Showing posts with label book cover. Show all posts
Showing posts with label book cover. Show all posts

Friday, May 24, 2024

கத்தியும் காதலும்!

ந.வினோத்குமார்

2022 ஆகஸ்ட் 12 அன்று, அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுவதற்காகச் சென்றிருந்த‌ ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்தி படுகொலை முயற்சி ஒன்றுக்கு ஆளானார். அந்தத் தாக்குதல் நடந்த சில வாரங்களிலேயே அவரது 'விக்டரி சிட்டி' எனும் நாவல் வெளியானது. அப்போது பலரும், 'இதுதான் ருஷ்தியின் கடைசி படைப்பாக இருக்கும்' என்று நினைத்து வருந்தியிருப்பார்கள். சிலர் அவரைச் சிலுவையில் அறைந்துவிட்ட மகிழ்ச்சியில் சிரித்திருப்பார்கள். 

ஆனால் அடுத்த 18 மாதங்களில் அந்தக் கொலை முயற்சி குறித்தே ஓர் அல்புனைவுப் படைப்புடன் புதிதாக உயிர்த்தெழுந்திருக்கிறார் ருஷ்தி. அந்தப் புத்தகத்துக்கு அவர் சூட்டியிருக்கும் தலைப்பு, 'கத்தி' என்று நேரடி பொருள்படும் ஆங்கிலச் சொல்லான 'நைஃப் (Knife)'. 

தலைப்பைப் பார்த்தால், அந்தப் புத்தகம் கொலை முயற்சி பற்றியதுதான். ஆனால் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, அது தன்னைக் குத்திக் கிழித்த கத்தியின் மீதான தியானம் என்று புரிகிறது. அந்தக் கத்தி உடனான தனது கண நேர உறவாடலைச் சொல்வதன் வழியாக, தனது காதல் வாழ்க்கையையும் அவர் திறந்துகாட்டி நம்மை மலைக்க வைக்கிறார். அதனால் இந்தப் படைப்பை 'கத்தி உடன் ஒரு காதல் கதை' என்றும் சொல்லலாம். அவரது சொற்களிலேயே சொல்வதானால்: A gunshot is action at a distance, but a knife attack is a kind of intimacy, a knife's a close-up weapon, and the crimes it commits are intimate encounters.

1988-இல் அவரது 'தி சாத்தானிக் வெர்சஸ்' எனும் நாவல் வெளிவந்தது. அதற்கு அடுத்த ஆண்டு, அந்தப் புத்தகம், 'மத நிந்தனை செய்கிறது' என்று சொல்லி ஈரானின் அயோதுல்லா ருஹோல்லா கொமேய்னி அவர் மீது 'ஃபத்வா' விடுத்தது பலரும் அறிந்தது. அன்றிலிருந்து ருஷ்தியின் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு தாக்குதல்கூட அதன் விளைவுதான் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு அந்தப் புத்தகம் காரணம் அல்ல என்று ருஷ்தி, இந்தப் புத்தகத்தின் ஆரம்ப அத்தியாயத்திலேயே தெளிவுபடுத்திவிடுகிறார். அப்படியெனில் என்னதான் காரணம்? அதை நீங்களே வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

அந்தக் கொலை முயற்சித் தாக்குதலுடன், பிரபலக் கவிஞரும் தனது மனைவியுமான ரேச்சல் எலிசா க்ரிஃபித்ஸ் உடன் தனக்குக் காதல் அரும்பியது எப்படி என்பதை விவரிக்கும்போது ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்: If a thing is not made public, it doesn't really exist.

அவரது காதலும் திருமணமும் பல ஆண்டுகள் 'ரகசியமாக', அதாவது அந்த இருவரின் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கு மட்டும் தெரிந்து, 'சமூக ஊடகம்' எனும் வெளி உலகத்துக்குத் தெரியாமல் வைத்துக் கொண்டது ஏன் என்பதை நாம் விளங்கிக்கொள்ளும்போது, மேற்கண்ட வரியின் சாஸ்வதம் உணரலாம்.

