Tuesday, April 14, 2020

இது சிரிக்கும் விஷயம் அல்ல...!


.வினோத் குமார்

'Brevity is the soul of wit' என்பார்கள். அதாவது, ஒரு நகைச்சுவையின் உயிர் என்பது அதை எவ்வளவு தூரம் சுருங்கச் சொல்கிறோம் என்பதில் இருக்கிறது என்பது பொருள். கருத்து சொல்வதும், அடுத்தவர் முன்பு தனது அறியாமையைக் காட்டுவதன் மூலம் எழும் முட்டாள்த்தனமும் இன்று நகைச்சுவை என்று கருதப்படுகின்றன. சினிமா முதற்கொண்டு செய்தி ஊடகங்கள் வரை அந்தப் போக்கு இப்போது பரவலாக இருக்கிறது.

நகைச்சுவை என்பது உடல்மொழியோ, பேச்சோ அல்ல. இந்த இரண்டும் இல்லாமல் வெறுமனே வரைந்து காட்டுவதன் மூலமும் ஒருவரைச் சிரிக்க வைத்துவிட முடியும். அதுதான் ஆங்கிலத்தில் 'கார்ட்டூன்' என்றும், தமிழில் 'கேலிச் சித்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் பல நேரங்களில் இந்தக் கேலிச் சித்திரங்கள் சிரிக்க மட்டுமே வைப்பதில்லை. சில நேரம் மட்டம் தட்டவும் பயன்படுத்தப்படுகிறது. அப்படி கேலிச் சித்திரங்கள் வாயிலாகத் தன் வாழ்நாள் முழுவதும் மட்டம் தட்டப்பட்டு வந்தவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது அம்பேத்கர் தான்..!

அரசியலில் அம்பேத்கரின் வரவு என்பது ஒரு ஜனநாயக நிகழ்வு. 1919-ல் சவுத்பரோ ஆணையத்தின் முன்பு, தேர்தலில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கைதான், பின்னாளில் இந்தியா ஒரு ஜனநாயக நாடாகத் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கு முதற்புள்ளியாக இருந்தது. 1919-லேயே அண்ணல், அரசியலுக்குள் வந்துவிட்டார் என்றாலும், கார்ட்டூன்கள் மூலமாக அவர் பரவலாக அறியப்பட்டது 1932-ல்தான். அப்போதுதான் மூன்றாம் வட்ட மேசை மாநாடு நடந்து முடிந்திருந்தது.

1919 முதல் 1932-க்கு இடைப்பட்ட காலத்தில் தலித்துகளின் முன்னேற்றத்துக்காக மஹத் சத்தியாகிரகம் உள்ளிட்டபல போராட்டங்களை அம்பேத்கர் முன்னெடுத்தார். அதன் காரணமாக தலித்துகளின் மனதில் அம்பேத்கர் உயர்ந்து நின்றார். மூன்றாவது வட்ட மேசை மாநாட்டில், இடஒதுக்கீட்டின் தொடக்கப் புள்ளி என்று சொல்லக்கூடிய 'கம்யூனல் அவார்ட்' கிடைத்தது. இதனால் தலித்துகளுக்கு என தனிப் பிரதிநிதித்துவம் கிடைக்க வழி ஏற்பட்டது. அதனால் அம்பேத்கரைத் தங்களின் தலைவராக தலித் மக்கள் வரித்துக்கொண்டார்கள்.

அம்பேத்கரின் இந்த வளர்ச்சி காந்தியின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அதனால்தான் 'தீண்டத்தகாதோரின் தலைவன் நானே' என்று சொல்லி வான்டட் ஆக வண்டியில் ஏறினார்.

1932-ல் 'கம்யூனல் அவார்ட்' கிடைத்த அந்த நொடி முதல் 1956-ல் பெளத்த மதத்தை அம்பேத்கர் தழுவும் வரை, ஆங்கில நாளிதழ்களில் அம்பேத்கர் குறித்து வெளிவந்த கார்ட்டூன்களை எல்லாம் தேர்வு செய்து 'நோ லாஃபிங் மேட்டர்' என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுத்திருக்கிறார் உன்னமதி சியாமா சுந்தர். இவர் தற்போது டெல்லில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வு மாணவராக இருக்கிறார். நவயானா வெளியீடாக இந்தப் புத்தகம் 2019-ல் வெளியானது.


2006-ம் ஆண்டு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) பதிப்பித்த 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில் நத்தை மீது செல்லும் அம்பேத்கரை நேரு சவுக்கால் அடிப்பது போன்ற கார்ட்டூன் ஒன்று இடம்பெற்றிருந்தது (பார்க்க படம்: 1). அப்படி ஒரு கார்ட்டூன் பாடப் புத்தகங்களில் இருப்பது 2012-ல்தான் வெளிச்சத்துக்கு வந்தது. அந்தப் படத்தை முதன்முதலில் சுட்டிக்காட்டியவர் 'இந்தியக் குடியரசுக் கட்சி'யின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே (எங்கேயோ கேட்ட பெயர் போல் இருக்கிறதா..? 'கோ கொரோனா கோ' என்று மந்திரம் ஓதினாரே... அவரேதான்!). அவரைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் அதை மக்களவையில் பிரச்சினையாக்கினார். பின்னே உயர்சாதி நேரு, தாழ்த்தப்பட்ட அம்பேத்கரை சவுக்கால் விளாசினால் விடுவோமா..? ஆனால் சில உயர்சாதி, இடதுசாரி இன்டலெக்சுவல்கள் 'கருத்து சுதந்திரம்' என்று அந்த கார்ட்டூனை வரைந்த ஷங்கருக்குக் குரல் கொடுத்தார்கள். எனினும் நாடு முழுக்க எழுத்த எதிர்ப்பால் அந்த கார்ட்டூன் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது.


