Showing posts with label book. Show all posts
Showing posts with label book. Show all posts

Monday, May 18, 2026

பெரிய கனவு காணுங்கள்!

ந.வினோத்குமார்

மும்பை. பார்ஸி குடும்பம். வெறுமனே பி.காம் படிப்பு. சொல்லிக்கொள்ளும்படியாக பெரிய பின்புலமோ பொருளாதார வளமோ இல்லை. 'ஏதாச்சும் புதுசா செய்யணும்...' என்கிற ஆர்வம் மட்டுமே மூலதனம். அதைக் கொண்டு ஒருவன் வணிக உலகில் வெற்றிக்கொடி பறக்கவிடுகிறான். ஒரு கட்டத்தில் வால்ட் டிஸ்னி நிறுவனமே அவனைத் தேடி வருகிறது....

என்ன... இது ஏதோ தமிழ்த் திரைப்படத்தில் வருகிற காட்சி போல இருக்கிறதா..? 'லக்ஷயா' (2004), 'ஸ்வதேஸ்' (2004), 'ரங் தே பஸந்தி' (2006), 'தி நேம்ஸேக்' (2006), 'லைஃப் இன் எ மெட்ரோ' (2007), 'ஜோதா அக்பர்' (2008), 'எ வென்ஸ்டே' (2008), 'தேவ் டி' (2009), 'ஹரிஷ்சந்திரா ஃபேக்டரி' (2009), 'பீப்லி லைவ்' (2010), 'பான் சிங் தோமர்' (2010), 'நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா' (2011), 'வழக்கு எண் 18/9' (2012), 'பர்ஃபி' (2012), 'கை போ சே' (2013), 'சென்னை எக்ஸ்பிரஸ்' (2013), 'சாம் பகதூர்' (2024), 'உள்ளொழுக்கு' (2024)... இந்த வெற்றிப் படங்களின் பின்னணியில் தயாரிப்பாளராகவோ அல்லது இணைத் தயாரிப்பாளராகவோ இருந்து இந்திய சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்ற 'யு டி.வி.' நிறுவனர் ரோன்னி ஸ்க்ரூவாலாவின் தொழில்முனைவுப் பயணம் இன்னும் திரைப்படமாகாமல் இருப்பதுதான் ஆச்சர்யம்!

அந்த ஸ்டார் தொழில்முனைவர், தன் பயணத்தில் கண்ட ஏற்ற இறக்கங்களை 'ட்ரீம் வித் யுவர் ஐஸ் ஓப்பன்' என்ற புத்தகத்தில் அனுபவச்சாறாகப் பிழிந்து கொடுத்திருக்கிறார். வெளிவந்த ஆண்டு 2015. ரூபா பதிப்பகம் வெளியீடு.


எண்பதுகளின் தொடக்கத்தில் ரோன்னி தொடங்கிய முதல் வியாபாரம்... டூத் பிரஷ் தயாரிப்பு!  ஆரம்பித்த சில மாதங்களிலேயே டூத்பிரஷ் விற்பனையில் முன்னணி நிறுவனமாக நிலைபெற்றது,   'லேசர் டூத்பிரஷ்' ! ஆனால் ரோன்னிக்கு அந்தத் தொழிலில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமென்ற ஆவல் இருக்கவில்லை. ஏனென்றால் அவருக்கு வேறொரு தேடல் இருந்தது.

பள்ளி, கல்லூரிக் காலங்களிலேயே தான் குடியிருந்த அடுக்குமாடிக் கட்டடங்களில் நாடகங்கள் நடத்தி, அதன் மூலம் காசு பார்க்கத் தொடங்கியவ‌ர் ரோன்னி. அந்தக் கலை ஆர்வமே அவரை 'கேபிள் டி.வி.' வியாபாரத்துக்கு இழுத்து வந்தது. எண்பதுகளில் அப்போதுதான் தொலைக்காட்சிப் பெட்டிகள் இந்தியாவின் முக்கிய, பெரிய நகரங்களில் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கியிருந்தது. தூர்தர்ஷன் மட்டும்தான் கதி. அந்த நிலையை 'கேபிள் டி.வி.' ஒளிபரப்பு மாற்றியது.  

