ந.வினோத் குமார்
புகழ்பெற்ற ஒருவரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பது புதிதல்ல. வெவ்வேறு
காலகட்டத்தில், வெவ்வேறு இயக்குநர்களால் குறிப்பிட்ட ஒரு மனிதரின் வாழ்க்கையைப்
படமாக எடுப்பதும் புதிதல்ல. ஆனால், ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த இரண்டு இயக்குநர்கள்,
ஒரே மனிதரைப் பற்றி, வேறு வேறு மொழிகளில் படம் எடுப்பது முற்றிலும் புதிது. இந்தப்
புதுமைக்குக் காரணமான அந்த நபர்… பிர்ஸா முண்டா..!
இந்த ஆண்டு அக்டோபர் மாதம், பிர்ஸா முண்டாவைப் பற்றி முண்டாக்கள் பேசும்
‘முண்டாரி’ மொழியிலேயே ஒரு படத்தை இயக்கப் போவதாக ‘அறம்’ புகழ், கோபி நயினார்
தெரிவித்திருந்தார். அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கப் போவதாகவும் தகவல்
வெளியானது.
அதற்கு அடுத்த மாதமே, பிர்ஸா முண்டாவின் பிறந்தநாள் (நவம்பர் 15) அன்று,
அவரைப் பற்றி இந்தியில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார் இயக்குநர்
பா.ரஞ்சித்.
இந்த இருவருமே மேற்கு வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி, பிர்ஸா முண்டாவின்
வாழ்க்கையைப் பற்றி ‘ஆரண்யேர் அதிகார்’ எனும் தலைப்பில் எழுதிய நாவலை அடிப்படையாக
வைத்துத்தான் திரைக்கதையை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த நாவல்
1977-ம் ஆண்டு வெளியாகி, 1979-ம் ஆண்டு, மகாஸ்வேதா தேவிக்கு சாகித்ய அகாடெமி
விருதைப் பெற்றுத் தந்தது. பிறகு, இந்த நாவலை நேரடியாக வங்க மொழியிலிருந்து
தமிழுக்கு ‘காட்டில் உரிமை’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார் பிரபல
மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி.
***
அது அன்றைய வங்காள மாகாணம். அங்கு உலி ஹாத்து என்கிற கிராமத்தில் 1875-ம்
ஆண்டு, சுகானா முண்டா – கர்மி தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் பிர்ஸா
முண்டா. அந்தப் பகுதி இன்றைய ஜார்க்கண்ட மாநிலத்தில் உள்ளது. அவரது பெற்றோர்,
விவசாயக் கூலிகளாக இருந்தனர்.
பிர்ஸாவின் ஆரம்பக் கால வாழ்க்கை, சல்கட் எனும் கிராமத்தில் கழிந்தது. இதர
முண்டா சிறுவர்களைப் போலவே, மாடு மேய்ப்பதும், குழல் ஊதுவதும், மண்ணில் புரண்டு
விளையாடுவதும் என அவரது இளமைக் காலம் சென்றது. வாலிபனாக வளர்ந்து வந்தபோது,
‘டுயிலா’ எனும் இசைக் கருவியையும் அவர் வாசிக்கப் பழகியதோடு, மல்யுத்த
விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.
ஊரிலும் வீட்டிலும் நிலவிய வறுமை, அவரை அயுபாட்டு எனும் கிராமத்துக்கு
அழைத்துச் சென்றது. அங்கு ஜெய்பால் நாக் என்பவர் நடத்தி வந்த பள்ளி ஒன்றில் அவர்
சேர்ந்து தொடக்கக் கல்வியைக் கற்றார். படிப்பில் படு சுட்டியாக விளங்கிய பிர்ஸாவை
கிறிஸ்த்துவ மதத்துக்கு மதம் மாறச் சொன்னார் ஜெய்பால் நாக். காரணம், அப்போதுதான்,
பிர்ஸாவால் ஜெர்மன் மிஷனரிகள் நடத்தி வந்த பள்ளியில் சேர்ந்து, மேற்படிப்புப்
படிக்க முடியும். கல்வி மீது கொண்டிருந்த ஆர்வத்தால், பிர்ஸாவும் மதம் மாறி, அந்தப்
பள்ளியில் சேர்ந்தார்.
அந்தப் பள்ளி, சாய்பாஸா எனும் இடத்தில் அமைந்திருந்தது. அங்கு ‘சர்தார்’
எனும் இனக்குழுவினர் ஆங்கிலேய அதிகாரிகள், மிஷனரிகள் ஆகியோருக்கு எதிராகப் போராடி
வந்தனர். அந்தப் போராட்டம், இளம் பிர்ஸாவின் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியது. மேலும், முண்டா போன்ற ஆதிவாசிகள் மீது ஆங்கிலேயர்கள் மேற்கொண்டு
வந்த ஒடுக்குமுறையைப் பற்றியும் அவருக்குப் பல விஷயங்கள் விளங்கின. தான் படித்த
பள்ளியிலும் சாதிய ரீதியானப் பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுவதைக் கண்டு மனம்
நொந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத குருமார்களிடம் அவர் வாக்குவாதம்
நடத்தினார். இதனால், அவர் தனது பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட
வேண்டியதாயிற்று. பள்ளியிலிருந்து வெளிவந்தது முதல், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட
வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் மேலோங்கியிருந்தது.
