Thursday, March 1, 2018

டிரம்பின் ஓராண்டு: என்ன நினைக்கிறது அமெரிக்கா?

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 28 பிப்ரவரி 2018

 
ஜனவரி 20-ம் தேதியுடன் அமெரிக்க அதிபராக ஓராண்டை நிறைவுசெய்திருக்கிறார் டிரம்ப். வாழ்த்துகளைவிடவும் விமர்சனங்களைத்தான் அதிகம் எதிர்கொள்கிறார். அவரது ஆட்சியையும் செயல்பாடுகளையும் விமர்சிக்கும் புத்தகங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. தான்தோன்றித்தனமாகச் செயல்படுபவர் என்று தொடங்கி மனப்பிறழ்வு கொண்டவர் எனும் அளவுக்கு அவரைக் கடுமையாக விமர்சிக்கின்றன பத்திரிகைகள். நிக்ஸனுக்குப் பிறகு ‘இம்பீச்மென்ட்’டை (பதவிநீக்க நடவடிக்கை) எதிர்கொள்ளும் அளவுக்கு அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் பேசப்படுகிறது.

அமெரிக்காவின் அரசியல் குற்றச்சாட்டு நடைமுறைப்படி, அதிபர் பதவியில் இருக்கும்போது மட்டுமல்ல, அதற்கு முன்பு டிரம்ப் ஏதேனும் குற்றம் செய்திருந்தாலும் அவற்றை அரசியல் குற்றச்சாட்டின் கீழ் கொண்டுவர முடியும். அதேபோல, அதிபர் பதவியில் இருக்கும்போது அலுவல் சார்ந்த குற்றம் மட்டுமல்லாமல், தனி நபராகச் செய்யும் குற்றத்தையும் அரசியல் குற்றச்சாட்டின்கீழ் கொண்டுவர முடியும்.

டிரம்பைப் பொறுத்தவரை குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்பட்ட காலத்திலிருந்தே அவரது கடந்தகாலத் தவறுகள் தொடர்பாகப் பல விஷயங்கள் பேசப்பட்டன. அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான மனநிலை பரவலாகிவந்த சூழலில், ‘கறுப்பர்களுக்கு என்னால் வீடுகளை வாடகைக்கு விட முடியாது’ என்று சொன்னவர் டிரம்ப். இதனால் ‘நியாயமான வீட்டுவசதிச் சட்டம் 1968-ன் கீழ் அவர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை, அந்த வழக்கு முடித்துவைக்கப்படவில்லை.

பொதுமக்களுக்கு என்று சொல்லி முறையான அனுமதி இல்லாமல் அறக்கட்டளையைத் தன் சுயநலத்துக்காக டிரம்ப் பயன்படுத்தியவர். இதுதொடர்பாகவும் ஒரு வழக்கு உண்டு. சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறுபவர்களைத் தன் முதல் எதிரியாகக் காட்டிக் கொள்ளும் டிரம்ப், ஒரு காலத்தில் சட்டத்துக்குப் புறம்பாகப் பலரை அமெரிக்காவுக்கு வரவழைத்துத் தன்னுடைய ‘டிரம்ப் டவர்’ எனும் கட்டிடத்தைக் கட்டவும், ‘டிரம்ப் மாடல் மேனேஜ்மெண்ட்’ எனும் ‘அழகிப் போட்டி’ நிறுவனத்தில் வேலைசெய்யவும் ஈடுபடுத்தினார். அவர்கள் உழைப்பைச் சுரண்டினார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், டிரம்ப் அதிபர் பதவியில் இருக்கும்போது அவர் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைப் பதவியிலிருந்து விலக வைக்க முடியும் என்கிறார், ‘தி கேஸ் ஃபார் இம்பீச்மெண்ட்’ என்ற நூலை எழுதிய ஆலன் ஜே.லிட்ச்மன். வாஷிங்டனில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் லிட்ச்மன், அமெரிக்காவின் கடந்த 30 ஆண்டு அதிபர் தேர்தல் முடிவுகளைக் கச்சிதமாகக் கணித்தவர் என்ற பெருமைக்குரியவர் – டிரம்ப் வெற்றி உட்பட!

 
அமெரிக்காவில் அதிபர் ஒருவரின் மீது அரசியல் குற்றச்சாட்டு பதிவானால், முதலில் அதை நீதித் துறைக் குழு விசாரிக்கும். பிறகு, அவர் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டின் மீதும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் ஓட்டெடுப்பு நடக்கும். ஒரு குற்றச்சாட்டின் மீது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகள் பதிவானால், மேலவையான செனட் சபையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அந்த விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிதான் விசாரிப்பார். எனினும், செனட் சபையே அங்கு அனைத்து முடிவுகளையும் எடுக்கும். நீதிபதியின் தீர்ப்பைக்கூட அதனால் ஒதுக்கிவிட முடியும்.

