Wednesday, November 8, 2017

பணமதிப்பு நீக்கம் ஒரு நாடகம்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 10 அக்டோபர் 2017


கடந்த நவம்பர் 8 இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் குறித்து விமர்சனக் குரல்கள் எழுந்திருக்கின்றன. உலக அரங்கில், பல்துறை ஆய்வு முடிவுகளை வெளியிடும் மிக முக்கியமான ஆய்விதழாக இந்தியாவிலிருந்து வெளியாகும் ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ இதழின் ஆசிரியராகச் சுமார் 12 ஆண்டுகாலம் பணியாற்றிய சி.ராம் மனோகர் ரெட்டியும் இந்நடவடிக்கையை விமர்சிக்கிறார். ‘டீமானிடைசேஷன் அண்ட் பிளாக் மணி’ (ஓரியண்ட் பிளாக் ஸ்வான்’ பதிப்பக வெளியீடு) எனும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தையொட்டி, ‘தி இந்து மையம்’ சமீபத்தில் விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்த ராம்மோகன் ரெட்டியைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

மக்களின் எதிர்ப்பு இல்லாத காரணத்தாலேயே பண மதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

இந்தக் கேள்வியை நான் இரண்டு விதமாகப் பார்க்கிறேன். ஒன்று, இந்த நடவடிக்கை மூலம் அரசு என்ன சாதித்தது? இரண்டு, மக்கள் இந்த நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறார்கள்?

முதல் கேள்விக்குப் பதில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் அரசு, மிகக் குறைந்த அளவே சாதித்திருக்கிறது. பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு, கடந்த மூன்று நான்கு மாதங்களில், அரசுக்குத் திரும்பக் கிடைத்திருக்கும் கறுப்புப் பண அளவு, மிகவும் குறைவுதான். ஆர்.கே. நகரைப் பாருங்கள். எவ்வளவு கறுப்புப் பணம் புழங்கியிருக்கிறது? 

இரண்டாவது கேள்விக்குப் பதில், இந்த நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ‘கறுப்புப் பணம் ஒழியும்’ என்று நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர மக்கள் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்கூட, அவர்கள் எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் இப்போது உண்மையை உணர்ந்திருப்பார்கள்.


கள்ள நோட்டுக்களைக் கட்டுப்படுத்துவது இந்த நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. அது சரிதானா?

நிச்சயமாக இல்லை. காரணம், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போதும் புதிய 2,000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பிடிபட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆக, இந்தப் புதிய ரூபாய் நோட்டுக்கள் முன்பு நம்மிடையே இருந்த ரூபாய் நோட்டுக்களில் இருந்த அதே அம்சங்களையே கொண்டிருக்கின்றன. புதிய ரூபாய் நோட்டுக்களில் கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமில்லை.

இந்த நடவடிக்கையின்போது, தங்களிடமிருக்கும் கணக்குக் காட்டப்படாத பணத்தை ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் திட்ட’த்தின் கீழ் வங்கியில் டெபாசிட் செய்ய மத்திய அரசு வழிவகை செய்தது. இதன் மூலம் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை கறுப்புப் பணம் வசூலாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வெறும் ரூ.4,000 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்துவிட்டது இன்று இதிலிருந்தே தெரிகிறதே! பணமதிப்பு நீக்கத்தால், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள்தான் அதிகப் பயனடைந்துள்ளார்கள். காரணம், வங்கிகள் மூலம் அவர்கள் தங்களின் பணத்தை வெள்ளையாக மாற்றிவிட்டார்கள். நீங்கள் குறிப்பிட்ட திட்டத்தையும் அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சுலபமாகத் தப்பித்துவிட்டார்கள்.

மேலும், அந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகளில், வருமானத்தில் 25%-க்கும் குறைவாகக் கணக்குக் காட்டப்படாத பணத்தை டெபாசிட் செய்தவர்களை இப்போது, வருமான வரித்துறை தனக்குக் கிடைத்துள்ள கூடுதல் அதிகாரத்தின் காரணமாக, வன்கொடுமைக்கு உள்ளாக்கி வருகிறது. அதாவது, சட்டத்தை மதித்து நடந்துகொண்டவர்கள் மாட்டிக்கொள்ள மறுபக்கம், சட்டத்தை மதிக்காதவர்கள் தப்பித்துக்கொண்டார்கள்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது வெறும் பொருளாதார நடவடிக்கை என்பதைத் தாண்டி, அது ஒரு அரசியல் தந்திரம் என்கிறீர்கள். அதை விளக்க முடியுமா?

நிச்சயமாக! முதல் விஷயம், பணமதிப்பு நீக்க அறிவிப்பு ரகசியமாக வைக்கப்பட்டது. முன்னறிவிப்பு கொடுத்தால், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் உஷாராகிவிடலாம் என்று அரசு நினைத்திருக்கலாம். ஆனால், அவ்வளவு ரகசியமாக வைத்தும், பலர் தப்பித்துக்கொண்டார்கள் என்பதுதான் கவலையளிக்கும் விஷயம்.

கறுப்புப் பொருளாதாரத்தை ஒழிப்பதுதான் எங்களின் லட்சியம் என்கிறது அரசு. கறுப்புப் பணம், அதில் ஒரு சிறு பங்குதான். அதனால்தான் மோடி, கறுப்புப் பணத்தை ஒழிப்பது எங்களின் முதல் நடவடிக்கை என்றார். ஆனால் அந்த நடவடிக்கைக்குப் பிறகு, வேறு பெரிய நடவடிக்கைகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதுவே அவர்களின் மெத்தனத்தைக் காட்டுகிறது.

உதாரணத்துக்கு, இந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட பட்ஜெட்டை எடுத்துக்கொள்ளுங்கள். தேர்தல் நன்கொடைகளில் பெரிய அளவில் கறுப்புப் பணம் கைமாறுகிறது. எனவே அதைத் தடுக்க ‘தேர்தல் பத்திரங்கள்’ என்ற விஷயம் இந்த பட்ஜெட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்கள், வங்கிகள் மூலம் இந்தப் பத்திரங்களைப் பயன்படுத்தலாம். இதனால் ஒருவர், தான் எந்தக் கட்சிக்கு நிதி அளித்தேன் என்பதை வெளிப்படுத்தத் தேவையில்லை. அதேபோல, தான் யாரிடமிருந்து நிதி பெற்றேன் என்று கட்சியும் வெளிப்படுத்த அவசியமில்லை. இது மேலும் குழப்பத்தையே விளைவிக்கும். கறுப்புப் பணம் அதிகமாக இது வழிசெய்யும்.

நவம்பர் 8-ம் தேதி பிரதமரின் உரையில், ‘ஊழல், கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்றார். ஆனால் அந்த அறிவிப்பு அடுத்த நாள் அரசிதழில் வெளியானபோது, ஊழல் என்ற வார்த்தை காணப்படவில்லை. ஏன் என்ற கேள்விக்கு, பிரதமர்தான் பதில் சொல்ல வேண்டும்.

 
அப்படியென்றால், பணமதிப்பு நீக்கத்தின் நோக்கம்தான் என்ன?

இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு கள்ள நோட்டுக்கள் வெளியாகின. அந்தத் தோல்வியை மறைக்க, ‘கறுப்புப் பணத்தை ஒழிப்போம்’ என்று சொல்லப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு, எதிர்பார்க்கப்பட்ட அளவு கறுப்புப் பணம் வரவில்லை. அந்தத் தோல்வியை மறைக்க ‘பணமில்லாப் பொருளாதாரம்’ என்று சொன்னார்கள். ஆனால் முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ‘பணமில்லாப் பொருளாதார’ பிரச்சாரமும் இப்போது தோல்வியைத் தழுவியுள்ளது.

ஆட்சிக்கு வந்த பிறகு, அம்பானி, அதானிகளுக்கு நிறைய சலுகைகள் 
வழங்கப்பட்டன. இதனால் மோடி அவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. அதனால் அவர்மீது மக்கள் வெறுப்புடன் இருந்தார்கள். அதிலிருந்து தன் மீதான பிம்பத்தை நிலைநிறுத்திக்கொள்ள, இப்படி ஒரு நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். ஆம், பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது ஒரு நாடகம். அந்த நாடகத்தின் மூலம் அவருக்குத் தேவையான அளவு அரசியல் வெற்றி கிடைத்துவிட்டது. ஆனால், பொருளாதாரம்தான் சிக்கலில் மாட்டிக்கொண்டது!

நன்றி: தி இந்து

Friday, October 13, 2017

ஆருஷி கொலைக்கு 'அவர்களே' காரணம்!

ந.வினோத்குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 29 ஜனவரி 2016

இந்திய வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘டாப் 10' கொலைக் குற்ற வழக்குகளைப் பட்டியலிட்டால் அதில் நிச்சயமாக இடம்பிடிக்கும் தன்மை கொண்டது ஆருஷி தல்வார் கொலை வழக்கு.

‘யார் கொன்றார்கள்?' இதுதான் அந்த வழக்கின் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட கேள்வி. ஆனால் அந்தக் கேள்வி கூட முக்கியமில்லை. 'ஆருஷியின் பெற்றோர்கள் இந்தக் கொலையைச் செய்தார்களா?' என்ற கேள்விதான் கேட்கப்பட வேண்டும் என்று வாதிடுகிறது 'ஆருஷி' புத்தகம்.

பத்திரிகையாளர் அவிரூக் சென் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். வெளிநாட்டில் 'ஃப்ரிலான்ஸ்' பத்திரிகையாளராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த இவர், இந்த வழக்கு தொடர்பாக எழுதுவதற்காகவே இந்தியா வந்தார்.

ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார்-நுபுர் தல்வார் தம்பதிக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை அவிரூக் சென் அலசும் விதத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது நியாயம் யார் பக்கமென்று!

அதைத் தவிர இந்திய சமூகத்தின் சமகால அரசியல், அறிவியல், போலீஸ் விசாரணை, நீதிமன்ற வழக்கங்கள், சிறை நடத்தை முறைகள் ஆகியவற்றையும் அங்கங்கே தொட்டுச் செல்வதின் மூலம், ஒரு குற்ற வழக்கை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சி எப்படியெல்லாம் கட்டமைக்கப்படுகிறது என்பதையும் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.

இந்தியாவில் முதன்முதலில் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட‌ ‘நார்க்கோ அனாலிசிஸ்' விசாரணை 1989-ம் ஆண்டு டாக்டர் எஸ்.எல்.வயா எனும் பெண் ஒருவரால் நடத்தப்பட்டது எனும் தகவல்...

‘முன்பெல்லாம் வீட்டு வேலைக்காரர்கள் நம் குடும்பங்களில் ஒருவராக இருந்தனர். ஆனால் இப்போது அப்படியல்ல' எனும் சமூகப் பார்வை...

‘காவலர்கள் பலர் வழக்கைப் புலனாய்வு செய்வதை விடவும் வாக்குமூலங்களைப் பெறவே முனைகிறார்கள், காரணம் அதுதான் நீதிமன்றத்தில் சுலபமாகத் தண்டனை பெற்றுத் தரும் வழியும், சோம்பேறித்தனமான வழியுமாகும்' எனும் காவல்துறையின் போக்கு...

‘ஆருஷியின் ‘வஜைனல் ஸ்வாப்'பை நீங்கள் ஏன் அடையாளமிடவில்லை?' என்று மருத்துவர் ஒருவரைக் கேட்டதற்கு, ‘உத்தரப் பிரதேசத்தில் ‘வஜினல் ஸ்வாப்' எடுக்கும் வழக்கம் இல்லை' என்று சொன்னார் (இது 2008-ம் ஆண்டில் நடந்தது!) எனும் தகவலின் மூலம் நூலாசிரியர் முன்வைக்கும் மருத்துவத்துறையின் அக்கறையின்மை...

‘க்ரைம் ஸீன் ரீகன்ஸ்ட்ரக்ஷன்' எனும் முறையில் உள்ள குளறுபடிகள்... என பல தகவல்கள் மூலம் இந்த வழக்கை 360 டிகிரி கோணத்தில் அணுகி பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார் அவிரூக் சென்.


சமீபத்தில் ‘தி இந்து' நடத்திய ‘லிட் ஃபார் லைஃப்' விழாவில் தன் புத்தகம் குறித்த உரையாடல் நிகழ்வுக்கு வந்திருந்த அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

உங்கள் புத்தகத்தைப் படிக்கும் ஒருவருக்கு இந்தக் கொலைக்கும் ஆருஷியின் பெற்றோருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது தெரிய வரும். ஆனால், அவர்களை 'இன்னொசன்ட்' என்று சொல்லி விட முடியுமா?

நீதிமன்றத்தில் ராஜேஷ் மற்றும் நுபுர் தம்பதிக்கு எதிராக வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பார்த்தாலே உண்மை விளங்கும். அவை அனைத்துமே ஜோடிக்கப்பட்டவை. தவிர, இந்தக் கொலையை விசாரிக்கத் தேவையான‌ அடிப்படையான இரண்டு விஷயங்கள். வெப்பன் (கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம்) மற்றும் மோட்டிவ்! இவை இரண்டுமே இந்த வழக்கில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இந்த வழக்குக்காக தல்வார் தம்பதி உட்பட இதில் தொடர்புடைய அனைவரையும் சந்தித்துப் பேசியிருக்கிறீர்கள். ஆனால் தல்வார் வீட்டில் வேலை பார்த்துவந்தவரும் ஆருஷியுடன் கொல்லப்பட்டவருமான ஹேம்ராஜின் நண்பர்களை நீங்கள் ஏன் சந்திக்கவில்லை?

ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகியோர் கொல்லப்பட்ட சமயத்தில் நான் இந்தியாவில் இல்லை. ஆருஷி கொலை வழக்கு நீதிமன்றத்தில் தொடங்கப்போகும் சமயத்தில் ‘மும்பை மிரர்' பத்திரிகையிலிருந்து இந்த வழக்கை ரிப்போர்ட் செய்ய வேண்டும் என ‘அசைன்மென்ட்' வழங்கப்பட்டது. 
நான் இங்கு வந்த சமயத்தில் ஹேம்ராஜின் நண்பர்கள் மூன்று பேரும் நேபாளத்துக்குச் சென்று விட்டார்கள். நேபாளம்தான் அவர்களின் தாய்நாடு.

