Saturday, August 31, 2019

அண்ணலின் அரசியல் பிரவேச நூற்றாண்டை நினைவு கொள்வதெப்படி?

ந.வினோத் குமார்

அது 2012. உத்தர பிரதேசத்தைச் சார்ந்த சமாஜ்வாதி கட்சி 15-வது நாடாளுமன்றத் தேர்தலில் 22 உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்பியது. அதில் 10 பேர் தலித்துகள். அந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, மத்திய அரசு ஒரு சட்ட மசோதாவைக் கொண்டு வர முயற்சித்தது. அரசுப் பணிகளில் தலித் மற்றும் பழங்குடிகளுக்கு, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை மீண்டும் அறிமுகப்படுத்துவது தொடர்பான மசோதா அது. அன்றை மத்திய பணியாளர்,  பொதுக் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சராக இருந்த வே.நாராயணசாமி, அந்த மசோதாவை அறிமுகப்படுத்த எழுந்தார்.

அப்போது சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த யஷ்வீர் சிங் எனும் தலித் உறுப்பினர் அந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, ஓடிவந்து நாராயணசாமியின் கையிலிருந்த மசோதாவைக் கிழித்து எறிந்தார். இதை அவர் தானாக முன் வந்து செய்யவில்லை. தன் கட்சி மேலிடம் சொல்லிக் கொடுத்தபடி, இத்தகைய செயலை யஷ்வீர் செய்தார். 

தனித்தொகுதியில் (ரிசர்வ்) போட்டியிட்டாலும், பெரும்பாண்மையாக இருக்கிற சாதி இந்துக்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெறுகிற நிலை இருக்கும்போது, தலித் உறுப்பினர்களால் தங்கள் சமூகத்துக்குத் தங்களால் இயன்றவற்றைச் சுதந்திரமாகச் செய்ய முடியாது.  காரணம், அவர்கள் சாந்திருக்கிற கட்சி அவர்களை அவ்வாறு சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்காது, சாதி இந்துக்களின் கட்டுப்பாட்டில்தான் அவர் இருப்பார் என்று சொல்லி சட்ட மேதை அம்பேத்கர்  ‘இரட்டை வாக்குரிமை’  வேண்டும் என்று போராடினார். அந்தப் போராட்டத்துக்கான விதை 1919-ல் விழுந்தது.

தீண்டத்தகாத மக்களுக்கென்று அரசியலில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும், அனைவருக்கும் வாக்குரிமை உள்ளிட்ட சிவில் உரிமைகளுக்காகவும் 1919-ல் சவுத்பரோ ஆணையத்தின் முன்பு தன்னுடைய கோரிக்கைகளை அம்பேத்கர் வைத்தார். அதுதான் அரசியல் ரீதியாக அம்பேத்கர் மேற்கொண்ட முதல் போராட்டம். அண்ணல் மேற்கொண்ட அந்த அரசியல் நிகழ்வுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு..!

