ந.வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 11 ஜூன் 2017
பதிப்பிக்கப்பட்ட தேதி: 11 ஜூன் 2017
முதல் நாவலை எழுதி முடித்துவிட்டு, அடுத்த நாவலைக் கொண்டு வருவதற்கு, ஒரு
நாவலாசிரியருக்கு இருபது ஆண்டுகள் தேவைப்படுகின்றன என்பது வாசகருக்கு
வேண்டுமானால் மலைப்பாக இருக்கலாம். நாவலாசிரியருக்கோ, ‘உள்ளுக்குள் ஒரு
படைப்பு உருவாகிக்கொண்டிருக்கும் காலம்’ அது!
தான் எழுதிய முதல் நாவலுக்கே புக்கர் பரிசு கிடைக்கப் பெற்றவர் அருந்ததி
ராய். அப்போது அவர் எழுத்தாளராக மட்டுமே இருந்தார். 1997-ம் ஆண்டு ‘காட்
ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ எனும் அவரின் முதல் நாவல் வெளியானது. சரியாக 20
ஆண்டுகளுக்குப் பிறகு ‘தி மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்’ எனும்
நாவல் பெங்குவின் பதிப்பக வெளியீடாக இந்த மாதம் 6-ம் தேதி உலகெங்கும்
வெளியானது.
இந்த 20 ஆண்டுகளில் அருந்ததி ராய் என்பவர் எழுத்தாளராக மட்டுமே இல்லாமல்,
குறிப்பாக, புனைவு எழுத்தாளராக மட்டுமே தன்னைக் கருதிக்கொள்ளாமல், நாட்டில்
அவ்வப்போது நிகழும் அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையில், அபுனைவு
எழுத்துகள் மூலமும் தன் கருத்துகளைப் பிரதிபலித்துவந்திருக்கிறார். நர்மதா
அணை உள்ளிட்ட மக்களுக்கு எதிரான வளர்ச்சித் திட்டங்களை விமர்சித்தல்,
தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தல், மாவோயிஸ்ட்டுகளுடன்
தண்டகாரண்யம் காட்டுக்குள் பயணம் செய்தல் எனப் பல்வேறு விதங்களில் தன்னை
ஒரு செயற்பாட்டாளராகவும் முன்னிறுத்திக்கொண்டிருக்கிறார்.
எழுத்தாளர் என்ற நிலையிலிருந்து செயற்பாட்டாளர் என்ற நிலைக்கு அவர் வர
நேர்ந்திருக்கும் இருபது ஆண்டு அனுபவங்களின் அடிப்படையில் அவர்
எழுதியிருக்கிற படைப்பாகத் தான் நாம் அவரின் இரண்டாவது நாவலை அணுக
வேண்டும். இந்த நாவலின் கதை, இந்தியாவின் கடந்த இருபது ஆண்டு கால
வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் அரசியல் நிகழ்வுகளின் திரட்சியாக
அமைந்திருக்கிறது. அஞ்சும் என்ற திருநங்கை, காஷ்மீர் பிரிவினைவாதியைக்
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட திலோத்தமா, காவல்துறையின் வன்புணர்வால்
பிறந்த தன் மகளை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விட்டுச்செல்லும் ரேவதி
எனும் மாவோயிஸ்ட் போராளி ஆகிய மூன்று பெண்களின் பார்வையில் கதை
சொல்லப்படுகிறது.
