Thursday, August 16, 2018

அறிவியலால் வளர்ந்தோம்!

ந.வினோத்குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 14 ஆகஸ்ட் 2018

‘அறிவே ஆயுதம்’ என்பார்கள் சான்றோர்கள். விஞ்ஞானிகளிடம் கேட்டால் ‘அறிவியலே ஆயுதம்’ என்பார்கள். அந்த ஆயுதத்தை வன்முறைக்குப் பயன்படுத்தாமல், வளர்ச்சிக்காகப் பயன்படுத்திய மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று!

‘இந்தியாவின் அறிவியல்’ என்று தொடங்கினாலே, இன்றிருக்கும் தலைமுறையினர் பலருக்கும் ‘மங்கள்யான்’ மட்டும்தான் உடனடியாக நினைவுக்கு வரும். ஆனால், அது மட்டுமே நம் நாட்டு விஞ்ஞானிகள் செய்த சாதனை அல்ல.

கல்விப் புலத்தில் ‘பேஸிக் லைஃப் சயின்சஸ்’ என்று ஒரு சொற்பதம் உண்டு. அதாவது, இயற்பியல், வேதியியல், தாவரவியல் போன்ற மிக அடிப்படையான அறிவியல் துறைகளை இப்படி அழைப்பார்கள். இன்றைக்கு, நாம் கண்டிருக்கும் வளர்ச்சி அனைத்துக்கும், இந்த அடிப்படையான அறிவியல் துறைகள்தான் அடித்தளமாக அமைந்திருக்கின்றன. ஆனால், இன்றைக்குப் பல கல்லூரிகளில் மேற்கண்ட துறைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டன.

அறிவியல் ‘வரலாற்று’ புத்தகம்

அந்த அடிப்படை அறிவியல் துறைகளால் இந்தியா செய்த, செய்து வருகிற சாதனைகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாகச் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது ‘இந்தியன் சயின்ஸ்’ எனும் புத்தகம். ‘இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாடெமி’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்தில், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கடந்த 70 ஆண்டுகளில் அது மேற்கொண்ட அடிப்படையான, முக்கியமான ஆனால் பரவலாக அறியப்படாத 11 அறிவியல் சாதனைகளைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்டுரைகளை பிரபல அறிவியல் இதழாளர் தினேஷ் ஷர்மா, அதிதா ஜோஷி, கவிதா திவாரி மற்றும் நிஸ்ஸி நெவில் ஆகிய நான்கு பேர் எழுதியுள்ளனர்.

அந்த 11 அறிவியல் சாதனைகளில், நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய சாதனை ஒன்று, இந்த 71-ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படும் நேரத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். தேர்தலில் பயன்படுத்தப்படும் ‘மை’தான் அந்தச் சாதனை!


‘மை’ பூசிய விரல்கள்

‘மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா’ என்று உலகின் பல நாடுகளால் புகழப்படும் பெருமைக்கு உரியவை, இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள். 1951-52-க்கு இடைப்பட்ட காலத்தில்தான் நாட்டின் முதல் தேர்தல் நடைபெற்றது. அப்போதுதான் வாக்காளரின் ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் ‘அழியா மை’ முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.

அழியா மைய்யின் பயன்பாடு, 1940-களிலிருந்து தொடங்குகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, 1946-ல் இந்திய மாகாணத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, ஓட்டுப் போட்டதற்கு அடையாளமாக, வாக்காளர்களின் பெருவிரலில் ‘மை’ வைக்கும் வழக்கம் தொடங்கியது.

இந்திய மையை உருவாக்கிய பெருமைக்கு உரியவர், சலிமுஸ்ஸாமன் சித்திக்கி என்ற வேதியியலாளர் ஆவார். அப்போது ‘இந்தியன் கவுன்சில் ஆஃப் சயிண்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்’சின் இயக்குநராக இருந்த விஞ்ஞானி சாந்தி ஸ்வரூப் பட்நாகர், கேட்டுக்கொண்டதன் பேரில், ‘அழியா மை’ தயாரிப்பதற்கான வேதியியல் கலவை ஒன்றை உருவாக்கினார் சித்திக்கி.

மாற்று இல்லாத மை

அந்த மையைப் பெரிய அளவில் தயாரிக்கும் பொறுப்பு, 1949-ல், ‘தேசிய இயற்பியல் ஆய்வக’த்திடம் ஒப்படைக்கப்பட்டது. சில காலத்துக்குப் பிறகு, அந்த ஆய்வகம் வேறு சில ஆய்வுகளில் தன் கவனத்தைச் செலுத்த, இந்த மை தயாரிப்பதற்கான அனுமதியை கர்நாடக மாநிலத்தில் உள்ள ‘மைசூர் பெயிண்ட்ஸ்’ எனும் நிறுவனத்துக்குக் கைமாற்றியது. அப்போதிருந்து இப்போது வரை அந்த நிறுவனம் மட்டுமே இந்த மையைத் தயாரித்து வருகிறது. அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில், குறிப்பிட்ட சதவீதம் மேற்கண்ட ஆய்வகத்துக்குச் செல்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் மை, சுமார் 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

என்னதான் இந்த நிறுவனம் மட்டுமே இந்த மையைத் தயாரிக்கிறது என்றாலும், இந்தியத் தேர்தல் ஆணையம், கண்ணை மூடிக் கொண்டு மையை வாங்கிவிடுவதில்லை. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், அந்த நிறுவனத்திடமிருந்து 10 மில்லி லிட்டர் அளவு மையை வாங்கி, அதை அந்த ஆய்வகத்திடம் கொடுத்து மையின் ‘அழியாத்தன்மை’ பரிசோதித்துப் பார்க்கப்பட்ட பிறகே, நிறுவனத்திடமிருந்து மை வாங்குகிறது.

‘இந்த மை சீக்கிரமே அழிந்துவிடும்’ என்று வந்த விமர்சனங்களுக்காக, நம் முன்னோர்கள் என்ன மாதிரியான மாற்றுகளை யோசித்தார்கள் என்பதைத் திரும்பிப் பார்த்தால் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. அதில் ஒரு மாற்று, ‘சிற்றம்மைக்கு ஊசி போட்டவர்களுக்கு மட்டுமே வாக்குச் சீட்டு வழங்க வேண்டும்’ என்பதாக இருந்தது. ஏனென்றால், அந்த ஊசி போட்ட தழும்பு அவ்வளவு சீக்கிரத்தில் அழியாது என்பதால்! இந்த ‘ஐடியா’, சிற்றம்மைக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்ற திட்டத்துக்கு உதவியாக இருந்தாலும், எப்போதெல்லாம் சிற்றம்மை நோய் வருகிறதோ அப்போதெல்லாம் தேர்தல் நடத்த முடியாது என்பதால், இந்த மாற்று யோசனை நடைமுறைப்படுத்தப்படவில்லை. வழக்கம் போல, விரல் மையே வென்றது!

தேர்தல் மை கண்டுபிடித்தவர் ஓர் இஸ்லாமியர் (அவர் பின்னாளில் பாகிஸ்தானுக்குக் குடியேறி, அந்நாட்டு ‘அறிவியலின் தந்தை’ என்று புகழ் பெற்றார்) என்று நாம் சொல்லும் அதே நேரம், நம் நாட்டில் உள்ள இஸ்லாமியர்களை ‘பாகிஸ்தானுக்குப் போ’கச் சொல்கிற நிலைமையும் இருப்பது, மிகப்பெரிய முரண், இல்லையா?

இந்தப் புத்தகத்தை பி.டி.எஃப். வடிவில் இலவசமாகத் தரவிறக்க: http://www.insaindia.res.in/scroll_news_pdf/ISTI.pdf

நன்றி: தி இந்து (வெற்றிக்கொடி - சிறு மாறுதல்களுடன்)

Saturday, July 14, 2018

அவதூறுகளின் நாயகன்!

ந.வினோத் குமார்


இந்தியாவில் இன்றைக்கு அவதூறு வழக்குகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் இந்தியாவில் அவதூறு வழக்கைச் சந்தித்த முதல் வழக்கறிஞர் யார் தெரியுமா? அவர், எர்ட்லி நார்ட்டன். அன்றைய சென்னை மாகாணத்தில் பணியாற்றி வந்தார். 

1880-களில் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் ‘கார்ஸ்டின் டகாய்ட்டி’ (போடிநாயக்கனூர் ஜமீந்தார் வழக்கு என்றும் அழைக்கப்படுகிறது) எனும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் ஜமீந்தார் சார்பாக நார்ட்டன் ஆஜரானார். அப்போது, ‘இது ஜோடிக்கப்பட்ட வழக்கு. ஜமீந்தார் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டுள்ளார். இதுபற்றி, மெட்ராஸ் சிவில் சர்வீஸ் மூத்த உறுப்பினர் ஹென்றி எட்வர்ட் சல்லிவனுக்குத் தெரியும். ஆனாலும் அவர் அமைதியாக இருந்துவிட்டார்’ என்று குற்றம்சாட்டினார் நார்ட்டன். 