ஆருஷி கொலைக்குப் பிறகு சில மாதங்களில் அவர்களும் ‘நார்க்கோ அனாலிசிஸ்' உள்ளிட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவருமே ‘இவன் தான் கொலை செய்தான், நான் பார்த்தேன்', ‘அவன் தான் கொலை செய்தான், நான் பார்த்தேன்' என ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தியதும் தெரியவந்தது. இருந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டார்கள். உடனே அவர்கள் நேபாளத்துக்குத் தப்பிவிட்டார்கள். அதனால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்தக் கொலையை ‘ஆணவக் கொலை' என்று கூறப்படுவது பற்றி?

அது தவறான பார்வை. தல்வார் தம்பதியைக் குற்றவாளிகள் என்று கூறிய நீதிமன்றம் இந்தக் கொலையை ‘ஆணவக் கொலை' போன்று சித்தரித்துள்ளது. ஆனால் ‘இது ஆணவக் கொலையேதான்' என்று அது வெளிப்படையாகச் சொல்லவில்லை.

ஆருஷி கொலை வழக்கு சமீபத்தில் ‘தல்வார்' என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக வந்ததே? நீங்கள் பார்த்தீர்களா?

ஆம். பார்த்தேன். நன்றாகவே இருந்தது. ஆனால் அது ஃபிக் ஷன். கொஞ்சமே கொஞ்சம் உண்மையான விஷயங்களுடன் ஒத்துப்போகிறது. என்னுடைய புத்தகமோ முழுக்க முழுக்க நான்-ஃபிக் ஷன்!

  
இந்த வழக்கில் மிகவும் நெருடலாக நீங்கள் உணர்ந்த விஷயம் எது?

ஆருஷி கொலை செய்யப்பட்டது தெரியவந்த 2008-ம் ஆண்டு மே15-ம் தேதி காலை, தல்வார் தம்பதி வீட்டுக்கு முதலில் சென்றது பாரதி மண்டல் எனும் வேலைக்காரப் பெண்தான். அன்று அவள் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலம் வேறு. அதே வாக்குமூலம் வழக்கு நடைபெற்ற 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வேறு விதமாகத் திரிக்கப்பட்டது. அப்போது பாரதி மண்டல், ‘போலீஸார் எனக்கு என்ன சொல்லிக் கொடுத்தார்களோ, அதைத்தான் இங்கு சொல்கிறேன்' என்று வெளிப்படையாகவே சொன் னார். இதை என்னவென்று சொல்வது?

என்னதான் சொல்லுங்கள். தல்வார் தம்பதிக்கு வழங்கப்பட்டது ஒரு ‘ஸ்லோ டெத்!'

நன்றி: தி இந்து (இளமை புதுமை)

அவிரூக் சென் படம்: ந. வினோத்குமார்

Monday, August 28, 2017

நிலம் இழக்கும் பழங்குடிகளின் கதைகள்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 04 டிசம்பர், 2016


உலகமயமாக்கலின் 25-ம் ஆண்டை அலசுகிற அதே நேரத்தில், இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில், பழங்குடிகள் அழிந்துவரும் உண்மையை நம்மில் பலர் அறிந்துகொள்ள முற்படுவதே இல்லை.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அவர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்படுகிறது. மாறி வரும் நிலப் பயன்பாடுகள் அவர்களின் கலாச்சாரத்தை நிறமிழக்கச் செய்துவருகின்றன. ‘நான் என்பது நிலம்’ என்ற தத்துவத்தின்படி வாழ்ந்துவருகிறவர்களின் நிலங்கள் பறிக்கப்படுகிறபோதும், அதிலிருந்து துரத்தியடிக்கப்படுகிறபோதும் அவர்களின் மொத்த இருப்பும் கேள்விக்குள்ளாகிறது.

இப்படியான சூழலில்தான் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது ‘தி ஆதிவாசி வில் நாட் டான்ஸ்’ எனும் புத்தகம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சந்தால் பழங்குடியின மக்களைப் பற்றிய 10 சிறுகதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பை ‘ஸ்பீக்கிங் டைகர்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஹன்ஸ்தா சோவேந்திர சேகர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மருத்துவராகப் பணியாற்றிவரும் இவரே சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்தான். இது இவருக்கு இரண்டாம் புத்தகம்.

 
நம் ஊர்களில் ‘பிறர் கண் வைத்துவிட்டால், நமக்கு ஆகாது’ என்று நம்பப்படுகிற ஒரு வழக்கம் எப்படிப் புழங்கிவருகிறதோ, அதுபோல சந்தால் பழங்குடியினர் மத்தியிலும் இந்த ‘கண் வைத்தல்’ எனும் தொன்மம் புழங்கிவருகிறது. அதன் அடிப்படையில் சேகர் எழுதிய ‘தி மிஸ்டீரியஸ் எய்ல்மென்ட் ஆஃப் ரூப்பி பஸ்கி’ எனும் நாவல்தான் அவரின் முதல் புத்தகம். அது, 2014-ம் ஆண்டுக்கான ‘தி இந்து பிரைஸ்’ விருதுக்கான இறுதிப் பட்டியலில் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விருது இந்தியாவில் ஆங்கிலத்தில் வெளியான சிறந்த புனைவு இலக்கியங்களுக்கு ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ நிகழ்வில் வழங்கப்படுகிறது.

அந்த விருது அந்தப் புத்தகத்துக்குக் கிடைக்க வில்லை. ஆனால், அதே புத்தகம்தான் அவருக்கு 2015-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் ‘யுவ புரஸ்கார்’ விருதைப் பெற்றுத் தந்தது.

இந்நிலையில், அவரது இந்த இரண்டாம் புத்தகம், தற்போது 2016-ம் ஆண்டுக்கான ‘தி இந்து பிரைஸ்’ விருதுக்கான இறுதிப் பட்டியலில் தேர்வாகியிருக்கிறது. இரண்டாவது முறையாக ஒரு எழுத்தாளரின் புத்தகம் இறுதிப் பட்டியலில் தேர்வாகியிருப்பதால், இந்தப் புத்தகத்துக்கு இந்த ஆண்டு அந்த விருது கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
புத்தகத்தின் சிறப்பு

பணி மாற்றல் காரணமாகத் தங்களின் சொந்த ஊரை விட்டு குஜராத் மாநிலத்துக்கு இடம்பெயரும் சந்தால் பழங்குடியினத் தம்பதி ஒன்று, அசைவ உணவு சமைக்கக் கூடாது எனும் எழுதப்படாத சட்டத்துக்கு ஏற்பத் தனது வாழ்க்கை முறையை எப்படி மாற்றிக்கொள்கிறது என்பதைப் பேசுகிறது ஒரு கதை. இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கும் 50 ரூபாய்க்குமாக ஒரு சந்தால் பழங்குடியினப் பெண் எவ்வாறு போலீஸ்காரர் ஒருவரின் இச்சைக்கு ஆளாக்கப்படுகிறார் என்பதைச் சித்தரிக்கிறது இன்னொரு கதை. நிலக்கரி எடுப்பதற்காகத் தங்களின் நிலங்களைப் பறிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அரசுக்கும் எதிராக ஒரு சந்தால் பழங்குடி எப்படி எதிர்வினையாற்றுகிறார் என்பதைக் கூறுகிறது மற்றொரு சிறுகதை.


