ந.வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 14 ஏப்ரல் 2018
'வீட்டில் ஒரு நூலகம்' என்பது பலருக்கும் இருக்கும் கனவு. ஆனால், ‘புத்தகங்களுக்காக ஒரு வீடு’ என்று ஏங்கிய ஒரு மனிதர் இருந்தார் என்றால், அது அம்பேத்கரைத் தவிர வேறு யாருமில்லை. அந்த ஏக்கத்தின் விளைவே, மும்பையில் இருக்கும் ‘ராஜகிரகம்’ எனும் வீடு. அதை வீடு என்று சொல்வதைவிட நூலகம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அம்பேத்கரும் அதையே விரும்பியிருப்பார்!
பரோடா மகாராஜா சாயாஜிராவின் தயவால் லண்டனில் படிக்கச் சென்ற அம்பேத்கர் 1917-ல் இந்தியாவுக்குத் திரும்பி, அந்த மகாராஜாவிடம் தனது ‘செஞ்சோற்றுக் கடனை’ திருப்பிச் செலுத்த ஆயத்தமாகிறார். லண்டனில் இருந்த 4 ஆண்டுகளில், புத்தகம் படிப்பதைத் தவிர அம்பேத்கருக்கு வேறு ஒரு முக்கிய வேலையும் இருந்தது. அது, புத்தகங்களைச் சேகரிப்பது. நியூயார்க்கில் அம்பேத்கர் இருந்த காலத்தில், அங்கிருந்து மட்டுமே சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான, மிகவும் அரிதான புத்தகங்களை அவர் சேகரித்தார் என்று அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர், பதிவுசெய்திருக்கிறார்.
தன்னுடைய சேகரிப்பில் இருந்த புத்தகங்களை ஒரு சரக்குக் கப்பலில் அனுப்பிவிட்டு, இன்னொரு பயணிகள் கப்பலில் இந்தியாவுக்குப் புறப்பட்டார் அம்பேத்கர். மும்பையில் வந்து இறங்கிய அம்பேத்கருக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று காத்திருந்தது. தன் புத்தகங்களைச் சுமந்து வந்த கப்பல், மூழ்கிவிட்டது என்பதுதான் அது!
அப்படி ஒரு சம்பவம் வேறு யாருக்காவது நிகழ்ந்திருந்தால், அதற்குப் பிறகு அவர்களுக்குப் புத்தகங்களின் மீது இருந்த காதல் காணாமல் போயிருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக அம்பேத்கருக்கு அந்தத் துர்பாக்கியம் நிகழவில்லை. 1931-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டபோது சுமார் 32 பெட்டிகளில் அடங்கும் அளவுக்கு அவர் புத்தகங்களை வாங்கினார் என்பதை அறியும்போது, இந்தப் புரட்சி நெருப்புக்குப் புத்தக வாசிப்பு என்பது எவ்வளவு இன்றியமையாத ஒன்றாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
1930-களில் மும்பையில் குடியமர்ந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, தனது சேகரிப்பில் இருந்த புத்தகங்களைப் பத்திரப்படுத்துவதற்காகவே வீடொன்றைக் கட்டினார் அம்பேத்கர். அதுதான் ‘ராஜகிரகம்’. அம்பேத்கர், புத்தகங்களை மட்டுமல்ல, புத்தனையும் நேசித்தவர். அதனால்தான் புத்தகங்களுக்காகத் தான் கட்டிய வீட்டுக்கு, பண்டைய புத்த சாம்ராஜ்யத்தின் பெயரைச் சூட்டினார்.
புத்தர் மீது அம்பேத்கருக்கு இருந்த ஈடுபாட்டைப் பற்றிப் பலருக்கும் தெரியும். அதுகுறித்துப் பல புத்தகங்களும் வந்துவிட்டன. ஆனால், புத்தகங்கள் மீது அம்பேத்கர் கொண்டிருந்த காதலைப் பற்றிப் பரவலாகத் தெரியாது. அந்தக் குறையைப் போக்கும்விதமாகச் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது ‘டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்’ எனும் நூல். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதியிருக்கும் இந்நூலில், ‘நூல்களை விழுங்கிய நுண்ணறிவாளர்’ அம்பேத்கர், நமக்கு அறிமுகமாகிறார்.
அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில், ராஜகிரகத்தில் இருந்த மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை சுமார் 69 ஆயிரம் என்கிற செய்தி, நம்மை மலைக்க வைக்கிறது. அன்றைய ஆசியத் துணைக் கண்டத்தில், அம்பேத்கருடையதுதான் மிகப் பெரிய தனிநபர் நூலகமாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று, அவற்றில் பல நூல்கள், அவர் தொடங்கிய ‘மக்கள் கல்விக் கழகத்திலும்’, சித்தார்த்தா கல்லூரியிலும் இருக்கின்றன. அவற்றை அம்பேத்கரே நன்கொடையாக அளித்தார். அப்படியும்கூட, அம்பேத்கர் மறைந்த சமயத்தில் அவரது நூலகத்தில் சுமார் 35 ஆயிரம் புத்தகங்கள் இருந்ததாக ‘இன்ஸைட் ஆசியா’ என்ற புத்தகத்தை எழுதிய அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜான் குந்தர் பதிவுசெய்திருக்கிறார்.
