Monday, July 17, 2017

ஊழலை ஒழிக்க முடியுமா?

ந.வினோத் குமார்

இந்தியாவுக்கும் ஊழலுக்கும் கிழக்கிந்திய கம்பெனி இங்கு கால்பதிக்கத் தொடங்கியதிலிருந்தே உறவு இருக்கிறது. உயர் பதவிகளில் இருப்பவர்களிடையே மட்டுமல்ல. சாமானியர்களின் அன்றாட பேச்சு வழக்கு, கிசுகிசு, வாழ்க்கை முறை ஆகியவற்றில்கூட ஊழல் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதைத்தான் குன்னார் மிர்தால் எனும் ஸ்வீடன் நாட்டுப் பொருளாதார அறிஞர், ‘ஃபோக்லோர் ஆஃப் கரப்ஷன்’ என்றார்.

வரலாற்றாசிரியர் ஏ.கே.ராமானுஜன் தன்னுடைய ‘முந்நூறு ராமாயனங்கள்’ எனும் கட்டுரையின் இறுதியில் இப்படிச் சொல்லியிருப்பார்: “இந்தியாவில் எவர் ஒருவரும், ‘இப்போதுதான் ராமாயனத்தை முதன்முதலாகக் கேட்கிறேன்’ என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், இது காலம் காலமாக இருந்து வருகிறது”. இது ஊழலுக்கும் பொருந்தும். ‘இப்போதான்யா இப்படி ஒரு ஊழலைக் கேள்விப்படுறேன்’ என்று எந்த இந்தியரும் சொல்ல முடியாது. காரணம், பிறப்பு முதல் இறப்பு வரை இந்தியர் ஒருவர், பல்வேறு தளங்களில் ஊழலைப் பற்றி கேட்டு, பேசி, படித்து, சந்தித்து வருகிறார்.

 
இந்நிலையில், ‘ஊழலை ஒழிக்க முடியாதா?’ என்று உங்களுக்குள் கேள்வி எழுந்தால் என்ன செய்வீர்? ‘தி இந்து’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் எழுதிய ‘ஒய் ஸ்கேம்ஸ் ஆர் ஹியர் டு ஸ்டே’ எனும் புத்தகத்தைப் படியுங்கள். ‘இந்தியாவில் நிகழும் அரசியல் ஊழலைப் புரிந்துகொள்ளுதல்’ எனும் உபதலைப்புடன் வந்திருக்கும் இந்தப் புத்தகத்தை ‘ஆலெஃப்’ பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அரசியல் ஊழல்

ஊழலின் வகைகள், ஊழலின் வரலாறு, அதை வரையறுக்கும் முறை, இந்தியாவில் அதைப் பற்றிய புரிதல், தமிழகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஊழலுக்குப் பின்னுள்ள அறிவியல் என்று பரந்த தளங்களில் பேசும் இந்தப் புத்தகம் ‘அரசியல் ஊழல்’ என்பதை மையமாக வைத்துச் சுழல்கிறது.

எது அரசியல் ஊழல்? தன்னுடைய சுயலாபத்துக்காகவோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களின் நலனுக்காகவோ, தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி காரியங்களைச் சாதித்துக் கொள்வது. இருக்கும் ஊழல்களிலேயே இதுதான் மிகவும் ஆபத்தான ஊழல். காரணம், இதில் பகடையாடப்படுவது நாட்டு மக்களும் அவர்களின் நலனும் அல்லவா!

போஃபர்ஸ் ஊழல்தான் இந்தியாவில் நடந்த முதல் பெரிய ஊழல். அதைத் தொடர்ந்து சிமெண்ட் ஊழல், தீவன ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், வியாபம் ஊழல் எனப் பல ஊழல்களை இந்த தேசம் சந்தித்திருக்கிறது. சரி, அந்த ஊழல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று பார்த்தால்… உதட்டைப் பிதுக்குவதைத் தவிர வேறெதுவும் பதிலில்லை.

இந்தப் புத்தகத்தில், போஃபர்ஸ் ஊழலை ‘தி இந்து’ எப்படி வெளிக்கொணர்ந்தது, அப்போது அது சந்தித்த சவால்கள் என்ன, அந்த ‘ரிப்போர்டேஜ்’களினால் இந்திய பத்திரிகைத் துறையில் விளைந்த மாற்றங்கள் என்ன, அந்த ஊழல் மீது நீதித்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர்.

  
போஃபர்ஸ் ஊழலின் போது ‘தி இந்து’ தவிர, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘இந்தியா டுடே’ ஆகியவற்றின் பங்களிப்புகள் குறித்தும் தொட்டுச் செல்லும் அவர், ‘வியாபம்’ ஊழல் இவ்வளவு காலம் வெளிவராமல் இருந்ததற்கு இந்தி மொழி பத்திரிகைகளும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

முதலாளித்துவத்தின் அங்கம்

ஊழலைப் பற்றிய புரிந்துகொள்ளல் இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதைக் குறித்து விவரிக்கும்போது, ‘ஊழல் என்பது முதலாளித்துவத்தின் அங்கம்’ என்பதாகவே மார்க்சிஸம் கருதி வந்திருப்பதாக ராம் கூறுகிறார்.

அதனால்தான் என்னவோ, ஊழலின் வகைகள் குறித்துப் பேசும்போது, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ‘ஃப்ராடு’ தனங்களையும் ஊழலாகக் கருதுகிறார் அவர். அதற்கு உதாரணமாகப் பல ஆய்வுகளைக் காட்டுகிறார். அதில் சுவாரஸ்யமான ஒரு ஆய்வு 2017-ம் ஆண்டு எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்துக்காக இப்சாஸ் எம்.ஓ.ஆர்.ஐ. எனும் நிறுவனம் மேற்கொண்டது. அதில் தங்களுடைய கரியரையும் ஊதியத்தையும் உயர்த்திக் கொள்வதற்காக சுமார் 41 சதவீத இந்திய ஊழியர்கள், எந்த விதமான அதர்மமான வழிகளையும் பின்பற்றத் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்ததாம். அந்த ‘அதர்மமான வழிகளில்’ உயரதிகாரிகளுக்கு ‘சோப்பு’ போடுவதும் அடங்குமா என்பது தெரியவில்லை!

‘லைசன்ஸ் ராஜ்’ இருந்த காரணத்தினால்தான் இந்திய அரசியல் பொருளாதாரப் பரப்பில் ஊழல் என்பதே தோன்றியது என்று சொன்னவர்கள், எல்லாவற்றையும் தாராளமயமாக்கினால் ஊழல் ஒழிந்துவிடும் என்றும் சொன்னார்கள். ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகும் ஊழல் தொடர்வதை என்னவென்று சொல்ல?

சாராயச் சாப்பாடு

இப்படியான ஊழல் தமிழகத்தில் எப்படி தலைவிரித்தாடுகிறது என்பதைச் சில வரலாற்றுத் தகவல்களுடன் நிரூபிக்கிறார் ராம். 1967-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வரும் வரை தமிழகம் ஊழலில்லாமல் ஓரளவு சுத்தமாகவே இருந்தது. அண்ணாவின் இரண்டு வருட ஆட்சியிலும் அந்தச் சுத்தம் தொடரவே செய்தது. ஆனால் 1972-ம் ஆண்டு தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து வந்த பிறகு, தமிழகத்தில் மு.கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் எவ்வாறெல்லாம் ஊழல் நடந்திருக்கிறது என்பது தெரிய வந்தது. 

  
அதற்குப் பிறகு முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர்., ஓரளவு சுத்தமான ஆட்சியை வழங்கவே செய்தார். ஆனால் அவரின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் (ஜூன் 1980 – டிசம்பர் 1984) இனி வரும் எல்லாக் காலத்துக்கும் தமிழகம் சந்திக்கவிருக்கிற அவமானத்துக்கு ‘டாஸ்மாக்’ மூலமாக அடிக்கல் நாட்டினார் எம்.ஜி.ஆர். டாஸ்மாக் தொடங்கப்பட்ட 1983-ம் ஆண்டு மே 23-ம் தேதி, ‘தமிழ்நாட்டில் அறிவியல்பூர்வமான அரசியல் ஊழல் தோன்றிய நாள்’ என்று குறிப்பிடுகிறார் ராம்.

டாஸ்மாக்கில் வந்த வருமானத்தை வைத்துத்தான் 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., தொடங்கிய மதிய உணவுத் திட்டம் தொடரப்பட்டதாகக் கருதப்படுகிறது. அந்த நிலை இன்றும் தொடர்கிறதா? அப்படியெனில், நம் குழந்தைகள் சாப்பிடுவது சாராயத்தில் வந்த சம்பாத்தியத்தில்தானா?

இதையெல்லாம் படித்து உங்கள் மனம் குமுறுகிறதா? ஊழலை ஒழிக்க என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறதா? அதற்கு நூலாசிரியர் தரும் தீர்வு, ‘இந்திய அரசியல் பொருளாதாரத்தில் ஆழமான மாற்றங்கள் உருவாக வேண்டும்!’ என்பதே!