இந்த வழக்கில் தன்னை இழுத்ததற்காக நார்ட்டன் மீது அவதூறு வழக்குப் போட்டார் சல்லிவன். அதற்குப் பதிலளிக்க, நார்ட்டனுக்கு நீதிமன்றம் மூன்று வாரம் அவகாசமளித்தது. இந்த விஷயத்தில் அவருக்காக வாதாட எந்த வழக்கறிஞரும் முன் வரவில்லை. எனவே, தானே தன் வழக்கில் வாதாடினார் நார்ட்டன். சல்லிவன் சார்பாக அன்றைய அட்வகேட் ஜெனரல் எச்.எச்.ஷெப்பர்ட் வாதாடினார். அந்த வழக்கை ஐந்து நடுவர்கள் கொண்ட அமர்வு விசாரித்தது.

  
இறுதியில் கார்ஸ்டின் வழிப்பறி வழக்கில் சல்லிவனை இழுத்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, ‘வழக்கைக் கையாளும்போது நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உதிர்க்கும் வார்த்தைகளுக்காக அவர் மீது அவதூறு வழக்குப் போட்டால், அது அவரை நம்பி வரும் கட்சிக்காரர்களுக்கே கேடாக முடியும். எனவே, கட்சிக்காரர்களின் நலனை முன் வைத்து, நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதந்திரமாக உரையாட அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று கூறி பேச்சுரிமையை நிலைநாட்டி, நார்ட்டன் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

பிற்காலத்தில், தங்களின் பணியை முன்னிட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் சலுகைகள் கேள்விக்கு உள்ளாக்கப்படும்போதெல்லாம் இந்தியா முழுவதும் இந்த வழக்குதான் முன்னுதாரண வழக்காக முன் வைக்கப்பட்டது. 

இந்த வழக்கை நினைவுபடுத்தும் வகையில், இன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் எர்ட்லி நார்ட்டனின் படத்துக்குக் கீழே, ‘தன் பணியைச் செய்வதில் எந்த ஒரு அச்சத்திலிருந்தும் விடுபட்டவராக ஒருவர் இருக்கிறார் என்றால் அவர், வழக்கறிஞர் மட்டுமே!’ என்ற வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. 

இந்த ‘அவதூறு நாயகன்’தான் பின்னாளில் ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளேட்டின் மீது அவதூறு வழக்குப் போட்டார். அனேகமாக ‘தி இந்து’ சந்தித்த முதல் அவதூறு வழக்கு அதுவாக இருக்கலாம் என்கிறது வழக்கறிஞர் சுரேஷ் பாலகிருஷ்ணன் எழுதி, சமீபத்தில் வெளியான ‘எர்ட்லி நார்ட்டன்: எ பயோகிராஃபி’ எனும் புத்தகம். 

  
நார்ட்டன் சில காலம் சென்னையின் கரோனராக (Coroner - துர் மரணம் அடைந்தவர்களின் பிரேத விசாரணையை நடத்துபவர்) இருந்தார். அப்போது, ‘அந்தப் பதவிக்கான திறன் நார்ட்டனிடம் இல்லை. அவரது தந்தையின் பெயரால்தான் அவருக்கு இந்தப் பதவியே கிடைத்தது’ என்கிற ரீதியில் ‘தி இந்து’வில் விமர்சனம் வந்தது. 

அது அப்படியில்லை என்பதை நார்ட்டன் நிரூபிக்க, ‘தி இந்து’ ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயரையும், அதில் பணியாற்றிய வீரராகவசாரியையும் நீதிமன்றத்துக்கு இழுக்க வேண்டியதாகப் போயிற்று. தன் மீது அவர்கள் இருவருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பகையோ கோபமோ இல்லை என்பதை உணர்ந்துகொண்ட நார்ட்டன், அவர்களிடம் மறுப்பு வெளியிடச் சொன்னார். அவர்களும் வெளியிட்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் நார்ட்டனுக்கு நெருக்கமான நண்பர்களாகிவிட்டார்கள். 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ‘தி இந்து’வில் ‘சென்டினல்’ எனும் புனைப்பெயரில் ‘ஒல்ல பொட்ரிடா’ எனும் பத்தியை எழுதத் தொடங்கினார் நார்ட்டன். அதில் அன்றைய ஆங்கிலேயே அதிகாரிகள் பலரைப் பற்றி, அரசின் நடவடிக்கைகளைப் பற்றி அங்கதத் தொனியில் கட்டுரைகள் எழுதினார். அது பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டது. அதைப் படித்த அதிகாரிகள் பலர் அவர் மீது எரிச்சலுற்றார்கள். ஆனால் பல ஆண்டுகளாக அந்த ‘சென்டினல்’ யார் என்பது மர்மமாகவே இருந்து வந்தது. அதற்கான விடையும் ‘தி இந்து’ மூலமாகவே கிடைத்தது. எப்படி? 

‘தி இந்து’வில் உதவி ஆசிரியராக இருந்த கே.சுப்பா ராவ் தன்னுடைய ‘ரிவைவ்ட் மெமோரீஸ்’ எனும் சுயசரிதையில் சென்டினலைக் காட்டிக் கொடுத்துவிட்டார்!

Monday, July 9, 2018

…என்றார் ஓ (O)..!

ந.வினோத் குமார்

 
மனிதர்களை, கொஞ்சம் நெருக்கமாக, நண்பர்களை அவர்களின் ஊர் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் சிலரிடத்தில் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா..? ‘டேய் ஊட்டிக்காரா…’ என்று நான் பல நேரம் அழைக்கப்பட்டிருக்கிறேன். டெல்லி, மும்பை பகுதிகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள ஆட்டோ, டாக்ஸிவாலாக்களுக்கு நான் ‘மதராஸி’ ஆகிவிடுகிறேன். விடுமுறை தினங்களில் என் சொந்த ஊர் திரும்பும்போது, அங்குள்ள உறவுகளுக்கு நான் ‘ஹே… சென்னைகாரு’ என்றாகிறேன்.

இப்படி நமக்கும், நாம் வசிக்கும் நகரத்துக்குமான தொடர்பு தனித்துவமானது. நமக்கு முகவரியைத் தரக்கூடியது மட்டுமல்ல. நல்ல மனிதர்களையும் அடையாளம் காட்டக்கூடியது. சென்னை வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. ‘பட்டணம் வந்து பணம் செய்தேனா?’ என்றால், இல்லை. ஆனால் பல நல்ல மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறேன். அந்த உறவுகளில் சிலது தொடரும். சிலது, என்ன காரணத்தாலோ விட்டுப் போகும். உறவென்பதே அப்படித்தானே..?

மனமாற நேசித்தலும், வயிறாற விருந்தோம்புதலும், கஷ்டத்தில் கைகொடுத்தலும் மட்டுமே உறவாகிவிடுகிறதா..? உடல் ரீதியான தொடர்புகொள்ளலை ‘ஜஸ்ட் ஒன் நைட் ஸ்டாண்ட்’ என்று சொல்லிவிட்டுக் கடந்துவிட முடியுமா..? அந்த உடலுறவு எதிர்பாலினத்தவருடன் மட்டும்தான் நிகழ வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லையே..? சகபாலினத்தவருடனும் அந்த அற்புதம் நிகழலாம் இல்லையா..?

ஆம்… ‘க்வீர்’ (Queer) என்று சொல்லப்படக்கூடிய கே (‘ஹோமோ செக்ஸ்’ என்ற சொல்லாடல் தவறு என்கிறார்கள் ‘க்வீர்’ சமூகத்தைச் சேர்ந்தவர்கள்), லெஸ்பியன், பைசெக்ஸுவல், திருநபர்கள் (Transgender) ஆகியோர் அடங்கிய பாலியல் சிறுபான்மையினருக்கிடையில் நிகழும் உறவை நான் அற்புதம் என்கிறேன். மன ரீதியாகவும் சரி… உடல் ரீதியாகவும் சரி… ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிகழ்கிற உறவுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல, சகபாலினத்தவருடனான உறவு.

அப்படியான உறவொன்றில் தான் கண்ட அற்புதங்களை, நியூயார்க் நகரம் தனக்குக் காட்டிய தரிசனங்களை ‘இன்ஸோம்னியாக் சிட்டி’ (2017) எனும் புத்தகத்தின் மூலம் நம் முன்னே வைத்து, நம்மைப் புதிய அனுபவத்துக்கு அழைத்துச் செல்கிறார் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பில் ஹேஸ். புத்தகத்தின் தலைப்பை விடவும், சுவாரஸ்யமாக இருக்கிறது, அதன் உபதலைப்பு: ‘நியூயார்க், ஆலிவர் மற்றும் நான்..!’ 


பில் ஹேஸ், ஓர் எழுத்தாளர். இதற்கு முன்பு ‘தி அனாடமிஸ்ட்’, ‘ஃபைவ் குவார்ட்ஸ்’, ‘ஸ்லீப் டெமான்ஸ்’ ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். இவர், ஒரு சிறந்த ஒளிப்படக்காரரும்கூட. எல்லாவற்றுக்கும் மேலாக, தான் ஒரு ‘கே’ என்பதை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டவர்.

தன்னுடைய 48 வயது வரை அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தில் வாழ்ந்தார். அங்கு அவருக்கு ஸ்டீவ் எனும் ஒரு ‘பார்ட்னர்’ இருந்தார். அவர்களுடைய உறவு பல ஆண்டுகளாக அற்புதமாகப் போய்க்கொண்டிருந்தது, ஸ்டீவ் மாரடைப்பால் இறக்கும் வரை!

