ந.வினோத் குமார்
இந்த
நாள், அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள். இந்த நாள், பாபர்
மசூதி இடிக்கப்பட்ட நாள். இந்த நாள், ஹைதராபாத்தில்
கால்நடை மருத்துவர் ஒருவரை வன்புணர்ந்து கொன்று எரித்த குற்றவாளிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நாள்!
ஒரே
நாளில் எத்தனை துக்கங்களைத்தான் அனுசரிப்பது..? 'விடுங்க பாஸ்... இது என்ன எப்பவும்
நடக்குற கதையா..?' என்று கடந்து செல்ல முடியவில்லை. ஏனென்றால், இதுபோன்ற சம்பவங்கள் இனி வரும் நாட்களில்
தொடர்கதை ஆகலாம்!
ஆம்...
அப்படித்தான் சொல்கிறது 'இந்தியா இன் கம்யூனல் க்ரிப்'
எனும் புத்தகம். மதவாதத்துக்கு எதிராகப் போராடும் ராம் புனியானியின் புதிய
புத்தகம். மும்பை ஐ.ஐ.டி.யின் முன்னாள் பேராசிரியரான
ராம் புனியானி நாடறிந்த எழுத்தாளரும் கூட. இந்தப் புதிய
புத்தகம் சீதை பதிப்பகத்தால் சமீபத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
மத்தியில்
பாரதிய ஜனதா கட்சி 2014-ல்
ஆட்சி அமைத்தது. பா.ஜ.க.வின் அங்கமான ராஷ்ட்ரிய
ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்)
அடிமட்டத் தொண்டராக இருந்து முன்னேறிய நரேந்திர மோடி, பாரதப் பிரதமரானார். அவரது தலைமையிலான அரசு, 2014 - 2019 காலகட்டத்தில் நடத்திய கூத்துகளை ஒரு கழுகுப் பார்வை
பார்ப்பதுதான் இந்தப் புத்தகத்தின் மையம்.
அப்படி
என்ன கூத்துகளை எல்லாம் நடத்தியது என்பதை அந்தப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு 'ரெடி ரெஃபரன்ஸ்' ஆகப்
பயன்படும்.
அந்தப்
புத்தகத்தின் ஓரிடத்தில், 'ஃபாசிசத்தின் அறிகுறி' என்ற தலைப்பில் ஒரு
நாட்டில் ஃபாசிசம் எப்படித் தோன்றும் என்பதைக் குறித்து ராம் புனியானி சில
கருத்துகளைக் கூறுகிறார். அவற்றின் சாராம்சம் இது:
"ஐரோப்பாவில் முதலாம்
உலகப் போருக்குப் பின்னால் 'ஃபாசிசம்' என்கிற ஒரு நிகழ்வு தோன்றியது.
தன்னுடைய தேசம் பெரியது என்று கூறும் அதன் தலைவனை வல்லவன்
என்று சொல்லிப் புகழ்ந்து, அந்த நாட்டின் சிறுபான்மையினரை
வஞ்சித்து, கொடூரமான முறையில் ஜனநாயகத்தை நொறுக்கி, அதன் மீது தேசியத்தைக்
கட்டமைக்கிற தன்மையை, மனித இனம் தன்
நினைவில் ஒரு பாடமாக வைத்திருக்கிறது.
அப்படி ஒரு விஷயம் மீண்டும்
நடந்துவிடக் கூடாது என்பதையும் அது நினைவில் கொண்டுள்ளது.
அப்போதிலிருந்து
ஃபாசிசம் மற்றும் ஹிட்லர் ஆகிய வார்த்தைகள் நமது
பேச்சில் சரளமாகப்புழங்குகின்றன. ராகுல் காந்தி ஒரு முறை மோடியை
ஹிட்லர் என்று சொல்ல, பதிலுக்கு பா.ஜ.க.வின் அருண் ஜேட்லி
இந்திரா காந்தியை ஹிட்லர் என்றார். இந்திரா காந்தி, அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது
உண்மைதான். அப்போதைய அமைச்சர்கள் சர்வாதிகாரிகளைப் போன்று நடந்துகொண்டதும் உண்மைதான். ஆனால் அவற்றை வைத்து இந்திராவை ஹிட்லருடன் ஒப்பிட முடியுமா..? முடியவே முடியாது.
ஐரோப்பாவில்
காணப்பட்ட சில ஃபாசிஸ்ட்டுகள் ஜனநாயக
முறையில் ஆட்சியைப் பிடித்து, பிறகு ஜனநாயகத்தையே நசுக்கியவர்கள். ஒரே சமயத்தில் தன்னை
நாட்டின் காவலராகச் சொல்லிக்கொண்டே சர்வாதிகாரியாகவும் நடந்துகொண்டார்கள். அவர்கள் அண்டை நாடுகளையும் தங்களுடன் இணைத்துக்கொண்டு நாட்டை விரிவுபடுத்த ('அகண்ட பாரதம்' நினைவுக்கு வருதோன்னோ..?) ஆசைப்பட்டார்கள்.
