Thursday, August 30, 2018

அறிவியல் புனைவுகளின் ஆரம்பப்புள்ளி!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 26 ஆகஸ்ட் 2018


உலகில் உள்ள உயிரினங்களில், மனித இனம்தான் உயர்ந்தது என்ற சிந்தனைப் போக்கு, நெருப்பைக் கண்டுபிடித்த காலத்திலிருந்து தொடர்கிறது. ‘தன்னால் எல்லாம் முடியும்’ என்ற நினைப்பில் மனிதர்கள் என்னென்னவோ பைத்தியக்காரத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்கள். ‘எக்ஸ் ரே கண்ணாடி’, ‘டைம் மெஷின்’, ‘மரணத்தைத் தடுக்கும் மருந்து’ எனப் பலவற்றை இந்த வரிசையில் நம்மால் அடுக்கிவிட முடியும்.

அந்த வரிசையில் வைக்கும்படியான இன்னொரு ‘பைத்தியக்காரத்தனம்’தான் மனிதரைவிட இன்னொரு மேலான, சக்தி வாய்ந்த ஒரு உயிரினத்தை மனிதர்களே உருவாக்கும் செயல். அது ரோபோ அல்ல. மனிதர்களின் உணர்வுகளைக் கொண்ட, இன்னொரு ‘உயர்ந்த’ (8 அடி உயரம்!) மனிதன். அரக்கனின் உடலமைப்பைக் கொண்ட, மனிதர்களைக் கொல்லும் ஒரு ‘மனிதன்!’ 

‘என்ன இது பைத்தியக்காரத்தனமான சிந்தனை’ என்று, இன்று நாம் யோசிக்கலாம். ஆனால், உலகில் அறிவியல் புனைகதைகள் தோன்றுவதற்கு அந்தச் சிந்தனைதான் 1816-ல் ஆரம்ப விதையாக விழுந்தது. எந்த ஒரு ‘அறிவியல்’ சிந்தனையும் முதன்முதலில் ‘பைத்தியக்காரத்தனமான’ சிந்தனையாகக் கருதப்பட்டிருப்பதை வரலாறு நெடுகிலும் நம்மால் காண முடியுமே!

படைப்புக்கு வயது 200!

அறிவியல் கண்டுபிடிப்புகளில், காலந்தோறும் பெண்களின் பங்களிப்பு, இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. ஆனால், ‘அறிவியல் புனைகதை’ எனும் பிரிவு, இலக்கிய உலகில் தோன்றுவதற்கு மேரி ஷெல்லி எனும் பெண்தான் காரணமாக இருந்திருக்கிறார்.

1797-ம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று லண்டனில் பிறந்தார் மேரி வால்ஸ்டோன்கிராஃப்ட் காட்வின். அவருடைய தந்தை வில்லியம் காட்வின், அரசியல் தத்துவவியலாளர். தாய் வால்ஸ்டோன்கிராஃப்ட், உலகறிந்த பெண்ணியவாதி. தன் தந்தையின் அரசியல் சிந்தனைகளைப் பின்தொடர்ந்த பி.பி.ஷெல்லி எனும் கவிஞரைக் காதலித்த மேரி, 1814-ல் அவரைத் திருமணம் செய்துகொண்டு, மேரி ஷெல்லி ஆனார்.

இது அவரது 221-வது பிறந்த ஆண்டு. மட்டுமல்ல, 1816-ல் எழுத ஆரம்பித்து, 1818-ல் வெளிவந்த ‘ஃபிராங்கன்ஸ்டீன்’ எனும் அவரது முதல் நாவலுக்கு, இந்த ஆண்டு 200-வது வயது!


மனித ஞானத்தின் எல்லை

ஜெனிவாவைப் பூர்வீகமாகக் கொண்ட, இத்தாலிய இளம் விஞ்ஞானி, விக்டர் ஃபிராங்கன்ஸ்டீன். சிறு வயதிலிருந்தே, இயற்கைக்கு மாறான விந்தைகளைப் பற்றியும், அமானுஷ்யமான சிந்தனைகளைப் பற்றியும் படித்துவந்த விக்டர், இறந்துபோன மனிதர்களின் உடல் உறுப்புகளைக் கொண்டு, மனித உருவமைப்பில், மனிதரைவிட சக்தி வாய்ந்த ஒரு உயிரினத்தை உருவாக்குகிறான். ஆனால், ‘மனித உருவமைப்பு’ எனும் முயற்சி தோல்வியடைய, ‘சக்தி வாய்ந்த உயிரினம்’ எனும் முயற்சி வெற்றி பெறுகிறது.

அகோரமான அந்த உயிரினம் உயிர் பெற்று எழ, அதைக் காணச் சகியாமல், தன் ஆய்வகத்திலிருந்து ஓடிவிடுகிறான் விக்டர். அந்த உயிரினமோ, மனித அன்பு கிடைக்காமல், எங்கு சென்றாலும் விரட்டப்பட, மனிதர்களைப் பழி வாங்க ஆரம்பிக்கிறது. அதாவது, தன்னை உருவாக்கிய விக்டர் மற்றும் அவனைச் சார்ந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் கொல்ல ஆரம்பிக்கிறது.