ஆனால் அதுகுறித்துப் பரவலாக யாருக்கும் தெரியவில்லை என்பது ஒரு சோகமென்றால், நூற்றாண்டிலும் அவர் கண்ட கனவு பலிக்கவில்லை என்பது இன்னொரு சோகம்.
ஒரு ’பனியா’வின் ஒப்பந்தம்..!
இன்றைக்கு உள்ள தனித்தொகுதிகள் எனும் உரிமைதான் அம்பேத்கரின் மிகப்பெரிய சாதனை என்று  தலித் மக்கள் உள்ளிட்ட பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று உள்ள ‘தனித் தொகுதிகள்’ எனும் வடிவத்தை அடைவதற்குப் பின் நீண்ட வரலாறு இருக்கிறது. அம்பேத்கரை நாயகனாகச் சித்தரித்து எழுதப்பட வேண்டிய அந்த வரலாறு, காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகிய இரண்டு துரோகிகளையும்  இணைத்தே எழுதப்பட வேண்டியிருப்பது மாபெரும் சாபக்கேடு.
அண்ணல் கண்ட கனவு என்ன, அதை மேற்சொன்ன இரண்டு பேரும் எப்படிச் சிதைத்தார்கள் எனும் வரலாற்றைச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது ‘அம்பேத்கர், காந்தி அண்ட் பட்டேல்: தி மேக்கிங் ஆஃப் இந்தியாஸ் எலக்டோரல் சிஸ்டம்’ எனும் புத்தகம். ராஜா சேகர் வுந்துரு எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், 2017-ல் ப்ளூம்ஸ்பரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த அன்றைய இந்தியாவின் அரசியலமைப்பு ஒவ்வொரு 10 வருடத்துக்கும் மாறுதலுக்கு உள்ளாகி வந்தது. 1927-ல் இந்தியர்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளில் மேலும் சில மாற்றங்களைக் கொண்டு வர சைமன் கமிஷனை நியமித்தது பிரிட்டிஷ் அரசு. இந்திய மக்களின் கருத்துகளை அறிய அந்த கமிஷன் விரும்பியது.
இந்த கமிஷனுக்கு அன்றைய காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால் ‘பகிஷ்கிரித் ஹிதகரனி சபா’வின் சார்பாக அம்பேத்கரும், இஸ்லாமியர்களின் சார்பாக எம்.ஏ.ஜின்னாவும் அந்த கமிஷனிடம் தங்களின் கோரிக்கையை முன் வைத்தார்கள். இந்தக் காரணத்துக்காக அவர்கள் இருவரையும் ‘துரோகிகள்’ என்று சாடியது, காங்கிரஸ் கட்சி.
அந்த கமிஷன் தன்னுடைய அறிக்கையை 1930-ம் ஆண்டு மே மாதத்தில் வெளியிட்டது. அதில் தலித்துகள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்குத் தனித் தொகுதி வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. தலித்துகள் ஒரு தனியான அரசியல் குழுவாக அங்கீகரிக்கப்பட்டது அதுதான் முதல் முறை. ஆனால் ஒரு மாகாண கவர்னரின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே தலித் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியும் என்று அந்த அறிக்கை சொன்னது. இதற்கு அம்பேத்கர் எதிர்ப்புத் தெரிவித்தார்.   
தலித்துகள் தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை அடைய வேண்டுமென்றால், அவர்களுக்குத் தனித்தொகுதி வழங்கப்பட வேண்டும் என்று அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் லண்டனில் நடைபெற்ற முதல் வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார். அது தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருந்த போது, இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் (1931) ‘தலித்துகளுக்குத் தனி பிரதிநிதித்துவம் தேவையில்லை’ என்று தாயம் உருட்ட ஆரம்பித்தார் காந்தி. பிறகு சில காலம் கழித்து மனம் மாறி, ‘தலித்துகளுக்குத் தனி பிரதிநிதித்துவம் தேவைதான். ஆனால் அவர்களுக்கென தனியாக தொகுதிகளை ஒதுக்கக் கூடாது’ என்று பரமபதம் விளையாடத் தொடங்கினார் அவர். 
ஆனால் அண்ணல் தன் கோரிக்கையில் உறுதியாக நின்றார். அதனால் காந்தி அவரை வழிக்குக் கொண்டு  வர பட்டினிப் போராட்ட நாடகத்தை நடத்தினார். அந்த நாடகத்தின் விளைவுதான் ‘பூனா ஒப்பந்தம்’. எரவாடா சிறையில் இருக்கும்போது காந்தி அந்த நாடகத்தை அரங்கேற்றினார். அப்போது தன்னுடன் சிறைவாசம் இருந்த வல்லபாய் பட்டேலிடம், ‘தீண்டத்தகாத போக்கிரிகளுக்குத் தனித் தொகுதி கொடுத்தால், அவர்கள் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து கொண்டு இந்துக்களைக் கொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்’ என்றாராம். வெளியில் ‘ஹரிஜன்’ (கடவுளின் குழந்தைகள்) என்று தலித் மக்களை அழைத்துவிட்டு, தனிமையில் ‘ஹூலிகன்’ (hooligan) என்று அழைத்த நடிகர் அவர்..! தீண்டத்தகாதவர்களைக் கொலைகாரர்களாகப் பார்க்க அவருக்கு எப்படி மனம் வந்தது..?
ஏன் 25 சதவீதம்..?
அம்பேத்கர் முன்மொழிந்த தனித் தொகுதி என்பது இன்றைக்கு இருக்கும் தனித் தொகுதியிலிருந்து மாறுபட்டது. அவர் முன் வைத்த தனித் தொகுதியில், தலித்துகள் மட்டுமே வாக்களித்து தங்களிலிருந்து ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும். 
இதை எதிர்த்த காந்தியின் பட்டினி நாடகத்துக்குப் பிறகு, பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் 1937 மற்றும் 1946-ம் ஆண்டுகளில், இரண்டு நிலையாகத் தேர்தல் நடைபெற்றது. முதல் நிலையில், தலித் மக்களிடையே இருந்து நான்கு பேர், தலித் மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். பிறகு அந்த நான்கு பேரும் வேறு சமூகத்தினருடன் போட்டியிட வேண்டும். இந்த இரண்டு அடுக்குத் தேர்தல் முறை நேர விரயமாகவும், செலவு மிக்கதாகவும் இருந்தது. தவிர, இந்த வகையான தேர்தல் முறையில், வரி செலுத்துபவர்களும் நிலச்சுவான்தார்களும் மட்டுமே வாக்களிக்க முடிந்தது. இந்தத் தேர்தல்களில், முதல் நிலையில் தலித் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்களில் பலரும், இரண்டாம் நிலையில் பொது சமூகத்தினருடன் போட்டி போடும்போது வெற்றி பெற முடியவில்லை. 
