Showing posts with label investigative journalism. Show all posts
Showing posts with label investigative journalism. Show all posts

Tuesday, June 12, 2018

தன் மரணத்தை எழுதிக்கொண்டவனுக்கு நீதி!

ந.வினோத் குமார் 

அது 2011-ம் ஆண்டு, ஜூன் 11-ம் தேதி. மும்பையில் இருந்து வெளிவரும் ‘மிட் டே’ பத்திரிகையின் செய்தியாளர் ஜே.டே. கொல்லப்பட்டுவிட்டார் என்று தகவல்கள் வெளியாயின. ‘மிட் டே’ என்ற ஒரு பத்திரிகை இந்தியாவில் வெளியாகிறது என்ற தகவலே, அப்போதுதான் பலருக்கும் தெரிந்தது. அப்படியான சூழலில், ஜே.டே. குறித்துப் பெரும்பாலான தென்னிந்திய ஊடகவியலாளர்களுக்குத் தெரியவில்லை. இருந்தும், கிடைத்த தகவல்களைக் கொண்டு, செய்தியும் சில கட்டுரைகளும் வெளியாயின. 

அந்தச் செய்திகள் எல்லாவற்றிலும், தவறாது இடம்பெற்றிருந்த ஒரு தகவல்… அவர், மும்பையின் நிழல் உலகத்தைப் பற்றித் தொடர்ந்து புலனாய்வுக் கட்டுரைகள் எழுதி வந்தார் என்பது! ‘இதழியலில், ‘புலனாய்வு இதழியல்’ என்று தனியாக எதுவும் இல்லை. எல்லா இதழியலுமே அடிப்படையில் புலனாய்வு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்’ என்பார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான காப்ரியல் கார்சியா மார்கேஸ். ஜே.டே. என்று அழைக்கப்படும் ஜோதிர்மயி டேயின் இதழியல் அப்படியான ஒன்று!


மும்பையின் நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராகிம், சோட்டா ராஜன் ஆகியோரைப் பற்றி அவர் வெளியிட்ட செய்திகள், காவல் துறையினருக்கு ‘டிப் ஆஃப்’ ஆக இருந்தன. அந்தச் செய்திகளின் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால், ஆபத்தான பல குற்றங்கள் தடுக்கப்பட்டன. ‘கேங்ஸ்டர்’கள் சிலர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்கள். தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். 

நிழல் உலகத்தைப் பற்றி டேவுக்குப் பழுத்த அனுபவம் இருந்தது. அந்த அனுபவங்களைக் கொண்டு ஆங்கிலத்தில் ‘கல்லாஸ்’ மற்றும் ‘ஜீரோ டயல்’ என்ற இரண்டு புத்தகங்களை எழுதினார் டே. முன்னது 2008-ல் வெளியானது. பின்னது, 2010-ல் வெளியானது.  ‘ஜாய்க்கோ’ பதிப்பக வெளியீடான அந்த இரண்டு புத்தகங்களும் அவை வெளியான சமயத்தில் பெருத்த கவனம் எதையும் பெறவில்லை. இந்த இரண்டு புத்தகங்களும் மீண்டும் 2011-ம் ஆண்டு அதே பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டன. அதாவது, டே கொல்லப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் அவை மீண்டும் புத்தகக் கடைகளை எட்டியிருந்தன. ஆனால், அவை மறுமதிப்பு செய்யப்பட்ட பிறகும், அந்த இரண்டு புத்தகங்கள் குறித்துப் பரவலாகத் தெரியவில்லை என்பதுதான் சோகம். 

டேயின் முதல் புத்தகமான ‘கல்லாஸ்’, உண்மையில் நிழல் உலகத்தைப் பற்றிய ஒரு அகராதி என்றுதான் சொல்ல வேண்டும். நிழல் உலகத்தினர் பயன்படுத்தும் மொழி, சொல்லாடல், சங்கேதக் குறியீடுகள் குறித்து அந்தப் புத்தகத்தில் விளக்கியிருந்தார் டே. அந்தச் சொற்களின் வழியே, நிழல் உலகத்தின் வரலாறு, பின்னணி, முக்கியமான நபர்கள் போன்றவை பற்றியும் டே விவரித்திருந்தார்.


 

அந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது, நிழல் உலகத்தைப் பற்றி, திரைப்படங்கள் வாயிலாக நாம் அறிந்திருந்த கற்பிதங்கள் உடைக்கப்படுகின்றன. அந்த நிழல் உலகத்தில், ‘ஹாட்லி சேஸ்’ நாவல்களைப் படித்துவிட்டு, அதேபோல திட்டங்களை வகுக்கிற ஆங்கில இலக்கியம் கற்றவர்கள் இருக்கிறார்கள். ‘நியூக்ளியர் பிசிக்ஸ்’ துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். பாலிவுட்டில் பேய்ப் படங்கள் எடுப்பதற்குப் புகழ் பெற்ற ‘ராம்ஸே சகோதரர்கள்’ இயக்கத்தில் உருவான ‘புராணா மந்திர்’ என்ற படத்தில், பேயாக நடித்த முகமது இக்பால் ஷேக் (இவர் பின்னாளில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்) போன்ற நடிகர் இருக்கிறார்கள். 

