Friday, December 6, 2019

ஃபாசிசத்தின் அறிகுறி..!


.வினோத் குமார்

இந்த நாள், அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள். இந்த நாள், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். இந்த நாள், ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் ஒருவரை வன்புணர்ந்து கொன்று எரித்த குற்றவாளிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நாள்!

ஒரே நாளில் எத்தனை துக்கங்களைத்தான் அனுசரிப்பது..? 'விடுங்க பாஸ்... இது என்ன எப்பவும் நடக்குற கதையா..?' என்று கடந்து செல்ல முடியவில்லை. ஏனென்றால், இதுபோன்ற சம்பவங்கள் இனி வரும் நாட்களில் தொடர்கதை ஆகலாம்!

ஆம்... அப்படித்தான் சொல்கிறது 'இந்தியா இன் கம்யூனல் க்ரிப்' எனும் புத்தகம். மதவாதத்துக்கு எதிராகப் போராடும் ராம் புனியானியின் புதிய புத்தகம். மும்பை ..டி.யின் முன்னாள் பேராசிரியரான ராம் புனியானி நாடறிந்த எழுத்தாளரும் கூட. இந்தப் புதிய புத்தகம் சீதை பதிப்பகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி 2014-ல் ஆட்சி அமைத்தது. பா...வின் அங்கமான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) அடிமட்டத் தொண்டராக இருந்து முன்னேறிய நரேந்திர மோடி, பாரதப் பிரதமரானார். அவரது தலைமையிலான அரசு, 2014 - 2019 காலகட்டத்தில் நடத்திய கூத்துகளை ஒரு கழுகுப் பார்வை பார்ப்பதுதான் இந்தப் புத்தகத்தின் மையம்.

அப்படி என்ன கூத்துகளை எல்லாம் நடத்தியது என்பதை அந்தப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு 'ரெடி ரெஃபரன்ஸ்' ஆகப் பயன்படும்.

அந்தப் புத்தகத்தின் ஓரிடத்தில், 'ஃபாசிசத்தின் அறிகுறி' என்ற தலைப்பில் ஒரு நாட்டில் ஃபாசிசம் எப்படித் தோன்றும் என்பதைக் குறித்து ராம் புனியானி சில கருத்துகளைக் கூறுகிறார். அவற்றின் சாராம்சம் இது:

"ஐரோப்பாவில் முதலாம் உலகப் போருக்குப் பின்னால் 'ஃபாசிசம்' என்கிற ஒரு நிகழ்வு தோன்றியது. தன்னுடைய தேசம் பெரியது என்று கூறும் அதன் தலைவனை வல்லவன் என்று சொல்லிப் புகழ்ந்து, அந்த நாட்டின் சிறுபான்மையினரை வஞ்சித்து, கொடூரமான முறையில் ஜனநாயகத்தை நொறுக்கி, அதன் மீது தேசியத்தைக் கட்டமைக்கிற தன்மையை, மனித இனம் தன் நினைவில் ஒரு பாடமாக வைத்திருக்கிறது. அப்படி ஒரு விஷயம் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதையும் அது நினைவில் கொண்டுள்ளது.

அப்போதிலிருந்து ஃபாசிசம் மற்றும் ஹிட்லர் ஆகிய வார்த்தைகள் நமது பேச்சில் சரளமாகப்புழங்குகின்றன. ராகுல் காந்தி ஒரு முறை மோடியை ஹிட்லர் என்று சொல்ல, பதிலுக்கு பா...வின் அருண் ஜேட்லி இந்திரா காந்தியை ஹிட்லர் என்றார். இந்திரா காந்தி, அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது உண்மைதான். அப்போதைய அமைச்சர்கள் சர்வாதிகாரிகளைப் போன்று நடந்துகொண்டதும் உண்மைதான். ஆனால் அவற்றை வைத்து இந்திராவை ஹிட்லருடன் ஒப்பிட முடியுமா..? முடியவே முடியாது.

