Tuesday, June 12, 2018

தன் மரணத்தை எழுதிக்கொண்டவனுக்கு நீதி!

ந.வினோத் குமார் 

அது 2011-ம் ஆண்டு, ஜூன் 11-ம் தேதி. மும்பையில் இருந்து வெளிவரும் ‘மிட் டே’ பத்திரிகையின் செய்தியாளர் ஜே.டே. கொல்லப்பட்டுவிட்டார் என்று தகவல்கள் வெளியாயின. ‘மிட் டே’ என்ற ஒரு பத்திரிகை இந்தியாவில் வெளியாகிறது என்ற தகவலே, அப்போதுதான் பலருக்கும் தெரிந்தது. அப்படியான சூழலில், ஜே.டே. குறித்துப் பெரும்பாலான தென்னிந்திய ஊடகவியலாளர்களுக்குத் தெரியவில்லை. இருந்தும், கிடைத்த தகவல்களைக் கொண்டு, செய்தியும் சில கட்டுரைகளும் வெளியாயின. 

அந்தச் செய்திகள் எல்லாவற்றிலும், தவறாது இடம்பெற்றிருந்த ஒரு தகவல்… அவர், மும்பையின் நிழல் உலகத்தைப் பற்றித் தொடர்ந்து புலனாய்வுக் கட்டுரைகள் எழுதி வந்தார் என்பது! ‘இதழியலில், ‘புலனாய்வு இதழியல்’ என்று தனியாக எதுவும் இல்லை. எல்லா இதழியலுமே அடிப்படையில் புலனாய்வு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்’ என்பார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான காப்ரியல் கார்சியா மார்கேஸ். ஜே.டே. என்று அழைக்கப்படும் ஜோதிர்மயி டேயின் இதழியல் அப்படியான ஒன்று!


மும்பையின் நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராகிம், சோட்டா ராஜன் ஆகியோரைப் பற்றி அவர் வெளியிட்ட செய்திகள், காவல் துறையினருக்கு ‘டிப் ஆஃப்’ ஆக இருந்தன. அந்தச் செய்திகளின் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால், ஆபத்தான பல குற்றங்கள் தடுக்கப்பட்டன. ‘கேங்ஸ்டர்’கள் சிலர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்கள். தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். 

நிழல் உலகத்தைப் பற்றி டேவுக்குப் பழுத்த அனுபவம் இருந்தது. அந்த அனுபவங்களைக் கொண்டு ஆங்கிலத்தில் ‘கல்லாஸ்’ மற்றும் ‘ஜீரோ டயல்’ என்ற இரண்டு புத்தகங்களை எழுதினார் டே. முன்னது 2008-ல் வெளியானது. பின்னது, 2010-ல் வெளியானது.  ‘ஜாய்க்கோ’ பதிப்பக வெளியீடான அந்த இரண்டு புத்தகங்களும் அவை வெளியான சமயத்தில் பெருத்த கவனம் எதையும் பெறவில்லை. இந்த இரண்டு புத்தகங்களும் மீண்டும் 2011-ம் ஆண்டு அதே பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டன. அதாவது, டே கொல்லப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் அவை மீண்டும் புத்தகக் கடைகளை எட்டியிருந்தன. ஆனால், அவை மறுமதிப்பு செய்யப்பட்ட பிறகும், அந்த இரண்டு புத்தகங்கள் குறித்துப் பரவலாகத் தெரியவில்லை என்பதுதான் சோகம். 

டேயின் முதல் புத்தகமான ‘கல்லாஸ்’, உண்மையில் நிழல் உலகத்தைப் பற்றிய ஒரு அகராதி என்றுதான் சொல்ல வேண்டும். நிழல் உலகத்தினர் பயன்படுத்தும் மொழி, சொல்லாடல், சங்கேதக் குறியீடுகள் குறித்து அந்தப் புத்தகத்தில் விளக்கியிருந்தார் டே. அந்தச் சொற்களின் வழியே, நிழல் உலகத்தின் வரலாறு, பின்னணி, முக்கியமான நபர்கள் போன்றவை பற்றியும் டே விவரித்திருந்தார்.