படங்கள் உதவி:  (இந்தியா டுடே அட்டைப் படம் - dailyo.in, என்.ராம் படம் - thehindu.com)

Saturday, July 1, 2017

உங்கள் டாக்டர் நல்லவரா?

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 26 நவம்பர், 2016

கொஞ்சம் எதார்த்தம் பேசுவோம். மருத்துவமனையின் படிகளை மிதிக்கும்போது நம்மில் எத்தனை பேர், அனிச்சையாக நம் சட்டைப் பையைத் தடவிப் பார்ப்போம்; உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். நம்மில் எத்தனை பேர் இன்னொரு மருத்துவரிடம் ‘செகண்ட் ஒபீனியன்’ கேட்க வேண்டும் என்ற அவசியத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்? மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகள் வாங்கிப் பயன்படுத்துவது தவறு என்பது தெரிந்தும் நம்மில் பலர் மருந்துகளை வாங்குகிறோம்தானே?

இதற்கெல்லாம் காரணம், நமது மருத்துவர்கள் மீது நமக்கு நம்பிக்கையில்லாமல் போனதுதான்! ‘ஏன் அந்த நம்பிக்கை இல்லாமல் போனது?’ என்ற கேள்விக்கான பதிலைத் தேடுகிறது கமல் குமார் மஹாவர் எனும் மருத்துவர் எழுதிய ‘தி எதிகல் டாக்டர்’ எனும் புத்தகம். ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் இந்தப் புத்தகத்தைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, மருத்துவம் படித்து, இங்குள்ள அரசுக் கட்டுப்பாடுகள், தலையிடல்கள், ஊழல்கள் போன்றவை ஏற்படுத்திய இடர்பாடுகளால், பல வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்துக்குச் சென்றவர்தான் இந்தக் கமல்குமார். தற்போது அங்குள்ள ‘தேசியச் சுகாதாரச் சேவை’ அறக்கட்டளை மருத்துவமனையில் எடைக் குறைப்பு அறுவைசிகிச்சை நிபுணராகப் பணியாற்றிவருகிறார். இந்திய மருத்துவத் துறையில் உள்ள குறைகளை விமர்சனப் பார்வையுடன் அணுகி வரும் இவர், அது தொடர்பான தன்னுடைய கருத்துகளை இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார். 

 
தடம் மாறும் மருத்துவம்

இந்திய மருத்துவர்கள், ‘மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா’ வகுத்துள்ள விதிமுறைகளின் கீழ்தான் நிர்வகிக்கப்படுகிறார்கள். பிரச்சினை என்னவென்றால், அதிலேயே பல குறைகள் இருப்பதுதான். முதலில் அவற்றைச் சீர் செய்ய வேண்டும் என்கிறார் கமல்குமார். அதற்கு அவர் சொல்லும் முக்கியக் காரணம்… போலி மருத்துவர்கள்!

மேற்கண்ட விதிமுறையின்படி, இந்தியப் பாரம்பரிய மருத்துவமுறைகளான ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி மக்களுக்குச் சிகிச்சையளிப்பவர்கள், மருத்துவர்களாகவே கருதப்படுவதில்லை. ஆனால் காலம் காலமாக இந்த மருத்துவ முறைகள் நம் நாட்டில் நடைமுறையில் இருந்துவருகின்றன.

அலோபதி, பாரம்பரிய மருத்துவ முறைகள் எதையும் முறைப்படி கற்றுக்கொள்ளாமல், மக்களுக்குத் தவறான சிகிச்சையளித்து, கொள்ளையடிக்கிற போலி மருத்துவர்கள் கூட்டம், உண்மையான மருத்துவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய நியாயமான வருமான வாய்ப்பைத் தடுக்கிறது. இதன் காரணமாக, உண்மையான மருத்துவர்கள் பலர், நோயாளிகளைப் பிடிக்க ஏஜெண்ட் வைப்பது, தேவையில்லாத மருந்துகளை எழுதித் தருவது, தேவையில்லாத பரிசோதனைகளைச் செய்யச் சொல்லி ஒரு குறிப்பிட்ட ‘லேப்’புக்கு மட்டும் அனுப்புவது, பிறகு அந்த ‘லேப்’பிலிருந்து குறிப்பிட்ட சதவீதத்துக்குக் கமிஷன் வாங்கிக் கொள்வது போன்ற குறுக்கு வழிகளில் வருமானத்தை ஈட்ட முயற்சிக்கிறார்கள். 
 
அடிப்படையே தவறு

இந்த நிலைமை ஏன் வந்தது என்ற கேள்விக்கு ‘அடிப்படையே தவறு’ என்கிறார் நூலாசிரியர். மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எல்லோருமே தேவையான தகுதிகளோடு வெளியே வருகிறார்களா என்றால் இல்லை. எம்.பி.பி.எஸ்., மட்டும் படித்தால் போதாது. உயர்கல்வி கற்க வேண்டும். அதற்குக் கடின உழைப்பையும் கூடுதலான நேரத்தையும் செலவழிக்க வேண்டும். ஆனால், இளநிலை மட்டுமே படித்த ஒரு பயிற்சி மருத்துவர், சுமார் 16 முதல் 18 மணி நேரம்வரை அரசு மருத்துவமனைகளில் செலவிடுகிறார்.

அவருக்கு, அவருடைய பேராசிரியர்களிடமிருந்து சரியான வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. ஏனென்றால், அவருக்கு அரசு மருத்துவமனையில் போதிய வருமானம் கிடைக்காது. அதனால் தன்னுடைய அலுவலக நேரத்துக்குப் பிறகு தனியே ‘பிராக்டிஸ்’ செய்து லாபம் ஈட்டும் முனைப்பில் அவர் இருப்பார். அதனால், தனக்குக் கீழே பயிற்சி பெறும் மாணவருக்குப் போதுமான நேரத்தை அவர் செலவழிப்பதில்லை.

இது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம், மருத்துவம் படித்து வெளியே வரும் பெரும்பாலான மாணவர்கள் மிகக் குறைந்த காலத்தில் உடனடி லாபத்தை ஈட்ட நினைக்கிறார்கள். காரணம், அவர்கள் தங்கள் படிப்புக்கு லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பார்கள். எல்லாருக்குமே அரசுக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்காது, இல்லையா? அதனால் பலர் தனியார்க் கல்லூரிகளில் படிப்பார்கள். அங்குத் தாங்கள் செலவழித்த காசை எல்லாம், இந்தச் சமூகத்திலிருந்து எடுக்க நினைப்பார்கள். எனவே, பலர் நகரங்களை நோக்கிச் செல்கிறார்கள். இதனால் கிராமப்புறங்களில் தேவையான அளவு மருத்துவர்கள் இல்லை.

அப்படியே இருந்தாலும், அங்கும் அவர்களுக்குத் தேவையான அளவு வருமானம் கிடைப்பதில்லை. எனவே, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவர்களும் நகரத்தை நோக்கி நகர்கிறார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக நகரங்களில் ஏற்கெனவே அவர்களுக்கு நிறையப் போட்டியாளர்கள் இருப்பார்கள். எனவே, தான் ஒரு சிறந்த மருத்துவர் என்பதை நிரூபிக்க அதிகமாகப் போராட வேண்டியிருக்கிறது. இதன் காரணமாகக் குறுக்கு வழிகள் ஈர்த்து விடுகின்றன.
 
பெரும் மாயை

பொதுவாக நம் ஊரில், குறைந்த கட்டணம் வாங்கும் ஒரு மருத்துவரை ‘இவரு அவ்ளோ நல்லா பார்க்க மாட்டாருப்பா’ எனும் விமர்சனத்துக்கு ஆளாக்கும் மனப்பான்மை நம்மில் பலருக்கும் உண்டு. கல்வித் துறையைப் போலவே பெரிய மருத்துவமனை, நிறைய பணம் வாங்கும் மருத்துவர்தான் சிறந்த மருத்துவர் என்றொரு மாயை இங்கு உண்டு. இது எப்படி ஏற்பட்டது? அதற்குக் காரணம், மருந்து நிறுவனங்களும் மருத்துவ ஆய்விதழ்களும் என்கிறார் ஆசிரியர். எப்படி?

உலகளவில் பிரபலமான நான்கைந்து மருத்துவ ஆய்விதழ்களில் மருத்துவர் ஒருவர் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டால், அவர் சிறந்த மருத்துவர் என்று கொண்டாடப்படும் மனநிலை பலருக்கும் உள்ளது. கூர்ந்து கவனித்தால், அவர் மேற்கொண்ட ஆய்வு குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தின் மருந்து நல்லது என்பதை நிரூபிக்கும் விதமாக இருக்கும்.

