ந.வினோத் குமார்
மனிதர்களை, கொஞ்சம் நெருக்கமாக, நண்பர்களை அவர்களின் ஊர் பெயர் சொல்லி
அழைக்கும் வழக்கம் சிலரிடத்தில் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா..? ‘டேய்
ஊட்டிக்காரா…’ என்று நான் பல நேரம் அழைக்கப்பட்டிருக்கிறேன். டெல்லி, மும்பை பகுதிகளுக்குச்
செல்லும்போது, அங்குள்ள ஆட்டோ, டாக்ஸிவாலாக்களுக்கு நான் ‘மதராஸி’ ஆகிவிடுகிறேன். விடுமுறை
தினங்களில் என் சொந்த ஊர் திரும்பும்போது, அங்குள்ள உறவுகளுக்கு நான் ‘ஹே…
சென்னைகாரு’ என்றாகிறேன்.
இப்படி நமக்கும், நாம் வசிக்கும் நகரத்துக்குமான தொடர்பு தனித்துவமானது.
நமக்கு முகவரியைத் தரக்கூடியது மட்டுமல்ல. நல்ல மனிதர்களையும் அடையாளம்
காட்டக்கூடியது. சென்னை வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. ‘பட்டணம் வந்து பணம் செய்தேனா?’
என்றால், இல்லை. ஆனால் பல நல்ல மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறேன். அந்த உறவுகளில்
சிலது தொடரும். சிலது, என்ன காரணத்தாலோ விட்டுப் போகும். உறவென்பதே
அப்படித்தானே..?
மனமாற நேசித்தலும், வயிறாற விருந்தோம்புதலும், கஷ்டத்தில் கைகொடுத்தலும்
மட்டுமே உறவாகிவிடுகிறதா..? உடல் ரீதியான தொடர்புகொள்ளலை ‘ஜஸ்ட் ஒன் நைட்
ஸ்டாண்ட்’ என்று சொல்லிவிட்டுக் கடந்துவிட முடியுமா..? அந்த உடலுறவு
எதிர்பாலினத்தவருடன் மட்டும்தான் நிகழ வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லையே..?
சகபாலினத்தவருடனும் அந்த அற்புதம் நிகழலாம் இல்லையா..?
ஆம்… ‘க்வீர்’ (Queer) என்று சொல்லப்படக்கூடிய கே (‘ஹோமோ செக்ஸ்’ என்ற
சொல்லாடல் தவறு என்கிறார்கள் ‘க்வீர்’ சமூகத்தைச் சேர்ந்தவர்கள்), லெஸ்பியன்,
பைசெக்ஸுவல், திருநபர்கள் (Transgender) ஆகியோர் அடங்கிய பாலியல்
சிறுபான்மையினருக்கிடையில் நிகழும் உறவை நான் அற்புதம் என்கிறேன். மன ரீதியாகவும்
சரி… உடல் ரீதியாகவும் சரி… ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிகழ்கிற உறவுக்கு எந்த
விதத்திலும் குறைந்ததல்ல, சகபாலினத்தவருடனான உறவு.
அப்படியான உறவொன்றில் தான் கண்ட அற்புதங்களை, நியூயார்க் நகரம் தனக்குக்
காட்டிய தரிசனங்களை ‘இன்ஸோம்னியாக் சிட்டி’ (2017) எனும் புத்தகத்தின் மூலம் நம்
முன்னே வைத்து, நம்மைப் புதிய அனுபவத்துக்கு அழைத்துச் செல்கிறார் அந்தப்
புத்தகத்தின் ஆசிரியர் பில் ஹேஸ். புத்தகத்தின் தலைப்பை விடவும், சுவாரஸ்யமாக
இருக்கிறது, அதன் உபதலைப்பு: ‘நியூயார்க், ஆலிவர் மற்றும் நான்..!’
பில் ஹேஸ், ஓர் எழுத்தாளர். இதற்கு முன்பு ‘தி அனாடமிஸ்ட்’, ‘ஃபைவ்
குவார்ட்ஸ்’, ‘ஸ்லீப் டெமான்ஸ்’ ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். இவர், ஒரு சிறந்த
ஒளிப்படக்காரரும்கூட. எல்லாவற்றுக்கும் மேலாக, தான் ஒரு ‘கே’ என்பதை வெளிப்படையாக
அறிவித்துக்கொண்டவர்.
தன்னுடைய 48 வயது வரை அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தில்
வாழ்ந்தார். அங்கு அவருக்கு ஸ்டீவ் எனும் ஒரு ‘பார்ட்னர்’ இருந்தார். அவர்களுடைய
உறவு பல ஆண்டுகளாக அற்புதமாகப் போய்க்கொண்டிருந்தது, ஸ்டீவ் மாரடைப்பால் இறக்கும்
வரை!
