ந.வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 04 டிசம்பர், 2016
உலகமயமாக்கலின் 25-ம் ஆண்டை அலசுகிற அதே நேரத்தில், இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில், பழங்குடிகள் அழிந்துவரும் உண்மையை நம்மில் பலர் அறிந்துகொள்ள முற்படுவதே இல்லை.
வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அவர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்படுகிறது. மாறி வரும் நிலப் பயன்பாடுகள் அவர்களின் கலாச்சாரத்தை நிறமிழக்கச் செய்துவருகின்றன. ‘நான் என்பது நிலம்’ என்ற தத்துவத்தின்படி வாழ்ந்துவருகிறவர்களின் நிலங்கள் பறிக்கப்படுகிறபோதும், அதிலிருந்து துரத்தியடிக்கப்படுகிறபோதும் அவர்களின் மொத்த இருப்பும் கேள்விக்குள்ளாகிறது.
பதிப்பிக்கப்பட்ட தேதி: 04 டிசம்பர், 2016
உலகமயமாக்கலின் 25-ம் ஆண்டை அலசுகிற அதே நேரத்தில், இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில், பழங்குடிகள் அழிந்துவரும் உண்மையை நம்மில் பலர் அறிந்துகொள்ள முற்படுவதே இல்லை.
வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அவர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்படுகிறது. மாறி வரும் நிலப் பயன்பாடுகள் அவர்களின் கலாச்சாரத்தை நிறமிழக்கச் செய்துவருகின்றன. ‘நான் என்பது நிலம்’ என்ற தத்துவத்தின்படி வாழ்ந்துவருகிறவர்களின் நிலங்கள் பறிக்கப்படுகிறபோதும், அதிலிருந்து துரத்தியடிக்கப்படுகிறபோதும் அவர்களின் மொத்த இருப்பும் கேள்விக்குள்ளாகிறது.
இப்படியான சூழலில்தான் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது ‘தி ஆதிவாசி
வில் நாட் டான்ஸ்’ எனும் புத்தகம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சந்தால்
பழங்குடியின மக்களைப் பற்றிய 10 சிறுகதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பை
‘ஸ்பீக்கிங் டைகர்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின்
ஆசிரியர் ஹன்ஸ்தா சோவேந்திர சேகர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மருத்துவராகப்
பணியாற்றிவரும் இவரே சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்தான். இது
இவருக்கு இரண்டாம் புத்தகம்.
நம் ஊர்களில் ‘பிறர் கண் வைத்துவிட்டால், நமக்கு ஆகாது’ என்று
நம்பப்படுகிற ஒரு வழக்கம் எப்படிப் புழங்கிவருகிறதோ, அதுபோல சந்தால்
பழங்குடியினர் மத்தியிலும் இந்த ‘கண் வைத்தல்’ எனும் தொன்மம்
புழங்கிவருகிறது. அதன் அடிப்படையில் சேகர் எழுதிய ‘தி மிஸ்டீரியஸ்
எய்ல்மென்ட் ஆஃப் ரூப்பி பஸ்கி’ எனும் நாவல்தான் அவரின் முதல் புத்தகம்.
அது, 2014-ம் ஆண்டுக்கான ‘தி இந்து பிரைஸ்’ விருதுக்கான இறுதிப் பட்டியலில்
தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விருது இந்தியாவில்
ஆங்கிலத்தில் வெளியான சிறந்த புனைவு இலக்கியங்களுக்கு ஆண்டுதோறும்
சென்னையில் நடைபெறும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ நிகழ்வில்
வழங்கப்படுகிறது.
அந்த விருது அந்தப் புத்தகத்துக்குக் கிடைக்க வில்லை. ஆனால், அதே
புத்தகம்தான் அவருக்கு 2015-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் ‘யுவ
புரஸ்கார்’ விருதைப் பெற்றுத் தந்தது.
