ந.வினோத் குமார்
பதிக்கப்பட்ட தேதி: 16 ஏப்ரல் 2017
‘அட்டையைப் பார்த்துப் புத்தகத்தை எடை போடக் கூடாது’ என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் பல சமயம், அட்டை நம் கண்களையும் சிந்தனையையும் கவர்ந்து ஒரு புத்தகத்தை வாங்கவைத்துவிடும். பிரித்துப் படித்தால், ‘எத்தனை துன்பங்கள் வைத்தாய் இறைவா?’ என்று ஏங்கவைத்துவிடும்.
ஒரு புத்தகத்தின் அட்டை அவ்வளவு சிறப்பாக இல்லாமல் போனதாலேயே அந்தப் புத்தகம் பரவலான வாசக கவனத்துக்கு வராமல் போனதற்கு மேற்கில் நிறைய சான்றுகள் உண்டு. உதாரணத்துக்கு, ரோல் தால் எழுதிய ‘சாக்லெட் ஃபாக்டரி’, ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’, எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய ‘ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்’ போன்றவற்றைச் சொல்லலாம்.
பதிக்கப்பட்ட தேதி: 16 ஏப்ரல் 2017
‘அட்டையைப் பார்த்துப் புத்தகத்தை எடை போடக் கூடாது’ என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் பல சமயம், அட்டை நம் கண்களையும் சிந்தனையையும் கவர்ந்து ஒரு புத்தகத்தை வாங்கவைத்துவிடும். பிரித்துப் படித்தால், ‘எத்தனை துன்பங்கள் வைத்தாய் இறைவா?’ என்று ஏங்கவைத்துவிடும்.
ஒரு புத்தகத்தின் அட்டை அவ்வளவு சிறப்பாக இல்லாமல் போனதாலேயே அந்தப் புத்தகம் பரவலான வாசக கவனத்துக்கு வராமல் போனதற்கு மேற்கில் நிறைய சான்றுகள் உண்டு. உதாரணத்துக்கு, ரோல் தால் எழுதிய ‘சாக்லெட் ஃபாக்டரி’, ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’, எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய ‘ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்’ போன்றவற்றைச் சொல்லலாம்.
தமிழில் இன்றுவரை அட்டைப் படம் குறித்த தெளிவான சிந்தனை பெரும்பாலான
பதிப்பகங்களிடம் இல்லை. என்றாலும், பதிப்பகங்களை மட்டும் குறைகூறிவிட
முடியாது. தமிழ் எழுத்தாளர்கள் பலர், தங்கள் கடமை எழுதுவதோடு
முடிந்துவிடுகிறது என்று நினைத்துவிடுகிறார்கள். தவிர, இன்று புத்தக அட்டை
களுக்கு வரைய வேண்டும் என்ற அவசியத்தையும் இல்லாமல் ஆக்கிவிட்டது கூகிள்.
அதில் தேடினால் அநேக கிராஃபிக்ஸ் படைப்புகள் கிடைக்கின்றன. அவற்றில்
ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டால் போதும் என்பது தான் எழுத்தாளர்கள்,
பதிப்பாளர்கள் உள்ளிட்ட பலரின் மனப்போக்கு.
இந்தச் சூழலில் தனது புத்தகங்களுக்கு அமைக்கப்படும் அட்டைகள் குறித்த
தனது கருத்துகளைத் தொகுத்து சிறு நூலாகக் கொண்டு வந்திருக்கிறார் ஆங்கில,
இத்தாலிய எழுத்தாளர் ஜும்ப்ப லஹிரி. ‘தி க்ளோதிங் ஆஃப் புக்ஸ்’ எனும் அந்த
நூலை பெங்குவின் பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.
‘அட்டை தயாராகும்போது ஒரு புத்தகம் பிறக்கிறது’ என்கிறார் ஜும்ப்ப
லஹிரி. அட்டைப் படம் தயாரான அந்த நிமிடத்தில், என் படைப்பு முயற்சி
முடிவுக்கு வந்துவிடுகிறது, என்பது அவரின் வாதம்.