தான், மனிதர்களைக் கொல்லாமல் இருக்க வேண்டுமென்றால், தன்னைப் போலவே இன்னொரு உயிரினத்தை உருவாக்கச் சொல்லி விக்டருக்குக் கட்டளையிடுகிறது. ஆனால் விக்டர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அவனுடைய சகோதரர்கள், நண்பர்கள், மனைவி என அனைவரும் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள்.

அந்தக் கொலைகளுக்குப் பழிவாங்கவும், அந்த அரக்கனை அழிக்கவும் சபதம் எடுக்கிறான் விக்டர். அவனால் அது முடிந்ததா என்பது நாவலின் மீதிக் கதை.

‘உலகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா…’ என்று இந்த நாவல், நம்முள் கேள்வி எழுப்புகிற அதேநேரம், ‘மனிதரின் விஞ்ஞான ஞானம் என்பது ஒரு எல்லைக்கு உட்பட்டதுதான். இயற்கைக்கு மாறான எந்த ஒரு விஷயத்தை மனிதர்கள் செய்தாலும் அது அழிவையே கொண்டு வரும்’ எனும் உண்மையையும் எடுத்துக் கூறுகிறது.

பருவநிலை மாற்றத்தின் இலக்கியம்

1816-ல், சுவிட்சர்லாந்துக்குச் சுற்றுலா வருகிறார்கள் ஷெல்லி தம்பதியினர். அங்கு, இன்னொரு கவிஞர், பைரனின் இல்லத்தில் தங்கு கிறார்கள். அதற்கு முந்தைய ஆண்டுதான் இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் தம்போரா எனும் எரிமலை வெடித்தது. அப்போது ஏற்பட்ட வெப்பம் காரணமாக, பருவநிலையில் சில மாறுதல்கள் ஏற்பட்டன.

இதனால் 1816-ல் கோடைக்காலம் என்பதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மேற்கு ஐரோப்பா, இங்கிலாந்து என வடக்கு அரைக்கோளம் முழுவதும் அந்த ஆண்டு, மழையாகப் பொழிந்து தள்ளியது. இதனால் அந்த வருடத்தை ‘கோடை இல்லாத வருடம்’ (இயர் வித்அவுட் எ சம்மர்) என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதனால், கோடையைக் கழிக்க வந்த ஷெல்லி தம்பதியினரும், பைரன் மற்றும் அவருடைய நண்பர் ஜான் வில்லியம் பொலிடோரி ஆகிய நால்வரும் வீட்டுக்குள்ளேயே தங்கள் பொழுதைப் போக்க வேண்டியிருந்தது. அந்த மழைக்கால இரவில், மின்சாரமும் போனது. அப்போது, அவர்கள் நால்வரும், நேரத்தைக் கடத்த, ஆளுக்கு ஒரு பேய்க் கதையைச் சொல்ல வேண்டும் என்றும், யாருடைய கதை அருமையாக இருக்கிறது என்று பார்க்கலாம் எனவும் ஒரு போட்டி நடைபெற்றது. மற்ற மூவரும் ஒவ்வொரு கதை சொல்ல, மேரி ஷெல்லிக்கு எந்தக் கதையும் தோன்றவேயில்லை.

அடுத்த சில நாட்களில், இறந்துபோன ஒருவருக்கு மருத்துவர் ஒருவர் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவது போன்று, அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவுதான் பின்னாளில் ‘ஃபிராங்கன்ஸ்டீன்’ என்ற நாவலாக உருவானது.

இந்த நாவலைப் பற்றி ‘தி கிரேட் டிரேஞ்ச்மெண்ட்’ எனும் பருவநிலை மாற்றம் தொடர்பான தனது நூலில், எழுத்தாளர் அமிதவ் கோஷ் இப்படிச் சொல்கிறார்: “இதுபோன்ற இயற்கைக்கு மாறான கதைகளை எழுதுவதற்கு, எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம்தான் காரணம் என்று அப்போது அந்த நால்வருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சுற்றுச்சூழலில் ஏற்படும் ஒரு பேரழிவு, புனைவு இலக்கியம் உருவாவதற்கு எப்படியான வினையூக்கியாக இருக்கும் என்பதற்கு இந்த நாவல் ஒரு சான்று” என்கிறார்.

பருவநிலை மாற்றம் குறித்த புனைவு இலக்கியங்களில் முக்கியமான புத்தக மாகவும் இன்று அது நிலைபெற்றுவிட்டது. மேரி ஷெல்லியும் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் அறிவியலிலும் இடம் பிடித்துவிட்டார்!

நன்றி: இந்து தமிழ் (பெண் இன்று)

No comments:

Post a Comment