Sunday, October 5, 2014

நமது இரவு நண்பர்கள்!

ந. வினோத் குமார்  
 
இரவுகள் எப்போதும் வசீகரமானவை. அதிலும் ராக் கொக்குகளின் கீச்சொலிகள், புனுகுப் பூனைகளின் காலடிச் சலசலப்பு, ஆந்தைகளின் அலறல் போன்றவை இயற்கையோடு இணைந்தவை.

அவற்றின் இயல்பு பழகாத நிலையில், திகிலூட்டுபவையாக நமக்குத் தோன்றலாம். இயல்பு பழகும்போது, மனதை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்வதாக இந்த இயற்கை ஒலிகள் அமைகின்றன.

இரவுகள், மனிதர்களுக்கான நமக்கு மட்டுமே உரித்தானவை அல்ல. மரப்பாச்சைகள், மின்மினிகள், தேள்கள், பூரான்கள், பட்டாம்பூச்சிகள் போன்ற உயிரினங்களுக்கும் இரவுகள் இன்றியமையாதவை.
 
இரவே உலகம்

சொல்லப்போனால், மேற்சொன்ன உயிரினங்கள் பலவற்றையும் இரவுகள்தான் வாழ வைக்கின்றன. இரவுகளில்தான் தங்களுக்கான இரையை அந்த உயிரினங்கள் தேடிச் செல்கின்றன. இரவுகளில்தான் தங்களுக்கான உலகை அவை அடையாளம் கண்டுகொள்கின்றன.

தங்களுடைய வாழ்வின் பெரும்பாலான நேரத்தை இரவுகளிலேயே கழிக்கும் இந்த உயிரினங்களுக்கு இரவாடிகள் (Nocturnal) என்று பெயர். உயிர்ச் சூழலில் இரவாடிகளின் பங்கு அளப்பரியது.
 
தமிழில் முதன்மை

இரவாடிகள் குறித்து ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் வந்துள்ளன. தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரவாடிகள் பற்றி சில பதிவுகள் உள்ளன என்றாலும், புத்தகமாக எதுவும் வந்ததில்லை.

அந்தக் குறையைப் போக்கும் வகையில் வெளியாகியுள்ளது ‘தமிழகத்தின் இரவாடிகள்' எனும் புத்தகம். சென்னையைச் சேர்ந்த காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம் இந்தப் புத்தகத்தைத் தொகுத்துள்ளார். சுற்றுச்சூழல் தொடர்பான புத்தகங்களை வெளியிட்டு வரும் தடாகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
 

விழிப்புணர்வு

முள்ளம்பன்றி, காட்டுப் பக்கி, தேவாங்கு, மர நாய், ஓடற்ற நத்தைகள் என நாம் இதுவரை கேள்விப்பட்டிராத அல்லது சொற்பமாகக் கேள்விப்பட்டிருக்கும் உயிரினங்கள் குறித்து அரிய தகவல்களைத் தருகிறார் ஆசிரியர்.

பட்டாம்பூச்சிகள் (Moth) பற்றியும், எறும்புதின்னி என்று தவறாகச் சுட்டப்படுகிற அலங்கு பற்றியும், ஆந்தைகள் பற்றியும் நமது தொன்மைப் பதிவுகளான சங்கப் பாடல்களில் இருந்து ஆசிரியர் ஆதாரங்களை எடுத்துக்காட்டியுள்ளார்.

நாளிதழ்களில் ‘ஆஸ்திரேலியப் பறவை' என்ற அறிவிப்புடன் அடிக்கடி வெளியாகும் கூகை எனப்படும் வெண்ணாந்தை, ஒரு அக்மார்க் இந்தியப் பறவை என்பது நமக்கு விழிப்புணர்வு இல்லாததைப் பறைசாற்றுகிறது.

ஆந்தையைப் போன்றே விவசாயிகளின் மற்றொரு நண்பனான மண்புழு ஓர் இரவாடி என்ற செய்தி மேலதிக ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
 
உறுத்தல்

மனம் கவரும் ஒளிப்படங்கள், கருத்தைக் கவரும் தகவல்கள், கண்ணை உறுத்தாத பதிப்பாக்கம் எனப் பல வகைகளில் தரமாக உள்ள இந்தப் புத்தகத்தில் எழுத்துப் பிழைகளும் தென்படுவது நெருடல்.

இரவாடிகள் குறித்து ‘வழிகாட்டிக் கையேடாக' இந்தப் புத்தகத்தைக் கருதமுடியாவிட்டாலும், தமிழ் வாசகர்களுக்கு அவற்றை முறையாக அறிமுகப்படுத்திய விதத்தில், இந்த நூல் ஒரு முன்னோடி.
 
நன்றி: தி இந்து

No comments:

Post a Comment