ஐரோப்பாவில் காணப்பட்ட சில ஃபாசிஸ்ட்டுகள் ஜனநாயக முறையில் ஆட்சியைப் பிடித்து, பிறகு ஜனநாயகத்தையே நசுக்கியவர்கள். ஒரே சமயத்தில் தன்னை நாட்டின் காவலராகச் சொல்லிக்கொண்டே சர்வாதிகாரியாகவும் நடந்துகொண்டார்கள். அவர்கள் அண்டை நாடுகளையும் தங்களுடன் இணைத்துக்கொண்டு நாட்டை விரிவுபடுத்த ('அகண்ட பாரதம்' நினைவுக்கு வருதோன்னோ..?) ஆசைப்பட்டார்கள்.


இந்த ஃபாசிஸ்ட்டுகளுக்கு இன்னும் இரண்டு விசேஷ இயல்புகள் உண்டு. ஒன்று, கார்ப்பரேட்களால் இவர்கள் போஷிக்கப்படுவார்கள். இரண்டு, சிறுபான்மையினரைப் படுத்தி எடுப்பார்கள். சிறுபான்மையினர் கொடுமைக்கு ஆளாக்கப்படும்போது, அப்படி ஒரு சம்பவம் நடப்பது தனக்குத் தெரியாதது போல அமைதி காப்பார்கள் (இந்த இடத்தில் குசு... மன்னிக்க... பசுக் குண்டர்களால் இஸ்லாமியர்கள் கும்பல் வன்முறைக்கு  ஆளானபோது, ஒருவர் மவுன விரதத்தில் இருந்தது நினைவுக்கு வர வேண்டுமே..!).

பின் காலனியாதிக்க நாடுகளில், எஞ்சியிருக்கும் நிலப்பிரபுத்துவக் கொள்கைகளை, அந்நாட்டின் மத்திய தர வர்க்கம் எடுத்துக்கொள்ளும். அவற்றுக்கும் ஃபாசிசத்தன்மை இருக்கும். இவர்கள் தங்களது மதத்தைக் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகி, மாற்றுக் கருத்துகள் கொண்டோரின் மீது வன்முறையை ஏவுவார்கள். இது மத அடிப்படைவாதமாகத் திரியும். இந்தியாவில் அப்படியான மத அடிப்படைவாதம் இஸ்லாம் மதத்திலும் உண்டு. இந்து மதத்திலும் உண்டு.

ஆனால் ஜவாஹர்லால் நேரு என்ன சொல்கிறார் தெரியுமா? 'இஸ்லாம் மதவாதம் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. எனவே அதனால் ஃபாசிசத்தைக் கொண்டு வர முடியாது. ஆனால் இந்து மதவாதத்தால் அது முடியும்'.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய கருத்தியலாளரான எம்.எஸ்.கோல்வால்கர், 'வீ ஆர் அவர் நேஷன்ஹுட்' (We or Our Nationhood) எனும் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அது ஜெர்மனி நாஜிக்களின் ஃபாசிசக் கருத்துகளையொட்டி எழுதப்பட்ட புத்தகம். அதில், 'யூதர்களை அழித்ததன் மூலம் தனது தேசியத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டது ஜெர்மனி. இந்துஸ்தானம் அதனிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று எழுதுகிறார். 'நாம்' அல்லது 'அவர்கள் (மற்றவர்கள்)' என்ற கருத்தாக்கங்களை இந்தப் புத்தகத்தில் கட்டமைக்கிறார் அவர்.

இதன் அடிப்படையில் உருவானவைதான், நம் நாட்டில் இஸ்லாமியர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் ஏற்பட்டஇன்னல்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், ஃபாசிசத்தின் இந்திய அவதாரம் ஆர்.எஸ்.எஸ். அந்த அமைப்புக்கு 2002-ல் நரேந்திர மோடி என்ற நபர் தலைவராகக் கிடைத்தார்.