ரிமோட் கன்ட்ரோலர்கள் இல்லாத காலம் அது. சேனலை மாற்ற வேண்டும் என்றால் எழுந்து சென்றுதான் மாற்ற வேண்டும். அப்போது எவ்வளவு சேனல்கள் இருந்திருக்கும்? ரொம்ப யோசிக்க வேண்டாம். ஜஸ்ட்... இரண்டுதான்! ஒன்று, தூர்தர்ஷன்... இன்னொன்று, 'நெட்வர்க்'. ஆம்... அப்படித்தான் தனது சேனலை அழைத்தார் ரோன்னி. தினசரி மாலை நான்கு மணி நேரம் சில வெளிநாட்டு நிகழ்ச்சிகள், சில இந்திய நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அந்த சேனல் ஒளிபரப்பியது. அந்த கேபிள் நெட்வர்க் வியாபாரம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே 60 சதவீத மும்பை நகரம் அவரது சேனலை பணம் கட்டிப் பார்த்தது.

இன்னும் சில ஆண்டுகள் நீடித்திருந்தால் மொத்த இந்தியாவையும் தனது வணிக வலையில் ரோன்னி வீழ்த்தியிருக்கலாம். ஆனால் அவருக்குள் இருந்த தேடல் அவரை அப்படி யோசிக்க விடவில்லை. அந்த வியாபாரத்தை இன்னொருவருக்குக் கைமாற்றிவிட்டு, வெளிநாட்டு சேனல்களுக்கு ஆவணப்படங்கள், விளம்பரப் படங்கள் எடுத்துக்கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்து வந்தார்.  அப்படிப் பிறந்ததுதான் 'யுனைட்டட் டெலிவிஷன்' சுருக்கமாக 'யு டி.வி.' 

தொண்ணூறுகளின் மத்தியில் இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய எந்தத் தொடரும் 13 வாரத்துக்கு மேல் நீண்டது இல்லை. மிஞ்சிப் போனால் 26 எபிசோட்கள். அப்படியான சூழலில் 'சாந்தி' எனும் நாடகம் மூலம் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு புதுமையை நிகழ்த்தியது யு டி.வி. 1994 ஆம் ஆண்டு முதல் 1998 வரை, வாரம் ஐந்து நாட்கள் என ஆண்டுக்கு 260 எபிசோட்கள் என சீரியல் புரட்சி நடத்தினார் ரோன்னி. அந்த நாடகத்தில் நாயகியாக அறிமுகமானவர்தான் மந்திரா பேடி.

ஏற்கெனவே தன்னிடமிருந்த வெளிநாட்டு ஊடகத் தொடர்புகள் மற்றும் இந்திய ஊடகத் துறையில் தான் நிகழ்த்திய பாய்ச்சல் ஆகியவற்றின் காரணமாக அமெரிக்காவின் 'நியூஸ் கார்ப்' நிறுவனத்தின் ரூபெர்ட் மர்டாக் யு டி.வி. உடன் இணைந்து பணியாற்ற்றினார். தொடர்ந்து தமிழ்நாட்டில் சன் டி.வி., விஜய் மல்லய்யாவின் விஜய் டி.வி. ஆகியவற்றுடன் இணைந்து கலக்கியது யு டி.வி. 

புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் 'ஹங்காமா டி.வி.' மூலம் இந்தியாவிலேயே குழந்தைகளுக்கான முதல் டி.வி. எனும் கொண்டாட்டத்துடன் நிகழ்ச்சிகளைப் படைக்கத் தொடங்கியது ரோன்னி அன்ட் டீம். 'பவர் ரேஞ்சர்ஸ்', 'ஷின் சான்' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு தொலைக்காட்சியிருந்த வீடுகள் பலவற்றில் சுட்டிகள் பலர் ரசிகர்களானார்கள். பின்னாளில் அந்த டி.வி.யில் அமெரிக்க வால்ட் டிஸ்னியின் இந்தியக் கிளை இணைந்ததிலிருந்தே 'ஹங்காமா'வுக்கு இருந்த புகழை அறியலாம்.


அதைத் தொடர்ந்து, 'இந்தப் பொருட்களைக் காட்டினால் மக்கள் வாங்குவார்கள்' என்றுணர்ந்து அவற்றை வாங்குவதற்கு மக்களைத் தூண்டுவதற்காகவே 'டெலிஷாப்பிங் நெட்வர்க்' (டி.எஸ்.என்) எனும் சேனலைத் தொடங்கினார் ரோன்னி. ஜூனூன் தமிழில் வாக்குவம் கிளீனர் முதல் தலைமுடி வளர்ச்சிக்கான மூலிகை எண்ணெய் வகைகள் வரை, அந்த டி.வி.யில் விளம்பரப்படுத்தப்படாத பொருட்களே இல்லை என்று சொல்லலாம். அமேசான் டெலிவரி சேவை எல்லாம் வருவதற்கு முன்பே வீட்டிலிருந்தே நமக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம் என்ற அந்த வியாபார உத்தியைப் பிடித்ததில் இருக்கிறது ரோன்னி ஸ்க்ரூவாலாவின் வெற்றி ரகசியம்.