அவ்வளவு ஏன், அந்த ஆய்வே அந்த மருந்து நிறுவனத்தின் நிதியுதவியுடன் மேற்கொண்டதாகக்கூட இருக்கலாம். அதேபோலத் தனது ஆய்வு முடிவுகளைச் சக மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்ள, அந்த மருந்து நிறுவனங்களே வெளிநாடுகளில் ஏற்பாடு செய்யும் கருத்தரங்குகளில் கலந்துகொள்வார்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நோயாளிகள் சொல்வதைப் பல மருத்துவர்கள் காது கொடுத்துக் கேட்காததும், காது கொடுத்துக் கேட்கும் மருத்துவர்கள் மீது நோயாளிகளுக்கு நம்பிக்கையற்றுப் போனதுமே. அடுத்த முறை உங்களுக்கு நம்பகமான மருத்துவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், நீங்கள் அவரை முழுமையாக நம்புங்கள். அதற்கு மருத்துவர்களும் மக்களை நோக்கி நெருங்கி வர வேண்டிய அவசியம் இருக்கிறது.
 
மருத்துவத் துறை: சுடும் நிஜங்கள்

  • நாட்டில் எத்தனை போலி மருத்துவர்கள் உள்ளனர் என்பதை அறிவதற்கான வழி இன்றைக்கு இல்லை. சரி, பதிவு பெற்ற உண்மையான மருத்துவர்கள் எத்தனை பேர், அவர்களில் எத்தனை பேர் எந்தெந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர், அவர்களில் எத்தனை பேர் கடந்த காலத்தில் ஒழுங்கீன நடவடிக்கைகளுக்கு உள்ளானவர்கள் என்பது பற்றியெல்லாம் தகவலறிய முறையான வலைத்தளம்கூடக் கிடையாது!  
  • மருத்துவர்கள் தாங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளின் வேதியியல் பெயர்களை (ஜெனரிக்) எழுத வேண்டுமா? அல்லது பிராண்ட் பெயர் எழுத வேண்டுமா? ஜெனரிக் மருந்துகளை எழுதிக் கொடுத்தால், அதிலேயே பல பிராண்ட்கள் இருக்கும். அதில் எதை மருந்துக் கடைக்காரர் தேர்வு செய்து கொடுப்பார்? அது மட்டுமல்லாமல் பிராண்டுக்குப் பிராண்ட் விலை அதிகரிக்கும், குறையும். இந்தக் கேள்விகளுக்கு இன்று பதிலில்லை. 
  • ‘நான் ஒரு நோயாளியை உயர்சிகிச்சைக்காக உன்னிடம் அனுப்புகிறேன். அதற்கான தொகையை எனக்குத் தந்துவிடு. அல்லது உன்னிடம் சாதாரண நோய்களுக்குச் சிகிச்சை பெற வருபவர்களை எனக்கு அனுப்பு’ எனும் ‘கட் பிராக்டீஸ்’ எனப்படும் மருத்துவர்களுக்கு இடையேயான பரஸ்பரத் தரகு முறையை ஒழிக்க, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 
  • மருத்துவர்களுக்குப் பயிற்சி வழங்க, நேரலை அறுவைசிகிச்சை மாநாடு (லைவ் ஆபரேட்டிங் கான்ஃபரன்ஸ்) போன்ற விஷயங்களில் மருத்துவமனைகள் ஈடுபடுவது சரிதானா? பதில் இல்லை! 
  • மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக்கடைகளில் மருந்து வாங்கும் நடைமுறைக்கு எதிராக இதுவரை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இல்லை!
  • வெளிநாடுகளிலிருந்து மருந்துகள், மருத்துவக் கருவிகள் போன்றவற்றை இறக்குமதி செய்தால் அவற்றின் மீது விதிக்கப்படும் வரிகளில் மருத்துவமனைகளுக்கு நிறைய சலுகைகள் தரப்படுவது உண்டு. அப்படிப் பல சலுகைகளைப் பெறும் மருத்துவமனைகள் ஏழைகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது இலவசப் படுக்கைகளை வழங்கியாக வேண்டும். ஆனால், எத்தனை மருத்துவமனைகள் அப்படிச் செய்கின்றன? பதில் இல்லை.
  • மருத்துவமனைகளை நெறிப்படுத்த மருத்துவ நிறுவனங்கள் (பதிவு மற்றும் விதிமுறைகள்) சட்டம் 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தை இதுவரை 10 மாநிலங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் இந்தச் சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை!  
 நன்றி: தி இந்து (நலம் வாழ)

Saturday, June 17, 2017

கல்லறைத் தோட்டத்தின் சந்தோஷக் கணங்கள்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 11 ஜூன் 2017

முதல் நாவலை எழுதி முடித்துவிட்டு, அடுத்த நாவலைக் கொண்டு வருவதற்கு, ஒரு நாவலாசிரியருக்கு இருபது ஆண்டுகள் தேவைப்படுகின்றன என்பது வாசகருக்கு வேண்டுமானால் மலைப்பாக இருக்கலாம். நாவலாசிரியருக்கோ, ‘உள்ளுக்குள் ஒரு படைப்பு உருவாகிக்கொண்டிருக்கும் காலம்’ அது!

 தான் எழுதிய முதல் நாவலுக்கே புக்கர் பரிசு கிடைக்கப் பெற்றவர் அருந்ததி ராய். அப்போது அவர் எழுத்தாளராக மட்டுமே இருந்தார். 1997-ம் ஆண்டு ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ எனும் அவரின் முதல் நாவல் வெளியானது. சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தி மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்’ எனும் நாவல் பெங்குவின் பதிப்பக வெளியீடாக இந்த மாதம் 6-ம் தேதி உலகெங்கும் வெளியானது.

இந்த 20 ஆண்டுகளில் அருந்ததி ராய் என்பவர் எழுத்தாளராக மட்டுமே இல்லாமல், குறிப்பாக, புனைவு எழுத்தாளராக மட்டுமே தன்னைக் கருதிக்கொள்ளாமல், நாட்டில் அவ்வப்போது நிகழும் அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையில், அபுனைவு எழுத்துகள் மூலமும் தன் கருத்துகளைப் பிரதிபலித்துவந்திருக்கிறார். நர்மதா அணை உள்ளிட்ட மக்களுக்கு எதிரான வளர்ச்சித் திட்டங்களை விமர்சித்தல், தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தல், மாவோயிஸ்ட்டுகளுடன் தண்டகாரண்யம் காட்டுக்குள் பயணம் செய்தல் எனப் பல்வேறு விதங்களில் தன்னை ஒரு செயற்பாட்டாளராகவும் முன்னிறுத்திக்கொண்டிருக்கிறார்.

எழுத்தாளர் என்ற நிலையிலிருந்து செயற்பாட்டாளர் என்ற நிலைக்கு அவர் வர நேர்ந்திருக்கும் இருபது ஆண்டு அனுபவங்களின் அடிப்படையில் அவர் எழுதியிருக்கிற படைப்பாகத் தான் நாம் அவரின் இரண்டாவது நாவலை அணுக வேண்டும். இந்த நாவலின் கதை, இந்தியாவின் கடந்த இருபது ஆண்டு கால வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் அரசியல் நிகழ்வுகளின் திரட்சியாக அமைந்திருக்கிறது. அஞ்சும் என்ற திருநங்கை, காஷ்மீர் பிரிவினைவாதியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட திலோத்தமா, காவல்துறையின் வன்புணர்வால் பிறந்த தன் மகளை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விட்டுச்செல்லும் ரேவதி எனும் மாவோயிஸ்ட் போராளி ஆகிய மூன்று பெண்களின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. 


அஞ்சும் தனது வாழ்க்கையை நேர்க்கோட்டில் சொல்லிச் செல்ல, திலோத்தமாவின் வாழ்க்கையோ முன்னும் பின்னுமாகச் சொல்லப்படுகிறது. ரேவதியின் வாழ்க்கையோ கடித முறையில் சொல்லப்படுகிறது. இப்படி அந்தப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும் முறையில் வித்தியாசம் காட்டியதோடு, அவர்கள் நடமாடிய இடங்களான முறையே டெல்லி, காஷ்மீர், தெலங்கானா ஆகியவற்றின் நிலப்பரப்பையும் அந்தந்தக் காலச் சூழலில் நிலவிய அரசியல் பின்னணியோடு கதையை நெய்திருப்பதில் தேர்ந்த எழுத்தாளராக வெற்றி பெற்றிருக்கிறார் ராய். நாவலாசிரியராக வெற்றி பெற்றிருக்கிறாரா என்பது, இந்த நாவல் பரவலான வாசகப் பரப்பில் என்ன மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தப்போகிறது என்பதைப் பொறுத்து அமையும்!

