Showing posts with label tribals. Show all posts
Showing posts with label tribals. Show all posts

Tuesday, January 15, 2019

யார் அந்த பிர்ஸா முண்டா..?

ந.வினோத் குமார்

புகழ்பெற்ற ஒருவரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பது புதிதல்ல. வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு இயக்குநர்களால் குறிப்பிட்ட ஒரு மனிதரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பதும் புதிதல்ல. ஆனால், ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த இரண்டு இயக்குநர்கள், ஒரே மனிதரைப் பற்றி, வேறு வேறு மொழிகளில் படம் எடுப்பது முற்றிலும் புதிது. இந்தப் புதுமைக்குக் காரணமான அந்த நபர்… பிர்ஸா முண்டா..!

இந்த ஆண்டு அக்டோபர் மாதம், பிர்ஸா முண்டாவைப் பற்றி முண்டாக்கள் பேசும் ‘முண்டாரி’ மொழியிலேயே ஒரு படத்தை இயக்கப் போவதாக ‘அறம்’ புகழ், கோபி நயினார் தெரிவித்திருந்தார். அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

அதற்கு அடுத்த மாதமே, பிர்ஸா முண்டாவின் பிறந்தநாள் (நவம்பர் 15) அன்று, அவரைப் பற்றி இந்தியில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.


இந்த இருவருமே மேற்கு வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி, பிர்ஸா முண்டாவின் வாழ்க்கையைப் பற்றி ‘ஆரண்யேர் அதிகார்’ எனும் தலைப்பில் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்துத்தான் திரைக்கதையை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த நாவல் 1977-ம் ஆண்டு வெளியாகி, 1979-ம் ஆண்டு, மகாஸ்வேதா தேவிக்கு சாகித்ய அகாடெமி விருதைப் பெற்றுத் தந்தது. பிறகு, இந்த நாவலை நேரடியாக வங்க மொழியிலிருந்து தமிழுக்கு ‘காட்டில் உரிமை’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார் பிரபல மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி.

***
அது அன்றைய வங்காள மாகாணம். அங்கு உலி ஹாத்து என்கிற கிராமத்தில் 1875-ம் ஆண்டு, சுகானா முண்டா – கர்மி தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் பிர்ஸா முண்டா. அந்தப் பகுதி இன்றைய ஜார்க்கண்ட மாநிலத்தில் உள்ளது. அவரது பெற்றோர், விவசாயக் கூலிகளாக இருந்தனர்.

பிர்ஸாவின் ஆரம்பக் கால வாழ்க்கை, சல்கட் எனும் கிராமத்தில் கழிந்தது. இதர முண்டா சிறுவர்களைப் போலவே, மாடு மேய்ப்பதும், குழல் ஊதுவதும், மண்ணில் புரண்டு விளையாடுவதும் என அவரது இளமைக் காலம் சென்றது. வாலிபனாக வளர்ந்து வந்தபோது, ‘டுயிலா’ எனும் இசைக் கருவியையும் அவர் வாசிக்கப் பழகியதோடு, மல்யுத்த விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.

ஊரிலும் வீட்டிலும் நிலவிய வறுமை, அவரை அயுபாட்டு எனும் கிராமத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கு ஜெய்பால் நாக் என்பவர் நடத்தி வந்த பள்ளி ஒன்றில் அவர் சேர்ந்து தொடக்கக் கல்வியைக் கற்றார். படிப்பில் படு சுட்டியாக விளங்கிய பிர்ஸாவை கிறிஸ்த்துவ மதத்துக்கு மதம் மாறச் சொன்னார் ஜெய்பால் நாக். காரணம், அப்போதுதான், பிர்ஸாவால் ஜெர்மன் மிஷனரிகள் நடத்தி வந்த பள்ளியில் சேர்ந்து, மேற்படிப்புப் படிக்க முடியும். கல்வி மீது கொண்டிருந்த ஆர்வத்தால், பிர்ஸாவும் மதம் மாறி, அந்தப் பள்ளியில் சேர்ந்தார்.