அம்பேத்கர் பயந்தது சரியாகிப் போனது. இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் 1933-லேயே பூனா ஒப்பந்தத்தில் ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டு வர முயன்றார். அதாவது, தேர்தலை இரண்டு கட்டமாக நடத்துவதற்குப் பதிலாக, ஒரே தேர்தலில் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய ஒரு யோசனையை முன்மொழிந்தார். அந்த வகையான தேர்தலில், இரண்டு வாக்குப் பெட்டிகள் இருக்கும். ஒன்று, தலித்துகளுக்கு மட்டுமே ஆனது. இன்னொன்று, பொதுப் பிரிவினருக்கானது. வாக்கு எண்ணிக்கையின்போது, முதலில் தலித் சமூகத்தினரின் வாக்குகள் எண்ணப்படும். அதில், யாரெல்லாம் (நான்கு பேரில்) தன் சமூகத்திடமிருந்து 25 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களோ, அவர்களே முதல் கட்ட வெற்றியாளர்களாகக் கருதப்படுவர். இரண்டாவதாக, பொதுப் பிரிவினரின் பெட்டி எண்ணப்படும். அதில் வரும் சதவீதத்துடன் ஏற்கெனவே பெற்ற 25 சதவீதத்தையும் கூட்டிக் கொள்ள வேண்டும். அப்போது யார் அதிக வாக்கு சதவீதத்துடன் உள்ளாரோ, அவரே இறுதி வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்த முறையை ‘குவாலிஃபைட் ஜாயிண்ட் எலக்டோரேட்ஸ்’ என்று அழைத்தார் அம்பேத்கர். ‘இரட்டை உறுப்பினர் தொகுதி’யைக் கொண்டு வருவதற்கான முயற்சிதான் இது. ஆனால் இதற்கும் காந்தி எதிர்ப்புத் தெரிவித்தார்.
மேலோட்டமாகப் பார்த்தால் காந்தி தலித்துகளுக்கு நல்லதுதானே செய்திருக்கிறார், எதற்காக தலித்துகள் 25 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் என்று கேள்வி எழுவது இயல்பு.  இங்குதான் அம்பேத்கரின் ஆளுமை புலப்படுகிறது. அந்த நான்கு பேரில் ஒருவர் 40 சதவீதமும், இன்னொருவர் 30 சதவீதமும், மீதமுள்ள இரண்டு பேர் தலா 15 சதவீதமும் என வாக்குகளைப் பெறுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இவர்களில், 25 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றிருப்பது இருவர். இதில் இரண்டாமவர், முன்னவரைக் காட்டிலும் குறைந்த வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தாலும், தேர்தல் விதி காரணமாக அவர் இரண்டாம் நிலை தேர்தலுக்குச் சென்றுவிடுவார். ஒருவேளை அவர் திறமை அற்றவராக, எடுப்பார் கை பிள்ளையாக இருக்கிறார் என்று தெரிந்தால், பொதுப் பிரிவில் உள்ள பெரும்பாண்மையான இந்துக்கள் அவருக்கே வாக்களித்து, அவரை வெற்றி பெறச் செய்துவிடுவர். அப்போது, தேர்வு பெற்ற அந்த நபர், முதுகெலும்பற்றவராக, இந்துக்களின் சொல் பேச்சுக் கேட்டு நடப்பவராக இருப்பார். அவர், தலித்துகளுக்கான உண்மையான பிரதிநிதியாக இருக்கமாட்டார்.
தகுதியில்லாதவர்கள் தலித்துகளுக்குத் தலைவர்களாக வந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான் அம்பேத்கரின் இந்த நகர்வுக்குக் காரணம்.
பூனா ஒப்பந்தத்தின் படி நடைபெற்ற தேர்தல்களால் தலித்துகள் பயனடையவில்லை. அது எப்படி என்பதைத் தரவுகளுடன் அம்பேத்கர் எழுதிய புத்தகம்தான் ‘வாட் காங்கிரஸ் அண்ட் காந்தி ஹேவ் டன் டு அன்டச்சபிள்ஸ்’ (காங்கிரஸும் காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்குச் செய்தது என்ன?). இது 1945-ல் வெளியானது. இந்தப் புத்தகத்தை எதிர்த்து புத்தகங்களை எழுதுமாறு ராஜாஜியிடமும் (அம்பேத்கர் ரெஃப்யூட்டட்) கே.சந்தானத்திடமும் (அம்பேத்கர்ஸ் அட்டாக்) தஞ்சமடைந்தார் காந்தி.  
வாக்குரிமை ஏன் அடிப்படை உரிமை இல்லை..?
இப்படியான  சூழலில் 1948-ல் காந்தி கொல்லப்பட, மேற்சொன்ன விஷயங்களை எல்லாம் மெளன சாட்சியாக நின்று கவனித்துக் கொண்டிருந்த வல்லபாய் பட்டேல், விடுதலை இந்தியாவின் முக்கியத் தலைவராகத் தலையெடுக்க ஆரம்பித்திருந்தார். காந்தி எரவாடா சிறையிலிருந்த போது, நேரு வேறொரு சிறையில் இருந்தார். எனவே, அம்பேத்கரின் போராட்டம் பற்றியோ, காந்தியின் நாடகம் பற்றியோ அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. 
இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, சிறுபான்மையினருக்கு அதுவரை வழங்கப்பட்டிருந்த அனைத்து தனித் தொகுதிகளையும் ஒழிக்க பட்டேல் முன்மொழிந்தார். அப்போது அம்பேத்கர் நமது அரசியல் சாசனத்தை ஓரளவு முடிக்கும் தருவாயில் இருந்தார். பட்டேலின் முன்மொழிவு அண்ணலை ஆத்திரப்படுத்தியது. எனவே, அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திலிருந்து 1948-ல் விலகினார். எங்கே மிச்சமிருக்கும் பணியைச் செய்யாமல் விட்டுவிடுவாரோ என்ற பயத்தில், அண்ணலை சாந்தப்படுத்தும் விதமாக தலித்துகளுக்காக மட்டும் தனித் தொகுதிகள் ஒதுக்கப்படுவது தொடர்ந்தது. அதுவும் 10 ஆண்டுகளுக்கு மட்டும்தான்.