இறந்தவர்களைப் புதைக்கும் கல்லறைத் தோட்டம்தான் நாவலில் முக்கியமான சம்பவங்கள் நடைபெறும் இடம். அதுதான் பல்வேறு அரசியல் சூழல்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒன்றுகூடும் இடமாகவும், எங்கோ தொலைத்த தங்களின் சந்தோஷக் கணங்களைத் தேடிக் கண்டடைகிற இடமாகவும் இருக்கிறது. ‘மனிதர்கள் தங்களின் உண்மையான மகிழ்ச்சியை இறந்த பிறகுதான் கண்டடைகிறார்கள்’ எனும் சிந்தனையின் குறியீடா கவும் கல்லறைத் தோட்டத்தை நாம் அணுகலாம்.

அவுரங்கசீப் காலத்தில் கடவுள் இல்லை என்று சொன்ன ஹஸ்ரத் ஷர்மத் ஷாஹீத்தின் வரலாற்றைச் சொல்வதில் தொடங்கி, இந்தியப் பிரிவினை, நெருக்கடிநிலைக் காலம், இந்திரா காந்தி கொலை, சீக்கியர் மீதான தாக்குதல், போபால் விஷ வாயுத் தாக்குதல், காஷ்மீர் தீவிரவாதம், பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், இரட்டைக் கோபுரத் தாக்குதல், இராக்கில் அமெரிக்கா நடத்திய போர், ஆப்பரேஷன் ‘க்ரீன் ஹன்ட்’, மாட்டு அரசியல், அண்ணா ஹசாரே போராட்டம், உனா எழுச்சி உள்ளிட்ட இந்திய, உலக அரசியல் நிகழ்வுகளை எல்லாம் நாவலின் ஆங்காங்கே வரும் ஓரிரு கதாபாத்திரங்களின் மூலம் தொட்டுச் செல்கிறார் ராய். இந்தியாவின் கடந்த இருபது ஆண்டுகால வரலாற்றை இந்த நாவலின் மூலம் ஒரு கழுகுப் பார்வை பார்த்துவிட முடியும் என்பது இந்நாவலின் சிறப்பம்சம். தமிழகத்தில் சாதியம் எப்படி வேரூன்றியிருக்கிறது என்பதற்கு முருகேசன் எனும் ராணுவ வீரர் கதாபாத்திரம் மூலமாக அருந்ததி ராய் சொல்லும் செய்தி, மிகவும் அழுத்தமான ஒன்று!

‘சில்லுசில்லாக உடைந்திருக்கிற ஒரு கதையை எப்படி மொத்தமாகச் சித்தரிப்பது? எல்லாருமாக மாறுவதன் மூலம். இல்லை. எல்லாமுமாக மாறுவதன் மூலம்!’ என்று நாவலின் பின்னட்டையில் குறிப்பிடுகிறார் அருந்ததி ராய். நாமும் அப்படி நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமாக மாறும்போது, ஒவ்வொரு அரசியல் சம்பவத்திலும் தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளும்போது, இந்த நாவலின் முழுமையை நம்மால் உணர முடியும். 

நன்றி: தி இந்து (கலை இலக்கியம்)

Monday, June 5, 2017

இயற்கையாக வாழ முடியாதா என்ன?

ந.வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 1 ஏப்ரல், 2017

‘பூமியின் மீது மெள்ள நட!' மிகவும் மென்மையாக இருக்கிறதல்லவா இந்த வரி? ஆனால், அது ஒரு வாழ்க்கை முறை என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். நம் வாழ்க்கை முறை அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார் விக்ரம் சோனி.

 ‘நேச்சுரலி' எனும் புத்தக அட்டையில் இடம்பெற்றிருக்கும் இந்த வரி, புத்தகம் சொல்ல வரும் விஷயத்துக்கு மேலும் அழகூட்டுகிறது. இந்தப் பூமியில், இயற்கையைத் தொந்தரவு செய்யாமல் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைச் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் சாராம்சம்.
 
காடு காத்தவர்

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் விக்ரம் சோனி. அங்கிருந்து ஓய்வுபெற்ற பிறகும் இயற்பியல், இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான களங்களில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். அவர் எழுதி, ‘ஹார்பர் காலின்ஸ்' பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புத்தகம்தான் ‘நேச்சுரலி'. பேராசிரியர், எழுத்தாளர் என்பதைத் தாண்டி, விக்ரம் சோனிக்கு இன்னொரு பெருமையும் உண்டு. டெல்லியில் உள்ள காடுகளைப் பாதுகாப்பதற்காக இவரும் இவரது நண்பர்களும் இணைந்து தொடுத்த பொதுநல வழக்குதான், சுற்றுச்சூழல் தொடர்பாக நாட்டில் தொடரப்பட்ட முதல் பொதுநல வழக்கு.

இந்தப் புத்தகத்தின் அறிமுக நிகழ்வுக்காகச் சமீபத்தில் சென்னையில் உள்ள ‘எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை'க்கு வந்திருந்த அவரிடம் பேசியதிலிருந்து...
 
சித்தாந்தத்தில் அடங்காத இயற்கை

“இமயமலையில் உள்ள குமாவுன் பகுதியில், காடுகளும் மலைகளும் அடர்ந்த நைனிடால் எனும் ஊரில் நான் பிறந்தேன். எனது தந்தை வன அலுவலர். அவருடன் காடுகளில் பல கல் தொலைவுக்கு அலைந்திருக்கிறேன். அப்போது நான் பெற்ற அனுபவங்கள், வாழ்நாள் முழுவதும் என்னை இயற்கை மீதான பிடிப்புடன் இருக்கப் பணித்தன.

இயற்கையின் இயங்கியல் முற்றிலும் வேறானது. அதில் எல்லா உயிர்களுக்கும் பங்குண்டு. ஆனால் மனிதனோ, தான் மட்டுமே உயர்ந்தவன், தனக்கு மட்டுமே பூமி சொந்தம் என்பதுபோல அகங்காரமாக நடந்துகொள்கிறான். அதனால் இயற்கையின் இயங்கியலின் சமநிலை சீர்குலைந்தது. அதனால் நாம் நிறைய பேரழிவுகளைக் கடந்து வந்திருக்கிறோம். மீண்டும் அந்தச் சமநிலையைச் சாத்தியப்படுத்துவதற்கு ஒரு புதிய வாழ்வியல் முறையை நாம் கைக்கொள்ள வேண்டி யிருக்கிறது. அதை எப்படிச் செய்வது என்று யோசித்த கணத்தில்தான் இந்தப் புத்தகம் உருப்பெற்றது.

கார்ல் மார்க்ஸ் சொன்ன இயங்கியல் பொருள்முதல்வாதமோ அல்லது ஜான் மேனார்டு கீன்ஸ், ஜான் ஸ்டூவர்ட் மில் ஆகியோர் சொன்ன ‘தாராளச் சந்தை' சிந்தனையோ... இப்படி எந்தச் சித்தாந்தச் சிமிழுக்குள்ளும் நமது பூமி அடங்கிவிடவில்லை.
 
வெள்ள வடிகால்களின் தேவை

“ஒரு சின்னப் பரிசோதனையை நீங்களே செய்து பாருங்கள். இரண்டு கண்ணாடிக் குடுவைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒன்றில் நீரையும் இன்னொன்றில் மணலையும் நிரப்புங்கள். இப்போது, குடுவையில் உள்ள நீரை, மணல் உள்ள குடுவையில் ஊற்றுங்கள். என்ன தெரிகிறது? நீர்க் குடுவையிலிருந்த பெருமளவு நீரை, மணல் உறிஞ்சியிருக்கும். ஆம், மணல் நீரைச் சேமித்து வைக்கும் தன்மை கொண்டது.

ஆற்றங்கரையோரம் பாருங்கள். அதன் இரண்டு புறங்களிலும் மணல் இருக்கும். அவைதான் வெள்ள வடிகால்கள். இந்த மணலுக்கு அடியில் குறைந்தபட்சம் 40 அடி ஆழம்வரை நீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆற்றின் நீளம், வெள்ள வடிகால்களின் அகலம் ஆகியவற்றின் அடிப்படையில், மணலுக்குள் சேமிக்கப்படும் நீரின் அளவும் மாறுபடும்.

வருடத்திற்குச் சுமார் 1,300 மில்லிமீட்டர் மழையைப் பெறும் தமிழகம் போன்ற மாநிலங்களில் இப்படியான வெள்ள வடிகால்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை முறையாகப் பாதுகாத்தால் ஒவ்வொரு தமிழரும் இயற்கை ‘மினரல் வாட்டர்' அருந்த முடியும். ஆனால், துரதிருஷ்டவசமாக, மணல் கொள்ளையால் அப்படியான வெள்ள வடிகால்களைத் தமிழகம் இழந்துவருகிறது. 


கழிவு பூமிக்குக் கேடு

1920-களில் தாமஸ் மிட்ஜ்லி எனும் வேதியியலாளர் முக்கியமான இரண்டு கண்டுபிடிப்புகளைச் செய்தார். ஒன்று, வாகனங்களின் இன்ஜினில் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்கப் பெட்ரோலுடன் ஈயத்தைச் சேர்த்தது. இன்னொன்று, குளிர்சாதனப் பெட்டிகளில் குளோரோ ஃபுளூரோ கார்பன் எனும் வாயுவைச் சேர்த்தது. இந்த இரண்டு கண்டுபிடிப்புகள் தந்த கழிவுகள்தான் ஓசோனில் துளை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களாகக் கருதப்படுகின்றன.