 

அந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது, நிழல் உலகத்தைப் பற்றி, திரைப்படங்கள் வாயிலாக நாம் அறிந்திருந்த கற்பிதங்கள் உடைக்கப்படுகின்றன. அந்த நிழல் உலகத்தில், ‘ஹாட்லி சேஸ்’ நாவல்களைப் படித்துவிட்டு, அதேபோல திட்டங்களை வகுக்கிற ஆங்கில இலக்கியம் கற்றவர்கள் இருக்கிறார்கள். ‘நியூக்ளியர் பிசிக்ஸ்’ துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். பாலிவுட்டில் பேய்ப் படங்கள் எடுப்பதற்குப் புகழ் பெற்ற ‘ராம்ஸே சகோதரர்கள்’ இயக்கத்தில் உருவான ‘புராணா மந்திர்’ என்ற படத்தில், பேயாக நடித்த முகமது இக்பால் ஷேக் (இவர் பின்னாளில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்) போன்ற நடிகர் இருக்கிறார்கள். 

சொற்கள் மூலம் அவர்களைப் பற்றிய சித்திரைங்களை வரைந்துகாட்டும் அதே நேரத்தில், 90, 2000-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மிக முக்கியமான என்கவுண்ட்டர்களில் பங்கெடுத்த 1983-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பற்றியும், மும்பை வாழ் தமிழர்களின் ‘காட்ஃபாதர்’ ஆக விளங்கிய வரதராஜ முதலியாரின் ஆரம்ப கால வரலாற்றைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் டே. 

‘நான் ஆக்ஸிடெண்ட் ஆயிட்டேன்’ (நான் போலீஸாரால் துரத்தப்படுகிறேன்), ‘நான் அட்மிட் ஆயிட்டேன்’ (நான் கைது செய்யப்பட்டுவிட்டேன்), ‘ஆர்டிஸ்ட்’ (துப்பாக்கியைக் கையாளத் தெரிந்த நபர்) ‘ரூட் பஸ் நம்பர் 11’ (கொலை செய்துவிட்டு, கார்களைப் பயன்படுத்தாமல், ஓடித் தப்பிப்பது) போன்ற, நிழல் உலகத்தினர் தினசரி பயன்படுத்தும் சங்கேத வார்த்தைகளைப் பற்றி புத்தகத்தில் அவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்கிறார் டே. இந்தியாவில் குற்றங்களைச் செய்துவிட்டு, சில தாதாக்கள் துபாய்க்குத் தப்பிச் சென்றுவிடுவார்கள். பிறகு, கொஞ்ச காலத்துக்கு அங்கிருந்துகொண்டே, இந்தியாவில் உள்ள தங்களது குழுக்களை நிர்வகிப்பார்கள். தமிழ்ப் படம் ஒன்றில், ‘துபாயா… அது எங்கயோ ஊத்துக்குளி பக்கமோ, உசிலம்பட்டி பக்கமோ இருக்கு’ என்பார் வடிவேலு. அதுபோல, ‘துபாய்’க்கு நிழல் உலகத்தினர் பயன்படுத்தும் சங்கேத வார்த்தை என்ன தெரியுமா..? கிராமம். ‘நான் கிராமத்துக்குப் போறேன்’ என்று எந்த தாதாவாவது சொன்னால், அது ‘நான் துபாய்க்குப் போறேன்’ என்று அர்த்தமாம். 

டேயின் இரண்டாவது புத்தகம், போலீஸுக்கும், நிழல் உலகத்தினருக்கும் தகவல்களை வழங்குகிற ‘இன்ஃபார்மர்’களைப் பற்றியது. ‘ஸ்லீப்பர் செல்கள்’ பற்றி நமக்கு ‘துப்பாக்கி’ படம் வெளிவந்த பிறகுதான் தெரியும். ஆனால் 80, 90-களிலேயே ‘ஸ்லீப்பர் செல்கள்’ இருந்ததைப் பற்றி டே எழுதியிருப்பதை வாசிக்கும்போது, நிழல் உலகம் தொடர்பான அவரது அறிவும் அனுபவமும் நம்மை வியக்க வைக்கின்றன. அதே சமயத்தில், இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்த அவர், நிழல் உலகத்தினருக்கு எவ்வளவு ஆபத்தானவராக இருந்திருப்பார் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். தன் மரணத்தைத் தானே எழுதிக் கொண்டவராகவும் டே இருந்தார் என்பதையும் உணர முடியும். 