இப்படி, இந்தத் தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளும் சந்தால் பழங்குடியின மக்கள் தினசரி சந்திக்கும் பிரச்சினைகளைக் களமாகக் கொண்டிருக்கின்றன. ‘நாங்கள் பொம்மைகள் போன்றவர்கள். யாரோ ஒருவர் ‘ஆன்’ பட்டனை அழுத்தவோ எங்கள் பின்னால் ஏதோ ஒரு சாவியைத் திருகவோ செய்கிறார். உடனே சந்தால்கள் ஆகிய நாங்கள் தாளம் தட்டவோ, பீப்பி ஊதவோ செய்துகொண்டே ஆடத் தொடங்குகிறோம். அப்படி ஆடும்போதே, நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும் நிலத்தை யாரோ அபகரிக்கிறார்கள். நான் சொல்வது சரியா?’ என்று புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு கேட்கிறது. தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதையிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வரிகள், நுகர்வுக் கலாச்சாரத்தில் மயங்கிக் கிடக்கிற நம்மை அறைவதாகத் தோன்றுகிறது.

சந்தால் பழங்குடியினரைப் பற்றி நன்கு தெரிந்தவர்களால் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டால், ‘சோளகர் தொட்டி’க்குப் பிறகு தமிழில் வரும் மிக முக்கியமான பழங்குடி இலக்கியமாக இது திகழும் என்பதில் ஐயமில்லை!

நன்றி: தி இந்து (கலை இலக்கியம் - சிறிய மாற்றங்களுடன்)

ஹன்ஸ்தா சோவேந்திர சேகரின் படம்: ஸ்பீக்கிங் டைகர் புக்ஸ்.காம்

Tuesday, August 8, 2017

'ரோரிங்' ஃபெடரர்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 08 ஆகஸ்ட், 2017


ஜூனியர் டென்னிஸ் வீரராக, 1998-ல் விளையாட்டுத் துறைக்கு அறிமுகமானார் ஃபெடரர். அவரின் தொடக்க காலத்தில், அதிகம் கோபப்படுபவராக அறியப்பட்டார். போட்டிகளில் தோல்வியடைந்தால் மைதானத்திலேயே தன்னுடைய டென்னிஸ் ராக்கெட்டை உடைப்பவராகவும், விளையாடும்போது ‘ஆ.. ஊ..’ என்று கத்திக்கொண்டு ஆக்ரோஷம் கொண்டவராகவும் இருந்தார்.

கோபம் தணிந்தது!

ரோஜரின் திறமை மீது நம்பிக்கை கொண்ட பலரும், “ஃபெடரருக்கு இந்தக் கோபம் ஆகாது. தன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த அவர் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்கள். ஆனால், ஃபெடரர் கேட்பதாக இல்லை.

இந்நிலையில், சிறுவயது முதல் அவருக்குப் பயிற்சியளித்து வந்த பீட்டர் கார்ட்டர் என்பவர், எதிர்பாராதவிதமாக விபத்தில் இறந்தார். அதுவரை, ஃபெடரர் எந்த ஒரு இரங்கல் நிகழ்வுக்கும் சென்றதில்லை. அவர் கலந்துகொண்ட முதல் இரங்கல் நிகழ்வு, பீட்டர் கார்ட்டருடையது. 

 
அவரின் மரணம், ஃபெடரரை ஆழமாகத் தாக்கியது. ஃபெடரரின் போக்கில் விளையாட விட்ட கார்ட்டர், ஒருபோதும் ஃபெடரரின் கோப குணத்துக்காகக் கடிந்துகொண்டதில்லை. எனவே, கார்ட்டரின் இறப்பு, ஃபெடரரின் நடத்தையில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. நாளடைவில் கோபத்தைக் குறைத்துக் கொண்டார்.

வெற்றியோ தோல்வியோ மைதானத்தில் தனது உணர்வுகளை வெளிக்காட்டாமல், அமைதியாக இருக்கப் பழகிக் கொண்டார். இன்றைய அவரின் பக்குவப்பட்ட ஆட்டத்துக்கு இதுதான் காரணம் என்கிறது ‘ஃபெடகிராஃபிகா’!


கிராஃபிக் பயோகிராஃபி

டென்னிஸ் விளையாட்டில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு காலம் இருக்கும். அந்தக் காலத்தில் மட்டுமே அவர் போற்றப்படுவார். சிலர் மட்டுமே எக்காலத்துக்கும் போற்றக்கூடியவர்களாக இருப்பார்கள். ரோஜர் ஃபெடரர், இனி வரும் எல்லாக் காலத்துக்குமான நாயகனாக இருப்பார். 

 
டென்னிஸ் வரலாற்றில் அதிக அளவு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைப் பெற்ற ஆடவர், அதிகமாகச் சம்பாதிக்கும் வீரர், தரவரிசைப் பட்டியலில் பல வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர், அதிக அளவு விம்பிள்டன் பட்டங்களை வென்றவர், தொடர்ச்சியாக ஐந்து முறை யு.எஸ்.ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் என ஃபெடரரின் சாதனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

















அத்தகைய பெருமைகளுக்குரிய ஃபெடரரைப் பற்றி, அவரின் வாழ்க்கை பற்றி ஒன்றிரண்டு புத்தகங்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகியுள்ளது ‘ஃபெடகிராஃபிகா’ எனும் புத்தகம். பிரபல டென்னிஸ் எழுத்தாளர் மார்க் ஹாட்கின்ஸன் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
 
இந்தப் புத்தகத்தில், ரோஜர் ஃபெடரரின் வாழ்க்கை, அவரின் சாதனைகளின் வழியாகச் சொல்லப்படுகிறது. அந்தச் சாதனைகள், புள்ளிவிவரங்கள், வரைபடங்கள் ஆகியவற்றின் மூலம் ‘இன்ஃபோ கிராஃபிக்ஸ்’ ஆகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதனால், இந்தப் புத்தகம், ஃபெடரரைப் பற்றிய ‘கிராஃபிக் பயோகிராஃபி’யாக வெளியிடப்பட்டுள்ளது.

இன்று, ஃபெடரர் தனது 36-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். அவரின் பிறந்த நாளில், இந்தப் புத்தகம் பற்றி நாம் அறிந்துகொள்வது, ஃபெடரரை அறிந்து கொள்வதாகும்!


நன்றி: தி இந்து (வெற்றிக்கொடி - சிறு மாறுதல்களுடன்)

Monday, July 17, 2017

ஊழலை ஒழிக்க முடியுமா?

ந.வினோத் குமார்

இந்தியாவுக்கும் ஊழலுக்கும் கிழக்கிந்திய கம்பெனி இங்கு கால்பதிக்கத் தொடங்கியதிலிருந்தே உறவு இருக்கிறது. உயர் பதவிகளில் இருப்பவர்களிடையே மட்டுமல்ல. சாமானியர்களின் அன்றாட பேச்சு வழக்கு, கிசுகிசு, வாழ்க்கை முறை ஆகியவற்றில்கூட ஊழல் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதைத்தான் குன்னார் மிர்தால் எனும் ஸ்வீடன் நாட்டுப் பொருளாதார அறிஞர், ‘ஃபோக்லோர் ஆஃப் கரப்ஷன்’ என்றார்.