இந்தச் சமயத்தில், வாக்குரிமை என்பது அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். அனைவருக்குமான வாக்குரிமை குறித்து முதலில் பேசியதும் அவர்தான். அன்றைய அரசு, ‘அனைவருக்குமான வாக்குரிமை’யை 1947-ல் ஏற்றுக் கொண்டது. அது ஒரு மிகப்பெரிய புரட்சி. காரணம், அப்போது ஐரோப்பாவின் பல நாடுகளிலும் மற்றும் அமெரிக்காவில் கூட அனைவருக்குமான வாக்குரிமை வழங்கப்படவில்லை. அவ்வளவு ஏன், நம்மை ஆண்ட பிரிட்டிஷார் கூட தங்கள் நாட்டில் 1928-ல்தான் அந்த உரிமையை வழங்கினர். அம்பேத்கரோ அதை 1919-லிருந்து வலியுறுத்தி வந்திருக்கிறார் என்றால், அவரது தொலைநோக்குப் பார்வையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. 
ஆனால் அனைவருக்குமான வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்க அன்றைய விடுதலை இந்தியாவின் அரசு முன் வரவில்லை. இதனால் என்ன பிரச்சினை என்கிறீர்களா..? வாக்குரிமை என்பது அடிப்படை உரிமையாக இல்லாதபட்சத்தில், தேர்தலில் போட்டியிட நினைக்கும் வேட்பாளர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படும். உதாரணத்துக்கு பாரதிய ஜனதா கட்சி 2014-ல் பொறுப்பேற்ற சில  ஆண்டுகளில் ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதி, வீட்டில் கழிவறை வசதி போன்றவை இருக்க வேண்டுமென்று புதிய விதி எழுதின. ராஜஸ்தானில் இப்போது காங்கிரஸ் ஆட்சி. எனவே, அந்த விதியை நீக்கிவிட்டது. ஆனால் ஹரியாணாவில் பா.ஜ.க.வின் ஆட்சி தொடர்கிறது. எனவே அங்கே அந்த விதி இன்னும் நடைமுறையில் உள்ளது.
அபாயத்திலிருந்து மீளும் வழி..!
தனித் தொகுதிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு  என்ற அடிப்படையில் 1980, 1989, 2000 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் அந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. 2020-ல் அந்த விதி பின்பற்றப்படுமா என்பது தெரியவில்லை.  காரணம் தொகுதி மறுவரையறை என்று சொல்லப்படும் ‘டீலிமிட்டேஷன்’ எனும் நடவடிக்கை. ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பது சட்டம். அந்தத் தொகுதிகள் ஒற்றை உறுப்பினர் தொகுதியாகவோ (தலித் மக்கள் பெரும்பாண்மையாக இருக்கும்பட்சத்தில் அது தனித் தொகுதி) அல்லது இரட்டை உறுப்பினர் தொகுதியாகவோ இருக்கலாம். இரட்டை உறுப்பினர் தொகுதிகளில் தலித் மக்கள் மைனாரிட்டியாக இருக்கும்பட்சத்தில் ஒரு இடம் பொதுப் பிரிவினருக்கும், இன்னொரு இடம் தலித்துகளுக்கும் கிடைக்கும்.
பொதுப் பிரிவினருக்கான இடம் என்பது யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதால், அந்தத் தொகுதியில் தலித் ஒருவர் நின்று வெற்றி பெற்ற நிகழ்வுகளும் உள்ளன. விடுதலை இந்தியாவில் 1952 மற்றும் 1957-ம் ஆண்டுளில் நடைபெற்ற தேர்தல்கள் இந்த முறையில்தான் நடந்தன.
1957-ல் நடைபெற்ற தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்தில், முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, பொதுப் பிரிவினருக்கான இடத்தில் போட்டியிட்டு, திப்பல சூரி தோரா எனும் பழங்குடியிடம் தோற்றார். அதை எதிர்த்து கிரி உச்ச நீதிமன்றம் செல்ல, 1959-ல் தோராவின் வெற்றி நியாயமானதுதான் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இப்படி, இதர பொதுத் தொகுதிகளிலும் தலித்துகள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்த அன்றைய மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் கட்சி இரட்டை உறுப்பினர் தொகுதி முறையை ஒழித்தது.  
இந்நிலையில், 1952, 1963, 1973 மற்றும் 2002 ஆகிய நான்கு முறை மட்டுமே தொகுதி மறுவரையறை நடைபெற்றுள்ளது. 1976-ல் அன்றைய காங்கிரஸ் அரசு, குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகளால் மக்களவைக்கான மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக 2001 வரை தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது. பிறகு, 2002-ல் மறுவரையறை நடந்தது. அதனால் 2026-ம் ஆண்டு வரை (வுந்துரு தன் புத்தகத்தில் 2036 என்கிறார்) அடுத்த மறுவரையறை நடக்காது. காரணம், 2021 மக்கள்  தொகைக் கணக்குக்குப் பிறகு மறுவரையறை நடந்தால், மக்கள் தொகையைக் குறைத்த தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கு தற்போது உள்ள மக்களவைக்கான இடங்கள் குறையும்.  அந்த இடங்கள், மக்கள் தொகையைக் குறைக்காத உத்தர பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களுக்குப் போய்ச் சேரும். 
அப்போது மக்களவையில் வட மாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். தென் மாநிலங்கள், கொடுப்பதை வாங்கிக் கொண்டு போக வேண்டிய நிலை ஏற்படும். சுருக்கமாக, ‘வடக்கு வளரும், தெற்கு தேயும்..!’ 
ஒருவேளை மறுவரையறை நடந்தால், அது நாட்டில் தற்போது உள்ள தனித்தொகுதி எண்ணிக்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். சில மாநிலங்களில் அதிகரிக்கவும், சிலவற்றில் குறையவும் செய்யலாம். எண்ணிக்கை அதிகரித்த மாநிலங்களில், பெரும்பாண்மை சாதி இந்துக்கள் தலித் தலைவர்களைத் தங்களின் கைப்பாவையாக மாற்றி, தலித் சமூகத்துக்கு எதிராக அவர்களைப் பயன்படுத்தவும் செய்யலாம். யாதவ்கள் யஷ்வீர் சிங்கை ஆட்டுவித்ததைப் போல. எண்ணிக்கை குறைந்த மாநிலங்களில், சிலை உடைப்புகளும் தலை உடைப்புகளும் நிகழலாம். இந்துத்துவ சக்திகள் வேதாரண்யத்தில் ஆடிய ஆட்டத்தைப் போல…!
இரட்டை உறுப்பினர் தொகுதி முறை அல்லது இரட்டை வாக்குரிமை ஆகிய அம்பேத்கரின் கனவுகளில் ஏதேனும் ஒன்றைச் சாத்தியமாக்குவதுதான், மேற்சொன்ன அபாயத்திலிருந்து மீள ஒரே வழி..!  