மருத்துவக் கட்டுகளை மெல்ல மெல்ல அவிழ்ப்பதுபோல, தன்னைக் கொலை செய்ய முயற்சித்த இளைஞனுடன் கற்பனை உரையாடலை நடத்தி அவன் உளவியலைப் புரிந்துகொள்ள அவர் மேற்கொண்ட‌ முயற்சி, உலகில் புரையோடிப் போயிருக்கும் வெறுப்பரசியலை அறுத்துக் காண்பிக்கிறது. ருஷ்தி அந்த இளைஞனைப் பற்றி என்ன நினைக்கிறார்? அது அந்த இளைஞனுக்கு அவர் வழங்கிய‌ மிகச் சிறந்த தண்டனை. மிகக் கொடிய மன்னிப்பு. அந்த மனத்தை நம்மில் எத்தனை பேரால் கைக்கொள்ள இயலும்?

புத்தகம் நெடுக, தான் வாசித்த புத்தகங்கள், அதில் தனக்கு நெருக்கமான பகுதிகள், வரிகள் ஆகியவற்றைச் சொல்லும் அழகு, நம்மை அந்தப் புத்தகங்களைத் தேடிப் போக வைக்கிறது. ஓர் எழுத்தாளர் செய்ய வேண்டிய தார்மீகக் கடமைகளில் ஒன்று அவ்வாறு புத்தகங்களை அறிமுகப்படுத்துவது... வாசகரின் கடமை அதைத் தேடிப் போவது.

இந்தப் படைப்பின் மூலம் நாம் கற்றுக்கொள்ளவும் நம்பிக்கை கொள்ளவும் ஒரு விஷயம் உண்டு. "ஒரு பேரிடரைச் சந்தித்து நீங்கள் உயிர் மீளும்போது, உங்கள் பண்பு சிறக்கிறது. உங்கள் ஆளுமை உயர்கிறது. உங்கள் வாழ்க்கை மேம்படுகிறது". ருஷ்தி சந்தித்த அந்தப் பேரிடர், அவர் எழுத்தையும் மேலும் அழகாக்கி இருக்கிறது!

நன்றி படங்கள்: Amazon.in (book cover), Wikipedia (Salman Rushdie)

Tuesday, April 14, 2020

இது சிரிக்கும் விஷயம் அல்ல...!


ந.வினோத் குமார்

'Brevity is the soul of wit' என்பார்கள். அதாவது, ஒரு நகைச்சுவையின் உயிர் என்பது அதை எவ்வளவு தூரம் சுருங்கச் சொல்கிறோம் என்பதில் இருக்கிறது என்பது பொருள். கருத்து சொல்வதும், அடுத்தவர் முன்பு தனது அறியாமையைக் காட்டுவதன் மூலம் எழும் முட்டாள்த்தனமும் இன்று நகைச்சுவை என்று கருதப்படுகின்றன. சினிமா முதற்கொண்டு செய்தி ஊடகங்கள் வரை அந்தப் போக்கு இப்போது பரவலாக இருக்கிறது.

நகைச்சுவை என்பது உடல்மொழியோ, பேச்சோ அல்ல. இந்த இரண்டும் இல்லாமல் வெறுமனே வரைந்து காட்டுவதன் மூலமும் ஒருவரைச் சிரிக்க வைத்துவிட முடியும். அதுதான் ஆங்கிலத்தில் 'கார்ட்டூன்' என்றும், தமிழில் 'கேலிச் சித்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் பல நேரங்களில் இந்தக் கேலிச் சித்திரங்கள் சிரிக்க மட்டுமே வைப்பதில்லை. சில நேரம் மட்டம் தட்டவும் பயன்படுத்தப்படுகிறது. அப்படி கேலிச் சித்திரங்கள் வாயிலாகத் தன் வாழ்நாள் முழுவதும் மட்டம் தட்டப்பட்டு வந்தவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது அம்பேத்கர் தான்..!

