Saturday, May 14, 2016

DR. B.R. AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - II

ராயின் கட்டுரை வாங்கினால் அம்பேத்கர் இலவசமா?


 ந. வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 2016, ஏப்ரல் 17

 ஒரு சின்னத் தேடல். கூகுளில் ஆங்கிலத்தில் 'அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்' (Annihilation of Caste) என்று தேடிப் பாருங்கள். அம்பேத்கர் எழுதிய புத்தகத்தின் அட்டைப்படம் வரும் என்று நினைத்தால் தவறு. மாறாக, அருந்ததி ராய் எழுதிய அறிமுகத்துடன் 'நவயானா' பதிப்பகம் வெளியிட்ட 'அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்: தி அன்னோடேடட் க்ரிட்டிக்கல் எடிஷன்' புத்தகம்தான் வரும். அமேசான் முதற்கொண்டு அனைத்து இணைய விற்பனை தளங்களிலும் இந்தப் புத்தகம் கிடைக்கும் என்று கூகுள் அறிவிக்கும்.

இந்தப் புத்தகம் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அம்பேத்கர் எழுதிய புத்தகத்துக்கு அருந்ததி ராய் 'தி டாக்டர் அண்ட் தி செய்ன்ட்' என்று ஒரு முன்னுரை எழுதியுள்ளார். 'பேப்பர்பேக்' (மெல்லிய அட்டை) வடிவத்தில் 415 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் சுமார் 180 பக்கங்களுக்கு அருந்ததி ராயின் முன்னுரையே விரிகிறது. அம்பேத்கரின் அந்தப் புத்தகம் முதன்முதலில் வெளியானபோது சற்றேறக்குறைய 70 பக்கங்களுக்குத்தான் இருந்தது. அப்போது அதன் விலை வெறும் எட்டு அணா.

இன்று வரையிலும் அம்பேத்கரின் எழுத்துகளை வெளியிடும் பதிப்பகங்கள், தலித் எழுத்துகளை வெளியிடும் பதிப்பகங்கள் போன்றவை அந்தப் புத்தகத்தை எளியவர்களும் வாங்கும் வகையில் மலிவு விலையில் விற்பனை செய்துவருகின்றன. ஆனால், 'நவயானா'வின் புத்தகம் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டபோது அதன் விலை 525 ரூபாய்.

'ஹேட்ரட் இன் தி பெல்லி' எனும் புத்தகம் 'நவயானா'வின் 'அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்' புத்தகத்துக்குப் பின் உள்ள அரசியலை ஆராய்கிறது. 'தி ஷேர்டு மிரர்' பதிப்பகம் கடந்த ஆண்டு இறுதியில் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 


அம்பேத்கர் அந்தப் புத்தகத்தில் காந்தியைப் பற்றிப் பின் இணைப்பில் மட்டும் குறிப்பிடுகிறார். ஆனால் அருந்ததி ராயோ, இந்த முன்னுரையில் அம்பேத்கரையும் காந்தியையும் ஒப்பிட்டு எழுதுகிறார் என்று இப்புத்தகம் குறிப்பிடுகிறது. அருந்ததி ராய், தனது சித்தாந்தம் சார்ந்து காந்தியை விமர்சிப்பதற்கு அம்பேத்கரின் இந்நூலைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் விமர்சிக்கிறது இந்நூல்.
 
குடி அரசில் வெளியான அம்பேத்கரின் எழுத்து

1936-ம் ஆண்டு இந்து மத சீர்திருத்தக் குழு என்று கூறிக்கொண்ட 'ஜாத் பட் தோடக் மண்டல்' என்ற அமைப்பின் மாநாட்டில் இந்து சமூக அமைப்பில் நிலவும் சாதியத்தின் கொடுமை பற்றிப் பேச அம்பேத்கர் அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக அவர் உரை ஒன்றைத் தயாரித்திருந்தார். ஆனால் அந்த மாநாட்டுக்கு அவர் அழைக்கப்பட்டதைப் பலரும் எதிர்த்தனர். அதனால் அம்பேத்கர் தன்னுடைய உரையை வழங்க முடியாமல் போனது. பின்னர், அதனை ஒரு புத்தகமாக்கி விநியோகம் செய்தார்.

அந்தப் புத்தகத்தின் முதல் மொழி பெயர்ப்பு, தமிழில் பெரியார் நடத்திய 'குடிஅரசு' இதழில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது!

1936-ம் ஆண்டிலிருந்து இன்று வரையிலும் பல பதிப்புகள் கண்டது அந்த நூல். பல கோடிக்கணக்கானவர்களிடையே 'சாதி ஒழிப்பு' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய புத்தகம் இது. இந்நிலையில்தான் 'நவயானா' அந்தப் புத்தகத்தை மீண்டும் பதிப்பித்தது. அம்பேத்கரின் மூலப் புத்தகத்துக்கு, அடிக்குறிப்புகள் கொடுத்து, அருந்ததி ராயின் முன்னுரையையும் கொடுத்து அந்தப் புத்தகத்தை ‘நவயானா’ பதிப்பித்தது. அம்பேத்கரையும் காந்தியையும் ஒப்பிட்டு எழுதியிருந்த அருந்ததி ராயின் முன்னுரை பல்வேறு தரப்பு மக்களிடையே கண்டனத்துக்கு உள்ளாகியது. அதைத் தொடர்ந்து எழுந்த விவாதங்கள், முகநூல் பதிவுகள், பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள் ஆகியவற்றில் முக்கியமான சில படைப்புகளைத் தேர்வு செய்து தொகுக்கப்பட்டு 'ஹேட்ரட் இன் தி பெல்லி' என உருவாகியுள்ளது. தலித் அறிவியக்க ஆளுமைகள் இது குறித்து அருந்ததி ராயிடம் எழுப்பிய கேள்விகளுக்கு ராய் கொடுத்த பதிலும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
 
அருந்ததி ராய்க்கு எதிர்ப்பு

'ஹேட்ரட் இன் தி பெல்லி' எனும் இந்தப் புத்தகத்துக்கான தலைப்பு, ஜுபாகா சுபத்ரா எனும் தெலுங்குக் கவிஞர் 'நவயானா'வின் புத்தகத்துக்கு எதிராக நடைபெற்ற விவாதம் ஒன்றில் பயன்படுத்திய 'கடுப்புலோ கசி' எனும் வார்த்தைகளின் ஆங்கில வடிவமாகும். தமிழில் அதனை 'வயிற்றெரிச்சல்' என்று சொல்லலாம்.

'உங்களுக்கு இன்னும் அறிவு போதாது. நாங்கள் எடுத்துச் சொல்கிறோம்' என்கிற ரீதியில், அம்பேத்கரின் புத்தகத்துக்கு அறிமுகம் கொடுப்பது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று வாதிடுகிறது இந்தப் புத்தகம். 'நவயானா'வின் இந்தப் புத்தகம் வெளியான சில மாதங்களில் அமெரிக்காவின் கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் பேசுவதற்கு அருந்ததி ராய்க்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அங்கு, 'நான் காந்தியைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். ஆனால், அது எங்கே மக்களிடம் எதிர்ப்பைச் சந்திக்குமோ என்று எண்ணியதால், அதைத் தனிப் புத்தகமாக வெளியிட வில்லை. எனவே, அதனை அம்பேத்கரின் புத்தகத்தில் முன்னுரையாக இணைத்துவிட்டேன்' என்று வெளிப்படை யாகக் கூறிய தகவலையும் இந்தப் புத்தகம் பதிவு செய்கிறது.

காந்தியைப் பற்றிய ராயின் கட்டுரையை வாங்கினால் அம்பேத்கர் இலவசமா? என்ற கேள்வியை இப்புத்தகம் எழுப்புகிறது.
 
அருந்ததி ராயின் முன்னுரைக்கு எதிராக ‘ஹேட்ரட் இன் தி பெல்லி' முன் வைக்கும் சில வாதங்கள்...

* அம்பேத்கரின் ‘சாதி ஒழிப்பு' எனும் எண்ணத்தை, கற்பனாவாத யோசனை என்கிறார் அருந்ததி ராய். இந்தியாவில் சாதி ஒழிப்பு என்ற செயல்திட்டம் சாத்தியமானது அல்ல என்கிறார்.