அஞ்சும் தனது வாழ்க்கையை நேர்க்கோட்டில் சொல்லிச் செல்ல, திலோத்தமாவின்
வாழ்க்கையோ முன்னும் பின்னுமாகச் சொல்லப்படுகிறது. ரேவதியின் வாழ்க்கையோ
கடித முறையில் சொல்லப்படுகிறது. இப்படி அந்தப் பெண்களின் வாழ்க்கையைச்
சொல்லும் முறையில் வித்தியாசம் காட்டியதோடு, அவர்கள் நடமாடிய இடங்களான
முறையே டெல்லி, காஷ்மீர், தெலங்கானா ஆகியவற்றின் நிலப்பரப்பையும் அந்தந்தக்
காலச் சூழலில் நிலவிய அரசியல் பின்னணியோடு கதையை நெய்திருப்பதில் தேர்ந்த
எழுத்தாளராக வெற்றி பெற்றிருக்கிறார் ராய். நாவலாசிரியராக வெற்றி
பெற்றிருக்கிறாரா என்பது, இந்த நாவல் பரவலான வாசகப் பரப்பில் என்ன
மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தப்போகிறது என்பதைப் பொறுத்து அமையும்!
இறந்தவர்களைப் புதைக்கும் கல்லறைத் தோட்டம்தான் நாவலில் முக்கியமான
சம்பவங்கள் நடைபெறும் இடம். அதுதான் பல்வேறு அரசியல் சூழல்களால்
பாதிக்கப்பட்ட நபர்கள் ஒன்றுகூடும் இடமாகவும், எங்கோ தொலைத்த தங்களின்
சந்தோஷக் கணங்களைத் தேடிக் கண்டடைகிற இடமாகவும் இருக்கிறது. ‘மனிதர்கள்
தங்களின் உண்மையான மகிழ்ச்சியை இறந்த பிறகுதான் கண்டடைகிறார்கள்’ எனும்
சிந்தனையின் குறியீடா கவும் கல்லறைத் தோட்டத்தை நாம் அணுகலாம்.
அவுரங்கசீப் காலத்தில் கடவுள் இல்லை என்று சொன்ன ஹஸ்ரத் ஷர்மத் ஷாஹீத்தின்
வரலாற்றைச் சொல்வதில் தொடங்கி, இந்தியப் பிரிவினை, நெருக்கடிநிலைக் காலம்,
இந்திரா காந்தி கொலை, சீக்கியர் மீதான தாக்குதல், போபால் விஷ வாயுத்
தாக்குதல், காஷ்மீர் தீவிரவாதம், பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம்,
இரட்டைக் கோபுரத் தாக்குதல், இராக்கில் அமெரிக்கா நடத்திய போர், ஆப்பரேஷன்
‘க்ரீன் ஹன்ட்’, மாட்டு அரசியல், அண்ணா ஹசாரே போராட்டம், உனா எழுச்சி
உள்ளிட்ட இந்திய, உலக அரசியல் நிகழ்வுகளை எல்லாம் நாவலின் ஆங்காங்கே வரும்
ஓரிரு கதாபாத்திரங்களின் மூலம் தொட்டுச் செல்கிறார் ராய். இந்தியாவின்
கடந்த இருபது ஆண்டுகால வரலாற்றை இந்த நாவலின் மூலம் ஒரு கழுகுப் பார்வை
பார்த்துவிட முடியும் என்பது இந்நாவலின் சிறப்பம்சம். தமிழகத்தில் சாதியம்
எப்படி வேரூன்றியிருக்கிறது என்பதற்கு முருகேசன் எனும் ராணுவ வீரர்
கதாபாத்திரம் மூலமாக அருந்ததி ராய் சொல்லும் செய்தி, மிகவும் அழுத்தமான
ஒன்று!
‘சில்லுசில்லாக உடைந்திருக்கிற ஒரு கதையை எப்படி மொத்தமாகச் சித்தரிப்பது?
எல்லாருமாக மாறுவதன் மூலம். இல்லை. எல்லாமுமாக மாறுவதன் மூலம்!’ என்று
நாவலின் பின்னட்டையில் குறிப்பிடுகிறார் அருந்ததி ராய். நாமும் அப்படி
நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமாக மாறும்போது, ஒவ்வொரு அரசியல் சம்பவத்திலும்
தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளும்போது, இந்த நாவலின் முழுமையை நம்மால்
உணர முடியும்.
நன்றி: தி இந்து (கலை இலக்கியம்)