  
இந்த ‘ஆபத்தை’ நிழல் உலகத்தினர் விட்டுவைப்பார்களா..? டே கொல்லப்பட்டார். 2018-ம் ஆண்டு மே மாதம் அவரது கொலைக்குக் காரணமான சோட்டா ராஜன் மற்றும் அவனது கூட்டாளிகள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டேயின் 7-வது நினைவு தினத்தில் இது ஆறுதல் தரும் செய்தி. 

கொல்லப்பட்ட நீதிபதிக்கே இந்த நாட்டில் இன்னும் நீதி கிடைக்காமல் இருக்கும்போது, நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை உலகின் பேனா ஒன்றுக்கு நீதி கிடைத்திருப்பது, நீதித்துறை மீதான நம்பிக்கையை நிலைநாட்டுகிறது.   

நன்றி (ஜே.டே படம்):  financialexpress.com

Tuesday, June 5, 2018

மரம் நடுவதுகூடப் பிரச்சாரம்தான்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 05 ஜூன், 2018

மேற்கத்திய நாடுகளில் ‘சூழலியல் பெண்ணியம்’ என்ற கோட்பாடு 80-களில், 90-களில் உருவானது. ஆனால், அதற்கு முன்பே, அந்தக் கோட்பாடு தமிழர்களிடையே இருந்திருக்கிறது. அதற்கான சான்றுகள் சங்கப் பாடல்கள், நாட்டார் வழக்காற்று கதைகள், வாய்மொழி வரலாறுகள் போன்றவற்றில் தென்படுகின்றன.

ஆனால், காலம் செல்லச் செல்ல, கதை சொல்லும் மரபு தமிழர்களிடையே வழக்கொழிந்து வர, இன்று மக்கள் இயற்கையிடம் இருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டார்கள். இன்று நாம் சந்திக்கிற பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்கு அந்தக் கதைகளை நாம் மறந்தது மிக முக்கியமான காரணம்.

கதைகள் வழியாக, தமிழர்களிடையே இருந்த சுற்றுச்சூழல் கரிசனம், பெண்களுக்கும் இயற்கைப் பாதுகாப்புக்குமான தொடர்பு, இயற்கையைப் பாதுகாப்பதில் பெண்கள் பயன்படுத்துகிற சொல்லாடல்களின் தாக்கம் போன்றவை குறித்து ‘நேச்சர், கல்ச்சர் அண்ட் ஜெண்டர்’ எனும் புத்தகத்தில் ஆவணப்படுத்தி இருக்கிறார் பேராசிரியர் மேரி வித்யா பொற்செல்வி. சென்னை லயோலா கல்லூரியில், ஆங்கில மொழித் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது புத்தகத்தை, ரவுட்லெட்ஜ் பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.

 
பெண்ணுக்கும் மரத்துக்குமான உறவு, பெண்ணுக்கும் பறவைகளுக்குமான உறவு, பெண்ணுக்கும் நீருக்குமான உறவு, பெண்ணுக்கும் உணவுக்குமான உறவு, பெண்ணுக்கும் மொழிக்குமான உறவு என 12 மையக் கருத்துகளின் கீழ், அந்தக் கதைகள் தொகுக்கப்பட்டு, அதன் வழியே சூழல் பாதுகாப்பில், நம் முன்னோர்கள் எப்படியான விழிப்புணர்வைக் கொண்டிருந்தார்கள் என்பதை ஆழமாகப் பேசுகிறது இந்தப் புத்தகம். உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி, மேரி வித்யா பொற்செல்வியைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...

