Saturday, November 15, 2025

ஆடை துறந்தால் ஆன்ம விடுதலை..!

ந.வினோத்குமார்

தலைப்பைப் படித்தவுடன் ஏதோ ஆன்மிகம் தொடர்பான புத்தகத்தைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். இது 'அவ்வுலகம்' பற்றியது அல்ல. நம் அக உலகம் பற்றியது!

மேலே படிப்பதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி... உங்களில் எத்தனை பேர் நிர்வாணமாக இருந்திருக்கிறீர்கள்..? "இது என்னங்க கேள்வி... பிறக்கும்போதே நாம எல்லோரும் துணி இல்லாமதானே பிறக்குறோம்...". "செக்ஸ் பண்ணும்போது துணி இல்லாமதான இருப்போம்...". "குளிக்கும்போது..."

இப்படி நிறைய பதில்களை நீங்கள் சொல்லக்கூடும். பிறக்கும்போது நாம் நிர்வாணமாக வருகிறோம் என்பது சரிதான். ஆனால் அது நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஒன்று. ஆகவே அதைவிட்டு விடுவோம். அடுத்து, உடலுறவின் போது கூட முழுமையாக ஆடைகளைக் களையாமல் உறவு கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆக அதையும் விட்டுவிடுவோம். அடுத்து, குளிக்கும்போது கூட சிலர் உள்ளாடைகள் அணிந்துதான் குளிக்கிறார்கள். 

எனில், எப்போதுதான் நாம் முழுமையான விழிப்புணர்வுடன் நிர்வாணமாக இருந்திருக்கிறோம்? அல்லது நம்மால் ஏன் அப்படி இருக்க முடியவில்லை? அல்லது நிர்வாணமாக இருப்பது குறித்து எப்போதாவது யோசித்தாவது இருக்கிறோமா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தொடங்கினால் பக்கங்கள் நீளும்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணமும் பார்வையும் புரிதலும் இருக்கும்... எனவே இந்தக் கேள்விகளுக்கான விடையை அவரவர் தங்களுக்குள்ளேயே தேடிப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

சரி... ஏன் நிர்வாணமாக இருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலை அளிப்பதுதான் 'தி கிரேட் இந்தியன் நேச்சுரிஸ்ட்  - எ சீக்ரெட் லைஃப் அன்வீல்ட்' (The Great Indian Naturist - A Secret Life Unveiled) எனும் புத்தகம். 

சொன்னால் நம்பமாட்டீர்கள்... இந்தப் புத்தகத்தை எழுதியது ஒரு பெண். அதுவும் தொன்மையான கலாசாரத்துக்குப் பெயர் பெற்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண். அவர் பெயர் பூஜா கெளடா. அடைப்புக்குறிக்குள் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்ற சொற்களைச் சேர்க்கத் தேவையில்லாத உண்மையான பெயர் தான்!

1980-களில் சென்னையில் பிறந்தவர் இவர். அப்படியென்றால் தற்போது அவருக்கு என்ன வயதிருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். இங்கேயே படித்தவர் என்பதால் அவருக்கு தமிழும் தெரியும். தற்போது பெங்களூரூவில் வசிக்கிறார்.

அங்கே அவருக்கு ஒரு நெருங்கிய தோழி இருந்தார். அந்தத் தோழி அவரது வீட்டில் எப்போதும் நிர்வாணமாகத்தான் இருப்பார். கணவரும் தானும் மட்டுமே அந்த வீட்டில் இருப்பதால் அவருக்கு ஒரு சுதந்திரம் இருந்தது. தவிர, தங்களது வீட்டுக்குள் அவர் நிர்வாணமாக வலம் வர அவரது கணவரும் முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். அப்படி ஒருநாள் அந்தத் தோழி நிர்வாணமாக இருந்தவேளையில், அவரது வீட்டுக்குச் செல்கிறார் பூஜா. அங்கே தனது தோழி நிர்வாணமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பூஜா அவரிடம் 'ஏன் இப்படி இருக்கிறாய்?' என்று கேட்கிறார். அது குறித்த தகவல்களை அந்தத் தோழி சொல்வதைக் கேட்டு பூஜா ஆச்சரியமடைகிறார். பிறகு, மெல்ல மெல்ல தானும் நிர்வாண உலகத்துக்குள் புகுந்து தனக்குக் கிடைத்த விடுதலையை நினைத்து பூஜா ஆனந்தமடைகிறார். தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மற்றவர்களையும் இந்த நிர்வாண உலகத்துக்குள் அழைத்து வருகிறார். அந்தப் பயணம் எப்படி நிகழ்ந்தது என்பதைச் சொல்லும் அனுபவம்தான் இந்தப் புத்தகம்!

மேற்கத்திய நாடுகளில் அவ்வப்போது திடீர் திடீர் என ஏதேனும் புதிய கலாசார மாற்றங்கள் நிகழும். ஜாஸ், ராக் அண்ட் ரோல், மினி ஸ்கர்ட், டிஸ்கோ, ஹிப்பி, ஆர்கானிக், மினிமலிசம் என கடந்த ஒரு நூற்றாண்டில் இசை, பொழுதுபோக்கு, வாழ்க்கை முறை எனப் பல தளங்களில் இந்த கலாசார மாற்றங்கள் நிகழும். எங்கோ ஒரு நாட்டில் பிறக்கும் இந்த மாற்றங்கள், மெல்ல மெல்ல உலகம் முழுக்கப் பரவும். பொதுமக்களிடம் அந்த மாற்றங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அந்தப் புதிய கலாசாரங்கள் நிலைக்கும் அல்லது வந்த வேகத்தில் மறையும். 

