Monday, July 22, 2013

அங்கிள் பாய்!

ந.வினோத் குமார்
ரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்...’, ‘அது ஒரு பயங்கரமான காடு.அந்தக் காட்டுல ஒரு சிங்கம்...’, ‘வடக்கில இருக்குற ஒரு மலையிலதான் அந்த ராட்சசன் வாழ்ந்துட்டு வந்தானாம்...’

இப்படி கதைகள் கேட்க யாருக்குத்தான் பிடிக்காது?அதுவும் குழந்தைகளுக்கு? சிறுவயதுகளில் பாட்டி சொன்ன மந்திரக் கதைகள், அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த விடுமுறை காலத்திற்குச் சென்ற சித்தி வீட்டில் கேட்ட சாகசக் கதைகள், நீதிபோதனை வகுப்புகளில் கேட்ட ஆன்மிகக் கதைகள், சற்றே பெரியவன்/ள் ஆனவுடன் எழுத்துக்கூட்டிப் படித்த ‘சிறுவர்மலர்’, ‘தங்கமலர்’ கதைகள், நண்பர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்து படித்த பஞ்சதந்திரக் கதைகள், ஐந்தாம் வகுப்பு நெருங்கிய வயதில் படிக்க ஆரம்பித்த ராணி காமிக்ஸ் கதைகள், ஏழாம் வகுப்பு சுதந்திர தின விழா பேச்சுப் போட்டியில் கிடைத்த ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுக் கதைகள்’... என பதினைந்து வயது நிறைவதற்குள் நாம் கடந்து வருகிற கதைகளின் வகைகள்தான் எத்தனை, எத்தனை?

குழந்தைமைத்தனத்தைத் தாண்டி நாம் பெரியவர்களான போது சிறுகதைகள், ஒரு பக்கச் சிறுகதைகள், சற்றே பெரிய சிறுகதைகள், ஒரு வரிக் கதைகள், அரை பக்கக் கதைகள், ஏடாகூடக் கதைகள், அனுபவக் கதைகள் என நாம் எத்தனை கதைகள் படிக்க நேர்ந்தாலும்,சிறுவயதில் காமிக்ஸில் படித்த இரும்புக் கை மாயாவியின் ‘தங்க வேட்டை’யும், தீரர் தில்லானின் ‘கௌபாய்’ கதைகளும் நம்மை வசீகரித்ததற்கு ஈடாகுமா?

மாயாவி,லேடி ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி,கரும்புலி,கழுகு மனிதன்,தீரர் தில்லான், டார்ஜான் என நம் அரைடிராயர் காலங்களில் நமக்கான கற்பனை உலகில் சீறிப் பாய்ந்து வந்த சாகசக் கதாபாத்திரங்கள்தான் எத்தனை, எத்தனை? காமிக்ஸ் புத்தகங்களைப் படித்துவிட்டு, அதே கதையை நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிய பொழுதுகளை நீங்கள் இன்றும் நினைவில் வைத்திருந்தால்... நம்மிடம் இன்னும் கொஞ்சம் குழந்தைத் தன்மை ஒட்டியிருக்கிறது என்று உற்சாகப்பட்டுக் கொள்ளலாம்!

என்னைப் பொறுத்த வரையில் ஒரு சீரான வாசிப்புக்கு அடித்தளமாக அமைபவை காமிக்ஸ் புத்தகங்கள்தான் என்பேன்.ஆரம்ப காலங்களில் சிறுவர்மலர், தங்கமலர்... சற்று வளர்ந்த பிறகு காமிக்ஸ் புத்தகங்கள்... அதற்குப் பிறகு வார இதழ்கள்... அதற்குப் பிறகு ராஜேஷ்குமார்,பாலகுமாரன் ஆகியோரின் பாக்கெட் நாவல்கள்... அதன் பிறகு தீவிர இலக்கிய வாசிப்புகள்... அதன் பிறகு நமது சுய தேடல்களில் நாம் வாசிக்கிற புத்தகங்கள்... அதன் பிறகு ஆங்கிலப் புத்தக மோகம்... இப்படித்தான் ஒருவரின் வாசிப்பு வளர்கிறது என்பது என் எண்ணம். எனினும், ஒருவர் தன் பத்து வயதில் நோம் சாம்ஸ்கியைப் படித்தால் அதில் தவறில்லை...  They are born prodigies even though they are protege(e)!

ஆக, ஒரு பரந்த வாசிப்புப் பழக்கத்திற்கு அடிப்படையாக காமிக்ஸ் புத்தகங்கள் அமைந்திருக்கின்றன என்கிற போது,அவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.இருபது ஆண்டுகளுக்கு முன்பு ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் எனப் பல காமிக்ஸ்கள் வந்துகொண்டிருந்தன.இன்று அவற்றை எல்லாம் தேட வேண்டி இருக்கிறது.

ஆனால் 1970&ல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘அமர் சித்ர கதா’ எனும் காமிக்ஸ் புத்தகம்... (அதை காமிக்ஸ் என்று சொல்வதை விட சித்திரக் கதைப் புத்தகங்கள் என்று சொல்வது சரியாக இருக்கும். எனினும், பழக்கமான வார்த்தை என்பதால் ‘காமிக்ஸ்’ எனும் வார்த்தையே பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது!) இன்று வரை சுமார் 450 தலைப்புகளுக்கு மேல் வந்திருக்கிறது.நாட்டுப்புறக் கதைகள்,புராணக் கதைகள், வேடிக்கைக் கதைகள்,சாகசக் கதைகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் புத்தகங்கள் வந்திருக்கின்றன.ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்து கொண்டே இருக்கின்றன.சுமார் பத்து பதிப்புகள் வரை கண்ட புத்தகங்கள் இருக்கின்றன.

