Wednesday, November 27, 2019

மாற்றத்துக்கான சாசனம்..!


.வினோத் குமார்

இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் கேலிக் கூத்துகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 'யார் முதல்வர்?' என்கிற போட்டியில் பாரதிய ஜனதாவும், சிவ சேனையும், தேசியவாத காங்கிரஸும் தள்ளுமுள்ளுவில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இரண்டு முறை மாநில முதல்வராகப் பதிவியேற்று இரண்டு முறையும் ராஜினாமா செய்திருக்கிறார் பா...வின் தேவேந்திர ஃபட்னாவிஸ். இரண்டாவது முறையாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்த அந்த நாள், இந்தியாவின் 'அரசியல் சாசன நாள்' என்பது சமகால வரலாற்றின் அவல நகைச்சுவை!

'1950‍-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இந்தியா ஒரு சுதந்திர நாடாக இருக்கும்' என்று அரசியல் நிர்ணயசபையில் 1949-ம் ஆண்டு தனது முடிவுரையை ஆற்றினார் சட்ட மேதை அம்பேத்கர். ஆனால் அது சுதந்திர நாடாக வெறுங்கையோடு இருக்கவில்லை. தனக்கென்று ஒரு அரசியலமைப்பைக் கொண்டிருந்தது. அந்த அரசியலமைப்பு, அத்தனை காலம் தன் மீது காலணியாதிக்கம் செலுத்திய பிரிட்டிஷாரின் தாக்கத்தைப் பெருமளவு பெற்றிருந்தது என்றாலும், தனக்கென்ற ஒரு வல்லமையை அது பெற்றிருந்தது.

அதுவரையில் 'கவர்மென்ட் ஆஃப் இந்தியா ஆக்ட்' எனும் சட்டத்தைச் சுமந்துகொண்டிருந்த பாரதம், 1950-களிலிருந்து 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்' எனும் அதிகாரத்தை அணிந்துகொள்ளத் தொடங்கியது. இங்கு 'அரசியலமைப்பு' என்கிற வார்த்தை கவனிக்கப்பட வேண்டியது. அதுகாறும், தங்களை ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷாருக்கு 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் கமல் சொல்வது போல, 'சப்ஜெக்ட்' ஆக இருந்த மக்கள், சுதந்திர இந்தியாவுக்கான அரசியலமைப்பு உருவானவுடன், 'குடிமக்கள்' என்ற அந்தஸ்த்துக்கு உயர்த்தப்பட்டனர்.

அந்த உயரத்திலிருந்து அவர்கள் கீழே விழுந்துவிடாமல் இருக்க, கடந்த 71 ஆண்டுகளாக இந்த அரசியலமைப்பு தன்னை எப்படியெல்லாம் வலுப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறது, எவ்வாறெல்லாம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்திருக்கிறது என்பதைச் சொல்லும் ஆவணமாகத் திகழ்கிறது, பிரபல வழக்கறிஞர் கவுதம் பாட்டியா எழுதி ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்ட 'தி டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் கான்ஸ்டிட்டியூஷன்: ரேடிக்கல் பயோகிராஃபி இன் நைன் ஆக்ட்ஸ்' எனும் புத்தகம்.

கடந்த காலம், சம காலம் என இரண்டிலும் நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்பது வழக்குகளை உதாரணமாகக் கொண்டு, இந்திய அரசியலமைப்பு என்பது எப்படி மாற்றத்துக்கான சாசனமாகத் திகழ்கிறது என்பதை தெள்ளிய நீரோட்டம் போன்ற மொழி நடையில் சொல்லியிருக்கிறார் கவுதம் பாட்டியா.

சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகிய மூன்று தூண்களின் மீதுதான் இந்திய அரசியலமைப்பு எழுப்பப்பட்டிருக்கிறது. ஒரு தூணுக்கு மூன்று வழக்குகள் வீதம், மூன்று தூணுக்கு ஒன்பது வழக்குகளை அடுக்கி, நமது அரசியலமைப்பின் நீள, அகல, உயர விஸ்தீரனங்களை கழுத்தை அண்ணாந்து, கண்களை அகலத் திறந்து வைத்துப் பார்க்க வைக்கிறார் நூலாசிரியர்.


அந்த ஒன்பது வழக்குகளிலிருந்து மூன்று வழக்குகளின் சாரங்களை இங்கே உங்களுக்காக 'மைக்ரோ'வாகத் தருகிறேன்.

