Showing posts with label forest. Show all posts
Showing posts with label forest. Show all posts

Tuesday, January 15, 2019

யார் அந்த பிர்ஸா முண்டா..?

ந.வினோத் குமார்

புகழ்பெற்ற ஒருவரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பது புதிதல்ல. வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு இயக்குநர்களால் குறிப்பிட்ட ஒரு மனிதரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பதும் புதிதல்ல. ஆனால், ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த இரண்டு இயக்குநர்கள், ஒரே மனிதரைப் பற்றி, வேறு வேறு மொழிகளில் படம் எடுப்பது முற்றிலும் புதிது. இந்தப் புதுமைக்குக் காரணமான அந்த நபர்… பிர்ஸா முண்டா..!

இந்த ஆண்டு அக்டோபர் மாதம், பிர்ஸா முண்டாவைப் பற்றி முண்டாக்கள் பேசும் ‘முண்டாரி’ மொழியிலேயே ஒரு படத்தை இயக்கப் போவதாக ‘அறம்’ புகழ், கோபி நயினார் தெரிவித்திருந்தார். அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

அதற்கு அடுத்த மாதமே, பிர்ஸா முண்டாவின் பிறந்தநாள் (நவம்பர் 15) அன்று, அவரைப் பற்றி இந்தியில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.


இந்த இருவருமே மேற்கு வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி, பிர்ஸா முண்டாவின் வாழ்க்கையைப் பற்றி ‘ஆரண்யேர் அதிகார்’ எனும் தலைப்பில் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்துத்தான் திரைக்கதையை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த நாவல் 1977-ம் ஆண்டு வெளியாகி, 1979-ம் ஆண்டு, மகாஸ்வேதா தேவிக்கு சாகித்ய அகாடெமி விருதைப் பெற்றுத் தந்தது. பிறகு, இந்த நாவலை நேரடியாக வங்க மொழியிலிருந்து தமிழுக்கு ‘காட்டில் உரிமை’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார் பிரபல மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி.

***
அது அன்றைய வங்காள மாகாணம். அங்கு உலி ஹாத்து என்கிற கிராமத்தில் 1875-ம் ஆண்டு, சுகானா முண்டா – கர்மி தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் பிர்ஸா முண்டா. அந்தப் பகுதி இன்றைய ஜார்க்கண்ட மாநிலத்தில் உள்ளது. அவரது பெற்றோர், விவசாயக் கூலிகளாக இருந்தனர்.

பிர்ஸாவின் ஆரம்பக் கால வாழ்க்கை, சல்கட் எனும் கிராமத்தில் கழிந்தது. இதர முண்டா சிறுவர்களைப் போலவே, மாடு மேய்ப்பதும், குழல் ஊதுவதும், மண்ணில் புரண்டு விளையாடுவதும் என அவரது இளமைக் காலம் சென்றது. வாலிபனாக வளர்ந்து வந்தபோது, ‘டுயிலா’ எனும் இசைக் கருவியையும் அவர் வாசிக்கப் பழகியதோடு, மல்யுத்த விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.

ஊரிலும் வீட்டிலும் நிலவிய வறுமை, அவரை அயுபாட்டு எனும் கிராமத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கு ஜெய்பால் நாக் என்பவர் நடத்தி வந்த பள்ளி ஒன்றில் அவர் சேர்ந்து தொடக்கக் கல்வியைக் கற்றார். படிப்பில் படு சுட்டியாக விளங்கிய பிர்ஸாவை கிறிஸ்த்துவ மதத்துக்கு மதம் மாறச் சொன்னார் ஜெய்பால் நாக். காரணம், அப்போதுதான், பிர்ஸாவால் ஜெர்மன் மிஷனரிகள் நடத்தி வந்த பள்ளியில் சேர்ந்து, மேற்படிப்புப் படிக்க முடியும். கல்வி மீது கொண்டிருந்த ஆர்வத்தால், பிர்ஸாவும் மதம் மாறி, அந்தப் பள்ளியில் சேர்ந்தார்.

