Wednesday, April 16, 2014

ஆனந்தமடம்



வங்காள மூலம்: பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஆங்கில மொழிபெயர்ப்பு: ஸ்ரீ அரவிந்தர், பரிந்திர குமார் கோஷ்

.வினோத் குமார்

இந்தியாவின் பெருமை எதில் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? வேற்றுமையில் ஒற்றுமை? காமசூத்ரா? .டி. பார்க்குள்? இந்துத்வா? நீங்கள் பட்டியலிடும் எதிலும் இந்தியாவின் பெருமை இல்லை. 200 ஆண்டுகாலமாக கிழக்கிந்திய கம்பெனியர் தன்னை ஆட்சி செய்த போது, தன்னகத்திலிருந்தே வீறு கொண்டு எழுந்த அந்த சுதந்திர உணர்வில்தான் இந்தியாவின் பெருமை இருக்கிறது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றின் தொடக்கம் என்பது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. தமிழர்களுக்கு அது 1805. வேலூர் கலகம் (புரட்சி என்று சொல்லலாம்தானே!) கம்பெனியருக்கு சிறு கலக்கமூட்டியது. தமிழனைத் தவிர வேறு இந்தியன் எவரைக் கேட்டாலும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் 1857ல், தொடங்கியது என்று சொல்வார்கள். இந்த இரண்டு கருத்துகள், தேதிகள் தவிர்த்து, மூன்றாவதாக ஒரு கருத்தும் தேதியும் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் உண்டு.

1770 ஆம் ஆண்டு! அது வங்காளிகளின் வரலாற்றில் துயர்மிகுந்த ஆண்டு. வங்கத்தின் பகுதிகளில் எல்லாம் வறட்சியும், வறுமையும் தாண்டவமாடிய காலம். பட்டினியால் இறந்த மக்கள் அதிகம். இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அதிகம். அப்போது அங்கு இஸ்லாமிய ஆட்சி நடந்து கொண்டிருந்தது. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல பட்டினியில் மக்கள் தவித்துக் கொண்டிருந்த போது, நவாப் மேலும் மேலும் அதிக வரி விதித்தான்.

இதே காலகட்டத்தில்தான் கிழக்கிந்திய கம்பெனியர் மெல்ல மெல்ல இந்தியாவில் ஊடுருவினர். நவாபை கைக்குள் போட்டுக்கொண்டு கம்பெனியாரும் தங்கள் பங்கிற்கு மக்களைச் சுரண்டினர்.

இந்தத் துன்பங்களில் இருந்து மக்களை விடுவிக்க சன்னியாசிகள் கூட்டமொன்று வனங்களில் மறைந்து கொண்டு இஸ்லாமியப் படைகளையும், கம்பெனிய படைகளையும் எதிர்த்து வருகின்றனர். 1770,1771,1773,1774 ஆகிய ஆண்டுகளில் கம்பெனியருடனான போரில் பல நூறு சன்னியாசிகள் கொல்லப்படுகின்றனர். சன்னியாசிகளின் அந்த கலகத்தை முறியடித்துவிட்டு, கம்பெனியர் தங்கள் ஆட்சியை விஸ்தரிக்கின்றனர்.

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இந்த சன்னியாசிகளின் போராட்டம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது வேறு. ஆனால் கம்பெனியருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த முன்னோடிகள் இவர்கள்தான். ஆகவே, இனி சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது 1770களிலேயே துவங்கிவிட்டது என்று சொன்னாலும், அது ஏற்கத் தக்கதே!

வங்காள சன்னியாசிகளின் இந்தப் போராட்டத்தை இன்று வங்காளிகளே கூட மறந்திருக்கலாம். அப்படி மறந்துவிடக் கூடாது, இந்தப் போராட்டம் சுவடற்றுப் போய்விடக் கூடாது என்பதாலோ என்னவோ, அன்றே பங்கிம் சந்திர சட்டர்ஜி 'ஆனந்தமடம்' என்ற தலைப்பில் இப்போராட்டத்தை நாவலாகப் பதிவு செய்துவிட்டார்.



1882ம் ஆண்டு வெளிவந்த இந்த நாவலில் கவிதையாக இடம்பெற்றிருக்கும் 'வந்தே மாதரம்' தான் பின்னாளில் இந்தியாவின் தேசியப் பாடலாக ஆனது. தேசிய கீதத்தையும், தேசியப் பாடலையும் எழுதியவர்கள் இரண்டு வங்காளிகள் என்பது குறிப்பிடத்தக்கது!