ஸ்டீவ் இறந்த பிறகு, அவருடைய நினைவுகள் பில் ஹேஸை ரொம்பவும் அலைக்கழிக்கின்றன. தூக்கமின்மை (இன்ஸோம்னியா) நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் ஒரு மாற்றம் வேண்டி, நியூயார்க் நகரத்துக்குக் குடிபெயர்கிறார். அங்கு ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார்.

தன்னுடைய ‘தி அனாடமிஸ்ட்’ எனும் முதல் புத்தகம் அச்சுக்குப் போவதற்கு முன்பு டாக்டர் ஆலிவர் சாக்ஸ், அதன் பிரதியை ‘ப்ரூஃப்’ பார்த்து, அதற்கு ‘ப்ளர்ப்’ எழுதித் தந்தார். அந்தப் புத்தகத்தைப் பாராட்டி, பில் ஹேஸுக்குக் கடிதம் எழுதினார் சாக்ஸ். அதற்கு நன்றி தெரிவித்து பில், சாக்ஸுக்கு ஒரு கடிதம் எழுதினார். இப்படித்தான் தொடங்கியது அவர்களது நட்பு. தான் நியூயார்க் வந்துவிட்டதை சாக்ஸுக்குத் தெரியப்படுத்துகிறார் பில். அதில் சந்தோஷமடைந்த சாக்ஸ், பில் ஹேஸைத் தன்னுடைய இடத்தில் சந்திக்கிறார். இருவரும் நீண்ட நேரம் உரையாடினார்கள். பரஸ்பரம் இருவருக்கும் ஒரே மாதிரியான அலைவரிசை. ஆலிவர் சாக்ஸின் அறிவியல் தோய்ந்த கவித்துவமானப் பேச்சால் கட்டுண்ட பில் ஹேஸ், காதலில் விழுந்தார். சில தினங்களுக்குப் பிறகு தானும் காதலில் இருப்பதாக சாக்ஸ், பில்லிடம் மனம் திறந்தார். பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்குகிறார்கள்.

டாக்டர் ஆலிவர் சாக்ஸைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அவர் ஒரு மிகச் சிறந்த நரம்பியல் நிபுணர். ‘அவேக்கனிங்ஸ்’, ‘மியூசிக்கோஃபீலியா’ என நரம்பு மண்டலம் குறித்துச் சாமானியர்களும் அறிந்துகொள்ளும் வகையில் சிறந்த புத்தகங்கள் பலவற்றை எழுதியவர். இவரது ‘ஹாலுசினேஷன்ஸ்’ எனும் புத்தகத்தை நான் முதல் முறை இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உள்ளாகி, வீட்டில் படுத்திருந்தபோது படித்தேன். அதைப் படித்துவிட்டு, ‘பக்கத்தில் யாரோ நின்று என்னை உற்றுப் பார்க்கிறார்கள்’ என்ற கற்பனையில் நான் தூக்கத்தைத் தொலைத்த இரவுகள் பலவுண்டு.

 
இந்தப் புத்தகம், பில் ஹேஸுக்கும் ஆலிவர் சாக்ஸுக்கும் இடையிலான உறவு பற்றியது என்பதை விடவும், சாக்ஸைப் பற்றியது என்பதுதான் சரி. ஆலிவர் சாக்ஸ் எனும் மனிதர், தன்னுடைய வாழ்க்கையை எப்படிக் கவித்துவமாக நடத்தினார் என்பதைப் பற்றியது. எளிய விஷயங்களில் எப்படி அவர் எல்லையில்லா ஆனந்தத்தை அடைந்தார் என்பதைப் பற்றியது. தன்னுடனான தருணங்கள் ஒவ்வொன்றிலும், ஆலிவர் சாக்ஸ் உதிர்த்த சிந்தனைகளை ‘….என்றார் ஓ’ என, புத்தகம் நெடுகப் பரவவிட்டிருக்கிறார். ஆலிவரை, அந்தப் பெயரின் முதல் எழுத்தான ‘ஓ’வைக் கொண்டுதான் அழைக்கிறார் பில் ஹேஸ். அவர் மீது அவ்வளவு காதல் பில் ஹேஸுக்கு!

அந்தச் சிந்தனைத் தெறிப்புகள் சிலவற்றை இங்கே கொடுக்கிறேன்:

“I don’t so much fear death as I do wasting life.”

“Writing is more important than pain.”

“I am glad to be on planet Earth with you. It would be much lonelier otherwise.”

“The most we can do is to write – intelligently, creatively, critically, evocatively – about what it is like living in the world at this time.”

தன்னைப் போலவே ‘தூக்கமின்மை’ நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை, முப்பது ஆண்டுகளாக யாருடனும் ‘செக்ஸ்’ வைத்துக்கொள்ளாத ஒருவரை, ‘ஒவ்வொரு நாளும் ஒரு வார்த்தை என்னை ஆச்சரியப்படுத்துகிறது’ என்று சொன்ன ஒருவரை, ‘But’ எனும் சொல்லை நேசித்தவரை, ‘நான் வாழும் வரை எனக்கு நல்ல சிந்தனை ஓட்டமும் சொற்களும் வேண்டும்’ என்று கனவு கண்டவரை அவரது வார்த்தைகளைக் கொண்டே சித்திரமாகத் தீட்டி விடுகிறார் பில் ஹேஸ். இறுதியில், நாமும் ஆலிவர் சாக்ஸிடம் காதலில் விழுகிறோம்.

சாக்ஸினது மட்டுமல்லாமல், புத்தகத்தில் ஆங்காங்கே பில் ஹேஸ் எழுதிச் செல்லும் வரிகளும் தத்துவார்த்தமாக தொனிக்கின்றன.

“Something bad always leads to something good.”

“Practicality will not get you where you want to go.”

“Just remember: Ask first, don’t grab, be fair, say please and thank you, always say thank you – even if you don’t get something back right away. You will.”

“Take each day as it comes, don’t overthink it.”

இந்தப் புத்தகத்தின் ‘கதை சொல்லும் பாணி’ கொஞ்சம் புதுமையாக இருக்கிறது. தனக்கும் நியூயார்க் நகரத்துக்குமான உறவை ஒவ்வொரு அத்தியாயமாகச் சொல்லும் அதே வேளையில், தனக்கும் ஆலிவர் சாக்ஸுக்கும் இடையிலான உறவை ‘நோட்ஸ் ஃப்ரம் எ ஜர்னல்’ எனும் தலைப்பின் கீழ், நாட்குறிப்பு போல, சின்னச் சின்ன பத்திகளாகச் சொல்லிச் செல்வதால், ஒரே நாளில் உட்கார்ந்து படித்து முடித்துவிடத் தோன்றுகிறது. புத்தகத்தின் நடு நடுவே, பில் ஹேஸ் எடுத்த நியூயார்க் நகர மனிதர்களின் ஒளிப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அந்த நகரத்தில் பில் கடந்து வந்த வழிப்போக்கர்களைப் பற்றிய பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.


சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்த பில் ஹேஸ் – ஆலிவர் சாக்ஸ் வாழ்க்கையில் ஒரு புயல் அடித்தது. சாக்ஸுக்குப் புற்றுநோய்! ஆனால் சாவைக் கண்டு ஆலிவர் பயப்படவில்லை. தன் மிச்ச வாழ்நாளைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள விரும்புகிறார். எனவே ‘மை ஓன் லைஃப்’ எனும் தனது சுயசரிதைப் புத்தகத்தை விரைந்து முடிக்கிறார். அந்தப் புத்தகத்தில்தான் இறுதியாக, தான் ஒரு ‘கே’ என்பதை வெளிப்படையாகச் சொன்னார் ஆலிவர். அவர் இறந்த பிறகு, நியூயார்க்கை விட்டு, ரோம் நகரத்துக்குச் செல்கிறார் பில். அங்கிருந்துதான் இந்தப் புத்தகத்தை எழுதினார். எழுத்தின் மூலமாகத் தனக்கு ஏற்பட்ட இழப்புகளின் வலியை அவர் கடந்தார்.

‘கிரேக்கப் புராணத்தில் தூக்கத்தின் கடவுளுக்கு ஒரு  ‘இரட்டையர் சகோதரன்’ உண்டு. தானடோஸ் எனும் அவர், மரணத்தின் கடவுள்’ என்று எழுதுகிறார் பில். நியூயார்க், ஆலிவர், பில் ஹேஸ் ஆகிய நால்வருடன் நான்காவதாக அந்த மரணமும் ஒரு கதாபாத்திரமாக உலா வருவதை புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நம்மால் உணர முடிகிறது.

‘ஒரு நல்ல புத்தகம் இன்னொரு நல்ல புத்தகத்துக்கு இழுத்துச் செல்லும்’ என்பார்கள். இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன், நீங்கள் பில் ஹேஸ் எழுதிய இதர புத்தகங்களையோ அல்லது ஆலிவர் சாக்ஸ் எழுதிய புத்தகங்களையோ தேடிச் செல்வீர்கள். ஆம்… இது ஓர் அரிய, நல்ல புத்தகம்!

நன்றி (ஒளிப்படங்கள்): ஆலிவர் சாக்ஸ் - oliversacks.com,  பில் ஹேஸின் நியூயார்க் நகரம் -  http://drewrowsome.blogspot.com

Tuesday, June 12, 2018

தன் மரணத்தை எழுதிக்கொண்டவனுக்கு நீதி!

ந.வினோத் குமார் 

அது 2011-ம் ஆண்டு, ஜூன் 11-ம் தேதி. மும்பையில் இருந்து வெளிவரும் ‘மிட் டே’ பத்திரிகையின் செய்தியாளர் ஜே.டே. கொல்லப்பட்டுவிட்டார் என்று தகவல்கள் வெளியாயின. ‘மிட் டே’ என்ற ஒரு பத்திரிகை இந்தியாவில் வெளியாகிறது என்ற தகவலே, அப்போதுதான் பலருக்கும் தெரிந்தது. அப்படியான சூழலில், ஜே.டே. குறித்துப் பெரும்பாலான தென்னிந்திய ஊடகவியலாளர்களுக்குத் தெரியவில்லை. இருந்தும், கிடைத்த தகவல்களைக் கொண்டு, செய்தியும் சில கட்டுரைகளும் வெளியாயின. 

அந்தச் செய்திகள் எல்லாவற்றிலும், தவறாது இடம்பெற்றிருந்த ஒரு தகவல்… அவர், மும்பையின் நிழல் உலகத்தைப் பற்றித் தொடர்ந்து புலனாய்வுக் கட்டுரைகள் எழுதி வந்தார் என்பது! ‘இதழியலில், ‘புலனாய்வு இதழியல்’ என்று தனியாக எதுவும் இல்லை. எல்லா இதழியலுமே அடிப்படையில் புலனாய்வு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்’ என்பார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான காப்ரியல் கார்சியா மார்கேஸ். ஜே.டே. என்று அழைக்கப்படும் ஜோதிர்மயி டேயின் இதழியல் அப்படியான ஒன்று!


மும்பையின் நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராகிம், சோட்டா ராஜன் ஆகியோரைப் பற்றி அவர் வெளியிட்ட செய்திகள், காவல் துறையினருக்கு ‘டிப் ஆஃப்’ ஆக இருந்தன. அந்தச் செய்திகளின் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால், ஆபத்தான பல குற்றங்கள் தடுக்கப்பட்டன. ‘கேங்ஸ்டர்’கள் சிலர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்கள். தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். 

நிழல் உலகத்தைப் பற்றி டேவுக்குப் பழுத்த அனுபவம் இருந்தது. அந்த அனுபவங்களைக் கொண்டு ஆங்கிலத்தில் ‘கல்லாஸ்’ மற்றும் ‘ஜீரோ டயல்’ என்ற இரண்டு புத்தகங்களை எழுதினார் டே. முன்னது 2008-ல் வெளியானது. பின்னது, 2010-ல் வெளியானது.  ‘ஜாய்க்கோ’ பதிப்பக வெளியீடான அந்த இரண்டு புத்தகங்களும் அவை வெளியான சமயத்தில் பெருத்த கவனம் எதையும் பெறவில்லை. இந்த இரண்டு புத்தகங்களும் மீண்டும் 2011-ம் ஆண்டு அதே பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டன. அதாவது, டே கொல்லப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் அவை மீண்டும் புத்தகக் கடைகளை எட்டியிருந்தன. ஆனால், அவை மறுமதிப்பு செய்யப்பட்ட பிறகும், அந்த இரண்டு புத்தகங்கள் குறித்துப் பரவலாகத் தெரியவில்லை என்பதுதான் சோகம். 

டேயின் முதல் புத்தகமான ‘கல்லாஸ்’, உண்மையில் நிழல் உலகத்தைப் பற்றிய ஒரு அகராதி என்றுதான் சொல்ல வேண்டும். நிழல் உலகத்தினர் பயன்படுத்தும் மொழி, சொல்லாடல், சங்கேதக் குறியீடுகள் குறித்து அந்தப் புத்தகத்தில் விளக்கியிருந்தார் டே. அந்தச் சொற்களின் வழியே, நிழல் உலகத்தின் வரலாறு, பின்னணி, முக்கியமான நபர்கள் போன்றவை பற்றியும் டே விவரித்திருந்தார்.


 

அந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது, நிழல் உலகத்தைப் பற்றி, திரைப்படங்கள் வாயிலாக நாம் அறிந்திருந்த கற்பிதங்கள் உடைக்கப்படுகின்றன. அந்த நிழல் உலகத்தில், ‘ஹாட்லி சேஸ்’ நாவல்களைப் படித்துவிட்டு, அதேபோல திட்டங்களை வகுக்கிற ஆங்கில இலக்கியம் கற்றவர்கள் இருக்கிறார்கள். ‘நியூக்ளியர் பிசிக்ஸ்’ துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். பாலிவுட்டில் பேய்ப் படங்கள் எடுப்பதற்குப் புகழ் பெற்ற ‘ராம்ஸே சகோதரர்கள்’ இயக்கத்தில் உருவான ‘புராணா மந்திர்’ என்ற படத்தில், பேயாக நடித்த முகமது இக்பால் ஷேக் (இவர் பின்னாளில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்) போன்ற நடிகர் இருக்கிறார்கள். 

சொற்கள் மூலம் அவர்களைப் பற்றிய சித்திரைங்களை வரைந்துகாட்டும் அதே நேரத்தில், 90, 2000-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மிக முக்கியமான என்கவுண்ட்டர்களில் பங்கெடுத்த 1983-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பற்றியும், மும்பை வாழ் தமிழர்களின் ‘காட்ஃபாதர்’ ஆக விளங்கிய வரதராஜ முதலியாரின் ஆரம்ப கால வரலாற்றைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் டே. 

‘நான் ஆக்ஸிடெண்ட் ஆயிட்டேன்’ (நான் போலீஸாரால் துரத்தப்படுகிறேன்), ‘நான் அட்மிட் ஆயிட்டேன்’ (நான் கைது செய்யப்பட்டுவிட்டேன்), ‘ஆர்டிஸ்ட்’ (துப்பாக்கியைக் கையாளத் தெரிந்த நபர்) ‘ரூட் பஸ் நம்பர் 11’ (கொலை செய்துவிட்டு, கார்களைப் பயன்படுத்தாமல், ஓடித் தப்பிப்பது) போன்ற, நிழல் உலகத்தினர் தினசரி பயன்படுத்தும் சங்கேத வார்த்தைகளைப் பற்றி புத்தகத்தில் அவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்கிறார் டே. இந்தியாவில் குற்றங்களைச் செய்துவிட்டு, சில தாதாக்கள் துபாய்க்குத் தப்பிச் சென்றுவிடுவார்கள். பிறகு, கொஞ்ச காலத்துக்கு அங்கிருந்துகொண்டே, இந்தியாவில் உள்ள தங்களது குழுக்களை நிர்வகிப்பார்கள். தமிழ்ப் படம் ஒன்றில், ‘துபாயா… அது எங்கயோ ஊத்துக்குளி பக்கமோ, உசிலம்பட்டி பக்கமோ இருக்கு’ என்பார் வடிவேலு. அதுபோல, ‘துபாய்’க்கு நிழல் உலகத்தினர் பயன்படுத்தும் சங்கேத வார்த்தை என்ன தெரியுமா..? கிராமம். ‘நான் கிராமத்துக்குப் போறேன்’ என்று எந்த தாதாவாவது சொன்னால், அது ‘நான் துபாய்க்குப் போறேன்’ என்று அர்த்தமாம். 

டேயின் இரண்டாவது புத்தகம், போலீஸுக்கும், நிழல் உலகத்தினருக்கும் தகவல்களை வழங்குகிற ‘இன்ஃபார்மர்’களைப் பற்றியது. ‘ஸ்லீப்பர் செல்கள்’ பற்றி நமக்கு ‘துப்பாக்கி’ படம் வெளிவந்த பிறகுதான் தெரியும். ஆனால் 80, 90-களிலேயே ‘ஸ்லீப்பர் செல்கள்’ இருந்ததைப் பற்றி டே எழுதியிருப்பதை வாசிக்கும்போது, நிழல் உலகம் தொடர்பான அவரது அறிவும் அனுபவமும் நம்மை வியக்க வைக்கின்றன. அதே சமயத்தில், இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்த அவர், நிழல் உலகத்தினருக்கு எவ்வளவு ஆபத்தானவராக இருந்திருப்பார் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். தன் மரணத்தைத் தானே எழுதிக் கொண்டவராகவும் டே இருந்தார் என்பதையும் உணர முடியும். 

  
இந்த ‘ஆபத்தை’ நிழல் உலகத்தினர் விட்டுவைப்பார்களா..? டே கொல்லப்பட்டார். 2018-ம் ஆண்டு மே மாதம் அவரது கொலைக்குக் காரணமான சோட்டா ராஜன் மற்றும் அவனது கூட்டாளிகள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டேயின் 7-வது நினைவு தினத்தில் இது ஆறுதல் தரும் செய்தி. 

கொல்லப்பட்ட நீதிபதிக்கே இந்த நாட்டில் இன்னும் நீதி கிடைக்காமல் இருக்கும்போது, நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை உலகின் பேனா ஒன்றுக்கு நீதி கிடைத்திருப்பது, நீதித்துறை மீதான நம்பிக்கையை நிலைநாட்டுகிறது.   

நன்றி (ஜே.டே படம்):  financialexpress.com

Tuesday, June 5, 2018

மரம் நடுவதுகூடப் பிரச்சாரம்தான்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 05 ஜூன், 2018

மேற்கத்திய நாடுகளில் ‘சூழலியல் பெண்ணியம்’ என்ற கோட்பாடு 80-களில், 90-களில் உருவானது. ஆனால், அதற்கு முன்பே, அந்தக் கோட்பாடு தமிழர்களிடையே இருந்திருக்கிறது. அதற்கான சான்றுகள் சங்கப் பாடல்கள், நாட்டார் வழக்காற்று கதைகள், வாய்மொழி வரலாறுகள் போன்றவற்றில் தென்படுகின்றன.

ஆனால், காலம் செல்லச் செல்ல, கதை சொல்லும் மரபு தமிழர்களிடையே வழக்கொழிந்து வர, இன்று மக்கள் இயற்கையிடம் இருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டார்கள். இன்று நாம் சந்திக்கிற பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்கு அந்தக் கதைகளை நாம் மறந்தது மிக முக்கியமான காரணம்.

கதைகள் வழியாக, தமிழர்களிடையே இருந்த சுற்றுச்சூழல் கரிசனம், பெண்களுக்கும் இயற்கைப் பாதுகாப்புக்குமான தொடர்பு, இயற்கையைப் பாதுகாப்பதில் பெண்கள் பயன்படுத்துகிற சொல்லாடல்களின் தாக்கம் போன்றவை குறித்து ‘நேச்சர், கல்ச்சர் அண்ட் ஜெண்டர்’ எனும் புத்தகத்தில் ஆவணப்படுத்தி இருக்கிறார் பேராசிரியர் மேரி வித்யா பொற்செல்வி. சென்னை லயோலா கல்லூரியில், ஆங்கில மொழித் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது புத்தகத்தை, ரவுட்லெட்ஜ் பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.

 
பெண்ணுக்கும் மரத்துக்குமான உறவு, பெண்ணுக்கும் பறவைகளுக்குமான உறவு, பெண்ணுக்கும் நீருக்குமான உறவு, பெண்ணுக்கும் உணவுக்குமான உறவு, பெண்ணுக்கும் மொழிக்குமான உறவு என 12 மையக் கருத்துகளின் கீழ், அந்தக் கதைகள் தொகுக்கப்பட்டு, அதன் வழியே சூழல் பாதுகாப்பில், நம் முன்னோர்கள் எப்படியான விழிப்புணர்வைக் கொண்டிருந்தார்கள் என்பதை ஆழமாகப் பேசுகிறது இந்தப் புத்தகம். உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி, மேரி வித்யா பொற்செல்வியைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...

ஆளுமைகளால் பெற்ற ஊக்கம்

“என்னுடைய சொந்த ஊர் கொடைக்கானல். இயற்கையை ரசித்தும், கதைகளைக் கேட்டும் வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவள் நான். எங்கள் வீட்டுப் பக்கத்தில், விறகு பொறுக்க வரும் பழங்குடிப் பெண்களின் அரட்டையைக் கவனிப்பது வழக்கம். அப்போது, அவர்கள் இயற்கையுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். என் பாட்டியும் அம்மாவும் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை அவர்களே பயிர் செய்துகொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

இதற்கு இடையே, அன்னை தெரசா, வந்தனா சிவா, நம்மாழ்வார், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், மேதா பட்கர் போன்ற பல ஆளுமைகளை என் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் சந்தித்திருக்கிறேன். அவர்களால் பெற்ற ஊக்கத்தால்தான், என்னுடைய முனைவர் பட்ட ஆய்வை, சுற்றுச்சூழல் தொடர்பானதாகத் தேர்ந்தெடுத்தேன். அப்போது, சூழலியல் பெண்ணியம் சார்ந்த 6 மையக் கருத்துகளை உருவாக்கினேன். அண்மையில், இந்தப் புத்தகம் எழுதுவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, மேலும் 6 கருத்துகளை உருவாக்கினேன். இந்த 12 கருத்துகளின் கீழ், நம்முடைய நாட்டார் கதைகள், வாய்மொழிக் கதைகள் ஆகியவற்றைத் தொகுத்திருக்கிறேன்” என்பவர், ‘பெண்கள் எப்போதும் மவுனமாக இருந்ததில்லை. ஆனால், மவுனமாக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள்தாம், கதைகளாகவும் பாடல்களாகவும் மாறின’ என்கிறார். 

எளியவர்களின் அனுபவ அறிவு

“இந்தக் கதைகளைச் சேகரிப்பதற்காக, தமிழகத்தின் பல பகுதிகளுக்கு நான் பயணித்தேன். ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு பாட்டியுடன் பேசும்போதும், 50 புத்தகங்களைப் படித்ததற்கு நிகரான அறிவு, அனுபவங்கள் கிடைக்கும். பறவைகளின் மொழியைப் புரிந்துகொண்ட சிறுமி ஒருத்தியைப் பற்றிய நாட்டார் கதை நம்மிடையே உண்டு. மதுரை, கருப்பாயூரணி கிராமத்தில் அழகுப்பிள்ளையுடன் பேசும்போது, எனக்கு அந்தக் கதைதான் நினைவுக்கு வந்தது. ‘என்னுடைய பொழுதுபோக்கே நான் வளர்க்கும் செடி, கொடிகள், மாடுகள், ஆடுகளுடன் பேசுவதுதான்’ என்று சொன்னார் அவர்.

திண்டுக்கல்லில் உள்ள ஏ.வெள்ளோடு எனும் கிராமத்திலிருக்கும் இன்னாஸியம்மா, முருங்கைக்கீரையைப் பயன்படுத்தி எனக்கு ரசம் வைக்கக் கற்றுக்கொடுத்தார். தவிர, ‘தீனீச்சிப் பச்சிலை’ எனும் மூலிகையைப் பற்றியும் பல தகவல்களைச் சொன்னார். இப்படிப் பல அனுபவங்கள்!” என்றவர், குழந்தைகளுக்குக் கதை சொல்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

‘மேலே’ உண்டு தீர்வு!

“முன்பெல்லாம், நமது பாட்டிகள், அம்மாக்கள், குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும்போது, அந்தச் சோறு எங்கிருந்து வந்தது என்கிற விஷயத்தையும் சேர்த்தே கதையாகச் சொல்லியிருக்கிறார்கள்.” இதை ஆங்கிலத்தில் ‘டீப் ஈக்காலஜி’ என்கிறார்கள். அதாவது, மனிதர்கள் தனி, தாவரங்கள் தனி, பறவைகள் தனி, விலங்குகள் தனி, என்றில்லாமல், எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்கிற தத்துவம்தான் அது.

நம்முடைய பாட்டிகளுக்கும், அம்மாக்களுக்கும் ‘சூழலியல் பெண்ணியம்’, ‘டீப் ஈக்காலஜி’ போன்ற வார்த்தைகள் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இயற்கை மீதான கரிசனம், இயல்பாகவே அவர்களிடம் இருந்தது. எறும்புகளுக்கு உணவாகும் என்று அரிசி மாவால் கோலம் போடுவதுகூட அப்படியான கரிசனம்தான்!” என்றவர், ‘இந்தக் கதைகளை மீட்டெடுத்து, குழந்தைகளுக்குச் சொல்வதன் மூலம், அவர்களிடையே இயற்கை மீதும், சக பாலினத்தவர் மீதும் மரியாதை ஏற்படும்’ என்கிறார்.

 
“இன்றைக்கு இருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குச் சூழலியல் பெண்ணியம் என்ன தீர்வு வைத்திருக்கிறது?’ என்று கேட்டபோது, “1905-ல் ரொக்கையா சகாவத் ஹுசைன் எனும் பெண்மணி, ‘சுல்தானாஸ் ட்ரீம்’ எனும் ‘உடோப்பியன் நாவல்’ ஒன்றை எழுதினார். அதில் சூரிய ஒளி மின்சாரம், மழை நீர் சேகரிப்பு போன்றவை குறித்து எழுதி இருந்தார். அன்று அதைப் படித்த மக்கள் சிரித்தார்கள். ஆனால், இன்று அவை நிஜமாகி இருக்கின்றன. மின்சாரத்துக்காகச் சுரங்கம் தோண்டுதல் போன்ற சூழலியலுக்கு எதிரான விஷயங்களைக் கைவிட்டு, வானத்தைப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது!” என்கிறார் மேரி. 

செயலே சிறந்த பிரச்சாரம்

“ஆணாதிக்கச் சமூகமாக இருக்கிற இந்த நாட்டில், சுற்றுச்சூழல் பற்றியும், சுற்றுச்சூழலுக்காகவும் பெண்கள் பேசியிருக்கிறார்கள். என்ன, அவர்கள், மேடை போட்டு எதையும் பிரச்சாரம் செய்யவில்லை. தங்கள் செயல்பாடுகள் மூலமாக அதை மற்றவர்களுக்கு உணர்த்தினார்கள்.