அந்தப் பள்ளி, சாய்பாஸா எனும் இடத்தில் அமைந்திருந்தது. அங்கு ‘சர்தார்’ எனும் இனக்குழுவினர் ஆங்கிலேய அதிகாரிகள், மிஷனரிகள் ஆகியோருக்கு எதிராகப் போராடி வந்தனர். அந்தப் போராட்டம், இளம் பிர்ஸாவின் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், முண்டா போன்ற ஆதிவாசிகள் மீது ஆங்கிலேயர்கள் மேற்கொண்டு வந்த ஒடுக்குமுறையைப் பற்றியும் அவருக்குப் பல விஷயங்கள் விளங்கின. தான் படித்த பள்ளியிலும் சாதிய ரீதியானப் பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுவதைக் கண்டு மனம் நொந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத குருமார்களிடம் அவர் வாக்குவாதம் நடத்தினார். இதனால், அவர் தனது பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட வேண்டியதாயிற்று. பள்ளியிலிருந்து வெளிவந்தது முதல், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் மேலோங்கியிருந்தது.


ஆங்கிலேயர்களைத் தனி ஒருவனாக இருந்து எதிர்த்துவிட முடியாது என்பது பிர்ஸாவுக்குப் புரிந்தது. போராட்டத்துக்கு ஆட்களைத் திரட்ட வேண்டும். அவ்வாறு ஆட்களைத் திரட்ட, முதலில் அவர்களின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆங்கிலேயர்களுக்கும் அவர்களுக்குத் துணைபோகும் ஜமீந்தார்களுக்கும் தாங்கள் அடிமையாக இருக்கிறோம் என்பதை முண்டாக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இதைச் சாத்தியப்படுத்த வேண்டுமானால், அவர்களை மத ரீதியாக மடைமாற்ற வேண்டும் என்று கருதினார்.

அப்படித்தான் உருவானது, ‘பிர்சாயித்’ எனும் மதம். அதில் ஆர்வமுடன் பலர் இணைந்தனர். அவர்களுக்குத் தாங்கள் முண்டா என்பதில் கர்வம்கொள்ள வேண்டும் என்று அவர் போதித்தார். காடுகளும் விளைநிலங்களும் நதிகளும் எல்லோருக்கும் பொதுவானது என்றும், அவற்றை முன் வைத்து, ஆங்கிலேயர்களோ ஜமீந்தார்களோ பத்திரத்தில் கைநாட்டுப் பெற்றுக்கொண்டு தங்களை அடிமைப்படுத்திவிட முடியாது என்றும் அவர்களுக்கு உணர்த்தினார். பள்ளியில் தான் பெற்ற அறிவைக் கொண்டு, முண்டாக்கள் பின்பற்றி வந்த பயனில்லாத மருத்துவ முறைகளையும், கால்நடைகளைப் பலி கொடுப்பதையும், பேய், பூத மூடநம்பிக்கைகளையும் பிர்ஸா அகற்ற முயன்றார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.

இந்தக் காரணங்களால் அவர் ‘தர்த்தி ஆபா’ என்று அழைக்கப்பட்டார். அதாவது, ‘பூமியின் தந்தை’ எனக் கடவுள் ஸ்தானத்தில் வைத்து அவரை முண்டாக்கள் வணங்கினர். கூட்டத்தைத் திரட்டியாகிவிட்டது, ஆங்கிலேயர்களை எதிர்க்க இதுதான் சரியான நேரம் என்று முடிவு செய்தார் பிர்ஸா. உதித்தது, ‘உல்குலான்!’


‘உல்குலான்’ என்றால் புரட்சி என்று பொருள். மறைந்திருந்து தாக்கும் ‘கெரில்லா’ போர் முறையைப் பின்பிற்றினார்கள் முண்டாக்கள். அதில் பல நூறு போலீஸார் கொல்லப்பட்டனர். பிர்ஸாவைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்குவதாக அறிவித்தது பிரிட்டிஷ் அரசு. பணத்துக்கு ஆசைப்பட்டு, முண்டா இனத்தைச் சேர்ந்த சில நம்பிக்கைத் துரோகிகள் பிர்ஸாவைக் காட்டிக்கொடுத்தனர். 1900-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி கைது செய்யப்பட்ட அவர், ஜூன் 9-ம் தேதி சிறையில், காலராவால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், காலரா தாக்கியதற்கான எந்த அறிகுறியும் பிர்ஸாவிடம் தென்படவில்லை. பிரிட்டிஷார் செய்த எத்தனையோ சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. எனவே, அவரது இறப்புக்கு உண்மையான காரணம் என்ன என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கிறது!

அந்த மாவீரனின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும், அவரது பிறந்த தினம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் இதர விடுதலைப் போராட்ட வீரர்களுடன் இவரது படமும் உள்ளது. இந்தப் பெருமையை அடைந்த ஒரே ஆதிவாசித் தலைவர் பிர்ஸா முண்டா மட்டும்தான்.

