ந.வினோத்
குமார்
இது சாயும் காலம். இது சாவின் நாவுகள் தீண்டும் நேரம்.
இது சாயும் காலம். இது சாவின் நாவுகள் தீண்டும் நேரம்.
இது
நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் பொழுது. இது ஜனநாயகத்தின் பெயரால் கொலைகள் அரங்கேற்றப்படும்
தருணம்.
சட்டங்கள்
என்பது இயற்றப்படுவதற்குத்தான். பின்பற்றப்படுவதற்கு அல்ல.
மக்களாட்சி
என்பது குடிமக்களுக்காக அல்ல, கும்பல் வன்முறைகளுக்காக.
ஊடகம்
என்பது செய்திகளைச் சொல்வதற்காக அல்ல, பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்காக…!
இப்படியாகத்தான்
இருக்கிறது இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை.
‘ஒரு
தனி மனிதரின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியானால்தான் அவர் சமூகத்தைப் பற்றிச்
சிந்திப்பார்’ என்றார் பொருளாதார அறிஞர் ஆபிரகாம் மாஸ்லோ. ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலை
அப்படியானதாக இல்லை. நமது அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகிறதோ இல்லையோ, நாம் அனைவரும்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் கூத்துகளைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. நம்மால்
பங்கேற்க முடியாவிட்டாலும் சமூக வலைதளங்களில் நாம் பொங்க வேண்டியதாக இருக்கிறது. யாருமே
கேட்காவிட்டாலும் கருத்து சொல்லி வைக்க நாக்கு துடிக்கிறது.
நாம்
சொல்கிற, எழுதுகிற, அதற்கும் முன்னே நமக்குள் நாமே உருவாக்கிக் கொள்கிற கருத்துகளுக்கு
ஒரு வடிவம் கொடுப்பது ஊடகம்தான். அதிலும் நொடிக்கு நொடி காட்சி மாறுகிற தொலைக்காட்சி
செய்திச் சேனல்கள், இன்று பொழுதுபோக்கு சேனல்களுக்கு நிகரான பரவசத்தைக் கொடுப்பதாக
உள்ளன. முன்பெல்லாம், ‘செய்தியா.. சேனலை மாத்துப்பா…’ என்பார்கள். இன்று அப்படி இல்லை.
24 மணி நேரமும் எதையேனும் ஒன்றை வைத்துச் செய்துகொண்டே இருக்கிறார்கள். மக்களுக்கும்
நன்றாகவே பொழுது போகிறது.
இன்றைக்கு
இருக்கும் பெரும்பாலான செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் ஆகியோர் தங்களைத் திரைப்பட
நட்சத்திரங்களுக்கு இணையாகக் கருதிக்கொள்கிறார்கள். செய்தி வாசிப்பதையும், விவாத நிகழ்ச்சிகள்
நடத்துவதையும் ஏதோ ஒரு நிகழ்த்துக் கலையை நடத்துவது போலவே மேற்கொள்கிறார்கள். அரங்குக்கு
வரும் விருந்தினர்களை நாகரிகமாக நடத்தாமல், நிகழ்ச்சியின் நடுவிலேயே எழுந்து போகச்
செய்யும் அளவுக்குக் கேள்வி கேட்பதை ஏதோ தனக்கு மட்டுமே இருக்கும் பெரிய திறமை போல
பாவித்துக் கொள்கிறார்கள். விருந்தினர்களைப் பேசவிடாமல் தானே நிகழ்ச்சி முழுவதும் பேசுவதன்
மூலம் தன்னுடைய மேதைமையைப் பந்தி வைக்கிறார்கள். ’சத்தமாகப் பேசுவதே சாதனை’ என்று யார்
இவர்களுக்குச் சொல்லித் தந்தார்கள் என்று தெரியவில்லை.
இப்படியான
தொகுப்பாளர்களுக்கு மத்தியில் குரல், விரல் உயர்த்தாமல், அமைதியாகப் பேசி, விஷயங்களை
எளிமையாகப் புரிய வைக்கிற நபர்கள் சிலர் உள்ளனர். அப்படியான ஆளுமைகளில் ஒருவர்தான்
என்.டி.டி.வி.யின் தொகுப்பாளர் ரவீஷ் குமார். தன்னுடைய துணிச்சலான ‘பிரைம் டைம்’ நிகழ்ச்சி
மூலம் இதர வடக்கத்திய, குறிப்பாக இந்தி மீடியாக்கள் பேசத் தயங்குகிற விஷயங்களைப் பேசுபவர்.
