Thursday, August 30, 2018

அறிவியல் புனைவுகளின் ஆரம்பப்புள்ளி!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 26 ஆகஸ்ட் 2018


உலகில் உள்ள உயிரினங்களில், மனித இனம்தான் உயர்ந்தது என்ற சிந்தனைப் போக்கு, நெருப்பைக் கண்டுபிடித்த காலத்திலிருந்து தொடர்கிறது. ‘தன்னால் எல்லாம் முடியும்’ என்ற நினைப்பில் மனிதர்கள் என்னென்னவோ பைத்தியக்காரத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்கள். ‘எக்ஸ் ரே கண்ணாடி’, ‘டைம் மெஷின்’, ‘மரணத்தைத் தடுக்கும் மருந்து’ எனப் பலவற்றை இந்த வரிசையில் நம்மால் அடுக்கிவிட முடியும்.

அந்த வரிசையில் வைக்கும்படியான இன்னொரு ‘பைத்தியக்காரத்தனம்’தான் மனிதரைவிட இன்னொரு மேலான, சக்தி வாய்ந்த ஒரு உயிரினத்தை மனிதர்களே உருவாக்கும் செயல். அது ரோபோ அல்ல. மனிதர்களின் உணர்வுகளைக் கொண்ட, இன்னொரு ‘உயர்ந்த’ (8 அடி உயரம்!) மனிதன். அரக்கனின் உடலமைப்பைக் கொண்ட, மனிதர்களைக் கொல்லும் ஒரு ‘மனிதன்!’ 

‘என்ன இது பைத்தியக்காரத்தனமான சிந்தனை’ என்று, இன்று நாம் யோசிக்கலாம். ஆனால், உலகில் அறிவியல் புனைகதைகள் தோன்றுவதற்கு அந்தச் சிந்தனைதான் 1816-ல் ஆரம்ப விதையாக விழுந்தது. எந்த ஒரு ‘அறிவியல்’ சிந்தனையும் முதன்முதலில் ‘பைத்தியக்காரத்தனமான’ சிந்தனையாகக் கருதப்பட்டிருப்பதை வரலாறு நெடுகிலும் நம்மால் காண முடியுமே!

படைப்புக்கு வயது 200!

அறிவியல் கண்டுபிடிப்புகளில், காலந்தோறும் பெண்களின் பங்களிப்பு, இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. ஆனால், ‘அறிவியல் புனைகதை’ எனும் பிரிவு, இலக்கிய உலகில் தோன்றுவதற்கு மேரி ஷெல்லி எனும் பெண்தான் காரணமாக இருந்திருக்கிறார்.

1797-ம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று லண்டனில் பிறந்தார் மேரி வால்ஸ்டோன்கிராஃப்ட் காட்வின். அவருடைய தந்தை வில்லியம் காட்வின், அரசியல் தத்துவவியலாளர். தாய் வால்ஸ்டோன்கிராஃப்ட், உலகறிந்த பெண்ணியவாதி. தன் தந்தையின் அரசியல் சிந்தனைகளைப் பின்தொடர்ந்த பி.பி.ஷெல்லி எனும் கவிஞரைக் காதலித்த மேரி, 1814-ல் அவரைத் திருமணம் செய்துகொண்டு, மேரி ஷெல்லி ஆனார்.

இது அவரது 221-வது பிறந்த ஆண்டு. மட்டுமல்ல, 1816-ல் எழுத ஆரம்பித்து, 1818-ல் வெளிவந்த ‘ஃபிராங்கன்ஸ்டீன்’ எனும் அவரது முதல் நாவலுக்கு, இந்த ஆண்டு 200-வது வயது!


மனித ஞானத்தின் எல்லை

ஜெனிவாவைப் பூர்வீகமாகக் கொண்ட, இத்தாலிய இளம் விஞ்ஞானி, விக்டர் ஃபிராங்கன்ஸ்டீன். சிறு வயதிலிருந்தே, இயற்கைக்கு மாறான விந்தைகளைப் பற்றியும், அமானுஷ்யமான சிந்தனைகளைப் பற்றியும் படித்துவந்த விக்டர், இறந்துபோன மனிதர்களின் உடல் உறுப்புகளைக் கொண்டு, மனித உருவமைப்பில், மனிதரைவிட சக்தி வாய்ந்த ஒரு உயிரினத்தை உருவாக்குகிறான். ஆனால், ‘மனித உருவமைப்பு’ எனும் முயற்சி தோல்வியடைய, ‘சக்தி வாய்ந்த உயிரினம்’ எனும் முயற்சி வெற்றி பெறுகிறது.