இப்படிப்பட்ட அவரது நூலகத்தில், தமிழ்நாட்டிலிருந்து வெளியான இரண்டு புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. ஒன்று, சென்னையில் பேராசிரியராகப் பணியாற்றிய பி.லட்சுமி நரசு (அன்றைய காலனியாதிக்க தென்னிந்தியாவில், நவீன பவுத்த இயக்கத்தின் முன்னோடியாகச் செயல்பட்டவர்) எழுதிய ‘தி எஸ்ஸென்ஸ் ஆஃப் புத்திசம்’ (1907) எனும் புத்தகம். மற்றது, நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.சிதம்பரம் எழுதிய ‘ரைட் ஆஃப் டெம்பிள் எண்ட்ரி’ (1929) எனும் புத்தகம். அன்று அச்சில் இல்லாமல் போன முந்தைய புத்தகத்தை ‘புத்த நெறி பற்றி வெளியான சிறந்த ஆங்கில நூல்’ என்று கருதிய அம்பேத்கர், அதனுடைய மறுபதிப்புக்குத் துணைநின்றார். பிந்தைய புத்தகத்தைப் படித்த அம்பேத்கர், அதனுடைய ஆசிரியருக்குத் தன் கைப்பட கடிதம் எழுதி பாராட்டுத் தெரிவித்தார்.
இப்படிப் பல்வேறு தகவல்களைத் தாங்கி வந்திருக்கிறது கி.வீரமணியின் இந்தப் புத்தகம்.
அம்பேத்கருடைய படுக்கையில் எப்போதும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் கிடக்கும். இரவு நெடுநேரம் கண் விழித்துப் படித்து, தனக்கே தெரியாமல் தான் கண்ணயரும்போது அவருடைய மார்பில் ஒரு புத்தகம் திறந்த நிலையில் கிடக்கும். இப்படி ஓய்வு ஒழிச்சலின்றிப் படித்த அம்பேத்கரிடம், அவரது நண்பர் நாம்தேவ் நிம்காடே ஒருமுறை, “இப்படிச் சலிப்படையாமல் வாசிக்கிறீர்களே, நீங்கள் இளைப்பாறவே மாட்டீர்களா?” என்று கேட்டபோது, அம்பேத்கர் சொன்ன பதில் இது: “எனக்கு இளைப்பாறுதல் என்பது ஒரு தலைப்பிலிருந்து வேறு ஒருவகையான, முற்றிலும் மாறான ஒரு புத்தகத்துக்கு மாறுவதுதான்!”
நூலக நேரம் முடிந்த பிறகும் படித்துக்கொண்டிருந்த அம்பேத்கரை, பல சமயங்களில் அந்த நூலகங்களின் காவலாளிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய நிகழ்வுகள் குறித்து நம்மில் சிலர் அறிந்திருக்கலாம். ஆனால், அம்பேத்கர் படிப்பாளியாக மட்டும் நின்றுவிடவில்லை. இந்தியாவில் ‘நூலக அறிவியல்’ என்ற துறையை முழுமையாகப் புரிந்துகொண்ட முதல் தொலைநோக்காளராகவும் மிளிர்ந்தவர்.
அவரது பார்வையில், நூலகம் என்பது புத்தகங்களைச் சேகரித்து வைக்கும் இடமாக மட்டுமல்லாமல், சாதி, மதம், இனம், மொழி போன்ற வித்தியாசங்களைக் கடந்து சகோதரத்துவத்தை வளர்க்கும் ஒரு சமூக அமைப்பாகவும் விளங்க வேண்டும் என்று விரும்பியவர். அதனால்தான் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூகச் சீர்திருத்தவாதியும் கல்வியாளருமான சர் ஃபெரோஸ்ஷா மேத்தாவின் நினைவாக அன்றைய மகாராஷ்டிர அரசு, அவருக்கு ஒரு சிலையை நிறுவ முடிவெடுத்தபோது, ‘அந்தப் பணத்தைக் கொண்டு, அவரின் பெயரில் ஒரு நூலகத்தை நிறுவலாமே’ என்று கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்து கடிதம் எழுதினார் அம்பேத்கர்.
புத்தகங்கள் ஏற்படுத்திய தாக்கம், வழங்கிச்சென்ற சிந்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ‘தி புத்தா அண்ட் ஹிஸ் தம்மா’ எனும் மிகச் சிறந்த நூலை அம்பேத்கர் எழுதுகிறார். ஆனால், அதுதான் அவர் கடைசியாக எழுதிய புத்தகம் என்பது எவ்வளவு பெரிய சோகம்! அந்தப் புத்தகத்தின் பொருளடக்கம் மற்றும் உள்ளடக்கத்தின் மையம் ஆகியவற்றை எழுதி அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு அனுப்பி, அந்தப் புத்தகத்தை வெளியிட நிதியுதவிசெய்யுமாறு கேட்டார் அம்பேத்கர். நேரு அந்தக் கடிதத்தை அன்றைய துணை ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அனுப்ப, அவரோ அந்தப் புத்தகத்துக்கு நிதியுதவி கிடைக்காமல் செய்துவிட்டார். தலைசிறந்த படைப்புகள் எந்தத் தடையையும் தாண்டி வெளிவந்தே தீரும். அம்பேத்கரின் இறப்புக்குப் பின்னர் அந்தப் புத்தகம் வெளியானது.
தன் வாழ்க்கை முழுவதும் வாழும் புத்தனாக வாழ்ந்த இந்தப் புத்தகனுக்கு ஒரு ‘கெட்ட’ பழக்கம் உண்டு. புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கும் அவர், அதை யாருக்கும் கடன் கொடுக்கமாட்டார்!
நன்றி: தி இந்து (நூல்வெளி)
No comments:
Post a Comment