மரத்தைக் கட்டிப்பிடித்துப் போராடிய ‘சிப்கோ’ பெண்கள் போராட்டம், அப்படியான ஒரு பிரச்சாரம்தான். மரத்தை வெட்டுவதால் அவர்கள் மரத்தை அணைக்கவில்லை. மரத்தை, தங்களில் ஒருத்தியாகப் பார்த்தார்கள் அந்தப் பெண்கள். அதனால்தான் மரத்தை அணைத்துக்கொண்டார்கள். மரங்களைத் தன் குழந்தைகளாக நினைத்து வளர்த்து வரும் திம்மக்கா போன்றவர்கள் எதையும் பிரச்சாரம் செய்யசெய்யவில்லை. அவர்களது செயலே பிரச்சாரம்தான். ஆம், மரம் நடுவதுகூட சூழலியல் பிரச்சாரம்தான்!” என்று புன்னகைத்து விடைகொடுத்த மேரி வித்யா பொற்சொல்வி, கடைசியாக இப்படிச் சொன்னார்: “சூழலியல் பெண்ணியம், இப்படித்தான். எப்போதும் எளிமையை உயர்த்திப் பிடிக்கும்!”

நன்றி: தி இந்து (வெற்றிக்கொடி இணைப்பிதழ்)

Monday, June 4, 2018

சைக்கிள் டைரிஸ்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 01 ஜூன், 2018


‘பக்கத்துல இருக்கிற கடைக்குக்கூட, அவன் சைக்கிள்லதான் போறான்’ என்று பல வீடுகளில் அம்மாக்கள் குறைபட்டுக்கொள்வதைக் கேட்டிருப்போம். அந்த அம்மாக்கள், டொமினிக் ஃபிராங்க்ஸ் கதையைக் கேட்டால், அவர்களின் ‘ரியாக்‌ஷன்’ எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவே மனம் ‘கலகல’க்கிறது! 

பின்னே, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதற்காக பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு சைக்கிளிலேயே வந்துபோவது என்றால் சும்மாவா?

‘என்னது, பெங்களூர் டூ டெல்லி சைக்கிள்லயா?’ என்று கேள்வி கேட்டு ஆச்சரியப்படுவதற்கே நமக்கு மூச்சு வாங்குகிறது இல்லையா? ஆனால், டொமினிக்குக்கு அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஏனென்றால், அவருக்கு முன்பே அப்படிப்பட்ட ஒரு சாதனையை, அவரது பி.டி. மாஸ்டர் நிகழ்த்தியிருக்கிறார். அவரிடமிருந்து பெற்ற ‘இன்ஸ்பிரேஷன்’தான், 22 நாட்கள் தொடர்ந்து பெடல் போடுவதற்கான சக்தியை டொமினிக்குக்கு வழங்கியிருக்கிறது.


ஸ்போர்ட்ஸ்மேன் எம்.பி.பி.எஸ்.

பெங்களூருவில் டொமினிக் ஃபிராங்க்ஸ் மருத்துவம் படித்துவிட்டு, வைத்தியம் பார்க்க விருப்பமில்லாமல் வெறுமனே ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். பள்ளிக் காலத்திலிருந்தே அவருக்கு விளையாட்டுகள் மீது பேரார்வம். அதனால், நாட்டின் முன்னணி ஸ்போர்ட்ஸ் சேனலில் சிறிது காலம் செய்தியாளராகப் பணியாற்றினார்.

2010-ம் ஆண்டு, அவருக்கு சைக்கிளில் நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று வர விருப்பம் ஏற்பட்டது. ‘சரி… போறதுதான் போறோம். ஏன், இலக்கே இல்லாமல் அலைய வேண்டும்?’ என்று யோசித்தவர், அந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதற்காக பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு சைக்கிளிலேயே பயணிக்கலாம் என்று முடிவெடுத்தார்.

அதற்குத் தேவையான சில ‘டிப்ஸ்’களைக் கேட்பதற்காகத் தான் படித்த பள்ளியின் பி.டி.மாஸ்டர் ஷிவபிரகாஷிடம் செல்லும்போதுதான் தெரிகிறது, அவரே ஒரு முறை இப்படி சைக்கிளில் ‘கிராஸ் கண்ட்ரி’ சென்றவர் என்பது. 1982-ம் ஆண்டு டெல்லியில் ‘ஆசியன் கேம்ஸ்’ போட்டிகள் நடைபெற்றபோது, அதைப் பார்ப்பதற்காக பெங்களூருவிலிருந்து டெல்லிவரை அந்த பி.டி.மாஸ்டர் சைக்கிளில் சென்றிருக்கிறார். அந்த அனுபவங்களைத் தன்னுடைய டைரியில் எழுதி வைத்திருந்தார். டொமினிக் அவரிடம் வந்தபோது, அந்த டைரியை அவரிடம் கொடுத்தார். 

பயணம் காட்டிய இந்தியா


அந்த பி.டி.மாஸ்டருக்குத் தன் அனுபவங்களைப் புத்தகமாக்கும் வாய்ப்புக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், டொமினிக்குக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ‘பெங்களூரு டூ டெல்லி பை சைக்கிள்’ அனுபவங்களை ‘நவ்டாங்கி டைரிஸ்’ என்ற தலைப்பில் புத்தகமாக்கியிருக்கிறார் டொமினிக். ரூபா பதிப்பக வெளியீடாக சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. 


‘பயணம் அல்ல, அந்தப் பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், அனுபவங்கள் ஆகியவைதான் ஒரு பயண நூலை மிகவும் சுவாரசியமாக்குகின்றன’ என்பார்கள். அதற்கு இந்தப் புத்தகம் விதிவிலக்கல்ல. பெங்களூருவிலிருந்து புறப்பட்டவர், முதலில் ஹைதராபாத்தில் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலைச் சந்திக்க விரும்புகிறார். ஆனால், அந்தக் கனவு நிறைவேறாமல் போகிறது. இருந்தும் மனம் தளராமல் சைக்கிள் மிதித்தவருக்கு, வழி நெடுக, அதிகம் பிரபலமாகாத, ஆனால் சத்தமே இல்லாமல் பல சாதனைகளைப் படைத்து வரும் மனிதர்களின் அறிமுகம் கிடைக்கிறது.

பழங்குடிகளின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றும் தன்னார்வலர், பள்ளித் தேர்வில் தன் மகன் வெற்றிபெறாவிட்டால் அவனை நக்ஸலைட்டாக மாற்றிவிடத் துடிக்கும் தந்தை, லாரிகள் தங்கிச் செல்லும் ‘தாபா’க்கள், பிரபல இந்தி நடிகர் சன்னி தியோலின் பெயரால் கட்டப்பட்ட கோயில் எனப் பல்வேறு மனிதர்களையும் இடங்களையும் பார்க்கும் வாய்ப்பு, டொமினிக்குக்கு இந்தப் பயணத்தின் மூலம் கிடைக்கிறது. அவற்றின் வழியாக, சமகால இந்தியாவின் நிலை எப்படி இருக்கிறது என்பதையும், தன் புத்தகத்தில் ஆங்காங்கே பிரதிபலித்திருக்கிறார் டொமினிக். 

ஆவணப்படமான பயணம்


இவர் இவ்வாறு சைக்கிளில் பயணம் போகிறார் என்பது தெரிந்தவுடன், இவரது நண்பர்கள் சிலர் காரில் பின்தொடர்ந்து, இவரது பயணத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அது, 2017-ல் ‘இட்ஸ் நாட் அபவுட் தி சைக்கிள்’ எனும் தலைப்பில் ஆவணப்படமாக வெளியானது. இது கடந்த ஆண்டு டொரொண்டோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த சாகசத் திரைப்படத்துக்கான விருதையும் வென்றது. புத்தகத்தில், அவரது நண்பர்கள் அடிக்கும் லூட்டியைக் கிண்டலும் காமெடியுமாகப் பதிவு செய்திருக்கிறார் டொமினிக். 


இத்தனைக்கும் இப்படியொரு பயணம் செல்வதற்கு, டொமினிக்குக்கு விலை உயர்ந்த ‘ஃபேன்ஸி சைக்கிள்’கள் எல்லாம் தேவைப்படவில்லை. நம் ஊர்களில் பால்காரர்கள் பயன்படுத்தும் சாதாரண சைக்கிள்தான். ‘தேசி’ சைக்கிளில்தான் இந்த அசாத்தியமான பயணத்தை டொமினிக் மேற்கொண்டார்.

‘இந்த சைக்கிளை வெச்சுக்கிட்டு, டெல்லி வரைக்கும் போறியா.? ரொம்ப ஓவர்தான்’ என்று இவரது நண்பர்கள் கமெண்ட் அடிக்க, தன் சைக்கிளுக்கு ‘நவ்டாங்கி’ என்று பெயர் சூட்டுகிறார் டொமினிக். அப்படியென்றால், இந்தியில் ‘ஓவர் ஆக்டிங் செய்தல்’ என்று அர்த்தம். இந்தியில் அந்தச் சொல், பெண்பாலாகப் பயன்படுத்தப்படுகிறது. பெங்களூருவிலிருந்து டெல்லிவரை தனக்குக் கை கொடுத்த, ‘நவ்டாங்கி’, கடைசியில் என்ன ஆனாள் என்று டொமினிக் சொல்வதுதான், பயணத்தின் மிகப்பெரிய ‘பிரேக்!’

தற்போது, வேறு எந்தப் பயணத்தையும் திட்டமிடாமல், ஜல்லிக்கட்டு பின்னணியில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு குறித்து ஆவணப்படம் எடுத்து வருகிறார் டொமினிக். 