மோடி, ஒரு சாதாரண 'பிரச்சாரக்' ஆக இருந்தபோது பிரபல அரசியல் அறிவியலாளர் ஆஷிஷ் நந்திக்கு அவரைப் பேட்டியெடுக்கும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இவை (மொழிபெயர்ப்பின் போது பொருள் மயக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆங்கிலத்தில் அப்படியே தருகிறேன்): "I had met a textbook case of a fascist and a prospective killer, perhaps even a future mass murderer".

இத்தனைக்கும் குஜராத் பள்ளிகளில் ஹிட்லரை ஒரு சிறந்த தேசியவாதியாகப் படிக்கிறார்கள் மாணவர்கள்.

இந்தியா ஒரு பன்முகத் தன்மை வாய்ந்த நாடு. இங்கே ஃபாசிசம் எல்லாம் வருமா என்று சிலர் கேட்கிறார்கள். உண்மைதான். அந்தப் பன்முகத் தன்மைதான் இப்போதுவரை ஃபாசிசம் வளராமல் நம்மைக் காப்பாற்றி வருகிறது. கால ஓட்டத்தில் எல்லாம் மாறும். அதை இப்போது உலகம் முழுக்கப் பார்க்கிறோம். ஜனநாயக விழுமியங்கள், பன்மைத்துவம் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதன் மூலமே ஃபாசிசத்தை வேரறுக்க முடியும்".

இந்தக் கட்டுரையை எழுதும் இந்த நாளில், இந்துத்துவ அமைப்புகள் நம் நாட்டில் நடத்தும் 'ஏகல் வித்யாலயா' பள்ளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்ததையொட்டி, வாழ்த்துச் செய்தி சொல்லியிருக்கிறார் பாரதப் பிரதமர். இந்தப் பள்ளிகளில்தான் முழுக்க முழுக்கக் காவிமயப்படுத்தப்பட்ட கல்வி முறை பின்பற்றப்படுகிறது. இதே கல்வி முறையைப் பின்பற்றச் சொல்லித்தான் இதர மாநில அரசுகளை மத்திய அரசு நெருக்குகிறது. ஆக, ஃபாசிசத்தை முறியடிக்க நாம் எங்கிருந்து நமது பணியைத் தொடங்க வேண்டும் என்பது புரிகிறதா..?     

Monday, December 2, 2019

நான் பேசுறது கேட்குதா..?


.வினோத் குமார்

'என் பேர் கிரெட்டா துன்பெர்க். என்னோட வயசு 16. இந்த மைக் 'ஆன்' ஆகி இருக்கா..? நான் பேசுறது கேட்குதா..?'.

கிரெட்டா துன்பெர்க்கின் பெரும்பாலான உரைகள் இப்படித்தான் தொடங்குகின்ற. 'ஆமா... கேட்குது.. ரொம்ப சத்தமா கேட்குது..' என்று மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். ஆனால் பலர் அவரது உரையைக் கேட்டும் செவிடாக இருப்பதுதான் உலகின் பருவநிலை மாற்றப் பிரச்சினை மேலும் தீவிரமடைந்து வருவதற்குக் காரணம் என்பதை நாம் உணரவில்லை!

'ஸ்வென்ஸ்கா தாக்ப்ளாதத்' (Svenska Dagbladet) என்ற ஸ்வீடன் நாட்டு நாளிதழ் ஒன்று, மே 2018-‍ம் ஆண்டில் சூழலியல் பாதுகாப்பு தொடர்பாக குழந்தைகளுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்தான் இந்த கிரெட்டா. அவரது கட்டுரையைப் படித்த சூழலியல் செயற்பாட்டாளர்கள் சிலர், கிரெட்டாவைத் தொடர்புகொண்டு பருவநிலை மாற்றம் குறித்து மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். அதன் பிறகு, அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்குச் சென்று வந்துகொண்டிருந்தார் கிரெட்டா.

