Thursday, December 8, 2016

ஒரு அதிகாரத்தின் முடிவு!

ந. வினோத்குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 6 டிசம்பர் 2016

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 'இரண்டாவது முறையாக' இறந்துவிட்டார் என்று அதிகாரபூர்வமான செய்திகள் வரத் தொடங்கியிருக்கும் இந்தச் சமயத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஏனென்றால், 'முதல் முறையாக' அவரைக் கொலை செய்தன சில தொலைக்காட்சி சேனல்கள்! 

ரத்தத்தின் ரத்தங்களுக்கு 'புரட்சித் தலைவி'. அந்தத் தலைவியின் அம்மாவுக்கு 'அம்மு'. ஊடகங்களுக்கு 'ஜெ'. சாமான்ய மக்களுக்கு 'அம்மா!'

68 வயது. 16 வயதில் திரைப் பிரவேசம். 1982-ம் ஆண்டு ஒரு ரூபாய் செலுத்தி எம்.ஜி.ஆர்., தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அவரின் சுமார் 34 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள் இருந்தாலும், அவை அனைத்துமே இந்திய அரசியலில் மிக முக்கியமானப் பக்க‌ங்களாக இருக்கின்றன.

தென்னிந்திய சினிமாவில் தனக்கெனத் தனியாக, சம்பளம் கொடுத்து மக்கள் தொடர்பு அலுவலரை வைத்துக்கொண்ட முதல் நடிகர், நாட்டிலேயே முதன்முதலாக மகளிர் காவல் நிலையங்கள் அமைத்தவர், சொத்துக் குவிப்பு வழக்கினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நாட்டில், முதல்வர் பதவியை இழந்த முதல் முதல்வர்... இப்படிப் பல 'முதல்'களுக்கு இவர் முன்னோடி!

திரையில் பிரகாசித்த நட்சத்திர அந்தஸ்த்திலிருந்து ஆறாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றது வரையிலான ஜெ.வின் பயணத்தைப் புத்தகமாக எழுதியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் வாஸந்தி. 'அம்மா' என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் அவர் எழுதிய அந்தப் புத்தகத்தை ஜக்கர்நாட் பதிப்பகம் மிகச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 


தமிழக அரசியலில் ஜெயலலிதா என்ற ஒருவர் இருந்தார் என்பதற்கான ஆவணமாக இன்று நம்மிடையே இருக்கும் ஒரே புத்தகம் இதுமட்டும்தான் என்பது, ஒரே நேரத்தில் ஆறுதலாகவும் துர்பாக்கியமாகவும் இருப்பது நம் காலத்தின் சாபம்!

ஜெ., குறித்து இப்படி ஒரு புத்தக முயற்சி இப்போதுதான் நட‌ந்திருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. குமுதத்தில் ஜெயாவே தன் சுயசரிதையை எழுதிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், அது எம்.ஜி.ஆரின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்துவது போலச் சென்றதால், ஜெ.விடம் எந்தவொரு காரணமும் சொல்லாமல் 'டக்'கென்று அந்தச் சுயசரிதைத் தொடர் நிறுத்தப்பட்டது. அது இன்று வரையிலும் புத்தகமாக வரவில்லை.

அதற்குப் பிறகு வாஸந்தி, 'ஜெயலலிதா - எ போர்ட்ரைட்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஜெ.வின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதனை பெங்குயின் பதிப்பகம் 2011-ம் ஆண்டு வெளியிடுவதாக இருந்தது. ஆனால், அந்தப் புத்தகத்தை வெளியிடக் கூடாது என்று சொல்லி ஜெ., நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, அந்தப் புத்தகம் இதுவரை வெளியிடப்படவே இல்லை.

விகடன் பதிப்பக வெளியீடாக வந்த, 'புரட்சித் தலைவி - புகைப்பட ஆல்பம்', புகைப்பட ஆல்பம் என்ற வகையில் மட்டுமே நின்றுவிட்டது.

இந்த ஒரு பின்னணியில்தான் தற்போது வெளியாகியிருக்கும் 'அம்மா' என்ற புத்தகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இந்தப் புத்தகத்தில் ஜெ.வின் ஆரம்ப காலம், ஜெ.வுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையிலிருந்த உறவு, ஜெ.வுக்கும் சசிகலாவுக்கும் இடையிலிருந்த உறவு உள்ளிட்ட ஜெ.வின் அந்தரங்க விஷயங்களை ஆழமாக அலசவில்லை என்றாலும் அங்கங்கே தொட்டுச் செல்கிறார் வாஸந்தி.

அந்தத் தகவல்களை ஒன்றிணைத்தால் இரண்டு பக்கங்களுக்குள் முடிந்துவிடும். ஜெ.வின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துச் சொல்வதற்கான விஷயங்கள் அவ்வளவுதானா? நிச்சயமாக இல்லை. 

மற்றபடி, இந்தப் புத்தகத்தில் ஜெ.வின் அரசியல் பயணம், 'ரோலர் கோஸ்டர் ரைட்' போல சுவாரஸ்யமான நடையில் மிக விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் என்ன, அதில் பெரும்பாலான விஷயங்கள் ஜெ., வாழ்ந்த தலைமுறையினருக்குத் தெரிந்த தகவல்கள்தான்.

இந்தப் புத்தகம் ஜெயலலிதாவைப் பற்றிய ஆழமானப் பதிவு என்று சொல்லிவிட முடியாது. ஆனால், ஜெயலலிதா யார் என்றே தெரியாத வெளி மாநிலத்தவருக்கு, வெளி நாட்டினருக்கு இந்தப் புத்தகம் ஒரு அறிமுகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சிறு வயதில் ஜெ.வுக்குக் கிடைக்க வேண்டிய தாய் அன்பு முறையாகக் கிடைக்கவில்லை. எனினும் அந்தத் துயரத்தைத் தாங்கிக் கொண்டு, அவர் பள்ளியில் படிக்கும்போது 'மை மதர்: வாட் ஷீ மீன்ஸ் டு மீ' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியதாகவும், அந்தக் கட்டுரைக்குப் பரிசு கிடைத்ததாகவும் வாஸந்தி இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்தக் கட்டுரையில் ஜெ., அப்படி என்ன எழுதியிருந்தார் என்பது நமக்குத் தெரியாது.

ஜெ.வைப் பற்றி, ஓரளவு அரசியல் அறிவு கொண்டவர்களிடம் 'அம்மா: வாட் ஷீ மீன்ஸ் டு அஸ்' என்று எழுதச் சொன்னால் அவர்களின் பதில் என்னவாக இருக்கும்..? ஒரு அதிகாரத்தின் முடிவு..? 

நன்றி: தி இந்து டாட் காம் (தமிழ்)

Saturday, November 26, 2016

அந்த ஓபியத்தைப் புரிந்துகொள்வோம்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 2016 பிப்ரவரி 19

2015, பிப்ரவரி 20! இந்த நாளில்தான் கோவிந்த் பன்சாரே எனும் சமூகச் செயற்பாட்டாளரின் உயிர் பிரிந்தது. தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கைகள், மதவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும், மாணவப் பருவத்திலேயே மார்க்சியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதன் காரணமாகத் தன்னை சி.பி.ஐ. கட்சியில் இணைத்துக்கொண்டு அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்தும், பேசியும் எழுதியும்வந்தவர் கோவிந்த் பன்சாரே.

1933-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பிறந்த பன்சாரே மகாராஷ்டிரக்காரர். மராட்டிய வீரர் சிவாஜியை சிவ சேனா இந்துத்துவப் பின்னணியில் மக்களிடையே கொண்டு சென்றபோது, அதனைத் தடுத்து நிறுத்தும் விதமாக ‘சிவாஜி யார்?' எனும் புத்தகத்தை எழுதினார். அதன் காரணமாகவே இந்துத்துவவாதிகளின் எதிரியும் ஆனார்.

இப்படித் தன் வாழ்நாள் முழுவதும் அதிகார வர்க்கத்தின் துவேஷங்கள், காவிகளின் வரலாற்றுத் திரிபுகள் ஆகியவற்றை எதிர்த்து வந்தார். அதன் காரணமாக அவரின் தலைக்கும் ஒரு தோட்டா ‘இலக்கு' நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தனது மனைவியுடன் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை நோக்கிச் சுட்டார்கள். அவரின் மனைவியைக் கீழே தள்ளிவிட்டுச் சென்றார்கள். நான்கு நாட்கள் கழித்து பன்சாரே உயிர் பிரிந்தது. அவரின் மனைவிக்குத் தலையில் அடிபட்டதால் அவர் இன்று வரை பக்கவாத நோயாளியாகப் படுக்கையில் இருக்கிறார்.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை மட்டும் ஏழு மாதங்களுக்குப் பிறகு கைது செய்தது காவல்துறை. இது தொடர்பான விசாரணை மெத்தனமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதோ... இந்த ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி, பன்சாரேவின் முதல் நினைவு தினம்!

இந்தத் தருணத்தில் 'தி ரிபப்ளிக் ஆஃப் ரீசன்' எனும் புத்தகத்தை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது.


மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர் கொலைக்குப் பிறகு, பன்சாரே கொல்லப்பட்டார். பன்சாரேவின் கொலைக்குப் பிறகு கர்நாடக மாநிலத்தில் எம்.எம்.கல்புர்கி கொலை செய்யப்பட்டார். இந்த மூவரின் கொலையும் நிகழ்கால இந்திய வரலாற்றின் பக்கங்களில் சிவப்பு மையால் அடிக்கோடிடப்பட வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. காரணம், இவர்கள் மூவரும் நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் என்பதால் அல்ல. இவர்கள் மூவரின் உயிரும் துப்பாக்கித் தோட்டாவால் பறிக்கப்பட்டது என்பதால் அல்ல... இவர்கள் மூவரின் பணியும் இந்துத்துவத்துக்கு எதிராக இருந்தது என்பதுதான்!

'நீங்கள் பூக்களைப் பறிக்கலாம். ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது' என்ற பாப்லோ நெரூடாவின் வரிகளுக்கு ஏற்ப, இவர்கள் மூவர் இறந்துபோனாலும், இவர்களின் பணி, சுவடு தெரியாமல் போய்விடக் கூடாது என்பதற்காக, இவர்கள் எழுதிய மிக முக்கியமான சில கட்டுரைகளைத் தொகுத்து ‘தி ரிபப்ளிக் ஆஃப் ரீசன்' எனும் புத்தகமாக சஃப்தார் ஹாஷ்மி நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. இது சென்ற ஆண்டு இறுதியில் வெளியானது.

இதில் கோவிந்த் பன்சாரே எழுதியிருக்கும் கட்டுரை மிகவும் முக்கியமானது. ‘மதம் மக்களுக்கு ஓபியத்தைப் போன்றது' எனும் கார்ல் மார்க்ஸின் வரியை நம்மில் பலர் பலமுறை கேட்டிருப்போம். சொல்லியிருப்போம். ஆனால் அந்த வரியின் உண்மையான அர்த்தம் தெரிந்திருக்குமா நமக்கு?

‘புரட்சியாளர்கள் மதத்தை எவ்வாறு அணுக வேண்டும்?' என்ற தலைப்பில் அமைந்த தன் கட்டுரையில், ‘இதுவரையில் மார்க்ஸின் இந்த வரியை நாம் தவறாகவே புரிந்துகொண்டு வந்திருக்கிறோம். ஏனெனில், இந்த வரி, தனியான வரி அல்ல. மார்க்ஸ் எழுதிய பத்தி ஒன்றில் வரும் வரி இது. இந்த வரிக்கு முன்பு உள்ள‌ வரிகளை எல்லாம் நாம் மறந்துவிட்டோம். அதனால் இந்த வரியின் உண்மையான அர்த்தம் நமக்கு விளங்கவில்லை' என்கிறார் பன்சாரே.

‘ஒடுக்கப்படுபவர்களின் இளைப்பாறலாக, இதயமற்ற உலகத்தில் அவர்களுக்கான இதயமாக, உயிரற்ற நிலையிலிருக்கும் தங்களுக்கு உயிராக மதம் இருக்கிறது. அது அவர்களுக்கு ஓபியம் போன்றதாக இருக்கிறது' என்று எழுதுகிறார் மார்க்ஸ்.

‘இதன் மூலமாக மார்க்ஸ் கூற வருவது என்னவென்றால், ‘மதம் தருகிற மாயையான இன்பத்தில் மூழ்காமல், மக்களை அதிலிருந்து வெளியே கொண்டு வந்து உண்மையிலேயே இன்பத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு மதம் தருகிற மாயையான இன்பம் என்பது ஓபியம் தரும் போதைக்கு நிகராக உள்ளது ‘என்பதுதான்' என்று புதிய விளக்கத்தைத் தருகிறார் பன்சாரே.

‘மதத்தைப் பற்றி நாம் எளிய மக்களிடையே விளக்கும்போது அலங்காரப் பூச்சுகள் இல்லாமல் நேரடியான மொழியைப் பயன்படுத்த வேண்டும். அதிகாரத்தையும், செல்வத்தையும் அடைவதற்கு மதம் ஆதிகாலத்திலிருந்து இன்று வரை எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். ஆனால் அதே சமயம், மதத்தின் சூழ்ச்சிக்குப் பலியானவர்களிடம் நாம் இரக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றுபவர்களின் உண்மையான முகத்தை நாம் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். அவர்களைத் தோற்கடிப்பதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்' என்று அதே கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார் பன்சாரே.

அந்த ஓபியத்தின் தன்மையைப் புரிந்துகொள்வோம். போராடுவோம்!

நன்றி: தி இந்து (இளமை புதுமை - சில திருத்தங்களுடன்)

Sunday, November 20, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES -VIII

இந்து தேசிய வியாபாரிகளின் அபகரிப்பு!


ந.வினோத் குமார்

அம்பேத்கரின் சிந்தனைகளை ஏற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை இன்றைய காலத்தில் அதிகரித்து வருகிறது. அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனால் அரசியல் சுயலாபத்துக்காக அம்பேத்கரையே உரிமை கொண்டாடும் அபகரிப்பாளர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருவதுதான் ஆச்சரியம். அதில் முதன்மையான அபகரிப்பாளர்கள் யாரென்றால்... இந்து தேசிய வியாபாரிகள்!

அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், 'அம்பேத்கரும் எங்கள் செட்டுதான்' என்று கூவ ஆரம்பித்திருக்கின்றன இந்துத்துவ குழுக்கள்.

'அம்பேத்கர் ஒருபோதும் பிராமணியத்துக்கு எதிராக இருந்தவர் அல்ல' என்று இந்துத்துவவாதிகள் சொல்வது எவ்வளவு பெரிய புரட்டு, என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது, 'அம்பேத்கர் அண்ட் இந்துத்துவா பாலிட்டிக்ஸ்' எனும் புத்தகம். மும்பை ஐ.ஐ.டி.யின் முன்னாள் பேராசிரியரும் தற்சமயம் சமூக நல்லிணக்கத்துக்காகத் தொடர்ந்து எழுதியும், களப்பணியாற்றியும் வரும் ராம் புனியானி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். பாரோஸ் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.


அம்பேத்கரின் 124-வது பிறந்த ஆண்டிலிருந்தே அவருக்குக் காவிச் சாயம் பூச முயற்சித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு. அந்த அமைப்பைச் சேர்ந்த பிரச்சார் ப்ரமுக் மன்மோகன் வைத்யா, சர்சங்சலக் மோகன் பாகவத் போன்றோர் அம்பேத்கரின் கருத்தியலுக்கு இந்துத்துவப் பார்வையை வழங்க முற்படுகின்றனர். அதில் ஒன்றுதான் 'அம்பேத்கர் ஒருபோதும் பிராமணியத்துக்கு எதிராக இருந்தவர் அல்ல' எனும் கூற்று. அது உண்மைதானா?

நிச்சயமாக இல்லை. ஏனென்றால், அம்பேத்கர் 'பிராமணிய இந்து மதவாத'த்துக்கு எதிராகவும், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்கு ஆதரவானவராகவும் இருந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்போ பிராமணிய இந்து மதவாதம் மற்றும் இந்து தேசியம் ஆகிய இரண்டு தளங்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பேச்சுக்கு, அம்பேத்கரின் சிந்தனைகளைத்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், 2015-ம் ஆண்டு குடியரசு தின விழா தொடர்பான ஊடக விளம்பரங்களில் 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' எனும் வார்த்தைகள் எப்படி விடுபட்டுப் போயின?

அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியத் தலைவராகக் கருதப்பட்ட தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் நூற்றாண்டை இந்துத்துவவாதிகள் கொண்டாடி வருகின்றனர்.

மகாத்மா காந்திக்கு இணையாக தீனதயாள் உபாத்யாயாவை சமூக‌ மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஏனென்றால், அவர்தான் இந்து மதத்தின்படி வழி நடத்தப்படும் 'அகண்ட பாரதம்' எனும் கருத்தைப் பரப்பிவிட்டுச் சென்றார்.

அவருக்கு முன்பு சாவர்க்கர் 'இந்து தேசியம்' எனும் கருத்தை விட்டுச் சென்றார். ஆனால் அம்பேத்கர் அந்த 'இந்து தேசியம்' என்ற கருத்துக்கு எதிராக இருந்தவர். தன்னுடைய 'தாட்ஸ் ஆன் பாகிஸ்தான்' எனும் நூலில் அம்பேத்கர் இப்படிக் குறிப்பிடுகிறார்:

"சாவர்க்கரும் முகமது அலி ஜின்னாவும் 'இரண்டு தேசங்கள்' என்ற கருத்துக்கு உடன்படுபவர்களாகவே உள்ளனர். பாகிஸ்தான் என்றும், இந்துஸ்தான் என்றும் இரண்டு தேசங்கள் இருக்க வேண்டும். முன்னதில் இஸ்லாமியர்களும் பின்னதில் இந்துக்களும் இருந்துகொள்ளலாம் என்கிறார். சாவர்க்கரோ, இந்தியாவில் இந்துக்களும் இருக்கலாம். இஸ்லாமியர்களும் இருக்கலாம். ஆனால் இஸ்லாமியர்கள் 'இந்து தேசிய'த்தின் கீழ்தான் இருக்க வேண்டும். இந்து மத அரசியலமைப்புக்கு அவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்கிறார்.

அவர் சொல்வது போல 'இந்து தேசியம்' ஏற்பட்டால், அது நாட்டுக்குக் கேடு விளைவிக்கும். இந்து மதம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானதாக இருக்கும். அது ஜனநாயகத்தை நமக்கு வழங்காது. எனவே, இந்து ராஜ்ஜியம் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்".

அப்படியான இந்து தேசியம்தான், சாதி ஒழிக்கப்படுவதற்குத் தடையாகவும் இருக்கிறது என்கிறார், அம்பேத்கர். ஆனால் தீனதயாள் உபாத்யாயாவோ, "நம் சமூகத்திலிருக்கும் நான்கு வர்ணாசிரமங்கள் என்பது கடவுளுக்கு இருக்கும் நான்கு கைகளைப் போன்றது. அது ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இதைப் புரிந்துகொண்டால், சாதி நமக்கு நல்லது செய்யும். இல்லையென்றால், அது அழிவைக் கொண்டு வரும்" என்று சாதியத்தைப் போற்றுகிறார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் மேம்பட்ட நிலைக்கு வந்துவிடக் கூடாது என்ற கடுப்புதான் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தொடக்கமாக இருக்கிறது என்கிறார் ராம் புனியானி. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மத அடையாளத்தை முன்னுக்குக் கொண்டு வருகிறதென்றால், மதக் கலவரங்களின் மூலம் சாதிய அடையாளம் மறைக்கப்பட்டு விடுகிறது. அப்படிப் பார்த்தால், சிறுபான்மையினருக்கு எதிரான‌ ஒவ்வொரு வன்முறைக்குப் பிறகும், இந்து மத அடையாளம்தான் தலித்துகளுக்கு முக்கியமாகிறது என்கிறார் அவர்.

இவ்வாறு மதக் கலவரங்கள் மூலம் 'இந்து தேசியம்' காண விரும்புகின்றன இந்துத்துவக் குழுக்கள். அப்படி ஒன்று ஏற்பட்டால், சாதி ஒழியாது. சாதி ஒழியாமல் சமத்துவம் இல்லை. ஆக, நாம் புரிந்துகொள்ள வேண்டியது... சனாதன தர்மம் ஒருபோதும் சமாதானத்தைக் கொண்டு வராது!

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் எட்டாவது பதிவு இது.)

Saturday, October 29, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - VII

விடுதலையின் 60 ஆண்டுகள்!


ந.வினோத் குமார்
 
இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகின்றன‌. 'ஒரு மனிதன் ஒரு வாக்கு' எனும் நிலையை நாம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் 'ஒரு மனிதன் ஒரே மதிப்பு' எனும் நிலையை நாம் அடைந்திருக்கிறோமா என்றால், அது இன்றளவும் ஒரு கேள்வியாகவே மிஞ்சுகிறது.

அந்த நிலையை வழங்க மறுக்கும் இந்து மதத்தின் நால்வர்ண அமைப்பிலிருந்து ஒடுக்கப்பட்டவர்களை விடுவிக்க, 1956-ம் ஆண்டு அம்பேத்கர் பல்லாயிரக்கணக்கானவர்களோடு தானும் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினார். இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான அம்பேத்கர் மேற்கொண்ட அந்த விடுதலை முயற்சிக்கு இந்த ஆண்டு, இந்த மாதம் 60 வயது ஆகிறது!

முந்தைய நாள் முடிவு செய்து, மறுநாள் காலையில் மதம் மாறிவிடவில்லை அம்பேத்கர். சுமார் 35 ஆண்டு காலம் அனைத்து மதங்களையும் ஆய்வுக்குட்படுத்திய பிறகே புத்த மதத்தைத் தேர்வு செய்தார் அவர். அப்போது பலர் அவரிடம் 'நீங்கள் ஏன் புத்த மதத்தைத் தேர்வு செய்தீர்கள்?' என்ற கேள்விக்கு அவர் தந்த பதிலின் வடிவமாகவே அவர் எழுதிய 'தி புத்தா அண்ட் ஹிஸ் தம்மா' எனும் நூலை நாம் காண முடியும்.

1956-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தப் புத்தகம், அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு 1957-ம் ஆண்டுதான் வெளியானது. எளியவர்கள் படிக்கக் கடினமாக இருக்கலாம் என்றும், இந்த நூலில் அவர் எடுத்தாளும் பெளத்த மத விஷயங்களைப் பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள், விளக்கங்கள் கொடுக்கலாம் என்றும் பேராசிரியர்கள் ஆகாஷ் சிங் ரத்தோர் மற்றும் அஜய் வர்மா ஆகியோர் நினைத்ததன் விளைவு, இந்தப் புத்தகத்துக்கு செம்பதிப்பு (க்ரிட்டிக்கல் எடிஷன்) ஒன்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் மூலம் கிடைத்தது.


மூலப் பிரதியின் முதல் பதிப்பு (1957) வெளியானபோது பல்வேறு தளங்களிலிருந்தும் கடுமையான எதிர்வினைகள் வந்தன. அதில் குறிப்பாக ஒன்று: 'புத்தரின் போதனைகளை அம்பேதகர் அரசியலாக்குகிறார். புத்தரின் தம்மத்தை அவர் அரசியல் பிரகடனமாக மாற்றுகிறார்' என்பது! விட்டு விடுதலையாகும்போது சிலருக்கு வயிற்றெரிச்சல் வரத்தானே செய்யும்?

இந்தப் புத்தகம் புத்தரின் தம்மத்தைப் பற்றி மட்டும் எடுத்துச் சொல்லவில்லை. மாறாக, புத்தரின் வாழ்க்கையையே வேறொரு கோணத்திலிருந்து அணுகுகிறது. 'புத்தர் வீட்டை விட்டு வெளியே வந்தார், நோயாளியைப் பார்த்தார், ஏழைகளைப் பார்த்தார், மரணத்தைப் பார்த்தார், அதனால் சாமியார் ஆனார்' என்கிற கதையெல்லாம் இல்லை.

புத்தனின் துறவற வாழ்க்கையே, சாக்கிய முனிகளின் சங்கத்தை எதிர்ப்பதிலிருந்துதான் தொடங்குகிறது. சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையிலான ரோகிணி நதிநீர்ப் பங்கீடு குறித்து விவாதம் எழுகிறது. அப்போது சாக்கியர்கள் 'இந்தப் பிரச்சினைக்குப் போர்தான் தீர்வு' என்று பிடிவாதம் பிடிக்க, கெளதம சித்தார்த்தன் 'போர் கூடாது' என்கிறான். மனித குல வரலாற்றில் அதிகாரம், பெரும்பாண்மை வாதம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுவதன் முதல்படி, இப்படியான எதிர்ப்புகளிலிருந்தே தொடங்கியிருக்கின்றன.

புத்தனின் வாழ்க்கையைச் சொல்லிச் செல்வதன் வழியே அவர் போதனைகளையும் சொல்லிச் செல்கிறார் அம்பேத்கர். அதில் முக்கியமான ஒரு போதனை, மனிதர்களை இனங்காணுவது எப்படி என்பது.

புத்தரின் பார்வையில் மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். துன்மார்க்கன், சிறந்த மனித‌ன், ஞானமடைந்தவன் ஆகியோர்தான் அவர்கள்.

துன்மார்க்கன் யார்?

மற்றவர்களின் தவறுகளை நாம் கேட்காமலேயே சொல்பவன். ஆனால் நாம் கேட்கும்போது சொல்லாதவன். கொஞ்சம் அழுத்திக் கேட்டால், மற்றவர்களின் தவறுகளை எந்த வித ஒளிவு மறைவுமின்றி விளக்கமாகக் கூறுபவன்.

மற்றவர்களின் நல்ல குணங்களைப் பற்றிக் கேட்டால், சொல்லாதவன். நாம் கேட்காதபோதும் சொல்லாதவன். கொஞ்சம் அழுத்திக் கேட்டால், மற்றவர்களின் நல்ல குணங்களைப் பேசுபவன்.

தன்னுடைய தீய குணங்களைப் பற்றிக் கேட்டால் சொல்லாதவன். நாம் கேட்காதபோதும் சொல்லாதவன். கொஞ்சம் அழுத்திக் கேட்டால், மேலோட்டமாகத் தன் தீய குணங்களைப் பற்றிச் சொல்பவன்.

தன்னுடைய நல்ல குணங்களைப் பற்றித் தானாகவே சொல்பவன். நாம் கேட்காதபோதும் சொல்பவன். கொஞ்சம் அழுத்திக் கேட்டால், எந்த வித ஒளிவு மறைவுமின்றி தன்னுடைய நல்ல குணங்களைப் பற்றி விளக்கமாகக் கூறுபவன்.

இவர்கள் எல்லோரும் துன்மார்க்கர்கள்.

சிறந்த மனித‌ன் யார்?

தன்னுடைய நலனுக்காகவோ அல்லது பிறரின் நலனுக்காகவோ உழைக்காதவர்கள்; தன்னுடைய நலனுக்காக மட்டுமே உழைத்து, பிறரின் நலனுக்காக உழைக்காதவர்கள்; பிறரின் நலனுக்காக மட்டுமே உழைத்து, தன்னுடைய நலனுக்காக உழைக்காதவர்கள்;  தன்னுடைய நலனுக்காகவும், பிறரின் நலனுக்காகவும் உழைப்பவர்கள் என்று நான்கு பிரிவுகளில் மனிதர்கள் அடங்குவர்.

இதில் முதல் வகையினர், சடலத்தின் இரு முனைகளிலும் கொளுத்தப்பட்ட தீ போன்றவர்கள். எதற்கும் பயன்படமாட்டார்கள். முதலிரண்டு வகையினரை விட மூன்றாம் வகை மக்கள் நல்லவர்கள். ஆனால் நான்காம் வகையினரே மூவரை விடவும் சிறந்தவர்கள் ஆவர்.

ஞானமடைந்தவன் யார்?


ஒரு முறை புத்தன் தன் வழியே சென்றுகொண்டிருக்கும்போது, எதிரே வந்த முனிவர் ஒருவர், "ஐயா நான் வணங்கத் தகுந்தவராக இருக்கிறீர்கள். நீங்கள் தேவரோ, கந்தர்வரோ, அசுரரோ அல்லது உயர்ந்த மனிதரோ?" என்று கேட்கிறார்.