நன்றி: தி இந்து (இளமை புதுமை) 
நன்றி (படங்கள்): டொமினின்க் ஃபிராங்க்ஸ் படம் thequint.com, ஆவணப்பட போஸ்டர் filmfreeway.com

Thursday, May 31, 2018

ஆஷ் ட்ரேயில் இருப்பது உங்கள் அஸ்தி..!

ந.வினோத் குமார்

முதன்முதலாக நான் சிகரெட் பிடித்தபோது… மன்னிக்க… பிடிக்கப் பழகியபோது, என் வயது ஏழோ, எட்டோ இருக்குமென்று நினைக்கிறேன். முதல் இழுப்பு இழுத்தபோது, பத்து பன்னிரெண்டு முறை இருமினேன். இரண்டாவது இழுப்பு இழுத்தபோது, கூடுதலாக இரண்டு, மூன்று ‘லொக்… லொக்…!’. நல்லவேளையாக நான் மூன்றாவது இழுப்பு இழுக்கவில்லை. இழுத்திருந்தால், புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு நான் அடிமையாகியிருக்க அனேக சாத்தியங்கள் உண்டு!

அதற்குப் பிறகு, கல்லூரிக் காலத்தில் புகைப்பிடிக்கும் ‘டெம்ப்டேஷன்’ வரவேயில்லை. ஆனால், வேலைக்குச் சேர்ந்து, இரண்டு, மூன்று காதல் தோல்விகளைச் சந்தித்த பிறகு, ‘நாமளும் சிகரெட் பிடிச்சிக்கிட்டு சுத்திக்கிட்டிருந்தா, நம்மையும் நாலு பொண்ணுங்க திரும்பிப் பார்த்திருப்பாங்கள்ல..’ என்று முட்டாள்த்தனமாகச் சிந்தித்துப் பார்த்ததுண்டு.

ஆம்… ஒரு ஆண், சிகரெட் பிடிக்கப் பழகுவதற்கான முதல் காரணம்… ‘ஹீரோயிஸம்!’. சிலர், ‘அதெல்லாம் இல்லை… ஏகப்பட்ட டென்ஷன்.. அதான்..’ என்று சாக்குப் போக்குச் சொல்லலாம். எதுவுமே உண்மை அல்ல. சிகரெட் பிடிக்கும்போது, தங்களுக்குப் பிடித்த கதாநாயகன் போலவே தாங்களும் இருப்பதாகக் கருதிக் கொள்ளும் மனோபாவம்தான், ஒருவரை சிகரெட் பிடிக்கப் பழகுவதை நோக்கித் தள்ளுகிறது.

சமரேந்திர நாத் சந்தா எனும் பத்திரிகையாளர், தான் எழுதிய ‘தி டொபேக்கோ ஸ்டோரி’ எனும் புத்தகத்தில், மக்கள், சிகரெட் பிடிக்கப் பழகுவதற்கான மூன்று காரணங்களைச் சொல்கிறார். அதில் ஒன்று, சினிமாவின் தாக்கம்! இதர இரண்டு காரணங்கள்… போர், விளம்பரம்!

 
சிகரெட்டின் முக்கிய மூலப் பொருளாக இருக்கும் புகையிலையின் வரலாற்றைச் சொல்கிறது அவர் எழுதிய அந்தப் புத்தகம். ப்ளூம்ஸ்பரி பதிப்பக வெளியீடாக 2017-ம் ஆண்டின் இறுதியில் வெளிவந்தது.

புகையிலை தரும் மயக்கம் போலவே, அதன் வரலாற்றுச் செய்திகளும் நம்மை ‘கிறுகிறு’க்க வைக்கின்றன. முதன்முதலாகப் புகையிலை எப்போது தோன்றியது என்று பார்த்தால், அதற்குச் சரியான தேதிகள் இல்லை. 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றியிருக்கலாம் என்று படிமவியலாளர்கள் உத்தேசமாகக் கணித்திருக்கிறார்கள். அதாவது, மனிதர்கள் தோன்றிய காலம்தொட்டே, இந்த ‘மர்ம மூலிகை’யும் இருந்து வருகிறது என்று புரிந்துகொள்ளலாம்.

அதேபோல, இது உலகின் எந்தப் பகுதியில் தோன்றியது என்ற தகவலையும் சரியாகக் கணிக்க முடியாது. கொலம்பஸ் வந்து இறங்கிய தீவில், அதாவது இப்போதைய வட, தென் அமெரிக்காவில் தென்பட்ட தாவரம் இந்தப் புகையிலை என்று மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், கொலம்பஸுக்கு முன்பே, கீழைத்தேய நாடுகளான இந்தியா மற்றும் அரபு நாடுகளிடையே கடல் மார்க்கமாக பண்டப் பரிவர்த்தனை நடைபெற்று வந்திருக்கிறது. அப்போது, இந்தப் புகையிலை இந்தியர்களிடமிருந்து அரேபியர்களுக்குக் கைமாறியிருக்கிறது என்றும், அவர்களிடமிருந்து ஆப்பிரிக்கர்களுக்கும் கைமாறியிருக்கிறது என்றும் ஒரு தகவல் இருப்பதாக இந்த நூலாசிரியர் சொல்கிறார். 

  
அதற்கு அவர் குறிப்பிடும் ஆதாரம்… புகையிலைக்கான பெயர்! ஆயுர்வேதத்தில் சரகர், சுஸ்ருதர் ஆகியோர் எழுதிய நூல்களில் புகையிலை ‘தம்ரகுட்டா’, ‘தம்ரபத்ரிக்கா’, ‘தமக்கூ’ ஆகிய பெயர்களில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சமஸ்கிருதச் சொற்களின் அடிப்படையில், அரேபியர்கள் இதை ‘துப்பாக்’, ‘தும்பக்’ என்ற பெயர்களில் அழைத்திருக்கிறார்கள். இந்த வேர்ச் சொற்களில் இருந்தே புகையிலைக்கான ஆங்கிலச் சொல் ‘டொபேக்கோ’ வந்திருக்கலாம் என்கிறார் சந்தா.

இந்த ‘தோற்ற மயக்கங்கள்’ ஒரு புறமிருக்க, ஓக்லாலா லகோட்டா உள்ளிட்ட பூர்வகுடி அமெரிந்தியர்களின் தொன்மங்களில் பெண்களால்தான் புகையிலை என்ற தாவரம் இந்தப் பூமியில் தோன்றியதாகச் சொல்லப்படுவது ‘புரியாத புதிர்!’ தவிர, இந்தத் தாவரத்தை கடவுளிடமிருந்து வந்த பரிசு என்று கருதி, பூர்வகுடிகள் கொண்டாடியிருக்கிறார்கள். எனவே, சில வரலாற்றாசிரியர்கள் புகையிலையை, ‘இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட தனித்துவமான சமய கலைப்பொருள் (religious artefact) இதுதான்’ என்கிறார்கள். இன்றைக்கும் கிராமங்களில் முனீஸ்வரன், முனியாண்டி போன்ற சிறுதெய்வங்களுக்குப் படைக்கும் படையலில் ‘சுருட்டு’ வைக்கப்படுவதைப் பார்க்கும்போது, அது உண்மையென்றே தோன்றுகிறது.

பழைய இந்தியத் திரைப்படங்களில் ‘ரேப்’ ஸீன் முடித்தவுடன், சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இருக்கும். ஆனால், பூர்வகுடி அமெரிந்தியர்கள், பெண்களுடன் ‘மேட்டர்’ செய்வதற்கு முன்பு, புகையிலை எரித்து, அதன் புகையை உள்ளிழுத்து, பெண்களின் முகத்துக்கு நேராக விடுவார்களாம். அப்போதெல்லாம் பெண்கள் உள்ளுக்குள் எப்படிப் புகைந்தார்களோ தெரியவில்லை. அந்தப் புகைச்சலைப் போக்குவதற்கென்றே பிற்காலத்தில் பிலிப் மோரிஸ் எனும் சிகரெட் தயாரிப்பு நிறுவனம் பெண்களுக்கென்றே ‘மார்ல்ப்ரோ’ எனும் சிகரெட் ‘பிராண்டை’ கொண்டு வந்தது!

‘அப்படியா…’ என்று இதற்கெல்லாம் நீங்கள் ஆச்சரியப்படக் கூடாது. உண்மையிலேயே ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்… சிகரெட்டில் உள்ள ‘நிகோட்டின்’ எனும் பெயரின் பின்பாதியைத் தந்தவள் ஒரு பெண் என்பதுதான்! 