அந்தப் பள்ளி, சாய்பாஸா எனும் இடத்தில் அமைந்திருந்தது. அங்கு ‘சர்தார்’ எனும் இனக்குழுவினர் ஆங்கிலேய அதிகாரிகள், மிஷனரிகள் ஆகியோருக்கு எதிராகப் போராடி வந்தனர். அந்தப் போராட்டம், இளம் பிர்ஸாவின் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், முண்டா போன்ற ஆதிவாசிகள் மீது ஆங்கிலேயர்கள் மேற்கொண்டு வந்த ஒடுக்குமுறையைப் பற்றியும் அவருக்குப் பல விஷயங்கள் விளங்கின. தான் படித்த பள்ளியிலும் சாதிய ரீதியானப் பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுவதைக் கண்டு மனம் நொந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத குருமார்களிடம் அவர் வாக்குவாதம் நடத்தினார். இதனால், அவர் தனது பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட வேண்டியதாயிற்று. பள்ளியிலிருந்து வெளிவந்தது முதல், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் மேலோங்கியிருந்தது.


ஆங்கிலேயர்களைத் தனி ஒருவனாக இருந்து எதிர்த்துவிட முடியாது என்பது பிர்ஸாவுக்குப் புரிந்தது. போராட்டத்துக்கு ஆட்களைத் திரட்ட வேண்டும். அவ்வாறு ஆட்களைத் திரட்ட, முதலில் அவர்களின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆங்கிலேயர்களுக்கும் அவர்களுக்குத் துணைபோகும் ஜமீந்தார்களுக்கும் தாங்கள் அடிமையாக இருக்கிறோம் என்பதை முண்டாக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இதைச் சாத்தியப்படுத்த வேண்டுமானால், அவர்களை மத ரீதியாக மடைமாற்ற வேண்டும் என்று கருதினார்.

அப்படித்தான் உருவானது, ‘பிர்சாயித்’ எனும் மதம். அதில் ஆர்வமுடன் பலர் இணைந்தனர். அவர்களுக்குத் தாங்கள் முண்டா என்பதில் கர்வம்கொள்ள வேண்டும் என்று அவர் போதித்தார். காடுகளும் விளைநிலங்களும் நதிகளும் எல்லோருக்கும் பொதுவானது என்றும், அவற்றை முன் வைத்து, ஆங்கிலேயர்களோ ஜமீந்தார்களோ பத்திரத்தில் கைநாட்டுப் பெற்றுக்கொண்டு தங்களை அடிமைப்படுத்திவிட முடியாது என்றும் அவர்களுக்கு உணர்த்தினார். பள்ளியில் தான் பெற்ற அறிவைக் கொண்டு, முண்டாக்கள் பின்பற்றி வந்த பயனில்லாத மருத்துவ முறைகளையும், கால்நடைகளைப் பலி கொடுப்பதையும், பேய், பூத மூடநம்பிக்கைகளையும் பிர்ஸா அகற்ற முயன்றார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.

இந்தக் காரணங்களால் அவர் ‘தர்த்தி ஆபா’ என்று அழைக்கப்பட்டார். அதாவது, ‘பூமியின் தந்தை’ எனக் கடவுள் ஸ்தானத்தில் வைத்து அவரை முண்டாக்கள் வணங்கினர். கூட்டத்தைத் திரட்டியாகிவிட்டது, ஆங்கிலேயர்களை எதிர்க்க இதுதான் சரியான நேரம் என்று முடிவு செய்தார் பிர்ஸா. உதித்தது, ‘உல்குலான்!’