Tuesday, August 13, 2019

யுத்த நாளின் யானைகள்…!

வரலாற்றாசிரியர் தாமஸ் ஆர்.ட்ரவுட்மேன் நேர்காணல்


பேட்டி, படங்கள்: ந.வினோத் குமார் 

பதிப்பிக்கப்பட்ட தேதி: 28 பிப்ரவரி 2019


“குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் எப்போதும் வசீகரிக்கும் தன்மையுடையவை யானைகள். அவை என்னையும் வசீகரித்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. இந்த ஒரு காரணம் போதாதா நான் யானைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு…” என்று சொல்லிப் புன்னகைக்கிறார் தாமஸ் ஆர்.ட்ரவுட்மேன்.

பிரபல வரலாற்றாசிரியர் ஏ.எல்.பாஷம் என்பவரின் மாணாக்கராக, லண்டனில் உள்ள ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸ்’ மையத்தில், ‘அர்த்தசாஸ்திரம்’ குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர் ட்ரவுட்மேன். பிறகு, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் மானுடவியல் பேராசிரியராக இருந்தவர். அங்கு 1988 முதல் 2010 வரை பண்டைய இந்திய வரலாறு தொடர்பாகப் போதித்திருக்கிறார்.

அன்றைய சென்னையில் வாழ்ந்த ஆங்கிலேய அதிகாரி எல்லீஸ் குறித்து இவரது ஆய்வு, ‘திராவிடச் சான்று: எல்லீஸும் திராவிட மொழிகளும்’ என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. இந்தியாவில் போருக்காகப் பயன்படுத்தப்பட்ட யானைகள் குறித்து இவரது ஆய்வு, ’எலிஃபன்ட்ஸ் அண்ட் கிங்ஸ்: ஏன் என்விரான்மென்ட்டல் ஹிஸ்டரி’ என்ற தலைப்பில் 2015ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது. அந்தப் புத்தகத்தைத் தற்போது தமிழில் மொழிபெயர்த்து வருகிறார் பிரபல பறவையியலாளர் ப.ஜெகநாதன். 


ட்ரவுட்மேன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (எம்.ஐ.டி.எஸ்) ‘ஆனையின் அடிச்சுவட்டில்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த வந்திருந்தார். அப்போது நாம் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

இப்போதெல்லாம் வரலாற்றாசிரியர்கள் சூழலியலாளர்களாக மாறி வருகிறார்களே..?

இறந்த காலத்தைப் பற்றி ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் இப்போது வருங்காலம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சுற்றுச்சூழலியல் வருங்காலத்துக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று என்பதை அவர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ‘சூழலியல் வரலாறு’ என்பது சமீபகாலமாகத்தான் பேசப்பட்டு வருகிறது. முற்றிலும் புதிய துறைதான். ஆனால் மிகவும் வேகமான, ஆழமான, பரந்துபட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்போது வரை சூழலியல் வரலாறு தொடர்பாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளும், வெளிக்கொணரப்பட்ட படைப்புகளும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளை அடிப்படையாக வைத்துத்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

வரலாற்று ஆசிரியரான உங்களுக்கு யானைகளின் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

யானைகள் என்று சொல்லும்போது, குறிப்பாக ஆசிய யானைகள். இந்தியாவில் இருந்த யானைகள். இங்கு யானைகளின் வரலாறு என்பது, போருக்காகப் பயன்படுத்தப்பட்ட யானைகள்தான். அந்த யானைகளை அரசர்கள் பயன்படுத்திய விதமும், அந்த யானைகளுக்காக, யானைகளால் நிகழ்ந்த நிலப் பயன்பாட்டு மாற்றங்களும்தான் எனது ஆய்வு.

பல ஆண்டுகளாக இந்திய வரலாற்றை ஆய்வு செய்துவந்த நான், ஒருகட்டத்தில் டெல்லியில் இருந்த சுல்தான்களைப் பற்றிப் படிக்க நேர்ந்தது. அப்போதுதான் பேராசிரியர் சைமன் டிக்பி எழுதிய ‘வார் ஹார்ஸ் அண்ட் எலிஃபன்ட்ஸ்’ எனும் புத்தகம் எனக்கு அறிமுகமாகியது. அதைப் படித்தபோது, இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் குதிரைகளும், கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் யானைகளும் போருக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற உண்மை விளங்கியது.

அது தொடர்பாக மேலும் படிக்க நினைத்தபோது, சொற்பமான தகவல்களே கிடைத்தன. இந்தியாவில் இருந்த போர் யானைகள் பற்றி இன்னும் ஆழமான ஆய்வுகள் வேண்டும் என்று எண்ணினேன். அதை நாமே செய்யலாமே என்று இறங்கினேன்.


அந்த ஆய்வு குறித்துக் கொஞ்சம் விளக்குங்கள்…

ரிக் வேதத்தில் யானைகளை ‘ம்ருக ஹஸ்தின்’ என்று அழைத்திருக்கிறார்கள். அங்கிருந்துதான் இந்தியாவில் யானைகளின் வரலாறு தொடங்குகிறது. யானைகளை மனிதர்கள் பழக்கப்படுத்தியது அதற்குப் பின்னர்தான். சிந்து சமவெளி நாகரிகக் கால ஓவியங்களில் யானைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அதன் மீது மனிதர்கள் சவாரி செய்வது போன்ற ஓவியங்கள் எதுவும் இல்லை. அவை வேட்டையாடப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை பழக்கப்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் இல்லை.

இந்தியாவைத் தவிர சீனாவிலும் யானைகள் இருந்திருக்கின்றன. அங்கு அவை பழக்கப்படுத்தப்பட்டிருந்தாலும், போருக்காகப் பயன்படுத்தப்படவில்லை. ‘போர் யானைகள்’ என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் கண்டுபிடிப்புதான். இந்தியாவின் மீது மாவீரன் அலெக்சாண்டர் படையெடுத்து வந்து சென்ற பிறகு, அவன் மூலமாகத்தான் மேற்கத்திய நாடுகளில் யானைகள் போருக்காகப் பயன்படுத்தப்பட்டன. மேற்கே ஸ்பெயின் நாடு வரைக்கும், கிழக்கே கம்போடியா நாடு வரைக்கும் யானைகள் போருக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அங்கிருந்த மன்னர்கள் எல்லோரும் இந்திய மன்னர்கள் பின்பற்றிய நுட்பங்களைப் பயன்படுத்தியே யானைகளைப் போருக்காகப் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள். அங்குசம் என்ற கருவிகூட இந்தியாவிலிருந்துதான் சென்றிருக்கிறது.


