் என்ன நன்மை?' என்ற கேள்வியை எழுப்புகிறார் அம்பேத்கர்.

இதுகுறித்து அலசும்போது அவர் இப்படி எழுதுகிறார்: "ஜனநாயகம் என்பது அரசியல் இயந்திரத்துக்கும் மேலானது. ஒரு சமூகக் கட்டமைப்பு என்பதை விடவும் மேலானது. அது ஒரு மனநிலை அல்லது வாழ்க்கையின் தத்துவம்.

சிலர் ஜனநாயகத்தை சமத்துவத்துடனும் சுதந்திரத்துடனும் ஒப்பிடுவார்கள். சமத்துவமும் சுதந்திரமும் ஜனநாயகத்தின் ஆழமான கரிசனங்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எது சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் பேணிக் காக்கிறது? சிலர் 'சட்டம்' என்று பதில் சொல்லலாம். அது சரியான விடை அல்ல. அவற்றைக் காப்பது 'இன்னொருவரைத் தன்னைப் போல நினைக்கும் மனப்பான்மை'தான். இதைத்தான் பிரெஞ்சுக்காரர்கள் 'சகோதரத்துவம்' என்கின்றனர். ஆக சகோதரத்துவம்தான் ஜனநாயகத்தின் வேர்.

எனில், சகோதரத்துவத்தின் வேர் எது என்று பார்த்தால், அது மதம்தான். ஒருவரின் மதம் சகோதரத்துவத்தை வளர்த்தால், அந்தச் சமுதாயத்தில் ஜனநாயகம் சிறப்பாக உள்ளது என்று பொருள். சகோதரத்துவத்துக்கு இடமளிக்கவில்லை என்றால், அங்கு ஜனநாயகத்துக்கு வேலை இல்லை.

இந்தியாவில் ஏன் ஜனநாயகம் தழைக்கவில்லை? காரணம், இந்து மதம் சகோதரத்துவத்தை வளர்க்கவில்லை".

அப்புறமென்ன... புத்தரைத் தேடிப் போவோம் வாருங்கள்! 

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் ஐந்தாவது பதிவு இது.)

Friday, August 12, 2016

ஒலிம்பிக் பார்ப்பதற்கு ஒரு கைடு!

ந. வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 12 ஆகஸ்ட், 2016
 
பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன ஒலிம்பிக் போட்டிகள். எந்த ஸ்போர்ட்ஸ் சேனலைத் திறந்தாலும், ஒவ்வொரு சேனலிலும் ஒவ்வொரு விளையாட்டை ஒளிபரப்புகிறார்கள். எதைப் பார்க்க, எதை விட என்று பலரும் குழம்பலாம். அந்தப் பலரில் சிலர், ஒலிம்பிக் போட்டிகளைப் பார்ப்பது இது முதன்முறையாகக்கூட இருக்கலாம். 

கவலையை விடுங்கள். உங்களுக்காகவே வந்திருக்கிறது 'ஹவ் டு வாட்ச் தி ஒலிம்பிக்ஸ்' எனும் புத்தகம். பிரபல விளையாட்டுச் செய்தியாளர்கள் டேவிட் கோல்ட்ப்ளாட், ஜானி ஆக்டன் மற்றும் பால் சிம்ப்ஸன் ஆகியோர் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள். 'ப்ரொஃபைல் புக்ஸ்' பதிப்பக வெளியீடான இது, சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் தோற்றம், தொடக்க நிகழ்ச்சிகளின் வரலாறு, பதக்க விழாவின் பாரம்பரியம், போட்டி முடிவு நிகழ்ச்சிகளின் ‘ஹைலைட்' போன்ற விஷயங்களுடன், ஒலிம்பிக் போட்டியில் விளையாடப்படும் 31 வகை விளையாட்டுக்களின் தோற்றம், அவற்றின் முக்கியத்துவம், அவை ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்ட கதை, அந்தப் போட்டிகளின் விதிமுறைகள், போட்டியின்போது கடைப்பிடிக்கப்படும் சில நுணுக்கங்கள் என இந்தப் புத்தகம், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும் ஒரு ‘ரெடி ரெஃபரன்ஸ்' ஆக அமைந்திருக்கிறது என்று சொன்னால், அது மிகையில்லை. 

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள், ‘நாம் எப்படி ஒலிம்பிக்ஸ் போட்டிகளைப் பார்க்க வேண்டும்?' என்ற கேள்விக்கு ஐந்து விஷயங்களைப் பட்டியலிடுகிறார்கள்.