‘உல்குலான்’ என்றால் புரட்சி என்று பொருள். மறைந்திருந்து தாக்கும் ‘கெரில்லா’ போர் முறையைப் பின்பிற்றினார்கள் முண்டாக்கள். அதில் பல நூறு போலீஸார் கொல்லப்பட்டனர். பிர்ஸாவைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்குவதாக அறிவித்தது பிரிட்டிஷ் அரசு. பணத்துக்கு ஆசைப்பட்டு, முண்டா இனத்தைச் சேர்ந்த சில நம்பிக்கைத் துரோகிகள் பிர்ஸாவைக் காட்டிக்கொடுத்தனர். 1900-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி கைது செய்யப்பட்ட அவர், ஜூன் 9-ம் தேதி சிறையில், காலராவால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், காலரா தாக்கியதற்கான எந்த அறிகுறியும் பிர்ஸாவிடம் தென்படவில்லை. பிரிட்டிஷார் செய்த எத்தனையோ சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. எனவே, அவரது இறப்புக்கு உண்மையான காரணம் என்ன என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கிறது!

அந்த மாவீரனின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும், அவரது பிறந்த தினம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் இதர விடுதலைப் போராட்ட வீரர்களுடன் இவரது படமும் உள்ளது. இந்தப் பெருமையை அடைந்த ஒரே ஆதிவாசித் தலைவர் பிர்ஸா முண்டா மட்டும்தான்.

பிர்ஸா இறந்தபோது அவருக்கு வயது 25. கால் நூற்றாண்டுக் காலமே வாழ்ந்த ஒருவன், நூற்றாண்டு கடந்தும் கொண்டாடப்படுகிறான் என்றால், அவன்தானே உண்மையான தலைவன்..?

நன்றி: காமதேனு (03/12/2018), மகாஸ்வேதா தேவி படம்: creativeyatra.com

Monday, August 28, 2017

நிலம் இழக்கும் பழங்குடிகளின் கதைகள்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 04 டிசம்பர், 2016


உலகமயமாக்கலின் 25-ம் ஆண்டை அலசுகிற அதே நேரத்தில், இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில், பழங்குடிகள் அழிந்துவரும் உண்மையை நம்மில் பலர் அறிந்துகொள்ள முற்படுவதே இல்லை.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அவர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்படுகிறது. மாறி வரும் நிலப் பயன்பாடுகள் அவர்களின் கலாச்சாரத்தை நிறமிழக்கச் செய்துவருகின்றன. ‘நான் என்பது நிலம்’ என்ற தத்துவத்தின்படி வாழ்ந்துவருகிறவர்களின் நிலங்கள் பறிக்கப்படுகிறபோதும், அதிலிருந்து துரத்தியடிக்கப்படுகிறபோதும் அவர்களின் மொத்த இருப்பும் கேள்விக்குள்ளாகிறது.

இப்படியான சூழலில்தான் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது ‘தி ஆதிவாசி வில் நாட் டான்ஸ்’ எனும் புத்தகம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சந்தால் பழங்குடியின மக்களைப் பற்றிய 10 சிறுகதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பை ‘ஸ்பீக்கிங் டைகர்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஹன்ஸ்தா சோவேந்திர சேகர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மருத்துவராகப் பணியாற்றிவரும் இவரே சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்தான். இது இவருக்கு இரண்டாம் புத்தகம்.

 
நம் ஊர்களில் ‘பிறர் கண் வைத்துவிட்டால், நமக்கு ஆகாது’ என்று நம்பப்படுகிற ஒரு வழக்கம் எப்படிப் புழங்கிவருகிறதோ, அதுபோல சந்தால் பழங்குடியினர் மத்தியிலும் இந்த ‘கண் வைத்தல்’ எனும் தொன்மம் புழங்கிவருகிறது. அதன் அடிப்படையில் சேகர் எழுதிய ‘தி மிஸ்டீரியஸ் எய்ல்மென்ட் ஆஃப் ரூப்பி பஸ்கி’ எனும் நாவல்தான் அவரின் முதல் புத்தகம். அது, 2014-ம் ஆண்டுக்கான ‘தி இந்து பிரைஸ்’ விருதுக்கான இறுதிப் பட்டியலில் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விருது இந்தியாவில் ஆங்கிலத்தில் வெளியான சிறந்த புனைவு இலக்கியங்களுக்கு ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ நிகழ்வில் வழங்கப்படுகிறது.