வங்காள ஆண்டு 1176ம் ஆண்டில் கதை துவங்குகிறது. அந்த ஆண்டில்தான் வறட்சி ஏற்பட்டது. பாடசின்ஹா எனும் கிராமத்திலிருக்கும் தன் மாட மாளிகையை விட்டு நாயகனும், நாயகியும் இடம்பெயர்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நாயகனும், நாயகியும் பிரிய நேர்கிறது. நாயகன் 'சாந்தர்கள்' எனும் சன்னியாசிக் கூட்டத்துடன் ஐக்கியமாகிறான். சன்னியாசிக் கூட்டம் இருக்கும் இடத்திற்குப் பெயர்தான் 'ஆனந்த மடம்'. அந்த சன்னியாசிகள் ஆரம்பத்தில் இஸ்லாமியர்களை எதிர்க்கிறார்கள். பிறகு கம்பெனியாரை எதிர்க்கிறார்கள். இறுதியில் சன்னியாசிக் கூட்டம் மொத்தமாக அழிந்து போகிறது.

மொஹெந்திரா, சத்யானந்தா, ஜீவானந்தா, பவானந்தா, கல்யாணி, சாந்தி என இவர்கள்தான் நாவலின் முக்கியப் பாத்திரங்கள். தேசபக்தி, காதல், குடும்பம், போர் இவைதான் கதையின் நீரோட்டங்கள். 

சன்னியாசிகளை வைணவர்களாகச் சித்தரித்திருக்கிறார் பங்கிம் சந்திர சட்டர்ஜி. அதிலும் ரஜோ குணத்தைப் பின்பற்றும் வைணவர்களாக. அவர்களுக்கு தாய் என்பது தாய்நாடு தான். ஓர் இடத்தில் இஸ்லாமியர்களை எதிர்க்கக் காரணமாக, 'அவர்கள் கடவுளின் எதிரிகள்' என்று ஒரு கதாபாத்திரம் சொல்கிறது. இஸ்லாமிய ஆட்சியாளர்களின் மீதான கோபம், சாதாரண இஸ்லாமியர்கள் மீதும் திரும்புகிறது. மண்ணின் மைந்தர்கள் இந்து எனவும், இஸ்லாமியன் எனவும் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டது கம்பெனியர்களுக்கு வசதியாகிவிட்டது. பிரித்தார்கள்... பிழைத்தார்கள்!

நாவலினூடே வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரலானவாரன் ஹேஸ்டிங்ஸ், கேப்டன் தாமஸ் போன்ற நிஜ மனிதர்களும் வருகிறார்கள்.

பொதுவாகவே, சட்டர்ஜி, பானர்ஜி, உபாத்யாயா, கோஸ்வாமி போன்ற பலதரப்பட்டவங்காளிகளுக்கு இயல்பிலேயே ஆங்கில மோகம் உண்டு. அதற்கேற்றாற் போல், நாவலின் இறுதியில் சட்டர்ஜி இப்படிச் சொல்கிறார். அது ஆங்கில மொழியில் அப்படியே:

"Unless the English rule this land, there is no chance of the renaissance of the eternal religion.

.... The worship of three hundred and thirty million deities is not the eternal religion; that is an inferior popular religion. Under its influence, the true religion, as the Mlechhas (Non-Aryans) call it, is lost. The true Hindu religion is based on knowledge, not on action. That knowledge is of two kinds; secular or external and spiritual or internal. The inner spiritual knowledge is the chief part of true religion. But unless secular knowledge about the outside world comes the other knowledge about the inner world cannot grow.

.... In order to restore the eternal religion, at the outset knowledge of the material world must be preached. There is not much material knowledge in the country now, there is none capable of teaching it.

.... So the necessary knowledge has got to be brought and introduced from other countries. The English are past masters in the knowledge pertaining to the material world.

... So we shall make the British our rulers."

வங்காள மூலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் ஸ்ரீ அரவிந்தர். நான்கு பகுதிகளாக அமைந்த இந்த நாவலின், முதல் பகுதியின் முதல் 13 அத்தியாயங்களை அவர்தான் மொழிபெயர்த்தார். மீதி பகுதிகளை அரவிந்தரின் சகோதரர் பரிந்தர குமார் கோஷ் மொழிபெயர்த்துள்ளார்.

இந்த நாவலின் தாக்கத்தால், இதை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குப் பயன்படுத்துகிறார். நாவலில் இருந்து சில பகுதிகளை, பாடல்களை எடுத்து கைப்பிரதிகளாக வழங்குகிறார் அரவிந்தர்.

அன்றைய நாட்களில் இந்த நாவல் ஏற்படுத்திய தாக்கம், இன்றுள்ள தலைமுறையினரிடத்தில் ஏற்படுத்துமா என்பது சந்தேகத்திற்குரியது. இதை நீங்கள் வாசித்து உங்களுக்கு எந்தத் தாக்கமும் ஏற்படாமல் போனாலும் பரவாயில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் துவக்கப் புள்ளியை அறிந்து கொண்ட சந்தோஷமாவது உங்களுக்குக் கிடைக்கும்!






No comments:

Post a Comment