சொற்கள் மூலம் அவர்களைப் பற்றிய சித்திரைங்களை வரைந்துகாட்டும் அதே நேரத்தில், 90, 2000-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மிக முக்கியமான என்கவுண்ட்டர்களில் பங்கெடுத்த 1983-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பற்றியும், மும்பை வாழ் தமிழர்களின் ‘காட்ஃபாதர்’ ஆக விளங்கிய வரதராஜ முதலியாரின் ஆரம்ப கால வரலாற்றைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் டே. 

‘நான் ஆக்ஸிடெண்ட் ஆயிட்டேன்’ (நான் போலீஸாரால் துரத்தப்படுகிறேன்), ‘நான் அட்மிட் ஆயிட்டேன்’ (நான் கைது செய்யப்பட்டுவிட்டேன்), ‘ஆர்டிஸ்ட்’ (துப்பாக்கியைக் கையாளத் தெரிந்த நபர்) ‘ரூட் பஸ் நம்பர் 11’ (கொலை செய்துவிட்டு, கார்களைப் பயன்படுத்தாமல், ஓடித் தப்பிப்பது) போன்ற, நிழல் உலகத்தினர் தினசரி பயன்படுத்தும் சங்கேத வார்த்தைகளைப் பற்றி புத்தகத்தில் அவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்கிறார் டே. இந்தியாவில் குற்றங்களைச் செய்துவிட்டு, சில தாதாக்கள் துபாய்க்குத் தப்பிச் சென்றுவிடுவார்கள். பிறகு, கொஞ்ச காலத்துக்கு அங்கிருந்துகொண்டே, இந்தியாவில் உள்ள தங்களது குழுக்களை நிர்வகிப்பார்கள். தமிழ்ப் படம் ஒன்றில், ‘துபாயா… அது எங்கயோ ஊத்துக்குளி பக்கமோ, உசிலம்பட்டி பக்கமோ இருக்கு’ என்பார் வடிவேலு. அதுபோல, ‘துபாய்’க்கு நிழல் உலகத்தினர் பயன்படுத்தும் சங்கேத வார்த்தை என்ன தெரியுமா..? கிராமம். ‘நான் கிராமத்துக்குப் போறேன்’ என்று எந்த தாதாவாவது சொன்னால், அது ‘நான் துபாய்க்குப் போறேன்’ என்று அர்த்தமாம். 

டேயின் இரண்டாவது புத்தகம், போலீஸுக்கும், நிழல் உலகத்தினருக்கும் தகவல்களை வழங்குகிற ‘இன்ஃபார்மர்’களைப் பற்றியது. ‘ஸ்லீப்பர் செல்கள்’ பற்றி நமக்கு ‘துப்பாக்கி’ படம் வெளிவந்த பிறகுதான் தெரியும். ஆனால் 80, 90-களிலேயே ‘ஸ்லீப்பர் செல்கள்’ இருந்ததைப் பற்றி டே எழுதியிருப்பதை வாசிக்கும்போது, நிழல் உலகம் தொடர்பான அவரது அறிவும் அனுபவமும் நம்மை வியக்க வைக்கின்றன. அதே சமயத்தில், இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்த அவர், நிழல் உலகத்தினருக்கு எவ்வளவு ஆபத்தானவராக இருந்திருப்பார் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். தன் மரணத்தைத் தானே எழுதிக் கொண்டவராகவும் டே இருந்தார் என்பதையும் உணர முடியும். 

  
இந்த ‘ஆபத்தை’ நிழல் உலகத்தினர் விட்டுவைப்பார்களா..? டே கொல்லப்பட்டார். 2018-ம் ஆண்டு மே மாதம் அவரது கொலைக்குக் காரணமான சோட்டா ராஜன் மற்றும் அவனது கூட்டாளிகள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டேயின் 7-வது நினைவு தினத்தில் இது ஆறுதல் தரும் செய்தி. 

கொல்லப்பட்ட நீதிபதிக்கே இந்த நாட்டில் இன்னும் நீதி கிடைக்காமல் இருக்கும்போது, நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை உலகின் பேனா ஒன்றுக்கு நீதி கிடைத்திருப்பது, நீதித்துறை மீதான நம்பிக்கையை நிலைநாட்டுகிறது.   

நன்றி (ஜே.டே படம்):  financialexpress.com