அகோரமான அந்த உயிரினம் உயிர் பெற்று எழ, அதைக் காணச் சகியாமல், தன் ஆய்வகத்திலிருந்து ஓடிவிடுகிறான் விக்டர். அந்த உயிரினமோ, மனித அன்பு கிடைக்காமல், எங்கு சென்றாலும் விரட்டப்பட, மனிதர்களைப் பழி வாங்க ஆரம்பிக்கிறது. அதாவது, தன்னை உருவாக்கிய விக்டர் மற்றும் அவனைச் சார்ந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் கொல்ல ஆரம்பிக்கிறது.

தான், மனிதர்களைக் கொல்லாமல் இருக்க வேண்டுமென்றால், தன்னைப் போலவே இன்னொரு உயிரினத்தை உருவாக்கச் சொல்லி விக்டருக்குக் கட்டளையிடுகிறது. ஆனால் விக்டர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அவனுடைய சகோதரர்கள், நண்பர்கள், மனைவி என அனைவரும் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள்.

அந்தக் கொலைகளுக்குப் பழிவாங்கவும், அந்த அரக்கனை அழிக்கவும் சபதம் எடுக்கிறான் விக்டர். அவனால் அது முடிந்ததா என்பது நாவலின் மீதிக் கதை.

‘உலகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா…’ என்று இந்த நாவல், நம்முள் கேள்வி எழுப்புகிற அதேநேரம், ‘மனிதரின் விஞ்ஞான ஞானம் என்பது ஒரு எல்லைக்கு உட்பட்டதுதான். இயற்கைக்கு மாறான எந்த ஒரு விஷயத்தை மனிதர்கள் செய்தாலும் அது அழிவையே கொண்டு வரும்’ எனும் உண்மையையும் எடுத்துக் கூறுகிறது.

பருவநிலை மாற்றத்தின் இலக்கியம்

1816-ல், சுவிட்சர்லாந்துக்குச் சுற்றுலா வருகிறார்கள் ஷெல்லி தம்பதியினர். அங்கு, இன்னொரு கவிஞர், பைரனின் இல்லத்தில் தங்கு கிறார்கள். அதற்கு முந்தைய ஆண்டுதான் இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் தம்போரா எனும் எரிமலை வெடித்தது. அப்போது ஏற்பட்ட வெப்பம் காரணமாக, பருவநிலையில் சில மாறுதல்கள் ஏற்பட்டன.

இதனால் 1816-ல் கோடைக்காலம் என்பதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மேற்கு ஐரோப்பா, இங்கிலாந்து என வடக்கு அரைக்கோளம் முழுவதும் அந்த ஆண்டு, மழையாகப் பொழிந்து தள்ளியது. இதனால் அந்த வருடத்தை ‘கோடை இல்லாத வருடம்’ (இயர் வித்அவுட் எ சம்மர்) என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதனால், கோடையைக் கழிக்க வந்த ஷெல்லி தம்பதியினரும், பைரன் மற்றும் அவருடைய நண்பர் ஜான் வில்லியம் பொலிடோரி ஆகிய நால்வரும் வீட்டுக்குள்ளேயே தங்கள் பொழுதைப் போக்க வேண்டியிருந்தது. அந்த மழைக்கால இரவில், மின்சாரமும் போனது. அப்போது, அவர்கள் நால்வரும், நேரத்தைக் கடத்த, ஆளுக்கு ஒரு பேய்க் கதையைச் சொல்ல வேண்டும் என்றும், யாருடைய கதை அருமையாக இருக்கிறது என்று பார்க்கலாம் எனவும் ஒரு போட்டி நடைபெற்றது. மற்ற மூவரும் ஒவ்வொரு கதை சொல்ல, மேரி ஷெல்லிக்கு எந்தக் கதையும் தோன்றவேயில்லை.

