Sunday, July 21, 2013

சிறையில் பிறந்த எழுத்துகள்!

ந.வினோத் குமார்
சுதந்திரம் என்கிற விஷயத்தைப் பற்றி அவரவர்க்கும் ஒரு கருத்து இருக்கிறது. யாருடைய கருத்து சரி, யாருடையது தவறு என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. ஒரு சமூகத்தில் அடக்குமுறைக்குக் கீழ் உள்ள ஓர் இனம், நாடு எதுவானாலும், அவற்றைச் சார்ந்த மக்களுக்கு எந்தக் கருத்து ‘எல்லோருக்கும் நன்மை’ என்று பொருந்தி வருகிறதோ அதுவே சுதந்திரம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.அந்த சுதந்திரத்தை அடைய குறிப்பிட்ட இன, தேச மக்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும் மாற்றார்களின் ‘சரி, தவறு’ கணக்கீடுகளுக்குள் வைத்துப் பார்க்காமல், எது சுலபமாகவும்,தீவிரமாகவும்,வேகமாகவும் தீர்வைத் தருமோ அதுவே பெரும்பாண்மை மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒன்றாக இருக்கிறது.

இதன் அடிப்படையில் நமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தைப் பார்த்தால் இரண்டு வகையான போராட்டங்கள் நம் கண் முன்னால் விரியும்.ஒன்று, காந்தி, நேரு ஆகியோரின் தலைமையின் கீழ் பட்டினிப் போராட்டம்,சமரச ஒப்பந்தங்களின் மூலம் ‘டொமினியன் ஸ்டேட்டஸ்’ எனும் மேலாட்சி அரசு முறை என்கிற வகையில் அஹிம்சை வழிப் போராட்டம்.

இரண்டு, நேதாஜி, பகத் சிங் போன்றோரின் தலைமையின் கீழ் இயங்கிய வன்முறைப் போராட்டம். ‘காந்தியின் வழிதான் சரி’ என்று கூப்பாடு போட்டால் பகவத் சிங்கின் உழைப்புக்கும், முன்னெடுத்துச் சென்ற புரட்சிக்கும் நாம் இழைக்கிற அநீதியாக அமையும். ‘பகத் சிங்கின் போராட்டம் சரி’ என்று சொன்னாலும், தண்டியில் காந்தி காய்ச்சிய உப்புக்கு நன்றி மறந்தவர்களாவோம்! ஆகவே, எந்த வழி நல்ல வழி என்று சிந்திப்பதை விட்டுவிட்டு, அவர்கள் தேர்வு செய்து கொண்ட பாதை தந்துவிட்டுப் போன பாடங்களை மட்டும் மதிப்பீடுகளுக்கு உள்ளாக்கவோ, முழுமனதாக ஏற்றுக் கொள்ளவோ செய்யலாம்.

அப்படி தான் தேர்வு செய்த பாதை ஏன் சரி என்பதற்கான நியாயங்களை முன் வைப்பதாகவே இருக்கிறது, பகத் சிங்கின் எழுத்துக்களைத் தாங்கிய ‘தி ஜெயில் நோட்புக் அண்ட் அதர் ரைட்டிங்ஸ்’ எனும் தொகுப்பு. இடதுசாரி சிந்தனைகளைத் தாங்கி வருகிற வெளியீடுகளைப் பதிப்பிக்கும் ‘லெஃப்ட்வேர்ட்’ இந்தத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறது.




1929, ஏப்ரல் 8! அன்றைய பஞ்சாப்பின் ஒரு பகுதியாக இருந்த லாஹூரில், அந்த இரண்டு இளைஞர்கள் மத்திய சட்டமன்றத்திற்குள் செல்கிறார்கள். ஆங்கிலேயர்களும், ஆங்கிலேயர்களின் கீழ் சேவகம் புரிந்து வந்த இந்தியர்களும் நிறைந்த அந்த அரங்கில் அவர்கள் இருவரும் வெடிகுண்டுகளை வீசுகிறார்கள். குண்டு வீசப்பட்ட அதிர்ச்சியில் பலரும் அங்கும் இங்கும் ஓட, அந்த இருவர் மட்டும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். மட்டுமல்ல, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘ஏகாதிபத்தியம் ஒழிக’ என்றும் வீர ஒலி எழுப்பினார்கள். அந்த நிமிடம் அந்த இருவரின் பெயர்கள் வரலாற்றில் பதிந்தன. பகத் சிங், பாதுகேஷ்வர் தத்தா ஆகியோர்தான் அந்த இருவர்!

அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள். பாதுகேஷ்வர் தத்தா சோர்வடையத் துவங்க,பகத் சிங் சிந்திக்கிறான்.சிறைக் கம்பிகளுக்குப் பின்னே அவன் விரல்களில் பிரவாகித்த கருத்து வெள்ளம் இன்றைக்குப் புத்தகப் பொக்கிஷமாக நம் கைகளில் தவழ்கிறது.