ஆளுமைகளால் பெற்ற ஊக்கம்

“என்னுடைய சொந்த ஊர் கொடைக்கானல். இயற்கையை ரசித்தும், கதைகளைக் கேட்டும் வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவள் நான். எங்கள் வீட்டுப் பக்கத்தில், விறகு பொறுக்க வரும் பழங்குடிப் பெண்களின் அரட்டையைக் கவனிப்பது வழக்கம். அப்போது, அவர்கள் இயற்கையுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். என் பாட்டியும் அம்மாவும் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை அவர்களே பயிர் செய்துகொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

இதற்கு இடையே, அன்னை தெரசா, வந்தனா சிவா, நம்மாழ்வார், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், மேதா பட்கர் போன்ற பல ஆளுமைகளை என் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் சந்தித்திருக்கிறேன். அவர்களால் பெற்ற ஊக்கத்தால்தான், என்னுடைய முனைவர் பட்ட ஆய்வை, சுற்றுச்சூழல் தொடர்பானதாகத் தேர்ந்தெடுத்தேன். அப்போது, சூழலியல் பெண்ணியம் சார்ந்த 6 மையக் கருத்துகளை உருவாக்கினேன். அண்மையில், இந்தப் புத்தகம் எழுதுவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, மேலும் 6 கருத்துகளை உருவாக்கினேன். இந்த 12 கருத்துகளின் கீழ், நம்முடைய நாட்டார் கதைகள், வாய்மொழிக் கதைகள் ஆகியவற்றைத் தொகுத்திருக்கிறேன்” என்பவர், ‘பெண்கள் எப்போதும் மவுனமாக இருந்ததில்லை. ஆனால், மவுனமாக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள்தாம், கதைகளாகவும் பாடல்களாகவும் மாறின’ என்கிறார். 

எளியவர்களின் அனுபவ அறிவு

“இந்தக் கதைகளைச் சேகரிப்பதற்காக, தமிழகத்தின் பல பகுதிகளுக்கு நான் பயணித்தேன். ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு பாட்டியுடன் பேசும்போதும், 50 புத்தகங்களைப் படித்ததற்கு நிகரான அறிவு, அனுபவங்கள் கிடைக்கும். பறவைகளின் மொழியைப் புரிந்துகொண்ட சிறுமி ஒருத்தியைப் பற்றிய நாட்டார் கதை நம்மிடையே உண்டு. மதுரை, கருப்பாயூரணி கிராமத்தில் அழகுப்பிள்ளையுடன் பேசும்போது, எனக்கு அந்தக் கதைதான் நினைவுக்கு வந்தது. ‘என்னுடைய பொழுதுபோக்கே நான் வளர்க்கும் செடி, கொடிகள், மாடுகள், ஆடுகளுடன் பேசுவதுதான்’ என்று சொன்னார் அவர்.

திண்டுக்கல்லில் உள்ள ஏ.வெள்ளோடு எனும் கிராமத்திலிருக்கும் இன்னாஸியம்மா, முருங்கைக்கீரையைப் பயன்படுத்தி எனக்கு ரசம் வைக்கக் கற்றுக்கொடுத்தார். தவிர, ‘தீனீச்சிப் பச்சிலை’ எனும் மூலிகையைப் பற்றியும் பல தகவல்களைச் சொன்னார். இப்படிப் பல அனுபவங்கள்!” என்றவர், குழந்தைகளுக்குக் கதை சொல்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

‘மேலே’ உண்டு தீர்வு!

“முன்பெல்லாம், நமது பாட்டிகள், அம்மாக்கள், குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும்போது, அந்தச் சோறு எங்கிருந்து வந்தது என்கிற விஷயத்தையும் சேர்த்தே கதையாகச் சொல்லியிருக்கிறார்கள்.” இதை ஆங்கிலத்தில் ‘டீப் ஈக்காலஜி’ என்கிறார்கள். அதாவது, மனிதர்கள் தனி, தாவரங்கள் தனி, பறவைகள் தனி, விலங்குகள் தனி, என்றில்லாமல், எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்கிற தத்துவம்தான் அது.