இந்திய மன்னர்கள் யானைகளைப் பயன்படுத்திய விதம் குறித்துக் கூறுங்கள்.

மகாபாரதத்தில் 60 வயது நிரம்பிய யானைகள்தான் போருக்காகப் பயன்படுத்தப்பட்டன என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் 20 வயதுள்ள யானைகள்தான் போருக்காகப் பழக்கப்படுத்தப்பட்டன. அதுவும் ‘மஸ்த்’ சுரந்து மதம் பிடித்த யானையைத்தான் பழக்கப்படுத்தினார்கள். யானை பிறந்து சில நாட்களே ஆன நிலையில் அவற்றைப் பிடித்துச் சென்றால், அவற்றுக்குச் சோறிட்டு மாள முடியாது என்ற காரணத்தால், அவை 20 வயதை நெருங்கும் வரை காட்டில் சுற்றவிட்டு, அந்தக் காட்டு யானைகளையே பிடித்துப் பழக்கினார்கள்.

சில நேரங்களில் நேரடியாகப் போரில் பயன்படுத்தாமல், போரைத் தவிர்ப்பதற்கும் யானைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆம்… தங்கள் நாட்டின் மீது போர் தொடுத்து வராமல் இருப்பதற்காக, இதர நாட்டு அரசர்களுக்கு யானைகளை அன்பளிப்பாகக் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அலெக்சாண்டரின் வழித்தோன்றல்களுக்கு சந்திரகுப்தர் சுமார் 500 யானைகளைப் பரிசாக வழங்கியதாகக் குறிப்பு உள்ளது. யானைகளை மட்டுமல்லாமல், யானைப் பாகன்களையும் சேர்த்தே அனுப்பும் வழக்கம் இருந்திருக்கிறது. அதனால்தான், அன்றைய கிரேக்கத்தில் யானைப் பாகன்களை ‘தி இந்தியன்ஸ்’ என்று அழைத்திருக்கிறார்கள்.

‘கஜ சாஸ்திரம்’, ‘மானசலோஸா’ போன்று யானைகள் தொடர்பான அறிவியல் இலக்கியங்களும் இந்தியாவில்தான் தோன்றின. சீன மன்னர்கள், தங்கள் நாட்டு விவசாயிகளைக் காப்பதற்காக, யானைகள் விவசாய நிலங்களை அழித்துவிடாமல் இருக்க, அவற்றைக் கொன்றார்கள். ஆனால் இந்தியாவிலோ, யானைகளையும் விவசாயத்தையும் சமமாக வைத்துப் பேணியிருக்கிறார்கள். தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடிய குற்றத்துக்காக மரண தண்டனை விதித்திருக்கிறார்கள். மாறாக, இயற்கையாக இறந்துபோன யானைகளின் தந்தங்களைக் கொண்டு வந்து கொடுத்தால், அவர்களுக்குச் சன்மானம் அளித்திருக்கிறார்கள்.


போர் யானைகள் என்றில்லாமல், பொதுவாகவே யானைகளின் நிலை இன்று எப்படியிருக்கிறது?

19ஆம் நூற்றாண்டு வரை போர் யானைகள் பயன்பாட்டில் இருந்தன. எனக்குத் தெரிந்து 1833ஆம் ஆண்டில் கம்போடியாவில் நடந்த போரில்தான் கடைசியாக யானைகள் போருக்காகப் பயன்படுத்தப்பட்டன. அதற்குப் பிறகு போருக்காக யானைகள் பயன்படுத்தப்படவில்லை. இந்தியாவில், ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு, வேட்டையாடலுக்காக யானைகள் பயன்படுத்தப்பட்டன. தென்னாப்பிரிக்காவில் யானைகளின் மீது அமர்ந்து ஐரோப்பியர்கள் வேட்டையாடி வந்தனர். அவர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் ‘காப்பி’ அடித்தார்கள்.

பழக்கப்படுத்தப்பட்ட யானைகளின் வாழ்க்கை பரிதாபகரமானதுதான். தாய்லாந்தில், மர வேலைப் பயன்பாட்டுக்காக யானைகள் பழக்கப்படுத்தப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு அப்படி யானைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. இப்போது அவை சாலைகளில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் கோயில்களில் யானைகள் அதைத்தானே செய்கின்றன?

ஆனால், காட்டு யானைகளுக்கு நல்வாழ்க்கை அமைந்திருக்கிறது. அதுவும் தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென்னிந்தியக் காடுகளில் யானைகள் நலமுடன் வலம் வருகின்றன. சுற்றுலா போன்றவற்றால், அவற்றுக்குப் பொருளாதார மதிப்பும் கிடைத்துள்ளன. யானைகள் அதிகரித்தால் மனித - விலங்கு எதிர்கொள்ளல் நிகழ்ச்சிகள் அதிகரிக்கத்தான் செய்யும். அவற்றை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தெரியும் அவற்றுக்கு நாம் செய்யும் மரியாதை..!

நன்றி: மின்னம்பலம்

Friday, August 9, 2019

சாயும் காலத்தின் சுதந்திரக் குரல்..!

ந.வினோத் குமார்

இது சாயும் காலம். இது சாவின் நாவுகள் தீண்டும் நேரம்.