“ஒரு புத்தகத்தின் அட்டைப் படம் என்பது மொழிபெயர்ப்பைப் போன்றது.
அதாவது, எழுத்திலிருந்து காட்சியாக ஒரு புத்தகம் உருக்கொள்கிறது.
மொழிபெயர்ப்பைப் போலவே, அட்டைப் படமும் மூலப் பிரதிக்கு (அதாவது
வார்த்தைகளுக்கு) நியாயம் செய்வதாகவோ அல்லது அநீதி இழைப்பதாகவோ இருக்கலாம்.
சில சமயம் வாசகர்கள் என் புத்தகத்துக்குக் கையெழுத்து வாங்க வரும்போது,
அந்தப் புத்தகத்தின் மோசமான அட்டையைப் பார்த்து, அதைக் கிழித்துவிடலாமா
என்றுகூடத் தோன்றும்” என்று அவர் எழுதுகிறார்.
எழுத்தாளர்களுக்குத் தங்கள் புத்தகங்களின் அட்டைப் படத்தைத்
தேர்வுசெய்யும் வாய்ப்பு அல்லது உரிமை, பல சமயங் களில் கிடைப்பதில்லை
என்பதையே மேற்கண்ட வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. வணிகக் காரணங்களுக்காக
அட்டைப் படம், அட்டையில் பிற எழுத்தாளர்கள் அந்தப் புத்தகத்துக்குத்
தந்திருக்கும் ஒரு வரிப் பாராட்டுகள், இத்தனை விருதுகள் வென்றுள்ளது
என்பது போன்ற தகவல்கள் உள்ளிட்ட பதிப்பக உத்திகள், ஒரு படைப்பின் உண்மையான
பொருளைச் சிதைத்துவிடுகின்றன என்கிறார் இந்நூல் ஆசிரியர்.
‘அணிந்திருக்கும் ஆடைகளை வைத்து எப்படி மனிதர்கள் மதிப்பிடப்படுகிறார்களோ
அதுபோல, ஒரு அட்டையை வைத்து ஒரு புத்தகமும் மதிப்பிடப்படுகிறது’
என்கிறார்.
இந்தக் காரணங்களுக்காகத்தான் எழுத்தாளர் விர்ஜீனியா வுல்ஃப் தன்
புத்தகங்களை வெளியிடுவதற்கென்று சொந்தமாக ‘ஹோகார்த் பிரஸ்’ என்ற
பதிப்பகத்தைத் தொடங்கினார். தன் சகோதரி வனெஸ்ஸா பெல்லுடன் இணைந்து தனது புத்தகங்களின் அட்டைகளை வுல்ஃப் உருவாக்கினார்.
இன்று அவரது புத்தகங்கள் பல பதிப்புகளைக் கண்டிருந்தாலும், அவரின் முதல்
பதிப்புப் புத்தக அட்டைகள் கொண்டிருந்த ஈர்ப்பை, இப்போதிருக்கும் அட்டைகள்
கொண்டிருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
வுல்ஃப்பைப் பின்பற்றி, தமிழ் எழுத்தாளர்கள் ஒரு பதிப்பகத்தை
ஆரம்பித்துவிட முடியாதுதான். ஆனால், அவரைப் போல, ஓவியர்களுடன் கலந்து பேசி
அட்டைகளை முடிவுசெய்யலாம்.
‘எழுதுவது என்பது ஒரு கனவைப் போன்றது என்றால், ஒரு புத்தகத்தின்
அட்டை
விழிப்பைப் போன்றது’ என்கிறார் லஹிரி. அந்தக் கனவின் விழிப்பு கடினமானதாக
இல்லாமல் இயல்பாக நடந்தால் நல்லதுதானே?
நன்றி: தி இந்து