ஸ்டீவ் இறந்த பிறகு, அவருடைய நினைவுகள் பில் ஹேஸை ரொம்பவும்
அலைக்கழிக்கின்றன. தூக்கமின்மை (இன்ஸோம்னியா) நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் ஒரு
மாற்றம் வேண்டி, நியூயார்க் நகரத்துக்குக் குடிபெயர்கிறார். அங்கு ஒரு
நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார்.
தன்னுடைய ‘தி அனாடமிஸ்ட்’ எனும் முதல் புத்தகம் அச்சுக்குப் போவதற்கு
முன்பு டாக்டர் ஆலிவர் சாக்ஸ், அதன் பிரதியை ‘ப்ரூஃப்’ பார்த்து, அதற்கு ‘ப்ளர்ப்’
எழுதித் தந்தார். அந்தப் புத்தகத்தைப் பாராட்டி, பில் ஹேஸுக்குக் கடிதம் எழுதினார்
சாக்ஸ். அதற்கு நன்றி தெரிவித்து பில், சாக்ஸுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
இப்படித்தான் தொடங்கியது அவர்களது நட்பு. தான் நியூயார்க் வந்துவிட்டதை
சாக்ஸுக்குத் தெரியப்படுத்துகிறார் பில். அதில் சந்தோஷமடைந்த சாக்ஸ், பில் ஹேஸைத்
தன்னுடைய இடத்தில் சந்திக்கிறார். இருவரும் நீண்ட நேரம் உரையாடினார்கள். பரஸ்பரம்
இருவருக்கும் ஒரே மாதிரியான அலைவரிசை. ஆலிவர் சாக்ஸின் அறிவியல் தோய்ந்த
கவித்துவமானப் பேச்சால் கட்டுண்ட பில் ஹேஸ், காதலில் விழுந்தார். சில தினங்களுக்குப்
பிறகு தானும் காதலில் இருப்பதாக சாக்ஸ், பில்லிடம் மனம் திறந்தார். பிறகு அவர்கள்
இருவரும் சேர்ந்து வாழத் தொடங்குகிறார்கள்.
டாக்டர் ஆலிவர் சாக்ஸைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அவர் ஒரு மிகச்
சிறந்த நரம்பியல் நிபுணர். ‘அவேக்கனிங்ஸ்’, ‘மியூசிக்கோஃபீலியா’ என நரம்பு மண்டலம்
குறித்துச் சாமானியர்களும் அறிந்துகொள்ளும் வகையில் சிறந்த புத்தகங்கள் பலவற்றை
எழுதியவர். இவரது ‘ஹாலுசினேஷன்ஸ்’ எனும் புத்தகத்தை நான் முதல் முறை இடுப்பு
மாற்று அறுவை சிகிச்சைக்கு உள்ளாகி, வீட்டில் படுத்திருந்தபோது படித்தேன். அதைப்
படித்துவிட்டு, ‘பக்கத்தில் யாரோ நின்று என்னை உற்றுப் பார்க்கிறார்கள்’ என்ற
கற்பனையில் நான் தூக்கத்தைத் தொலைத்த இரவுகள் பலவுண்டு.
இந்தப் புத்தகம், பில் ஹேஸுக்கும் ஆலிவர் சாக்ஸுக்கும் இடையிலான உறவு
பற்றியது என்பதை விடவும், சாக்ஸைப் பற்றியது என்பதுதான் சரி. ஆலிவர் சாக்ஸ் எனும்
மனிதர், தன்னுடைய வாழ்க்கையை எப்படிக் கவித்துவமாக நடத்தினார் என்பதைப் பற்றியது.
எளிய விஷயங்களில் எப்படி அவர் எல்லையில்லா ஆனந்தத்தை அடைந்தார் என்பதைப் பற்றியது.
தன்னுடனான தருணங்கள் ஒவ்வொன்றிலும், ஆலிவர் சாக்ஸ் உதிர்த்த சிந்தனைகளை ‘….என்றார்
ஓ’ என, புத்தகம் நெடுகப் பரவவிட்டிருக்கிறார். ஆலிவரை, அந்தப் பெயரின் முதல்
எழுத்தான ‘ஓ’வைக் கொண்டுதான் அழைக்கிறார் பில் ஹேஸ். அவர் மீது அவ்வளவு காதல் பில்
ஹேஸுக்கு!
அந்தச் சிந்தனைத் தெறிப்புகள் சிலவற்றை இங்கே கொடுக்கிறேன்:
“I don’t so much fear death as I do wasting life.”
“Writing is more important than pain.”
“I am glad to be on planet Earth with you. It would be much lonelier
otherwise.”
“The most we can do is to write – intelligently, creatively, critically,
evocatively – about what it is like living in the world at this time.”