இது நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் பொழுது. இது ஜனநாயகத்தின் பெயரால் கொலைகள் அரங்கேற்றப்படும் தருணம்.
சட்டங்கள் என்பது இயற்றப்படுவதற்குத்தான். பின்பற்றப்படுவதற்கு அல்ல.
மக்களாட்சி என்பது குடிமக்களுக்காக அல்ல, கும்பல் வன்முறைகளுக்காக.
ஊடகம் என்பது செய்திகளைச் சொல்வதற்காக அல்ல, பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்காக…!
இப்படியாகத்தான் இருக்கிறது இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை. 
‘ஒரு தனி மனிதரின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியானால்தான் அவர் சமூகத்தைப் பற்றிச் சிந்திப்பார்’ என்றார் பொருளாதார அறிஞர் ஆபிரகாம் மாஸ்லோ. ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலை அப்படியானதாக இல்லை. நமது அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகிறதோ இல்லையோ, நாம் அனைவரும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் கூத்துகளைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. நம்மால் பங்கேற்க முடியாவிட்டாலும் சமூக வலைதளங்களில் நாம் பொங்க வேண்டியதாக இருக்கிறது. யாருமே கேட்காவிட்டாலும் கருத்து சொல்லி வைக்க நாக்கு துடிக்கிறது. 
நாம் சொல்கிற, எழுதுகிற, அதற்கும் முன்னே நமக்குள் நாமே உருவாக்கிக் கொள்கிற கருத்துகளுக்கு ஒரு வடிவம் கொடுப்பது ஊடகம்தான். அதிலும் நொடிக்கு நொடி காட்சி மாறுகிற தொலைக்காட்சி செய்திச் சேனல்கள், இன்று பொழுதுபோக்கு சேனல்களுக்கு நிகரான பரவசத்தைக் கொடுப்பதாக உள்ளன. முன்பெல்லாம், ‘செய்தியா.. சேனலை மாத்துப்பா…’ என்பார்கள். இன்று அப்படி இல்லை. 24 மணி நேரமும் எதையேனும் ஒன்றை வைத்துச் செய்துகொண்டே இருக்கிறார்கள். மக்களுக்கும் நன்றாகவே பொழுது போகிறது.
இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் ஆகியோர் தங்களைத் திரைப்பட நட்சத்திரங்களுக்கு இணையாகக் கருதிக்கொள்கிறார்கள். செய்தி வாசிப்பதையும், விவாத நிகழ்ச்சிகள் நடத்துவதையும் ஏதோ ஒரு நிகழ்த்துக் கலையை நடத்துவது போலவே மேற்கொள்கிறார்கள். அரங்குக்கு வரும் விருந்தினர்களை நாகரிகமாக நடத்தாமல், நிகழ்ச்சியின் நடுவிலேயே எழுந்து போகச் செய்யும் அளவுக்குக் கேள்வி கேட்பதை ஏதோ தனக்கு மட்டுமே இருக்கும் பெரிய திறமை போல பாவித்துக் கொள்கிறார்கள். விருந்தினர்களைப் பேசவிடாமல் தானே நிகழ்ச்சி முழுவதும் பேசுவதன் மூலம் தன்னுடைய மேதைமையைப் பந்தி வைக்கிறார்கள். ’சத்தமாகப் பேசுவதே சாதனை’ என்று யார் இவர்களுக்குச் சொல்லித் தந்தார்கள் என்று தெரியவில்லை.   
இப்படியான தொகுப்பாளர்களுக்கு மத்தியில் குரல், விரல் உயர்த்தாமல், அமைதியாகப் பேசி, விஷயங்களை எளிமையாகப் புரிய வைக்கிற நபர்கள் சிலர் உள்ளனர். அப்படியான ஆளுமைகளில் ஒருவர்தான் என்.டி.டி.வி.யின் தொகுப்பாளர் ரவீஷ் குமார். தன்னுடைய துணிச்சலான ‘பிரைம் டைம்’ நிகழ்ச்சி மூலம் இதர வடக்கத்திய, குறிப்பாக இந்தி மீடியாக்கள் பேசத் தயங்குகிற விஷயங்களைப் பேசுபவர். கும்பல் வன்முறையாக இருந்தாலும் சரி, கூட்டுப் பாலியல் வன்முறையாக இருந்தாலும் சரி… ரவீஷ் எடுக்கிற விஷயங்கள் வடக்கத்திய அரசியல்வாதிகளின் ஆசனவாயை எரிச்சல் அடைய வைப்பவை. அதனாலேயே தொலைபேசி வாயிலாக நித்தமும் கொலை மிரட்டல்களைச் சந்தித்து வருபவர். 
ஆனால் அந்த மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தொடர்ந்து இயங்கி வருகிறார். அந்தத் துணிச்சல்தான் அவருக்கு ‘ரமன் மக்ஸேஸே’ விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது.

ரவீஷ் குமார் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, அருமையான எழுத்தாளரும் கூட. அவருடைய புத்தகம் ஒன்றைப் பற்றி இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எழுதியிருந்தேன். அடுத்த ஆறு மாதத்தில் அவர் எழுதிய இன்னொரு புத்தகம் பற்றி எழுத வேண்டிவரும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. 

இன்றைய ஜனநாயகம் பற்றியும், கலாச்சாரம் பற்றியும், தேசத்தின் நிலை பற்றியும் அவர் இந்தியில் எழுதிய ஒன்பது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘தி ஃப்ரீ வாய்ஸ்’ என்ற தலைப்பில் ’ஸ்பீக்கிங் டைகர்’ வெளியீடாகக் கடந்த 2018-ல் வெளியானது. அந்தப் புத்தகம் பற்றி அறிமுகம் செய்வது இன்றைய காலத்துக்கு மிகவும் அவசியமானது.

பப்ளிக்… ரோபோ – பப்ளிக்…

’தைரியம் என்பது ஒரு பயத்திலிருந்து இன்னொரு பயத்துக்குச் செல்லும் போராட்டம். பயத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான இடையறாத போராட்டம்’ என்கிறார் ரவீஷ். இதை, நீதியரசர் லோயா கொல்லப்பட்டது தொடர்பாகத் தன்னுடைய நிகழ்ச்சியில் பேசியது குறித்து எழுதிய கட்டுரையில் சொல்கிறார் அவர். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, அவரை போனில் அழைத்துப் பலர், ‘போதும் ரவீஷ். இனி இதுபோன்ற விஷயங்களைக் கிளறாதே. நீ உயிருடன் இருக்கமாட்டாய்’ என்று எச்சரித்தனராம். 