அடுத்த சில நாட்களில், இறந்துபோன ஒருவருக்கு மருத்துவர் ஒருவர் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவது போன்று, அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவுதான் பின்னாளில் ‘ஃபிராங்கன்ஸ்டீன்’ என்ற நாவலாக உருவானது.

இந்த நாவலைப் பற்றி ‘தி கிரேட் டிரேஞ்ச்மெண்ட்’ எனும் பருவநிலை மாற்றம் தொடர்பான தனது நூலில், எழுத்தாளர் அமிதவ் கோஷ் இப்படிச் சொல்கிறார்: “இதுபோன்ற இயற்கைக்கு மாறான கதைகளை எழுதுவதற்கு, எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம்தான் காரணம் என்று அப்போது அந்த நால்வருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சுற்றுச்சூழலில் ஏற்படும் ஒரு பேரழிவு, புனைவு இலக்கியம் உருவாவதற்கு எப்படியான வினையூக்கியாக இருக்கும் என்பதற்கு இந்த நாவல் ஒரு சான்று” என்கிறார்.

பருவநிலை மாற்றம் குறித்த புனைவு இலக்கியங்களில் முக்கியமான புத்தக மாகவும் இன்று அது நிலைபெற்றுவிட்டது. மேரி ஷெல்லியும் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் அறிவியலிலும் இடம் பிடித்துவிட்டார்!

நன்றி: இந்து தமிழ் (பெண் இன்று)

Tuesday, August 21, 2018

கிறிஸ்டோபர் வென்றார்… கடவுள் தோற்றார்…!

ந.வினோத் குமார்

மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து இப்போது வரை, ஒரு கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்றால், அது இதுதான்: ‘கடவுள் இருக்கிறாரா..?’

‘இருக்கிறார்’ என்றுதான் உலகில் உள்ள எல்லா மதங்களும் சொல்கின்றன. சொல்லி வைத்தாற்போன்று அந்தக் கடவுளர் அனைத்தும் ஆண் பாலினத்தவராகவே இருப்பது மட்டும்தான் மதங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை!

கடவுள், மதங்கள் ஆகியவற்றின் பெயரால்தான் மூடநம்பிக்கைகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன. பரப்பப்படுகின்றன. அவற்றுக்கு எதிராகத்தான் கலிலியோ, சாக்ரடீஸ், ராஜா ராம் மோகன் ராய், பெரியார் போன்றோர் பணியாற்றி வந்தனர். அந்த வரிசையில் வருபவர்தான் நரேந்திர தபோல்கர். அடிப்படையில் மருத்துவரான இவர், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அதனால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்ட போலி சாமியார்கள், மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவான சமூக விரோதிகள், அவரது உயிருக்குக் குறி வைத்தனர். 2013, ஆகஸ்ட் 20-ம் தேதி அவர் கொல்லப்பட்டார்.

அந்த தினத்தை இந்த ஆண்டு முதல் ‘தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்’ என்று அனுசரிக்க, மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘ஆல் இந்தியா பீப்பிள் சயின்ஸ் நெட்வொர்க்’ எனும் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த தினத்தில், ‘ஹிட்சென்ஸ் எதிர் ப்ளேர்’ எனும் புத்தகத்தை அறிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். கனடா நாட்டில் உள்ளவர் பீட்டர் மங்க் எனும் கொடையாளர். இவரும் இவரது மனைவியும் இணைந்து 2006-ல் ‘ஆறியா ஃபவுண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தனர். அதன் கீழ், 2008-ல் ‘தி மங்க் டிபேட்ஸ்’ எனும் விவாத நிகழ்ச்சியைத் தொடங்கினர். ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் இந்த விவாத நிகழ்ச்சியில், குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு, அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் துறை சார்ந்த வல்லுநர்கள் உரையாற்றுவார்கள்.