அதற்கு புத்தன், "என்னுடைய அறியாமையிலிருந்து நான் வெளிவராதிருந்தால், நீங்கள் சொல்லும் அத்தனையாகவும் நான் இருந்திருப்பேன். ஆனால் தற்போது நான் தெளிவடைந்துவிட்டேன். நீரிலேயே பிறந்து, நீரிலேயே வளர்ந்தாலும் எவ்வாறு தாமரையில் தண்ணீர் ஒட்டாமல் இருக்கிறதோ அப்படியே நான் இந்த உலகத்தில் பிறந்திருந்தாலும், வாழ்ந்திருந்தாலும் இந்த உலகத்தினால் கறைபடாதவனாக இருக்கிறேன். எனவே, என்னை ஞானியென்று நீங்கள் அறிவீர்களாக!" என்றான்.

இந்த மூவரில் நீங்கள் யார்?

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் ஏழாவது பதிவு இது.)

Sunday, October 9, 2016

மனம் திறக்கும் சொற்கள்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 9 அக்டோபர், 2016
 
ஒவ்வொரு மனித‌ மனமும் எவ்வளவு பைத்தியக்காரச் சிந்தனைகளுடன் இருக்கிறது என்பது விலகவே விலகாத மர்மம். ஒவ்வொரு மனதிலும் அந்தச் சிந்தனைகளின் சதவீதத்தில் வேண்டுமானால் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், யாரிடமும் பைத்தியக்காரத்தனம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. 

எது பைத்தியக்காரத்தனம்? அதை யார் முடிவு செய்வது? அதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது? 'நிர்வாணமாக இருக்கும் ஒரு மனிதனை நீங்கள் ‘நாகரிகமற்றவன்’ என்று வேண்டுமானால் சொல்லுங்கள். அவனைப் பைத்தியக்காரன் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்கிற ரீதியில் ஜெயகாந்தன் தன் கதை ஒன்றில் கேள்வி எழுப்பியிருப்பார்.

‘பைத்தியக்காரத்தனம்’ என்பதை எப்போதும் நாம் மற்றவர்களுக்கே அடையாளப்படுத்துகிறோம். அதை ஒருபோதும் நம் அடையாளமாக மாற்றிக்கொள்வதில்லை. நாம் செய்வது பைத்தியக்காரத்தனம் என்பது தெரிந்தாலும், அதை அங்கீகரிக்கத் தயங்குகிறோம்.

நம் வீட்டில், நம் குடும்பத்தில் ஒருவருக்குப் பைத்திய நிலை ஏற்பட்டால் அதை நாம் என்ன செய்வோம்? அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவோம்? அவர்களை நாம் எப்படி அணுகுவோம்?

இதற்கான பதில்களை அளிப்பதாக இருக்கிறது ‘எ புக் ஆஃப் லைட்’ எனும் புத்தகம். நாவலாசிரியர் ஜெர்ரி பின்டோ தொகுத்த இந்தப் புத்தகத்தை ‘ஸ்பீக்கிங் டைகர்’ பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

 
பைபோலார் டிஸார்டர், மனச்சிதைவு, மன அழுத்தம், ஆட்டிஸம், தற்கொலை எண்ணம் என மனப் பிறழ்வு நிலைகள் பலவற்றைப் பேசுகிறது இந்தத் தொகுப்பு. சிறுகதை, நினைவுக் குறிப்பு, வாக்குமூலம் எனப் பல வடிவங்களில் மேற்கண்ட பிரச்சினைகள் ஆராயப்படுகின்றன. மொத்தம் 13 கதைகள். அவற்றில் கையாளப்பட்டிருக்கும் பிரச்சினைகள் எல்லாமே அந்தக் கதைகளை எழுதியவர்களின் நிஜ வாழ்க்கையில், அவர்கள் குடும்பத்தினருக்கு ஏற்பட்டவை. அந்த அனுபவங்களைச் சொற்களின் மூலம் நமக்குக் கடத்துவதன் மூலம் வாசகர்களுக்கு மனப் பிறழ்வுகளைக் கையாள்வதற்கான சில முக்கியமான பாடங்களை விட்டுச் செல்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தைத் தொகுத்த ஜெர்ரி பின்டோவே, இதற்கான ஒரு வாழும் சாட்சியமாக இருக்கிறார். அவருடைய அம்மாவுக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் இருந்தது. அதை அவர் எப்படிக் கையாண்டார் என்பதைத்தான் தனது முதல் நாவலான ‘எம் அண்ட் தி பிக் ஹூம்’ என்ற புத்தகத்தில் சொல்லியிருந்தார்.

பொதுவாகவே, நம் வீடுகளில் யாரேனும் நோயுற்றால், அவர்களுக்குச் சேவை செய்து சோர்வடையும் நேரத்தில் அவர்கள் மீது ஏன் என்று புரியாத ஒரு கோபம் ஏற்படும். அந்தக் கோபம் எத்தகையதாக இருக்கும் என்பதை இந்தத் தொகுப்பில் அமன்தீப் சந்து என்பவர், தன்னுடைய கதையில் இப்படிச் சொல்கிறார்: “கோபம் ஒரு அழிவு சக்தி. அதுவும் நம் நாக்கிலிருந்து புறப்படும்போது, பேரழிவை உண்டாக்கக்கூடியது”.

இன்னொரு கதையில் ‘ஆட்டிஸம்’ பாதிப்பு கொண்ட தன் மகனைத் தான் நடத்தும் விதம் குறித்து மதுசூதன் ஸ்ரீநிவாஸ் என்பவர் எழுதிய பதிவில் இப்படிச் சொல்கிறார்: “எங்கள் குழந்தைகள் எதையும் எப்போதும் எங்களிடம் கேட்டுப் பிடிவாதம் பிடிக்கவில்லை. மாறாக, இந்தச் சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்பதற்காக நாங்கள்தான் அவர்களிடம் நிறைய விஷயங்களுக்காகப் பிடிவாதம் பிடிக்கிறோம்”.

சாதாரண உடல்நிலைக் கோளாறுகளுக்கே பொறுமை இழந்து கோபப்படும் நாம், மனநலக் கோளாறு உடையவர்களை எப்படி நடத்துவோம்?

உலக மனநல நாளின் (அக்டோபர் 10) இந்த ஆண்டு கருப்பொருள் ‘மனநல கண்ணியமும் மனநல முதலுதவியும்’ என்பது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்பதும், மனக் குழப்பங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன் நாமே முதலுதவியும் செய்யலாம் என்பதும்தான் இதன் பொருள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவது சமூகத்தின் கைகளில் உள்ளது. ஆனால், முதலுதவியை நம் ஒவ்வொருவராலும் செய்ய முடியும். எப்படி? 

இந்தத் தொகுப்பில் உள்ள கதையொன்றில் வரும் வரிதான் இதற்குப் பதில்: ‘குழம்பிய மனதுக்குக் கொஞ்சம் காது கொடுங்கள்!’ 

நன்றி: தி இந்து (கலை இலக்கியம்)

Friday, September 30, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - VI

மனுவின் 'மத'த்துக்கு எதிராக...


ந.வினோத் குமார்

இன்றைய தினத்தில் யாரிடமாவது 'பெண் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களின் பெயர்களைச் சொல்லுங்கள்?' என்று கேட்டால், 'காந்தி, பாரதியார், பெரியார்' என இப்படிச் சிலரின் பெயர்களை அவர்கள் பரிந்துரைக்கக்கூடும்.

'ஏன், அம்பேத்கர் உங்கள் நினைவுக்கு வரவில்லை?' என்று ஒரு கேள்வியைக் கேட்டால், 'அம்பேத்கர்... ம்ம்ம்... அவர் என்ன செய்தார்?' என்று அவர்கள் நம்மிடம் இன்னொரு எதிர்க் கேள்வியைக் கேட்கக்கூடும்.

அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகள், பெண்ணியவாதிகளுக்கே தெரியாமல் இருக்கும் அளவுக்குத்தான் இன்றைய 'பெண்ணியம்' இங்கு இருக்கிறது. பெண்ணியவாதிகளுக்கே அம்பேத்கரின் பெண்ணியச் செயல்பாடுகள் பற்றித் தெரியாமல் இருக்கும்போது, மற்றவர்களை நாம் நொந்துகொள்வது நம் தவறுதான்.

'மகாத்மா பூலே, தன் மனைவிக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது போன்று, அம்பேத்கர் தன் மனைவிக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை' என்பது சில பெண்ணியவாதிகளின் கருத்தாக இருக்கிறது. அப்படியே சிலர், அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகளை ஏற்றுக்கொண்டாலும், அவற்றை 'தலித் அல்லது மஹர் இனப் பெண்களுக்கானச் செயல்பாடுகளாக' மட்டுமே பார்க்கும் குறுகிய மனப்போக்கும் இருக்கிறது.

இந்தக் கருத்திலிருந்து அவர்கள் வெளியே வர, முதலில் அம்பேத்கரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தன்னுடைய 'பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை' என்ற நூலை தனது மனைவி ரமாபாய்க்கு அர்ப்பணித்ததிலேயே அம்பேத்கர் எவ்வளவு முற்போக்காக இருந்தார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்து அவர்கள், ரமாபாயின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 1927-ம் ஆண்டு நடைபெற்ற 'மஹர் சத்தியாகிரக'த்தில் சமையல் ஆளாகப் பணியாற்றியது முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்றும் ரமாபாயின் வாழ்க்கை குறித்த பாடல் கேசட்டுகள் வெளிவந்து கொண்டிருப்பது வரையிலான விஷயங்களை ஆராய்ந்தால், அவர் எவ்வாறு அம்பேத்கரின் அரசியல் செயல்பாடுகளில் பங்குகொண்டிருந்தார் என்பது தெரிய வரும்.

அது மட்டுமல்ல. பிராமண ஆணாதிக்கத்தை வேரறுக்க அம்பேத்கர் என்ன மாதிரியான விஷயங்களை முன்னெடுத்தார் என்பதையும் அந்தப் பெண்ணியவாதிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விஷயங்களை எல்லாம் உள்ளடக்கித்தான் சமூகவியலாளர் ஷர்மிளா ரேகே 'அகைன்ஸ்ட் தி மேட்னஸ் ஆஃப் மனு' என்ற புத்தகத்தைத் தொகுத்தார். பூனே பல்கலைக்கழகத்தில் கிரந்திஜோதி சாவித்ரிபாய் பூலே மகளிர் ஆய்வு மைய இருக்கையின் தலைவராக இருந்த ஷர்மிளா தனது 48 வயதில் பெருங்குடல் புற்றுநோய் காரணமாக 2013-ம் ஆண்டு காலமானார். அவரின் மறைவுக்குப் பிறகு இந்தத் தொகுப்பை 'நவயானா' வெளியிட்டது.


பெளத்தம் பெண்களுக்கு எந்த விடுதலையும் தரவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த காலத்தில், புத்தர் எவ்வாறு பெண் விடுதலைக்கு ஆதரவாக இருந்தார் என்பது குறித்தும், இந்துப் பெண்கள் தாழ்ந்துபோனதற்கு யார் காரணம் என்பது குறித்தும் அம்பேத்கர் எழுதிய கட்டுரைகளோடு, அம்பேத்கர் கொண்டு வரத் துடித்த 'இந்து சட்ட மசோதா' எவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டது என்பது பற்றிய வரலாற்றையும் தகுந்த ஆவணங்களுடன் இந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் ஷர்மிளா ரேகே.

1950-ம் ஆண்டு 'ஈவ்ஸ் வீக்லி' எனும் இதழில் இந்தியப் பெண்கள் தாழ்ந்துபோனதற்கு புத்தரே காரணம் என்கிற ரீதியில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அதற்கு எதிர்வினையாக அம்பேத்கர் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில் புத்தரின் சீடரான ஆனந்தன் மீது வைக்கப்படும் ஐந்து குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடுகிறார்.

அதில் மூன்றாவதாக இருக்கும் குற்றச்சாட்டு: "புத்தர் இறந்துபோன பிறகு அவரது உடலுக்கு முதலில் பெண் சீடர்களை அஞ்சலி செலுத்த வைத்தார் ஆனந்தன். அப்போது அவர்களின் கண்ணீரால் புத்தரின் புனிதம் தீட்டுப்பட்டது". (இந்தக் குற்றச்சாட்டு, சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதை நினைவூட்டுகிறது).

இந்தக் குற்றச்சாட்டை மறுதலிக்கும் அம்பேத்கர் அதற்கு விளக்கமும் தருகிறார். புத்தர் 'பெண்களை நெருங்கவிடாதே' என்று ஆனந்தனுக்குச் சொல்லியிருந்தால், அவர் நிச்சயம் பெண்களை அனுமதித்திருக்கமாட்டார். ஆனால், விதவைகளையும், பாலியல் தொழிலாளர்களையும்கூட தன் சீடர்களாக ஏற்றுக்கொண்ட புத்தர் எவ்வாறு பெண்களுக்கு எதிரானவராக இருந்திருக்க முடியும், என்று கேள்வி எழுப்புகிறார்.

புத்தர் மீதே வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு: "பெண் சீடர்களை ஆண் சீடர்களின் கீழ் வைத்திருந்தார்". அதற்கும் காரணம் உண்டு. ஆண் சீடர்கள் முதலில் புத்தரிடம் சேர்ந்த காரணத்தால், அவர் அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத் தந்திருந்தார். அதனால், அவர்களைக் கொண்டே பெண் சீடர்களுக்குக் கற்பித்தார். இதுபோன்ற 'ஆசிரிய--மாணவ' நடைமுறையை கிறிஸ்த்தவ மடாலயங்களிலும் உண்டு என்று நிறுவுகிறார் அம்பேத்கர்.

பெண்களுக்குத் துறவறத்தை அனுமதித்த மதம், பெளத்தம். அதனால், பெண்களும் சூத்திரர்களும் இந்த மதத்தில் இணைந்து துறவறத்தை அடைந்தனர். ஆனால், பெளத்தம் தோன்றி சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மனு, இந்து மதத்தைச் சேர்ந்த பல பெண்களும் சூத்திரர்களும் பெளத்த மதத்துக்கு மாறுவதைப் பார்த்துக் குமுறுகிறான். இதைத் தடுக்கவே, பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் அறிவைப் பெறுவதற்குத் தடை விதித்தான். இப்படி இந்து மதத்திலிருந்து விலகிப் போகிற பெண்ணை மற்றவர்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். ஆக, இந்துப் பெண்கள் தாழ்ந்து போனதற்கு மனுவே காரணம், மனுவின் 'மதமே' காரணம் என்று அம்பேத்கர் தெளிவுபடுத்துகிறார்.