இப்படியான கண்டு பிடிப்புகளை மனிதர்களுக்கு அறிமுகப்படுத்தும்போது, ‘இது பூமியின் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பதா?' எனும் கேள்வியை நாம் எப்போதாவது கேட்டிருக்கிறோமா?

தொழில்நுட்ப வளர்ச்சி கொண்டுவந்து கொட்டும் இந்தக் கழிவுகள் காற்றை, மண்ணை, நீரை, திறந்தவெளியை, காடுகளை, கடலை, உயிர்களை எப்படியெல்லாம் சிதைக்கின்றன? மனிதனின் உருவாக்கங்கள் எல்லாம் கழிவுகளையே தருகின்றன. ஆனால் இயற்கையைப் பாருங்கள். அது உருவாக்கும் எதுவொன்றும் கழிவு இல்லை. முக்கியமாக, நச்சுக் கழிவுகள் இல்லை. அப்படியே கழிவுகள் ஏற்பட்டாலும், அவற்றை உணவாக்கிக் கொள்ள இன்னொரு உயிரினத்தை, உணவுச் சங்கிலியில் இணைத்துவிடுகிறது இயற்கை. காலம்காலமாக உயிரினச் சுழற்சிச் சக்கரம் இப்படித்தான் சுழன்றுவருகிறது. ஆனால் மனிதன் உருவாக்கிய கழிவுகளால், எத்தனையோ உயிரினங்களை நாம் இழந்திருக்கிறோம்; இழந்து வருகிறோம். லண்டனில் உள்ள உயிரியல் சங்கம், ‘2006-ம் ஆண்டில் 29 சதவீத உயிரினங்களை இழந்தோம். 2015-ல் அந்த எண்ணிக்கை 52 சதவீதமாக உயர்ந்திருக்கிறது' என்று எச்சரிக்கிறது. என்ன செய்யப் போகிறோம் நாம்?
 
புத்தரைப் பின்பற்றுவோம்

“இதுவரையில் இந்தப் பூமியில் தோன்றிய மிகச் சிறந்த சூழலியலாளர், விஞ்ஞானி யார் என்று என்னைக் கேட்டால், நான் கௌதமப் புத்தரைத்தான் சொல்வேன். சுயம், சமூகம், பிரபஞ்சம் எனும் மூன்று நிலைகளில் இயற்கையோடு இணைந்து வாழப் புத்தர் நமக்கான வழியைக் காட்டுகிறார்.

சுயம் என்ற நிலையில், நமக்கு எது அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறதோ அதை மட்டும் நாம் வைத்துக்கொள்வது, சமூகம் என்ற நிலையில் ஏற்றத்தாழ்வுகள் கடந்து அனைவரையும் சமமாக நடத்துவது, பிரபஞ்சம் எனும் நிலையில் அனைத்து உயிர்களிலும் தன்னைக் காண்பது ஆகிய வழிகளைப் பின்பற்றினால் இந்தப் பூமி இன்னும் பல காலம் தழைத்திருக்கும். சுருக்கமாக ‘பூமியின் மீது மெள்ள மெள்ள நடை பயில்வோம்!'’ 

நன்றி: தி இந்து (உயிர் மூச்சு)

Thursday, April 13, 2017

மன்னிப்பு கேட்குமா பிரிட்டன்?

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 13 ஏப்ரல், 2017

இந்தியாவில், சுதந்திரப் போராட்டத்தின்போது நடைபெற்ற ஒவ்வொரு சம்பவமும் வரலாறு. அவற்றில், ரத்தமும் கண்ணீரும் கலந்து இன்னமும் ஈரம் காயாமல் இருக்கும் ஒரு சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலை. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நூற்றாண்டை எட்டவிருக்கும் அந்தச் சம்பவம், கடந்த சில மாதங்களாகத் தனக்கான நியாயத்தைப் பெறுவதற்கு, குரலை எழுப்பிவருகிறது. 

1919-ல் இயற்றப்பட்ட ரெளலட் சட்டம், அன்றைய வைஸ்ராய் ஆட்சிக்கு, அளவு கடந்த அதிகாரங்களை அளித்தது. போராட்டக்காரர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியவும், பத்திரிகைகளை மெளனமாக்கவும், பிடி ஆணை எதுவும் இல்லாமல், சந்தேகிக்கப்படும் தனிநபர்களைக் கைது செய்யவும் விசாரணை ஏதுமின்றிச் சிறையில் அடைக்கவும் இந்தச் சட்டம் வழிவகை செய்தது. இவ்வாறு கைதுசெய்யப்படுபவர்களுக்கு, சட்ட உதவி பெறுவதற்கான உரிமையைக்கூட இந்தச் சட்டம் தரவில்லை.

பஞ்சாபில் இச்சட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த சைபுதீன் கிச்சுலு, சத்யபால் ஆகிய தலைவர்கள் ஏப்ரல் 9-ல் முன்னறிவிப்பு இல்லாமல் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து, வன்முறை வெடித்தது. அமிர்தசரஸ் மக்கள் காவல் நிலையத் தலைமையகம் நோக்கிச் சென்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத காவலர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 11-ல், ப்ரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் தலைமையில் சுமார் 600 ராணுவ வீரர்கள் அந்நகரத்துக்கு அனுப்பப்பட்டனர். முறையான அனுமதியின்றிப் போராட்டம் நடத்தக் கூடாது என்ற உத்தரவை ஏப்ரல் 13-ல் ஜெனரல் டயர் பிறப்பித்தார்.

இந்த உத்தரவைப் பற்றித் தெரியாத, சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பேர், ‘பைசாகி’ திருவிழாவைக் கொண்டாட அமிர்தசரஸ் நகரத்துக்கு வந்தனர். அங்கு, பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் எனும் இடத்தில் அவர்கள் திரண்டனர். அது என்ன நிகழ்ச்சி என்பதைக்கூடத் தெரிந்துகொள்ள விரும்பாத டயர், அந்த மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்காமல், துப்பாக்கிச் சூடு நடத்த ஆணையிட்டார். சுற்றிலும் சுவர்கள் கொண்ட அந்த இடத்திலிருந்து மக்களால் தப்பிக்க முடியவில்லை. அந்த இடத்தின் குறுகிய வாயிலும் காவலர்களால் அடைக்கப்பட்டுவிட்டது. சுமார் 1,650 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 379 பேர் இறந்தனர். 1,137 பேர் காயமடைந்தனர். இது அரசின் கணக்கு. இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். இந்தப் படுகொலையை எதிர்த்துப் பல்வேறு கண்டனங்கள், போராட்டங்கள் ஒரு பக்கம் நடக்க, ஜெனரல் டயருக்கோ விருதுகள் வழங்கி அழகு பார்த்தது வெள்ளையர் ஆட்சி.
 
மீண்டெழுந்த வரலாறு

ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம் கடந்த சில மாதங்களாகப் பொதுவெளியில் மீண்டும் பேசப்பட்டுவருகிறது. அதற்குக் காரணம், 2015 மே மாதம் ‘ஆக்ஸ்போர்டு யூனிய’னில் நடந்த விவாதத்தில் சசி தரூர் நிகழ்த்திய உரை. இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு செய்த கொடுமைகளைப் பட்டியலிட்ட அவர், ‘இந்தக் கொடுமைகளுக்காக பிரிட்டிஷ் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்தியாவை அது 200 ஆண்டுகள் ஆட்சிசெய்தது. எனில், ஆண்டுக்கு ஒரு பவுண்ட் வீதம் சுமார் 200 பவுண்டுகள் தர வேண்டும்’ என்றார். 

 
தொடர்ந்து, சசி தரூர், தன் உரையை விவரித்து எழுத, அது கடந்த ஆண்டு ‘என் எரா ஆஃப் டார்க்னெஸ்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. அதில், ஹிட்லர் காலத்தில் நடைபெற்ற நாஜி கொடுமைகளுக்காக 1970-ல், ஜெர்மனியின் அதிபராக இருந்த வில்லி ப்ராண்ட், வார்சா கெட்டோ எனுமிடத்தில் போலந்து யூத மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதையும், 2016-ல் கோமகாட்டா மாரு சம்பவத்துக்காக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் த்ரூதோ, கனடா வாழ் சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்டதையும் குறிப்பிட்டு, ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்துக்காக பிரிட்டனும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.