பாலின சமத்துவம்!

மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய காரணங்களைக் காட்டி அரசு தன் குடிமக்கள் மீது எந்தப் பாகுபாட்டையும் மேற்கொள்ளக் கூடாது என்கிறது அரசியலமைப்புச் சட்டத்தின் 15-‍வது பிரிவு. பணியிடத்திலும் எந்தப் பாகுபாட்டையும் செலுத்தக் கூடாது என்பது இதன் உட்பொருள்.
சரி. அப்படியென்றால் சரக்கு விற்கும் கடையில் பெண்களை வேலைக்கு அமர்த்தலாமா வேண்டாமா?

இப்படி ஒரு கேள்வி 1999-ம் ஆண்டில் எழுப்பப்பட்டது. நாம் முன்பே சொன்னது போல, நமது அரசியலமைப்பு பிரிட்டிஷாரின் தாக்கத்தைக் கொண்டிருக்கிறது என்று சொன்னோம் அல்லவா? அதற்கேற்றபடி, பிரிட்டிஷார் 1914-ல் இயற்றிய பஞ்சாப் கலால் சட்டம் நம்மிடையே இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் இது நடைமுறையில் இருக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த 80 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கண்ட கேள்வி எழுப்பப்பட்டது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல், மன ரீதியாக நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த 'இயற்கையான வித்தியாசங்களை' வைத்து ஒரு பெண், இந்தப் பணிக்கு ஏற்றவர்/ஏற்றவர் இல்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பின் மூலம், திருமணமானதால் ஒரு பெண்ணை வேலையைவிட்டு நிறுத்தவோ அல்லது கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதால் ஒரு பெண்ணை வேலையைவிட்டு நிறுத்தவோ அல்லது அவருக்கு உரிய பதவி உயர்வுகள் போன்றவற்றை வழங்காமல் இருக்கவோ கூடாது என்பதும் வெளிச்சமாகின.     

மதசகோதரத்துவம்!

இந்தியாவில் யாரும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். அதற்கான அவர்களின் உரிமை என்பது அடிப்படை உரிமை. அதில் யாரும் கை வைக்க முடியாது. ஆனால், அந்த மதமே ஒருவரை நீக்கி வைத்தால்..?

இப்படி ஒரு சிக்கல் 'தாவூதி போரா மத்திய வாரியம் எதிர் மகாராஷ்டிரா அரசு' வழக்கில் எழுந்தது. தாவூதி போரா என்பது இஸ்லாமிய மதத்தில் இருக்கும் ஒரு பிரிவு. அதில், தங்கள் இனத்தின் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்குத் தண்டனையாக, அவர்களை அந்த மதத்திலிருந்து நீக்கி வைப்பது வழக்கம்.


ஒரு கோயிலை, மசூதியை, தேவாலயத்தை மற்றும் அவை சார்ந்த விஷயங்களை நிர்வகிக்க, அந்தந்த மதங்களுக்கே உரிய சட்டங்கள் இருக்கின்றன. அதன்படி பார்த்தால், தாவூதி போராவின் இந்த 'விலக்கி வைத்தல்' சரி என்றே தோன்றும். ஆனால், நமது அரசியலமைப்பு என்பது தனி மனிதரை மையமாகக் கொண்டு இயங்குவது. அவருக்கு ஒரு சிக்கல் எனும்போது அவருக்காக நிற்க வேண்டியது நமது அரசியலமைப்பின் கடமையாகிறது.

அதன் அடிப்படையில், தாவூதி போராவின் விலக்கி வைத்தல் தவறு என்கின்றன நீதிமன்றங்கள். இதே விதி, சபரிமலை வழக்குக்கும் கூடப் பொருந்தலாம். எனவே அதுதொடர்பான விவாதங்களை நீதிபதிகள் முன்னெடுக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

'தனிநபர்' சுதந்திரம்!

'பிரைவஸி' எனும் தனிநபர் சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. தனக்கு விருப்பப்பட்ட நபருடன் அவருடைய சம்மதத்துடன் உடலுறவு கொள்வதற்கும், தனக்கு விருப்பமில்லாதவருடன் வாழ நிர்பந்திக்கப்பட்டால் அவருடன் உடலுறவு வைத்துக்கொள்ளாமல் இருப்பதற்கும் ஆண், பெண் ஆகிய இருவருக்கும் உரிமை உண்டு. இது அவர்களின் 'பிரைவஸி' சார்ந்த விஷயம். இதில் யாரும் தலையிட உரிமை இல்லை!