கும்பல் வன்முறையாக இருந்தாலும் சரி, கூட்டுப் பாலியல் வன்முறையாக இருந்தாலும் சரி…
ரவீஷ் எடுக்கிற விஷயங்கள் வடக்கத்திய அரசியல்வாதிகளின் ஆசனவாயை எரிச்சல் அடைய வைப்பவை.
அதனாலேயே தொலைபேசி வாயிலாக நித்தமும் கொலை மிரட்டல்களைச் சந்தித்து வருபவர்.
ஆனால்
அந்த மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தொடர்ந்து இயங்கி வருகிறார். அந்தத் துணிச்சல்தான் அவருக்கு
‘ரமன் மக்ஸேஸே’ விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது.
ரவீஷ்
குமார் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, அருமையான எழுத்தாளரும் கூட. அவருடைய புத்தகம் ஒன்றைப்
பற்றி இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எழுதியிருந்தேன். அடுத்த ஆறு மாதத்தில் அவர் எழுதிய
இன்னொரு புத்தகம் பற்றி எழுத வேண்டிவரும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை.
இன்றைய
ஜனநாயகம் பற்றியும், கலாச்சாரம் பற்றியும், தேசத்தின் நிலை பற்றியும் அவர் இந்தியில்
எழுதிய ஒன்பது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘தி ஃப்ரீ
வாய்ஸ்’ என்ற தலைப்பில் ’ஸ்பீக்கிங் டைகர்’ வெளியீடாகக் கடந்த 2018-ல் வெளியானது. அந்தப்
புத்தகம் பற்றி அறிமுகம் செய்வது இன்றைய காலத்துக்கு மிகவும் அவசியமானது.
பப்ளிக்… ரோபோ – பப்ளிக்…
’தைரியம்
என்பது ஒரு பயத்திலிருந்து இன்னொரு பயத்துக்குச் செல்லும் போராட்டம். பயத்திலிருந்து
விடுதலை பெறுவதற்கான இடையறாத போராட்டம்’ என்கிறார் ரவீஷ். இதை, நீதியரசர் லோயா கொல்லப்பட்டது
தொடர்பாகத் தன்னுடைய நிகழ்ச்சியில் பேசியது குறித்து எழுதிய கட்டுரையில் சொல்கிறார்
அவர். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, அவரை போனில் அழைத்துப் பலர், ‘போதும் ரவீஷ். இனி
இதுபோன்ற விஷயங்களைக் கிளறாதே. நீ உயிருடன் இருக்கமாட்டாய்’ என்று எச்சரித்தனராம்.
அப்படி
அழைத்த பலரும் இன்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ள கட்சியின் ‘ஐ.டி. செல்’லைச் சேர்ந்தவர்களாகவும்,
‘வாட்ஸ் ஆப் பல்கலைக்கழகத்தை’ சார்ந்தவர்களாகவும் இருந்தனராம். இந்த ஐ.டி. செல்காரர்களாலும்,
வாட்ஸ் ஆப் பட்டதாரிகளாலும் உருவாக்கப்படுவதுதான் ‘ஃபேக் நியூஸ்’ எனப்படும் பொய்ச்
செய்திகள். இந்தச் செய்திகளை உண்மை என்று நம்புகிற கும்பலை ‘மாற்று குடிமக்கள்’ (ஆல்டர்நேட்டிவ்
சிட்டிசன்ரி) என்கிறார்.
“இவர்கள்
தங்களுக்காகச் சிந்திப்பதை மறந்துவிடுகிறார்கள். கும்பலாக மாறிவிடுகிறார்கள். அவர்களுடைய
நடத்தை ரோபோக்களுக்கு இணையாக மாறிவிடுகின்றன. எனவே இவர்களை நான் ‘ரோபோ – பப்ளிக்’ என்று
அழைக்கிறேன்” என்கிறார் ரவீஷ்.
இப்படி
எல்லாம் பேசுவதைக் கேட்டு ‘எப்படி சார் உங்களால மட்டும்..?’ என்று பலரும் கேட்கும்போது,
‘யோவ்… பேச வேண்டியது என் வேலை. அதுக்கு எதுக்குயா என்னைப் பாராட்டுறீங்க..?’ என்று
கேட்டு வாயடைத்துப் போக வைக்கிறார்.