அரசியலில் அம்பேத்கரின் வரவு என்பது ஒரு ஜனநாயக நிகழ்வு. 1919-ல் சவுத்பரோ ஆணையத்தின் முன்பு, தேர்தலில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கைதான், பின்னாளில் இந்தியா ஒரு ஜனநாயக நாடாகத் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கு முதற்புள்ளியாக இருந்தது. 1919-லேயே அண்ணல், அரசியலுக்குள் வந்துவிட்டார் என்றாலும், கார்ட்டூன்கள் மூலமாக அவர் பரவலாக அறியப்பட்டது 1932-ல்தான். அப்போதுதான் மூன்றாம் வட்ட மேசை மாநாடு நடந்து முடிந்திருந்தது.

1919 முதல் 1932-க்கு இடைப்பட்ட காலத்தில் தலித்துகளின் முன்னேற்றத்துக்காக மஹத் சத்தியாகிரகம் உள்ளிட்ட‌ பல போராட்டங்களை அம்பேத்கர் முன்னெடுத்தார். அதன் காரணமாக தலித்துகளின் மனதில் அம்பேத்கர் உயர்ந்து நின்றார். மூன்றாவது வட்ட மேசை மாநாட்டில், இடஒதுக்கீட்டின் தொடக்கப் புள்ளி என்று சொல்லக்கூடிய 'கம்யூனல் அவார்ட்' கிடைத்தது. இதனால் தலித்துகளுக்கு என தனிப் பிரதிநிதித்துவம் கிடைக்க வழி ஏற்பட்டது. அதனால் அம்பேத்கரைத் தங்களின் தலைவராக தலித் மக்கள் வரித்துக்கொண்டார்கள்.

அம்பேத்கரின் இந்த வளர்ச்சி காந்தியின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அதனால்தான் 'தீண்டத்தகாதோரின் தலைவன் நானே' என்று சொல்லி வான்டட் ஆக வண்டியில் ஏறினார்.

1932-ல் 'கம்யூனல் அவார்ட்' கிடைத்த அந்த நொடி முதல் 1956-ல் பெளத்த மதத்தை அம்பேத்கர் தழுவும் வரை, ஆங்கில நாளிதழ்களில் அம்பேத்கர் குறித்து வெளிவந்த கார்ட்டூன்களை எல்லாம் தேர்வு செய்து 'நோ லாஃபிங் மேட்டர்' என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுத்திருக்கிறார் உன்னமதி சியாமா சுந்தர். இவர் தற்போது டெல்லில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வு மாணவராக இருக்கிறார். நவயானா வெளியீடாக இந்தப் புத்தகம் 2019-ல் வெளியானது.


2006-ம் ஆண்டு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) பதிப்பித்த 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில் நத்தை மீது செல்லும் அம்பேத்கரை நேரு சவுக்கால் அடிப்பது போன்ற கார்ட்டூன் ஒன்று இடம்பெற்றிருந்தது (பார்க்க படம்: 1). அப்படி ஒரு கார்ட்டூன் பாடப் புத்தகங்களில் இருப்பது 2012-ல்தான் வெளிச்சத்துக்கு வந்தது. அந்தப் படத்தை முதன்முதலில் சுட்டிக்காட்டியவர் 'இந்தியக் குடியரசுக் கட்சி'யின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே (எங்கேயோ கேட்ட பெயர் போல் இருக்கிறதா..? 'கோ கொரோனா கோ' என்று மந்திரம் ஓதினாரே... அவரேதான்!). அவரைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் அதை மக்களவையில் பிரச்சினையாக்கினார். பின்னே உயர்சாதி நேரு, தாழ்த்தப்பட்ட அம்பேத்கரை சவுக்கால் விளாசினால் விடுவோமா..? ஆனால் சில உயர்சாதி, இடதுசாரி இன்டலெக்சுவல்கள் 'கருத்து சுதந்திரம்' என்று அந்த கார்ட்டூனை வரைந்த ஷங்கருக்குக் குரல் கொடுத்தார்கள். எனினும் நாடு முழுக்க எழுத்த எதிர்ப்பால் அந்த கார்ட்டூன் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது.