இப்படி ஒரு கருத்துடன், நீதிமன்றப் படியேறிய முதல் நபர் யார் தெரியுமா? அவர் ஒரு நடிகை. நமக்கெல்லாம் பரிச்சயமானவர்தான். சரிதாதான் அவர். 'மாப்பிள்ளைக்கு ராமன் மனசு... மாமனுக்கோ காமன் மனசு...' என்று ரஜினிக்கு 'நெற்றிக்கண்' படத்தில் 'டஃப்' கொடுப்பாரே... அதே சரிதா தான்!

16 வயதாக இருக்கும்போது அவருக்கு வெங்கட சுப்பையா என்பவருடன் திருமணமாகிவிட்டது. சில காலத்துக்குப் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். காலம் சரிதாவை சினிமா நட்சத்திர நாயகியாக உயர்த்தியது. சுப்பையாவைக் குப்பைபோல் கடாசியது. சரிதா புகழ் பெறுவதைப் பார்த்த சுப்பையா, அவருடன் வாழ... மன்னிக்க.. உடலுறவுகொள்ளஆசைப்பட்டார். அது எப்படி முடியும்? திரும்பவும் கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழ்ந்தால்.?

எனவே 'இந்து திருமணச் சட்டம்' பிரிவு 9-ன் கீழ், சரிதாவை தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ உத்தரவிடுங்கள் என்று கூறி ஆந்திர கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சுப்பையா. அங்கு அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது. அதை எதிர்த்து, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சரிதா. 'இந்து திருமணச் சட்டத்தின் 9வது பிரிவு அரசியலமைப்புக்கு எதிரானது. ஏனென்றால், அது என்னுடைய 'பிரைவஸி'யில் தலையிடுகிறது' என்று கூறி முறையிட்டார். அப்படி ஒரு வழக்கை அரசியலமைப்பு கண்டது அதுவே முதல்முறை!

அங்கு அவருக்கு நீதி கிடைத்தது. இதற்காக இந்தியப் பெண்கள் அனைவரும் சரிதாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த முன்மாதிரியான மாற்றத்தை, அதற்குப் பின் அதுபோல் வந்த சிலவழக்குகளில் அந்த மாற்றத்தை நீதிபதிகள் தொடரவில்லை. சொல்லப் போனால், அந்த மாற்றத்தைத் தொடர்வதும் தொடராமல் இருப்பதும் அந்தந்த நீதிபதிகளைப் பொறுத்திருந்தது. சில நீதிபதிகள் நமது அரசியலமைப்பை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றார்கள். சிலர், பின்னுக்கு இழுத்தார்கள்.


அதனால்தான் புத்தகத்தின் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார் கவுதம்: "இந்த மாற்றங்களை எல்லாம் முன்னெடுத்துச் செல்லத் தேவைப்படுவது... அரசியலமைப்பு பற்றிய தொலைநோக்கு, நீதிபரிபாலனத்தில் ஒரு கற்பனைத் திறன், ஏற்கெனவே உள்ள சட்டங்களைப் பற்றிய தெளிவு மற்றும் அடுத்தவர் மீதான பரிவு".

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, நமது அரசியலமைப்பு மீதான மரியாதை மேலும் மேலும் கூடுகிறது. ஆனால் சமகால நீதிபரிபாலனங்களைப் பார்க்கும்போது நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையும் குறைகிறது என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.   

மீண்டும் கட்டுரையின் முதல் பத்திக்கு வருவோம். 'தேசிய அரசியலமைப்பு நாள்' என்பதை 2015-ல், பா...தான் அறிமுகப்படுத்தி அனுசரித்தது. இன்று அதே கட்சிதான் அரசியலமைப்பைக் குழி தோண்டிப் புதைக்கிறது என்பது 'நகைமுரண்'.

அரசியலமைப்பு நாளில் (நவம்பர் 26) அறிமுகப்படுத்தியிருக்க வேண்டிய புத்தகத்தை ஒரு நாள் கழித்து அறிமுகப்படுத்துவது தாமதம்தான். அது சரி... இங்கு நீதியும் தாமதமாகத்தானே கிடைக்கிறது!  