வரலாற்றாசிரியர் ஏ.கே.ராமானுஜன் தன்னுடைய ‘முந்நூறு ராமாயனங்கள்’ எனும் கட்டுரையின் இறுதியில் இப்படிச் சொல்லியிருப்பார்: “இந்தியாவில் எவர் ஒருவரும், ‘இப்போதுதான் ராமாயனத்தை முதன்முதலாகக் கேட்கிறேன்’ என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், இது காலம் காலமாக இருந்து வருகிறது”. இது ஊழலுக்கும் பொருந்தும். ‘இப்போதான்யா இப்படி ஒரு ஊழலைக் கேள்விப்படுறேன்’ என்று எந்த இந்தியரும் சொல்ல முடியாது. காரணம், பிறப்பு முதல் இறப்பு வரை இந்தியர் ஒருவர், பல்வேறு தளங்களில் ஊழலைப் பற்றி கேட்டு, பேசி, படித்து, சந்தித்து வருகிறார்.

 
இந்நிலையில், ‘ஊழலை ஒழிக்க முடியாதா?’ என்று உங்களுக்குள் கேள்வி எழுந்தால் என்ன செய்வீர்? ‘தி இந்து’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் எழுதிய ‘ஒய் ஸ்கேம்ஸ் ஆர் ஹியர் டு ஸ்டே’ எனும் புத்தகத்தைப் படியுங்கள். ‘இந்தியாவில் நிகழும் அரசியல் ஊழலைப் புரிந்துகொள்ளுதல்’ எனும் உபதலைப்புடன் வந்திருக்கும் இந்தப் புத்தகத்தை ‘ஆலெஃப்’ பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அரசியல் ஊழல்

ஊழலின் வகைகள், ஊழலின் வரலாறு, அதை வரையறுக்கும் முறை, இந்தியாவில் அதைப் பற்றிய புரிதல், தமிழகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஊழலுக்குப் பின்னுள்ள அறிவியல் என்று பரந்த தளங்களில் பேசும் இந்தப் புத்தகம் ‘அரசியல் ஊழல்’ என்பதை மையமாக வைத்துச் சுழல்கிறது.

எது அரசியல் ஊழல்? தன்னுடைய சுயலாபத்துக்காகவோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களின் நலனுக்காகவோ, தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி காரியங்களைச் சாதித்துக் கொள்வது. இருக்கும் ஊழல்களிலேயே இதுதான் மிகவும் ஆபத்தான ஊழல். காரணம், இதில் பகடையாடப்படுவது நாட்டு மக்களும் அவர்களின் நலனும் அல்லவா!

போஃபர்ஸ் ஊழல்தான் இந்தியாவில் நடந்த முதல் பெரிய ஊழல். அதைத் தொடர்ந்து சிமெண்ட் ஊழல், தீவன ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், வியாபம் ஊழல் எனப் பல ஊழல்களை இந்த தேசம் சந்தித்திருக்கிறது. சரி, அந்த ஊழல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று பார்த்தால்… உதட்டைப் பிதுக்குவதைத் தவிர வேறெதுவும் பதிலில்லை.

இந்தப் புத்தகத்தில், போஃபர்ஸ் ஊழலை ‘தி இந்து’ எப்படி வெளிக்கொணர்ந்தது, அப்போது அது சந்தித்த சவால்கள் என்ன, அந்த ‘ரிப்போர்டேஜ்’களினால் இந்திய பத்திரிகைத் துறையில் விளைந்த மாற்றங்கள் என்ன, அந்த ஊழல் மீது நீதித்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர்.

  
போஃபர்ஸ் ஊழலின் போது ‘தி இந்து’ தவிர, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘இந்தியா டுடே’ ஆகியவற்றின் பங்களிப்புகள் குறித்தும் தொட்டுச் செல்லும் அவர், ‘வியாபம்’ ஊழல் இவ்வளவு காலம் வெளிவராமல் இருந்ததற்கு இந்தி மொழி பத்திரிகைகளும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

முதலாளித்துவத்தின் அங்கம்

ஊழலைப் பற்றிய புரிந்துகொள்ளல் இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதைக் குறித்து விவரிக்கும்போது, ‘ஊழல் என்பது முதலாளித்துவத்தின் அங்கம்’ என்பதாகவே மார்க்சிஸம் கருதி வந்திருப்பதாக ராம் கூறுகிறார்.

அதனால்தான் என்னவோ, ஊழலின் வகைகள் குறித்துப் பேசும்போது, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ‘ஃப்ராடு’ தனங்களையும் ஊழலாகக் கருதுகிறார் அவர். அதற்கு உதாரணமாகப் பல ஆய்வுகளைக் காட்டுகிறார். அதில் சுவாரஸ்யமான ஒரு ஆய்வு 2017-ம் ஆண்டு எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்துக்காக இப்சாஸ் எம்.ஓ.ஆர்.ஐ. எனும் நிறுவனம் மேற்கொண்டது. அதில் தங்களுடைய கரியரையும் ஊதியத்தையும் உயர்த்திக் கொள்வதற்காக சுமார் 41 சதவீத இந்திய ஊழியர்கள், எந்த விதமான அதர்மமான வழிகளையும் பின்பற்றத் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்ததாம். அந்த ‘அதர்மமான வழிகளில்’ உயரதிகாரிகளுக்கு ‘சோப்பு’ போடுவதும் அடங்குமா என்பது தெரியவில்லை!

‘லைசன்ஸ் ராஜ்’ இருந்த காரணத்தினால்தான் இந்திய அரசியல் பொருளாதாரப் பரப்பில் ஊழல் என்பதே தோன்றியது என்று சொன்னவர்கள், எல்லாவற்றையும் தாராளமயமாக்கினால் ஊழல் ஒழிந்துவிடும் என்றும் சொன்னார்கள். ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகும் ஊழல் தொடர்வதை என்னவென்று சொல்ல?

சாராயச் சாப்பாடு

இப்படியான ஊழல் தமிழகத்தில் எப்படி தலைவிரித்தாடுகிறது என்பதைச் சில வரலாற்றுத் தகவல்களுடன் நிரூபிக்கிறார் ராம். 1967-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வரும் வரை தமிழகம் ஊழலில்லாமல் ஓரளவு சுத்தமாகவே இருந்தது. அண்ணாவின் இரண்டு வருட ஆட்சியிலும் அந்தச் சுத்தம் தொடரவே செய்தது. ஆனால் 1972-ம் ஆண்டு தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து வந்த பிறகு, தமிழகத்தில் மு.கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் எவ்வாறெல்லாம் ஊழல் நடந்திருக்கிறது என்பது தெரிய வந்தது. 

  
அதற்குப் பிறகு முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர்., ஓரளவு சுத்தமான ஆட்சியை வழங்கவே செய்தார். ஆனால் அவரின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் (ஜூன் 1980 – டிசம்பர் 1984) இனி வரும் எல்லாக் காலத்துக்கும் தமிழகம் சந்திக்கவிருக்கிற அவமானத்துக்கு ‘டாஸ்மாக்’ மூலமாக அடிக்கல் நாட்டினார் எம்.ஜி.ஆர். டாஸ்மாக் தொடங்கப்பட்ட 1983-ம் ஆண்டு மே 23-ம் தேதி, ‘தமிழ்நாட்டில் அறிவியல்பூர்வமான அரசியல் ஊழல் தோன்றிய நாள்’ என்று குறிப்பிடுகிறார் ராம்.