இன்றைக்கு
உள்ள பல மீடியா, மோடிக்குச் சாமரம் வீசும் வேலையைச் செய்து வருகின்றன. இவற்றை ‘கோடி
மீடியா’ (godi media) என்கிறார் ரவீஷ். “ஆட்சியாளர்களின் மடியில் உட்கார்ந்து கொண்டால்
போதும். உங்களை யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். அரசு இன்று ஊடகங்கள் நாரதர் வேலையைப்
பார்த்தால் போதும் என்று விரும்புகிறது” என்று தான் சார்ந்திருக்கும் துறையைப் பற்றி
தனது வேதனையை வெளிப்படுத்துகிறார்.
போலி
வரலாறு குறித்தும், தங்களுக்கு வசதிப்பட்ட விதத்தில் வரலாற்றைத் திரிப்பது குறித்தும்
ரவீஷ் வெளிப்படுத்தும் வேதனை கவனத்தில் கொள்ள வேண்டியது. அதேபோல ஊடகங்கள் மீது அரசியல்வாதிகள்
அவதூறு வழக்குப் போடும்போது எல்லோருமே சொல்லி
வைத்தாற்போல ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார்கள்.
"ஆனால் அவ்வளவு பெரிய தொகையை யாரால்
தர முடியும்? ஆகவே, எல்லோருக்கும் பொதுவாக நான் ஒரு தீர்வைச் சொல்கிறேன்:
ஒரு
மதிப்பு, ஒரு இழப்பு
ஒரு
தேசம், ஒரு மதிப்பு
அனைவருக்கும்
ஒன்னே கால் ரூபாய் மரியாதை..!
ஆம்.
இனி எவராவது அவதூறு வழக்குப் போட்டால், 100 கோடிக்குப் பதிலாக ஒன்னே கால் ரூபாயை வழங்கலாம்.
இந்த ஒன்னே கால் ரூபாய், கடவுளையே திருப்திப்படுத்த போதுமானது" என்கிறார்.
அவதூறு
வழக்குகள் குறித்துப் பேசும்போது பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது குறித்தும் பேசுகிறார்.
பொதுவாக, வடக்கத்திய ஊடகவியலாளர்கள், தங்கள் பகுதி நிலவரங்களை மட்டுமே பேசுபவர்களாக
இருப்பார்கள். ஆனால், ரவீஷ், கர்நாடகாவில் கொல்லப்பட்ட கெளரி லங்கேஷ் குறித்துப் பேசுகிறார்.
ஆணவக் கொலைகள் குறித்துப் பேசும்போது தமிழகத்தின் சங்கர் – கவுசல்யா வழக்கைத் தொட்டுச்
செல்கிறார்.
ஒரு
பரந்துபட்ட அனுபவமும், ஆழமான வாசிப்பும் கொண்ட செய்தியாளராக விளங்கும் ரவீஷ், சுதந்திர
தினத்தை ஏன் கொண்டாட வேண்டும் என்பதற்கு இந்தக் காரணத்தைச் சொல்கிறார்:
“உங்களால்
எவர் மீதும், எந்தவொரு வெறுப்பையும் கடந்து வர முடிந்திருந்தால், உங்கள் சகிப்புத்தன்மை
அதிகரித்திருந்தால் சுதந்திர தினத்தை நீங்கள் முழு உரிமையுடன் கொண்டாடலாம்”.
சித்ரா
பத்மனாபன், அனுராக் பஸ்நெத் மற்றும் ரவி சிங் ஆகிய மூன்று பேர் சேர்ந்து இந்தத் தொகுப்பில்
உள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதனால், புத்தகத்தில் ஒரு சமநிலைத்தன்மை
இல்லை. அது அசதியை உருவாக்குகிறது.
அதைவிடப்
பெரிய அசதி… தமிழகத் தொலைக்காட்சி செய்தியாளர்கள் யாரும் ரவீஷ் விருது பெற்றதற்காக
வாழ்த்துத் தெரிவித்ததாகத் தகவல் இல்லை. தமிழ்ச் சமூகம் உருப்படுமா என்ன..?
No comments:
Post a Comment