இந்தக் கட்டுரையை எழுதிய அடுத்த வருடமே, 'இந்து சட்ட மசோதா'வுக்கானப் போராட்டத்தில் இறங்குகிறார் அம்பேத்கர். அவர் கொண்டு வர நினைத்த மிகப்பெரிய சமூகச் சீர்திருத்தங்களில் ஒன்று, 'இந்து சட்ட மசோதா'. 1947-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 1951-ம் ஆண்டு செப்டம்பரில்தான் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்பே சில முறை விவாதம் நடந்திருந்தாலும், அது வெறும் பெயரளவுக்கே இருந்தன. ஆனால் இந்த முறை, விவாதம் நடந்ததோடு, அந்த மசோதாவுக்கும் முடிவு கட்டப்பட்டது. அதன் காரணமாகவே தனது சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து செப்டம்பர் 27-ம் தேதி அம்பேத்கர் ராஜினாமா செய்தார். அப்படிப் பார்த்தால், அந்தச் சட்ட மசோதாவுக்கு இந்த ஆண்டு 65 வயது!

அப்படி அந்த மசோதாவில் என்ன இருக்கிறது? அதுவும் பெண்களுக்கு? உண்டு! மகளுக்குச் சொத்துரிமை, ஜீவனாம்ச உரிமை, பலதார மணமுறைக்குத் தடை கோரும் உரிமை, விவாகரத்துப் பெறும் உரிமை எனப் பல உரிமைகளைப் பற்றிப் பேசியது அந்த மசோதா. அவை குறித்தெல்லாம் அறிய, இந்தத் தொகுப்பைப் படிப்பது அவசியம்.

பெண்களின் விடுதலைக்காக அம்பேத்கர் இப்படியெல்லாம் பாடுபட்டதன் நினைவாகத்தான் பின்னாளில் அம்பேத்கரிய பெண் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ம் தேதியை 'இந்தியப் பெண் விடுதலைக்கான நாளாக' கடைப்பிடித்து வருகின்றன, என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? முக்கியமாக அம்பேத்கரை மறுதலிக்கிற பெண்ணியவாதிகளுக்கு?

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் ஆறாவது பதிவு இது.)
 

Thursday, September 15, 2016

அகதா கொடுத்த விஷம்

ந.வினோத் குமார் 

பதிப்பிக்கப்பட்ட தேதி: 11 செப்டம்பர் 2016

பொதுவாக மனிதர்கள், கதை அல்லது நாவல் சார்ந்த தங்களின் வாசிப்பை சுவாரஸ்யத்தின் அடிப்படையிலேயே அமைத்துக்கொள்கிறார்கள். பிறகு வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட, சுவாரஸ்யம் என்ற அடிப்படையிலிருந்து ஆழமான வாசிப்புக்கு நகர்கிறார்கள். பெரும்பாலும் அந்த சுவாரஸ்யமான வாசிப்பை, ‘க்ரைம்’ கதைகளே தருகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. அப்படியான க்ரைம் நாவல்கள்தான் பெருந்திரளான மக்களை வாசிப்பை நோக்கி இழுத்து வந்தன. 

'க்ரைம்' நாவல் தளத்திலும்கூட ஆரம்பத்தில், ஆண் எழுத்தாளர்களே அதிகம் எழுதிவந்தார்கள். ஆனால், இந்தத் தளத்தில் இன்றைய காலத்தில் இந்தியா உட்பட பல நாட்டுப் பெண் எழுத்தாளர்கள் எழுதி வந்தாலும், அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் அகதா கிறிஸ்டி. 1890-ம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று இங்கிலாந்தில் பிறந்த இவர், தன் வாழ்நாளில் மொத்தம் 66 நாவல்கள், 14 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்.

அவர் ஒவ்வொரு கதையிலும் ஒரு குற்றத்தைத் தோற்றுவிக்கிறார். அந்தக் குற்றத்தை யார் செய்தது என்று நாம் அறிவதற்குப் பல இடங்களில் பல குறிப்புகளைக் கொடுத்துச் செல்வார். ‘இவர்தான் குற்றவாளி’ என்று வாசகர்கள் ஒரு கதாபாத்திரத்தைக் கட்டம்கட்டும்போது, வாசகர்கள் எதிர்பார்க்கவே செய்யாத ஒரு கதாபாத்திரத்தை ‘இவரே குற்றவாளி' என்று சொல்லி நம் முன் நிறுத்துவார். அந்த ஆச்சரியத்துடன் நாம் மீண்டும் அந்தக் கதையைப் படிக்கும்போது, அவர் தந்து சென்ற குறிப்புகள் எல்லாம் உண்மையில், அந்த உண்மையான குற்றவாளியை நோக்கியே இருப்பது நமக்குப் புரியும்.

இன்னும் சில கதைகளில் குற்றவாளி இவர்தான் என்று நேரடியாகவே சொல்லிவிடுவார். ஆனால் அவர் அந்தக் குற்றத்தை எப்படிச் செய்தார் எனும் புதிரை அவரே அவிழ்க்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

இந்தச் சிறப்புகள் எல்லாம் ஒரு புறமிருக்க, இன்னொரு முக்கியச் சிறப்பம்சம், ஒரு குற்றத்தைச் செய்வதற்கு அவர் படைத்த‌ கதாபாத்திரங்கள் என்ன மாதிரியான ஆயுதத்தைத் தேர்வு செய்கின்றன என்பது. இவரின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தேர்வுசெய்தது விஷம்!

விஷம் தோய்ந்த அந்தக் கதைகள் மற்றும் அந்தக் கதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் விஷம் குறித்து நமக்கு அறிமுகம் செய்கிறது ‘ஏ இஸ் ஃபார் ஆர்செனிக்’ எனும் புத்தகம். அகதா கிறிஸ்டியின் ரசிகரும் வேதியியலாளருமான காத்ரின் ஹர்குப் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ப்ளூம்ஸ்பெர்ரி பதிப்பகம் வெளியிட்ட இந்தப் புத்தகம் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது.

 
அகதா தன் கதைகளில் 14 விதமான விஷங்களைப் பயன்படுத்துகிறார். அவர் காலத்தில் சமூகத்தில் புழக்கத்திலிருந்த பெருமளவு விஷ வகைகள், மருத்துவப் பயன்பாட்டுக்கு உதவின. அப்படியான விஷ வகைகள் மற்றும் மருத்துவப் பயன்பாடிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்ட விஷ வகைகள் ஆகியவற்றைக் கொண்டு அவர் தன் நாவல்களைப் படைத்திருந்தார்.

தன் கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் விஷம், அது மனித உடலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அறிவியல்பூர்வமான விவரங்களைத் தன் கதைகளில் விளக்கமாகச் சொல்லியிருப்பார் அகதா. இந்த அம்சம், அவரின் நாவல் ஒன்று ‘பார்மாசூட்டிக்கல் ஜர்னல் அண்ட் பார்மாசிஸ்ட்’ எனும் மருந்தியல் இதழ் ஒன்றால் மதிப்பீடு செய்யப்படும் அளவுக்கு அகதாவை உயர்த்தியது. ஆச்சரியப்படும் வகையில் அந்த நாவல், ‘தி மிஸ்டீரியஸ் அஃபயர்ஸ் அட் ஸ்டைல்ஸ்’ எனும் அவரின் முதல் நாவலாகும். அவரால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது?

ஏனென்றால், அவர் அடிப்படையில் ஒரு செவிலியர். முதலாம் உலகப் போரில் செவிலித் தொண்டு புரிந்தவர். அப்போது அவர் மருந்துகளைக் கையாள வேண்டியிருந்தது. அந்த ஆர்வம், மருந்தியல் நிபுணர் ஒருவரிடம் தனிப்பட்ட முறையில் அவரை மாணவியாகச் சேர உந்தித் தள்ளியது. அந்த நாட்களில் அவர் பல விதமான விஷ மருந்துகளைப் பற்றி அறிந்துகொள்கிறார். அந்த அனுபவங்கள்தான் அவர் கதைகள் எழுதுவதற்குக் கைகொடுத்தன.

இவரின் நாவல்களைப் படித்துவிட்டு, பலர் அந்த நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷத்தை வாங்கிக் குற்றங்களைப் புரிந்தனர் என்பது இவர் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் அது உண்மையல்ல. மாறாக இவரின் ‘தி பேல் ஹார்ஸ்’ என்ற நாவலைப் படித்ததன் காரணமாக, மருத்துவமனை செவிலியர்கள் சிலர் ‘தாலியம்’ எனும் விஷத்தின் தாக்கத்தை உணர்ந்து, அந்த விஷத்தை உட்கொண்டவர்கள் பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

இப்படிப் பல விஷயங்களை அலசும் இந்தப் புத்தகத்தில், ஒரு குறிப்பிட்ட வகை விஷம் எப்படித் தோன்றியது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது, அதன் மருத்துவக் குணங்கள் என்ன, அந்த விஷத்துக்கான விஷமுறி மருந்து என்ன, அந்த விஷம் தொடர்பான குற்ற வழக்குகள் என்ன, அந்த வழக்குகள் எப்படி அகதாவைக் கதை எழுதத் தூண்டின என்பது உள்ளிட்ட தகவல்களையும் தருகிறார் நூலாசிரியர்.

நச்சுயியல் துறையை அறிமுகப்படுத்தியவர் என்று அறியப்படும் பாராசெல்சஸ், ‘எல்லாவற்றிலும் விஷம் இருக்கிறது. விஷம் இல்லாத ஒரு விஷயமும் இல்லை. நாம் எடுத்துக்கொள்ளும் அளவுதான், ஒரு விஷயத்தை விஷமாகவோ அல்லது நிவாரணமாகவோ மாற்றுகிறது’ என்கிறார். அதைப் புரிந்துகொண்ட அகதா, தன் படைப்புகளின் வழியே நம் முன் வைப்பது ரசாயன விஷத்தை மட்டுமல்ல. மனித மனத்தின் விஷத்தையும் சேர்த்துத்தான். அதுவே அவரது எழுத்துக்களை வெறும் சுவாரஸ்யம் என்பதாகச் சுருக்கிவிடாமல் படைப்பின் தளத்துக்கு உயர்த்துகிறது. 

நன்றி: தி இந்து (கலை ஞாயிறு)

Tuesday, August 30, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - V

நீங்கள் எந்த 'வெர்ஷன்' பிராமணர்..?


ந.வினோத் குமார்
 
அம்பேத்கரியல் வரலாற்றில் இந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு. அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டு. அம்பேத்கர் எழுதிய 'இந்தியாவில் சாதிகள்' எனும் நூலுக்கு இந்த ஆண்டு 100 வயது. இவை எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமான ஒரு விஷயம்... 'பட்டியலின வகுப்பினர்' எனும் பிரிவு ஏற்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் ஒரு நூற்றாண்டு ஆகிறது!

1909-ம் ஆண்டு ஆகா கான் குழுவின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, 'தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் உண்மையில் இந்துக்கள் அல்ல' என்ற தகவலை முன் வைத்து, அம்பேத்கர் ஓர் அறிக்கையை பிரிட்டிஷ் வைஸ்ராயிடம் சமர்ப்பிக்கிறார். அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜே.ஹெச்.ஹட்டன் எனும் அதிகாரியின் தலைமையில் 1911-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அப்போது 'இந்துக்கள்' என்ற பிரிவிலிருந்து 'தீண்டத்தகாதவர்கள்' நீக்கப்பட்டு, அவர்களைத் தனியே கணக்கெடுப்புச் செய்தனர். பின்னர் 1916-ம் ஆண்டு 'ஒடுக்கப்பட்ட வகுப்பு' (Depressed Class) எனும் பிரிவு உருவாக்கப்படுகிறது. அதுதான் பின்னாளில், அதாவது 1935-ம் ஆண்டில் 'பட்டியலின வகுப்பு' என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி பார்த்தால், இந்த ஆண்டு 'பட்டியலின வகுப்பு'க்கு நூறு வயது!

இந்நிலையில், அம்பேத்கர் எழுதிய, அவரின் மறைவுக்குப் பின் வெளியான 'ரிட்டில்ஸ் இன் ஹிந்துயிஸம்' (இந்து மதத்தின் புதிர்கள்) எனும் நூலைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகிறது.

மதம், சமூகம் மற்றும் அரசியல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்து மதம் கொண்டிருக்கும் புதிர்கள் என்று 24 விஷயங்களை 8 பின்னிணைப்புகளுடன் அம்பேத்கர் எழுதுகிறார். அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து 'பாபாசாகேப் அம்பேத்கர் எழுத்தும் பேச்சும்' என்ற தலைப்பின் கீழ்  மகாராஷ்டிர மாநில அரசின் கல்வித் துறை வெளியிட்டது. அப்போது, 'இதிலிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் நிறைவடையாததாக உள்ளன' என்ற குறிப்புடன் அந்தப் புத்தகம் வெளியானது.

அந்த 24 புதிர்களிலிருந்து 10 புதிர்கள் மற்றும் ஒரு பின்னிணைப்பு ஆகியவற்றைத் தேர்வு செய்து, அடிக்குறிப்புகள் கொடுத்து 'நவயானா' பதிப்பகம் சமீபத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்துக்கு காஞ்சா ஐலையா முன்னுரை எழுதியிருக்கிறார்.


இந்தப் புத்தகத்திலிருக்கும் முதல் புதிரே மிகவும் அதிர்ச்சியான ஒன்றாக இருக்கிறது. 'ஒருவர் ஏன் இந்துவாக இருக்கிறார் என்பதை அறிவது கடினம்' என்பதாக உள்ளது அந்தப் புதிர்.