பிர்ஸா இறந்தபோது அவருக்கு வயது 25. கால் நூற்றாண்டுக் காலமே வாழ்ந்த ஒருவன், நூற்றாண்டு கடந்தும் கொண்டாடப்படுகிறான் என்றால், அவன்தானே உண்மையான தலைவன்..?

நன்றி: காமதேனு (03/12/2018), மகாஸ்வேதா தேவி படம்: creativeyatra.com

Wednesday, March 21, 2018

அந்த வனம் இன்னும் சாய்ந்துவிடவில்லை!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 11 மார்ச் 2018


உலக வரலாற்றில் மிகவும் முக்கியமான பத்தாண்டு என்று 1960-களைச் சொல்லலாம். அப்போதுதான் ரேச்சல் கார்சன் எழுதிய ‘மவுன வசந்தம்’ வெளிவந்தது. உலக அளவில் சூழலியல் சார்ந்து வெளிவந்த முதல் படைப்பு. ‘காட்டுயிர்ப் பாதுப்புக்கான பன்னாட்டு நிதியம்’ (டபிள்யு.டபிள்யு.எஃப்), ‘கிரீன்பீஸ்’ போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாகப் பணியாற்றும் அமைப்புகள் தொடங்கப்பட்டன. அதே பத்தாண்டில்தான் இந்தியாவில் மாபெரும் பஞ்சம் நிலவியது. இன்றைக்கு நம் விவசாயம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு மூல காரணமாகச் சொல்லப்படும் ‘பசுமைப் புரட்சி’ அப்போதுதான் கொண்டுவரப்பட்டது.

தமிழ் இலக்கியத்தில் சுற்றுச்சூழல் குறித்துப் பேசிய முதல் நாவலாக அறியப்படும் ‘சாயா வனம்’ அந்தப் பத்தாண்டில்தான் (1968) வெளிவந்தது. ‘வாசகர் வட்டம்’ அதை வெளியிட்டது. தன்னுடைய 25 வயதில் இதை எழுதிய சா.கந்தசாமிக்கு, இதுதான் முதல் நாவல். இது ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த நாவலுக்கு, இது பொன்விழா ஆண்டு.

தஞ்சைக்கு அருகில் உள்ள சாயாவனம் என்ற ஊர்தான் நாவலின் கதைக் களம். அங்கு பரம்பரைப் பரம்பரையாகக் கடத்தப்பட்டுவரும் புளியந்தோப்பை விலைக்கு வாங்கி, அந்தத் தோப்பை அழித்து, அங்கு கரும்பு ஆலை ஒன்றைக் கட்ட நினைக்கிறான் கதையின் நாயகனான சிதம்பரம். அவனுடைய கனவு நிறைவேறியதா என்பதுதான் கதை. புளியந்தோப்பு என்பது வெறும் அடையாளத்துக்குத்தான். உண்மையில் அது ஒரு காடு. கந்தசாமியின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், அது ‘ஆரண்யம் போன்ற தோட்டம்’. சிதம்பரம் அந்தக் காட்டை எப்படி அழிக்கிறான் என்பதுதான் நாவலின் மையமாக இருக்கிறது. தனக்குத் துணையாகச் சிறுவர்கள் இருவரை வைத்துக்கொண்டு, அரிவாள், கோடரி போன்றவற்றைக் கொண்டு மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றை வெட்ட ஆரம்பிக் கிறான். இயன்றவரையில் வெட்டிவிட்டு, மீதம் இருக்கும் பகுதிகளைத் தீயிட்டுக் கொளுத்தி விடுகிறான்.

காலம் காலமாக, அந்தத் தோப்புதான் ஊர் முழுவதற்கும் புளியைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அந்தத் தோப்பை அழித்த பிறகு, வேறு ஊர்களிலிருந்து புளியை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் அந்தப் புளி, கிராம மக்கள் யாருடைய மனதையும் நிரப்பவில்லை. அந்த ஊர் ஆச்சி ஒருவர் சொல்வதுபோல, ‘புளியெ வாயிலெ வைக்க முடியல்லே’. இறுதியில், அவன் நினைத்ததுபோல கரும்பு ஆலையைக் கட்டிவிடுகிறான். ஆனால், அதனால் அவனுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்ததா என்றால், அது பெரிய கேள்வி.