நம்முடைய பாட்டிகளுக்கும், அம்மாக்களுக்கும் ‘சூழலியல் பெண்ணியம்’, ‘டீப் ஈக்காலஜி’ போன்ற வார்த்தைகள் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இயற்கை மீதான கரிசனம், இயல்பாகவே அவர்களிடம் இருந்தது. எறும்புகளுக்கு உணவாகும் என்று அரிசி மாவால் கோலம் போடுவதுகூட அப்படியான கரிசனம்தான்!” என்றவர், ‘இந்தக் கதைகளை மீட்டெடுத்து, குழந்தைகளுக்குச் சொல்வதன் மூலம், அவர்களிடையே இயற்கை மீதும், சக பாலினத்தவர் மீதும் மரியாதை ஏற்படும்’ என்கிறார்.

 
“இன்றைக்கு இருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குச் சூழலியல் பெண்ணியம் என்ன தீர்வு வைத்திருக்கிறது?’ என்று கேட்டபோது, “1905-ல் ரொக்கையா சகாவத் ஹுசைன் எனும் பெண்மணி, ‘சுல்தானாஸ் ட்ரீம்’ எனும் ‘உடோப்பியன் நாவல்’ ஒன்றை எழுதினார். அதில் சூரிய ஒளி மின்சாரம், மழை நீர் சேகரிப்பு போன்றவை குறித்து எழுதி இருந்தார். அன்று அதைப் படித்த மக்கள் சிரித்தார்கள். ஆனால், இன்று அவை நிஜமாகி இருக்கின்றன. மின்சாரத்துக்காகச் சுரங்கம் தோண்டுதல் போன்ற சூழலியலுக்கு எதிரான விஷயங்களைக் கைவிட்டு, வானத்தைப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது!” என்கிறார் மேரி. 

செயலே சிறந்த பிரச்சாரம்

“ஆணாதிக்கச் சமூகமாக இருக்கிற இந்த நாட்டில், சுற்றுச்சூழல் பற்றியும், சுற்றுச்சூழலுக்காகவும் பெண்கள் பேசியிருக்கிறார்கள். என்ன, அவர்கள், மேடை போட்டு எதையும் பிரச்சாரம் செய்யவில்லை. தங்கள் செயல்பாடுகள் மூலமாக அதை மற்றவர்களுக்கு உணர்த்தினார்கள்.

மரத்தைக் கட்டிப்பிடித்துப் போராடிய ‘சிப்கோ’ பெண்கள் போராட்டம், அப்படியான ஒரு பிரச்சாரம்தான். மரத்தை வெட்டுவதால் அவர்கள் மரத்தை அணைக்கவில்லை. மரத்தை, தங்களில் ஒருத்தியாகப் பார்த்தார்கள் அந்தப் பெண்கள். அதனால்தான் மரத்தை அணைத்துக்கொண்டார்கள். மரங்களைத் தன் குழந்தைகளாக நினைத்து வளர்த்து வரும் திம்மக்கா போன்றவர்கள் எதையும் பிரச்சாரம் செய்யசெய்யவில்லை. அவர்களது செயலே பிரச்சாரம்தான். ஆம், மரம் நடுவதுகூட சூழலியல் பிரச்சாரம்தான்!” என்று புன்னகைத்து விடைகொடுத்த மேரி வித்யா பொற்சொல்வி, கடைசியாக இப்படிச் சொன்னார்: “சூழலியல் பெண்ணியம், இப்படித்தான். எப்போதும் எளிமையை உயர்த்திப் பிடிக்கும்!”

நன்றி: தி இந்து (வெற்றிக்கொடி இணைப்பிதழ்)

Monday, June 4, 2018

சைக்கிள் டைரிஸ்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 01 ஜூன், 2018


‘பக்கத்துல இருக்கிற கடைக்குக்கூட, அவன் சைக்கிள்லதான் போறான்’ என்று பல வீடுகளில் அம்மாக்கள் குறைபட்டுக்கொள்வதைக் கேட்டிருப்போம். அந்த அம்மாக்கள், டொமினிக் ஃபிராங்க்ஸ் கதையைக் கேட்டால், அவர்களின் ‘ரியாக்‌ஷன்’ எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவே மனம் ‘கலகல’க்கிறது! 