அப்படி, 2010-ல், பத்திரிகையாளரும் கடவுள் மறுப்பாளருமான கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் மற்றும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர் ஆகியோர் ‘உலகில் நடைபெறும் நன்மைகளுக்கு மதங்கள் காரணமா?’ எனும் தலைப்பில் விவாதித்தனர். கிறிஸ்டோபர் அந்தத் தலைப்பு எதிராகவும், ப்ளேர் அதற்கு ஆதராகவும் உரையாற்றினர். அந்த உரையாடல்கள் தொகுக்கப்பட்டு, ‘ஹிட்சென்ஸ் எதிர் ப்ளேர்’ எனும் தலைப்பில் புத்தகமாக 2011-ல் வெளியானது.


கிறிஸ்டோபரின் கடவுள் மறுப்புச் சிந்தனைகள் உலகப் புகழ் பெற்றவை. அதனால் எடுத்த எடுப்பிலேயே ‘டாப் கியரில்’ பறந்தார். ‘யுத்தங்களிலும், அன்றாட மனிதச் செயல்பாடுகளிலும் தனக்கென்று ஒரு நிலையை எடுக்கும் கடவுள் நமக்குத் தேவையா? காமம் மற்றும் உடலுறவு சார்ந்த விஷயங்களைக் குறித்து நம்மைக் கேவலமாக நினைக்க வைக்கிற கடவுள், இந்த உலகத்துக்கு நல்லதுதானா? இல்லாத நரகத்தையும், ‘சாமி கண்ணைக் குத்திவிடும்’ என்று சொல்லி பயம் காட்டியும் நமது குழந்தைகளை வளர்ப்பது சரியா? ‘ஆணுறையைப் பயன்படுத்துவதைவிட எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது எவ்வளவோ மேல்’ என்று பிரசங்கம் செய்யும் மதங்கள் நமக்குத் தேவைதானா?...’ என்று இப்படி அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டு வந்தவர், கடைசியாக ஒரு முக்கியமான கேள்வியை முன் வைக்கிறார். ‘பெண்களைக் கீழ்த்தரமான படைப்பாகக் கருதும் கடவுள், மதங்கள் ஆகியவை உலகுக்கு நன்மை பயக்குமா?’ (‘சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கியதால்தான் கேரளத்தில் வெள்ளம்’ என்று பிதற்றுகின்ற குருமூர்த்திகள் கவனிக்க..!).

இப்படிக் கேட்டுவிட்டு, நோபல் பரிசு வென்ற அமெரிக்க இயற்பியலாளர் ஸ்டீவன் வீன்பெர்க் சொன்ன ஒரு கருத்தை மேற்கோள் காட்டுகிறார் கிறிஸ்டோபர்: ‘இந்த உலகில், நல்லவர்கள் தங்களால் இயன்ற அளவு நல்லதையும், தீயவர்கள் தங்களால் இயன்ற அளவு தீயவற்றையும் செய்வார்கள். ஆனால், நல்லவர்களைத் தீங்கு செய்ய வைக்க வேண்டுமென்றால், மதங்கள் போதும்!’.

‘தீயவற்றிலிருந்து நன்மையைப் பிரித்தறிய நமக்குத் தெய்வீக சக்தி எதுவும் தேவையில்லை. போலியோவுக்குச் சொட்டு மருந்து கொடுப்பது குழந்தைக்கு நல்லது. ஆனால், ‘போலியோவுக்குச் சொட்டு மருந்து போட்டுக்கொள்ளாதே. அது நமது மதத்துக்கு எதிரானது’ என்று, ஆப்கானிஸ்தான், மேற்கு ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் பிரசாரம் செய்யப்படுகிறது. ‘எங்களால் அற்புதங்களைச் செய்ய முடியும்’ என்று சொல்வதை மதங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கிறிஸ்டோபர் தன் வாதங்களை முன் வைக்கிறார்.

அவற்றுக்குப் பதில் சொல்லும்விதமாக, ப்ளேர், ‘மதங்களின் பெயரால் அக்கிரமங்கள் நடப்பது உண்மைதான். எனினும், மதம் சார்ந்த அமைப்புகள் பல ஆப்பிரிக்கா முதற்கொண்டு பல்வேறு நாடுகளில் நல்ல பணிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன. அறிவியல், இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்பதைக் கற்றுத் தருகிறது. ஆனால் கடவுள் நம்பிக்கையோ, என்ன காரணத்துக்காக நமக்கு அறிவு வழங்கப்பட்டிருக்கிறது, அதை எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது. கடவுள் நம்பிக்கை நம் வாழ்க்கையை வளமாக்காது. மாறாக, நம் ஆன்மாவை வளமாக்கும்’ என்கிறார்.

