ந.வினோத் குமார்
2015-ம் ஆண்டு, செப்டம்பர் 2-ம் தேதி.
சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த
தருணம். அங்கிருந்து
பலர், அகதிகளாகப்
பல்வேறு நாடுகளுக்குப்
பயணித்தனர். அப்படிப் பயணப்பட்டவர்களில்
சிலர், ஐரோப்பிய
நாடுகளில் அரவணைப்பைத்
தேடிச் சென்றனர்.
அந்தப் பயணத்தில்,
பெரும்பாலான மக்கள் மத்திய தரைக்கடலில், ரப்பர்
படகுகளில், எந்தப் பாதுகாப்புக் கவசங்களும் இல்லாமல்
சென்று, புயலடித்தபோது
கவிழ்ந்த படகிலிருந்து
விழுந்து, நீரில்
மூழ்கி இறந்தனர்.
அப்படி இறந்தவர்கள்
சிலரின் சடலங்கள்
துருக்கியின் கரையை அடைந்தன. அந்தச் சடலங்களில்
ஒன்று ‘ஆலன்
குர்தி’ எனும்
பெயரைத் தாங்கி
இருந்தது.
சிறுகதை
அஞ்சலி
மெத்தையில், குப்புறக் கவிழ்ந்து ஆழ்ந்து உறங்குவது
போல, மூன்று
வயது ஆலன்
குர்தியின் உடல் கரையில் கிடந்தது. பத்திரமாய்க்
கரையில் சேர்த்துவிட்ட
திருப்தியில் அலைகள் அவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
அடுத்த நாள்
பத்திரிகைகளில் வெளியான அவனின் படத்தைக் கண்டு,
பலர் கண்ணீர்
சிந்தினர். கடலில் நிராதரவாக விடப்பட்ட குர்தி,
இன்றைய அகதிகள்
சந்திக்கும் இன்னல்களுக்குச் சாட்சியாக வரலாற்றில் நின்றுவிட்டான்!
அவன் மறைந்து,
இந்த நாளுடன், மூன்று ஆண்டுகள் ஆகின்றன.
எனினும், அகதிகளின்
நிலையில் எந்தப்
பெரிய மாற்றமும்
வந்துவிடவில்லை. இந்நிலையில், ஆலன் குர்தியை மீண்டும்
நினைவுகொள்வதன் மூலம், அகதிகளின் நிலையை உலகுக்கு
எடுத்துச் செல்ல
முடியுமென்று நம்பியிருக்கிறார், காலித் ஹுசைனி. அவர்
ஒரு மருத்துவர். ‘தி கைட் ரன்னர்’
எனும் அற்புதமான
நாவலை நாவலாசிரியர்.
அதற்கு அவர்
தேர்ந்தெடுத்த வழி, சிறுகதை. ஆலன் குர்தியின்
நினைவாக, அவர்
‘ஸீ பிரேயர்’
எனும் சிறுகதையை
எழுதினார். கதையின் ஒவ்வொரு வரியும் கவித்துவச் சோகத்துடன் நம்மை எதிர்கொள்கின்றன.
சிரியாவிலிருந்து
ஐரோப்பாவுக்கு அகதியாகச் செல்ல, கப்பலுக்காகக் காத்திருக்கும்
பொழுதில், சிரியாவிலிருந்து
தப்பித்த தந்தை,
தன் மடியில்
படுத்திருக்கும் மகனுக்குச் சொல்வதுபோன்ற, கடித வடிவத்தில்
அந்தக் கதையை
எழுதியிருந்தார். இது ஒரு வகையில், தனிமையில்
பேசி நடிக்கும்
‘மோனோலாக்’ வகைமையைச் சேர்ந்த ஒரு படைப்பு.
அந்தச் சிறுகதை தற்போது புத்தகமாகியிருக்கிறது.
டான் வில்லியம்ஸின் அற்புதமான நீர் வண்ண
ஓவியங்களுடன் ப்ளூம்ஸ்பரி பதிப்பக வெளியீடாகச் சமீபத்தில் வெளியாகியுள்ளது இந்தப்
புத்தகம். விற்பனையாகும் ஒவ்வொரு புத்தகத்திலிருந்து கிடைக்கக்கூடிய வருவாயில்,
ஒரு பவுண்டை (இந்திய மதிப்பில் சுமார் 92 ரூபாய்) அகதிகளின் மேம்பாட்டுக்காகப்
பணியாற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்துக்கு வழங்கப்பட உள்ளதாகப்
புத்தகத்தின் பின் அட்டையில் கூறப்பட்டுள்ளது.
விலையுயர்ந்த
பொக்கிஷம்
இந்தக் கதையை,
சுமார் 7 நிமிடங்கள்
ஓடக்கூடிய மெய்நிகர்
படமாக உருவாக்கி
அதை 2017-ல்
யூடியூப்பில் தவழ விட்டிருந்தார் ஹுசைனி.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ணத்
தூதராகவும் இருக்கும் அவர் எழுதிய ‘ஸீ
பிரேயர்’ கதையின்
இறுதி வரிகள்
இப்படியிருக்கின்றன:
“இந்த இரவில்
நான் நினைத்துப்
பார்ப்பதெல்லாம், கடலின் ஆழத்தையும், பரப்பளவையும், அலட்சியத்தையும்தான்.
இதனிடமிருந்து உன்னைக் காப்பதற்குத் திராணியற்றவனாக இருக்கிறேன்.
என்னால் செய்யக்
கூடியதெல்லாம் பிரார்த்திப்பது மட்டும்தான்.
கரை தென்படுவதற்கு
முன், இந்த
நீரில் நாம்
மூழ்கிவிடாமல் இருக்க, கடவுள் இந்தக் கப்பலைச்
செலுத்துவாராக.
ஏனென்றால், நீ விலையுயர்ந்த பொக்கிஷம், மர்வான்.
காணக் கிடைக்காத
மிக விலையுயர்ந்த
பொக்கிஷம். அது இந்தக் கடலுக்குத் தெரியும்.
என் பிரார்த்தனை
இந்தக் கடலுக்குத்
தெரியும்”.
நன்றி (ஆலன் குர்தி படம்): aljazeera.com