"ஒரு இஸ்லாமியரிடம் 'நீங்கள் ஏன் இஸ்லாமியராக இருக்கிறீர்கள்?' என்று கேட்டால், அவர் 'நான் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறேன். அதனால் இஸ்லாமியராக இருக்கிறேன்' என்று சொல்வார். ஒரு கிறித்துவரிடம் 'நீங்கள் ஏன் கிறித்துவராக இருக்கிறீர்கள்?' என்று கேட்டால், அவர் 'நான் கிறித்துவைப் பின்பற்றுகிறேன். அதனால் கிறித்துவனாக இருக்கிறேன்' என்று சொல்வார். ஆனால் ஒரு இந்துவிடம் 'நீங்கள் ஏன் இந்துவாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால், 'இந்து' என்று ஒரு மதம் இல்லவே இல்லை" என்கிறார் அம்பேத்கர்.

'இந்து மதம்' என்ற சொல்வழக்கே மிகவும் சமீபத்தில்தான் உருவாகியிருக்கிறது. 1816-17-ம் ஆண்டுவாக்கில் ராஜா ராம்மோகன் ராய் என்பவர்தான் இந்த வார்த்தையை முதன்முதலாகப் பயன்படுத்துகிறார். அதன்படி பார்த்தால், மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரையிலும் 'இந்து மதம்' என்று தனியாக ஒரு மதம் இருப்பதாகத் தெரியவில்லை.

11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அல் பிரூனி எனும் பயணி 1017-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவுக்கு வருகிறார். 'சிந்து' எனும் ஆற்றுக்குப் பக்கத்தில் வாழ்ந்து வந்த காரணத்தால் அப்பகுதி மக்களை அவர் 'ஹிந்த்' எனக் குறிப்பிட்டார். ஒரு நிலப்பரப்பைக் குறிக்கவே 'ஹிந்த்' எனும் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் இஸ்லாமியர்கள் படையெடுத்து வர, அந்த மக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக்கொள்ள இந்த வார்த்தையைப் பயன்படுத்த, பின்னாளில் 'ஹிந்து' எனும் சொல் மதரீதியான புழக்கத்துக்கு வந்தது.

ஆக, இந்து மதத்தின் ஆரம்பமே ஆட்டம் காணும் நிலையில், 'நான்கு வர்ணங்கள்: பிராமணர்களுக்குத் தாங்கள் தோன்றிய வரலாறு உண்மையானதுதான் என்பது தெரியுமா?' என்ற கேள்வியை எழுப்புகிறார் அம்பேத்கர். இதனை இந்து மதத்தின் 16-வது புதிராக வைக்கிறார் அவர்.

"பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு வர்ணங்கள் பிரஜாபதி என்பவரால் உருவாக்கப்பட்டது என்கிறது ரிக் வேதம். இன்னொரு வேதம், இவற்றை உருவாக்கியது காஸ்யபர் என்கிறது. மற்றுமொரு வேதம், இவற்றை மனு உருவாக்கினார் என்கிறது. வேதங்கள் தவிர்த்து, நம்மிடையே இருக்கும் இதர உபநிடதங்கள், ராமாயணம், மகாபாரதம் மற்றும் இதர புராணங்கள் போன்றவை இந்த வர்ணாஸ்ரமத்தைப் பற்றி ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையைக் கூறுகின்றன. இவற்றில் எதை நம்புவது?" என்ற கேள்வியை முன் வைக்கிறார் அம்பேத்கர்.

அடுத்த முறை யாராவது நம்மிடம் 'நான் பிராமணன் தெரியுமா' என்று எகத்தாளம் பேசினால், 'வேதங்கள், காவியங்கள், புராணங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் எந்த 'வெர்ஷன்' பிராமணர் நீங்கள்?' என்று கேள்வி கேட்க வேண்டும்!

இந்து மதத்தின் 22-வது புதிராக 'பிரம்மம் என்பது தர்மம் அல்ல: பிரம்மத்தால் என்ன நன்மை?' என்ற கேள்வியை எழுப்புகிறார் அம்பேத்கர்.

இதுகுறித்து அலசும்போது அவர் இப்படி எழுதுகிறார்: "ஜனநாயகம் என்பது அரசியல் இயந்திரத்துக்கும் மேலானது. ஒரு சமூகக் கட்டமைப்பு என்பதை விடவும் மேலானது. அது ஒரு மனநிலை அல்லது வாழ்க்கையின் தத்துவம்.

சிலர் ஜனநாயகத்தை சமத்துவத்துடனும் சுதந்திரத்துடனும் ஒப்பிடுவார்கள். சமத்துவமும் சுதந்திரமும் ஜனநாயகத்தின் ஆழமான கரிசனங்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எது சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் பேணிக் காக்கிறது? சிலர் 'சட்டம்' என்று பதில் சொல்லலாம். அது சரியான விடை அல்ல. அவற்றைக் காப்பது 'இன்னொருவரைத் தன்னைப் போல நினைக்கும் மனப்பான்மை'தான். இதைத்தான் பிரெஞ்சுக்காரர்கள் 'சகோதரத்துவம்' என்கின்றனர். ஆக சகோதரத்துவம்தான் ஜனநாயகத்தின் வேர்.

எனில், சகோதரத்துவத்தின் வேர் எது என்று பார்த்தால், அது மதம்தான். ஒருவரின் மதம் சகோதரத்துவத்தை வளர்த்தால், அந்தச் சமுதாயத்தில் ஜனநாயகம் சிறப்பாக உள்ளது என்று பொருள். சகோதரத்துவத்துக்கு இடமளிக்கவில்லை என்றால், அங்கு ஜனநாயகத்துக்கு வேலை இல்லை.

இந்தியாவில் ஏன் ஜனநாயகம் தழைக்கவில்லை? காரணம், இந்து மதம் சகோதரத்துவத்தை வளர்க்கவில்லை".

அப்புறமென்ன... புத்தரைத் தேடிப் போவோம் வாருங்கள்! 

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் ஐந்தாவது பதிவு இது.)

Friday, August 12, 2016

ஒலிம்பிக் பார்ப்பதற்கு ஒரு கைடு!

ந. வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 12 ஆகஸ்ட், 2016
 
பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன ஒலிம்பிக் போட்டிகள். எந்த ஸ்போர்ட்ஸ் சேனலைத் திறந்தாலும், ஒவ்வொரு சேனலிலும் ஒவ்வொரு விளையாட்டை ஒளிபரப்புகிறார்கள். எதைப் பார்க்க, எதை விட என்று பலரும் குழம்பலாம். அந்தப் பலரில் சிலர், ஒலிம்பிக் போட்டிகளைப் பார்ப்பது இது முதன்முறையாகக்கூட இருக்கலாம். 

கவலையை விடுங்கள். உங்களுக்காகவே வந்திருக்கிறது 'ஹவ் டு வாட்ச் தி ஒலிம்பிக்ஸ்' எனும் புத்தகம். பிரபல விளையாட்டுச் செய்தியாளர்கள் டேவிட் கோல்ட்ப்ளாட், ஜானி ஆக்டன் மற்றும் பால் சிம்ப்ஸன் ஆகியோர் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள். 'ப்ரொஃபைல் புக்ஸ்' பதிப்பக வெளியீடான இது, சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் தோற்றம், தொடக்க நிகழ்ச்சிகளின் வரலாறு, பதக்க விழாவின் பாரம்பரியம், போட்டி முடிவு நிகழ்ச்சிகளின் ‘ஹைலைட்' போன்ற விஷயங்களுடன், ஒலிம்பிக் போட்டியில் விளையாடப்படும் 31 வகை விளையாட்டுக்களின் தோற்றம், அவற்றின் முக்கியத்துவம், அவை ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்ட கதை, அந்தப் போட்டிகளின் விதிமுறைகள், போட்டியின்போது கடைப்பிடிக்கப்படும் சில நுணுக்கங்கள் என இந்தப் புத்தகம், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும் ஒரு ‘ரெடி ரெஃபரன்ஸ்' ஆக அமைந்திருக்கிறது என்று சொன்னால், அது மிகையில்லை. 

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள், ‘நாம் எப்படி ஒலிம்பிக்ஸ் போட்டிகளைப் பார்க்க வேண்டும்?' என்ற கேள்விக்கு ஐந்து விஷயங்களைப் பட்டியலிடுகிறார்கள்.

அதில் முதலாவது, ‘எந்த விளையாட்டை எதற்காகப் பார்க்க வேண்டும்?' என்ற புரிதல் நமக்கு அவசியம் என்கின்றனர். அதாவது, உங்களுக்குத் தடகளப் போட்டிகளைப் பார்ப்பதில் ஆர்வம் உண்டா? அப்படியென்றால், ஜெஸ்ஸி ஓவென்ஸ் பற்றித் தெரியுமா? உசைன் போல்ட் செய்த சாதனை குறித்து நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 1968-ம் ஆண்டு மெக்ஸிகோ ஒலிம்பிக்கில் நிகழ்ந்த ‘ப்ளாக் பவர் சல்யூட்' ஏற்படுத்திய விளைவுகள் என்ன என்பன போன்ற விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது அந்தப் போட்டிகளை நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கும்போது, நல்ல புரிதலுடன் விளையாட்டைப் பார்ப்பீர்கள். 

இரண்டாவது, ‘நீங்கள் விரும்பும் விளையாட்டு தோன்றிய கதையைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்'. ஏன்? உதாரணத்துக்கு உங்களுக்கு ‘ரக்பி' விளையாட்டு மிகவும் பிடிக்கும் என வைத்துக்கொள்வோம். அந்த விளையாட்டு இந்த ரியோ ஒலிம்பிக்ஸில் ‘ரக்பி 7' என்ற பெயரில் ஏன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால், அந்த விளையாட்டின் போக்கு உங்களுக்குப் பிடிபடும். இங்கிலாந்தில் உள்ள ‘ரக்பி' எனும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த வில்லியம் வெப் எல்லிஸ் என்ற 16 வயதுச் சிறுவன், கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மைதானத்திலிருந்து அந்தப் பந்தைத் தூக்கிச் சென்றுவிட்டான். அப்படி உருவானதுதான் ‘ரக்பி' விளையாட்டு. பின்னாளில் அந்தச் சிறுவனின் பெயரிலே ‘ரக்பி உலகக் கோப்பை' போட்டிகள் நடைபெற ஆரம்பித்தன. இப்படியான வரலாற்றைத் தெரிந்து வைத்துக்கொண்டு ஒரு விளையாட்டை நீங்கள் அணுகினால், அந்த விளையாட்டை நீங்கள் பார்க்கும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

மூன்றாவதாக, 'ஒரு விளையாட்டின் அடிப்படை விதிகளையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்'. எதற்காக? உதாரணத்துக்கு உங்களுக்கு வில் வித்தைப் போட்டியைக் காண்பதில் ஆர்வம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் ‘ஃபாஸ்ட்' எனும் வார்த்தை அவ்வப்போது பயன்படுத்தப்படும். அப்படி என்றால் என்ன? ‘ராபின் ஹுட் ஷாட்' என்றால் என்ன? அதற்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் எத்தனை? இப்படியான சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டால், அந்த விளையாட்டின் சூட்சுமம் உங்களுக்கு விளங்கிவிடும். 

நான்காவதாக, ‘ஒரு விளையாட்டின் நெளிவு சுளிவுகளை நாம் அறிந்திருக்க வேண்டும்' என்கிறார்கள் ஆசிரியர்கள். அது ஏன்? உதாரணத்துக்கு பாட்மின்டன் போட்டியை எடுத்துக்கொள்வோம். டென்னிஸ் விளையாட்டில் ஒரு வீரர் செய்யும் ‘சர்வ்'தான் அந்த விளையாட்டு வீரருக்கான புள்ளிகளைப் பெற்றுத் தருவதில் முக்கியமானதாக இருக்கும். ஆனால் இறகுப்பந்துப் போட்டியில் ‘சர்வ் இஸ் நாட் கிங்', அதாவது ‘சர்வ்' அவ்வளவு முக்கியமானதல்ல என்று சொல்லப்படுகிறது. எதனால் அப்படி என்று நீங்கள் தெரிந்துகொண்டால், அந்தப் போட்டியை நீங்கள் இன்னும் புரிந்துகொண்டு ரசிக்க முடியும்.

ஐந்தாவதாக, ‘ஒரு விளையாட்டு, எப்படி ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டது' என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, துப்பாக்கிச் சுடுதல் போட்டி முன்பு எவ்வாறு விளையாடப்பட்டது? ஒலிம்பிக் போட்டியில் அது சேர்க்கப்பட்டவுடன், அந்த விளையாட்டு விதிகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் என்ன என்பன போன்ற விஷயங்களைத் தெரிந்துகொண்டால், நீங்கள் பார்க்கும் அந்த விளையாட்டு நிச்சயம் அர்த்தமுள்ள பொழுதுபோக்காக இருக்கும். 

இந்தப் புத்தகம் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒரு கையேடாக மட்டுமல்லாமல், விளையாட்டுத்துறை தொடர்பான ஒரு பொது அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கிறது என்று சொன்னால், அது முற்றிலும் உண்மை. ஹேப்பி ஒலிம்பிக்ஸ்! 

நன்றி: தி இந்து (இளமை புதுமை)

Thursday, July 28, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - IV

வந்தார் மூக்நாயக்... வாழ வைத்தார்!


ந.வினோத் குமார்
 
அம்பேத்கருக்கு அறிமுகம் தேவையில்லை. இந்திய அரசியலமைப்பைக் கட்டியெழுப்பியவர்... சாதிகளுக்குச் சுளுக்கெடுத்தவர்... அதில் சிக்கியிருந்த பலரை விடுவித்தவர்... இந்து மதத்துக்கு வேப்பிலை அடித்தவர்... என அவரின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், இந்தச் சாதனைகளை எல்லாம் செய்வதற்கு ஆரம்பகாலங்களில் அவருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது எது என்று பார்த்தால், அது 'மஹர்' இன மக்களுக்காக அவர் கொடுத்த உழைப்புதான்! 'மூக்நாயக்' (குரலற்றவர்களின் தலைவன்) என்று தான் ஆரம்பித்த முதல் பத்திரிகை கூட அவர்களுக்காகத்தான்!

மகாராஷ்டிர மாநிலத்தில் அடித்தள மக்களுக்கும் அடுத்து மிகவும் கீழ் நிலையில் இருந்தவர்கள் மஹர் இன மக்கள். 'எங்கெல்லாம் கிராமங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் மஹர் இனத்தவர் இருப்பார்கள்' என்பது அக்காலத்தில் மராட்டியப் பகுதிகளில் புழங்கி வந்த அவமதிப்பு மிகுந்த ஒரு பழமொழி இது.

இந்த நிலை, ஆங்கிலேயேர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு மாறியது. மஹர் இன மக்களுக்கு ஆங்கிலேயர்களின் வருகை என்பது தோல்வியாக இல்லாமல், தாங்கள் விடுதலை அடைவதற்கான ஒரு வாய்ப்பாகவே அமைந்தது. காரணம், ஆங்கிலேயர்கள் தங்களின் போர்ப்படைகளுக்கு, பெருமளவில் மஹர் இன மக்களைச் சேர்த்துக்கொண்டார்கள். அதன் பிறகு, 'எங்கெல்லாம் ஒரு மஹர் இனத்தவர் இருக்கிறாரோ, அங்கெல்லாம் ஒரு மகாராஷ்டிரம் இருக்கும்' என்ற புதுமொழியை மஹர் இனத்தவர் பெருமையுடன் சொல்லிக்கொண்டார்கள்.

ஆங்கிலேயர்களின் வருகை, மஹர் இன மக்களைக் கைதூக்கிவிட்டது என்று சொன்னால், அவர்களைத் தலைநிமிரச் செய்த பெருமை முழுக்க முழுக்க அம்பேத்கரையே சாரும். மஹர் இன மக்களுக்காக அவர் அப்படி என்ன செய்துவிட்டார்? இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்கிறது 'அம்பேத்கர்ஸ் வேர்ல்ட்' எனும் புத்தகம். 'நவயானா' பதிப்பகத்தின் மறுபதிப்பான இந்தப் புத்தகம் 2013-ம் ஆண்டு வெளியானது. அமெரிக்காவைச் சேர்ந்த அம்பேத்கரிய‌ அறிஞர் இலியனார் செல்லியட் எனும் பெண்மணிதான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

1962-ம் ஆண்டு அம்பேத்கர் குறித்தும் மஹர் இன எழுச்சி குறித்தும், 'அம்பேத்கர் மற்றும் தீண்டாமை எதிர்ப்பு இயக்கம்' எனும் தலைப்பில் இரண்டு வருடங்கள் முனைவர் ஆய்வுக்காக இலியனார், இந்தியாவுக்கு வந்தார். அந்த ஆய்வின் பலன்தான் இந்தப் புத்தகம். அதன் பின்னர் 1969-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் கார்ல்டன் கல்லூரியில் சுமார் 30 வருடங்கள் பேராசிரியராகப் பணியாற்றினார். அம்பேத்கரின் எழுத்துகள் இந்தியாவைத் தாண்டாத காலம் அது. அப்போது அவரின் எழுத்துகளை தன் ஆய்வுகள் மூலம் உலகம் முழுக்க எடுத்துச் சென்றதில் இலியனார் செல்லியட்டுக்கு பெரும் பங்கு உண்டு. இந்தப் பெருமைகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அந்தப் பெண்மணி இந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி காலமானார்.

இந்தப் புத்தகத்தில், மஹர் இன மக்கள் அரசியல் தளத்திலும், சமூகத் தளத்திலும், சமய ரீதியான நடவடிக்கைகளிலும் மேம்பட்ட நிலைக்கு முன்னேற அம்பேத்கர் எவ்வாறு உந்து சக்தியாக இருந்தார் என்பதை ஆழமாக அலசுகிறார் இலியனார்.

எனினும், மஹர் இனத்துக்காக அம்பேத்கர் ஆற்றிய முக்கியப் பணிகளில் ஒன்று, அவர்களை இந்து மதத்திலிருந்து வெளியேற்றி, புத்த மதத்துக்கு மதம் மாற்றியதுதான். 'நான் நிச்சயமாக இந்துவாக இறக்க மாட்டேன்' என்று அம்பேத்கர் சபதமேற்ற வருடம் 1935. சுமார் இருபது வருடங்கள் கழித்து 1956-ல் தான் அவரால் புத்த மதத்துக்கு மதம் மாற முடிந்தது. ஆக, அந்த இருபது வருடங்கள் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? இந்து, இஸ்லாம், சீக்கியம், ஜைனம், கிறிஸ்துவம், தேராவாத பவுத்தம் எனப் பல சமயங்களைப் பற்றி ஆராய்ந்தார். இறுதியாக அவர் தேர்வு செய்தது பவுத்தம்.

தனது முடிவு, அதாவது, இந்து மதத்திலிருந்து விலகி வேறு மதத்தில் இணைவது குறித்து 1936-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டமொன்றில், வெளிப்படுத்துகிறார். தன்னோடு, இதர மஹர் இன மக்களும் மதம் மாற வேண்டிய கட்டாயம் குறித்து அவர் உரையாற்றுகிறார். அந்த உரை மிகவும் கவித்துவமான உரையாக இருந்தது. 'முக்தி கோன் பதே?' (முக்தி அடைவதற்கான வழி என்ன?) என்ற தலைப்பில், மராத்தியில் எழுதப்பட்ட அந்த உரையை, இந்தப் புத்தகத்தில் ஆங்கிலத்தில் பெயர்த்திருக்கிறார் இலியனார். அந்த வரிகள் இவை:

மதம் என்பது மனிதனுக்காக. மனிதன் மதத்துக்காகப் பிறக்கவில்லை.

நீங்கள் சுயமரியாதையுடன் இருக்க, மதம் மாறுங்கள்.
ஒத்துழைப்பு நல்கும் சமுதாயத்தை உருவாக்க, மதம் மாறுங்கள்.
அதிகாரம் கிடைக்க, மதம் மாறுங்கள்.
சமத்துவம் கிடைக்க, மதம் மாறுங்கள்.
சுதந்திரம் கிடைக்க, மதம் மாறுங்கள்.
மகிழ்ச்சி தரும் உலகம் படைக்க, மதம் மாறுங்கள்.

உங்கள் மனிதத்தை மதிக்காத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
உங்களைக் கோயிலுக்குள் அனுமதிக்காத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
உங்கள் தாகத்துக்கு நீர் தராத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
உங்கள் கல்விக்குத் தடையாக இருக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
உங்களுக்கு நல்ல பணி கிடைப்பதைத் தடுக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
உங்களை ஒவ்வொரு விஷயத்திலும் அவமதிக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?

மனிதர்களுக்கிடையில் மனிதநேயத்தைத் தடுக்கும் ஒரு மதம், மதமல்ல. அபராதம்.
மனிதனின் சுயமரியாதையைப் பாவமாகக் கருதும் ஒரு மதம், மதமல்ல. நோய்.
செத்த மிருகத்தைத் தொடலாம் ஆனால் மனிதனைத் தொடத் தடை விதிக்கும் ஒரு மதம், மதமல்ல. பைத்திய நிலை.
ஒரு சாதி மட்டும் கல்வி கற்கக் கூடாது, பொருள் சேர்க்கக் கூடாது, ஆயுதம் ஏந்தக் கூடாது என்று கூறும் ஒரு மதம், மதமல்ல. மனித வாழ்வை கேலிக்குட்படுத்துவது.
கல்லாதவர் கல்லாதவராகவும், ஏழை ஏழையாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று போதிக்கும் ஒரு மதம், மதமல்ல. தண்டனை.

சொல்லாதே: மனிதர்களை விட மிருகங்களை மதிப்பவர்களை, பார்ப்பனர்களைக் கடவுளாக மதிப்பவர்களை, பக்திமான்கள் என்று.
சொல்லாதே: எறும்புகளுக்குச் சர்க்கரையையும், மனிதர்களுக்குத் தாகத்தையும் வழங்குபவர்கள், பக்திமான்கள் என்று.
சொல்லாதே: தன்னுடைய மதத்திலிருந்து வேறு மதத்துக்கு மாறுபவர்களை, சமுதாயத்தை வெறுப்பவர்கள் என்று.

                                                                                      (தமிழில்: ந.வினோத் குமார்)

என்ன சொல்ல? நாடு தன்னிடமிருந்த ஒரு நல்ல கவிஞனை வெளிப்படுத்திக் கொள்ள மறந்துவிட்டது. மறுத்துவிட்டது என்பதும் சரிதான்!

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் நான்காவது பதிவு இது)
 

Friday, July 8, 2016

அந்த ‘கோட்’ அவருக்கு எப்போது கிடைக்கும்?


ந.வினோத்குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 8 ஜூலை, 2016

அந்த அரங்கத்தில் உலக அளவில் பிரபலமான பேராசிரியர்களும், பேராசிரியர்களையே மிஞ்சும் மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் அமர்ந்திருந்தனர். மேடையில் 41 வயதான அந்த‌ இளைஞர் தான் கடந்து வந்த பாதையைச் சொல்கிறார். தன்னால் உயர்ந்த மாணவர்களின் பின்னணியைச் சொல்கிறார். அவை ஒவ்வொன்றும் அங்கு அமர்ந்திருந்தவர்களைப் புல்லரிக்க வைக்கிறது. புத்துணர்வு கொள்ளச் செய்கிறது. கைதட்டல்களால் அரங்கம் அதிர்கிறது.

இது நடந்த இடம் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி எனப்படும் எம்.ஐ.டி. நடந்த ஆண்டு 2014. அவர் ஆனந்தகுமார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே எம்.ஐ.டி. மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழகங்கள் இணைந்து ஏற்படுத்தியுள்ள ‘எட் எக்ஸ்’ எனும் கல்வி வலைதளத்தில் கணிதப் பாடம் நடத்த அழைக்கப்பட்டுள்ளார். இதை ஆனந்த் குமாரே எதிர்பார்த்திருக்க மாட்டார்!

அந்த ஆனந்த் குமாரைப் பற்றித்தான் பேசுகிறது ‘சூப்பர் 30 ஆனந்த் குமார்’ எனும் புத்தகம். இதனை எழுதியவர் பிஜு மேத்யூ. பெங்குயின் வெளியீடான இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

 

ஆனந்த் குமார்...? பிஹார் மாநிலத்தின் ஒரு மூலையில் பிறந்த அவர், கணிதம் படிப்பதற்காகவே பிறந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. பள்ளியிலும் கல்லூரியிலும் அவர் கணிதப் பாடத்தை அவ்வளவு விரும்பிப் படித்தார். அதன் விளைவு கல்லூரிக் காலத்திலேயே உலக அளவில் பிரபலமான கணித ஆய்விதழ்களில் கட்டுரைகள் வெளிட்டார். அது அவரை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் மேற்படிப்புப் படிக்க வரவேற்றது.

ஆனால், வறுமையும், தான் உயரக் காரணமாக இருந்த தந்தையின் மரணமும் கேம்ப்ரிட்ஜ் கனவை, கனவாக மட்டுமே இருக்கச் செய்தன. அதனால் அவர் சோர்ந்துவிடவில்லை. ‘என்னைப் போன்று திறமை இருக்கும், வறுமையில் வாடும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்களை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புகிறேன். அதுவரை என் அப்பா எனக்காகப் பரிசளித்த இந்த ‘கோட்’டை நான் அணியமாட்டேன்’ என்று சபதம் ஏற்றார். அந்த சபதம்தான் இன்று ‘சூப்பர்30’ என நிலைபெற்றிருக்கிறது!

வருடத்துக்கு 30 பேர். அவர்களை ஐ.ஐ.டி. நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது. இதுதான் ஆனந்த் குமாரின் இலக்கு. 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றுப் பொறியியல் படிப்புக்குத் தேர்வாகியிருக்கிறார்கள். சிலர், மேற்படிப்பு படிக்க வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருக்கிறார்கள். விரைவில், ஆனந்த் குமாரின் மாணவர்கள் சிலர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் காலடி எடுத்து வைப்பார்கள். ‘கோட்’ அவர் கைக்கு வரும் நாள் தொலைவில் இல்லை.

இந்தப் பயிற்சிகளுக்கு மாணவர்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும்? சொன்னால் நம்ப மாட்டீர்கள். அனைத்தும் இலவசம். உணவு, தங்கும் வசதி உட்பட!

இந்தத் திட்டத்தால் தங்கள் பிசினஸ் பாதிக்கப்படும் என்று கூறி, சில கோச்சிங் சென்டர் முதலாளிகள் அவரைக் கொலை செய்யக்கூடத் துணிந்திருக்கின்றனர். அத்தனையையும் தாண்டி, அவரால் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடிகிறது என்றால், அதற்கு ஒரே காரணம், அவர் தன் மாணவர்களிடத்தில் சொல்கின்ற ‘சக்சஸ் சீக்ரெட்’ தான். அது: “வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க எப்போதும் பல வழிகள் உண்டு. அது கணிதத்துக்கும் பொருந்தும்!”

ஆனந்த் குமார் சிறுவனாக இருக்கும்போது, அவரின் தந்தை ஆனந்தின் காலில் விழுந்து வணங்குவாராம். அதனை ஆனந்த் பதறித் தடுத்து “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டபோது, அதற்கு அவரின் தந்தை “நீ பெரியவனாகி, சமூகத்தில் சிறந்த மனிதனாக விளங்கும்போது, ஒருவேளை நான் உயிரோடு இல்லாமல் போய்விட்டால், உன்னை எப்படி வணங்குவது? அதுதான் இப்போதே உன்னை வணங்குகிறேன்!” என்றாராம்.

ஆனந்த் குமாரின் முயற்சியால்தான் இன்று பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங்கிற்கு ஆகும் செலவும், கல்விக் கடனுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. அதனால், இன்று பல மாணவர்களின் மனதில் அவர் கடவுளாகத் தெரிகிறார்.

இவன் தந்தை என்னோற்றான் கொல்..! 

நன்றி: தி இந்து (இளமை புதுமை)

Wednesday, June 29, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - III

இந்தியாவில் சாதிகள்


ந.வினோத் குமார்

'சாதியை யார் தோற்றுவித்தது?' என்று கேட்டால் பலர், 'அது தெய்வம் தந்தது!' என்று சொல்லலாம். 'அது மனிதன் உருவாக்கியது' என்று சொன்னால், அது உண்மை என்றபோதும் அதனை மனிதர்கள் ஏற்றுக்கொள்ள முன் வரமாட்டார்கள். அதுதான் சாதியின் பலம்!