அந்த விருது அந்தப் புத்தகத்துக்குக் கிடைக்க வில்லை. ஆனால், அதே புத்தகம்தான் அவருக்கு 2015-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் ‘யுவ புரஸ்கார்’ விருதைப் பெற்றுத் தந்தது.

இந்நிலையில், அவரது இந்த இரண்டாம் புத்தகம், தற்போது 2016-ம் ஆண்டுக்கான ‘தி இந்து பிரைஸ்’ விருதுக்கான இறுதிப் பட்டியலில் தேர்வாகியிருக்கிறது. இரண்டாவது முறையாக ஒரு எழுத்தாளரின் புத்தகம் இறுதிப் பட்டியலில் தேர்வாகியிருப்பதால், இந்தப் புத்தகத்துக்கு இந்த ஆண்டு அந்த விருது கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
புத்தகத்தின் சிறப்பு

பணி மாற்றல் காரணமாகத் தங்களின் சொந்த ஊரை விட்டு குஜராத் மாநிலத்துக்கு இடம்பெயரும் சந்தால் பழங்குடியினத் தம்பதி ஒன்று, அசைவ உணவு சமைக்கக் கூடாது எனும் எழுதப்படாத சட்டத்துக்கு ஏற்பத் தனது வாழ்க்கை முறையை எப்படி மாற்றிக்கொள்கிறது என்பதைப் பேசுகிறது ஒரு கதை. இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கும் 50 ரூபாய்க்குமாக ஒரு சந்தால் பழங்குடியினப் பெண் எவ்வாறு போலீஸ்காரர் ஒருவரின் இச்சைக்கு ஆளாக்கப்படுகிறார் என்பதைச் சித்தரிக்கிறது இன்னொரு கதை. நிலக்கரி எடுப்பதற்காகத் தங்களின் நிலங்களைப் பறிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அரசுக்கும் எதிராக ஒரு சந்தால் பழங்குடி எப்படி எதிர்வினையாற்றுகிறார் என்பதைக் கூறுகிறது மற்றொரு சிறுகதை.


இப்படி, இந்தத் தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளும் சந்தால் பழங்குடியின மக்கள் தினசரி சந்திக்கும் பிரச்சினைகளைக் களமாகக் கொண்டிருக்கின்றன. ‘நாங்கள் பொம்மைகள் போன்றவர்கள். யாரோ ஒருவர் ‘ஆன்’ பட்டனை அழுத்தவோ எங்கள் பின்னால் ஏதோ ஒரு சாவியைத் திருகவோ செய்கிறார். உடனே சந்தால்கள் ஆகிய நாங்கள் தாளம் தட்டவோ, பீப்பி ஊதவோ செய்துகொண்டே ஆடத் தொடங்குகிறோம். அப்படி ஆடும்போதே, நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும் நிலத்தை யாரோ அபகரிக்கிறார்கள். நான் சொல்வது சரியா?’ என்று புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு கேட்கிறது. தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதையிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வரிகள், நுகர்வுக் கலாச்சாரத்தில் மயங்கிக் கிடக்கிற நம்மை அறைவதாகத் தோன்றுகிறது.

சந்தால் பழங்குடியினரைப் பற்றி நன்கு தெரிந்தவர்களால் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டால், ‘சோளகர் தொட்டி’க்குப் பிறகு தமிழில் வரும் மிக முக்கியமான பழங்குடி இலக்கியமாக இது திகழும் என்பதில் ஐயமில்லை!

நன்றி: தி இந்து (கலை இலக்கியம் - சிறிய மாற்றங்களுடன்)

ஹன்ஸ்தா சோவேந்திர சேகரின் படம்: ஸ்பீக்கிங் டைகர் புக்ஸ்.காம்