Friday, May 24, 2024

கத்தியும் காதலும்!

ந.வினோத்குமார்

2022 ஆகஸ்ட் 12 அன்று, அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுவதற்காகச் சென்றிருந்த‌ ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்தி படுகொலை முயற்சி ஒன்றுக்கு ஆளானார். அந்தத் தாக்குதல் நடந்த சில வாரங்களிலேயே அவரது 'விக்டரி சிட்டி' எனும் நாவல் வெளியானது. அப்போது பலரும், 'இதுதான் ருஷ்தியின் கடைசி படைப்பாக இருக்கும்' என்று நினைத்து வருந்தியிருப்பார்கள். சிலர் அவரைச் சிலுவையில் அறைந்துவிட்ட மகிழ்ச்சியில் சிரித்திருப்பார்கள். 

ஆனால் அடுத்த 18 மாதங்களில் அந்தக் கொலை முயற்சி குறித்தே ஓர் அல்புனைவுப் படைப்புடன் புதிதாக உயிர்த்தெழுந்திருக்கிறார் ருஷ்தி. அந்தப் புத்தகத்துக்கு அவர் சூட்டியிருக்கும் தலைப்பு, 'கத்தி' என்று நேரடி பொருள்படும் ஆங்கிலச் சொல்லான 'நைஃப் (Knife)'. 

தலைப்பைப் பார்த்தால், அந்தப் புத்தகம் கொலை முயற்சி பற்றியதுதான். ஆனால் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, அது தன்னைக் குத்திக் கிழித்த கத்தியின் மீதான தியானம் என்று புரிகிறது. அந்தக் கத்தி உடனான தனது கண நேர உறவாடலைச் சொல்வதன் வழியாக, தனது காதல் வாழ்க்கையையும் அவர் திறந்துகாட்டி நம்மை மலைக்க வைக்கிறார். அதனால் இந்தப் படைப்பை 'கத்தி உடன் ஒரு காதல் கதை' என்றும் சொல்லலாம். அவரது சொற்களிலேயே சொல்வதானால்: A gunshot is action at a distance, but a knife attack is a kind of intimacy, a knife's a close-up weapon, and the crimes it commits are intimate encounters.

1988-இல் அவரது 'தி சாத்தானிக் வெர்சஸ்' எனும் நாவல் வெளிவந்தது. அதற்கு அடுத்த ஆண்டு, அந்தப் புத்தகம், 'மத நிந்தனை செய்கிறது' என்று சொல்லி ஈரானின் அயோதுல்லா ருஹோல்லா கொமேய்னி அவர் மீது 'ஃபத்வா' விடுத்தது பலரும் அறிந்தது. அன்றிலிருந்து ருஷ்தியின் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு தாக்குதல்கூட அதன் விளைவுதான் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு அந்தப் புத்தகம் காரணம் அல்ல என்று ருஷ்தி, இந்தப் புத்தகத்தின் ஆரம்ப அத்தியாயத்திலேயே தெளிவுபடுத்திவிடுகிறார். அப்படியெனில் என்னதான் காரணம்? அதை நீங்களே வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

அந்தக் கொலை முயற்சித் தாக்குதலுடன், பிரபலக் கவிஞரும் தனது மனைவியுமான ரேச்சல் எலிசா க்ரிஃபித்ஸ் உடன் தனக்குக் காதல் அரும்பியது எப்படி என்பதை விவரிக்கும்போது ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்: If a thing is not made public, it doesn't really exist.

அவரது காதலும் திருமணமும் பல ஆண்டுகள் 'ரகசியமாக', அதாவது அந்த இருவரின் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கு மட்டும் தெரிந்து, 'சமூக ஊடகம்' எனும் வெளி உலகத்துக்குத் தெரியாமல் வைத்துக் கொண்டது ஏன் என்பதை நாம் விளங்கிக்கொள்ளும்போது, மேற்கண்ட வரியின் சாஸ்வதம் உணரலாம்.

மருத்துவக் கட்டுகளை மெல்ல மெல்ல அவிழ்ப்பதுபோல, தன்னைக் கொலை செய்ய முயற்சித்த இளைஞனுடன் கற்பனை உரையாடலை நடத்தி அவன் உளவியலைப் புரிந்துகொள்ள அவர் மேற்கொண்ட‌ முயற்சி, உலகில் புரையோடிப் போயிருக்கும் வெறுப்பரசியலை அறுத்துக் காண்பிக்கிறது. ருஷ்தி அந்த இளைஞனைப் பற்றி என்ன நினைக்கிறார்? அது அந்த இளைஞனுக்கு அவர் வழங்கிய‌ மிகச் சிறந்த தண்டனை. மிகக் கொடிய மன்னிப்பு. அந்த மனத்தை நம்மில் எத்தனை பேரால் கைக்கொள்ள இயலும்?

புத்தகம் நெடுக, தான் வாசித்த புத்தகங்கள், அதில் தனக்கு நெருக்கமான பகுதிகள், வரிகள் ஆகியவற்றைச் சொல்லும் அழகு, நம்மை அந்தப் புத்தகங்களைத் தேடிப் போக வைக்கிறது. ஓர் எழுத்தாளர் செய்ய வேண்டிய தார்மீகக் கடமைகளில் ஒன்று அவ்வாறு புத்தகங்களை அறிமுகப்படுத்துவது... வாசகரின் கடமை அதைத் தேடிப் போவது.

இந்தப் படைப்பின் மூலம் நாம் கற்றுக்கொள்ளவும் நம்பிக்கை கொள்ளவும் ஒரு விஷயம் உண்டு. "ஒரு பேரிடரைச் சந்தித்து நீங்கள் உயிர் மீளும்போது, உங்கள் பண்பு சிறக்கிறது. உங்கள் ஆளுமை உயர்கிறது. உங்கள் வாழ்க்கை மேம்படுகிறது". ருஷ்தி சந்தித்த அந்தப் பேரிடர், அவர் எழுத்தையும் மேலும் அழகாக்கி இருக்கிறது!

நன்றி படங்கள்: Amazon.in (book cover), Wikipedia (Salman Rushdie)

No comments:

Post a Comment