டாஸ்மாக்கில் வந்த வருமானத்தை வைத்துத்தான் 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., தொடங்கிய மதிய உணவுத் திட்டம் தொடரப்பட்டதாகக் கருதப்படுகிறது. அந்த நிலை இன்றும் தொடர்கிறதா? அப்படியெனில், நம் குழந்தைகள் சாப்பிடுவது சாராயத்தில் வந்த சம்பாத்தியத்தில்தானா?

இதையெல்லாம் படித்து உங்கள் மனம் குமுறுகிறதா? ஊழலை ஒழிக்க என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறதா? அதற்கு நூலாசிரியர் தரும் தீர்வு, ‘இந்திய அரசியல் பொருளாதாரத்தில் ஆழமான மாற்றங்கள் உருவாக வேண்டும்!’ என்பதே!

படங்கள் உதவி:  (இந்தியா டுடே அட்டைப் படம் - dailyo.in, என்.ராம் படம் - thehindu.com)

Saturday, July 1, 2017

உங்கள் டாக்டர் நல்லவரா?

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 26 நவம்பர், 2016

கொஞ்சம் எதார்த்தம் பேசுவோம். மருத்துவமனையின் படிகளை மிதிக்கும்போது நம்மில் எத்தனை பேர், அனிச்சையாக நம் சட்டைப் பையைத் தடவிப் பார்ப்போம்; உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். நம்மில் எத்தனை பேர் இன்னொரு மருத்துவரிடம் ‘செகண்ட் ஒபீனியன்’ கேட்க வேண்டும் என்ற அவசியத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்? மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகள் வாங்கிப் பயன்படுத்துவது தவறு என்பது தெரிந்தும் நம்மில் பலர் மருந்துகளை வாங்குகிறோம்தானே?

இதற்கெல்லாம் காரணம், நமது மருத்துவர்கள் மீது நமக்கு நம்பிக்கையில்லாமல் போனதுதான்! ‘ஏன் அந்த நம்பிக்கை இல்லாமல் போனது?’ என்ற கேள்விக்கான பதிலைத் தேடுகிறது கமல் குமார் மஹாவர் எனும் மருத்துவர் எழுதிய ‘தி எதிகல் டாக்டர்’ எனும் புத்தகம். ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் இந்தப் புத்தகத்தைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, மருத்துவம் படித்து, இங்குள்ள அரசுக் கட்டுப்பாடுகள், தலையிடல்கள், ஊழல்கள் போன்றவை ஏற்படுத்திய இடர்பாடுகளால், பல வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்துக்குச் சென்றவர்தான் இந்தக் கமல்குமார். தற்போது அங்குள்ள ‘தேசியச் சுகாதாரச் சேவை’ அறக்கட்டளை மருத்துவமனையில் எடைக் குறைப்பு அறுவைசிகிச்சை நிபுணராகப் பணியாற்றிவருகிறார். இந்திய மருத்துவத் துறையில் உள்ள குறைகளை விமர்சனப் பார்வையுடன் அணுகி வரும் இவர், அது தொடர்பான தன்னுடைய கருத்துகளை இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார். 

 
தடம் மாறும் மருத்துவம்

இந்திய மருத்துவர்கள், ‘மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா’ வகுத்துள்ள விதிமுறைகளின் கீழ்தான் நிர்வகிக்கப்படுகிறார்கள். பிரச்சினை என்னவென்றால், அதிலேயே பல குறைகள் இருப்பதுதான். முதலில் அவற்றைச் சீர் செய்ய வேண்டும் என்கிறார் கமல்குமார். அதற்கு அவர் சொல்லும் முக்கியக் காரணம்… போலி மருத்துவர்கள்!

மேற்கண்ட விதிமுறையின்படி, இந்தியப் பாரம்பரிய மருத்துவமுறைகளான ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி மக்களுக்குச் சிகிச்சையளிப்பவர்கள், மருத்துவர்களாகவே கருதப்படுவதில்லை. ஆனால் காலம் காலமாக இந்த மருத்துவ முறைகள் நம் நாட்டில் நடைமுறையில் இருந்துவருகின்றன.

அலோபதி, பாரம்பரிய மருத்துவ முறைகள் எதையும் முறைப்படி கற்றுக்கொள்ளாமல், மக்களுக்குத் தவறான சிகிச்சையளித்து, கொள்ளையடிக்கிற போலி மருத்துவர்கள் கூட்டம், உண்மையான மருத்துவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய நியாயமான வருமான வாய்ப்பைத் தடுக்கிறது. இதன் காரணமாக, உண்மையான மருத்துவர்கள் பலர், நோயாளிகளைப் பிடிக்க ஏஜெண்ட் வைப்பது, தேவையில்லாத மருந்துகளை எழுதித் தருவது, தேவையில்லாத பரிசோதனைகளைச் செய்யச் சொல்லி ஒரு குறிப்பிட்ட ‘லேப்’புக்கு மட்டும் அனுப்புவது, பிறகு அந்த ‘லேப்’பிலிருந்து குறிப்பிட்ட சதவீதத்துக்குக் கமிஷன் வாங்கிக் கொள்வது போன்ற குறுக்கு வழிகளில் வருமானத்தை ஈட்ட முயற்சிக்கிறார்கள். 
 
அடிப்படையே தவறு

இந்த நிலைமை ஏன் வந்தது என்ற கேள்விக்கு ‘அடிப்படையே தவறு’ என்கிறார் நூலாசிரியர். மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எல்லோருமே தேவையான தகுதிகளோடு வெளியே வருகிறார்களா என்றால் இல்லை. எம்.பி.பி.எஸ்., மட்டும் படித்தால் போதாது. உயர்கல்வி கற்க வேண்டும். அதற்குக் கடின உழைப்பையும் கூடுதலான நேரத்தையும் செலவழிக்க வேண்டும். ஆனால், இளநிலை மட்டுமே படித்த ஒரு பயிற்சி மருத்துவர், சுமார் 16 முதல் 18 மணி நேரம்வரை அரசு மருத்துவமனைகளில் செலவிடுகிறார்.

அவருக்கு, அவருடைய பேராசிரியர்களிடமிருந்து சரியான வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. ஏனென்றால், அவருக்கு அரசு மருத்துவமனையில் போதிய வருமானம் கிடைக்காது. அதனால் தன்னுடைய அலுவலக நேரத்துக்குப் பிறகு தனியே ‘பிராக்டிஸ்’ செய்து லாபம் ஈட்டும் முனைப்பில் அவர் இருப்பார். அதனால், தனக்குக் கீழே பயிற்சி பெறும் மாணவருக்குப் போதுமான நேரத்தை அவர் செலவழிப்பதில்லை.