இந்த நிகழ்வுதான் இப்படியொரு புத்தகத்தை எழுத சியாமா சுந்தருக்குத் தூண்டுகோலாக இருந்தது. மொத்தம் 122 கார்ட்டூன்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கார்ட்டூன்கள் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில் வெளிவந்தவை. அவற்றை வரைந்தது 'ஷங்கர்ஸ் வீக்லி' புகழ் ஷங்கர். வேறு பல நாளிதழ்களில் அம்பேத்கர் குறித்த கார்ட்டூன்கள் வெளிவந்துள்ளன என்றாலும், குறிப்பாக 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகையை இங்கே சுட்டிக்காட்டுவதற்கு ஒரு காரணம் உண்டு. காந்தியின் போராட்டங்களுக்கு ஸ்பான்ஸர் செய்த ஜி.டி.பிர்லா தான் இந்தப் பத்திரிகை தொடங்கப்படுவதற்கும் நிதி அளித்தார். சில காலத்துக்குப் பிறகு பிர்லாவே இந்தப் பத்திரிகையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இன்று வரையிலும் பிர்லா குடும்பத்தினர் கையில்தான் இந்தப் பத்திரிகை இருக்கிறது. இந்தப் பத்திரிகையில் காந்தியின் மகனான தேவதாஸ் காந்தி எடிட்டராக இருந்திருக்கிறார். அம்பேத்கரை மட்டம்தட்டி அதிக அளவில் இந்தப் பத்திரிகை ஏன் கார்ட்டூன்கள் வெளியிட்டது என்பது இப்போதும் புரிந்திருக்குமே..!

கோயில் நுழைவுப் போராட்டம், குள்ள உருவம், பூணூல் அணிந்த 'மார்டன் மனு', சேலை கட்டிய அம்பேத்கர் போன்ற 'தீம்'கள் (பார்க்க படம்:2) இந்த கார்ட்டூன்களில் திரும்பத் திரும்ப வருகின்றன. அதில் அவற்றை வரைந்தவர்களின் மேட்டிமைத்தனமும், அம்பேத்கர் பெரிய தலைவராக வந்துவிடக் கூடாதே என்கிற பதற்றமும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றன.


ஒரு கார்ட்டூனை எடுத்துக்கொள்கிறார் நூலாசிரியர். அந்த கார்ட்டூன் வரையப்பட்ட காலகட்டத்தைச் சொல்கிறார். பிறகு அந்த கார்ட்டூனில் உள்ள விஷயங்களை அலசுகிறார். இதன் மூலம் ஒரு கார்ட்டூன் மூலம் கடந்த கால வரலாற்றை அறிய முடிவதுடன், அந்த கார்ட்டூனுக்குப் பின்னுள்ள 'சவர்னா' அரசியலையும் புரிந்துகொள்ள முடிகிறது.

அத்துடன், 'trivia' என்று சொல்லப்படும் முக்கியமில்லாத, ஆனால் வாசிப்புக்கு சுவாரஸ்யம் கூட்டுகிற தகவல்களையும் ஆங்காங்கே தந்து செல்கிறார் நூலாசிரியர். உதாரணத்துக்கு, அம்பேத்கரின் கனவுகளில் ஒன்றாக இருந்த 'இந்து கோட் பில்' என்று சொல்லப்படும் இந்து சட்ட மசோதாவை அப்போது வெளியான 'Mr and Mrs 55' என்ற இந்தித் திரைப்படத்தில் 'டைவர்ஸ் பில்' என்று நாயகன் குறிப்பிடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதாவது, அந்த சட்ட மசோதா பெண்களுக்குத் தரவுள்ள சுதந்திரத்தை, பெண்கள் எப்படி தவறாகக் கையாள்வார்கள் என்று சொல்வதற்கு அப்படி ஒரு வசனம்! அந்தக் காலத் திரைப்பட இயக்குநர்களுக்கு அவ்வளவுதான் அரசியல் அறிவு இருந்தது!