இந்த
ஃபாசிஸ்ட்டுகளுக்கு இன்னும் இரண்டு விசேஷ இயல்புகள் உண்டு. ஒன்று, கார்ப்பரேட்களால் இவர்கள் போஷிக்கப்படுவார்கள். இரண்டு, சிறுபான்மையினரைப் படுத்தி எடுப்பார்கள். சிறுபான்மையினர் கொடுமைக்கு ஆளாக்கப்படும்போது, அப்படி ஒரு சம்பவம் நடப்பது
தனக்குத் தெரியாதது போல அமைதி காப்பார்கள்
(இந்த இடத்தில் குசு... மன்னிக்க... பசுக் குண்டர்களால் இஸ்லாமியர்கள் கும்பல் வன்முறைக்கு ஆளானபோது,
ஒருவர் மவுன விரதத்தில் இருந்தது
நினைவுக்கு வர வேண்டுமே..!).
பின்
காலனியாதிக்க நாடுகளில், எஞ்சியிருக்கும் நிலப்பிரபுத்துவக் கொள்கைகளை, அந்நாட்டின் மத்திய தர வர்க்கம் எடுத்துக்கொள்ளும்.
அவற்றுக்கும் ஃபாசிசத்தன்மை இருக்கும். இவர்கள் தங்களது மதத்தைக் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகி, மாற்றுக் கருத்துகள் கொண்டோரின் மீது வன்முறையை ஏவுவார்கள்.
இது மத அடிப்படைவாதமாகத் திரியும்.
இந்தியாவில் அப்படியான மத அடிப்படைவாதம் இஸ்லாம்
மதத்திலும் உண்டு. இந்து மதத்திலும் உண்டு.
ஆனால்
ஜவாஹர்லால் நேரு என்ன சொல்கிறார்
தெரியுமா? 'இஸ்லாம் மதவாதம் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்த
முடியாது. எனவே அதனால் ஃபாசிசத்தைக்
கொண்டு வர முடியாது. ஆனால்
இந்து மதவாதத்தால் அது முடியும்'.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்
முக்கிய கருத்தியலாளரான எம்.எஸ்.கோல்வால்கர்,
'வீ ஆர் அவர் நேஷன்ஹுட்'
(We or Our Nationhood) எனும்
புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அது ஜெர்மனி நாஜிக்களின்
ஃபாசிசக் கருத்துகளையொட்டி எழுதப்பட்ட புத்தகம். அதில், 'யூதர்களை அழித்ததன் மூலம் தனது தேசியத்தைச் சுத்தமாக
வைத்துக்கொண்டது ஜெர்மனி. இந்துஸ்தானம் அதனிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று எழுதுகிறார். 'நாம்' அல்லது 'அவர்கள் (மற்றவர்கள்)' என்ற கருத்தாக்கங்களை இந்தப்
புத்தகத்தில் கட்டமைக்கிறார் அவர்.
இதன்
அடிப்படையில் உருவானவைதான், நம் நாட்டில் இஸ்லாமியர்களுக்கும்
கிறித்தவர்களுக்கும் ஏற்பட்ட இன்னல்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், ஃபாசிசத்தின் இந்திய அவதாரம் ஆர்.எஸ்.எஸ்.
அந்த அமைப்புக்கு 2002-ல் நரேந்திர மோடி
என்ற நபர் தலைவராகக் கிடைத்தார்.
மோடி,
ஒரு சாதாரண 'பிரச்சாரக்' ஆக இருந்தபோது பிரபல
அரசியல் அறிவியலாளர் ஆஷிஷ் நந்திக்கு அவரைப் பேட்டியெடுக்கும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்
இவை (மொழிபெயர்ப்பின் போது பொருள் மயக்கம்
ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆங்கிலத்தில் அப்படியே தருகிறேன்): "I had met
a textbook case of a fascist and a prospective killer, perhaps even a future
mass murderer".
இத்தனைக்கும்
குஜராத் பள்ளிகளில் ஹிட்லரை ஒரு சிறந்த தேசியவாதியாகப்
படிக்கிறார்கள் மாணவர்கள்.
இந்தியா
ஒரு பன்முகத் தன்மை வாய்ந்த நாடு. இங்கே ஃபாசிசம் எல்லாம் வருமா என்று சிலர் கேட்கிறார்கள். உண்மைதான். அந்தப் பன்முகத் தன்மைதான் இப்போதுவரை ஃபாசிசம் வளராமல் நம்மைக் காப்பாற்றி வருகிறது. கால ஓட்டத்தில் எல்லாம்
மாறும். அதை இப்போது உலகம்
முழுக்கப் பார்க்கிறோம். ஜனநாயக விழுமியங்கள், பன்மைத்துவம் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதன் மூலமே ஃபாசிசத்தை வேரறுக்க முடியும்".
இந்தக்
கட்டுரையை எழுதும் இந்த நாளில், இந்துத்துவ
அமைப்புகள் நம் நாட்டில் நடத்தும்
'ஏகல் வித்யாலயா' பள்ளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்ததையொட்டி,
வாழ்த்துச் செய்தி சொல்லியிருக்கிறார் பாரதப் பிரதமர். இந்தப் பள்ளிகளில்தான் முழுக்க முழுக்கக் காவிமயப்படுத்தப்பட்ட கல்வி முறை பின்பற்றப்படுகிறது. இதே கல்வி
முறையைப் பின்பற்றச் சொல்லித்தான் இதர மாநில அரசுகளை
மத்திய அரசு நெருக்குகிறது. ஆக,
ஃபாசிசத்தை முறியடிக்க நாம் எங்கிருந்து நமது
பணியைத் தொடங்க வேண்டும் என்பது புரிகிறதா..?