இது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம், மருத்துவம் படித்து வெளியே வரும் பெரும்பாலான மாணவர்கள் மிகக் குறைந்த காலத்தில் உடனடி லாபத்தை ஈட்ட நினைக்கிறார்கள். காரணம், அவர்கள் தங்கள் படிப்புக்கு லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பார்கள். எல்லாருக்குமே அரசுக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்காது, இல்லையா? அதனால் பலர் தனியார்க் கல்லூரிகளில் படிப்பார்கள். அங்குத் தாங்கள் செலவழித்த காசை எல்லாம், இந்தச் சமூகத்திலிருந்து எடுக்க நினைப்பார்கள். எனவே, பலர் நகரங்களை நோக்கிச் செல்கிறார்கள். இதனால் கிராமப்புறங்களில் தேவையான அளவு மருத்துவர்கள் இல்லை.

அப்படியே இருந்தாலும், அங்கும் அவர்களுக்குத் தேவையான அளவு வருமானம் கிடைப்பதில்லை. எனவே, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவர்களும் நகரத்தை நோக்கி நகர்கிறார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக நகரங்களில் ஏற்கெனவே அவர்களுக்கு நிறையப் போட்டியாளர்கள் இருப்பார்கள். எனவே, தான் ஒரு சிறந்த மருத்துவர் என்பதை நிரூபிக்க அதிகமாகப் போராட வேண்டியிருக்கிறது. இதன் காரணமாகக் குறுக்கு வழிகள் ஈர்த்து விடுகின்றன.
 
பெரும் மாயை

பொதுவாக நம் ஊரில், குறைந்த கட்டணம் வாங்கும் ஒரு மருத்துவரை ‘இவரு அவ்ளோ நல்லா பார்க்க மாட்டாருப்பா’ எனும் விமர்சனத்துக்கு ஆளாக்கும் மனப்பான்மை நம்மில் பலருக்கும் உண்டு. கல்வித் துறையைப் போலவே பெரிய மருத்துவமனை, நிறைய பணம் வாங்கும் மருத்துவர்தான் சிறந்த மருத்துவர் என்றொரு மாயை இங்கு உண்டு. இது எப்படி ஏற்பட்டது? அதற்குக் காரணம், மருந்து நிறுவனங்களும் மருத்துவ ஆய்விதழ்களும் என்கிறார் ஆசிரியர். எப்படி?

உலகளவில் பிரபலமான நான்கைந்து மருத்துவ ஆய்விதழ்களில் மருத்துவர் ஒருவர் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டால், அவர் சிறந்த மருத்துவர் என்று கொண்டாடப்படும் மனநிலை பலருக்கும் உள்ளது. கூர்ந்து கவனித்தால், அவர் மேற்கொண்ட ஆய்வு குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தின் மருந்து நல்லது என்பதை நிரூபிக்கும் விதமாக இருக்கும்.

அவ்வளவு ஏன், அந்த ஆய்வே அந்த மருந்து நிறுவனத்தின் நிதியுதவியுடன் மேற்கொண்டதாகக்கூட இருக்கலாம். அதேபோலத் தனது ஆய்வு முடிவுகளைச் சக மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்ள, அந்த மருந்து நிறுவனங்களே வெளிநாடுகளில் ஏற்பாடு செய்யும் கருத்தரங்குகளில் கலந்துகொள்வார்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நோயாளிகள் சொல்வதைப் பல மருத்துவர்கள் காது கொடுத்துக் கேட்காததும், காது கொடுத்துக் கேட்கும் மருத்துவர்கள் மீது நோயாளிகளுக்கு நம்பிக்கையற்றுப் போனதுமே. அடுத்த முறை உங்களுக்கு நம்பகமான மருத்துவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், நீங்கள் அவரை முழுமையாக நம்புங்கள். அதற்கு மருத்துவர்களும் மக்களை நோக்கி நெருங்கி வர வேண்டிய அவசியம் இருக்கிறது.
 
மருத்துவத் துறை: சுடும் நிஜங்கள்

  • நாட்டில் எத்தனை போலி மருத்துவர்கள் உள்ளனர் என்பதை அறிவதற்கான வழி இன்றைக்கு இல்லை. சரி, பதிவு பெற்ற உண்மையான மருத்துவர்கள் எத்தனை பேர், அவர்களில் எத்தனை பேர் எந்தெந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர், அவர்களில் எத்தனை பேர் கடந்த காலத்தில் ஒழுங்கீன நடவடிக்கைகளுக்கு உள்ளானவர்கள் என்பது பற்றியெல்லாம் தகவலறிய முறையான வலைத்தளம்கூடக் கிடையாது!  
  • மருத்துவர்கள் தாங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளின் வேதியியல் பெயர்களை (ஜெனரிக்) எழுத வேண்டுமா? அல்லது பிராண்ட் பெயர் எழுத வேண்டுமா? ஜெனரிக் மருந்துகளை எழுதிக் கொடுத்தால், அதிலேயே பல பிராண்ட்கள் இருக்கும். அதில் எதை மருந்துக் கடைக்காரர் தேர்வு செய்து கொடுப்பார்? அது மட்டுமல்லாமல் பிராண்டுக்குப் பிராண்ட் விலை அதிகரிக்கும், குறையும். இந்தக் கேள்விகளுக்கு இன்று பதிலில்லை. 
  • ‘நான் ஒரு நோயாளியை உயர்சிகிச்சைக்காக உன்னிடம் அனுப்புகிறேன். அதற்கான தொகையை எனக்குத் தந்துவிடு. அல்லது உன்னிடம் சாதாரண நோய்களுக்குச் சிகிச்சை பெற வருபவர்களை எனக்கு அனுப்பு’ எனும் ‘கட் பிராக்டீஸ்’ எனப்படும் மருத்துவர்களுக்கு இடையேயான பரஸ்பரத் தரகு முறையை ஒழிக்க, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 
  • மருத்துவர்களுக்குப் பயிற்சி வழங்க, நேரலை அறுவைசிகிச்சை மாநாடு (லைவ் ஆபரேட்டிங் கான்ஃபரன்ஸ்) போன்ற விஷயங்களில் மருத்துவமனைகள் ஈடுபடுவது சரிதானா? பதில் இல்லை! 
  • மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக்கடைகளில் மருந்து வாங்கும் நடைமுறைக்கு எதிராக இதுவரை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இல்லை!
  • வெளிநாடுகளிலிருந்து மருந்துகள், மருத்துவக் கருவிகள் போன்றவற்றை இறக்குமதி செய்தால் அவற்றின் மீது விதிக்கப்படும் வரிகளில் மருத்துவமனைகளுக்கு நிறைய சலுகைகள் தரப்படுவது உண்டு. அப்படிப் பல சலுகைகளைப் பெறும் மருத்துவமனைகள் ஏழைகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது இலவசப் படுக்கைகளை வழங்கியாக வேண்டும். ஆனால், எத்தனை மருத்துவமனைகள் அப்படிச் செய்கின்றன? பதில் இல்லை.
  • மருத்துவமனைகளை நெறிப்படுத்த மருத்துவ நிறுவனங்கள் (பதிவு மற்றும் விதிமுறைகள்) சட்டம் 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தை இதுவரை 10 மாநிலங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் இந்தச் சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை!  
 நன்றி: தி இந்து (நலம் வாழ)

Saturday, June 17, 2017

கல்லறைத் தோட்டத்தின் சந்தோஷக் கணங்கள்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 11 ஜூன் 2017

முதல் நாவலை எழுதி முடித்துவிட்டு, அடுத்த நாவலைக் கொண்டு வருவதற்கு, ஒரு நாவலாசிரியருக்கு இருபது ஆண்டுகள் தேவைப்படுகின்றன என்பது வாசகருக்கு வேண்டுமானால் மலைப்பாக இருக்கலாம். நாவலாசிரியருக்கோ, ‘உள்ளுக்குள் ஒரு படைப்பு உருவாகிக்கொண்டிருக்கும் காலம்’ அது!