அம்பேத்கரை முதன் முதலில் 'ஜெய் பீம்' என்று வாழத்தியவர் எல்.என். ஹர்தாஸ், 1946-ல் அரசியல் சாசன சபையில் அம்பேத்கர் இடம்பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த ஜோகேந்திரநாத் மண்டல் (இவர்தான் பின்னாளில் பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக இருந்தார். அந்நாட்டின் அரசியல் சாசன சபையின் தலைவராகச் சில காலம் பொறுப்பில் இருந்தவர். அங்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் எதிர்ப்பால், 1950-ல் மீண்டும் இந்தியா வந்து இங்கேயே தனது வாழ்நாளைக் கழித்தார்), இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் (Preamble) உள்ள 'சமூகத்துவ' (socialist), 'சமயசார்பற்ற' (secular) போன்ற வார்த்தைகளைச் சிபாரிசு செய்தது கே.டி.ஷா எனும் பொருளாதார நிபுணர், சமஸ்கிருதத்தைப் படித்தால் வேதங்களில் உள்ள புரட்டுகளை மக்கள் தெரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அதை தேசிய மொழியாக்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறியது, காங்கிரஸை எரியும் வீடு (Congress is a burning house) என்று அம்பேத்கர் சொன்னதன் பின்னணி, மராத்தியில் 'பீம்' என்ற வார்த்தையுடன் 'யா' என்று சேர்த்து 'பீம்யா' என்று அழைப்பது இழிச்சொல், நான்காம் வகுப்பிலேயே புத்தரின் மீது அம்பேத்கருக்கு இருந்த நாட்டம் என இப்படி பல அறிவார்ந்த தகவல்களையும் தூவிச் செல்கிறார் உன்னமதி சியாமா சுந்தர்.  

அரசியலமைப்பை வடிவமைக்கும்போது, காந்தி உள்ளிட்ட தலைவர்கள், கிராமத்தை மையப்படுத்தியே நமது அரசியலமைப்பு இருக்க வேண்டும் என்றார்கள். ஆனால் அம்பேத்கரோ, தனிநபரை மையப்படுத்தித்தான் இருக்க வேண்டும் என்றார். ஏனெனில் அண்ணலைப் பொருத்தவரை கிராமம் என்பது 'a den of ignorance' (அறியாமையின் குகை!). உடனே 'நேஷனல் ஹெரால்ட்' (காங்கிரஸ் பத்திரிகைதான்) நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் பிரேஷ்வர், அம்பேத்கருக்கு ஒரு பூணூலை அணிவித்துவிட்டார் (பார்க்க படம்: 3). அதாவது, கிராமத்தை மையப்படுத்தாமல் அரசியலமைப்பை இயற்றுவதன் மூலம் அம்பேத்கர் நவீன தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறாராம்..!


இந்த கார்ட்டூன் வெளியான அதே நாளில் நவம்பர் 14 (ஆம், நேரு பிறந்தநாளில்தான்), 'ஷங்கர்ஸ் வீக்லி'யில் ஷங்கர் வரைந்த கார்ட்டூன் ஒன்று வெளியானது. அதில் 'கிராமங்களை 'அறியாமையின் குகை' என்று சொன்னதற்காக அம்பேத்கர் தாக்கப்பட்டுவிட்டார்' என்ற கேப்ஷனுடன் அந்த கார்ட்டூன் இருந்தது. உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை. கிராமங்களுக்கு சப்போர்ட் செய்த சில நாடாளுமன்ற'வியாதி'களை கிராமத்துப் பாமரர்களாக வரைந்து, அவர்களின் எதிர்ப்பை அம்பேத்கர் மீதான 'தாக்குதல்' என்று உருவகப்படுத்துவதற்காக அந்தப் பாமரர்களின் கையில் கத்தி, கம்பு போன்றவற்றைக் கொடுத்திருக்கிறார் ஷங்கர். ஆனால் அம்பேத்கர் கெத்தாக, 'ஒத்தையில நிக்கேன்... தில்லிருந்தா வாங்கலே..!' என்கிற ரீதியில் நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறார். அந்த கார்ட்டூன் தான் இந்தப் புத்தகத்தின் அட்டைப் படமாகவும் இருக்கிறது (பார்க்க படம்:4).


