Saturday, July 14, 2018

அவதூறுகளின் நாயகன்!

ந.வினோத் குமார்


இந்தியாவில் இன்றைக்கு அவதூறு வழக்குகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் இந்தியாவில் அவதூறு வழக்கைச் சந்தித்த முதல் வழக்கறிஞர் யார் தெரியுமா? அவர், எர்ட்லி நார்ட்டன். அன்றைய சென்னை மாகாணத்தில் பணியாற்றி வந்தார். 

1880-களில் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் ‘கார்ஸ்டின் டகாய்ட்டி’ (போடிநாயக்கனூர் ஜமீந்தார் வழக்கு என்றும் அழைக்கப்படுகிறது) எனும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் ஜமீந்தார் சார்பாக நார்ட்டன் ஆஜரானார். அப்போது, ‘இது ஜோடிக்கப்பட்ட வழக்கு. ஜமீந்தார் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டுள்ளார். இதுபற்றி, மெட்ராஸ் சிவில் சர்வீஸ் மூத்த உறுப்பினர் ஹென்றி எட்வர்ட் சல்லிவனுக்குத் தெரியும். ஆனாலும் அவர் அமைதியாக இருந்துவிட்டார்’ என்று குற்றம்சாட்டினார் நார்ட்டன். 

இந்த வழக்கில் தன்னை இழுத்ததற்காக நார்ட்டன் மீது அவதூறு வழக்குப் போட்டார் சல்லிவன். அதற்குப் பதிலளிக்க, நார்ட்டனுக்கு நீதிமன்றம் மூன்று வாரம் அவகாசமளித்தது. இந்த விஷயத்தில் அவருக்காக வாதாட எந்த வழக்கறிஞரும் முன் வரவில்லை. எனவே, தானே தன் வழக்கில் வாதாடினார் நார்ட்டன். சல்லிவன் சார்பாக அன்றைய அட்வகேட் ஜெனரல் எச்.எச்.ஷெப்பர்ட் வாதாடினார். அந்த வழக்கை ஐந்து நடுவர்கள் கொண்ட அமர்வு விசாரித்தது.

  
இறுதியில் கார்ஸ்டின் வழிப்பறி வழக்கில் சல்லிவனை இழுத்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, ‘வழக்கைக் கையாளும்போது நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உதிர்க்கும் வார்த்தைகளுக்காக அவர் மீது அவதூறு வழக்குப் போட்டால், அது அவரை நம்பி வரும் கட்சிக்காரர்களுக்கே கேடாக முடியும். எனவே, கட்சிக்காரர்களின் நலனை முன் வைத்து, நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதந்திரமாக உரையாட அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று கூறி பேச்சுரிமையை நிலைநாட்டி, நார்ட்டன் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

பிற்காலத்தில், தங்களின் பணியை முன்னிட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் சலுகைகள் கேள்விக்கு உள்ளாக்கப்படும்போதெல்லாம் இந்தியா முழுவதும் இந்த வழக்குதான் முன்னுதாரண வழக்காக முன் வைக்கப்பட்டது. 

இந்த வழக்கை நினைவுபடுத்தும் வகையில், இன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் எர்ட்லி நார்ட்டனின் படத்துக்குக் கீழே, ‘தன் பணியைச் செய்வதில் எந்த ஒரு அச்சத்திலிருந்தும் விடுபட்டவராக ஒருவர் இருக்கிறார் என்றால் அவர், வழக்கறிஞர் மட்டுமே!’ என்ற வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. 

இந்த ‘அவதூறு நாயகன்’தான் பின்னாளில் ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளேட்டின் மீது அவதூறு வழக்குப் போட்டார். அனேகமாக ‘தி இந்து’ சந்தித்த முதல் அவதூறு வழக்கு அதுவாக இருக்கலாம் என்கிறது வழக்கறிஞர் சுரேஷ் பாலகிருஷ்ணன் எழுதி, சமீபத்தில் வெளியான ‘எர்ட்லி நார்ட்டன்: எ பயோகிராஃபி’ எனும் புத்தகம். 

  
நார்ட்டன் சில காலம் சென்னையின் கரோனராக (Coroner - துர் மரணம் அடைந்தவர்களின் பிரேத விசாரணையை நடத்துபவர்) இருந்தார். அப்போது, ‘அந்தப் பதவிக்கான திறன் நார்ட்டனிடம் இல்லை. அவரது தந்தையின் பெயரால்தான் அவருக்கு இந்தப் பதவியே கிடைத்தது’ என்கிற ரீதியில் ‘தி இந்து’வில் விமர்சனம் வந்தது. 

அது அப்படியில்லை என்பதை நார்ட்டன் நிரூபிக்க, ‘தி இந்து’ ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயரையும், அதில் பணியாற்றிய வீரராகவசாரியையும் நீதிமன்றத்துக்கு இழுக்க வேண்டியதாகப் போயிற்று. தன் மீது அவர்கள் இருவருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பகையோ கோபமோ இல்லை என்பதை உணர்ந்துகொண்ட நார்ட்டன், அவர்களிடம் மறுப்பு வெளியிடச் சொன்னார். அவர்களும் வெளியிட்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் நார்ட்டனுக்கு நெருக்கமான நண்பர்களாகிவிட்டார்கள். 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ‘தி இந்து’வில் ‘சென்டினல்’ எனும் புனைப்பெயரில் ‘ஒல்ல பொட்ரிடா’ எனும் பத்தியை எழுதத் தொடங்கினார் நார்ட்டன். அதில் அன்றைய ஆங்கிலேயே அதிகாரிகள் பலரைப் பற்றி, அரசின் நடவடிக்கைகளைப் பற்றி அங்கதத் தொனியில் கட்டுரைகள் எழுதினார். அது பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டது. அதைப் படித்த அதிகாரிகள் பலர் அவர் மீது எரிச்சலுற்றார்கள். ஆனால் பல ஆண்டுகளாக அந்த ‘சென்டினல்’ யார் என்பது மர்மமாகவே இருந்து வந்தது. அதற்கான விடையும் ‘தி இந்து’ மூலமாகவே கிடைத்தது. எப்படி? 

‘தி இந்து’வில் உதவி ஆசிரியராக இருந்த கே.சுப்பா ராவ் தன்னுடைய ‘ரிவைவ்ட் மெமோரீஸ்’ எனும் சுயசரிதையில் சென்டினலைக் காட்டிக் கொடுத்துவிட்டார்!

1 comment: