Monday, October 15, 2018

துணிந்து நின்றாய் பெண்ணே!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 14 அக்டோபர் 2018 

முதலில் ஹாலிவுட், பிறகு நோபல் இலக்கியப் பரிசுக் குழு, பின்னர் அமெரிக்க நீதிமன்றம், தொடர்ந்து பாலிவுட், அதைப் பின்பற்றி இந்தியப் பத்திரிகை, எழுத்துத் துறை என்று நீண்டு இப்போது கோலிவுட் வரை வந்து நிற்கிறது ‘மீ டூ’ (#MeToo). அதனால்தான், இது ‘மீ டூ’க்களின் காலமாக இருக்கிறது!

‘எந்த ஒரு வன்முறையிலும் முதலில் சீரழிக்கப்படுவது பெண்ணும் பேருந்தும்தான்’ என்பார்கள். வன்முறைக் காலத்தில் மட்டுமல்ல. அமைதிக் காலத்திலும், பெண்கள் ஆகப் பெரிய வன்முறைக்கு ஆளாகி வருகிறார்கள்.

2017 அக்டோபரில்தான் முதன்முறையாக ‘மீ டூ’ பிரசாரம் தொடங்கியது. இந்த ஆண்டு அக்டோபரில் ஓராண்டை நிறைவு செய்வதற்குள், இந்தியாவில் ‘மீ டூ’ பூகம்பம் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தருணத்தில், ‘மீ டூ’ பிரசாரத்தின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் ஹாலிவுட் நடிகை ரோஸ் மெக்கோவன், எழுதிய ‘பிரேவ்’ புத்தகம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு மட்டுமல்லாது, மொத்த மானுடத்துக்குமே பல படிப்பினைகளைத் தருவதாக அமைந்துள்ளது.

  
கடவுளின் பெயரில் களியாட்டம் 

பிறந்த வீடுகளில், விரும்பி வந்த துறைகளில், ‘உன் உயர்வுக்கு நான் பொறுப்பு’ என்று கூட நின்றவர்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும்போது, பெண் முதல்முறையாக அவமதிக்கப்படுகிறாள். ‘உனக்கு நேர்ந்த துயரத்துக்கு நீயேதான் காரணம்’ என்று குற்றம்சாட்டும்போது, பெண் இரண்டாவது முறையாக அவமதிக்கப்படுகிறாள்.

ரோஸ் மெக்கோவனுக்கும் அதுதான் நேர்ந்தது. இத்தாலி நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில், ‘சில்ட்ரன் ஆஃப் காட்’ எனும் அமைப்பு நடத்தும் விடுதியில் பிறந்தார் ரோஸ். அவருடன் பிறந்தவர்கள் 5 பேர். அவரது பெற்றோரும் அங்குதான் மதப் பிரசாரம் செய்து பணியாற்றி வந்தார்கள். சிறு வயது முதலே இறை நம்பிக்கையற்றவராக ரோஸ் வளர்ந்தார். அதனால், அங்கு பணியாற்றிய ஊழியர்களால் உடல் ரீதியான தண்டனைகளுக்கு ஆளானார்.

அங்கு அவரைப் போன்ற சிறுவர்களுக்குப் பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுக்கப்பட்டு வந்தன. அதை எதிர்த்த சிலர், மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள். இதனால், தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் அந்தத் துன்பம் நேரலாம் என்று அஞ்சிய ரோஸின் பெற்றோர், குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து அமெரிக்காவில் குடியேறினர்.

அமெரிக்கா காட்டிய வறுமை 

அமெரிக்காவுக்கு முதன்முறையாக விமானத்தில் வந்தபோதுதான், உலகில் நிலைக் கண்ணாடி என்ற விஷயம் இருப்பது ரோஸுக்குத் தெரிய வந்தது. கண்ணாடியில் முதன்முறையாகத் தன் முகத்தைப் பார்த்தவருக்கு எந்த உணர்வும் தோன்றவில்லை. காரணம், அவருக்கு அப்போது ‘அழகு’ என்றால் என்ன என்பதே தெரிந்திருக்கவில்லை. அப்போதுதான் அவர் பதின்பருவத்தில் காலடி எடுத்து வைத்திருந்தார்.

அமெரிக்கா என்பது பணக்கார நாடு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அது பணம் படைத்தவர்களுக்குத்தான் அது பணக்கார நாடு. மற்றபடி, நிலையான வேலை இல்லாமல், முறையான வருமானம் இல்லாமல், ஒரு வேளை மட்டும் கிடைக்கக் கூடியதை உண்டுவிட்டு, நடைபாதைகளிலும் கல்லறைத் தோட்டங்களிலும் படுத்துக் கிடப்பவர்கள் நிறையப் பேர்.

அமெரிக்காவில், ரோஸின் தந்தை தொடங்கிய மதப் பிரசார அமைப்புக்குச் சரியான கூட்டம் இல்லை. அதனால் போதிய வருமானம் இல்லை. இதன் காரணமாக, வீட்டில் தினமும் சச்சரவுகள் ஏற்பட்டன. பெற்றோர்கள் விவாகரத்துப் பெற்றார்கள். ரோஸும் அவரது உடன்பிறந்தவர்களும் தனித்துவிடப்பட்டார்கள். காலப் போக்கில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை நோக்கிப் போனார்கள். ரோஸ், போதைப் பொருளுக்கு அடிமையானார். மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு பாலியல் தொல்லைகள் ஏற்பட, அங்கிருந்து தப்பித்தார். இடுகாட்டிலும் திரையரங்கிலும் சொற்ப சம்பளத்துக்கு சில காலம் வேலை பார்த்தார்.

சினிமா தந்த சிக்கல்கள் 

திரையரங்கு ஒன்றில் ரோஸ் பணியாற்றிபோது, ‘ஹூ ஃபிரேம்ட் ரோஜர் ரேப்பிட்’ மற்றும் ‘வொர்க்கிங் கேர்ள்’ ஆகிய இரண்டு படங்கள் அவரை மிகவும் பாதித்தன. ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஆசை அவருக்குத் துளிர்விட்டது. போதாக்குறைக்கு, அவர் மிகவும் அழகாக இருந்தார். நீண்ட கூந்தலும் இருந்தது.

அப்போது ரோஸ், தன் தந்தையுடன் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டுக்கு வாடகை கட்ட முடியாமல் திணறிக்கொண்டிருந்தபோது, படம் ஒன்றில் ‘எக்ஸ்ட்ரா’வாக வந்து செல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ஒரு நாளைக்குச் சுமார் 2 ஆயிரம் ரூபாய் கூலி என்பதால், ‘கிளாஸ் ஆஃப் 1999’ என்ற படத்தில் நடித்தார் ரோஸ். அதுதான் அவர் திரையில் தோன்றிய முதல் படம். அதற்குப் பிறகு, ‘டூம் ஜெனரேஷன்’, ‘ஸ்கிரீம்’ என அடுத்தடுத்துப் பட வாய்ப்புகள் வந்தன.

‘ஸ்கிரீம்’ படத்தைத் தயாரித்த ‘மிராமாக்ஸ்’ நிறுவனம்தான் 1997-ல் ‘ஃபேண்டம்ஸ்’ என்ற திரைப்படத்தையும் தயாரித்தது. அதில் நடித்துக் கொண்டிருந்த போதுதான், மிராமாஸ் உரிமையாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாலியல் வன்கொடுமைக்கு ரோஸ் ஆளாக்கப்பட்டார். அதைப் பற்றி, அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர், நிர்வாகிகள் எனப் பலரிடம் முறையிட்டும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘ஹாலிவுட்டில் அப்படித்தான் இருக்கும். பெண் என்றால் இவை அனைத்தையும் சந்தித்தே தீர வேண்டும்’ என்று ரோஸுக்குச் சொல்லப்பட்டது. அடுத்த 20 வருடங்களுக்கு அந்தத் துயரத்தைத் தன் மனதில் மறைத்து வைத்திருந்தார்.

இதற்கு இடையில், சில காதல்கள், சில திருமணங்கள், சில பிரிவுகளும் ரோஸ் வாழ்வில் அரங்கேறின. அந்தப் பிரிவுகள், தோல்விகள், அவை தந்த வேதனைகள் அனைத்துக்கும் ‘நீதான் ரோஸ் காரணம்’ என்று சொல்லப்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

  
தொடங்கியது ‘மீ டூ’ பூகம்பம்!  

இந்நிலையில் 2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது டொனால்ட் ட்ரம்புக்கு எதிராகப் பெண்கள் பலர், ட்ரம்ப் தங்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்று வாக்குமூலம் கொடுத்தார்கள். அதையொட்டி, தனக்கு நேர்ந்த வன்கொடுமைகளை ரோஸ், ட்விட்டரில் பதிய, ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழ் புலனாய்வு மேற்கொண்டது. அப்படித்தான் வெளியாகின ஹார்வி வெய்ன்ஸ்டீனின் லீலைகள். ரோஸ் கொடுத்த துணிச்சலால், வெய்ன்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட இதர பெண்களும் வாக்குமூலம் கொடுக்க முன் வந்தார்கள். தொடங்கியது ‘மீ டூ!’. இதனால் ‘2017-ம் ஆண்டின் நபர்’ என்று ‘டைம்’ இதழால் கவுரவிக்கப்பட்டார். 

தான் சந்தித்த கசப்புகளை ‘பிரேவ்’ என்ற தலைப்பில் நூலாக எழுதியிருக்கும் ரோஸ், தன் புத்தகத்தில் ஹார்வி வெய்ன்ஸ்டீனின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை ‘மான்ஸ்டர்’ (பூதம்) என்றே குறிப்பிடுகிறார். எனில், அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்?

பெண்ணுக்கு, கூந்தல் என்பது அழகின் ஓர் அங்கம். ‘மீ டூ’ பிரசாரம் தொடங்கிய பிறகு, தனது கூந்தலை வெட்டி, மொட்டை அடித்துக்கொண்டார் ரோஸ். அதற்கு அவர் சொன்ன காரணம்: “நீண்ட கூந்தல் இருந்தால், நீ செக்ஸியாகத் தெரிவாய் என்றும், செக்ஸியாகத் தெரிந்தால்தான் எனக்குப் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எண்ணம் என்னுள் இந்தச் சமூகத்தால் திணிக்கப்பட்டது. அதிலிருந்து வெளியேறவே நான் மொட்டையடித்துக்கொண்டேன். என் சுதந்திரத்தை உணர்ந்தேன்!”

‘பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று உங்கள் மகன்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்’ என்று சொல்லும் ரோஸ், பெண்களுக்குச் சொல்லும் அறிவுரை இது: ‘எப்போதும் துணிச்சலுடன் இருங்கள். நீங்கள் விரும்பாத விஷயங்கள், உங்கள் மீது திணிக்கப்பட்டால் ‘முடியாது’ என்று சொல்லப் பழகுங்கள்!’

நன்றி: இந்து தமிழ் - பெண் இன்று (சில மாறுதல்களுடன்),  (ரோஸ் படம்) time.com

Monday, October 1, 2018

சமூகத்தை விசாரிக்கும் கொலைகள்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 18 டிசம்பர் 2016

வாழ்க்கையின் மீது நம்பிக்கையற்றும், வாழ்க்கை தந்த கசப்புகளாலும் ஒருவர் அடைந்த வெறுமையால் இன்னொருவரைக் கொல்ல முடியுமா?

முடியும் என்கிறது ‘இன் கோல்ட் ப்ளட்’ எனும் ஆங்கில நாவல். 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் ஹோல்காம்ப் எனும் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். அந்தக் கொலைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ட்ரூமன் கபோட் எழுதியதுதான் இந்த நாவல்.


நாவலாக வருவதற்கு முன், இது ‘தி நியூயார்க்கர்’ பத்திரிகையில் 1965-ம் ஆண்டு நான்கு பாகங்கள் கொண்ட தொடராக வெளியானது. பின்னர் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகத்தால் 1966-ம் ஆண்டு புத்தகமாக வெளியிடப்பட்டது.

நாவலின் சிறப்பம்சம் என்னவென்றால், அந்தக் கொலைகளைச் செய்த இளைஞர்கள் ரிச்சர்ட் டிக் ஹிக்காக், பெர்ரி ஸ்மித் ஆகியோரின் வாழ்க்கையை மிக ஆழமாக கபோட் ஆராய்ந்திருப்பதுதான். இரண்டு பேருமே வேறு வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களுக்கு ஏற்படுகிற பிரச்சினை ஒன்றுதான். தத்தமது அடையாளத்தை இழப்பதுதான் அது!

தங்கள் குடும்பத்தில் தங்களுக்கு நேர்ந்த கசப்புகளால் காயமடைந்தவர்கள் அவர்கள். வீட்டை விட்டு வெளியேறியவர்கள். இருவருமே தங்களின் திறன்களை நிரூபிக்கத் தேவையான வாய்ப்புகள் கிடைக்கப் பெறாதவர்கள். பெண்களால் போஷிக்கப்பட்டவர்கள். குற்றம் புரிந்தவர்கள். சிறை சென்றவர்கள்.

இப்படியானவர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொல்வது ஆச்சர்யப்படத்தக்க விஷய மல்ல. ‘ஆளுமைச் சிதைவு’ உள்ள யாரும் ஒரு கட்டத்தில் அந்த இளைஞர்களின் நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். அவர்களைச் சிறையில் வைத்துத் தண்டிப்பதைவிட, மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், நாம் ஏற்படுத்தியிருக்கும் சட்டங்கள் அதற்கு ஏற்றவை அல்ல, என்கிறார் கபோட். இப்படிச் சொல்வதன் வாயிலாக, சமூகத்தையும் அவர் இந்தக் குற்றத்தின் பின்னணியில் கொண்டுவருகிறார்.


சட்டங்கள் பற்றிப் பேசுகிற இந்த நாவல், மரண தண்டனை குறித்தும் பேசுகிறது. நாவலின் ஓரிடத்தில் ரிச்சர்ட் டிக் ஹிக்காக் இப்படிச் சொல்வான்: “மரண தண்டனை என்பது ஒரு பழிவாங்கல்தான். நான் தூக்கிலிடப்படாத வரை, அந்தப் பழிவாங்கல் தேவை என்றுதான் நானும் சொல்வேன்”.  இன்னொரு பக்கம், பெர்ரி ஸ்மித் இப்படிச் சொல்வான்: “நான் செய்த குற்றத்துக்காக மன்னிப்புக் கேட்பது முறையாகாது. அது அர்த்தமற்றது. ஆனாலும் நான் மன்னிப்புக் கேட்கிறேன்”.

மரண தண்டனை குறித்து அதிகளவில் உரையாடல்கள் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், நாம் மேற்கண்ட இரண்டு பேரின் நிலைகளிலிருந்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ், (கபோட் படம்:  nypost.com)

Saturday, September 22, 2018

புலிகளுக்கு இடையே ஒரு புனிதி

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 16 செப்டம்பர் 2018 

மனித வாழ்க்கையில் மிகப் பெரிய குற்றம் எது? உரிமைகள் மறுக்கப்படுவதுதான். உயிர் வாழ்வதற்கு, பிடித்த தெய்வங்களை வணங்குவதற்கு, தனக்கான உணவைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு, மனதில் நினைப்பதைப் பேசுவதற்கு, எண்ணங்களை எழுத்தாக்குவதற்கு என மனித உரிமைகள் பல வண்ணங்களைக் கொண்டவை. இவற்றில் எந்த உரிமைகள் அடிப்படையானவை, எந்த உரிமைகள் அவசியமில்லாதவை என்ற ஆய்வுகள் எல்லாம் தேவையற்றவை. மனிதர்கள் சுதந்திரமாக வாழ, எவையெல்லாம் அத்தியாவசியமோ அவை அனைத்துமே அடிப்படை உரிமைகள்தான்!

இந்த உரிமைகள் மறுக்கப்படும்போது, அதற்கான எதிர்ப்புகளும் எழவே செய்யும். பெரும்பாலும், அதிகார பீடங்களால்தான் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மீறப்படவும் செய்கின்றன. ஒரு ஜனநாயக அமைப்பில் மாற்றுக் கருத்துகளுக்கு எப்போதும் இடம் கொடுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், அங்கு எதிர்ப்பு இருந்தே தீரும். மாற்றுக் கருத்துகளைச் சொல்ல அனுமதிக்கப்படாத நிலையே ‘பாசிஸ’ நிலை. உலக வரலாற்றில், இந்த ‘பாசிஸம்’ அரசுகளிடம் மட்டுமல்ல, மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்கிற போராளிக் குழுக்களிடமும் தென்பட்டிருக்கிறது.

இலங்கையில், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கும் போராளிக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்று வந்த போரில், மனித உரிமைகள் கிஞ்சித்தும் பின்பற்றப்படவில்லை. போராளிக் குழுக்களில், மாற்றுக் கருத்துகளை முன் வைத்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்டார்கள். அப்படிக் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் மிகச் சிலரே, தொடர்ந்து  ‘பாசிஸ’ தலைமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ராஜனி திராணகம. சிங்கள ராணுவம், இந்திய அமைதிப் படைகள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராட்டக் குழுக்களின் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து உலகத்துக்குச் சொல்லி வந்தவர், 1989-ம் ஆண்டு கொல்லப்பட்டார். வரும் செப்டம்பர் 21-ம் தேதி அவரது 29-வது நினைவு நாள்!

  
மருத்துவம் கற்ற போராளி 

1954-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி, இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார் ராஜனி ராஜசிங்கம். இவர்களுடையது தமிழ்க் கிறித்துவக் குடும்பம். அதனால் ‘சக உயிர்கள் மீது அன்பு கொள்ள வேண்டும்’ என்கிற எண்ணம் இவருக்கும் இவருடன் பிறந்த சகோதரிகளுக்கும் இளமையிலிருந்தே இருந்தது. தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்தவர், தனது மருத்துவக் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்தார். மாணவப் பருவத்திலேயே அவருக்கு அரசியல் ஈடுபாடு இருந்தது. நிறைய கூட்டங்களுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்.

அப்படி ஒரு மாணவர் அரசியல் கூட்டத்தில்தான் களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் தயாபாலா திராணகமவைச் சந்தித்தார் ராஜனி. அவர் ஒரு சிங்கள பவுத்தர். அவரது அரசியல் ஈடுபாடுகளால் ஈர்க்கப்பட்ட ராஜனி, இனம், மதம், மொழி கடந்து 1977-ல் தயாபாலாவை மணம் முடித்து ராஜனி திராணகம ஆனார். அவர்களுக்கு நர்மதா, சரிகா என இரண்டு மகள்கள் உண்டு.

ராஜனியின் அக்கா நிர்மலா, அமெரிக்காவுக்குப் படிக்கப் போனார். அவர் போன நேரம், வியட்நாம் போர் உச்சத்தில் இருந்தது. வியட்நாம் மீதான அமெரிக்காவின் போரை எதிர்த்து, மாணவர்கள் போராடினர். அது நிர்மலாவுக்கு அரசியல் ரீதியான விழிப்புணர்வைத் தந்தது. இடதுசாரி அரசியலைத் தேர்வு செய்தார் அவர். படிப்பு முடிந்து தாயகம் திரும்பிய அவர், விடுதலைப் புலிகளுடன் இணைந்தார்.

ஒருமுறை, காயமடைந்த ‘இயக்கத்தினர்’ ஒருவருக்கு உதவ நிர்மலாவை நாடினார். நிர்மலா, ராஜனியை நாடினார். ராஜனி அவருக்கு மருத்துவ உதவிகள் செய்தார். அப்படித்தான் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் வந்தார்.

ஆவணப்படமான போராட்ட வாழ்க்கை 

மருத்துவப் படிப்பை முடித்தவுடன், சில காலம் யாழ்ப்பாண மருத்துவமனை ஒன்றில் பணியாற்றினார் ராஜனி. பின்னர் 1983-ம் ஆண்டு காமன்வெல்த் கல்வி உதவித்தொகை பெற்று, உடற்கூறியல் துறையில் பட்ட மேற்படிப்பு படிக்க இங்கிலாந்தில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். பிறகு லிவர்பூல் மருத்துவக் கல்லூரியில் மனிதக் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான கை நரம்புகள் குறித்து ஆய்வு செய்து வந்தார்.

  
இந்த நேரத்தில்தான், நிர்மலா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இங்கிலாந்தில் இருந்துகொண்டு, தனது சகோதரியின் விடுதலைக்காகக் குரல் எழுப்பி வந்த ராஜனி, லண்டனில் இருந்த விடுதலைப் புலிகள் சிலருடன் இணைந்து, இலங்கையில் சிங்கள ராணுவம் மேற்கொண்டு வந்த மனித உரிமை மீறல்கள் குறித்து உலகின் பல்வேறு மனித உரிமை அமைப்புகளிடம் எடுத்துரைத்து வந்தார். பிறகு, நிர்மலா விடுதலையானார்.

80-களின் மத்தியில் தாயகம் திரும்பிய ராஜனி, யாழ் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அந்தச் சமயத்தில்தான் இந்திய அமைதிப் படைகள் வந்தன. சிங்கள ராணுவம், அமைதிப் படைகள் ஆகியவை அப்பாவிப் பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்து வந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தார். பின்னர் அவற்றை ‘நோ மோர் டியர்ஸ் சிஸ்டர்’ என்ற தலைப்பில் சிறு புத்தகமாகத் தொகுத்துக் கொண்டிருந்தார். அவர்களது மறுவாழ்வுக்காக ‘பூரணி மகளிர் மையம்’ என்ற அமைப்பையும் ஏற்படுத்தினார்.

அதே நேரம், அவரும் அவரது சக ஆசிரியர்களும் இணைந்து ‘மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்’ என்ற அமைப்பைத் தொடங்கினர். சிங்கள ராணுவம், அமைதிப் படைகள், விடுதலைப் புலிகள் ஆகியோரின் மனித உரிமை மீறல்களை ‘தி புரோக்கன் பாமைரா’ (தமிழில், ‘முறிந்த பனை’ என்று வெளியானது) என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்தனர்.

  
ராஜனி தனியாகத் தொகுத்த ‘நோ மோர் டியர்ஸ் சிஸ்டர்’ எனும் ஆவணமும் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றது. 2005-ல் அந்த ஆவணத்தின் பெயரிலேயே ராஜனி திராணகம குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியானது. அந்தப் படத்தில் அவரது மகள் சரிகாவே ராஜனியாக நடித்திருந்தார். அந்தப் படத்துக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர் பிரபல எழுத்தாளர் மைக்கேல் ஒண்டாஜ்ஜி.

நாவலில் நிலைபெற்ற ராஜனி 

ராஜனியை மையமாகக் கொண்டு, மலையாளத்தில் 2014-ல் ‘சுகந்தி என்ன ஆண்டாள் தேவநாயகி’ எனும் நாவலை டி.டி.ராமகிருஷ்ணன் எழுதியிருந்தார். அது தற்போது,  ‘சுகந்தி அலைஸ் ஆண்டாள் தேவநாயகி’ எனும் தலைப்பில், பிரியா நாயர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

போருக்குப் பிந்தைய இலங்கையில் நடைபெறுவதாக அமைந்திருக்கும் இந்த நாவலில், ராஜனியை ஆண்டாள் தெய்வநாயகி எனும் கற்பனையான பெண் கடவுளின் வழித் தோன்றலாகச் சித்தரித்து, அந்தக் கடவுளைப் பற்றியக் கதையைச் சொல்வதன் மூலமாக, இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போரின் பாதிப்பு சொல்லப்பட்டிருக்கிறது.

 
‘என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்’ என்று சொன்ன ராஜனியின் வார்த்தைகள் பலித்தன. விடுதலைப் புலிகளால் அவர் கொல்லப்பட்டார். அதை மறுப்பவர்களும் இருக்கிறார்கள்.

‘முறிந்த பனை’ புத்தகத்தின் ஆரம்பத்தில் ‘ராஜனியை யார் கொன்றார்கள் என்பது முக்கியமல்ல. அவர் எதற்காகக் கொல்லப்பட்டார் என்ற கேள்வியே முக்கியம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘பாசிஸம்’தான் அந்தக் கேள்விக்கான பதில் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன?

நன்றி: இந்து தமிழ் - பெண் இன்று ‍(சற்றே மாறுதல்களுடன்)

Thursday, September 6, 2018

பேனாவிடம் தோற்றுப் போன ‘பாசிஸ’ தோட்டா..!

ந.வினோத் குமார்

‘குற்றங்களை நீக்குபவர்’ என்ற பொருளில் அமைந்ததுதான் ‘ஆசிரியர்’ எனும் சொல். மாணவர்களிடத்தில் இருக்கும் குற்றம், குறைகளை நீக்கி நல்வழிப்படுத்தும் ஆசிரியர் எப்படி மதிக்கத்தக்கவரோ, அதேபோல, சமூகத்தில் நடக்கும் குற்றங்களைத் தன் பேனாவின் மூலம் நீக்க முற்படுகிற பத்திரிகையாளர்களும் ஆசிரியர்களே! 

அப்படியான ஆசிரியர்களில் ஒருவர்தான் கெளரி லங்கேஷ். அதற்கான பரிசு, அவர் ஆசிரியர் தினத்தில் கொல்லப்பட்டது! 

கன்னட மொழி பத்திரிகை உலகத்தின் முகங்களில் ஒன்றாக ‘லங்கேஷ் பத்திரிக்கே’வும், 2005-க்குப் பின்னர் ‘கெளரி லங்கேஷ் பத்திரிக்கே’வும் விளங்கின என்றால் அது மிகையில்லை. என்ன… அந்த முகம், ஒப்பனைகளற்ற முகம். அரசியலை சுயலாபத்துக்காக ஆராதிக்காத பேனாக்களில் ஒன்று, கெளரியினுடையது! 

நாட்டை, பண்பாட்டை காவிமயப்படுத்துவதற்கு எதிராகத் தொடர்ந்து தன் கண்டனங்களைப் பதிவு செய்து வந்தவர் கெளரி. அந்தக் கண்டனங்களை எதிர்கொள்ள முடியாத இந்து பாசிஸ வெறிக்கு 2017-ல், இதே தினத்தில் அவர் பலியானார். ஓர் ஆண்டாகியும், அன்றைய தின இரவில் நடந்த கொலைக்கு, இன்னும் விடியல் வரவில்லை. 

கெளரி லங்கேஷின் மரணத்துக்கு முன்பு வரை, அவரைப் பற்றியோ, அவரது செயல்பாடுகள் பற்றியோ கர்நாடக மாநிலத்தைத் தாண்டி, பொது மக்களிடையே பரவலாக அறியப்பட்டிருப்பதற்கு வாய்ப்புக் குறைவு என்றே கருதுகிறேன். ஆனால் அவர் கொல்லப்பட்ட, அடுத்த இரண்டு மாதங்களில் அவரைப் பற்றிப் பலரும் தெரிந்துகொண்டார்கள். அதற்கு முக்கியக் காரணமாக விளங்கியது, ‘தி வே ஐ ஸீ இட்’ எனும் புத்தகம். 

கெளரி லங்கேஷ் எழுதிய கட்டுரைகள், கெளரி லங்கேஷ் பற்றிய கட்டுரைகள் ஆகியவற்றைத் தாங்கி வந்திருக்கும் இந்தப் புத்தகத்தைத் தொகுத்தவர், கெளரியின் நண்பரும் பேராசிரியருமான சந்தன் கவுடா. ‘நவயானா’ பதிப்பகம் வெளியிட்ட இந்தப் புத்தகம் 2017 நவம்பர் மாதத்தில் வெளியானது. 

  
என்னதான் கெளரி, இதழியல் படிப்பைப் படித்திருந்தாலும், அவர் எடுத்த உடனே, அவரது தந்தை ஆசிரியராக இருந்து நடத்தி வந்த ‘லங்கேஷ் பத்திரிக்கே’வில் சேர்ந்துவிடவில்லை. பெரிய காரணம் எதுவும் இல்லை, அவருக்கு கன்னடம் அவ்வளவாகத் தெரியாது, அதனால்! எனவே, ஆங்கில இதழியலில் கவனம் செலுத்தினார் கெளரி. அவரது ஆரம்பகால ஆங்கில இதழியல் கட்டுரைகள் சில, இந்தப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன. 

புட்டபர்தி சாய் பாபாவின் தில்லுமுல்லுகள், 80-களில் பெங்களூருவை மிரள வைத்த சைக்கோ கொலைகாரன் ‘நாகராஜா’ (அவனைச் சிறையில் வைத்துப் பேட்டி எடுத்திருக்கிறார் கெளரி), ராஜீவ் கொலையில் ஈடுபட்ட சிவராசனை ‘சிறப்புப் புலனாய்வுக் குழு’ பெங்களூருவில் வைத்துச் சுற்றி வளைத்தபோது, அவர்களுடன் கூட இருந்து, வழங்கிய நேரடி ரிப்போர்ட் என கெளரியின் ‘ரிப்போர்ட்டேஜ்’ அனைத்தும், ஒரு ‘க்ரைம் திரில்லர்’ நாவலைப் போன்று அவ்வளவு விறுவிறுப்புடனும், தகவல் செறிவுடனும் எழுதப்பட்டிருக்கின்றன. 

தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு, 2000-ல் ‘லங்கேஷ் பத்திரிக்கே’வின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் கெளரி. அப்போது, ‘இவருக்கு கன்னடம் தெரியாதே.. எப்படிப் பத்திரிகையை நடத்துவார்?’ என்று பலரும் கேலி பேசினர். ஆனால், தனக்கு கன்னடம் தெரியாது என்பதை மறைக்காததுடன், தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சியால் கன்னடத்தை நன்கு கற்கவும் செய்தார் அவர். அந்த விடாமுயற்சியும் பயிற்சியும்தான், தாய்மொழியைக் கற்காதவர்களை ‘வேர்களற்ற ஆன்மாக்கள்’ என்று கெளரியை எழுதச் செய்தன. 

இந்தப் புத்தகத்தில் அவர் கன்னடத்தில் எழுதிய கட்டுரைகளில் சில, ஆங்கிலத்தில் வெவ்வேறு நபர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளில் இருந்த அதே தெள்ளிய எழுத்து நடை, மொழிபெயர்ப்புக் கட்டுரைகளிலும் காண முடிகிறது. வேறு வேறு நபர்கள் மொழிபெயர்த்திருந்தாலும், அந்தக் கட்டுரைகளில் எந்தவொரு இடத்திலும் தட்டுத் தடங்கலைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு ‘ஸ்மூத்’ ஆக இருக்கிறது ‘ரைட்டிங் ஃப்லோ’. ஆங்கில, கன்னட மொழிகளின் மீது கெளரிக்கு இருந்த வளம் காரணமாகவே இது சாத்தியமாகி இருக்கிறது. இந்த வெற்றிக்கு, மொழிபெயர்ப்பாளர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. 

ஆங்கில மொழி ‘அதிகாரத்தின் கருவி’ என்ற புரிதலை கெளரி கொண்டிருந்த காரணத்தால்தான், ‘மோடியின் ஆங்கிலம் மோசமாக இருக்கிறது’ என்று சிலர் கேலி செய்தபோது, ‘கருத்தியல் ரீதியான எதிரியை, அவரது ஆங்கில மொழித் திறன் குறைபாட்டைப் பயன்படுத்தி கேலி செய்யக் கூடாது’ என்றார். 

சம்பளத்துக்காக அல்லாமல், சமூகத்துக்காகப் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பலருக்கும் இன்று ஒரு குழப்பம் உண்டு. தான் ஒரு ‘ஆக்டிவிஸ்ட்’டாகவும் இருக்க வேண்டுமா அல்லது வெறுமனே பத்திரிகையாளராக மட்டும் இருந்துவிட வேண்டுமா என்பதுதான் அது. இந்தக் குழப்பத்துக்கு கெளரி தரும் பதில் இது: 

“நமது ‘ஜர்னலிஸ’த்துக்கு இதயத்தையும், ஒரு பார்வையையும் ‘ஆக்டிவிஸம்’ தருகிறது என்றால், நமது ஆக்டிவிஸத்துக்கு ஒரு முழுமையான புரிதலையும் கூர்ந்து அறியும் திறனையும் ஜர்னலிஸம் தருகிறது. எனவே, இன்றைய காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் ‘மக்கள் நலன் சார்ந்து’ இயங்குபவராக இருக்க வேண்டுமென்று நினைத்தால், அவர் தன்னளவில் ஒரு ஆக்டிவிஸ்ட்டாக இல்லாமல் அது முடியாது!” 

சமீபத்தில், கெளரியைப் போலவே துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி, உயிர் தப்பித்த ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித், கெளரி குறித்து எழுதிய கட்டுரை இந்தப் புத்தகத்தில் உண்டு. அந்தக் கட்டுரையின் கடைசி வரிகள் இப்படி இருக்கின்றன:

“கெளரி எப்படி இறந்தார் என்பதை நாம் மறவாமல் இருப்போம். போலவே, அவர் எப்படி வாழ்ந்தார் என்பதையும் நாம் நினைவில் கொள்வோம்!”

கெளரி நம் நினைவில் வாழ்வார்… ‘பாசிஸ’ தோட்டாவைச் சுமந்துகொண்டு!

Monday, September 3, 2018

கடல் பிரார்த்தனை!

ந.வினோத் குமார்
 
2015-ம் ஆண்டு, செப்டம்பர் 2-ம் தேதி. சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த தருணம். அங்கிருந்து பலர், அகதிகளாகப் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்தனர். அப்படிப் பயணப்பட்டவர்களில் சிலர், ஐரோப்பிய நாடுகளில் அரவணைப்பைத் தேடிச் சென்றனர்.

அந்தப் பயணத்தில், பெரும்பாலான மக்கள் மத்திய தரைக்கடலில், ரப்பர் படகுகளில், எந்தப் பாதுகாப்புக் கவசங்களும் இல்லாமல் சென்று, புயலடித்தபோது கவிழ்ந்த படகிலிருந்து விழுந்து, நீரில் மூழ்கி இறந்தனர். அப்படி இறந்தவர்கள் சிலரின் சடலங்கள் துருக்கியின் கரையை அடைந்தன. அந்தச் சடலங்களில் ஒன்றுஆலன் குர்திஎனும் பெயரைத் தாங்கி இருந்தது.

சிறுகதை அஞ்சலி

மெத்தையில், குப்புறக் கவிழ்ந்து ஆழ்ந்து உறங்குவது போல, மூன்று வயது ஆலன் குர்தியின் உடல் கரையில் கிடந்தது. பத்திரமாய்க் கரையில் சேர்த்துவிட்ட திருப்தியில் அலைகள் அவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தன. அடுத்த நாள் பத்திரிகைகளில் வெளியான அவனின் படத்தைக் கண்டு, பலர் கண்ணீர் சிந்தினர். கடலில் நிராதரவாக விடப்பட்ட குர்தி, இன்றைய அகதிகள் சந்திக்கும் இன்னல்களுக்குச் சாட்சியாக வரலாற்றில் நின்றுவிட்டான்!

அவன் மறைந்து, இந்த நாளுடன், மூன்று ஆண்டுகள் ஆகின்றன. எனினும், அகதிகளின் நிலையில் எந்தப் பெரிய மாற்றமும் வந்துவிடவில்லை. இந்நிலையில், ஆலன் குர்தியை மீண்டும் நினைவுகொள்வதன் மூலம், அகதிகளின் நிலையை உலகுக்கு எடுத்துச் செல்ல முடியுமென்று நம்பியிருக்கிறார், காலித் ஹுசைனி. அவர் ஒரு மருத்துவர். தி கைட் ரன்னர்எனும் அற்புதமான நாவலை நாவலாசிரியர்.

அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி, சிறுகதை. ஆலன் குர்தியின் நினைவாக, அவர்ஸீ பிரேயர்எனும் சிறுகதையை எழுதினார். கதையின் ஒவ்வொரு வரியும் கவித்துவச் சோகத்துடன் நம்மை எதிர்கொள்கின்றன. 

சிரியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு அகதியாகச் செல்ல, கப்பலுக்காகக் காத்திருக்கும் பொழுதில், சிரியாவிலிருந்து தப்பித்த தந்தை, தன் மடியில் படுத்திருக்கும் மகனுக்குச் சொல்வதுபோன்ற, கடித வடிவத்தில் அந்தக் கதையை எழுதியிருந்தார். இது ஒரு வகையில், தனிமையில் பேசி நடிக்கும்மோனோலாக்வகைமையைச் சேர்ந்த ஒரு படைப்பு. அந்தச் சிறுகதை தற்போது புத்தகமாகியிருக்கிறது.  

 
டான் வில்லியம்ஸின் அற்புதமான நீர் வண்ண ஓவியங்களுடன் ப்ளூம்ஸ்பரி பதிப்பக வெளியீடாகச் சமீபத்தில் வெளியாகியுள்ளது இந்தப் புத்தகம். விற்பனையாகும் ஒவ்வொரு புத்தகத்திலிருந்து கிடைக்கக்கூடிய வருவாயில், ஒரு பவுண்டை (இந்திய மதிப்பில் சுமார் 92 ரூபாய்) அகதிகளின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்துக்கு வழங்கப்பட உள்ளதாகப் புத்தகத்தின் பின் அட்டையில் கூறப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த பொக்கிஷம்

இந்தக் கதையை, சுமார் 7 நிமிடங்கள் ஓடக்கூடிய மெய்நிகர் படமாக உருவாக்கி அதை 2017-ல் யூடியூப்பில் தவழ விட்டிருந்தார் ஹுசைனி. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ணத் தூதராகவும் இருக்கும் அவர் எழுதியஸீ பிரேயர்கதையின் இறுதி வரிகள் இப்படியிருக்கின்றன:

இந்த இரவில் நான் நினைத்துப் பார்ப்பதெல்லாம், கடலின் ஆழத்தையும், பரப்பளவையும், அலட்சியத்தையும்தான். இதனிடமிருந்து உன்னைக் காப்பதற்குத் திராணியற்றவனாக இருக்கிறேன். என்னால் செய்யக் கூடியதெல்லாம் பிரார்த்திப்பது மட்டும்தான். கரை தென்படுவதற்கு முன், இந்த நீரில் நாம் மூழ்கிவிடாமல் இருக்க, கடவுள் இந்தக் கப்பலைச் செலுத்துவாராக.

 
ஏனென்றால், நீ விலையுயர்ந்த பொக்கிஷம், மர்வான். காணக் கிடைக்காத மிக விலையுயர்ந்த பொக்கிஷம். அது இந்தக் கடலுக்குத் தெரியும். என் பிரார்த்தனை இந்தக் கடலுக்குத் தெரியும்”. 

நன்றி (ஆலன் குர்தி படம்): aljazeera.com

Thursday, August 30, 2018

அறிவியல் புனைவுகளின் ஆரம்பப்புள்ளி!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 26 ஆகஸ்ட் 2018


உலகில் உள்ள உயிரினங்களில், மனித இனம்தான் உயர்ந்தது என்ற சிந்தனைப் போக்கு, நெருப்பைக் கண்டுபிடித்த காலத்திலிருந்து தொடர்கிறது. ‘தன்னால் எல்லாம் முடியும்’ என்ற நினைப்பில் மனிதர்கள் என்னென்னவோ பைத்தியக்காரத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்கள். ‘எக்ஸ் ரே கண்ணாடி’, ‘டைம் மெஷின்’, ‘மரணத்தைத் தடுக்கும் மருந்து’ எனப் பலவற்றை இந்த வரிசையில் நம்மால் அடுக்கிவிட முடியும்.

அந்த வரிசையில் வைக்கும்படியான இன்னொரு ‘பைத்தியக்காரத்தனம்’தான் மனிதரைவிட இன்னொரு மேலான, சக்தி வாய்ந்த ஒரு உயிரினத்தை மனிதர்களே உருவாக்கும் செயல். அது ரோபோ அல்ல. மனிதர்களின் உணர்வுகளைக் கொண்ட, இன்னொரு ‘உயர்ந்த’ (8 அடி உயரம்!) மனிதன். அரக்கனின் உடலமைப்பைக் கொண்ட, மனிதர்களைக் கொல்லும் ஒரு ‘மனிதன்!’ 

‘என்ன இது பைத்தியக்காரத்தனமான சிந்தனை’ என்று, இன்று நாம் யோசிக்கலாம். ஆனால், உலகில் அறிவியல் புனைகதைகள் தோன்றுவதற்கு அந்தச் சிந்தனைதான் 1816-ல் ஆரம்ப விதையாக விழுந்தது. எந்த ஒரு ‘அறிவியல்’ சிந்தனையும் முதன்முதலில் ‘பைத்தியக்காரத்தனமான’ சிந்தனையாகக் கருதப்பட்டிருப்பதை வரலாறு நெடுகிலும் நம்மால் காண முடியுமே!

படைப்புக்கு வயது 200!

அறிவியல் கண்டுபிடிப்புகளில், காலந்தோறும் பெண்களின் பங்களிப்பு, இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. ஆனால், ‘அறிவியல் புனைகதை’ எனும் பிரிவு, இலக்கிய உலகில் தோன்றுவதற்கு மேரி ஷெல்லி எனும் பெண்தான் காரணமாக இருந்திருக்கிறார்.

1797-ம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று லண்டனில் பிறந்தார் மேரி வால்ஸ்டோன்கிராஃப்ட் காட்வின். அவருடைய தந்தை வில்லியம் காட்வின், அரசியல் தத்துவவியலாளர். தாய் வால்ஸ்டோன்கிராஃப்ட், உலகறிந்த பெண்ணியவாதி. தன் தந்தையின் அரசியல் சிந்தனைகளைப் பின்தொடர்ந்த பி.பி.ஷெல்லி எனும் கவிஞரைக் காதலித்த மேரி, 1814-ல் அவரைத் திருமணம் செய்துகொண்டு, மேரி ஷெல்லி ஆனார்.

இது அவரது 221-வது பிறந்த ஆண்டு. மட்டுமல்ல, 1816-ல் எழுத ஆரம்பித்து, 1818-ல் வெளிவந்த ‘ஃபிராங்கன்ஸ்டீன்’ எனும் அவரது முதல் நாவலுக்கு, இந்த ஆண்டு 200-வது வயது!


மனித ஞானத்தின் எல்லை

ஜெனிவாவைப் பூர்வீகமாகக் கொண்ட, இத்தாலிய இளம் விஞ்ஞானி, விக்டர் ஃபிராங்கன்ஸ்டீன். சிறு வயதிலிருந்தே, இயற்கைக்கு மாறான விந்தைகளைப் பற்றியும், அமானுஷ்யமான சிந்தனைகளைப் பற்றியும் படித்துவந்த விக்டர், இறந்துபோன மனிதர்களின் உடல் உறுப்புகளைக் கொண்டு, மனித உருவமைப்பில், மனிதரைவிட சக்தி வாய்ந்த ஒரு உயிரினத்தை உருவாக்குகிறான். ஆனால், ‘மனித உருவமைப்பு’ எனும் முயற்சி தோல்வியடைய, ‘சக்தி வாய்ந்த உயிரினம்’ எனும் முயற்சி வெற்றி பெறுகிறது.

அகோரமான அந்த உயிரினம் உயிர் பெற்று எழ, அதைக் காணச் சகியாமல், தன் ஆய்வகத்திலிருந்து ஓடிவிடுகிறான் விக்டர். அந்த உயிரினமோ, மனித அன்பு கிடைக்காமல், எங்கு சென்றாலும் விரட்டப்பட, மனிதர்களைப் பழி வாங்க ஆரம்பிக்கிறது. அதாவது, தன்னை உருவாக்கிய விக்டர் மற்றும் அவனைச் சார்ந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் கொல்ல ஆரம்பிக்கிறது.

தான், மனிதர்களைக் கொல்லாமல் இருக்க வேண்டுமென்றால், தன்னைப் போலவே இன்னொரு உயிரினத்தை உருவாக்கச் சொல்லி விக்டருக்குக் கட்டளையிடுகிறது. ஆனால் விக்டர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அவனுடைய சகோதரர்கள், நண்பர்கள், மனைவி என அனைவரும் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள்.

அந்தக் கொலைகளுக்குப் பழிவாங்கவும், அந்த அரக்கனை அழிக்கவும் சபதம் எடுக்கிறான் விக்டர். அவனால் அது முடிந்ததா என்பது நாவலின் மீதிக் கதை.