 தான் எழுதிய முதல் நாவலுக்கே புக்கர் பரிசு கிடைக்கப் பெற்றவர் அருந்ததி ராய். அப்போது அவர் எழுத்தாளராக மட்டுமே இருந்தார். 1997-ம் ஆண்டு ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ எனும் அவரின் முதல் நாவல் வெளியானது. சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தி மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்’ எனும் நாவல் பெங்குவின் பதிப்பக வெளியீடாக இந்த மாதம் 6-ம் தேதி உலகெங்கும் வெளியானது.

இந்த 20 ஆண்டுகளில் அருந்ததி ராய் என்பவர் எழுத்தாளராக மட்டுமே இல்லாமல், குறிப்பாக, புனைவு எழுத்தாளராக மட்டுமே தன்னைக் கருதிக்கொள்ளாமல், நாட்டில் அவ்வப்போது நிகழும் அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையில், அபுனைவு எழுத்துகள் மூலமும் தன் கருத்துகளைப் பிரதிபலித்துவந்திருக்கிறார். நர்மதா அணை உள்ளிட்ட மக்களுக்கு எதிரான வளர்ச்சித் திட்டங்களை விமர்சித்தல், தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தல், மாவோயிஸ்ட்டுகளுடன் தண்டகாரண்யம் காட்டுக்குள் பயணம் செய்தல் எனப் பல்வேறு விதங்களில் தன்னை ஒரு செயற்பாட்டாளராகவும் முன்னிறுத்திக்கொண்டிருக்கிறார்.

எழுத்தாளர் என்ற நிலையிலிருந்து செயற்பாட்டாளர் என்ற நிலைக்கு அவர் வர நேர்ந்திருக்கும் இருபது ஆண்டு அனுபவங்களின் அடிப்படையில் அவர் எழுதியிருக்கிற படைப்பாகத் தான் நாம் அவரின் இரண்டாவது நாவலை அணுக வேண்டும். இந்த நாவலின் கதை, இந்தியாவின் கடந்த இருபது ஆண்டு கால வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் அரசியல் நிகழ்வுகளின் திரட்சியாக அமைந்திருக்கிறது. அஞ்சும் என்ற திருநங்கை, காஷ்மீர் பிரிவினைவாதியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட திலோத்தமா, காவல்துறையின் வன்புணர்வால் பிறந்த தன் மகளை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விட்டுச்செல்லும் ரேவதி எனும் மாவோயிஸ்ட் போராளி ஆகிய மூன்று பெண்களின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. 


அஞ்சும் தனது வாழ்க்கையை நேர்க்கோட்டில் சொல்லிச் செல்ல, திலோத்தமாவின் வாழ்க்கையோ முன்னும் பின்னுமாகச் சொல்லப்படுகிறது. ரேவதியின் வாழ்க்கையோ கடித முறையில் சொல்லப்படுகிறது. இப்படி அந்தப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும் முறையில் வித்தியாசம் காட்டியதோடு, அவர்கள் நடமாடிய இடங்களான முறையே டெல்லி, காஷ்மீர், தெலங்கானா ஆகியவற்றின் நிலப்பரப்பையும் அந்தந்தக் காலச் சூழலில் நிலவிய அரசியல் பின்னணியோடு கதையை நெய்திருப்பதில் தேர்ந்த எழுத்தாளராக வெற்றி பெற்றிருக்கிறார் ராய். நாவலாசிரியராக வெற்றி பெற்றிருக்கிறாரா என்பது, இந்த நாவல் பரவலான வாசகப் பரப்பில் என்ன மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தப்போகிறது என்பதைப் பொறுத்து அமையும்!

இறந்தவர்களைப் புதைக்கும் கல்லறைத் தோட்டம்தான் நாவலில் முக்கியமான சம்பவங்கள் நடைபெறும் இடம். அதுதான் பல்வேறு அரசியல் சூழல்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒன்றுகூடும் இடமாகவும், எங்கோ தொலைத்த தங்களின் சந்தோஷக் கணங்களைத் தேடிக் கண்டடைகிற இடமாகவும் இருக்கிறது. ‘மனிதர்கள் தங்களின் உண்மையான மகிழ்ச்சியை இறந்த பிறகுதான் கண்டடைகிறார்கள்’ எனும் சிந்தனையின் குறியீடா கவும் கல்லறைத் தோட்டத்தை நாம் அணுகலாம்.

அவுரங்கசீப் காலத்தில் கடவுள் இல்லை என்று சொன்ன ஹஸ்ரத் ஷர்மத் ஷாஹீத்தின் வரலாற்றைச் சொல்வதில் தொடங்கி, இந்தியப் பிரிவினை, நெருக்கடிநிலைக் காலம், இந்திரா காந்தி கொலை, சீக்கியர் மீதான தாக்குதல், போபால் விஷ வாயுத் தாக்குதல், காஷ்மீர் தீவிரவாதம், பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், இரட்டைக் கோபுரத் தாக்குதல், இராக்கில் அமெரிக்கா நடத்திய போர், ஆப்பரேஷன் ‘க்ரீன் ஹன்ட்’, மாட்டு அரசியல், அண்ணா ஹசாரே போராட்டம், உனா எழுச்சி உள்ளிட்ட இந்திய, உலக அரசியல் நிகழ்வுகளை எல்லாம் நாவலின் ஆங்காங்கே வரும் ஓரிரு கதாபாத்திரங்களின் மூலம் தொட்டுச் செல்கிறார் ராய். இந்தியாவின் கடந்த இருபது ஆண்டுகால வரலாற்றை இந்த நாவலின் மூலம் ஒரு கழுகுப் பார்வை பார்த்துவிட முடியும் என்பது இந்நாவலின் சிறப்பம்சம். தமிழகத்தில் சாதியம் எப்படி வேரூன்றியிருக்கிறது என்பதற்கு முருகேசன் எனும் ராணுவ வீரர் கதாபாத்திரம் மூலமாக அருந்ததி ராய் சொல்லும் செய்தி, மிகவும் அழுத்தமான ஒன்று!

‘சில்லுசில்லாக உடைந்திருக்கிற ஒரு கதையை எப்படி மொத்தமாகச் சித்தரிப்பது? எல்லாருமாக மாறுவதன் மூலம். இல்லை. எல்லாமுமாக மாறுவதன் மூலம்!’ என்று நாவலின் பின்னட்டையில் குறிப்பிடுகிறார் அருந்ததி ராய். நாமும் அப்படி நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமாக மாறும்போது, ஒவ்வொரு அரசியல் சம்பவத்திலும் தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளும்போது, இந்த நாவலின் முழுமையை நம்மால் உணர முடியும். 

நன்றி: தி இந்து (கலை இலக்கியம்)