வாசிப்பதும்,சிந்திப்பதும்,எழுதுவதும் என்பதுதான் சிறையில் பகத் சிங்கினுடைய வாழ்வாக இருந்தது.எத்தனைப் புத்தகங்களை அவன் வாசித்தான் என்பது சிறை இரவுகள் மட்டுமே அறிந்த செய்தி.இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த போது, தோராயமான ஓர் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும் என்றால் 120 புத்தகங்களுக்கு மேல் படித்திருப்பான் என்று சொல்லலாம். அதற்கு மேலும் கூட இருக்கலாம். ஆனால் அவன் வாசித்த புத்தகங்களில் இருந்து எடுத்து வைத்த குறிப்புகள் பலவும் அதன் அருமை தெரியாமல் எரிக்கப்பட்டும், களவாடப்பட்டும் போயின.இருக்கும் குறிப்புகளைத் தொகுத்த போது சுமார் 150 பக்கங்கள் வரை வருகின்றன.எனில் அவன் வாசித்திருக்கக் கூடிய புத்தகங்களின் எண்ணிக்கையை நீங்களே உத்தேசித்துக் கொள்ளலாம்.

ஏப்ரல் 8, 1929 முதல் மார்ச் 22, 1931 வரை (மார்ச் 23-ல் அவன் தூக்கிலிடப்படுகிறான்) அவன் எழுதியது எல்லாம் ‘கடத்தப்பட்டு’ வெளியே கொண்டு செல்லப்பட்டு, அதன் பிறகு நாளிதழ்களில் அச்சிடப்பட்டன. பகத் சிங்கின் படைக்குழு செயலராக இருந்த லஜ்ஜாவதி என்பவர் பகத் சிங்கின் வழக்கு பற்றி விவாதிக்க அவ்வப்போது சிறைக்கு வருவது உண்டு. அப்போது அங்கிருந்த சில நல்ல உள்ளங்களால் 'smuggled out'  ஆன (இப்படித்தான் குறிப்பிடுகிறார் இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை வழங்கிய சமன்லால். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இவர்தான் ‘பகத் சிங் ஒளர் உன்கே சாத்தியோன் கே தஸ்தாவேஜ்’ என்ற புத்தகத்தைத் தொகுத்தவர்!) கத்தை கத்தையான காகிதங்கள் வெளியில் எடுத்துச் செல்லப்பட்டு, ‘பீப்பிள்’ பத்திரிகையின் ஆசிரியரான ஃபெரோஸ் சந்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அவற்றை வாசித்து, சீராகத் தொகுத்து அச்சிடுகிறார் ஃபெரோஸ். இப்படி அச்சிடப்பட்டதுதான், புகழ்பெற்ற ‘நான் நாத்திகன் ஏன்?’ என்ற புத்தகம். பகத் சிங் ஆங்கிலேயே அதிகாரத்தால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட பிறகு இந்தக் கட்டுரை செப்டம்பர் 27, 1931-ல் அச்சிடப்பட்டது.

பகத் சிங் எழுதிய பல காகிதங்களை லஜ்ஜாவதி, பிஜோய் குமார் சின்ஹாவிடம் (சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று அந்தமான் சிறையில் இருந்தவர்) 1938-ல் ஒப்படைக்கிறார். எக்காரணம் கொண்டும் இந்தக் காகிதங்களைத் தன் தந்தையிடம் ஒப்படைக்கக் கூடாது என்ற பகத் சிங்கின் உத்தரவுப்படி லஜ்ஜாவதி அப்படிச் செய்தார். சின்ஹாவோ அதை இன்னொரு பெயர் அறியப்படாத நண்பர் ஒருவரிடம் ஒப்படைக்கிறார். அந்த நண்பரோ, போலீஸாரின் ரெய்டுக்குப் பயந்து அவற்றை எரித்துவிடுகிறார். ஆனால் எப்படியோ அந்த பெயர் அறியப்படாத நண்பரின் குடும்ப உறுப்பினர், அநேகமாக குல்பீர் சிங் என்பவர் ‘ஜெயில் நோட்புக்’கை மட்டும் பாதுகாத்தார். பிறகு, அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிதறிக் கிடந்த கடிதங்கள், படைப்புகள் ஆகியவற்றைப் பெருமுயற்சியினால் திரட்டி, 1994-ல் பூபேந்தர் ஹ¨ஜா என்பவரால் தொகுக்கப்பட்டு புத்தகமாக அச்சிடப்பட்டது. 1922-2006 வரை வாழ்ந்த இவர் 1940களில் பகத் சிங்கின் புரட்சி அமைப்பில் மாணவத் தொண்டராகச் செயல்பட்டவர். சுதந்திரத்திற்குப் பிறகு பத்திரிகையாளராகப் பணியாற்றியவர்.

இப்படி சிறையில் பகத் சிங் எழுதிய படைப்புகள் வெளியானது பற்றி கூட ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு விஷயங்கள் இருக்கின்றன.அவற்றை சமன்லால் சொல்கிற போது, ‘இந்தப் புத்தகம் எத்தகையதொரு வரலாற்று ஆவணம்’ என்று நமக்கு உணர்த்தப்படுகிறது.