  
புகையிலையை முதன்முதலில் இனங்கண்டது அமெரிக்கா. அந்தப் புகையிலையைப் புகைப்பதை ‘நாகரிகமடைந்த ஒரு மனிதனின் வாழ்க்கையில், உணவுக்கு அடுத்த இடம் புகைப்பிடிப்பது’ என்று புகைப்பிடிப்பதை சமூக வழக்கமாக்கியது, இங்கிலாந்து. ழான் நிக்கோ (Jean Nicot) எனும் பிரெஞ்சு நாட்டுத் தூதர், போர்ச்சுகல் நாட்டிலிருந்து திரும்பிய போது, பிரெஞ்சு நாட்டு ராணி கேத்தரின் த மெடிஸிக்குப் (Catherin de Medici) பரிசாக வழங்க புகையிலையை எடுத்து வந்தார். புகையிலையின் மணத்தில் மயங்கிய ராணி, புகையிலைக்கு அடிமையானாள். இந்த விஷயத்தில் ‘ராணி எவ்வழியோ அவ்வழியே மக்களும்!’. புகைப்பிடிப்பதற்குத் தேவையான பொடியை ‘ராணியின் பொடி’ என்று அழைத்தார்கள் மக்கள். பிற்காலத்தில் நிக்கோவின் பெயரையும் கேத்தரின் பெயரையும் இணைத்து ‘நிக்கோட்டினா’ (Nicot + Catherin, ‘in’ = Nicotin, Nicotiana) என்று அழைத்தார்கள் தாவரவியலாளர்கள். ‘நிக்கோட்டியானா டபேக்கம்’ (Nicotiana Tabacum) என்ற பெயரை நீங்கள் எங்கேனும் கடந்து வந்தால், ஆச்சரியப்பட வேண்டாம். அதுதான், புகையிலையின் தாவரவியல் பெயர்!

இன்றைக்கெல்லாம் பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இப்படி, பொது இடத்தில் புகைப்பிடித்ததற்காக தண்டனை கொடுத்த நாடு எது என்று பார்த்தால், அது ஸ்பெயின். தண்டனை பெற்ற மனிதர், அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிரிஸ்டோபர் கொலம்பஸின் உதவியாளர் ரோட்ரிகோ த ஜெரேஸ். ஆனால், இதில் உள்ள விசித்திரம் என்ன தெரியுமா..? புகைப்பிடிக்கும் வழக்கத்தை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதே ஸ்பெயின் நாடுதான். அது, ‘சூரியன் மறையாத சாம்ராஜ்யமாக’ ஸ்பெயின் இருந்த காலம். கடல் வழியாகப் பயணம் செய்து, உலகின் பல பகுதிகளைத் தங்கள் காலனியாதிக்கத்துக்குள் கொண்டு வந்தது ஸ்பெயின். அந்தச் சமயத்தில் மயன், ஆஸ்டெக் போன்ற பூர்வகுடி மக்களிடமிருந்து ஸ்பானியர்கள் புகைப்பிடிக்கக் கற்றுக்கொண்டார்கள். அதுமட்டுமல்ல சிகரெட் எனும் வார்த்தையின் சுருக்கமான ‘சிகார்’ (Cigar) எனும் வார்த்தையே ஸ்பானிஷ் மொழியிலிருந்து வந்ததுதான். அது ‘சிகாரா’ (Cigarra) எனும் பூச்சியின் பெயரிலிருந்து வந்தது. காரணம், அந்தப் பூச்சியின் உடலமைப்பு, புகையிலையைப் போன்றே சுருண்டிருக்குமாம்.

பிறகு ஒரு கட்டத்தில், இங்கிலாந்து, அமெரிக்காவில் தனது காலனியாதிக்கத்தைப் பரவலாக்கியது. அதற்குத் துணை நின்றது புகையிலை. ஜேம்ஸ்டவுன் என்கிற இடத்தில்தான் புகையிலை முதன்முதலாகப் பயிர் செய்யப்பட்டது. அதை வளர்த்துப் பராமரிப்பதற்கென்றே ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகள் கொண்டு வரப்பட்டார்கள். உள்ளூர் பூர்வகுடி அமெரிந்தியர்களும் அடிமைகளாக்கப்பட்டார்கள். ஆங்கிலேயர்களின் அதிகாரத்துக்கு எதிராக இந்த அடிமைகள் ஒரு சமயம் கொதித்தெழுந்தார்கள். பிற்காலத்தில் அமெரிக்காவில் சிவில் உரிமைப் போராட்டங்கள் தோன்ற, அதுவே அடிப்படையாக அமைந்தது.

‘கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என்று பாரதி பாடியதுபோல, அப்போதெல்லாம், புகையிலையைப் பெறுவதற்காக மாதுக்களை ‘மாறு’ கொண்ட நிகழ்வுகள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன.

நாளுக்கு நாள் அடிமைகளின் போராட்டம் வளர்ந்து வர, ஜேம்ஸ்டவுனைவிட்டு வெளியேறிவிடலாம் என்று ஆங்கிலேயர்கள் கருதினார்கள். அப்படி அவர்கள் வெளியேறியிருந்தால், அந்தப் பகுதியில் பிரெஞ்சு அல்லது ஸ்பெயின் அல்லது வேறு ஏதேனும் ஐரோப்பிய நாட்டின் வேர் ஊன்றப்பட்டிருக்கும். அமெரிக்கா எனும் தேசம் பிறந்திருக்காது. இதில் இன்னொரு சுவாரஸ்யம், அடிமைகளின் போராட்டத்துக்கு ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன் போன்றவர்கள் தலைமையேற்றார்கள். புகையிலை பெருவியாபாரிகளாக இருந்த இவர்கள்தான் பிற்காலத்தில், அமெரிக்க அதிபர் பதவிகளையும் அலங்கரித்தார்கள்!

இருந்தாலும் அமெரிக்கர்களுக்கு ரொம்பவும் நக்கல் அதிகம்தான். ஒருமுறை இங்கிலாந்தைச் சார்ந்த எழுத்தாளர் சார்லஸ் டிக்கென்ஸ், அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கே அவர் கண்ட காட்சி, அவருக்கு அமெரிக்காவின் மீதிருந்த மரியாதையைக் குலைப்பதாக இருந்தது. எங்கே பார்த்தாலும், புகையிலையை மென்று ‘பொளிச் பொளிச்’ என்று அமெரிக்கர்கள் துப்பிக்கொண்டேயிருந்தார்கள். அதில் வயது, பாலின வித்தியாசம் எல்லாம் இல்லை. இத்தனைக்கும், டிக்கென்ஸே,  ‘இரவு உணவுக்குப் பின், அதுவும் நான் தனியாக இருந்தால் புகைப்பிடிப்பேன்’ என்று சொன்னவர்தான். அவர், அமெரிக்கர்களின் புகையிலை மெல்லும் வழக்கத்தைப் பற்றி இப்படி எழுதினார்: ‘இப்படி ஒரு வெறுக்கத்தக்கப் பழக்கத்தை எந்த நாகரிகமடைந்த நாட்டிலும் காண முடியாது!’

அவர் அப்படி எழுதிய சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘பீட் தி டிக்கென்ஸ்’ (Beat the Dickens) என்ற பெயரில் சிகரெட் பிராண்ட் ஒன்றைக் கொண்டு வந்து, தங்கள் ‘புண்பட்ட பண்பாட்டை புகைவிட்டு’ ஆற்றிக்கொண்டார்கள் அமெரிக்கர்கள்.

ஒரு பக்கம், மக்களுக்குப் புகையிலையின் மீது மோகம் அதிகரித்து வர, இன்னொரு பக்கம், அந்த மோகத்தைக் கட்டுப்படுத்த பல நாடுகளில் பல மன்னர்கள் ‘புகையிலை வரி’ எல்லாம் போட்டுப் பார்த்தார்கள். ம்ஹூம்… மோகம்தான் குறைந்தபாடில்லை. இன்று மட்டும் என்ன வாழ்கிறதாம்…? என்னதான் விலையை உயர்த்தினாலும், சிகரெட் விற்பனை குறைந்திருக்கிறதா என்ன?

 
புகையிலையால் ஏற்படும் தீமைகள் 19-ம் நூற்றாண்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வர, புகையிலைக்கு எதிராக, முதன்முதலில் குரல் எழுப்பியவர் லூசி பேஜ் காஸ்டன் எனும் பெண்மணிதான். அவருக்கு ஆதரவாக அச்சு ஊடகங்களும், சிகரெட் தொடர்பான விளம்பரங்களை வெளியிடாமல் புரட்சி செய்தன. எனக்குத் தெரிந்து, சமீபகால நினைவில், ‘இனி சிகரெட் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதில்லை’ என்று முடிவெடுத்த பத்திரிகை… விகடன் என்று நினைக்கிறேன்!

ராணி எலிசபெத்தின் அரசவையில் ஒருவராக இருந்த சர் வால்டர் ரலீக், முதன்முதலாகப் புகையிலையை ராணியிடம் அறிமுகப்படுத்தியபோது, ராணி இப்படிச் சொன்னார்: ‘இதுவரை தங்கத்தைப் புகையாக்கியவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ரலீக்தான் முதன்முதலில் புகையைத் தங்கமாக்கியிருக்கிறான்!’ ஆம்… புகையிலைக்கு இன்னொரு பெயர் ‘பழுப்புத் தங்கம்!’

எலிசபெத் ராணியே சொல்லிவிட்டார் என்பதற்காக, அந்த ‘பழுப்புத் தங்கத்தை’ பயன்படுத்தாதீர்கள் தங்கங்களே… ஏனென்றால், ஆஷ் ட்ரேயில் நிறைந்திருப்பது சிகரெட் சாம்பல் அல்ல… உங்கள் அஸ்தி. நீங்கள் விடும் புகை, உங்கள் சிதையிலிருந்து வெளியாகும் புகை!


நன்றி (படங்கள்): புத்தக அட்டை amazon.in, புகையிலை, புகையிலைப் பெண், சிகரெட் படங்கள் thehindu.com, ஆஷ் ட்ரே படம் colourbox.com