'ஒவ்வொரு தலித்துகளின் வெற்றிக்குப் பின்னாலும், ஒரு உயர்சாதிக்காரரின் பரிவு இருப்பதாக உயர்சாதியினர் பலர் நம்புகிறார்கள்' என்று புத்தகத்தின் ஓரிடத்தில் சொல்கிறார் நூலாசிரியர். அப்படி நம்புபவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் நிச்சயமாகத் தங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்.

இந்த கார்ட்டூன்களில் இடம்பெற்றிருக்கும் உருவகங்களை அரைவேக்காட்டுத்தனம் என்கிறார் நூலாசிரியர். இந்த கார்ட்டூன்கள் அடங்கிய இந்தப் புத்தகத்தை இதற்கு முன்னுரை எழுதிய 'கேஸ்ட் மேட்டர்ஸ்' புகழ் சூரஜ் யங்டே 'This book is a museum of the perversities of the elites' என்கிறார். மேட்டிமைக்கார வக்கிரங்களின் அருங்காட்சியகம்! ஆம்... அம்பேத்கருக்குப் பூணூல் மாட்டுவதெல்லாம் நிச்சயம் சிரிக்கும் விஷயமில்லை சாரே...!

நன்றி: புத்தகத்துக்கு (படங்களுக்காக)

Monday, April 23, 2018

கனவின் விழிப்பு!

ந.வினோத் குமார்

பதிக்கப்பட்ட தேதி: 16 ஏப்ரல் 2017


‘அட்டையைப் பார்த்துப் புத்தகத்தை எடை போடக் கூடாது’ என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் பல சமயம், அட்டை நம் கண்களையும் சிந்தனையையும் கவர்ந்து ஒரு புத்தகத்தை வாங்கவைத்துவிடும். பிரித்துப் படித்தால், ‘எத்தனை துன்பங்கள் வைத்தாய் இறைவா?’ என்று ஏங்கவைத்துவிடும்.

ஒரு புத்தகத்தின் அட்டை அவ்வளவு சிறப்பாக இல்லாமல் போனதாலேயே அந்தப் புத்தகம் பரவலான வாசக கவனத்துக்கு வராமல் போனதற்கு மேற்கில் நிறைய சான்றுகள் உண்டு. உதாரணத்துக்கு, ரோல் தால் எழுதிய ‘சாக்லெட் ஃபாக்டரி’, ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’, எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய ‘ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்’ போன்றவற்றைச் சொல்லலாம்.

தமிழில் இன்றுவரை அட்டைப் படம் குறித்த தெளிவான சிந்தனை பெரும்பாலான பதிப்பகங்களிடம் இல்லை. என்றாலும், பதிப்பகங்களை மட்டும் குறைகூறிவிட முடியாது. தமிழ் எழுத்தாளர்கள் பலர், தங்கள் கடமை எழுதுவதோடு முடிந்துவிடுகிறது என்று நினைத்துவிடுகிறார்கள். தவிர, இன்று புத்தக அட்டை களுக்கு வரைய வேண்டும் என்ற அவசியத்தையும் இல்லாமல் ஆக்கிவிட்டது கூகிள்.

அதில் தேடினால் அநேக கிராஃபிக்ஸ் படைப்புகள் கிடைக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டால் போதும் என்பது தான் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் உள்ளிட்ட பலரின் மனப்போக்கு.

இந்தச் சூழலில் தனது புத்தகங்களுக்கு அமைக்கப்படும் அட்டைகள் குறித்த தனது கருத்துகளைத் தொகுத்து சிறு நூலாகக் கொண்டு வந்திருக்கிறார் ஆங்கில, இத்தாலிய எழுத்தாளர் ஜும்ப்ப லஹிரி. ‘தி க்ளோதிங் ஆஃப் புக்ஸ்’ எனும் அந்த நூலை பெங்குவின் பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.


