ந.வினோத்குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 14 ஆகஸ்ட் 2018
‘அறிவே
ஆயுதம்’ என்பார்கள் சான்றோர்கள். விஞ்ஞானிகளிடம் கேட்டால் ‘அறிவியலே
ஆயுதம்’ என்பார்கள். அந்த ஆயுதத்தை வன்முறைக்குப் பயன்படுத்தாமல்,
வளர்ச்சிக்காகப் பயன்படுத்திய மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று!
‘இந்தியாவின்
அறிவியல்’ என்று தொடங்கினாலே, இன்றிருக்கும் தலைமுறையினர் பலருக்கும்
‘மங்கள்யான்’ மட்டும்தான் உடனடியாக நினைவுக்கு வரும். ஆனால், அது மட்டுமே
நம் நாட்டு விஞ்ஞானிகள் செய்த சாதனை அல்ல.
கல்விப்
புலத்தில் ‘பேஸிக் லைஃப் சயின்சஸ்’ என்று ஒரு சொற்பதம் உண்டு. அதாவது,
இயற்பியல், வேதியியல், தாவரவியல் போன்ற மிக அடிப்படையான அறிவியல் துறைகளை
இப்படி அழைப்பார்கள். இன்றைக்கு, நாம் கண்டிருக்கும் வளர்ச்சி
அனைத்துக்கும், இந்த அடிப்படையான அறிவியல் துறைகள்தான் அடித்தளமாக
அமைந்திருக்கின்றன. ஆனால், இன்றைக்குப் பல கல்லூரிகளில் மேற்கண்ட
துறைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டன.
அறிவியல் ‘வரலாற்று’ புத்தகம்
அந்த
அடிப்படை அறிவியல் துறைகளால் இந்தியா செய்த, செய்து வருகிற சாதனைகளைத்
திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாகச் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது
‘இந்தியன் சயின்ஸ்’ எனும் புத்தகம். ‘இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாடெமி’
வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்தில், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு,
கடந்த 70 ஆண்டுகளில் அது மேற்கொண்ட அடிப்படையான, முக்கியமான ஆனால் பரவலாக
அறியப்படாத 11 அறிவியல் சாதனைகளைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கட்டுரைகளை பிரபல அறிவியல் இதழாளர் தினேஷ் ஷர்மா, அதிதா ஜோஷி, கவிதா
திவாரி மற்றும் நிஸ்ஸி நெவில் ஆகிய நான்கு பேர் எழுதியுள்ளனர்.
அந்த
11 அறிவியல் சாதனைகளில், நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய சாதனை
ஒன்று, இந்த 71-ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படும் நேரத்துக்கு மிகப்
பொருத்தமாக இருக்கும். தேர்தலில் பயன்படுத்தப்படும் ‘மை’தான் அந்தச் சாதனை!
‘மை’ பூசிய விரல்கள்
‘மிகப்
பெரிய ஜனநாயகத் திருவிழா’ என்று உலகின் பல நாடுகளால் புகழப்படும்
பெருமைக்கு உரியவை, இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள். 1951-52-க்கு
இடைப்பட்ட காலத்தில்தான் நாட்டின் முதல் தேர்தல் நடைபெற்றது. அப்போதுதான்
வாக்காளரின் ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் ‘அழியா மை’ முதன்முதலாகப்
பயன்படுத்தப்பட்டது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.
அழியா
மைய்யின் பயன்பாடு, 1940-களிலிருந்து தொடங்குகிறது. சுதந்திரத்துக்குப்
பிறகு நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, 1946-ல் இந்திய
மாகாணத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, ஓட்டுப் போட்டதற்கு அடையாளமாக,
வாக்காளர்களின் பெருவிரலில் ‘மை’ வைக்கும் வழக்கம் தொடங்கியது.
இந்திய
மையை உருவாக்கிய பெருமைக்கு உரியவர், சலிமுஸ்ஸாமன் சித்திக்கி என்ற
வேதியியலாளர் ஆவார். அப்போது ‘இந்தியன் கவுன்சில் ஆஃப் சயிண்டிஃபிக் அண்ட்
இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்’சின் இயக்குநராக இருந்த விஞ்ஞானி சாந்தி ஸ்வரூப்
பட்நாகர், கேட்டுக்கொண்டதன் பேரில், ‘அழியா மை’ தயாரிப்பதற்கான வேதியியல்
கலவை ஒன்றை உருவாக்கினார் சித்திக்கி.