ப்ளேரின் வாதங்களை மறுக்கும்விதமாக, கிறிஸ்டோபர், ‘மதங்கள் மனிதர்களை ஒன்றிணைப்பதில்லை. மாறாக, ‘இதுதான் நம் கடவுள். இவரைத்தான் பின்பற்ற வேண்டும். இன்னொரு மதத்தின் கடவுளை நீ கும்பிடக்கூடாது’ என்று பிளவுபடுத்துகின்றன’ என்பவர், ‘இன்னொருவருக்கு நாம் உதவுவதில் நிச்சயமாக ஒரு சந்தோஷம் இருக்கிறது. அது போதும். அதற்கு ‘மதம்’ என்ற சாயத்தைப் பூசத் தேவையில்லை என்று டோனி ப்ளேரைக் கேட்டுக்கொள்கிறேன். மதச்சார்பின்மையே இன்றைய தேவை’ என்கிறார்.

‘மதத்தின் பெயரால் நடைபெறும் தீமைகள், மத இலக்கியங்களில் உள்ளார்ந்த விஷயமாக இருக்கின்றன’ என்கிறார் கிறிஸ்டோபர். அயோத்தியில் நடைபெறும் பிரச்சினைகூட அப்படியான ஒன்றாக இருக்கலாம், இல்லையா?

‘மனித நாகரிகத்தின் இருப்புக்கு மிக ஆபத்தான விஷயமாக மதங்கள் இருக்கின்றன’ என்கிறார் அவர். நாம் அதைப் புரிந்துகொள்வது நமக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நல்லது. 

இருவரின் விவாதங்களும் முடிந்த பிறகு, பார்வையாளர்களிடமிருந்து கேள்வி வருகிறது. அதில் ஒன்று, ‘அமெரிக்காதான் உலகிலேயே மிகவும் மதரீதியான நாடு. ஆனால், இங்குதான் ஜனநாயகமும் தழைக்கிறது. இந்த முரணை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று கிறிஸ்டோபரிடம் கேட்கப்படுகிறது.

அதற்கு கிறிஸ்டோபர், ‘மத விஷயத்தில் அமெரிக்க அரசு எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்காதபடிக்கு, அதன் அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. இது அமெரிக்காவின் மூன்றாவது அதிபராக இருந்த தாமஸ் ஜெஃபர்சன் காலத்திலிருந்து இருக்கிறது. ஒருமுறை ‘டான்பரி பேப்டிஸ்ட் அசோஸியேஷன்’ எனும் மத அமைப்பு, ‘தங்களுக்கு வழங்கப்படுவது சலுகைகள்தான், உரிமைகள் அல்ல’ என்று சொல்லி ஜெஃபர்சனுக்குக் கடிதம் எழுதியது. அதற்கு ஜெஃபர்சன், ‘தேவாலயத்தையும் அரசையும் பிரிக்கும்விதமாக, இவற்றுக்கு இடையில் எப்போதும் ஒரு சுவர் இருக்கத்தான் செய்யும்’ என்றார். அந்தச் சுவரைப் பராமரிப்பது என்னைப் போன்ற ஆட்களின் வேலை’ என்கிறார்.

அப்படியான சுவர், இந்தியாவில் இல்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை? அப்படியே இருந்தாலும், அதைப் பராமரிக்க கிறிஸ்டோபரைப் போன்று எத்தனை பேர் முன் வருவார்கள்?