அப்படி அழைத்த பலரும் இன்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ள கட்சியின் ‘ஐ.டி. செல்’லைச் சேர்ந்தவர்களாகவும், ‘வாட்ஸ் ஆப் பல்கலைக்கழகத்தை’ சார்ந்தவர்களாகவும் இருந்தனராம். இந்த ஐ.டி. செல்காரர்களாலும், வாட்ஸ் ஆப் பட்டதாரிகளாலும் உருவாக்கப்படுவதுதான் ‘ஃபேக் நியூஸ்’ எனப்படும் பொய்ச் செய்திகள். இந்தச் செய்திகளை உண்மை என்று நம்புகிற கும்பலை ‘மாற்று குடிமக்கள்’ (ஆல்டர்நேட்டிவ் சிட்டிசன்ரி) என்கிறார். 

“இவர்கள் தங்களுக்காகச் சிந்திப்பதை மறந்துவிடுகிறார்கள். கும்பலாக மாறிவிடுகிறார்கள். அவர்களுடைய நடத்தை ரோபோக்களுக்கு இணையாக மாறிவிடுகின்றன. எனவே இவர்களை நான் ‘ரோபோ – பப்ளிக்’ என்று அழைக்கிறேன்” என்கிறார் ரவீஷ்.

இப்படி எல்லாம் பேசுவதைக் கேட்டு ‘எப்படி சார் உங்களால மட்டும்..?’ என்று பலரும் கேட்கும்போது, ‘யோவ்… பேச வேண்டியது என் வேலை. அதுக்கு எதுக்குயா என்னைப் பாராட்டுறீங்க..?’ என்று கேட்டு வாயடைத்துப் போக வைக்கிறார்.

இன்றைக்கு உள்ள பல மீடியா, மோடிக்குச் சாமரம் வீசும் வேலையைச் செய்து வருகின்றன. இவற்றை ‘கோடி மீடியா’ (godi media) என்கிறார் ரவீஷ். “ஆட்சியாளர்களின் மடியில் உட்கார்ந்து கொண்டால் போதும். உங்களை யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். அரசு இன்று ஊடகங்கள் நாரதர் வேலையைப் பார்த்தால் போதும் என்று விரும்புகிறது” என்று தான் சார்ந்திருக்கும் துறையைப் பற்றி தனது வேதனையை வெளிப்படுத்துகிறார்.


போலி வரலாறு குறித்தும், தங்களுக்கு வசதிப்பட்ட விதத்தில் வரலாற்றைத் திரிப்பது குறித்தும் ரவீஷ் வெளிப்படுத்தும் வேதனை கவனத்தில் கொள்ள வேண்டியது. அதேபோல ஊடகங்கள் மீது அரசியல்வாதிகள் அவதூறு வழக்குப் போடும்போது  எல்லோருமே சொல்லி வைத்தாற்போல ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார்கள். 
"ஆனால் அவ்வளவு பெரிய தொகையை யாரால் தர முடியும்? ஆகவே, எல்லோருக்கும் பொதுவாக நான் ஒரு தீர்வைச் சொல்கிறேன்:
ஒரு மதிப்பு, ஒரு இழப்பு
ஒரு தேசம், ஒரு மதிப்பு
அனைவருக்கும் ஒன்னே கால் ரூபாய் மரியாதை..!
ஆம். இனி எவராவது அவதூறு வழக்குப் போட்டால், 100 கோடிக்குப் பதிலாக ஒன்னே கால் ரூபாயை வழங்கலாம். இந்த ஒன்னே கால் ரூபாய், கடவுளையே திருப்திப்படுத்த போதுமானது" என்கிறார்.
அவதூறு வழக்குகள் குறித்துப் பேசும்போது பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது குறித்தும் பேசுகிறார். பொதுவாக, வடக்கத்திய ஊடகவியலாளர்கள், தங்கள் பகுதி நிலவரங்களை மட்டுமே பேசுபவர்களாக இருப்பார்கள். ஆனால், ரவீஷ், கர்நாடகாவில் கொல்லப்பட்ட கெளரி லங்கேஷ் குறித்துப் பேசுகிறார். ஆணவக் கொலைகள் குறித்துப் பேசும்போது தமிழகத்தின் சங்கர் – கவுசல்யா வழக்கைத் தொட்டுச் செல்கிறார். 
ஒரு பரந்துபட்ட அனுபவமும், ஆழமான வாசிப்பும் கொண்ட செய்தியாளராக விளங்கும் ரவீஷ், சுதந்திர தினத்தை ஏன் கொண்டாட வேண்டும் என்பதற்கு இந்தக் காரணத்தைச் சொல்கிறார்:
“உங்களால் எவர் மீதும், எந்தவொரு வெறுப்பையும் கடந்து வர முடிந்திருந்தால், உங்கள் சகிப்புத்தன்மை அதிகரித்திருந்தால் சுதந்திர தினத்தை நீங்கள் முழு உரிமையுடன் கொண்டாடலாம்”.
சித்ரா பத்மனாபன், அனுராக் பஸ்நெத் மற்றும் ரவி சிங் ஆகிய மூன்று பேர் சேர்ந்து இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதனால், புத்தகத்தில் ஒரு சமநிலைத்தன்மை இல்லை. அது அசதியை உருவாக்குகிறது. 
அதைவிடப் பெரிய அசதி… தமிழகத் தொலைக்காட்சி செய்தியாளர்கள் யாரும் ரவீஷ் விருது பெற்றதற்காக வாழ்த்துத் தெரிவித்ததாகத் தகவல் இல்லை. தமிழ்ச் சமூகம் உருப்படுமா என்ன..?