சாதி என்பது மனித நாகரிகத்தின் ஒரு பகுதியா என்று கேட்டால் அதுதான் இல்லை. அம்பேத்கர் அதற்குச் சரியான ஒரு விளக்கம் தருகிறார் இப்படி:

"மனித நாகரிகம் குறித்து உள்ளூர் அளவில், தேசிய மற்றும் சர்வதேச அளவில் நீங்கள் பல கண்காட்சியைப் பார்த்திருக்கலாம். ஆனால் மனிதனால் நிறுவனமயமாக்கப்பட்ட விஷயத்தை நீங்கள் கண்காட்சியாகப் பார்த்திருக்க முடியாது. அத்தகைய ஒரு விஷயம் சாதி!"

அந்தக் கண்காட்சியை இந்தியாவில் நாம் தினந்தோறும் பார்க்க முடியும் என்பது எவ்வளவு கொடூரம்!

இந்தியாவில், ஏன் உலக அளவில் கூட சாதிகளைப் பற்றி அம்பேத்கரைப் போல மிக ஆழமாக ஆராய்ந்து பேசியவர் எவருமில்லை என்று சொல்லலாம். அமெரிக்காவின் கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் 1916-ம் ஆண்டு, மே 9-ம் தேதி 'Castes in India: Their Mechanism, Genesis and Development' என்ற தலைப்பில் இந்தியாவில் சாதிகளின் அமைப்பு, தோற்றும் மற்றும் அவற்றின் வளர்ச்சி ஆகியவை குறித்து ஒரு கட்டுரையை வாசிக்கிறார். பின்னாளில் அம்பேத்கர் எழுதிய முதல் புத்தகமாகவும் இது வெளியானது. அம்பேத்கர் எழுதிய முதல் புத்தகத்துக்கு இந்த ஆண்டுடன் நூறு வயதாகிறது!

நூறு வருடங்கள் ஆகியும் இன்னும் அந்தப் புத்தகம் பலராலும் வாசிக்கப்படுகிறது என்றால், அப்படி அந்தப் புத்தகத்தில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது?


'இந்தியாவில் சாதிகள் மிகவும் உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம் அகமண முறையே' என்கிறது இந்தப் புத்தகம். அகமண முறை இந்தியாவில் தோன்றவில்லை. தொடக்க காலங்களில் ஒரு குழு மக்கள், இன்னொரு குழு மக்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்வதுதான் வழக்கமாக இருந்தது.

'இப்படி ஒவ்வொரு குழுவும் மற்ற குழுவுடன் திருமண உறவு வைத்துக்கொண்டால் நம் குழுவின் பலம் குறைந்து போகுமே' என்று சிலர் எண்ணியதன் விளைவு குழுவுக்குள்ளேயே திருமண உறவு வைத்துக்கொள்ளும் அகமண முறை தோன்றியது. இந்த அகமண முறை நீடித்திருக்க வேண்டுமானால், அந்தக் குழுவுக்குள் ஆண் பெண் பாலின எண்ணிக்கை சமநிலையில் இருக்க வேண்டும்.

உதாரணமாக 100 பேர் கொண்ட ஒரு குழுவுக்குள் ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இவர்களில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால் அந்தக் குழுவின் எண்ணிக்கை 99 ஆகிவிடும். அப்போது ஆண் இறந்தால் ஒரு பெண் கூடுதலாகவும், பெண் இறந்தால் ஒரு ஆண் கூடுதலாகவும் அந்தக் குழுவில் இருப்பர்.

இப்போது அந்தக் குழுவின் எண்ணிக்கையை சமநிலையில் வைத்திருக்க வேண்டுமானால், அந்த 'கூடுதல் ஆண்' (சர்ப்ளஸ் மேன்), 'கூடுதல் பெண்' (சர்ப்ளஸ் வுமன்) ஆகியோருக்குச் சரியான நீதி வழங்க வேண்டும். இவர்களில் 'கூடுதல் பெண்'ணை அவளின் கணவன் இறந்தவுடனே, அவளையும் உடன்கட்டை ஏற்றிக் கொன்றுவிடலாம். ஏனெனில், அவளை உயிருடன் விட்டால், அந்தக் குழுவிலிருந்து வெளியேறி வேறு குழுவுக்குச் சென்று திருமணம் செய்துகொள்வாள். இதனால் அந்தக் குழுவில் அகமண முறை உடைந்து எண்ணிக்கை குறைவாகும் என்ற அச்சத்தினால்தான் 'சதி' போன்ற வழக்கங்கள் தோன்றின.

அல்லது அவளுக்குக் கட்டாய விதவைக்கோலத்தை வழங்கலாம். அதனால் அவள் அந்தக் குழுவுக்குள்ளேயே இன்னொரு ஆணை மறுமணம் செய்துகொள்ளவும் தடுக்கப்படும். என் இப்படி? காரணம், இவள் பெண்ணாயிற்றே! காலம் காலமாக ஆண் எவ்வாறு தன் ஆதிக்கத்தை பெண் மீது கொண்டு வருகிறான் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

தற்போது அந்த 'கூடுதல் ஆண்' என்ன ஆவான்? அவனுக்குத் தானே மனமுவந்து பிரம்மச்சர்யம் ஏற்றுக்கொள்கிற வாய்ப்பு உண்டு. ஆனால் பல ஆண்கள் அதனை ஏற்பதில்லை. எனவே, அவனுக்குப் பருவ வயதை எட்டாத ஒரு பெண்ணை மண முடித்து வைக்கப்படுகிறது. குழந்தைத் திருமணம் எவ்வாறு தோன்றியது என்பதையும் நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அகமண முறை குறித்துப் பேசும் அம்பேத்கர், 'இவையெல்லாம் ஏன் தோன்றின என்பதற்கு எந்த விதமான அறிவியல்பூர்வமான விளக்கங்களும் இல்லை. ஆனால் இவை ஏன் போற்றப்பட வேண்டும் என்பதற்கான தத்துவங்கள் மட்டும் நிறைய உள்ளன. என்னுடைய கருத்து என்னவென்றால், அவை போற்றப்படுவதற்குக் காரணம் அவை பின்பற்றப்படுவதுதான். காலம்தோறும் 'இயக்கம்'தான் முக்கியமாக இருந்து வந்திருக்கிறது. அவற்றை நியாயப்படுத்தும் தத்துவங்கள் எல்லாம் பின்னாட்களில்தான் தோன்றின. அவை பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகவே அவை போற்றப்படுகின்றன' என்கிறார். மேலும், 'வர்க்கமும் சாதியும் ஒன்றுக்கொன்று அண்டை வீட்டார் போல இருப்பவை' என்கிறார்.

இந்த அகமண முறை எல்லாம் முதலில் பிராமணர்கள் மத்தியில் தோன்றியதுதான். தாங்களும் வெளியே செல்லாமல், பிறரும் தங்கள் குழுவுக்குள் வராமல் கதவடைத்துக்கொண்டவர்களும் பிராமணர்கள்தான். இவர்களைப் பார்த்து மற்ற குழுவினரும், சாதியினரும் 'போலச் செய்தார்கள்' என்று தன் ஆய்வுகளின் வழியே நிறுவுகிறார் அம்பேத்கர்.

புத்தகத்தின் ஆரம்பத்தில் இப்படிச் சொல்கிறார் அவர்: "இந்தியாவில் சாதிகள் இருக்கும் வரை, எந்த ஒரு இந்துவும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ள மாட்டான். அவன் இந்த நாட்டை விட்டு இதர நாடுகளுக்குச் சென்றால் அப்போது இந்திய சாதிகள் என்பது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுக்கும்",

'என்.ஆர்.ஐ. மணமகன்/ள் வேண்டும்' என்பது கூட அதன் வெளிப்பாடுதானோ?

புத்தக அட்டைப் படம் நன்றி: அமேசான் இந்தியா இணைய‌தளம்

 (அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் மூன்றாவது பதிவு இது)

Monday, June 6, 2016

பசுமை சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 2016, ஏப்ரல் 9.

“1972- ம் ஆண்டு முதன்முறையாகச் சென்னைக்கு வந்தேன். அதற்குப் பிறகு அவ்வப்போது இந்தியாவுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறேன். 90-களில் உலகமய மாக்கலுக்குப் பிறகு பொருளாதார ரீதியாக இந்தியா பெரும் மாற்றத்துக்கு உள்ளாகத் தொடங்கியிருந்தது. இன்றைக்கு இந்தியா சந்திக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எல்லாமே, அதற்குப் பிறகு உருவானவைதான். இங்கே நாம் சந்திக்கும் பிரச்சினைகள் மற்ற நாடுகளிலும் இருக்கவே செய்கின்றன. ஆனால், பிரச்சினைகளை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதில்தான் மற்ற நாடுகளிடமிருந்து வேறுபடுகிறோம்!” என்கிறார் மீரா சுப்பிரமணியன்.

பூர்வீகம் தமிழ்நாடு, வசிப்பது அமெரிக்காவில். பத்திரிகையாளர் - ‘நியூயார்க் டைம்ஸ்', ‘நேச்சர்' உள்ளிட்ட சர்வதேச இதழ்களில் சுற்றுச்சூழல் தொடர்பாக எழுதிவருபவர். அந்தக் கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை தொகுக்கப்பட்டு ‘எலிமென்டல் இந்தியா' எனும் தலைப்பில் சமீபத்தில் புத்தகமாக வெளியாகியுள்ளது. இது இவருடைய முதல் புத்தகம்.

இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதற்காகச் சமீபத்தில் சென்னை வந்திருந்த மீராவை சந்தித்துப் பேசியதிலிருந்து...
 
உங்கள் புத்தகத்தில் கேரளாவும் சிக்கிம் மாநிலமும் இயற்கை விவசாயம் நோக்கிப் பயணிக்கின்றன என்று எழுதியிருந்தீர்கள். சமீபத்தில் 'முற்றிலும் இயற்கை விவசாய மாநிலம்' ஆக சிக்கிம் அறிவித்துக்கொண்டிருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அந்தத் தகவலைக் கேட்டு ரொம்பவே உற்சாகமாக உணர்ந்தேன். இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு இது பெரும் ஊக்கம் அளிக்கும். இதனால், மேலும் பலர் இயற்கை விவசாயத்தை நோக்கி வருவார்கள். இயற்கை விவசாயம் மூலம் அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியும் என்பதும் நிரூபணமாகியுள்ளது.

ஆனால், ‘இந்தப் பொருள் இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்டதுதானா' என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும் வெளிப்படையான ‘சர்டிஃபிகேஷன்' (சான்றிதழ் நடைமுறைகள்) எப்போது வரும் என்பது பெரிய கேள்வி. அது பற்றிய விவாதங்கள்கூட இங்கு நடப்பதில்லை என்பதுதான் வருத்தம்.
 
நீங்கள் கலந்துரையாடிய பலரும் இயற்கை விவசாயம் அதிக விளைச்சலைத் தருமா என்பது குறித்துச் சந்தேகத்துடனேயே எதிர்காலத்தை நோக்கியிருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இயற்கை விவசாயத்தைப் பல விவசாயிகள் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இன்னும் சிலர் ‘இயற்கை விவசாயத்தை வேறு எந்த வகைகளில் கொண்டுசெல்லலாம்' எனப் பரிசோதனைகளையும் செய்துவருகிறார்கள். பிரச்சினை என்னவென்றால், இயற்கை விவசாயத்தில் உடனடியாகப் பலனை எதிர்பார்க்க முடியாது. ரசாயனத்துக்குப் பழகிய மண், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும். அதன் பிறகுதான் இயற்கை விவசாயத்தின் பலன் தெரியவரும். எனினும், இன்று விவசாயம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு இயற்கை விவசாயம் ஒரு பகுதி விடை மட்டுமே. அதுவே முழுமையான விடை அல்ல!
 

காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணங்களுள் ஒன்றான பாரம்பரிய அடுப்புகள் குறித்து எழுதியிருக்கிறீர்கள். இந்த அடுப்புகளுக்கு மாற்றாக 'உன்னத் சூலா அபியான்' என்ற பெயரில் மரபுசாரா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் புகையைக் கட்டுப்படுத்தும் புதிய அடுப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

நான் பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு முன்பு சில காலம் அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிவந்தேன். பாரம்பரிய அடுப்புகளுக்கு மாற்றான அடுப்புகளை உருவாக்குவதுதான் அங்கே முக்கியப் பணி. அங்கே நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம், மாசுபாட்டைக் குறைக்க வழி செய்தால், மக்கள் ருசியை இழக்க வேண்டியிருக்கும். பாரம்பரிய அடுப்பில் செய்வது போன்ற ருசியும் வேண்டும், வெளியாகும் புகையின் அளவும் குறைய வேண்டும் என்றால், அதற்கு மின்சாரம், எரிவாயு போன்ற விலை உயர்ந்த ஆற்றல் தேவைப்படும். அதோடு உணவு செய்யும் நேரம் குறைய வேண்டும். இப்படிப் பல முனைகளில் இருந்து பிரச்சினைகள் தோன்றிக்கொண்டே யிருக்கின்றன. இப்படி எல்லாப் பிரச்சினைகளையும் அணுகும் அடுப்பு இன்றுவரை உருவாக்கப்படவில்லை.

ஆக, இன்று இருக்கும் மாற்று அடுப்புகள் சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் முழு உத்தரவாதம் அளிப்பதில்லை. இந்த மாற்று அடுப்புகள் எல்லாம் தீர்வை நோக்கிச் செல்லும் பயணம்தான். அவையே இறுதி இலக்கு அல்ல.
 
சென்ற ஆண்டு ‘மல்டி டோஸ் டைக்ளோஃபினாக்' இந்தியாவில் தடை செய்யப்பட்டது. ஆனால், இனி அது ‘சிங்கிள் டோஸ் குப்பியாக 3 மில்லி லிட்டர்' மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், உங்கள் புத்தகத்தின் ஓரிடத்தில் 0.0004 மைக்ரோகிராம் டைக்ளோஃபினாக்கூட பாறுகளை (பிணந்தின்னிக் கழுகு) கொல்லும் ஆபத்து உள்ளவை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த மருந்தை முற்றிலும் ஒழிப்பது சாத்தியமில்லையா?

மத்திய அரசு விதித்த தடை வரவேற்கத்தக்கது. ஆனால், அதற்கு எதிராக இப்போது மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். கால்நடைகளுக்கு 'டைக்ளோஃபினாக்' மருந்து பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டாலும், அது மனிதப் பயன்பாட்டுக்காகத் தொடர்ந்து விற்பனை செய்யப்படத்தான் போகிறது.