இந்த நடைமுறையின் கீழ் இதுவரை ஆண்ட்ரூ ஜான்சன், பில் கிளிண்டன் ஆகியோர் மீது மட்டும்தான் பதவிநீக்க நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இருவருமே குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். வியட்நாம் மீது போர் தொடுத்தது, ‘வாட்டர்கேட்’ ஊழல் ஆகிய காரணங்களுக்காக அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் மீது பதவிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், விசாரணைக்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்துவிட்டார் நிக்ஸன். ராஜினாமா செய்த முதல் அமெரிக்க அதிபர் என்ற ‘பெருமை’யையும் அவர் பெற்றார்.

நிக்ஸன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, தேசத் துரோகம். இரண்டு, மானுடத்துக்கு எதிரான குற்றம். வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவர தன்னிடம் ரகசியத் திட்டம் இருப்பதாகக் கூறி, அமைதிப் பேச்சுவார்த்தையைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். இதனால் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களையும் வியட்நாமியர்களையும் சாவின் விளிம்பில் நிறுத்தினார். இதைத் தேசத்துரோகக் குற்றமாக அமெரிக்கா கருதியது. 1965-ல் அமெரிக்காவின் வியட் நாம் போர், அருகிலிருந்த கம்போடியாவிலும் பரவியது. அங்கு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குண்டுப் பொழிவுகளை அமெரிக்கா மேற்கொண்டது. இந்த ரகசியப் போர் ‘மானுடத்துக்கு எதிரான குற்றம்’ என்று அழைக்கப் பட்டது.

டிரம்பின் கதையும் கிட்டத்தட்ட இதேதான். அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெறுவதற்காக ரஷ்யாவின் உதவியை நாடியதை தேசத் துரோகக் குற்றமாகக் கருத முடியும் என்கிறார் லிட்ச்மன். தேர்தல் பிரசாரத்தின்போது ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல்களை ரஷ்யா பரிசோதிக்க வேண்டும் என்று டிரம்ப் கேட்டுக்கொண்டது மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் அவர். அதேபோல, பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதை ‘மானுடத்துக்கு எதிரான குற்றம்’ என்று கூறலாம்.

வெள்ளை மாளிகைக்குள் அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து மைக்கேல் வுல்ஃப் என்பவர் எழுதிய ‘ஃபயர் அண்ட் ஃப்யூரி’ எனும் புத்தகம் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. வெள்ளை மாளிகையில் பணியாற்றும் சிலரிடம் சேகரித்த தகவல்களைக் கொண்டு இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். தன்னுடைய எண்ணங்களை, வார்த்தைகளைக் கட்டுப்படுத்தத் தெரியாமல், தான்தோன்றித்தனமாக எதையாவது செய்வது டிரம்பின் வழக்கம் என்கிறார். அதற்கான ஒரு சான்று, ‘அணு ஆயுத பட்டன் என் கையிலும் இருக்கிறது’ என்று டிரம்ப் சொன்னது. ‘என்னை விடவும் இந்த விஷயத்தைப் பற்றி வேறு யாருக்கும் தெரியாது’, ‘என்னால் மட்டுமே இதைச் சரிப்படுத்த முடியும்’ என்று அடிக்கடிச் சொல்வது அவரது சுயமோகத்தைக் காட்டுகிறது என்று லிட்ச்மன் சுட்டிக்காட்டுகிறார். மற்றவர்களைத் தன்னுடைய சுயத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது தன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கான கருவியாகவோ பார்க்கும் குணம் சுயமோகிகளுக்கு உண்டு. அடுத்தவர் சொல்லும் அறிவுரையையோ அல்லது விமர்சனத்தையோ அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த ‘மனநிலைப் பிறழ்வு’ விஷயத்தை விவாதிப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. அரசியல் குற்றச்சாட்டு நடைமுறைப்படி, அதிபர் பதவியில் இருப்பவருக்கு, அதிபர் அலுவல்களைக் கவனிக்க முடியாத அளவுக்கு உடல்நிலை அல்லது மனநிலை மோசமாக இருந்தால், அவரைப் பதவியிலிருந்து விலக்க முடியும். அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது சட்டத் திருத்தம் இதற்கு வழிவகுக்கிறது. ‘அதிபராக டிரம்ப் தொடர்வதற்கு, அவரிடம் போதிய மனநலம் இல்லை’ என்று அமெரிக்காவில் உள்ள பிரபல மனநல நிபுணர்கள், உளவியலாளர்கள், சமூகப் பணியாளர்கள் என 35 பேர் அடங்கிய குழு, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழுக்குக் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி, முதல் ஓராண்டிலேயே கடுமையான குற்றச்சாட்டுகளையும், பதவிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் எனும் ஊகங்களையும் எதிர்கொண்டிருக்கும் டிரம்ப், எதுபற்றியும் அலட்டிக்கொள்ளவில்லை. அவர் சிரித்த முகத்துடன் பேசுகிறார்: “அமெரிக்க அதிபருக்கான ஆளுமை அதிகம் கொண்ட ஒரே அதிபர் நான்தான், ஆபிரஹாம் லிங்கனைத் தவிர!”

நன்றி: தி இந்து (தமிழ்)

No comments:

Post a Comment