நன்றி: கவுதம் பாட்டியா படம் (livelaw.in)

Sunday, November 24, 2019

காலத்தைக் கடந்த கட்டிடக் கலை ராணி

ந.வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 26 அக்டோபர் 2019
இந்திய விடுதலைக்குப் பிறகு, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கட்டமைப்பதில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் அளித்த பங்கு, அளப்பரியது. இந்தியாவில் தான் என்றில்லை, பக்கத்து நாடான இலங்கையிலும் அப்படித்தான். ஆனால், பெண்களின் பங்களிப்பை இருட்டடிப்புச் செய்வதில் எந்த நாட்டவரும் சளைத்தவரல்ல. ஆண்கள் எப்போதும் ஆண்கள்தாமே? 

இன்றும் பொறியியல் கல்லூரியில் கட்டுமானப் பொறியியல் பிரிவில் ஒரு பெண் சேர்ந்தால், அவரை ஏற இறங்கப் பார்க்கும் சமூகம் இது. ‘செங்கல், சிமெண்ட், கம்பி... இதெல்லாம் நமக்கு ஒத்து வருமாம்மா..?' என்று பரிதாபத்துடன் கேட்க ஒரு கூட்டம் கிளம்பி வந்துவிடும். ஆண்கள் கோலோச்சும் கட்டுமானப் பொறியியலுக்கே இப்படி என்றால், ஆண்களாலேயே சுவடு பதிக்க இயலாத ‘ஆர்க்கிடெக்சர்' எனப்படும் கட்டிடக் கலைத் துறை பற்றிக் கேட்கவே வேண்டாம்.
ஒரு நாலைந்து கட்டிக் கலைஞர்களின் பெயர்களைச் சொல்லுங்கள் என்று கேட்டால் அந்த ஐந்து பெயர்களுமே ஆண்களுடையதாகத்தான் இருக்கும். அவர்களைப் பற்றி நிறைய எழுதப்பட்டுவிட்டன. முதன்முறையாக, ஒரு பெண் கட்டிடக் கலைஞரைப் பற்றி ‘பிளாஸ்டிக் எமோஷன்ஸ்' என்ற தலைப்பில் ஷிரோமி பின்டோ என்பவர் எழுதிய நாவலை பெங்குவின் பதிப்பகம் சமீபத்தில் வெளியிபட்டுள்ளது.
இலங்கையின் முதல் பெண் கட்டிடக் கலைஞரான மின்னெட் த சில்வாதான் இந்த நாவலின் மையக் கரு. அன்றைய இலங்கை அரசியல்வாதி ஜார்ஜ் சில்வாவுக்கும், இலங்கையில் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டுமென்று போராடிய ஆக்னஸ் சில்வாவுக்கும் பிறந்தவர் மின்னெட் சில்வா. படிப்பை முடித்துவிட்டு இவர் இந்தத் துறைக்குள் வந்த வேளையில் லு கார்பூசியே எனும் பிரஞ்சுக் கட்டிடக் கலைஞர், மிகப் பெரிய ஆளுமை. மின்னெட்டுக்கு 25 வயதென்றால், அவருக்கு 45 வயதாவது இருந்திருக்கும். முதலில் கலைஞர்- ரசிகை என்ற நிலையில் அறிமுகமாகி, நண்பர்கள் என்று வளர்ந்து, பிறகு காதலர்கள் என்ற நிலைக்குச் சென்றார்கள்.
ஒரு பக்கம் இந்தியாவின் சண்டிகர் மாநிலத்தில் கார்பூசியே கட்டிடக் கலையில் தன் நிபுணத்துவத்தைக் காட்டிக்கொண்டிருக்க, அதே வேளையில் இலங்கையில் தனது திறமையைப் பறைசாற்றினார் மின்னெட். அந்த நாட்டின் இரண்டாம் பெரிய நகரமான கண்டியில், வீட்டு வசதி வாரிய பணியாளர்களுக்காகக் கட்டிய ஒவ்வொரு வீடும் தனித்துவம் மிக்கது.
தமிழ்நாட்டில் கட்டிக்கொடுக்கப்படும் தொகுப்பு வீடுகள் போன்று ஒரே மாதிரியாக அல்லாமல், குடியிருக்கப் போகும் ஒவ்வொரு பணியாளரின் வாழ்க்கை முறை, அவர்களது தேவைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள ஒரு வினாத்தாளைத் தயாரித்து, அதன் மூலம் அவர்களது விருப்பங்களைத் தெரிந்துகொண்டு, பிறகே வீடுகளைக் கட்டத் தொடங்கினார் மின்னெட்.