இந்த நிகழ்வுதான் இப்படியொரு புத்தகத்தை எழுத சியாமா சுந்தருக்குத் தூண்டுகோலாக இருந்தது. மொத்தம் 122 கார்ட்டூன்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கார்ட்டூன்கள் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில் வெளிவந்தவை. அவற்றை வரைந்தது 'ஷங்கர்ஸ் வீக்லி' புகழ் ஷங்கர். வேறு பல நாளிதழ்களில் அம்பேத்கர் குறித்த கார்ட்டூன்கள் வெளிவந்துள்ளன என்றாலும், குறிப்பாக 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகையை இங்கே சுட்டிக்காட்டுவதற்கு ஒரு காரணம் உண்டு. காந்தியின் போராட்டங்களுக்கு ஸ்பான்ஸர் செய்த ஜி.டி.பிர்லா தான் இந்தப் பத்திரிகை தொடங்கப்படுவதற்கும் நிதி அளித்தார். சில காலத்துக்குப் பிறகு பிர்லாவே இந்தப் பத்திரிகையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இன்று வரையிலும் பிர்லா குடும்பத்தினர் கையில்தான் இந்தப் பத்திரிகை இருக்கிறது. இந்தப் பத்திரிகையில் காந்தியின் மகனான தேவதாஸ் காந்தி எடிட்டராக இருந்திருக்கிறார். அம்பேத்கரை மட்டம்தட்டி அதிக அளவில் இந்தப் பத்திரிகை ஏன் கார்ட்டூன்கள் வெளியிட்டது என்பது இப்போதும் புரிந்திருக்குமே..!

கோயில் நுழைவுப் போராட்டம், குள்ள உருவம், பூணூல் அணிந்த 'மார்டன் மனு', சேலை கட்டிய அம்பேத்கர் போன்ற 'தீம்'கள் (பார்க்க படம்:2) இந்த கார்ட்டூன்களில் திரும்பத் திரும்ப வருகின்றன. அதில் அவற்றை வரைந்தவர்களின் மேட்டிமைத்தனமும், அம்பேத்கர் பெரிய தலைவராக வந்துவிடக் கூடாதே என்கிற பதற்றமும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றன.


ஒரு கார்ட்டூனை எடுத்துக்கொள்கிறார் நூலாசிரியர். அந்த கார்ட்டூன் வரையப்பட்ட காலகட்டத்தைச் சொல்கிறார். பிறகு அந்த கார்ட்டூனில் உள்ள விஷயங்களை அலசுகிறார். இதன் மூலம் ஒரு கார்ட்டூன் மூலம் கடந்த கால வரலாற்றை அறிய முடிவதுடன், அந்த கார்ட்டூனுக்குப் பின்னுள்ள 'சவர்னா' அரசியலையும் புரிந்துகொள்ள முடிகிறது.

அத்துடன், 'trivia' என்று சொல்லப்படும் முக்கியமில்லாத, ஆனால் வாசிப்புக்கு சுவாரஸ்யம் கூட்டுகிற தகவல்களையும் ஆங்காங்கே தந்து செல்கிறார் நூலாசிரியர். உதாரணத்துக்கு, அம்பேத்கரின் கனவுகளில் ஒன்றாக இருந்த 'இந்து கோட் பில்' என்று சொல்லப்படும் இந்து சட்ட மசோதாவை அப்போது வெளியான 'Mr and Mrs 55' என்ற இந்தித் திரைப்படத்தில் 'டைவர்ஸ் பில்' என்று நாயகன் குறிப்பிடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதாவது, அந்த சட்ட மசோதா பெண்களுக்குத் தரவுள்ள சுதந்திரத்தை, பெண்கள் எப்படி தவறாகக் கையாள்வார்கள் என்று சொல்வதற்கு அப்படி ஒரு வசனம்! அந்தக் காலத் திரைப்பட இயக்குநர்களுக்கு அவ்வளவுதான் அரசியல் அறிவு இருந்தது!