இந்த விவாதத்தைச் சுமார் 2,700 பார்வையாளர்கள் ரசித்தார்கள். விவாதம் தொடங்குவதற்கு முன்பு, தலைப்புக்கு ஆதரவாக 25 சதவீதத்தினரும், எதிராக 55 சதவீதத்தினரும், 20 சதவீதத்தினர் எந்த முடிவையும் எடுக்க முடியாமலும் இருந்தனர். விவாதம் முடிந்த பிறகு, 32 சதவீதத்தினர் ஆதரவாகவும், 68 சதவீதத்தினர் எதிராகவும் வாக்களித்தனர். ஆம்… கிறிஸ்டோபர் ஜெயித்தார்… கடவுள் தோற்றார்!

Thursday, August 16, 2018

அறிவியலால் வளர்ந்தோம்!

ந.வினோத்குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 14 ஆகஸ்ட் 2018

‘அறிவே ஆயுதம்’ என்பார்கள் சான்றோர்கள். விஞ்ஞானிகளிடம் கேட்டால் ‘அறிவியலே ஆயுதம்’ என்பார்கள். அந்த ஆயுதத்தை வன்முறைக்குப் பயன்படுத்தாமல், வளர்ச்சிக்காகப் பயன்படுத்திய மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று!

‘இந்தியாவின் அறிவியல்’ என்று தொடங்கினாலே, இன்றிருக்கும் தலைமுறையினர் பலருக்கும் ‘மங்கள்யான்’ மட்டும்தான் உடனடியாக நினைவுக்கு வரும். ஆனால், அது மட்டுமே நம் நாட்டு விஞ்ஞானிகள் செய்த சாதனை அல்ல.

கல்விப் புலத்தில் ‘பேஸிக் லைஃப் சயின்சஸ்’ என்று ஒரு சொற்பதம் உண்டு. அதாவது, இயற்பியல், வேதியியல், தாவரவியல் போன்ற மிக அடிப்படையான அறிவியல் துறைகளை இப்படி அழைப்பார்கள். இன்றைக்கு, நாம் கண்டிருக்கும் வளர்ச்சி அனைத்துக்கும், இந்த அடிப்படையான அறிவியல் துறைகள்தான் அடித்தளமாக அமைந்திருக்கின்றன. ஆனால், இன்றைக்குப் பல கல்லூரிகளில் மேற்கண்ட துறைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டன.

அறிவியல் ‘வரலாற்று’ புத்தகம்

அந்த அடிப்படை அறிவியல் துறைகளால் இந்தியா செய்த, செய்து வருகிற சாதனைகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாகச் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது ‘இந்தியன் சயின்ஸ்’ எனும் புத்தகம். ‘இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாடெமி’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்தில், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கடந்த 70 ஆண்டுகளில் அது மேற்கொண்ட அடிப்படையான, முக்கியமான ஆனால் பரவலாக அறியப்படாத 11 அறிவியல் சாதனைகளைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்டுரைகளை பிரபல அறிவியல் இதழாளர் தினேஷ் ஷர்மா, அதிதா ஜோஷி, கவிதா திவாரி மற்றும் நிஸ்ஸி நெவில் ஆகிய நான்கு பேர் எழுதியுள்ளனர்.

அந்த 11 அறிவியல் சாதனைகளில், நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய சாதனை ஒன்று, இந்த 71-ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படும் நேரத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். தேர்தலில் பயன்படுத்தப்படும் ‘மை’தான் அந்தச் சாதனை!


‘மை’ பூசிய விரல்கள்

‘மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா’ என்று உலகின் பல நாடுகளால் புகழப்படும் பெருமைக்கு உரியவை, இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள். 1951-52-க்கு இடைப்பட்ட காலத்தில்தான் நாட்டின் முதல் தேர்தல் நடைபெற்றது. அப்போதுதான் வாக்காளரின் ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் ‘அழியா மை’ முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.

அழியா மைய்யின் பயன்பாடு, 1940-களிலிருந்து தொடங்குகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, 1946-ல் இந்திய மாகாணத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, ஓட்டுப் போட்டதற்கு அடையாளமாக, வாக்காளர்களின் பெருவிரலில் ‘மை’ வைக்கும் வழக்கம் தொடங்கியது.