இந்நிலையில், அவரது இந்த இரண்டாம் புத்தகம், தற்போது 2016-ம் ஆண்டுக்கான
‘தி இந்து பிரைஸ்’ விருதுக்கான இறுதிப் பட்டியலில் தேர்வாகியிருக்கிறது.
இரண்டாவது முறையாக ஒரு எழுத்தாளரின் புத்தகம் இறுதிப் பட்டியலில்
தேர்வாகியிருப்பதால், இந்தப் புத்தகத்துக்கு இந்த ஆண்டு அந்த விருது
கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தகத்தின் சிறப்பு
பணி மாற்றல் காரணமாகத் தங்களின் சொந்த ஊரை விட்டு குஜராத் மாநிலத்துக்கு
இடம்பெயரும் சந்தால் பழங்குடியினத் தம்பதி ஒன்று, அசைவ உணவு சமைக்கக்
கூடாது எனும் எழுதப்படாத சட்டத்துக்கு ஏற்பத் தனது வாழ்க்கை முறையை எப்படி
மாற்றிக்கொள்கிறது என்பதைப் பேசுகிறது ஒரு கதை. இரண்டு ரொட்டித்
துண்டுகளுக்கும் 50 ரூபாய்க்குமாக ஒரு சந்தால் பழங்குடியினப் பெண் எவ்வாறு
போலீஸ்காரர் ஒருவரின் இச்சைக்கு ஆளாக்கப்படுகிறார் என்பதைச் சித்தரிக்கிறது
இன்னொரு கதை. நிலக்கரி எடுப்பதற்காகத் தங்களின் நிலங்களைப் பறிக்கும்
பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அரசுக்கும் எதிராக ஒரு சந்தால் பழங்குடி
எப்படி எதிர்வினையாற்றுகிறார் என்பதைக் கூறுகிறது மற்றொரு சிறுகதை.
இப்படி, இந்தத் தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளும் சந்தால் பழங்குடியின
மக்கள் தினசரி சந்திக்கும் பிரச்சினைகளைக் களமாகக் கொண்டிருக்கின்றன.
‘நாங்கள் பொம்மைகள் போன்றவர்கள். யாரோ ஒருவர் ‘ஆன்’ பட்டனை அழுத்தவோ எங்கள்
பின்னால் ஏதோ ஒரு சாவியைத் திருகவோ செய்கிறார். உடனே சந்தால்கள் ஆகிய
நாங்கள் தாளம் தட்டவோ, பீப்பி ஊதவோ செய்துகொண்டே ஆடத் தொடங்குகிறோம்.
அப்படி ஆடும்போதே, நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும் நிலத்தை யாரோ
அபகரிக்கிறார்கள். நான் சொல்வது சரியா?’ என்று புத்தகத்தின் பின்னட்டைக்
குறிப்பு கேட்கிறது. தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதையிலிருந்து எடுக்கப்பட்ட
இந்த வரிகள், நுகர்வுக் கலாச்சாரத்தில் மயங்கிக் கிடக்கிற நம்மை அறைவதாகத்
தோன்றுகிறது.
சந்தால் பழங்குடியினரைப் பற்றி நன்கு தெரிந்தவர்களால் இந்தப் புத்தகம்
மொழிபெயர்க்கப்பட்டால், ‘சோளகர் தொட்டி’க்குப் பிறகு தமிழில் வரும் மிக
முக்கியமான பழங்குடி இலக்கியமாக இது திகழும் என்பதில் ஐயமில்லை!
நன்றி: தி இந்து (கலை இலக்கியம் - சிறிய மாற்றங்களுடன்)
ஹன்ஸ்தா சோவேந்திர சேகரின் படம்: ஸ்பீக்கிங் டைகர் புக்ஸ்.காம்
ஹன்ஸ்தா சோவேந்திர சேகரின் படம்: ஸ்பீக்கிங் டைகர் புக்ஸ்.காம்