மாற்று இல்லாத மை
அந்த
மையைப் பெரிய அளவில் தயாரிக்கும் பொறுப்பு, 1949-ல், ‘தேசிய இயற்பியல்
ஆய்வக’த்திடம் ஒப்படைக்கப்பட்டது. சில காலத்துக்குப் பிறகு, அந்த ஆய்வகம்
வேறு சில ஆய்வுகளில் தன் கவனத்தைச் செலுத்த, இந்த மை தயாரிப்பதற்கான
அனுமதியை கர்நாடக மாநிலத்தில் உள்ள ‘மைசூர் பெயிண்ட்ஸ்’ எனும்
நிறுவனத்துக்குக் கைமாற்றியது. அப்போதிருந்து இப்போது வரை அந்த நிறுவனம்
மட்டுமே இந்த மையைத் தயாரித்து வருகிறது. அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில்,
குறிப்பிட்ட சதவீதம் மேற்கண்ட ஆய்வகத்துக்குச் செல்கிறது. இந்த நிறுவனம்
தயாரிக்கும் மை, சுமார் 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
என்னதான்
இந்த நிறுவனம் மட்டுமே இந்த மையைத் தயாரிக்கிறது என்றாலும், இந்தியத்
தேர்தல் ஆணையம், கண்ணை மூடிக் கொண்டு மையை வாங்கிவிடுவதில்லை. ஒவ்வொரு
தேர்தலுக்கு முன்பும், அந்த நிறுவனத்திடமிருந்து 10 மில்லி லிட்டர் அளவு
மையை வாங்கி, அதை அந்த ஆய்வகத்திடம் கொடுத்து மையின் ‘அழியாத்தன்மை’
பரிசோதித்துப் பார்க்கப்பட்ட பிறகே, நிறுவனத்திடமிருந்து மை வாங்குகிறது.
‘இந்த
மை சீக்கிரமே அழிந்துவிடும்’ என்று வந்த விமர்சனங்களுக்காக, நம்
முன்னோர்கள் என்ன மாதிரியான மாற்றுகளை யோசித்தார்கள் என்பதைத் திரும்பிப்
பார்த்தால் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. அதில் ஒரு மாற்று,
‘சிற்றம்மைக்கு ஊசி போட்டவர்களுக்கு மட்டுமே வாக்குச் சீட்டு வழங்க
வேண்டும்’ என்பதாக இருந்தது. ஏனென்றால், அந்த ஊசி போட்ட தழும்பு அவ்வளவு
சீக்கிரத்தில் அழியாது என்பதால்! இந்த ‘ஐடியா’, சிற்றம்மைக்குத் தடுப்பூசி
போட வேண்டும் என்ற திட்டத்துக்கு உதவியாக இருந்தாலும், எப்போதெல்லாம்
சிற்றம்மை நோய் வருகிறதோ அப்போதெல்லாம் தேர்தல் நடத்த முடியாது என்பதால்,
இந்த மாற்று யோசனை நடைமுறைப்படுத்தப்படவில்லை. வழக்கம் போல, விரல் மையே
வென்றது!
தேர்தல்
மை கண்டுபிடித்தவர் ஓர் இஸ்லாமியர் (அவர் பின்னாளில் பாகிஸ்தானுக்குக்
குடியேறி, அந்நாட்டு ‘அறிவியலின் தந்தை’ என்று புகழ் பெற்றார்) என்று நாம்
சொல்லும் அதே நேரம், நம் நாட்டில் உள்ள இஸ்லாமியர்களை ‘பாகிஸ்தானுக்குப்
போ’கச் சொல்கிற நிலைமையும் இருப்பது, மிகப்பெரிய முரண், இல்லையா?
இந்தப் புத்தகத்தை பி.டி.எஃப். வடிவில் இலவசமாகத் தரவிறக்க: http://www.insaindia.res.in/scroll_news_pdf/ISTI.pdf
நன்றி: தி இந்து (வெற்றிக்கொடி - சிறு மாறுதல்களுடன்)
lots of informations sir
ReplyDeleteநல்ல தகவல்கள் வினோத்... சிறந்த புத்தகத்தையும் அறிமுகபடுத்தியுள்ளாய்.நன்றி
ReplyDeleteGood and informative..thanks for it ..
ReplyDelete