இந்தக் காலகட்டத்தில் அந்த இரண்டு மேதைகளும் சந்தித்துக் கொண்ட தருணங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எனினும், அவர்களுக்கு இடையில், தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடந்துகொண்டிருந்தது. கார்பூசியேவை மின்னெட் ‘கார்பூ' என்று செல்லமாக அழைக்க, மின்னெட்டை கார்பூசியே ‘என் பறவையே' என்று விளித்தார்.
நாவலில் இந்த இரண்டு ஆளுமைகளும் எழுதிக் கொள்வதாக இடம்பெற்றுள்ள கடிதங்கள், பெரும்பாலும் கற்பனையானவையாகவே இருந்தாலும், நிஜ வாழ்வில் கடிதங்களின் வாயிலாக அவர்கள் என்ன மாதிரியான உரையாடலை நடத்தியிருப்பார்கள் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
மின்னெட் எழுதிய ஒரு கடிதத்தில், ‘என்னதான் நான் திறமை மிக்க கட்டிடக் கலைஞராக இருந்தாலும், என் திறமையைப் பார்க்காமல், ‘கேர்ள்' (பெண் பிள்ளை) என்ற நிலையிலேயே என்னை நடத்துவது எனக்குப் பெரும் அவமானமாக உள்ளது' என்று எழுதுகிறார். எனில், அவர் எப்படிப்பட்ட போட்டி, பொறாமை மிகுந்த சூழலில் சிறந்த கட்டிடக் கலைஞராகப் பரிணமித்திருப்பார் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.
என்னதான் அவர் திறமைமிக்கக் கலைஞராக இருந்தாலும், 50-களில் எல்லாம் அவருக்கு ‘புராஜெக்ட்' வருவது நின்றுபோனது. அவரிடம் தொழில் கற்ற ஒரு ஆண் கட்டிடக் கலைஞரே, மின்னெட்டின் யோசனைகளை, புதுமைகளைத் தன்னுடையது என்று சொல்லி, கட்டிடங்கள் கட்டி, சம்பாதித்து, பெயர் வாங்கிக் கொண்டு போனார். ஜியோஃபரி பாவா எனும் ஆண் கட்டிடக் கலைஞரை, இலங்கை மிகப் பெரிய திறமைசாலியாகக் கொண்டாடுகிறது. அவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முந்தையவர் மின்னெட்.
ஆனால், பாவாவுக்கு தங்க மெடல் கொடுத்து கவுரவித்த 14 ஆண்டுகளுக்குப் பிறகே 1996-ல் மின்னெட்டுக்கு அந்தக் கவுரவம் அளிக்கப்பட்டது. இந்த அவமானங்களை எல்லாம் தாங்கி வாழ்ந்த மின்னெட், தனது 80-ம் வயதில் மருத்துவமனையில் தனிமையில் இறந்துபோனார்.
மின்னெட் இந்தியாவில் இருந்த காலங்களில் எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த், அணு விஞ்ஞானி ஹோமி பாபா போன்றோரின் அறிமுகம் கிடைத்தது. இந்த அறிமுகங்களின் பயனாக, முல்க் ராஜ் ஆனந்த், மின்னெட்டின் தங்கை அனில் த சில்வா ஆகியோருடன் சேர்ந்து ‘மார்க்' எனும் கட்டிடக் கலைக்கான இதழ் ஒன்றைத் தொடங்கினார் மின்னெட். அதில் கட்டிடக் கலை குறித்துப் பல கட்டுரைகளை அவர் எழுதினார். அந்த இதழ் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
நாவலின் ஓரிடத்தில் மின்னெட்டை கார்பூசியே ‘ஷி இஸ் டைம்லெஸ்' (அவள் காலங்களுக்கு அப்பாற்பட்டவள்) என்று தன் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருப்பதாக வரும். மின்னெட் செய்திருக்கும் சாதனைகளைப் பார்த்தால் அது உண்மைதான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்..!
நன்றி: இந்து தமிழ் திசை (சொந்த வீடு இணைப்பிதழ்)