* இந்தப் புத்தகத்துக்கு அருந்ததி ராய் கொடுத்த முன்னுரையின் தலைப்பு ‘தி டாக்டர் அண்ட் தி செய்ன்ட்'. அதாவது ‘மருத்துவரும் துறவியும்' என்பதாகும். ‘துறவி' என்கிற வார்த்தையை அம்பேத்கரிடமிருந்துதான் கடன் வாங்குகிறார் அருந்ததி ராய். ஆனால் அம்பேத்கர், காந்தியை வெறும் துறவி என்று மட்டும் சொல்லவில்லை. ‘அரசியல் துறவி' என்கிறார். ‘அரசியல்' எனும் சொல்லை வெட்டிவிட்டு ‘துறவி' என்ற சொல்லை மட்டும் ராய் பயன்படுத்தியது ஏன் என்று இப்புத்தகம் கேள்வி கேட்கிறது. அம்பேத்கர் எதிர்மறையாக காந்தியை ‘அரசியல் துறவி’ என்று குறிப்பிட்டதை வெறுமனே ‘துறவி’ என்று குறிப்பிட்டதன் மூலம் வேறு அர்த்தத்தை, அருந்ததி ராய் தந்துவிட்டதாக இப்புத்தகம் விமர்சிக்கிறது.

* அம்பேத்கர் தனது இறுதிக் காலத்தில் ஊரைச் சுற்றி கடன் வைத்துவிட்டு இறந்தார் என்று இந்த முன்னுரையில் குறிப்பிடுகிறார் அருந்ததி ராய். அது உண்மையல்ல. நிலங்கள், கட்டிடங்கள் எனப் பல சொத்துகள் அம்பேத்கரிடம் இருந்தன. அவற்றைப் பல அறக்கட்டளைகளுக்குத் தன்னுடைய பெயரைக் குறிப்பிடாமல் வழங்கினார் என்பதே உண்மை என்று இப்புத்தகம் குறிப்பிடுகிறது. 

நன்றி: தி இந்து

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் இரண்டாவது பதிவு இது)

Friday, May 6, 2016

அறிவியலின் ஷேக்ஸ்பியர்!

ந.வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 6 மே, 2016

ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் மறைந்த 400-வது ஆண்டு இது. அதனையொட்டி உலகம் முழுக்க அவரைப் போற்றும் விதத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அறிவியல் துறையில் ஒரு ஷேக்ஸ்பியர் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் வேறு யாருமல்ல. அலெக்சாண்டர் வான் ஹும்போல்ட்! அவர் மறைந்த 157-வது ஆண்டு இது! 


அன்றைய ப்ருஷ்ய ராஜ்ஜியத்தில் (இன்று அது ஜெர்மனி மற்றும் போலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஒரு பகுதி) 1769-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி பிறந்த அவர், 1859-ம் ஆண்டு மே 6-ம் தேதி மறைந்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர் செய்த சாதனைகள்தான், இன்று நாம் இயற்கை, அறிவியல், பயணம் உள்ளிட்டவற்றை எப்படிப் பார்க்கிறோம் என்கிற புரிதலை உருவாக்கியவை.


‘அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?' என்ற கேள்விக்குப் பதிலாக 'அவர் என்ன செய்யவில்லை?' என்ற கேள்வி மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், அவர் வாழ்ந்த காலத்தில் அவரின் கைபடாத துறைகளே இல்லை எனலாம். வானியல், புவியியல், சூழலியல், விலங்கியல், தாவரவியல், நீரியல், சுரங்க ஆய்வுகள் என அவர் ஆராயாத துறைகளே இல்லை. அவரின் ஆய்வுகள் சர்வதேச அளவில் புகழடையச் செய்தன.