தொலைக்காட்சியில் சாதித்த பிறகு சினிமாவுக்கு வருவது என்பது இயல்பாக நடப்பதுதான். ரோன்னிக்கும் அப்படித்தான். 1997 ஆம் ஆண்டிலிருந்தே திரைப்படத் தயாரிப்பில் இயங்கி வந்தாலும், 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஆமிர் கான் நடிப்பில் வெளிவந்த 'ரங் தே பஸந்தி' படம்தான் 'யு.டி.வி.'க்கு மிகப் பெரும் வெற்றியைக் கொடுத்தது.  

சீரியல், டெலிஷாப்பிங், குழந்தைகள் சேனல், படத் தயாரிப்பு என வெற்றிகரமாக இயங்கி வந்த 'யு டி.வி.'யை 2012 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி நிறுவனம் முழுமையாக சுவீகரித்துக்கொண்டுவிட்டது.

ஆனால் ரோன்னியின் 'வின்னிங் ஸ்ட்ரீக்' மட்டும் நின்றபாடில்லை. 'யு டி.வி.'க்குப் பிரியா விடை கொடுத்த கையுடன், தன்னுடைய 'ஸ்வதேஸ் அறக்கட்டளை' மூலம் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்களின் முன்னேற்றத்துக்காக நிதி உதவி செய்வது, இணைய வழி உயர்கல்விக்கான 'அப்கிராட்' எனும் நிறுவனத்தைத் தொடங்கியது, கால்பந்தாட்டம், கபடி போன்ற விளையாட்டுகளை ஊக்குவிக்க 'யு ஸ்போர்ட்ஸ்' எனும் விளையாட்டு நிறுவனத்தைக் கட்டமைத்தது, ஓ.டி.டி. தளங்களைக் குறிவைத்து இயங்கும் இயக்குநர்களின் படங்களைத் தயாரிக்க 'ஆர்.எஸ்.வி.பி. மூவிஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியது என அடுத்தடுத்து பல சாதனைகளைச் செய்தபடியே இருக்கிறார் ரோன்னி.

இவ்வளவு வெற்றிகளுக்குப் பின்னுள்ள ரகசியம் என்ன என்று அவரிடம் கேட்டால், இப்படித்தான் சொல்வார்: Just dream your own dream--and when you do it, dream with your eyes open.  

படம் உதவி: amazon.in (புத்தக முகப்பு), Wikimedia Commons (ரோன்னி ஸ்க்ரூவாலா)

Saturday, November 15, 2025

ஆடை துறந்தால் ஆன்ம விடுதலை..!

ந.வினோத்குமார்

தலைப்பைப் படித்தவுடன் ஏதோ ஆன்மிகம் தொடர்பான புத்தகத்தைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். இது 'அவ்வுலகம்' பற்றியது அல்ல. நம் அக உலகம் பற்றியது!

மேலே படிப்பதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி... உங்களில் எத்தனை பேர் நிர்வாணமாக இருந்திருக்கிறீர்கள்..? "இது என்னங்க கேள்வி... பிறக்கும்போதே நாம எல்லோரும் துணி இல்லாமதானே பிறக்குறோம்...". "செக்ஸ் பண்ணும்போது துணி இல்லாமதான இருப்போம்...". "குளிக்கும்போது..."

இப்படி நிறைய பதில்களை நீங்கள் சொல்லக்கூடும். பிறக்கும்போது நாம் நிர்வாணமாக வருகிறோம் என்பது சரிதான். ஆனால் அது நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஒன்று. ஆகவே அதைவிட்டு விடுவோம். அடுத்து, உடலுறவின் போது கூட முழுமையாக ஆடைகளைக் களையாமல் உறவு கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆக அதையும் விட்டுவிடுவோம். அடுத்து, குளிக்கும்போது கூட சிலர் உள்ளாடைகள் அணிந்துதான் குளிக்கிறார்கள். 