அதில் முதலாவது, ‘எந்த விளையாட்டை எதற்காகப் பார்க்க வேண்டும்?' என்ற புரிதல் நமக்கு அவசியம் என்கின்றனர். அதாவது, உங்களுக்குத் தடகளப் போட்டிகளைப் பார்ப்பதில் ஆர்வம் உண்டா? அப்படியென்றால், ஜெஸ்ஸி ஓவென்ஸ் பற்றித் தெரியுமா? உசைன் போல்ட் செய்த சாதனை குறித்து நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 1968-ம் ஆண்டு மெக்ஸிகோ ஒலிம்பிக்கில் நிகழ்ந்த ‘ப்ளாக் பவர் சல்யூட்' ஏற்படுத்திய விளைவுகள் என்ன என்பன போன்ற விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது அந்தப் போட்டிகளை நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கும்போது, நல்ல புரிதலுடன் விளையாட்டைப் பார்ப்பீர்கள். 

இரண்டாவது, ‘நீங்கள் விரும்பும் விளையாட்டு தோன்றிய கதையைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்'. ஏன்? உதாரணத்துக்கு உங்களுக்கு ‘ரக்பி' விளையாட்டு மிகவும் பிடிக்கும் என வைத்துக்கொள்வோம். அந்த விளையாட்டு இந்த ரியோ ஒலிம்பிக்ஸில் ‘ரக்பி 7' என்ற பெயரில் ஏன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால், அந்த விளையாட்டின் போக்கு உங்களுக்குப் பிடிபடும். இங்கிலாந்தில் உள்ள ‘ரக்பி' எனும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த வில்லியம் வெப் எல்லிஸ் என்ற 16 வயதுச் சிறுவன், கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மைதானத்திலிருந்து அந்தப் பந்தைத் தூக்கிச் சென்றுவிட்டான். அப்படி உருவானதுதான் ‘ரக்பி' விளையாட்டு. பின்னாளில் அந்தச் சிறுவனின் பெயரிலே ‘ரக்பி உலகக் கோப்பை' போட்டிகள் நடைபெற ஆரம்பித்தன. இப்படியான வரலாற்றைத் தெரிந்து வைத்துக்கொண்டு ஒரு விளையாட்டை நீங்கள் அணுகினால், அந்த விளையாட்டை நீங்கள் பார்க்கும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

மூன்றாவதாக, 'ஒரு விளையாட்டின் அடிப்படை விதிகளையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்'. எதற்காக? உதாரணத்துக்கு உங்களுக்கு வில் வித்தைப் போட்டியைக் காண்பதில் ஆர்வம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் ‘ஃபாஸ்ட்' எனும் வார்த்தை அவ்வப்போது பயன்படுத்தப்படும். அப்படி என்றால் என்ன? ‘ராபின் ஹுட் ஷாட்' என்றால் என்ன? அதற்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் எத்தனை? இப்படியான சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டால், அந்த விளையாட்டின் சூட்சுமம் உங்களுக்கு விளங்கிவிடும். 

நான்காவதாக, ‘ஒரு விளையாட்டின் நெளிவு சுளிவுகளை நாம் அறிந்திருக்க வேண்டும்' என்கிறார்கள் ஆசிரியர்கள். அது ஏன்? உதாரணத்துக்கு பாட்மின்டன் போட்டியை எடுத்துக்கொள்வோம். டென்னிஸ் விளையாட்டில் ஒரு வீரர் செய்யும் ‘சர்வ்'தான் அந்த விளையாட்டு வீரருக்கான புள்ளிகளைப் பெற்றுத் தருவதில் முக்கியமானதாக இருக்கும். ஆனால் இறகுப்பந்துப் போட்டியில் ‘சர்வ் இஸ் நாட் கிங்', அதாவது ‘சர்வ்' அவ்வளவு முக்கியமானதல்ல என்று சொல்லப்படுகிறது. எதனால் அப்படி என்று நீங்கள் தெரிந்துகொண்டால், அந்தப் போட்டியை நீங்கள் இன்னும் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.

ஐந்தாவதாக, ‘ஒரு விளையாட்டு, எப்படி ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டது' என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, துப்பாக்கிச் சுடுதல் போட்டி முன்பு எவ்வாறு விளையாடப்பட்டது? ஒலிம்பிக் போட்டியில் அது சேர்க்கப்பட்டவுடன், அந்த விளையாட்டு விதிகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் என்ன என்பன போன்ற விஷயங்களைத் தெரிந்துகொண்டால், நீங்கள் பார்க்கும் அந்த விளையாட்டு நிச்சயம் அர்த்தமுள்ள பொழுதுபோக்காக இருக்கும். 

இந்தப் புத்தகம் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒரு கையேடாக மட்டுமல்லாமல், விளையாட்டுத்துறை தொடர்பான ஒரு பொது அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கிறது என்று சொன்னால், அது முற்றிலும் உண்மை. ஹேப்பி ஒலிம்பிக்ஸ்! 

நன்றி: தி இந்து (இளமை புதுமை)