அப்படி ஒரு கலாசாரச் சிந்தனையாக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியில் உதித்ததுதான் 'நேச்சுரலிம்' (Naturism) அல்லது 'நியூடிம்' (Nudism). அதாவது ஆடைகளற்று பிறந்த மேனியாக சுதந்திரமாக இருப்பது. வீட்டில் மட்டுமல்ல... பொது இடத்திலும்! இதுகுறித்து வாசிக்கவும் விவாதிக்கவும் நிறைய விஷயங்கள் உண்டு. எனினும் மேம்போக்காக இணையத்தில் மேய்ந்தால், ஜெர்மனியில் 'சன் பாத்திங்க்' (சூரிய ஒளிக் குளியல்) மூலம் உடலுக்கு ஏற்படும் நன்மைகளுக்காக என்று தொடங்கி, பிரான்சில் ஆடையில்லாமல் சுதந்திரமாகத் திரிய ரிசார்ட் ஆரம்பிப்பது (உலகிலேயே முதல்) என்று பரவி, பிறகு சில நாடுகளில் 'நிர்வாணிகள் சங்கம்' தொடங்கி என இன்று 'பாடி ஷேமிங்குக்கு (body shaming) எதிராக' என்று வந்து நிற்கிறது. இந்த கலாசார மாற்றம் ஏதோ தனி மனிதர்களிடம் மட்டும்தான் தென்படுகிறது என்று நினைக்க வேண்டாம். பல நாடுகளில் குடும்பம் குடும்பமாக இந்த வாழ்க்கை முறையை தழுவியிருக்கிறார்கள். 

இந்த வாழ்க்கை முறைக்கு இந்தியாவிலும் வரவேற்பு இருப்பதால், தற்போது இங்கும் நேச்சுரிஸம் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள் சிலர். என்ன... அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்காங்கே தனித்தனியாக இருக்கிறார்கள்... ஒரு வீட்டில் கணவரோ அல்லது மனைவியோ நேச்சுரிஸம் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்... வீட்டுக்குள்ளேயும் கூட யாரும் இல்லாத போது மட்டும் நேச்சுரிஸம் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள்... இவர்களில் பலர் 'நாம் நிர்வாணமாக இருக்க ஆசைப்படுவது மனநோயோ' என்று அஞ்சுபவர்களாக இருக்கிறார்கள்... அவர்களை எல்லாம் ஒன்றிணைக்கும் முயற்சியில் இந்த 'நிர்வாண ராணி' ஈடுபட்டிருக்கிறார். 

'இதெல்லாம் செக்ஸில் ஆர்வம் குறைந்தவர்கள், பால்பதுமையினர், த்ரீசம், ஃபோர்சம் போன்று 'கிங்க்' (kink) செக்ஸுக்கு வடிகால் தேடுபவர்கள் போன்றோர்தான் பின்பற்றுவார்கள்' என்ற தவறான புரிதல் பெரும்பாலானோரிடம் உண்டு. 'ஆனால் அந்தப் பார்வைகள் தவறு. உண்மையில் நேச்சுரிஸம் என்பது 'செக்ஸ் அல்லாத நிர்வாணம்'. உங்கள் உடலை உள்ளது உள்ளபடியே அதன் நிறை, குறைகளோடு ஏற்றுக்கொள்ள, அதன் மூலம் உங்கள் உடலைக் குறித்து உங்களுக்கு இருக்கும் துயரத்திலிருந்து விடுதலை அளிக்கும் விஷயம்' என்ற உண்மையை உரத்துச் சொல்லும் முயற்சிப்பதுதான் பூஜாவின் பயணம். 

இந்தப் பயணத்தில் அவருக்குத் திருமணமும் நடக்கிறது. குழந்தையும் பிறக்கிறது. வீட்டில் அவரது கணவர் மற்றும் குழந்தைக்கு பூஜா நேச்சுரிஸ்ட் என்பது தெரியும். ஆனால் அவர் தங்களது வீட்டுக்கு வெளியே மற்ற நேச்சுரிஸ்ட்டுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பயணம் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. அதை அவர்களிடமிருந்து ரகசியமாக வைத்திருக்கிறார். இப்படி ஓர் இக்கட்டான சூழலில் நேச்சுரிஸத்தைப் பரப்பும் முயற்சியில் பூஜா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  

சற்றே பிசகியிருந்தாலும் எரோட்டிக்கா (erotica) ஆகவோ அல்லது சரோஜா தேவி புத்தகமாகவோ ஆகியிருக்கும் வாய்ப்பு  இந்தப் புத்தகத்துக்கு உண்டு. ஆனால் கத்தி மீது நடப்பது போல நியூடிஸம் குறித்து பல சந்தேகங்களை விளக்கி இருக்கிறார் பூஜா. இந்தப் புத்தகம் அமேசானில் கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் வாங்கி வாசியுங்கள். முற்றிலும் புதிய வாசிப்பனுபவம் கிடைக்கும். 

ஆடையில்லாமல் அம்மணமாகத் திரியும் குழந்தைகளை 'பப்பி ஷேம்' என்று சொல்லி கிண்டலடிப்பார்கள். ஆனால் இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு நிர்வாணம் என்பது 'பப்பி ஷேம்' விஷயமல்ல என்பது புரியும்!

படம் உதவி: அமேசான் (amazon.in)