இத்தனை சாதனைகளுக்கும் என்ன காரணம் என்று நீங்கள் கேட்டால் அதற்கு ‘டக்’கென்று பதில்சொல்லலாம்... ‘ஆனந்த் பாய்!’

‘அங்கிள் பாய்’ என்றுதான் குழந்தைகள் செல்லமாக அழைப்பார்கள்.அவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது.அவரின் நினைவைப் போற்றும் வகையில் ‘அமர் சித்ர கதா’ நிறுவனமே ‘ஆனந்த் பாய் & மாஸ்டர் ஸ்டோரிடெல்லர்’என்கிற தலைப்பில் அழகிய படங்களுடன் கூடிய காமிக்ஸ் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.



‘கன்டெண்ட்’டும், ‘இல்லஸ்ட்ரேஷ’னும் நெருக்கி அடித்துக் கொள்ளாத வகையில் படைப்புகளைக் கொண்டு வருவதுதான் அமர் சித்ர கதாவின் ஸ்பெஷல்! இந்தப் புத்தகமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.மற்ற ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களைப் போன்று அல்லாது எளிமையான ஆங்கிலம்,கண்ணை உறுத்தாத வகையில் வரையப்பட்ட படங்கள்,நல்ல தாள்,நல்ல கட்டமைப்பு என ஒரு புத்தகத்தில் அனைத்தும் ப்ளஸ்கள் தான்!

‘ஆனந்த் பாய்’என்கிற இந்தப் புத்தகத்தில் அவரின் வாழ்க்கை வரையப்பட்டிருக்கிறது. பெற்றோரை இழந்து, உறவினர்களின் ஆதரவில் படித்து, அக்காவின் சீராட்டலில் வளர்ந்து,ஆசிரியர்களின் அன்பில் நெகிழ்ந்து,மனைவியின் ஒத்துழைப்பில் உயர்ந்து என அவரின் வாழ்க்கைச் சரிதத்தைப் படிக்கிற போது நமக்குள் ஏனோ ஒரு வகை சந்தோஷம் பிறக்கிறது. நம்பிக்கை மழையில் இன்னும் அதிகமாக நனைய ஆசைப்படுகிறது.‘அமர் சித்ர கதா’வை குழந்தைகளிடத்தில் பிரபலப்படுத்த அவர் மேற்கொள்கிற முயற்சிகளைப் படிக்கிற போது நம் மனம் ‘உழைப்பில்’கள்வெறி கொள்ள வைக்கிறது.

அவருடைய வாழ்க்கையில் காதல் வருகிறது.தன் இந்தி வகுப்பிற்கு மாணவியாக வந்த லலிதாவின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.தன் காதலை லலிதாவிடம் சொல்லிவிடுகிறார்.இந்த வரியை காமிக்ஸ் புத்தகத்தில் எப்படிக் கொண்டு வருவது என்ற சந்தேகமோ, அல்லது குழந்தைகளின் மனதில் வேறு எண்ணங்கள் ஏதேனும் தோன்றிவிடுமோ என்ற தடுமாற்றமோ இல்லாது மிக இயல்பாக அவர்கள் இருவருக்கும் இடையேயான காதலைச் சொல்லிவிடுவதில் இந்தப் புத்தகத்தின் பாரம்பரியம் மீது நமக்கு இருக்கும் மரியாதை இன்னும் பல சதவிகிதங்கள் அதிகரித்து விடுகிறது.

படங்கள் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.ஆனந்த் பாயின் இள வயது முதல் முதுமை வரை அவரின் முகவெட்டை வயதுக்கு ஏற்றபடி வரைந்திருப்பது அவ்வளவு அருமை! இதற்குப் பின் இந்த பலூன்,அதற்குள் இந்த டெக்ஸ்ட், இந்த இடத்தில் இந்தப் படம் வர வேண்டும் என்று பிரிக்கப்பட்ட ‘ஸ்டோரி போர்ட் எடிட்டிங்’ கனக் கச்சிதம்!

தன்னிடம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் தான் தரும் உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி,ஆனந்த் பாயின் வறுமையை அறிந்து அவரை ஆதரித்த ‘தரம்பால்’போன்ற ஆசிரியர்கள் இருந்ததால்தான் நமக்கு ஒரு ‘அங்கிள் பாய்’ கிடைத்தார். அதோ அந்த கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை நீங்கள் மூக்கைப் பொத்திக் கொண்டு காரில் கடக்கிற போது, உங்கள் கண்களுக்குத் தென்படுகிற குப்பைப் பொறுக்கும் சிறார்களில் எத்தனை பேருக்குள் ‘அங்கிள் பாய்’ மறைந்திருக்கிறாரோ...? ஆனால் அவர்களுக்காக எத்தனை ‘தரம்பால்’கள் காத்திருக்கிறார்கள்? யோசிக்கிற போது... ‘நம் கனவு கூட நாம் தீர்மானிக்கும் விஷயமாக இல்லை’ என்பது தெரிய வருகிறது இல்லையா..?

ஐம்பது ரூபாய் மதிப்புள்ள இந்தப் புத்தகத்தை நீங்களும் வாசியுங்கள்... உங்கள் பிள்ளைகளுக்கும் அதை வழங்குங்கள்!
நன்றி: விகடன்.காம்

No comments:

Post a Comment