அந்த ஆச்சி அவனிடம் புளியைப் பற்றிச் சொல்லும்போது, அந்த ஊருக்கு அவன் வந்த போது இருந்த புளிய மரங்கள் அவன் நினைவில் படர்கின்றன. அப்போது, அவனுக்குள் ஏதோ ஒரு கலக்கம் வந்துவிடுவதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் கந்தசாமி. அந்த உணர்வு நமக்கும் படர்ந்துவிடுகிற கணத்தில், இந்தப் படைப்பு வெற்றிபெற்றுவிடுகிறது.

எந்த ஒரு திடீர்த் திருப்பங்களும் இல்லாத, மிகவும் எளிமையான கதை. அதைவிட எளிமை, ஆரவாரமற்ற மொழி நடை. யதார்த்தமான கதை மாந்தர்கள். உழைப்புக்குக் கூலியாகப் பணம் வாங்காமல் நெல் கேட்கிற, நெல்லைக் கொடுத்து நல்லெண்ணெய் வாங்குகிற பண்டமாற்றுக் கலாச்சாரம் என நாவலின் கட்டமைப்பு புதுமையான ஒரு கதை சொல்லல் முறையைக் கொண்டுள்ளது. 1960-களின் காலத்துக்கு அது புதுமைதான்! 

பணப் பயிர்த் தொழில் ஒன்றுக்காகக் காட்டை அழிப்பது என்கிற விஷயமே அப்போது புதியதுதான். அதை எழுத்தில் கொண்டுவந்தது, தமிழ் இலக்கியத்துக்குப் புதிய திறப்பை வழங்கியது. ஆனால், சா.கந்தசாமி, சுற்றுச்சூழலைப் பேசுகிற நாவலாகத்தான் அது இருக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு எழுதவில்லை. சொல்லப்போனால், இந்த நாவலின் எந்த இடத்திலும், சுற்றுச்சூழலை, காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று பிரச்சார தொனியே இருக்காது. மாறாக, ‘சாயாவனம்’ என்கிற காடு எப்படி இருக்கிறது என்கிற விவரிப்புகள் மூலமாகவே, ‘அந்தக் காடு பாதுகாக்கப்பட வேண்டுமே’ என்கிற எண்ணத்தை நமக்குள் எழச் செய்துவிடுகிறார்.

‘ஒவ்வொரு செடியாக வெட்டி வீழ்த்திக்கொண்டே முன் நோக்கிச் சென்றுகொண்டிருந்தான் சிதம்பரம்’ என்று நாவலின் ஓரிடத்தில் சொல்லிவிட்டு, அடுத்த பத்தியில் ‘மரமும் செடியும் கொடியும் மனிதனோடு நடத்தும் ஒரு போராட்டம். ஒவ்வொரு அடியும் பலமான தோல்விதான் அவற்றுக்கு. ஆனால், தன்னு டைய எதிரியைக் கொடூரமாக - கர்வத்தோடு பலவீனப்படுத்தின. தற்காலிகமாகவாவது அவன் சோர்ந்து களைப்புற்றுப் போனான்’ என்று எழுதுகிறார் கந்தசாமி. இப்படி, நாவலின் பல இடங்களில் வனத்தைத் தன் எதிரியாகப் பார்க்கும் பார்வை பரவியிருக்கிறது. இதை எழுத்தாளரின் பார்வையாகக் கொள்ளத் தேவையில்லை. அப்படிச் செய்வது தவறு. அந்தப் பார்வை, கதை நாயகனின் பார்வை. அவ்வளவுதான். அப்படித் தான் பார்க்க வேண்டும்.

பிறகு, கந்தசாமி இப்படி எழுதுகிறார்: ‘அவன் சலிப்புற்று அமரும்போதெல்லாம், ஒரு மரமோ ஒரு செடியோ மெல்ல அசைந்து, மலர்களை எவ்விதப் பிரயாசையுமின்றி உதிர்க்கும்’. ஆம், இயற்கை அப்படித்தான் இருக்கும். என்னதான் மனிதன், இயற்கையைப் பல விதங்களில் பாதித்தாலும், அதிலிருந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்கிற, மீண்டெழுகிற தன்மை இயற்கைக்கு உண்டு. அதனால்தான், அது மனிதனை மீறிய பெரும் சக்தியாக இருக்கிறது.. ‘சாயாவன’மாக இருக்கிறது!

நன்றி: தி இந்து