பாறுகள் இறந்த உயிரினங்களின் சடலங்களையே உணவாகக் கொள்ளக்கூடியவை. பார்ஸி மக்கள், இறந்தவர்களின் சடலங்களைப் புதைக்காமலும் எரிக்காமலும் பாறுகளுக்கு ஒப்படைத்துவிடுவார்கள். அவை அந்தச் சடலங்களைத் தின்கின்றன.

கால்நடைகளுக்கு 'டைக்ளோஃபினாக்' பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதால், இறந்த கால்நடைகளை உணவாகக் கொண்டு, பாறுகள் இறந்துபோகாமல் இருக்கலாம். ஆனால், பார்ஸிக்களின் வழக்கப்படி சடலங்களைப் பாறுகள் தின்னும்போது, அவை இறப்பதற்கான வாய்ப்பு அதிகம். காரணம், இறப்பதற்கு முன்பு ‘டைக்ளோஃபினாக்'கைக் கொண்ட வலிநிவாரணிகளை ஒருவர் எடுத்துக்கொண்டிருக்கலாம். அவருடைய சடலத்தைத் தின்னும் பாறுகளுக்கு, அந்த ‘டைக்ளோஃபினாக்' பரவி அவை உயிரிழக்க நேரிடலாம்.

இப்படிப் பல பிரச்சினைகள் இதில் அடங்கியிருக்கின்றன. அவற்றை எப்படிக் கையாளப் போகிறோம்?
 
உங்களுடைய புத்தகத்தில் ‘இந்தியா, சூழலியல் விடுதலை அடைய வேண்டும்' என்று எழுதியிருக்கிறீர்கள். நாடு இன்றிருக்கும் நிலையில் அது சாத்தியம்தானா?

காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு 200 ஆண்டுகள் போராடியிருக்கிறோம். அதன் மூலம் எப்படிப் போராட வேண்டும் என்ற பயிற்சி நமக்குக் கிடைத்திருக்கிறது. அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு, மீண்டும் போராட வேண்டியதுதான். பசுமை சுதந்திரம் நம் காலத்தின் கட்டாயம்! 

 

பெட்டிச் செய்தி:

 

 ‘எலிமென்டல் இந்தியா’ என்ன சொல்கிறது?


இயற்கை விவசாயம், தண்ணீர் பிரச்சினை, காற்று மாசுபாடு, பாறுகளின் (பிணந்தின்னிக் கழுகு) அழிவு மற்றும் பெண் குழந்தைகளின் பிரச்சினைகள் என ஐந்து தலைப்புகளில் இவருடைய கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் எனப் பஞ்ச பூதங்களால் ஆனது இந்த உலகம். மற்ற நாடுகள் இதை ஏற்றுக்கொள்கின்றனவோ இல்லையோ, இந்தியா இதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. எனவே, ஒவ்வொரு பூதத்துக்கும் பொருத்தமாக ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினையை எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கி ஆய்வு செய்திருக்கிறார் மீரா சுப்ரமணியன்.

சுமார் 2,500 ஆண்டுகளாகப் பதிவு செய்யப்பட்ட இந்திய வரலாற்றில், இதுவரை 90 முறை பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது; மண்ணில் இருக்கும் ஆக்டினோபாக்டீரியா, காசநோய்க்கான முதல் ‘ஆன்டிபயாடிக்' ஆக இருந்தது; ‘பிரஷர் குக்கர்' அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் முதல் பத்து லட்சம் குக்கர்களை இந்தியாவில் விற்பதற்கே 15 வருடங்கள் ஆனது என்பன போன்ற வரலாற்று, மருத்துவ, கலாசாரத் தகவல்கள் புத்தகமெங்கும் நிறைந்திருக்கின்றன.

புத்தகத்தின் ஓரிடத்தில் மீரா இப்படி எழுதுகிறார்: “இந்தியா மிகவும் இரைச்சலான தேசமாக மாறிவருகிறது. ஆனால் அதன் காடுகளை அமைதியாக நிறைத்துவருகிறது”. அந்தக் கூற்று முற்றிலும் உண்மைதான். 

நன்றி: தி இந்து (உயிர் மூச்சு)

Saturday, May 14, 2016

DR. B.R. AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - II

ராயின் கட்டுரை வாங்கினால் அம்பேத்கர் இலவசமா?


 ந. வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 2016, ஏப்ரல் 17

 ஒரு சின்னத் தேடல். கூகுளில் ஆங்கிலத்தில் 'அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்' (Annihilation of Caste) என்று தேடிப் பாருங்கள். அம்பேத்கர் எழுதிய புத்தகத்தின் அட்டைப்படம் வரும் என்று நினைத்தால் தவறு. மாறாக, அருந்ததி ராய் எழுதிய அறிமுகத்துடன் 'நவயானா' பதிப்பகம் வெளியிட்ட 'அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்: தி அன்னோடேடட் க்ரிட்டிக்கல் எடிஷன்' புத்தகம்தான் வரும். அமேசான் முதற்கொண்டு அனைத்து இணைய விற்பனை தளங்களிலும் இந்தப் புத்தகம் கிடைக்கும் என்று கூகுள் அறிவிக்கும்.

இந்தப் புத்தகம் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அம்பேத்கர் எழுதிய புத்தகத்துக்கு அருந்ததி ராய் 'தி டாக்டர் அண்ட் தி செய்ன்ட்' என்று ஒரு முன்னுரை எழுதியுள்ளார். 'பேப்பர்பேக்' (மெல்லிய அட்டை) வடிவத்தில் 415 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் சுமார் 180 பக்கங்களுக்கு அருந்ததி ராயின் முன்னுரையே விரிகிறது. அம்பேத்கரின் அந்தப் புத்தகம் முதன்முதலில் வெளியானபோது சற்றேறக்குறைய 70 பக்கங்களுக்குத்தான் இருந்தது. அப்போது அதன் விலை வெறும் எட்டு அணா.

இன்று வரையிலும் அம்பேத்கரின் எழுத்துகளை வெளியிடும் பதிப்பகங்கள், தலித் எழுத்துகளை வெளியிடும் பதிப்பகங்கள் போன்றவை அந்தப் புத்தகத்தை எளியவர்களும் வாங்கும் வகையில் மலிவு விலையில் விற்பனை செய்துவருகின்றன. ஆனால், 'நவயானா'வின் புத்தகம் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டபோது அதன் விலை 525 ரூபாய்.

'ஹேட்ரட் இன் தி பெல்லி' எனும் புத்தகம் 'நவயானா'வின் 'அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்' புத்தகத்துக்குப் பின் உள்ள அரசியலை ஆராய்கிறது. 'தி ஷேர்டு மிரர்' பதிப்பகம் கடந்த ஆண்டு இறுதியில் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 


அம்பேத்கர் அந்தப் புத்தகத்தில் காந்தியைப் பற்றிப் பின் இணைப்பில் மட்டும் குறிப்பிடுகிறார். ஆனால் அருந்ததி ராயோ, இந்த முன்னுரையில் அம்பேத்கரையும் காந்தியையும் ஒப்பிட்டு எழுதுகிறார் என்று இப்புத்தகம் குறிப்பிடுகிறது. அருந்ததி ராய், தனது சித்தாந்தம் சார்ந்து காந்தியை விமர்சிப்பதற்கு அம்பேத்கரின் இந்நூலைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் விமர்சிக்கிறது இந்நூல்.
 
குடி அரசில் வெளியான அம்பேத்கரின் எழுத்து

1936-ம் ஆண்டு இந்து மத சீர்திருத்தக் குழு என்று கூறிக்கொண்ட 'ஜாத் பட் தோடக் மண்டல்' என்ற அமைப்பின் மாநாட்டில் இந்து சமூக அமைப்பில் நிலவும் சாதியத்தின் கொடுமை பற்றிப் பேச அம்பேத்கர் அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக அவர் உரை ஒன்றைத் தயாரித்திருந்தார். ஆனால் அந்த மாநாட்டுக்கு அவர் அழைக்கப்பட்டதைப் பலரும் எதிர்த்தனர். அதனால் அம்பேத்கர் தன்னுடைய உரையை வழங்க முடியாமல் போனது. பின்னர், அதனை ஒரு புத்தகமாக்கி விநியோகம் செய்தார்.

அந்தப் புத்தகத்தின் முதல் மொழி பெயர்ப்பு, தமிழில் பெரியார் நடத்திய 'குடிஅரசு' இதழில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது!

1936-ம் ஆண்டிலிருந்து இன்று வரையிலும் பல பதிப்புகள் கண்டது அந்த நூல். பல கோடிக்கணக்கானவர்களிடையே 'சாதி ஒழிப்பு' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய புத்தகம் இது. இந்நிலையில்தான் 'நவயானா' அந்தப் புத்தகத்தை மீண்டும் பதிப்பித்தது. அம்பேத்கரின் மூலப் புத்தகத்துக்கு, அடிக்குறிப்புகள் கொடுத்து, அருந்ததி ராயின் முன்னுரையையும் கொடுத்து அந்தப் புத்தகத்தை ‘நவயானா’ பதிப்பித்தது. அம்பேத்கரையும் காந்தியையும் ஒப்பிட்டு எழுதியிருந்த அருந்ததி ராயின் முன்னுரை பல்வேறு தரப்பு மக்களிடையே கண்டனத்துக்கு உள்ளாகியது. அதைத் தொடர்ந்து எழுந்த விவாதங்கள், முகநூல் பதிவுகள், பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள் ஆகியவற்றில் முக்கியமான சில படைப்புகளைத் தேர்வு செய்து தொகுக்கப்பட்டு 'ஹேட்ரட் இன் தி பெல்லி' என உருவாகியுள்ளது. தலித் அறிவியக்க ஆளுமைகள் இது குறித்து அருந்ததி ராயிடம் எழுப்பிய கேள்விகளுக்கு ராய் கொடுத்த பதிலும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
 
அருந்ததி ராய்க்கு எதிர்ப்பு

'ஹேட்ரட் இன் தி பெல்லி' எனும் இந்தப் புத்தகத்துக்கான தலைப்பு, ஜுபாகா சுபத்ரா எனும் தெலுங்குக் கவிஞர் 'நவயானா'வின் புத்தகத்துக்கு எதிராக நடைபெற்ற விவாதம் ஒன்றில் பயன்படுத்திய 'கடுப்புலோ கசி' எனும் வார்த்தைகளின் ஆங்கில வடிவமாகும். தமிழில் அதனை 'வயிற்றெரிச்சல்' என்று சொல்லலாம்.

'உங்களுக்கு இன்னும் அறிவு போதாது. நாங்கள் எடுத்துச் சொல்கிறோம்' என்கிற ரீதியில், அம்பேத்கரின் புத்தகத்துக்கு அறிமுகம் கொடுப்பது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று வாதிடுகிறது இந்தப் புத்தகம். 'நவயானா'வின் இந்தப் புத்தகம் வெளியான சில மாதங்களில் அமெரிக்காவின் கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் பேசுவதற்கு அருந்ததி ராய்க்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அங்கு, 'நான் காந்தியைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். ஆனால், அது எங்கே மக்களிடம் எதிர்ப்பைச் சந்திக்குமோ என்று எண்ணியதால், அதைத் தனிப் புத்தகமாக வெளியிட வில்லை. எனவே, அதனை அம்பேத்கரின் புத்தகத்தில் முன்னுரையாக இணைத்துவிட்டேன்' என்று வெளிப்படை யாகக் கூறிய தகவலையும் இந்தப் புத்தகம் பதிவு செய்கிறது.

காந்தியைப் பற்றிய ராயின் கட்டுரையை வாங்கினால் அம்பேத்கர் இலவசமா? என்ற கேள்வியை இப்புத்தகம் எழுப்புகிறது.
 
அருந்ததி ராயின் முன்னுரைக்கு எதிராக ‘ஹேட்ரட் இன் தி பெல்லி' முன் வைக்கும் சில வாதங்கள்...

* அம்பேத்கரின் ‘சாதி ஒழிப்பு' எனும் எண்ணத்தை, கற்பனாவாத யோசனை என்கிறார் அருந்ததி ராய். இந்தியாவில் சாதி ஒழிப்பு என்ற செயல்திட்டம் சாத்தியமானது அல்ல என்கிறார்.

* இந்தப் புத்தகத்துக்கு அருந்ததி ராய் கொடுத்த முன்னுரையின் தலைப்பு ‘தி டாக்டர் அண்ட் தி செய்ன்ட்'. அதாவது ‘மருத்துவரும் துறவியும்' என்பதாகும். ‘துறவி' என்கிற வார்த்தையை அம்பேத்கரிடமிருந்துதான் கடன் வாங்குகிறார் அருந்ததி ராய். ஆனால் அம்பேத்கர், காந்தியை வெறும் துறவி என்று மட்டும் சொல்லவில்லை. ‘அரசியல் துறவி' என்கிறார். ‘அரசியல்' எனும் சொல்லை வெட்டிவிட்டு ‘துறவி' என்ற சொல்லை மட்டும் ராய் பயன்படுத்தியது ஏன் என்று இப்புத்தகம் கேள்வி கேட்கிறது. அம்பேத்கர் எதிர்மறையாக காந்தியை ‘அரசியல் துறவி’ என்று குறிப்பிட்டதை வெறுமனே ‘துறவி’ என்று குறிப்பிட்டதன் மூலம் வேறு அர்த்தத்தை, அருந்ததி ராய் தந்துவிட்டதாக இப்புத்தகம் விமர்சிக்கிறது.

* அம்பேத்கர் தனது இறுதிக் காலத்தில் ஊரைச் சுற்றி கடன் வைத்துவிட்டு இறந்தார் என்று இந்த முன்னுரையில் குறிப்பிடுகிறார் அருந்ததி ராய். அது உண்மையல்ல. நிலங்கள், கட்டிடங்கள் எனப் பல சொத்துகள் அம்பேத்கரிடம் இருந்தன. அவற்றைப் பல அறக்கட்டளைகளுக்குத் தன்னுடைய பெயரைக் குறிப்பிடாமல் வழங்கினார் என்பதே உண்மை என்று இப்புத்தகம் குறிப்பிடுகிறது. 

நன்றி: தி இந்து

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் இரண்டாவது பதிவு இது)