இப்படியான தொடர்புகளும் சந்திப்புகளும் பருவநிலை மாற்றம் தொடர்பான அவரது புரிதலை மேலும் ஆழமாக்கின. 'சரி இப்படியே பேசிக்கொண்டிருந்தால் எப்படி, செயலில் இறங்க வேண்டாமா..?' என்று யோசித்தார் கிரெட்டா. தன் நண்பர்களுடன் விவாதித்தார். தன் வீட்டாருடன் ஆலோசித்தார். வீட்டார், 'உனக்கு ஏம்மா இந்த வேலையெல்லாம்... ஏதாவது பண்றதா இருந்தா நீயே பண்ணு, எங்க உதவியை எதிர்பார்க்காதே' என்று கைவிரித்துவிட, நண்பர்கள் மட்டும் துணை நின்றார்கள்.

சரி என்ன செய்யலாம்? 16 வயதில் நம்மால் என்ன செய்துவிட முடியும், பள்ளிக்குப் போகாமல் இருப்பதைத் தவிர..? யெஸ்... அதேதான். பள்ளிக்குப் போகாமல், பாராளுமன்றத்துக்குப் போனால்..?

செயலில் இறங்கினாள் கிரெட்டா. 2018 ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி, எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல், ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்றத்தின் முன் அமர்ந்தாள் அவள். உலகம் திரும்பிப் பார்த்தது.

அன்று முதல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பருவநிலை மாற்ற போராட்டத்தின் முக்கியமான அடையாளமாகிவிட்டாள் கிரெட்டா. இந்த ஒன்றரை ஆண்டில் அவள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில், பருவநிலை மாற்றப் பிரச்சினை குறித்துத் தனது உரையை ஆற்றியிருக்கிறாள். அந்த உரைகளில் சில 'நோ ஒன் இஸ் டூ ஸ்மால் டு மேக் டிஃபரென்ஸ்' எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டு, பெங்குயின் பதிப்பகத்தால் சமீபத்தில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 2 முதல் 13-ம் தேதி வரை, ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மன்ற மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்வது சாலப் பொருத்தம்.


'பாரிஸ் ஒப்பந்தத்தின் குறிக்கோள்களை நாம் அடைய வேண்டும் என்று சொன்னால், மூன்று ஆண்டுகளுக்குள் பசுங்குடில் வாயுக்கள் வெளியாகும் அளவைக் குறைக்க வேண்டும்' என்று 2017-ல், பருவநிலை மாற்ற விஞ்ஞானிகள் சொல்லியிருந்தனர். அதில் நாம் ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகளை இழந்துவிட்டோம். இந்த உண்மை மக்களுக்குத் தெரிந்திருந்தால், நான் ஏன் பருவநிலை மாற்றம் குறித்து ஆர்வமாக இருக்கிறேன் என்று அவர்கள் கேட்க மாட்டார்கள்...' என்று தொடங்குகிறது அந்தப் புத்தகத்தில் இருக்கும் முதல் கட்டுரை.

இன்னொரு உரையில் அவர் இப்படிச் சொல்கிறார்: "ஆறிலிருந்து 12 ஆண்டுகளுக்குள் பணக்கார நாடுகள் தங்களது பசுங்குடில் வாயுக்கள் வெளியேறும் எண்ணிக்கையைக் குறைத்தால் மட்டுமே, சாலைகள், மருத்துவமனைகள், மின்சாரம், பள்ளிகள், சுத்தமான குடிநீர் போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்து தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும்.? இந்தத் தேவைகளில் ஏற்கெனவே தன்னிறைவு அடைந்திருக்கும் நாம் பருவநிலை மாற்றம் குறித்துக் கவலைப்படவில்லை என்றால், இந்தியா அல்லது நைஜீரியா போன்ற நாடுகள் அந்தப் பிரச்சினையைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?"

'எதிர்காலம் என்று நீங்கள் சொல்கிறபோது, 2050-ம் ஆண்டுக்கு மேல் நீங்கள் சிந்திப்பதில்லை. அப்போது, என் வாழ்நாளில் பாதியைக் கூட தாண்டியிருக்க மாட்டேன். 2078-ல் நான் எனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடினால், அப்போது நான் எப்படி இருப்பேன், என் குழந்தைகள், என் பேரக் குழந்தைகள் ஆகியோரின் நிலை என்னவாக இருக்கும் என்றெல்லாம் நீங்கள் யோசித்துப் பார்த்தீர்களா?' என்று இன்னொரு உரையில் கேள்வி எழுப்புகிறாள் கிரெட்டா.