இந்திய மையை உருவாக்கிய பெருமைக்கு உரியவர், சலிமுஸ்ஸாமன் சித்திக்கி என்ற வேதியியலாளர் ஆவார். அப்போது ‘இந்தியன் கவுன்சில் ஆஃப் சயிண்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்’சின் இயக்குநராக இருந்த விஞ்ஞானி சாந்தி ஸ்வரூப் பட்நாகர், கேட்டுக்கொண்டதன் பேரில், ‘அழியா மை’ தயாரிப்பதற்கான வேதியியல் கலவை ஒன்றை உருவாக்கினார் சித்திக்கி.

மாற்று இல்லாத மை

அந்த மையைப் பெரிய அளவில் தயாரிக்கும் பொறுப்பு, 1949-ல், ‘தேசிய இயற்பியல் ஆய்வக’த்திடம் ஒப்படைக்கப்பட்டது. சில காலத்துக்குப் பிறகு, அந்த ஆய்வகம் வேறு சில ஆய்வுகளில் தன் கவனத்தைச் செலுத்த, இந்த மை தயாரிப்பதற்கான அனுமதியை கர்நாடக மாநிலத்தில் உள்ள ‘மைசூர் பெயிண்ட்ஸ்’ எனும் நிறுவனத்துக்குக் கைமாற்றியது. அப்போதிருந்து இப்போது வரை அந்த நிறுவனம் மட்டுமே இந்த மையைத் தயாரித்து வருகிறது. அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில், குறிப்பிட்ட சதவீதம் மேற்கண்ட ஆய்வகத்துக்குச் செல்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் மை, சுமார் 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

என்னதான் இந்த நிறுவனம் மட்டுமே இந்த மையைத் தயாரிக்கிறது என்றாலும், இந்தியத் தேர்தல் ஆணையம், கண்ணை மூடிக் கொண்டு மையை வாங்கிவிடுவதில்லை. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், அந்த நிறுவனத்திடமிருந்து 10 மில்லி லிட்டர் அளவு மையை வாங்கி, அதை அந்த ஆய்வகத்திடம் கொடுத்து மையின் ‘அழியாத்தன்மை’ பரிசோதித்துப் பார்க்கப்பட்ட பிறகே, நிறுவனத்திடமிருந்து மை வாங்குகிறது.

‘இந்த மை சீக்கிரமே அழிந்துவிடும்’ என்று வந்த விமர்சனங்களுக்காக, நம் முன்னோர்கள் என்ன மாதிரியான மாற்றுகளை யோசித்தார்கள் என்பதைத் திரும்பிப் பார்த்தால் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. அதில் ஒரு மாற்று, ‘சிற்றம்மைக்கு ஊசி போட்டவர்களுக்கு மட்டுமே வாக்குச் சீட்டு வழங்க வேண்டும்’ என்பதாக இருந்தது. ஏனென்றால், அந்த ஊசி போட்ட தழும்பு அவ்வளவு சீக்கிரத்தில் அழியாது என்பதால்! இந்த ‘ஐடியா’, சிற்றம்மைக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்ற திட்டத்துக்கு உதவியாக இருந்தாலும், எப்போதெல்லாம் சிற்றம்மை நோய் வருகிறதோ அப்போதெல்லாம் தேர்தல் நடத்த முடியாது என்பதால், இந்த மாற்று யோசனை நடைமுறைப்படுத்தப்படவில்லை. வழக்கம் போல, விரல் மையே வென்றது!

தேர்தல் மை கண்டுபிடித்தவர் ஓர் இஸ்லாமியர் (அவர் பின்னாளில் பாகிஸ்தானுக்குக் குடியேறி, அந்நாட்டு ‘அறிவியலின் தந்தை’ என்று புகழ் பெற்றார்) என்று நாம் சொல்லும் அதே நேரம், நம் நாட்டில் உள்ள இஸ்லாமியர்களை ‘பாகிஸ்தானுக்குப் போ’கச் சொல்கிற நிலைமையும் இருப்பது, மிகப்பெரிய முரண், இல்லையா?

இந்தப் புத்தகத்தை பி.டி.எஃப். வடிவில் இலவசமாகத் தரவிறக்க: http://www.insaindia.res.in/scroll_news_pdf/ISTI.pdf

நன்றி: தி இந்து (வெற்றிக்கொடி - சிறு மாறுதல்களுடன்)