‘உலகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா…’ என்று இந்த நாவல், நம்முள் கேள்வி எழுப்புகிற அதேநேரம், ‘மனிதரின் விஞ்ஞான ஞானம் என்பது ஒரு எல்லைக்கு உட்பட்டதுதான். இயற்கைக்கு மாறான எந்த ஒரு விஷயத்தை மனிதர்கள் செய்தாலும் அது அழிவையே கொண்டு வரும்’ எனும் உண்மையையும் எடுத்துக் கூறுகிறது.

பருவநிலை மாற்றத்தின் இலக்கியம்

1816-ல், சுவிட்சர்லாந்துக்குச் சுற்றுலா வருகிறார்கள் ஷெல்லி தம்பதியினர். அங்கு, இன்னொரு கவிஞர், பைரனின் இல்லத்தில் தங்கு கிறார்கள். அதற்கு முந்தைய ஆண்டுதான் இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் தம்போரா எனும் எரிமலை வெடித்தது. அப்போது ஏற்பட்ட வெப்பம் காரணமாக, பருவநிலையில் சில மாறுதல்கள் ஏற்பட்டன.

இதனால் 1816-ல் கோடைக்காலம் என்பதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மேற்கு ஐரோப்பா, இங்கிலாந்து என வடக்கு அரைக்கோளம் முழுவதும் அந்த ஆண்டு, மழையாகப் பொழிந்து தள்ளியது. இதனால் அந்த வருடத்தை ‘கோடை இல்லாத வருடம்’ (இயர் வித்அவுட் எ சம்மர்) என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதனால், கோடையைக் கழிக்க வந்த ஷெல்லி தம்பதியினரும், பைரன் மற்றும் அவருடைய நண்பர் ஜான் வில்லியம் பொலிடோரி ஆகிய நால்வரும் வீட்டுக்குள்ளேயே தங்கள் பொழுதைப் போக்க வேண்டியிருந்தது. அந்த மழைக்கால இரவில், மின்சாரமும் போனது. அப்போது, அவர்கள் நால்வரும், நேரத்தைக் கடத்த, ஆளுக்கு ஒரு பேய்க் கதையைச் சொல்ல வேண்டும் என்றும், யாருடைய கதை அருமையாக இருக்கிறது என்று பார்க்கலாம் எனவும் ஒரு போட்டி நடைபெற்றது. மற்ற மூவரும் ஒவ்வொரு கதை சொல்ல, மேரி ஷெல்லிக்கு எந்தக் கதையும் தோன்றவேயில்லை.

அடுத்த சில நாட்களில், இறந்துபோன ஒருவருக்கு மருத்துவர் ஒருவர் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவது போன்று, அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவுதான் பின்னாளில் ‘ஃபிராங்கன்ஸ்டீன்’ என்ற நாவலாக உருவானது.

இந்த நாவலைப் பற்றி ‘தி கிரேட் டிரேஞ்ச்மெண்ட்’ எனும் பருவநிலை மாற்றம் தொடர்பான தனது நூலில், எழுத்தாளர் அமிதவ் கோஷ் இப்படிச் சொல்கிறார்: “இதுபோன்ற இயற்கைக்கு மாறான கதைகளை எழுதுவதற்கு, எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம்தான் காரணம் என்று அப்போது அந்த நால்வருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சுற்றுச்சூழலில் ஏற்படும் ஒரு பேரழிவு, புனைவு இலக்கியம் உருவாவதற்கு எப்படியான வினையூக்கியாக இருக்கும் என்பதற்கு இந்த நாவல் ஒரு சான்று” என்கிறார்.

பருவநிலை மாற்றம் குறித்த புனைவு இலக்கியங்களில் முக்கியமான புத்தக மாகவும் இன்று அது நிலைபெற்றுவிட்டது. மேரி ஷெல்லியும் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் அறிவியலிலும் இடம் பிடித்துவிட்டார்!

நன்றி: இந்து தமிழ் (பெண் இன்று)

Tuesday, August 21, 2018

கிறிஸ்டோபர் வென்றார்… கடவுள் தோற்றார்…!

ந.வினோத் குமார்

மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து இப்போது வரை, ஒரு கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்றால், அது இதுதான்: ‘கடவுள் இருக்கிறாரா..?’

‘இருக்கிறார்’ என்றுதான் உலகில் உள்ள எல்லா மதங்களும் சொல்கின்றன. சொல்லி வைத்தாற்போன்று அந்தக் கடவுளர் அனைத்தும் ஆண் பாலினத்தவராகவே இருப்பது மட்டும்தான் மதங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை!

கடவுள், மதங்கள் ஆகியவற்றின் பெயரால்தான் மூடநம்பிக்கைகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன. பரப்பப்படுகின்றன. அவற்றுக்கு எதிராகத்தான் கலிலியோ, சாக்ரடீஸ், ராஜா ராம் மோகன் ராய், பெரியார் போன்றோர் பணியாற்றி வந்தனர். அந்த வரிசையில் வருபவர்தான் நரேந்திர தபோல்கர். அடிப்படையில் மருத்துவரான இவர், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அதனால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்ட போலி சாமியார்கள், மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவான சமூக விரோதிகள், அவரது உயிருக்குக் குறி வைத்தனர். 2013, ஆகஸ்ட் 20-ம் தேதி அவர் கொல்லப்பட்டார்.

அந்த தினத்தை இந்த ஆண்டு முதல் ‘தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்’ என்று அனுசரிக்க, மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘ஆல் இந்தியா பீப்பிள் சயின்ஸ் நெட்வொர்க்’ எனும் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த தினத்தில், ‘ஹிட்சென்ஸ் எதிர் ப்ளேர்’ எனும் புத்தகத்தை அறிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். கனடா நாட்டில் உள்ளவர் பீட்டர் மங்க் எனும் கொடையாளர். இவரும் இவரது மனைவியும் இணைந்து 2006-ல் ‘ஆறியா ஃபவுண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தனர். அதன் கீழ், 2008-ல் ‘தி மங்க் டிபேட்ஸ்’ எனும் விவாத நிகழ்ச்சியைத் தொடங்கினர். ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் இந்த விவாத நிகழ்ச்சியில், குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு, அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் துறை சார்ந்த வல்லுநர்கள் உரையாற்றுவார்கள்.

அப்படி, 2010-ல், பத்திரிகையாளரும் கடவுள் மறுப்பாளருமான கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் மற்றும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர் ஆகியோர் ‘உலகில் நடைபெறும் நன்மைகளுக்கு மதங்கள் காரணமா?’ எனும் தலைப்பில் விவாதித்தனர். கிறிஸ்டோபர் அந்தத் தலைப்பு எதிராகவும், ப்ளேர் அதற்கு ஆதராகவும் உரையாற்றினர். அந்த உரையாடல்கள் தொகுக்கப்பட்டு, ‘ஹிட்சென்ஸ் எதிர் ப்ளேர்’ எனும் தலைப்பில் புத்தகமாக 2011-ல் வெளியானது.