பெரும்பாலும்,சிறைக் குறிப்புகள் என்றவுடன், ‘சிறைக்கு இன்று அவர் வந்தார். அரிசியில் புழு நெளிந்தது.பஜனை பாடினோம்...’ என்ற கணக்காகத்தான் இருக்கும் என நினைத்தேன்.ஆனால் இந்தப் புத்தகம் அந்த எண்ணத்தைச் சுக்கு நூறாக்குகிறது.முழுக்க முழுக்க தான் வாசித்த புத்தகங்களில் இருந்து மேற்கோள்கள், முக்கிய தீர்மானங்கள், அலங்காரக் கலப்படங்கள் இல்லாத தன் எண்ணங்கள் ஆகியவற்றைத்தான் பதிவு செய்திருக்கிறான் பகத்.மார்க்ஸின் ‘மூலதன’த்தில் இருந்து, ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, வால்ட்விட்மேனின் கவிதை வரிகள், லெனினின் தத்துவங்கள் என அவன் வாசித்த புத்தகங்களில் இருந்து எடுத்தாண்ட குறிப்புகள் ஒவ்வொன்றும் முத்துக்கள்.

உதாரணத்துக்குச் சில:

* ‘சிறந்த ஆட்சி ஒருபோதும் சுயாட்சியின் இடத்தை நிரப்பாது!’ - ஹென்றி கேம்ப்பெல் பேன்னர்மேன்

* ‘ஒடுக்கப்பட்ட வர்க்கம் என்று ஒன்று இருக்கிறபோது, அங்கே நான் இருக்கிறேன்.
  குற்றம் புரிவதற்கான விஷயம் ஒன்று இருக்கிறபோது, அது நானாக இருக்கிறேன்.
  சிறையில் உயிர் ஒன்று இருக்கிறபோது, நான் சுதந்திரமாக இல்லை!’- யூகின் வி.டெப்ஸ்

* ‘இதோ கிளையின் கீழே ஒரு ரொட்டித் துண்டு,
  ஒரு மதுக்கோப்பை, ஒரு கவிதைப் புத்தகம் - மற்றும் நீ
  என்னருகில் வனாந்தரத்தில் பாடுகிறாய்
  வனாந்தரமே இப்போது சொர்க்கமாகிறது!’ - உமர் கய்யாம்

இவை தவிர, தானும் தத்தாவும் கைதாகி நீதிமன்றத்தில் நிறுத்துகிறபோது அவர்கள் கொடுத்த வாக்குமூலம், ‘புரட்சி வாழ்க!’ என்ற சொல்லாடல் பற்றிய கட்டுரை, ‘நான் நாத்திகன் ஏன்?’,சிறையில் இருந்த போது பகத்தின் தோழன் சுகதேவ் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானான். அப்போது தான் தற்கொலை செய்ய முடிவெடுத்திருப்பதாக பகத்திற்கு கடிதம் எழுதுகிறான்.அதற்கு பதில் அளிக்கும் விதமாக, ‘தற்கொலை குறித்து’ என்று பகத் எழுதிய கடிதம்... அதன் இறுதியில் இவ்வாறு எழுதி இருக்கிறான் பகத் சிங்:

'I do not expect even a bit of moderation or amnesty. Even if there is amnesty, it will not be for all, and even that amnesty will be for others only, not for us;....

....Even then, I wish that release calls for us should be made collectively and globally.'

என்று எழுதியதைப் படிக்கும் போது பேரறிவாளனின் நினைவு வருவதை ஏனோ தடுக்க முடியவில்லை. தன்னுடைய ‘தூக்குக் கொட்டடியில் இருந்து ஒரு முறையீட்டு மடல்’ புத்தகத்தில் ‘நான் என்னுடைய சுயநலத்துக்காக தூக்குத் தண்டனை வேண்டாம் என்று சொல்லவில்லை. மரண தண்டனை என்பதே முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராடுகிறேன்’ என்கிற ரீதியில் (வார்த்தைகள் மாறி இருந்தாலும், கருத்து இதுதான்!) எழுதி இருந்ததும், பகத் சிங்கின் மேற்கண்ட வரிகளும் ஒரு மையப் புள்ளியில் ஒத்துப்போவதைப் பார்க்கிறேன். இவற்றுடன், பின் இணைப்பாக, ‘பகத் சிங், ராஜகுரு, சுகதேவ்’ ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்ட போது ‘குடியரசு’வில் பெரியார் எழுதிய கட்டுரை ஆகியவையும் தரப்பட்டுள்ளன.

கையில் எடுத்தவுடன் வாசித்து முடித்துவிடக் கூடிய புத்தகம் அல்ல இது. ஒவ்வொரு பக்கத்தையும் ஆழ்ந்து வாசித்து, வாசித்ததை யோசித்து என தலைக்குள் கனத்தை ஏற்றி வைக்கிற புத்தகம். வாசித்து முடித்தவுடன் ‘இப்படி ஒரு வாழ்க்கை நமக்குக் கிடைக்கவில்லையே’ என பகத் சிங்கின் மீதும், அவன் சென்ற பாதையின் மீதும் விருப்பம் ஏற்பட்டால்... அது நீங்கள் அடையும் பேறு!
நன்றி: விகடன்.காம்

No comments:

Post a Comment