அம்பேத்கரை முதன் முதலில் 'ஜெய் பீம்' என்று வாழத்தியவர் எல்.என். ஹர்தாஸ், 1946-ல் அரசியல் சாசன சபையில் அம்பேத்கர் இடம்பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த ஜோகேந்திரநாத் மண்டல் (இவர்தான் பின்னாளில் பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக இருந்தார். அந்நாட்டின் அரசியல் சாசன சபையின் தலைவராகச் சில காலம் பொறுப்பில் இருந்தவர். அங்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் எதிர்ப்பால், 1950-ல் மீண்டும் இந்தியா வந்து இங்கேயே தனது வாழ்நாளைக் கழித்தார்), இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் (Preamble) உள்ள 'சமூகத்துவ' (socialist), 'சமயசார்பற்ற' (secular) போன்ற வார்த்தைகளைச் சிபாரிசு செய்தது கே.டி.ஷா எனும் பொருளாதார நிபுணர், சமஸ்கிருதத்தைப் படித்தால் வேதங்களில் உள்ள புரட்டுகளை மக்கள் தெரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அதை தேசிய மொழியாக்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறியது, காங்கிரஸை எரியும் வீடு (Congress is a burning house) என்று அம்பேத்கர் சொன்னதன் பின்னணி, மராத்தியில் 'பீம்' என்ற வார்த்தையுடன் 'யா' என்று சேர்த்து 'பீம்யா' என்று அழைப்பது இழிச்சொல், நான்காம் வகுப்பிலேயே புத்தரின் மீது அம்பேத்கருக்கு இருந்த நாட்டம் என இப்படி பல அறிவார்ந்த தகவல்களையும் தூவிச் செல்கிறார் உன்னமதி சியாமா சுந்தர்.  

அரசியலமைப்பை வடிவமைக்கும்போது, காந்தி உள்ளிட்ட தலைவர்கள், கிராமத்தை மையப்படுத்தியே நமது அரசியலமைப்பு இருக்க வேண்டும் என்றார்கள். ஆனால் அம்பேத்கரோ, தனிநபரை மையப்படுத்தித்தான் இருக்க வேண்டும் என்றார். ஏனெனில் அண்ணலைப் பொருத்தவரை கிராமம் என்பது 'a den of ignorance' (அறியாமையின் குகை!). உடனே 'நேஷனல் ஹெரால்ட்' (காங்கிரஸ் பத்திரிகைதான்) நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் பிரேஷ்வர், அம்பேத்கருக்கு ஒரு பூணூலை அணிவித்துவிட்டார் (பார்க்க படம்: 3). அதாவது, கிராமத்தை மையப்படுத்தாமல் அரசியலமைப்பை இயற்றுவதன் மூலம் அம்பேத்கர் நவீன தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறாராம்..!


இந்த கார்ட்டூன் வெளியான அதே நாளில் நவம்பர் 14 (ஆம், நேரு பிறந்தநாளில்தான்), 'ஷங்கர்ஸ் வீக்லி'யில் ஷங்கர் வரைந்த கார்ட்டூன் ஒன்று வெளியானது. அதில் 'கிராமங்களை 'அறியாமையின் குகை' என்று சொன்னதற்காக அம்பேத்கர் தாக்கப்பட்டுவிட்டார்' என்ற கேப்ஷனுடன் அந்த கார்ட்டூன் இருந்தது. உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை. கிராமங்களுக்கு சப்போர்ட் செய்த சில நாடாளுமன்ற'வியாதி'களை கிராமத்துப் பாமரர்களாக வரைந்து, அவர்களின் எதிர்ப்பை அம்பேத்கர் மீதான 'தாக்குதல்' என்று உருவகப்படுத்துவதற்காக அந்தப் பாமரர்களின் கையில் கத்தி, கம்பு போன்றவற்றைக் கொடுத்திருக்கிறார் ஷங்கர். ஆனால் அம்பேத்கர் கெத்தாக, 'ஒத்தையில நிக்கேன்... தில்லிருந்தா வாங்கலே..!' என்கிற ரீதியில் நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறார். அந்த கார்ட்டூன் தான் இந்தப் புத்தகத்தின் அட்டைப் படமாகவும் இருக்கிறது (பார்க்க படம்:4).


'ஒவ்வொரு தலித்துகளின் வெற்றிக்குப் பின்னாலும், ஒரு உயர்சாதிக்காரரின் பரிவு இருப்பதாக உயர்சாதியினர் பலர் நம்புகிறார்கள்' என்று புத்தகத்தின் ஓரிடத்தில் சொல்கிறார் நூலாசிரியர். அப்படி நம்புபவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் நிச்சயமாகத் தங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்.

இந்த கார்ட்டூன்களில் இடம்பெற்றிருக்கும் உருவகங்களை அரைவேக்காட்டுத்தனம் என்கிறார் நூலாசிரியர். இந்த கார்ட்டூன்கள் அடங்கிய இந்தப் புத்தகத்தை இதற்கு முன்னுரை எழுதிய 'கேஸ்ட் மேட்டர்ஸ்' புகழ் சூரஜ் யங்டே 'This book is a museum of the perversities of the elites' என்கிறார். மேட்டிமைக்கார வக்கிரங்களின் அருங்காட்சியகம்! ஆம்... அம்பேத்கருக்குப் பூணூல் மாட்டுவதெல்லாம் நிச்சயம் சிரிக்கும் விஷயமில்லை சாரே...!

நன்றி: புத்தகத்துக்கு (படங்களுக்காக)