கிறிஸ்டோபரின் கடவுள் மறுப்புச் சிந்தனைகள் உலகப் புகழ் பெற்றவை. அதனால் எடுத்த எடுப்பிலேயே ‘டாப் கியரில்’ பறந்தார். ‘யுத்தங்களிலும், அன்றாட மனிதச் செயல்பாடுகளிலும் தனக்கென்று ஒரு நிலையை எடுக்கும் கடவுள் நமக்குத் தேவையா? காமம் மற்றும் உடலுறவு சார்ந்த விஷயங்களைக் குறித்து நம்மைக் கேவலமாக நினைக்க வைக்கிற கடவுள், இந்த உலகத்துக்கு நல்லதுதானா? இல்லாத நரகத்தையும், ‘சாமி கண்ணைக் குத்திவிடும்’ என்று சொல்லி பயம் காட்டியும் நமது குழந்தைகளை வளர்ப்பது சரியா? ‘ஆணுறையைப் பயன்படுத்துவதைவிட எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது எவ்வளவோ மேல்’ என்று பிரசங்கம் செய்யும் மதங்கள் நமக்குத் தேவைதானா?...’ என்று இப்படி அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டு வந்தவர், கடைசியாக ஒரு முக்கியமான கேள்வியை முன் வைக்கிறார். ‘பெண்களைக் கீழ்த்தரமான படைப்பாகக் கருதும் கடவுள், மதங்கள் ஆகியவை உலகுக்கு நன்மை பயக்குமா?’ (‘சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கியதால்தான் கேரளத்தில் வெள்ளம்’ என்று பிதற்றுகின்ற குருமூர்த்திகள் கவனிக்க..!).

இப்படிக் கேட்டுவிட்டு, நோபல் பரிசு வென்ற அமெரிக்க இயற்பியலாளர் ஸ்டீவன் வீன்பெர்க் சொன்ன ஒரு கருத்தை மேற்கோள் காட்டுகிறார் கிறிஸ்டோபர்: ‘இந்த உலகில், நல்லவர்கள் தங்களால் இயன்ற அளவு நல்லதையும், தீயவர்கள் தங்களால் இயன்ற அளவு தீயவற்றையும் செய்வார்கள். ஆனால், நல்லவர்களைத் தீங்கு செய்ய வைக்க வேண்டுமென்றால், மதங்கள் போதும்!’.

‘தீயவற்றிலிருந்து நன்மையைப் பிரித்தறிய நமக்குத் தெய்வீக சக்தி எதுவும் தேவையில்லை. போலியோவுக்குச் சொட்டு மருந்து கொடுப்பது குழந்தைக்கு நல்லது. ஆனால், ‘போலியோவுக்குச் சொட்டு மருந்து போட்டுக்கொள்ளாதே. அது நமது மதத்துக்கு எதிரானது’ என்று, ஆப்கானிஸ்தான், மேற்கு ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் பிரசாரம் செய்யப்படுகிறது. ‘எங்களால் அற்புதங்களைச் செய்ய முடியும்’ என்று சொல்வதை மதங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கிறிஸ்டோபர் தன் வாதங்களை முன் வைக்கிறார்.

அவற்றுக்குப் பதில் சொல்லும்விதமாக, ப்ளேர், ‘மதங்களின் பெயரால் அக்கிரமங்கள் நடப்பது உண்மைதான். எனினும், மதம் சார்ந்த அமைப்புகள் பல ஆப்பிரிக்கா முதற்கொண்டு பல்வேறு நாடுகளில் நல்ல பணிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன. அறிவியல், இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்பதைக் கற்றுத் தருகிறது. ஆனால் கடவுள் நம்பிக்கையோ, என்ன காரணத்துக்காக நமக்கு அறிவு வழங்கப்பட்டிருக்கிறது, அதை எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது. கடவுள் நம்பிக்கை நம் வாழ்க்கையை வளமாக்காது. மாறாக, நம் ஆன்மாவை வளமாக்கும்’ என்கிறார்.

ப்ளேரின் வாதங்களை மறுக்கும்விதமாக, கிறிஸ்டோபர், ‘மதங்கள் மனிதர்களை ஒன்றிணைப்பதில்லை. மாறாக, ‘இதுதான் நம் கடவுள். இவரைத்தான் பின்பற்ற வேண்டும். இன்னொரு மதத்தின் கடவுளை நீ கும்பிடக்கூடாது’ என்று பிளவுபடுத்துகின்றன’ என்பவர், ‘இன்னொருவருக்கு நாம் உதவுவதில் நிச்சயமாக ஒரு சந்தோஷம் இருக்கிறது. அது போதும். அதற்கு ‘மதம்’ என்ற சாயத்தைப் பூசத் தேவையில்லை என்று டோனி ப்ளேரைக் கேட்டுக்கொள்கிறேன். மதச்சார்பின்மையே இன்றைய தேவை’ என்கிறார்.

‘மதத்தின் பெயரால் நடைபெறும் தீமைகள், மத இலக்கியங்களில் உள்ளார்ந்த விஷயமாக இருக்கின்றன’ என்கிறார் கிறிஸ்டோபர். அயோத்தியில் நடைபெறும் பிரச்சினைகூட அப்படியான ஒன்றாக இருக்கலாம், இல்லையா?

‘மனித நாகரிகத்தின் இருப்புக்கு மிக ஆபத்தான விஷயமாக மதங்கள் இருக்கின்றன’ என்கிறார் அவர். நாம் அதைப் புரிந்துகொள்வது நமக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நல்லது. 

இருவரின் விவாதங்களும் முடிந்த பிறகு, பார்வையாளர்களிடமிருந்து கேள்வி வருகிறது. அதில் ஒன்று, ‘அமெரிக்காதான் உலகிலேயே மிகவும் மதரீதியான நாடு. ஆனால், இங்குதான் ஜனநாயகமும் தழைக்கிறது. இந்த முரணை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று கிறிஸ்டோபரிடம் கேட்கப்படுகிறது.

அதற்கு கிறிஸ்டோபர், ‘மத விஷயத்தில் அமெரிக்க அரசு எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்காதபடிக்கு, அதன் அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. இது அமெரிக்காவின் மூன்றாவது அதிபராக இருந்த தாமஸ் ஜெஃபர்சன் காலத்திலிருந்து இருக்கிறது. ஒருமுறை ‘டான்பரி பேப்டிஸ்ட் அசோஸியேஷன்’ எனும் மத அமைப்பு, ‘தங்களுக்கு வழங்கப்படுவது சலுகைகள்தான், உரிமைகள் அல்ல’ என்று சொல்லி ஜெஃபர்சனுக்குக் கடிதம் எழுதியது. அதற்கு ஜெஃபர்சன், ‘தேவாலயத்தையும் அரசையும் பிரிக்கும்விதமாக, இவற்றுக்கு இடையில் எப்போதும் ஒரு சுவர் இருக்கத்தான் செய்யும்’ என்றார். அந்தச் சுவரைப் பராமரிப்பது என்னைப் போன்ற ஆட்களின் வேலை’ என்கிறார்.

அப்படியான சுவர், இந்தியாவில் இல்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை? அப்படியே இருந்தாலும், அதைப் பராமரிக்க கிறிஸ்டோபரைப் போன்று எத்தனை பேர் முன் வருவார்கள்?

இந்த விவாதத்தைச் சுமார் 2,700 பார்வையாளர்கள் ரசித்தார்கள். விவாதம் தொடங்குவதற்கு முன்பு, தலைப்புக்கு ஆதரவாக 25 சதவீதத்தினரும், எதிராக 55 சதவீதத்தினரும், 20 சதவீதத்தினர் எந்த முடிவையும் எடுக்க முடியாமலும் இருந்தனர். விவாதம் முடிந்த பிறகு, 32 சதவீதத்தினர் ஆதரவாகவும், 68 சதவீதத்தினர் எதிராகவும் வாக்களித்தனர். ஆம்… கிறிஸ்டோபர் ஜெயித்தார்… கடவுள் தோற்றார்!