எனில், எப்போதுதான் நாம் முழுமையான விழிப்புணர்வுடன் நிர்வாணமாக இருந்திருக்கிறோம்? அல்லது நம்மால் ஏன் அப்படி இருக்க முடியவில்லை? அல்லது நிர்வாணமாக இருப்பது குறித்து எப்போதாவது யோசித்தாவது இருக்கிறோமா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தொடங்கினால் பக்கங்கள் நீளும்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணமும் பார்வையும் புரிதலும் இருக்கும்... எனவே இந்தக் கேள்விகளுக்கான விடையை அவரவர் தங்களுக்குள்ளேயே தேடிப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

சரி... ஏன் நிர்வாணமாக இருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலை அளிப்பதுதான் 'தி கிரேட் இந்தியன் நேச்சுரிஸ்ட்  - எ சீக்ரெட் லைஃப் அன்வீல்ட்' (The Great Indian Naturist - A Secret Life Unveiled) எனும் புத்தகம். 

சொன்னால் நம்பமாட்டீர்கள்... இந்தப் புத்தகத்தை எழுதியது ஒரு பெண். அதுவும் தொன்மையான கலாசாரத்துக்குப் பெயர் பெற்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண். அவர் பெயர் பூஜா கெளடா. அடைப்புக்குறிக்குள் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்ற சொற்களைச் சேர்க்கத் தேவையில்லாத உண்மையான பெயர் தான்!

1980-களில் சென்னையில் பிறந்தவர் இவர். அப்படியென்றால் தற்போது அவருக்கு என்ன வயதிருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். இங்கேயே படித்தவர் என்பதால் அவருக்கு தமிழும் தெரியும். தற்போது பெங்களூரூவில் வசிக்கிறார்.

அங்கே அவருக்கு ஒரு நெருங்கிய தோழி இருந்தார். அந்தத் தோழி அவரது வீட்டில் எப்போதும் நிர்வாணமாகத்தான் இருப்பார். கணவரும் தானும் மட்டுமே அந்த வீட்டில் இருப்பதால் அவருக்கு ஒரு சுதந்திரம் இருந்தது. தவிர, தங்களது வீட்டுக்குள் அவர் நிர்வாணமாக வலம் வர அவரது கணவரும் முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். அப்படி ஒருநாள் அந்தத் தோழி நிர்வாணமாக இருந்தவேளையில், அவரது வீட்டுக்குச் செல்கிறார் பூஜா. அங்கே தனது தோழி நிர்வாணமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பூஜா அவரிடம் 'ஏன் இப்படி இருக்கிறாய்?' என்று கேட்கிறார். அது குறித்த தகவல்களை அந்தத் தோழி சொல்வதைக் கேட்டு பூஜா ஆச்சரியமடைகிறார். பிறகு, மெல்ல மெல்ல தானும் நிர்வாண உலகத்துக்குள் புகுந்து தனக்குக் கிடைத்த விடுதலையை நினைத்து பூஜா ஆனந்தமடைகிறார். தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மற்றவர்களையும் இந்த நிர்வாண உலகத்துக்குள் அழைத்து வருகிறார். அந்தப் பயணம் எப்படி நிகழ்ந்தது என்பதைச் சொல்லும் அனுபவம்தான் இந்தப் புத்தகம்!

மேற்கத்திய நாடுகளில் அவ்வப்போது திடீர் திடீர் என ஏதேனும் புதிய கலாசார மாற்றங்கள் நிகழும். ஜாஸ், ராக் அண்ட் ரோல், மினி ஸ்கர்ட், டிஸ்கோ, ஹிப்பி, ஆர்கானிக், மினிமலிசம் என கடந்த ஒரு நூற்றாண்டில் இசை, பொழுதுபோக்கு, வாழ்க்கை முறை எனப் பல தளங்களில் இந்த கலாசார மாற்றங்கள் நிகழும். எங்கோ ஒரு நாட்டில் பிறக்கும் இந்த மாற்றங்கள், மெல்ல மெல்ல உலகம் முழுக்கப் பரவும். பொதுமக்களிடம் அந்த மாற்றங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அந்தப் புதிய கலாசாரங்கள் நிலைக்கும் அல்லது வந்த வேகத்தில் மறையும். 