தன்னைப் போலவே ‘தூக்கமின்மை’ நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை, முப்பது
ஆண்டுகளாக யாருடனும் ‘செக்ஸ்’ வைத்துக்கொள்ளாத ஒருவரை, ‘ஒவ்வொரு நாளும் ஒரு
வார்த்தை என்னை ஆச்சரியப்படுத்துகிறது’ என்று சொன்ன ஒருவரை, ‘But’ எனும் சொல்லை
நேசித்தவரை, ‘நான் வாழும் வரை எனக்கு நல்ல சிந்தனை ஓட்டமும் சொற்களும் வேண்டும்’
என்று கனவு கண்டவரை அவரது வார்த்தைகளைக் கொண்டே சித்திரமாகத் தீட்டி விடுகிறார்
பில் ஹேஸ். இறுதியில், நாமும் ஆலிவர் சாக்ஸிடம் காதலில் விழுகிறோம்.
சாக்ஸினது மட்டுமல்லாமல், புத்தகத்தில் ஆங்காங்கே பில் ஹேஸ் எழுதிச்
செல்லும் வரிகளும் தத்துவார்த்தமாக தொனிக்கின்றன.
“Something bad always leads to something good.”
“Practicality will not get you where you want to go.”
“Just remember: Ask first, don’t grab, be fair, say please and thank you,
always say thank you – even if you
don’t get something back right away. You will.”
“Take each day as it comes, don’t overthink it.”
இந்தப் புத்தகத்தின் ‘கதை சொல்லும் பாணி’ கொஞ்சம் புதுமையாக இருக்கிறது.
தனக்கும் நியூயார்க் நகரத்துக்குமான உறவை ஒவ்வொரு அத்தியாயமாகச் சொல்லும் அதே
வேளையில், தனக்கும் ஆலிவர் சாக்ஸுக்கும் இடையிலான உறவை ‘நோட்ஸ் ஃப்ரம் எ ஜர்னல்’
எனும் தலைப்பின் கீழ், நாட்குறிப்பு போல, சின்னச் சின்ன பத்திகளாகச் சொல்லிச்
செல்வதால், ஒரே நாளில் உட்கார்ந்து படித்து முடித்துவிடத் தோன்றுகிறது.
புத்தகத்தின் நடு நடுவே, பில் ஹேஸ் எடுத்த நியூயார்க் நகர மனிதர்களின்
ஒளிப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அந்த நகரத்தில் பில் கடந்து வந்த
வழிப்போக்கர்களைப் பற்றிய பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.
சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்த பில் ஹேஸ் – ஆலிவர் சாக்ஸ் வாழ்க்கையில் ஒரு
புயல் அடித்தது. சாக்ஸுக்குப் புற்றுநோய்! ஆனால் சாவைக் கண்டு ஆலிவர்
பயப்படவில்லை. தன் மிச்ச வாழ்நாளைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள விரும்புகிறார். எனவே
‘மை ஓன் லைஃப்’ எனும் தனது சுயசரிதைப் புத்தகத்தை விரைந்து முடிக்கிறார். அந்தப்
புத்தகத்தில்தான் இறுதியாக, தான் ஒரு ‘கே’ என்பதை வெளிப்படையாகச் சொன்னார் ஆலிவர்.
அவர் இறந்த பிறகு, நியூயார்க்கை விட்டு, ரோம் நகரத்துக்குச் செல்கிறார் பில்.
அங்கிருந்துதான் இந்தப் புத்தகத்தை எழுதினார். எழுத்தின் மூலமாகத் தனக்கு ஏற்பட்ட
இழப்புகளின் வலியை அவர் கடந்தார்.
‘கிரேக்கப் புராணத்தில் தூக்கத்தின் கடவுளுக்கு ஒரு ‘இரட்டையர் சகோதரன்’ உண்டு. தானடோஸ் எனும்
அவர், மரணத்தின் கடவுள்’ என்று எழுதுகிறார் பில். நியூயார்க், ஆலிவர், பில் ஹேஸ்
ஆகிய நால்வருடன் நான்காவதாக அந்த மரணமும் ஒரு கதாபாத்திரமாக உலா வருவதை
புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நம்மால் உணர முடிகிறது.
‘ஒரு நல்ல புத்தகம் இன்னொரு நல்ல புத்தகத்துக்கு இழுத்துச் செல்லும்’
என்பார்கள். இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன், நீங்கள் பில் ஹேஸ் எழுதிய
இதர புத்தகங்களையோ அல்லது ஆலிவர் சாக்ஸ் எழுதிய புத்தகங்களையோ தேடிச் செல்வீர்கள்.
ஆம்… இது ஓர் அரிய, நல்ல புத்தகம்!
நன்றி (ஒளிப்படங்கள்): ஆலிவர் சாக்ஸ் - oliversacks.com, பில் ஹேஸின் நியூயார்க் நகரம் - http://drewrowsome.blogspot.com
No comments:
Post a Comment