அவர் செய்த ஆய்வுகளைப் பாராட்டி உலகில் பல விஷயங்களுக்கு அவரது பெயர் சூட்டப் பட்டுள்ளது. மெக்சிகோவில் உள்ள சியர்ரா ஹும்போல்ட் மற்றும் வெனிசுவேலாவில் உள்ள பிகோ ஹும்போல்ட் ஆகிய பூங்காக்கள், அர்ஜென்டினாவில் உள்ள ஒரு நகரம், பிரேஸில் நாட்டில் உள்ள ஒரு நதி, கிரீன்லாந்து, சீனா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து மற்றும் அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் உள்ள மலைத் தொடர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தாவரங்கள், 100-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் ஆகியவை அவரின் பெயர் தாங்கியுள்ளன.


இந்தக் காரணங்களால் ‘மாவீரன் நெப்போலியனுக்கு அடுத்து உலகில் மிகவும் பிரபலமான மனிதர்' என்று தான் வாழ்ந்த காலத்திலேயே புகழ்பெற்றவர் வான் ஹும்போல்ட்.


அவரின் நினைவு தினமான இன்று, அவரைப் பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள ‘தி இன்வென்ஷன் ஆஃப் நேச்சர்' எனும் வாழ்க்கைச் சரிதப் புத்தகத்தை நாம் அறிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். சமீபத்தில் வெளியான இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஆண்ட்ரியா வுல்ஃப். இதனை ஹாஷெட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


இன்றைக்கு உள்ளதுபோல போக்குவரத்து வசதிகளோ, அறிவியல் வசதிகளோ, தொலைத்தொடர்பு சாதனங்களோ அன்றைக்கு இல்லாத நிலையில் கப்பல் மூலமாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் சென்று பல ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை இதர நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 28!


சுமார் 5 ஆண்டுகளாக மேற்கொண்ட பயணத்தின் பலனாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் அவர் பெற்ற அனுபவங்களை 'வாயேஜ் டு தி ஈக்விநாக்டிக்கல் ரீஜியன்ஸ் ஆஃப் தி நியு கான்டினென்ட்' எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாகவும், ‘பெர்சனல் நரேட்டிவ்' எனும் தலைப்பில் 7 தொகுதிகளாகவும் வெளியிட்டார்.


வான் ஹும்போல்ட் தன் அறிவியல் கட்டுரைகளுக்காகவும், கண்டுபிடிப்புகளுக்காகவும் எவ்வளவு தூரம் பாராட்டப்பட்டாரோ, அதே அளவுக்கு காலனியாதிக்கத்தின் கொடுமைகள், அடிமைத்தனம், ஒற்றைப் பணப் பயிர் விவசாயம் ஆகியவற்றை எதிர்த்ததற்காகவும் அவர் போற்றப்பட்டார். ‘காலம் ஆக, ஆக முதலீட்டை அதிகரிக்கும் பொருட்கள் விவசாயத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன' என்று உலகுக்குப் புரிய வைத்தார். 
 


‘இந்த உலகத்தில் ஒவ்வொரு உயிரினமும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கின்றன' என்று எழுதிய அவர் கொலம்பஸைப்போல, புதிய கண்டத்தையோ அல்லது நியூட்டனைப் போல புதிய அறிவியல் விதியையோ கண்டுபிடிக்கவில்லைதான். ஆனால் அவர்கள் செய்த சாதனைகளுக்குச் சமமாக, இன்னும் சொல்லப்போனால் அவர்கள் செய்த‌ சாதனைகளைவிட ஒரு படி மேலே சென்று ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார். அது வேறொன்றுமல்ல இந்த உலகத்தையும், இயற்கையையும் நாம் எப்படிப் பார்க்க வேண்டும் என்று நமக்குச் சொல்லிச் சென்ற பாடம்தான்!


‘மனிதனின் ஆன்மாவுக்குப் பழக்கமான ஒரு குரலுடன், இயற்கை ஒவ்வொருவரிடத்திலும் பேசுகிறது' என்று அவர் சொன்னது உண்மை என்பது நீங்கள் இயற்கையை உற்றுப் பார்க்கும்போது புரியும். அதன் முதல்படி, இந்தப் புத்தகத்தை வாசிப்பது! 

நன்றி: தி இந்து (இளமை புதுமை) 

ஹும்போல்ட் படம் உதவி: விக்கிப்பீடியா