கோமகாட்டா மாருவின் கண்ணீர்

கோமகாட்டா மாரு சம்பவத்தைப் பற்றி, இந்தியர்கள் பலருக்கும் தெரியாது. 1914 மே 23-ல் பாபா குர்தித் சிங் எனும் வணிகரின் தலைமையில், 376 இந்தியர்களுடன் ‘கோமகாட்டா மாரு’ எனும் கப்பல் கனடாவின் வான்கூவரை வந்தடைந்தது. ஆனால், அந்தக் கப்பலில் இருந்த பயணிகளைக் கரையில் கால் வைக்க வெள்ளையர் அரசு, அனுமதிக்கவில்லை. கனடாவில் ஏற்கெனவே இருந்த வெள்ளையர்கள் இந்தியர்களின் இந்தக் குடியேற்றத்தை எதிர்த்தார்கள். கப்பலில் உணவுப் பொருட்கள் தீர்ந்துபோக, பயணிகள் பசியால் வாடினர். 376 பேரில், 20 பேர் மட்டும் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதுவும், அவர்களின் முன்னோர் அந்த நாட்டில் இருந்ததால்தான், அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. கரை இறங்குவதற்கான எல்லா முயற்சிகளும் தோற்றுவிட, அந்த வருடம் ஜூலை மாதம் 23-ல், அந்தக் கப்பல் வந்தவழியே திரும்பியது.



கோமகாட்ட மாரு செப்டம்பர் 29-ல், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ‘பட்ஜ்-பட்ஜ்’ எனும் இடத்தை வந்தடைந்தது. கொல்கத்தாவை அடைய கொஞ்சம் தொலைவே இருந்த சமயத்தில், பயணிகளைக் கீழிறக்கி, ரயில் மூலமாக அவர்களைப் பஞ்சாபுக்கு அனுப்பத் திட்டமிட்டது அரசு. அவர்களைக் கொல்கத்தாவில் இறங்க அனுமதித்தால், அவர்களின் கஷ்டத்தை அறிந்த மக்கள், கலவரத்தில் ஈடுபடுவார்களோ என்று அஞ்சியது வெள்ளையர் அரசு. பயணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கப்பலிலிருந்து இறங்கி கல்கத்தாவுக்குள் பேரணியாகச் செல்ல முயன்றனர். இதையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிடப்பட்டது. அதில் 19 பேர் இறந்தனர். 21 பயணிகள் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் மிக முக்கியப் பங்காற்றியவரின் பெயரும் டயர் என்பது வரலாற்றின் புதிர்களில் ஒன்று. சர் மைக்கேல் பிரான்ஸிஸ் ஓ’டயர் என்பவர் அப்போது பஞ்சாபின் கவர்னராக இருந்தார். ஜெனரல் டயரின் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நியாயப்படுத்தியவரும் இவரே.
 
கனடா வழிகாட்டுகிறது

கோமகாட்டா மாரு சம்பவம், கனடா வாழ் இந்தியர்களின் மனதில் இருக்கும் ஆழமான காயம். 1989-ல் இந்தச் சம்பவத்தின் 75-ம் ஆண்டு விழா அனுசரிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்தச் சம்பவத்துக்காக கனடா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. 1997-ல் இதற்கான கோரிக்கையை, கனடா நாடாளுமன்றத்தில் முதன்முறையாக குர்மந்த் சிங் க்ரெவால் எழுப்பினார். தொடர்ந்து 2008 ஆகஸ்ட் 3-ல் ‘கத்ரி தியாகிகள்’ எனும் சீக்கியர் விழாவில் அன்றைய கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்பதாகக் கூறினார்.

ஆனால் இந்தியர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த மன்னிப்பு, நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கருதினர். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்ட கனடா, இந்தியாவிடமும் தனது நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கருதியதில் நியாயம் இருந்தது.

கடைசியில், 2016 மே 18-ல் கனடா நாடாளுமன்றத்தில், பிரதமர் ஜஸ்டின் த்ரூதோ, கோமகாட்டா மாரு சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டார். அதுபோல, இன்னும் இரண்டு ஆண்டுகளில் நூற்றாண்டு காணவிருக்கும் ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்துக்கு, பிரிட்டன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. ‘பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவர், ஜாலியன் வாலாபாக்குக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்கிறார் சசி தரூர். அல்லது, குறைந்தபட்சம், அந்தச் சம்பவத்தை பிரிட்டனின் பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்கிறார் அவர்.

இந்த இரண்டில் எது நடக்குமென்று தெரியவில்லை. ஆனால், பிரிட்டன் மன்னிப்பு கேட்டாலும் கேட்காவிட்டாலும், பிறரை மன்னிக்கும் குணம் நம்மிடம் எப்போதும் உண்டு. ஏனென்றால், நாம் இந்தியர்கள்! 

நன்றி: தி இந்து

Thursday, March 23, 2017

‘டெரர்' பகத்..?

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 23 செப்டம்பர், 2016

‘மேனுஃபேக்சரிங் கன்சென்ட்' எனும் நோம் சாம்ஸ்கியின் சொற்றொடர் மிகவும் பிரபலமானது. அதாவது, பொதுப்புத்தியில் பல ஊடகங்கள் ஒன்றுசேர்ந்து உண்மைக்கு மாறான ஒரு கருத்தை உருவாக்குவது என்பது இதன் பொருள். 

கிட்டத்தட்ட அதே சொற்றொடருக்குச் சமமான ஆனால் முற்றிலும் எதிரான ஒரு சொற்றொடர் உண்டு. அது 'மேனுஃபேக்சரிங் ஆங்கர்'. அதாவது, குறிப்பிட்ட குழுக்கள் ஒன்றுசேர்ந்து, ஏற்கெனவே பல காலம் வழக்கில் உள்ள ஒரு கருத்துக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்வது.

அப்படி ஒரு விஷயம், விஷமம் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடந்தது. அது பகத் சிங்கை முன்வைத்து!
 
அதிகாரப்பூர்வ ஆவணம்

பகத் சிங் பிறந்த 110-வது ஆண்டு இது. பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட 85-வது ஆண்டும் இது. அவர்கள் உருவாக்கிய ‘இந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி'க்கு இந்த செப்டம்பர் 9-ம் தேதி, 88 வயது.

இப்படி ஒரு முக்கியமான காலகட்டத்தில்தான் ‘பகத் சிங் தீவிரவாதியா?' என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர் புரட்சியாளரா அல்லது தீவிரவாதியா அல்லது புரட்சித் தீவிரவாதியா என்று பார்ப்பதற்கு முன்னால், இது குறித்த அடிப்படையான சில உண்மைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்திய விடுதலைப் போராட்டம் தொடர்பாக இன்று வரையிலும் எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இன்றளவும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியாளர்கள், வரலாற்றாசிரியர்கள், சமூகவியலாளர்கள் எனப் பலதரப்பட்ட துறைசார் நிபுணர்கள் மத்தியில் ஒரே ஒரு புத்தகம்தான் ‘இந்திய விடுதலைப் போராட்டம் பற்றிய அதிகாரபூர்வமான ஆவணம்' என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. அந்தப் புத்தகம் ‘இண்டியாஸ் ஸ்ட்ரகிள் ஃபார் இண்டிபெண்டன்ஸ்'.

மார்க்கிய அறிஞரும் பேராசிரியருமான‌ பிபன் சந்திராதான் இந்தப் புத்தகத்தின் முதன்மை ஆசிரியர். அவருடன் சேர்ந்து மிருதுளா முகர்ஜி, ஆதித்ய முகர்ஜி, சுசேதா மகாஜன் மற்றும் கே.என்.பணிக்கர் ஆகியோர் இணையாசிரியர்களாக இருந்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளனர். மொத்தம் 39 அத்தியாயங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் பிபன் சந்திரா மட்டுமே 22 அத்தியாயங்களை எழுதியுள்ளார். 




அதில் பகத் சிங் தொடர்பான அத்தியாயம்தான் இப்போதைய சர்ச்சைக்குக் காரணம். அந்த அத்தியாயம் இந்தப் புத்தகத்தில் 20-வது அத்தியாயமாக இடம்பெற்றுள்ளது. அதன் தலைப்பு ஆங்கிலத்தில் ‘பகத் சிங், சூரிய சென் அண்ட் தி ரெவல்யூஷனரி டெரரிஸ்ட்' (பகத் சிங், சூரிய சென் மற்றும் புரட்சிகரத் தீவிரவாதிகள்) என உள்ளது.

‘அதெப்படி, பகத் சிங்கை ‘தீவிரவாதி' என்று பிபன் சந்திரா அடையாளப்படுத்தலாம்?' என்று நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 27-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தக்கூர் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து இந்துத்துவக் குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கின. முன்னாள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஒரு படி மேலே போய் இதனை ‘அகாடமிக் மர்டர்' என்று கூச்சலிட்டார்.
 
பகத் சிங் தீவிரவாதியா?

'உண்மையில் பகத் சிங் தீவிரவாதியா?' என்று கேட்டால், 'ஆம்' என்று தைரியமாகச் சொல்லலாம். ஏன்?

அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவர் செய்த தீவிரவாதச் செயலை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பில் சில மாற்றங்களைச் செய்வதற்காக சைமன் கமிஷன் எனும் குழு ஒன்று ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டது. அதில் இந்தியர் ஒருவர்கூட இடம்பெறவில்லை. இதனை எதிர்த்து லாலா லஜபதி ராய் போராட்டம் நடத்த, அதில் அவர் ஆங்கிலேயர்களால் தாக்கப்பட்டு மரணமடைகிறார்.

இதனால் கோபமடைந்த பகத் சிங் உள்ளிட்ட‌ இந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி உறுப்பினர்கள் ஆங்கிலேயே காவல் துறை அதிகாரி சாண்டர்ஸ் என்பவரைக் கொல்கிறார்கள். அதனைத் தொடர்ந்து, லாகூர் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசி கைதாகிறார்கள். இந்தக் குற்றங்களுக்காக பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.

அகிம்சை வழியில் நம்பிக்கை இழந்ததால் பகத் சிங் உள்ளிட்டோர் இத்தகைய தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ‘கேட்கும் திறனிருந்தும் செவிடாக இருப்பவர்களைக் கேட்கச் செய்யவே' இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர்கள் அறிவித்தனர். 

இந்தக் காரணங்களுக்காக ஆங்கிலேயே அரசு அவர்களை ‘தீவிரவாதி' என்று முத்திரை குத்தியது. ‘புரட்சி என்பது மக்களுக்காக மக்களால் முயன்றால் மட்டுமே தோன்ற முடியும்' என்று நம்பிக்கை கொண்டிருந்ததால் பகத் சிங் உள்ளிட்டோர் இத்தகைய தனிப்பட்ட சாகஸ நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தான் சிறையில் இருக்கும்போது பகத் சிங்கேகூட ‘புரட்சி மனநிலை மக்களைச் சென்றடையவில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமே தீவிரவாதம். ஆகவே, அது எங்களின் தோல்வியின் வாக்குமூலமும் ஆகும்' என்று எழுதினார்.

ஆக, இதிலிருந்து நமக்குத் தெரிய வருவது பிபன் சந்திராவுக்கு முன்பே பகத் சிங்கே தனது செயல்களை ‘தீவிரவாதச் செயல்கள்' என்று ஒப்புக்கொண்டார் என்பதுதான்.
 
காவிமயமாகும் வார்த்தைகள்

இந்த வரலாற்றை பிபன் சந்திரா எழுதும்போது, வெறும் ‘தீவிரவாதி' என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தாமல், ‘புரட்சிகரத் தீவிரவாதி' என்றே குறிப்பிடுகிறார். இப்போதைய சர்ச்சைக்கு மேற்கண்ட இரண்டு வார்த்தைகளில், ‘தீவிரவாதி' என்ற சொல் மட்டுமே காரணமாகியிருக்கிறது. இந்துத்துவ குழுக்கள் அந்தச் சொல்லுக்கு முன்புள்ள ‘புரட்சிகர' என்ற சொல்லுடன் தீவிரவாதி என்ற சொல்லை இணைத்துப் பார்க்காமல் போனது துர்பாக்கியம்.

ஆங்கிலத்தில் ‘பெஜொரேட்டிவ்' என்ற ஒரு சொல் உண்டு. தமிழில் அதற்கு ‘அவமதிப்பு' என்று பொருள்கொள்ளலாம். நல்ல பொருளில் வழங்கப்படும் சில சொற்கள் காலப்போக்கில் அவமதிப்பான சொல்லாக, ஆபாசமான சொல்லாக மாறிவிடும் போக்கு எல்லா மொழியிலும் உண்டு. உதாரணத்துக்கு ‘லவ்' என்ற சொல்லுக்கு ‘அன்பு' என்ற அர்த்தமும் உண்டு. ஆனால் அது ‘காதல்' என்பதாக மட்டுமே பெரும்பாலானோர் இன்றைய தினத்தில் பொருள் கொள்கின்றனர். அதேபோலத் பட்டா இல்லாத நிலத்தை ‘புறம்போக்கு' நிலம் என்று சொல்வதுண்டு. ஆனால் அது இன்று பெரும்பாலும் ஒருவரைத் திட்டுவதற்கான சொல்லாகப் பொருள் கொள்ளப்படுகிறது. இதெல்லாமே இன்று ‘பெஜொரேட்டிவ்' சொற்கள்தான். 

இந்த நிலைதான் ‘தீவிரவாதி' என்ற சொல்லுக்கும் ஏற்பட்டுவிட்டது. ‘சிப்பாய்க் கலகம்' என்பதை இன்று எப்படி ‘சிப்பாய்ப் புரட்சி' என்று எழுதுகிறோமோ, அதுபோல எதிர்காலத் தலைமுறையினர் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்ற காரணத்துக்காகவே பிபன் சந்திரா ‘தீவிரவாதி' என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தாமல் ‘புரட்சிகரத் தீவிரவாதி' என்றே பயன்படுத்துகிறார்.

இவர் எழுதிய அந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1987-ம் ஆண்டு வெளிவந்தது. வெளிவந்த அந்த வருடமே அனைத்துப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்தது. அதனால் 1988 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் பதிப்புகள் வெளிவந்தன. கடைசியாக 1989-ம் ஆண்டு வெளிவந்த பதிப்புதான், இந்த ஆண்டு மத்தி வரை விற்பனைக்கு இருந்துள்ளது. 1987-ம் ஆண்டு முதல் இப்போது வரை இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது.

பின்னாளில், பிபன் சந்திராவே ‘புரட்சிகர தீவிரவாதி' என்ற சொற்களில், ‘தீவிரவாதி' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது, அது திருத்தப்பட வேண்டும் என்று கூறிவந்தார். ஆனால் துரதிர்ஷ்டம், 1989-ம் ஆண்டுக்குப் பிறகு நான்காம் பதிப்பு வெளிவரவில்லை. 2014-ம் ஆண்டில் அவர் காலமாகிவிடுகிறார். அதனால் அந்தத் திருத்தத்தை அவரால் செய்ய முடியாமல் போனது.

இந்த வாய்ப்பை இந்துத்துவக் குழுக்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. ‘மேரே ரங் தே பசந்தி சோலா' (என் உடைகளைக் காவி நிறம் கொண்டு பூசு) என்ற பாடலை பகத் சிங்கும் அவரது தோழர்களும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வரும்போது பாடுவார்களாம். இங்கே ‘காவி நிறம்' என்பது துணிச்சல் மற்றும் தியாகத்துக்கான நிறம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

இதனால் எங்கே தங்களையும் ‘தீவிரவாதி' என்று அழைத்துவிடுவார்களோ என்ற பயத்தினால்கூட‌ ‘புரட்சிகரத் தீவிரவாதி' என்ற சொற்களில் இருக்கும் ‘தீவிரவாதி' எனும் சொல்லை நீக்க வேண்டும் என்று இந்துத்துவக் குழுக்கள் அழுத்தம் தந்திருக்கலாம்.

அந்த அழுத்தத்தின் காரணமாக, இப்போது கடைகளில் இந்தப் புத்தகத்தின் நான்காம் பதிப்பு கிடைக்கிறது. அதில் குறிப்பிட்ட இந்த அத்தியாயத்தில் எங்கெல்லாம் ‘தீவிரவாதி' என்ற சொல் உண்டோ அங்கெல்லாம் ‘தேசியவாதி' என்ற சொல் இடம்பெற்றுள்ளது. ‘புரட்சிகரத் தீவிரவாதி' ‘புரட்சிகர தேசியவாதி' ஆனது இப்படித்தான்! 


சில இந்துத்துவக் குழுக்களின் மிரட்டுலுக்குப் பதிப்பகங்கள் எப்படிப் பணிந்துபோகின்றன என்பதற்கான ஒரு சான்று இது. ஆனால் வேடிக்கை, அத்தியாயத்தின் தலைப்பை ‘பகத் சிங், சூரிய சென் மற்றும் புரட்சிகரத் தேசியவாதிகள்' என்று மாற்றியவர்கள், ‘குறிப்புகள்' எனும் பின்னிணைப்பில் பழைய தலைப்பையே வைத்துவிட்டார்கள் (பார்க்கப் படம்). 

யார் தீவிரவாதி?

சிறையில் இருந்த பகத் சிங் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு இப்படி எழுதினார்: "நான் தீவிரவாதியைப் போலச் செயல்பட்டிருக்கிறேன். ஆனால் நான் தீவிரவாதி அல்ல. என்னிடம் உள்ள அத்தனை சக்திகளையும் ஒன்றுதிரட்டிச் சொல்கிறேன், நான் ஒருபோதும் தீவிரவாதி அல்ல. அப்படியான செயல்கள் மூலம் நாம் சாதித்துவிடப் போவதும் ஒன்றுமில்லை".