பின்னே, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதற்காக பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு சைக்கிளிலேயே வந்துபோவது என்றால் சும்மாவா?

‘என்னது, பெங்களூர் டூ டெல்லி சைக்கிள்லயா?’ என்று கேள்வி கேட்டு ஆச்சரியப்படுவதற்கே நமக்கு மூச்சு வாங்குகிறது இல்லையா? ஆனால், டொமினிக்குக்கு அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஏனென்றால், அவருக்கு முன்பே அப்படிப்பட்ட ஒரு சாதனையை, அவரது பி.டி. மாஸ்டர் நிகழ்த்தியிருக்கிறார். அவரிடமிருந்து பெற்ற ‘இன்ஸ்பிரேஷன்’தான், 22 நாட்கள் தொடர்ந்து பெடல் போடுவதற்கான சக்தியை டொமினிக்குக்கு வழங்கியிருக்கிறது.


ஸ்போர்ட்ஸ்மேன் எம்.பி.பி.எஸ்.

பெங்களூருவில் டொமினிக் ஃபிராங்க்ஸ் மருத்துவம் படித்துவிட்டு, வைத்தியம் பார்க்க விருப்பமில்லாமல் வெறுமனே ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். பள்ளிக் காலத்திலிருந்தே அவருக்கு விளையாட்டுகள் மீது பேரார்வம். அதனால், நாட்டின் முன்னணி ஸ்போர்ட்ஸ் சேனலில் சிறிது காலம் செய்தியாளராகப் பணியாற்றினார்.

2010-ம் ஆண்டு, அவருக்கு சைக்கிளில் நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று வர விருப்பம் ஏற்பட்டது. ‘சரி… போறதுதான் போறோம். ஏன், இலக்கே இல்லாமல் அலைய வேண்டும்?’ என்று யோசித்தவர், அந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதற்காக பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு சைக்கிளிலேயே பயணிக்கலாம் என்று முடிவெடுத்தார்.

அதற்குத் தேவையான சில ‘டிப்ஸ்’களைக் கேட்பதற்காகத் தான் படித்த பள்ளியின் பி.டி.மாஸ்டர் ஷிவபிரகாஷிடம் செல்லும்போதுதான் தெரிகிறது, அவரே ஒரு முறை இப்படி சைக்கிளில் ‘கிராஸ் கண்ட்ரி’ சென்றவர் என்பது. 1982-ம் ஆண்டு டெல்லியில் ‘ஆசியன் கேம்ஸ்’ போட்டிகள் நடைபெற்றபோது, அதைப் பார்ப்பதற்காக பெங்களூருவிலிருந்து டெல்லிவரை அந்த பி.டி.மாஸ்டர் சைக்கிளில் சென்றிருக்கிறார். அந்த அனுபவங்களைத் தன்னுடைய டைரியில் எழுதி வைத்திருந்தார். டொமினிக் அவரிடம் வந்தபோது, அந்த டைரியை அவரிடம் கொடுத்தார். 

பயணம் காட்டிய இந்தியா


அந்த பி.டி.மாஸ்டருக்குத் தன் அனுபவங்களைப் புத்தகமாக்கும் வாய்ப்புக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், டொமினிக்குக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ‘பெங்களூரு டூ டெல்லி பை சைக்கிள்’ அனுபவங்களை ‘நவ்டாங்கி டைரிஸ்’ என்ற தலைப்பில் புத்தகமாக்கியிருக்கிறார் டொமினிக். ரூபா பதிப்பக வெளியீடாக சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. 


‘பயணம் அல்ல, அந்தப் பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், அனுபவங்கள் ஆகியவைதான் ஒரு பயண நூலை மிகவும் சுவாரசியமாக்குகின்றன’ என்பார்கள். அதற்கு இந்தப் புத்தகம் விதிவிலக்கல்ல. பெங்களூருவிலிருந்து புறப்பட்டவர், முதலில் ஹைதராபாத்தில் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலைச் சந்திக்க விரும்புகிறார். ஆனால், அந்தக் கனவு நிறைவேறாமல் போகிறது. இருந்தும் மனம் தளராமல் சைக்கிள் மிதித்தவருக்கு, வழி நெடுக, அதிகம் பிரபலமாகாத, ஆனால் சத்தமே இல்லாமல் பல சாதனைகளைப் படைத்து வரும் மனிதர்களின் அறிமுகம் கிடைக்கிறது.