‘அட்டை தயாராகும்போது ஒரு புத்தகம் பிறக்கிறது’ என்கிறார் ஜும்ப்ப லஹிரி. அட்டைப் படம் தயாரான அந்த நிமிடத்தில், என் படைப்பு முயற்சி முடிவுக்கு வந்துவிடுகிறது, என்பது அவரின் வாதம்.

“ஒரு புத்தகத்தின் அட்டைப் படம் என்பது மொழிபெயர்ப்பைப் போன்றது. அதாவது, எழுத்திலிருந்து காட்சியாக ஒரு புத்தகம் உருக்கொள்கிறது. மொழிபெயர்ப்பைப் போலவே, அட்டைப் படமும் மூலப் பிரதிக்கு (அதாவது வார்த்தைகளுக்கு) நியாயம் செய்வதாகவோ அல்லது அநீதி இழைப்பதாகவோ இருக்கலாம். சில சமயம் வாசகர்கள் என் புத்தகத்துக்குக் கையெழுத்து வாங்க வரும்போது, அந்தப் புத்தகத்தின் மோசமான அட்டையைப் பார்த்து, அதைக் கிழித்துவிடலாமா என்றுகூடத் தோன்றும்” என்று அவர் எழுதுகிறார்.

எழுத்தாளர்களுக்குத் தங்கள் புத்தகங்களின் அட்டைப் படத்தைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு அல்லது உரிமை, பல சமயங் களில் கிடைப்பதில்லை என்பதையே மேற்கண்ட வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. வணிகக் காரணங்களுக்காக அட்டைப் படம், அட்டையில் பிற எழுத்தாளர்கள் அந்தப் புத்தகத்துக்குத் தந்திருக்கும் ஒரு வரிப் பாராட்டுகள், இத்தனை விருதுகள் வென்றுள்ளது என்பது போன்ற தகவல்கள் உள்ளிட்ட பதிப்பக உத்திகள், ஒரு படைப்பின் உண்மையான பொருளைச் சிதைத்துவிடுகின்றன என்கிறார் இந்நூல் ஆசிரியர். ‘அணிந்திருக்கும் ஆடைகளை வைத்து எப்படி மனிதர்கள் மதிப்பிடப்படுகிறார்களோ அதுபோல, ஒரு அட்டையை வைத்து ஒரு புத்தகமும் மதிப்பிடப்படுகிறது’ என்கிறார்.

இந்தக் காரணங்களுக்காகத்தான் எழுத்தாளர் விர்ஜீனியா வுல்ஃப் தன் புத்தகங்களை வெளியிடுவதற்கென்று சொந்தமாக ‘ஹோகார்த் பிரஸ்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். தன் சகோதரி வனெஸ்ஸா பெல்லுடன் இணைந்து தனது புத்தகங்களின் அட்டைகளை வுல்ஃப் உருவாக்கினார்.

இன்று அவரது புத்தகங்கள் பல பதிப்புகளைக் கண்டிருந்தாலும், அவரின் முதல் பதிப்புப் புத்தக அட்டைகள் கொண்டிருந்த ஈர்ப்பை, இப்போதிருக்கும் அட்டைகள் கொண்டிருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

வுல்ஃப்பைப் பின்பற்றி, தமிழ் எழுத்தாளர்கள் ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்துவிட முடியாதுதான். ஆனால், அவரைப் போல, ஓவியர்களுடன் கலந்து பேசி அட்டைகளை முடிவுசெய்யலாம்.

‘எழுதுவது என்பது ஒரு கனவைப் போன்றது என்றால், ஒரு புத்தகத்தின் 
அட்டை விழிப்பைப் போன்றது’ என்கிறார் லஹிரி. அந்தக் கனவின் விழிப்பு கடினமானதாக இல்லாமல் இயல்பாக நடந்தால் நல்லதுதானே?

நன்றி: தி இந்து