ஆங்கிலேயர்களைத் தனி ஒருவனாக இருந்து எதிர்த்துவிட முடியாது என்பது
பிர்ஸாவுக்குப் புரிந்தது. போராட்டத்துக்கு ஆட்களைத் திரட்ட வேண்டும். அவ்வாறு
ஆட்களைத் திரட்ட, முதலில் அவர்களின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஆங்கிலேயர்களுக்கும் அவர்களுக்குத் துணைபோகும் ஜமீந்தார்களுக்கும் தாங்கள்
அடிமையாக இருக்கிறோம் என்பதை முண்டாக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இதைச்
சாத்தியப்படுத்த வேண்டுமானால், அவர்களை மத ரீதியாக மடைமாற்ற வேண்டும் என்று
கருதினார்.
அப்படித்தான் உருவானது, ‘பிர்சாயித்’ எனும் மதம். அதில் ஆர்வமுடன் பலர்
இணைந்தனர். அவர்களுக்குத் தாங்கள் முண்டா என்பதில் கர்வம்கொள்ள வேண்டும் என்று
அவர் போதித்தார். காடுகளும் விளைநிலங்களும் நதிகளும் எல்லோருக்கும் பொதுவானது
என்றும், அவற்றை முன் வைத்து, ஆங்கிலேயர்களோ ஜமீந்தார்களோ பத்திரத்தில் கைநாட்டுப்
பெற்றுக்கொண்டு தங்களை அடிமைப்படுத்திவிட முடியாது என்றும் அவர்களுக்கு
உணர்த்தினார். பள்ளியில் தான் பெற்ற அறிவைக் கொண்டு, முண்டாக்கள் பின்பற்றி வந்த
பயனில்லாத மருத்துவ முறைகளையும், கால்நடைகளைப் பலி கொடுப்பதையும், பேய், பூத
மூடநம்பிக்கைகளையும் பிர்ஸா அகற்ற முயன்றார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.
இந்தக் காரணங்களால் அவர் ‘தர்த்தி ஆபா’ என்று அழைக்கப்பட்டார். அதாவது,
‘பூமியின் தந்தை’ எனக் கடவுள் ஸ்தானத்தில் வைத்து அவரை முண்டாக்கள் வணங்கினர்.
கூட்டத்தைத் திரட்டியாகிவிட்டது, ஆங்கிலேயர்களை எதிர்க்க இதுதான் சரியான நேரம்
என்று முடிவு செய்தார் பிர்ஸா. உதித்தது, ‘உல்குலான்!’
‘உல்குலான்’ என்றால் புரட்சி என்று பொருள். மறைந்திருந்து தாக்கும்
‘கெரில்லா’ போர் முறையைப் பின்பிற்றினார்கள் முண்டாக்கள். அதில் பல நூறு போலீஸார்
கொல்லப்பட்டனர். பிர்ஸாவைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்கு 500 ரூபாய் சன்மானம்
வழங்குவதாக அறிவித்தது பிரிட்டிஷ் அரசு. பணத்துக்கு ஆசைப்பட்டு, முண்டா இனத்தைச்
சேர்ந்த சில நம்பிக்கைத் துரோகிகள் பிர்ஸாவைக் காட்டிக்கொடுத்தனர். 1900-ம் ஆண்டு
மார்ச் 3-ம் தேதி கைது செய்யப்பட்ட அவர், ஜூன் 9-ம் தேதி சிறையில், காலராவால்
இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், காலரா தாக்கியதற்கான எந்த அறிகுறியும்
பிர்ஸாவிடம் தென்படவில்லை. பிரிட்டிஷார் செய்த எத்தனையோ சூழ்ச்சிகளில் இதுவும்
ஒன்று. எனவே, அவரது இறப்புக்கு உண்மையான காரணம் என்ன என்பது இன்று வரை மர்மமாகவே
இருக்கிறது!
அந்த மாவீரனின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும், அவரது பிறந்த தினம் ஜார்க்கண்ட்
மாநிலத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் இதர
விடுதலைப் போராட்ட வீரர்களுடன் இவரது படமும் உள்ளது. இந்தப் பெருமையை அடைந்த ஒரே
ஆதிவாசித் தலைவர் பிர்ஸா முண்டா மட்டும்தான்.
பிர்ஸா இறந்தபோது அவருக்கு வயது 25. கால் நூற்றாண்டுக் காலமே வாழ்ந்த
ஒருவன், நூற்றாண்டு கடந்தும் கொண்டாடப்படுகிறான் என்றால், அவன்தானே உண்மையான
தலைவன்..?
நன்றி: காமதேனு (03/12/2018), மகாஸ்வேதா தேவி படம்: creativeyatra.com