பழங்குடிகளின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றும் தன்னார்வலர், பள்ளித் தேர்வில் தன் மகன் வெற்றிபெறாவிட்டால் அவனை நக்ஸலைட்டாக மாற்றிவிடத் துடிக்கும் தந்தை, லாரிகள் தங்கிச் செல்லும் ‘தாபா’க்கள், பிரபல இந்தி நடிகர் சன்னி தியோலின் பெயரால் கட்டப்பட்ட கோயில் எனப் பல்வேறு மனிதர்களையும் இடங்களையும் பார்க்கும் வாய்ப்பு, டொமினிக்குக்கு இந்தப் பயணத்தின் மூலம் கிடைக்கிறது. அவற்றின் வழியாக, சமகால இந்தியாவின் நிலை எப்படி இருக்கிறது என்பதையும், தன் புத்தகத்தில் ஆங்காங்கே பிரதிபலித்திருக்கிறார் டொமினிக். 

ஆவணப்படமான பயணம்


இவர் இவ்வாறு சைக்கிளில் பயணம் போகிறார் என்பது தெரிந்தவுடன், இவரது நண்பர்கள் சிலர் காரில் பின்தொடர்ந்து, இவரது பயணத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அது, 2017-ல் ‘இட்ஸ் நாட் அபவுட் தி சைக்கிள்’ எனும் தலைப்பில் ஆவணப்படமாக வெளியானது. இது கடந்த ஆண்டு டொரொண்டோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த சாகசத் திரைப்படத்துக்கான விருதையும் வென்றது. புத்தகத்தில், அவரது நண்பர்கள் அடிக்கும் லூட்டியைக் கிண்டலும் காமெடியுமாகப் பதிவு செய்திருக்கிறார் டொமினிக். 


இத்தனைக்கும் இப்படியொரு பயணம் செல்வதற்கு, டொமினிக்குக்கு விலை உயர்ந்த ‘ஃபேன்ஸி சைக்கிள்’கள் எல்லாம் தேவைப்படவில்லை. நம் ஊர்களில் பால்காரர்கள் பயன்படுத்தும் சாதாரண சைக்கிள்தான். ‘தேசி’ சைக்கிளில்தான் இந்த அசாத்தியமான பயணத்தை டொமினிக் மேற்கொண்டார்.

‘இந்த சைக்கிளை வெச்சுக்கிட்டு, டெல்லி வரைக்கும் போறியா.? ரொம்ப ஓவர்தான்’ என்று இவரது நண்பர்கள் கமெண்ட் அடிக்க, தன் சைக்கிளுக்கு ‘நவ்டாங்கி’ என்று பெயர் சூட்டுகிறார் டொமினிக். அப்படியென்றால், இந்தியில் ‘ஓவர் ஆக்டிங் செய்தல்’ என்று அர்த்தம். இந்தியில் அந்தச் சொல், பெண்பாலாகப் பயன்படுத்தப்படுகிறது. பெங்களூருவிலிருந்து டெல்லிவரை தனக்குக் கை கொடுத்த, ‘நவ்டாங்கி’, கடைசியில் என்ன ஆனாள் என்று டொமினிக் சொல்வதுதான், பயணத்தின் மிகப்பெரிய ‘பிரேக்!’

தற்போது, வேறு எந்தப் பயணத்தையும் திட்டமிடாமல், ஜல்லிக்கட்டு பின்னணியில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு குறித்து ஆவணப்படம் எடுத்து வருகிறார் டொமினிக். 

நன்றி: தி இந்து (இளமை புதுமை) 
நன்றி (படங்கள்): டொமினின்க் ஃபிராங்க்ஸ் படம் thequint.com, ஆவணப்பட போஸ்டர் filmfreeway.com