'ஹோமோ சேப்பியன்கள் என்று சொல்லப்படும் மனித இனம் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலான பிரச்சினை, பருவநிலை மாற்றம். ஆனால் அந்தப் பிரச்சினைக்கு எளிய தீர்வு உண்டு. அது சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். பசுங்குடில் வாயுக்கள் வெளியேறுவதை நிறுத்தவேண்டும். அவ்வளவுதான். இந்தப் பிரச்சினைக்குச் சிறிய அளவில் கூட பங்காற்றியிருக்காத மக்கள்தான், இந்தப் பிரச்சினையால் அதிகம் பாதிப்படையவும் செய்கிறார்கள்.

இதுகுறித்தெல்லாம் நான் அரசியல்வாதிகளிடம் பேசும்போது, 'மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நாங்கள் விரும்பவில்லை' என்கிறார்கள். பருவநிலை மாற்றம் தொடர்பான அறிவியல் தகவல்கள், உண்மைகள் தெரியாத காரணத்தால்தான், மக்கள் விழிப்புணர்வில்லாமல் இருக்கிறார்கள். எனவேதான் நான் எல்லாரையும் அறிவியலின் பின்னால் அணி திரளச் சொல்கிறேன். நம்மிடையே இருக்கும் மிகச் சிறந்த அறிவியலை, அரசியல் மற்றும் ஜனநாயகத்தின் இதயமாக மாற்றுங்கள் என்கிறேன்.

பசுங்குடில் வாயுக்களை 'நிறுத்துங்கள்' என்று சொல்வதற்குப் பதிலாக அதை 'குறையுங்கள்' என்று சொல்வதால்தான் இந்தப் பிரச்சினை நீண்டுகொண்டே இருப்பதற்குக் காரணம். அதனால் ஏற்பட்டிருக்கும் அழுக்கை பெரியவர்கள் நீங்கள் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் அந்த அழுக்கைச் சுத்தப்படுத்த சிறியவர்கள் நாங்கள் வந்திருக்கிறோம். பூமி சுத்தமாகும் வரை நாங்களும் ஓயமாட்டோம்' என்று அழுத்தமாகச் சொல்கிறாள் கிரெட்டா.

இப்படி அவர் உரை முழுவதும் வெறுமனே உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமல்லாது, அறிவியல் தகவல்களோடும் இருப்பதால்தான், அவரது உரை பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. 

'ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம்' எனும் வியாதியால் பாதிக்கப்பட்டவள் கிரெட்டா. அந்த நோய் உடையோருக்கு, சமூகத்தில் மற்றவருடன் தொடர்புகொள்வதில் சிக்கலிருக்கும். எனினும், சில குறிப்பிட்ட விஷயங்கள் மீது அவர்களுக்கு அதீத ஆர்வம் இருக்கும். பருவநிலை மாற்றம் குறித்த கிரெட்டாவின் ஆர்வத்துக்கு இதுவும்கூட காரணமாக இருக்கலாம். ஆனால் தனது குறைபாட்டையே தனக்கான பலமாக மாற்றி வெற்றி பெற்றுவிட்டாள் கிரெட்டா. அதைப் பாராட்ட மனமில்லாதோர் ஆயிரம் விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.

இப்போதெல்லாம் எங்கேனும் குழாய் நீர் வழிந்து கொண்டிருந்தாலோ, யாருமில்லாத அறையில் மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தாலோ, மனம் பதறுகிறது. உடனே ஓடிச் சென்று அவற்றை 'ஆஃப்' செய்கிறேன். அந்தப் பதற்றம்தான் கிரெட்டா நம்மிடம் எதிர்பார்ப்பது. ' வான்ட் யூ டு பேனிக்!' (I want you to panic).