இன்று மக்களின் நலனுக்காகப் போராடுபவர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் போட்டு, தீவிரவாதி என்று அடையாளம் காட்டப்படும் வேளையில், கால் நூற்றாண்டுகூட வாழாமல் தன் இன்னுயிரை இந்த நாட்டுக்காகத் தியாகம் செய்து நூற்றாண்டுகள் கடந்தும் நினைவுகூரப்படும் பகத் சிங், புரட்சிகரத் தீவிரவாதியாகத்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே, என்ன இப்போது?

நன்றி: தி இந்து (இளமை புதுமை)

Sunday, March 19, 2017

சமகாலத்தின் மனிதன்!

ந.வினோத் குமார்  
பதிப்பிக்கப்பட்ட தேதி: 19 மார்ச், 2017
 
‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்பார் ஜி.நாகராஜன். இன்னொரு பக்கம் ஷேக்ஸ்பியர் ‘மனிதன் ஒரு மகத்தான பிறவி’ என்பார். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப, இந்த இரண்டு நிலைகளும், எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். 

இனம், நிறம், மொழி, மதம் என்ற வேறுபாடுகளின் அடிப்படையில், ஒரு மனிதரைக் கைகொடுத்துத் தூக்குவதும், அவரைக் கைகழுவி விடுவதும் உலகம் முழுக்கவும் பரவியிருக்கும் பிரச்சினை. மேற்கண்ட வேறுபாடுகளைத் தாண்டி ஒருவர் எப்படி உயர்ந்த நிலையை அடைகிறார் என்பதுதான், அவரை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது.

இன்று பல முன்னேற்றங்களுக்கும் முன்னோடியாகக் காட்டப்படும் அமெரிக்கா, ஒரு காலத்தில் நிறவெறி எனும் கறுப்புப் பக்கத்தைக் கொண்டி ருந்தது. ஆஃப்ரோ அமெரிக்கர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு, வரலாற்றில் எந்த நிறம் பூசினாலும் அது தன் கோர முகத்தை அப்பட்ட மாக வெளிப்படுத்தவே செய்கிறது. அப்போது நிறவெறிக்கு எதிராகப் போராடியவர்கள் எல்லாம் இந்த‌ முழக்கத்தை முன் வைத்தனர்: ‘இவர்கள் எல்லாம் கீழ்மையானவர்கள் அல்ல. வித்தியாசமான தோற்றம் கொண்ட வர்கள், அவ்வளவே’. 

ஆனால், அமெரிக்கர்கள் அந்த வித்தியாசத்தை, எவ்வளவு தூரம் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை, ‘தி மேன்’ எனும் ஒரே ஒரு புத்தகத்தின் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழின் சுமார் 80 ஆண்டுகால வரலாற்றில், அதன் ‘பெஸ்ட் செல்லர்’ வரிசையில், தன் புனைவு, அபுனைவு புத்தகங்களுக்காக முதலிடத்தைப் பிடித்த எர்னெஸ்ட் ஹெமிங்வே உள்ளிட்ட ஆறு எழுத்தாளர்களில் ஒருவரான இர்விங் வல்லாஸ் என்பவர் எழுதிய இந்த நாவல் 1964-ம் ஆண்டு வெளிவந்தது.
 
ஓரிரவில் அதிபர்

அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கர் ஜனாதிபதியாக வந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையின் அடிப்படையில் இந்த நாவலை எழுதினார் இர்விங் வல்லாஸ். சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கற்பனை பராக் ஒபாமாவின் வடிவில் நிஜமாகும் என்பதை இர்விங் வல்லாஸ் நினைத்துப் பார்த்திருப்பாரா என்பது சந்தேகம்தான். இந்த ஒரு காரணத்துக்காகவே தீர்க்கதரிசியாகப் போற்றப்படும் இவர் 1916-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி சிகாகோவில் பிறந்தார். இந்த ஆண்டு அவரின் பிறப்பு நூற்றாண்டு நிறைவடைகிறது. 'தி மேன்', 'தி பிரைஸ்', 'தி செகண்ட் லேடி' என அவரது பெரும்பாலான நாவல்கள் 'தி' எனும் ஆங்கில வார்த்தையுடன் சேர்ந்த தலைப்பைக் கொண்டிருக்கும் என்பது கூடுதல் தகவல்.



ஆஃப்ரோ அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையை அலங்கரித்து விட்டு ஓய்வுபெற்ற பிறகு, ஊடகங்களின் சகல கருத்துக் கணிப்புகளையும் தகர்த்துவிட்டு மீண்டும் ஒரு வெள்ளையர் அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் பதவியேற்பு உலகின் பல முற்போக்குப் பார்வைகளுக்கு அபாய மணி அடித்திருக்கும் இந்தத் தருணத்தில், இர்விங் வல்லாஸ் எழுதிய ‘தி மேன்’ நாவலை நாம் மறுவாசிப்புச் செய்வது முக்கியமாகிறது. ‘ஒரே இரவில் அமெரிக்காவின் அதிபர்!’ இதுதான் ஒரு வரிக் கதை. ‘ஒரு நாள் முதல்வன்’ போல, நேருக்கு நேராகச் சவால் விட்டு ஆட்சியைப் பிடிக்கும் கதையல்ல. அமெரிக்காவின் அதிபராக ஒரு வெள்ளையர் இருக்கிறார். அவர் அலுவலகப் பயணமாக வெளி நாடுக்குச் செல்லும்போது ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். அவருக்குப் பின் பொறுப்பேற்கும் துணை அதிபரும் அந்த விபத்தில் இறந்துவிடுகிறார். எனவே, அலுவலக நடைமுறையின்படி, துணை முதல்வருக்கும் அடுத்த நிலை யில் உள்ள ட‌க்ளஸ் தில்மன் எனும் ஆஃப்ரோ அமெரிக்க செனட்டர், அதிபராகப் பொறுப்பேற்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவரது பதவிக்காலம் சுமார் 14 மாதங்கள்தான்.

அந்தக் குறுகிய காலத்திற்குள் நிறவெறி காரணமாக, வெள்ளையர்கள் அவரை எப்படி எல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள் என்பதை இந்த நாவல் பதிவுசெய்கிறது. 

வெள்ளை மாளிகை அரசியல் 
 
1868-ம் ஆண்டு ஆண்ட்ரூ ஜான் சன் எனும் அதிபர் மீது ‘அரசியல் குற்றச்சாட்டு’ சுமத்தப்பட்டது. அதற்குப் பிறகு சுமார் 130 வருடங்களுக்குப் பிறகு 1998-ம் ஆண்டு அன்றைய அதிபர் பில் கிளிண்ட்டன் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பில் கிளிண்ட்டனுக்கு முன்பு, இந்தப் புனைவு இலக்கியத்தில் ஒரு ஆஃப்ரோ அமெரிக்க அதிபர் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதையின் மையம்.

இந்தப் புத்தகம் சொல்லும் அரசியலைத் தவிர, இலக்கிய ரீதியாக இந்தப் புத்தகம் கொண்டாடப்படுவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. அது இர்விங் வல்லாஸின் அளப்பரிய கள ஆய்வு. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சுற்றி நடக்கும் கதை என்பதால், ஒரு பரந்த அஸ்திவாரத்தைக் கட்டமைத்துவிடுகிறார். அமெரிக்க வெள்ளை மாளிகை எப்படியிருக்கும், அங்கு பின்பற்றப்படும் நடைமுறைகள் எல்லாம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டி என்று சொன் னால் அது நூறு சதவீதம் உண்மை.

இந்த நாவலில் வரும் அதிபர் என்ன கொடுமையை எல்லாம் சந்தித்தாரோ, அதே கொடுமையை அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான பராக் ஒபாமாவும் சந்தித்திருப்பதற்கு அநேக சாத்தியங்கள் உண்டு. வெளி உலகத் துக்கு வேண்டுமானால், ஒபாமா பெரிய வீரர் போலச் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அமெரிக்க செனட்டிற்குள் அவர் எப்படியான விமர்சனங்களைச் சந்தித்திருப்பார்? 

‘இங்கு இரண்டு கால் உள்ள ஜீவன்கள்தான் ஆள வேண்டும். உன்னைப் போன்ற நான்கு கால் ஜீவன்கள் அல்ல!’ என்று கறுப்பின‌ அதிபரை, ஒரு விலங்காகச் சித்தரிக்கும் ஒரு இடம் நாவலில் உண்டு. அதே விமர்சனத்தை ஒபாமாவும் சந்தித்திருக்கலாம். ஏனென்றால், அமெரிக்கர்கள் ‘வித்தியாசமான தோற்றம்’ கொண்டவர்களின் வித்தியாசத்தை, அவ்வளவு தூரத்துக்குத்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். 

இன்றும் அந்த நிலை மாறிவிடவில்லை என்பதற்கு, அவ்வப்போது நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களே சாட்சி. இந்த சமகாலத் தன்மைதான் இந்த ‘மனிதனை’, புத்தகம் வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகும் நம்மை வாசிக்க வைக்கிறது. நேசம் கொள்ள வைக்கிறது! 

நன்றி: தி இந்து (தமிழ்)