அப்படி ஒரு கலாசாரச் சிந்தனையாக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியில் உதித்ததுதான் 'நேச்சுரலிஸம்' (Naturism) அல்லது 'நியூடிஸம்' (Nudism). அதாவது ஆடைகளற்று பிறந்த மேனியாக சுதந்திரமாக இருப்பது. வீட்டில் மட்டுமல்ல... பொது இடத்திலும்! இதுகுறித்து வாசிக்கவும் விவாதிக்கவும் நிறைய விஷயங்கள் உண்டு. எனினும் மேம்போக்காக இணையத்தில் மேய்ந்தால், ஜெர்மனியில் 'சன் பாத்திங்க்' (சூரிய ஒளிக் குளியல்) மூலம் உடலுக்கு ஏற்படும் நன்மைகளுக்காக என்று தொடங்கி, பிரான்சில் ஆடையில்லாமல் சுதந்திரமாகத் திரிய ரிசார்ட் ஆரம்பிப்பது (உலகிலேயே முதல்) என்று பரவி, பிறகு சில நாடுகளில் 'நிர்வாணிகள் சங்கம்' தொடங்கி என இன்று 'பாடி ஷேமிங்குக்கு (body shaming) எதிராக' என்று வந்து நிற்கிறது. இந்த கலாசார மாற்றம் ஏதோ தனி மனிதர்களிடம் மட்டும்தான் தென்படுகிறது என்று நினைக்க வேண்டாம். பல நாடுகளில் குடும்பம் குடும்பமாக இந்த வாழ்க்கை முறையை தழுவியிருக்கிறார்கள். 

இந்த வாழ்க்கை முறைக்கு இந்தியாவிலும் வரவேற்பு இருப்பதால், தற்போது இங்கும் நேச்சுரிஸம் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள் சிலர். என்ன... அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்காங்கே தனித்தனியாக இருக்கிறார்கள்... ஒரு வீட்டில் கணவரோ அல்லது மனைவியோ நேச்சுரிஸம் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்... வீட்டுக்குள்ளேயும் கூட யாரும் இல்லாத போது மட்டும் நேச்சுரிஸம் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள்... இவர்களில் பலர் 'நாம் நிர்வாணமாக இருக்க ஆசைப்படுவது மனநோயோ' என்று அஞ்சுபவர்களாக இருக்கிறார்கள்... அவர்களை எல்லாம் ஒன்றிணைக்கும் முயற்சியில் இந்த 'நிர்வாண ராணி' ஈடுபட்டிருக்கிறார். 

'இதெல்லாம் செக்ஸில் ஆர்வம் குறைந்தவர்கள், பால்பதுமையினர், த்ரீசம், ஃபோர்சம் போன்று 'கிங்க்' (kink) செக்ஸுக்கு வடிகால் தேடுபவர்கள் போன்றோர்தான் பின்பற்றுவார்கள்' என்ற தவறான புரிதல் பெரும்பாலானோரிடம் உண்டு. 'ஆனால் அந்தப் பார்வைகள் தவறு. உண்மையில் நேச்சுரிஸம் என்பது 'செக்ஸ் அல்லாத நிர்வாணம்'. உங்கள் உடலை உள்ளது உள்ளபடியே அதன் நிறை, குறைகளோடு ஏற்றுக்கொள்ள, அதன் மூலம் உங்கள் உடலைக் குறித்து உங்களுக்கு இருக்கும் துயரத்திலிருந்து விடுதலை அளிக்கும் விஷயம்' என்ற உண்மையை உரத்துச் சொல்லும் முயற்சிப்பதுதான் பூஜாவின் பயணம். 

இந்தப் பயணத்தில் அவருக்குத் திருமணமும் நடக்கிறது. குழந்தையும் பிறக்கிறது. வீட்டில் அவரது கணவர் மற்றும் குழந்தைக்கு பூஜா நேச்சுரிஸ்ட் என்பது தெரியும். ஆனால் அவர் தங்களது வீட்டுக்கு வெளியே மற்ற நேச்சுரிஸ்ட்டுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பயணம் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. அதை அவர்களிடமிருந்து ரகசியமாக வைத்திருக்கிறார். இப்படி ஓர் இக்கட்டான சூழலில் நேச்சுரிஸத்தைப் பரப்பும் முயற்சியில் பூஜா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  

சற்றே பிசகியிருந்தாலும் எரோட்டிக்கா (erotica) ஆகவோ அல்லது சரோஜா தேவி புத்தகமாகவோ ஆகியிருக்கும் வாய்ப்பு  இந்தப் புத்தகத்துக்கு உண்டு. ஆனால் கத்தி மீது நடப்பது போல நியூடிஸம் குறித்து பல சந்தேகங்களை விளக்கி இருக்கிறார் பூஜா. இந்தப் புத்தகம் அமேசானில் கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் வாங்கி வாசியுங்கள். முற்றிலும் புதிய வாசிப்பனுபவம் கிடைக்கும். 

ஆடையில்லாமல் அம்மணமாகத் திரியும் குழந்தைகளை 'பப்பி ஷேம்' என்று சொல்லி கிண்டலடிப்பார்கள். ஆனால் இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு நிர்வாணம் என்பது 'பப்பி ஷேம்' விஷயமல்ல என்பது புரியும்!

படம் உதவி: அமேசான் (amazon.in)